10

     மனித வாழ்க்கையே நான் ஏறி வந்த ரயிலைப் போன்றது தான். ரயில் பிரயாணத்தின் போது, நம்முடன் எத்தனையோ பேர் பரிச்சயமாகிறார்கள். தங்களது ஆழ்ந்த அன்பாலும், பேச்சாலும் அவர்களில் ஒரு சிலர் நம்மைக் கவர்ந்து விடுகிறார்கள். ஆனால், இடையில் ஒரு சந்திப்புக் குறுக்கிட்டால், அவர்கள் ஒரு திசையாகவும், நாம் ஒரு திசையாகவும் பிரிந்து செல்ல வேண்டி வருகிறது. துக்கத்தோடு, அவர்களைப் பிரிந்து நாம் நம் வழியே செல்கிறோம். அந்தத் துக்கமும் நெடுநாள் வாழ்வதுமல்ல.

     ஆம், என் வாழ்க்கை ரயிலில் நானும், எனது பெற்றோரும் பிரிய வேண்டிய சந்திப்பு வந்து விட்டது. அவர்களைப் பிரிந்து, நான் புதுப் பாதையில் சென்று கொண்டிருந்தேன்.

     பிறந்தகத்தை விட்டுச் செல்லும் போது, புக்கக வாழ்க்கை புதரும் முள்ளும் நிறைந்திருக்குமோ என அஞ்சினேன். ஆனால், காலம் எனது கருத்தைக் கரைத்து வந்தது. புக்ககத்தின் புது வாழ்க்கை மலர் நிறைந்த பட்டு விரிப்பாக இல்லாவிட்டாலும், பசும்புல் வெளியாகத் தோன்றியது. காலப்போக்கில், அந்தப் புல்வெளியில் பூக்களும் மலரலாமல்லவா? காரணம், எல்லோரும் எனக்குப் பிடித்துப் போய்விட்டனர். எனது மாமனாரும், மாமியும் மிகவும் நல்லவர்கள்; தங்கள் குழந்தை போலவே என்னைப் பரிபாலித்தனர். மாமி என்றாவது ஒரு சுடுசொல் சொல்லி அறியேன். “அவள் என்ன சின்ன பிள்ளைதானே!” என்று மாமி அக்கம்பக்கத்தாரிடம் சொல்லும் போதெல்லாம், நான் சிறுமியாய் விட்டது போலவே உணர்ந்தேன். அவர்களுடைய அன்பும், ஆதரவும் எனக்கு ஆறுதல் அளித்தது.

     இதைவிட, மனத்துக்கு இன்பந் தருவது என் கணவர். அவருடைய முகத்திலே தெய்வக்களை துலங்கும். சொற்களிலே ‘கலகல’வென்ற நகைப்பு மறைந்து கிடக்கும். கோபத்தின் வரிக்கோடு அவருடைய முகத்தில் என்றாவது படிந்திருக்க நான் பார்த்ததில்லை. அவ்வளவு சாந்தம் அவரிடம் குடி கொண்டிருந்தது. தெய்வக்களை வீசும் அவரது அன்புக் கண்களின் பார்வையை என்னால் எதிர்த்து நிற்க முடியாது. ஏதோ மெஸ்மெரிஸ சிகிச்சைக்குட்பட்டது போல, நான் அடங்கி விடுவேன். அவ்வளவு கவர்ச்சி அவரிடம் நிரம்பி இருந்தது. இப்படிப்பட்ட புண்ணியவானுக்குத் துணையாய் வந்த என் மனத்திலா, புல்லுருவி போல? ஆனால், மனித சக்திக்கு அப்பாற்பட்டதை, நான் எப்படிக் கட்டுப்படுத்த முடியும்?

     வீட்டு வேலைகளில் வேண்டுமென்றே நிறையப் பங்கெடுத்துக் கொண்டேன். உடலை உழைப்பிற்கு அடிமைப்படுத்தினால், உள்ளம் சிந்தனையை வெகு தூரம் ஓட்டுவதில்லை. புக்ககத்தில் எனக்கு வேலை சரியாக இருந்தது; அப்படியிருக்க வேண்டுமென்றுதான் நானும் விரும்பினேன். வேலையற்றுச் சோறு கெஞ்சிச் சோம்பியுறங்கும் வாழ்வாகப் போய்விட்டால், மனம் பங்கால நினைவுக் குப்பைகளை வாரித் தலைமேல் போட்டுக் கொள்ளும் என்று எனக்கு நன்றாகத் தெரியும்.

     வீட்டில், காலையில் எழுந்தவுடன் அவருக்குக் காப்பி போட வேண்டிய சிரமத்தைக் கூட, மாமி எனக்காக ஏற்றுக் கொண்டிருந்தார். காலையில் நான் எழுந்து செல்லவும், காப்பி தயாராயிருக்கும். அதை எடுத்துக் கொண்டு வந்து அவரிடம் கொடுப்பதுதான் என் வேலை. பின்னால், அவர் ஆபீசிற்குப் போவதற்கு முன், அவருடைய சட்டைகளுக்குப் பொத்தான் மாட்ட வேண்டியது, சாதம் படைக்க வேண்டியது, அவர் தங்கைக்குத் தலைவாரி விடுவது - இதிலேயே பொழுது நகர ஆரம்பித்து விடும். ஆபீசிற்குப் போகுமுன் சமயங்களில் செல்லமாய் என் கன்னத்தில் கிள்ளுவார்! அந்த ஸ்பரிசத்தினால் ஏற்படும் உள்ளக் கிளுகிளுப்பினால், நான் புன்னகை புரிவேன். அதைப் பார்த்தவாறே சென்று விடுவார் அவர். ஆனால் மனத்தில் மட்டும் ஏதோ ஒன்று, “போடி, சாகசக்காரி! அந்தப் புன்னகையாலேயே அவரை அடிமைப்படுத்தி விடுகிறாயே! ஆனால், நீ அவரை - “ என்று பயமுறுத்தும். மறுகணம் அவர் கிள்ளிய இடத்தைத் தடவிப் பார்த்துக் கொள்வேன். என்னவோ அகற்ற முடியாத ஒரு இன்பம் ஒட்டிக் கொண்டிருப்பதாகத் தோன்றும்.

     மாலையில் அவர் வரும்போது, சண்பகமோ முல்லையோ வாங்கி வருவார். அந்தப் பூவை ஒருவருக்கும் தெரியாமல், எனக்குங் கூடத் தெரியாமல் கள்ளத்தனமாய் என் தலையில் சூட்டுவதில் அவருக்கு எவ்வளவு ஆசை! இதோ நான் சூட்டி விடுகிறேன் என்று முன் வந்து சூட்டுவதை விட, எனக்கே தெரியாமல் என் தலையில் பூச்சூட்டுவதில் அவருக்குப் பரம ஆனந்தம். ஆம், கேட்டு வாங்கித் தின்னும் வெண்ணெயை விட, ‘திருடி’த் தின்பதிலேதான் சுவை அதிகம்! ஆனால், அவரோடு இத்தனைநாள் இப்படியெல்லாம் பழகிய பின்னும் அவருடைய காலடியில் என் ஆத்மாவை அர்ப்பணிக்க சக்தி போதவில்லை.

     அவருடன் வாழும் புதுவாழ்வில் ஏதோ ஒரு ஆழங்காண முடியாத ஆனந்தம் இருப்பதாகத் தோன்றிற்று. ஆனால், அந்த ஆனந்தத்தைக் காணக்கூட முடியாமல், மனச் சஞ்சலத்தால் பின்னப்பட்ட அகலமான கருந்திரையொன்று என் முன் கிடந்தது. அந்தத் திரையை விலக்கவோ, கிழித்தெறியவோ என்னால் முடியவில்லை. ஆனால், என்றாவது ஒருநாள் அது கிழித்தெறியப்படும் என்ற நம்பிக்கை மட்டும் மறையவில்லை.

     எல்லோரையும் விட, அங்கு என் மனத்தைக் கவர்ந்தது, சாந்தியளித்தது, அந்தச் சிறுமிதான். ‘மீனி! மீனி!’ என்று அவர் தங்கையை அழைப்பதையும், ‘அண்ணா’வென்று ஓடி வந்து அவள், அவர் கழுத்தை அணைவதையும் பார்த்தால், “இவர்களுடைய இந்தப் பாசம் இந்தப் பிறவியில் உதித்ததில்லை; சிப்பியினுள் விளையும் முத்தைப் போல, எத்தனையோ பிறவிகளாக ஊறி வந்திருக்க வேண்டும்” என்றுதான் தோன்றும். மீனி பெயருக்கேற்ற பெண். துறுதுறுவென்று ஒரு நிலையில் நில்லாது துள்ளித் திரிந்து கொண்டிருக்கும் அவள் கண்கள். வடிவைச் சரியாக வார்க்காதது போன்ற மெழுகு உதடுகள். இளகிய மெழுகு போன்ற அந்த உதட்டின் துடிப்புகளில், ஐயாயிரம் பாவ உணர்ச்சிகள் கணத்திற்குக் கணம் தோன்றும். பூமயிர் படர்ந்த அந்தப் புருவ வளைவுகள் விநாடிக்கு விநாடி மின்னற் சாட்டையைப் போல் நெளிந்து வளையும். ஓய்வென்பதையே அவளுடைய கால்கள் அறியவில்லை. பயமோ, கவலையோ அந்தப் பால் வடியும் முகத்தில் படர்ந்தது கிடையாது. என்னுடைய கவலையை மறக்க எண்ணி, கடவுள் அனுப்பிய தெய்வச் சிலையோவென எண்ணினேன். அந்தக் குழந்தைத் தெய்வம் தன்னுடைய களிப்புப் பொங்கும் மழலை மொழிகளால், என் மனத் துயரை அழித்து விடும் போலிருந்தது.

     காலையில் எழுந்தவுடன், கண்களைக் கசக்கிக் கொண்டே, “காப்பி தரலியா மன்னி?” என்று பிலாக்கணம் தொடுக்கும் போது, தேவதைக்குப் படைக்கப் போகும் பிரசாதத்தை ஏந்தி நிற்கும் பக்தன் போலத்தான் என் உள்ளமும், உடலும் அவளிடம் நடந்து கொள்ளும். பள்ளிக்கூடம் போவதற்கு முன், என்னிடம் வந்து, “மன்னி, இந்தக் கணக்கைப் போட்டுத்தா” என்பாள். “ஏண்டி, நீ படிக்கிறாயா? நான் படிக்கிறேனா” என்றால், “மன்னி, கழித்தால் குறையத்தானே வரணும்? எனக்குக் கூட வருதே!... ஒருவேளை, கணக்குத்தான் தப்பு போலிருக்கு? நான் அக்காகிட்டே போய்ச் சொல்லப் போறேன்” என்பாள்.

     “போய்ச் சொல்லு, அடிதான் விழும்.”

     “நீ போட்டுத்தா மன்னி!”

     அவளுடைய சாதுரியப் பேச்சைக் கேட்கும் ஆசை எனக்குப் பெருகும். கொஞ்சம் பிகு பண்ணுவேன்.

     “எனக்கு வேலை இருக்கிறது, இப்போது முடியாது.”

     “மாட்டியா? போ. உன்னோட, ‘டூ’ விட்டுருவேன், முக்காலே மூணுதரம் டூஊ...!” என்பாள், முகத்தைக் கோணி, வாயில் விரலை வைத்துக் கொண்டு.

     எப்படியும் நான் கணக்கை வாங்கி, அதைப் போட்டுக் கொடுப்பேன். “எங்க மன்னி ரொம்ப நல்லவா!” என்று கூறிக் கொண்டே ஓடி விடுவாள், மீனி.

     அவளுடைய அந்தத் தெய்வப் பொன்னுருவம் மறையும் வரையிலும் வாசலில் நின்று கொண்டிருப்பேன். அதன் பின் வீட்டுக்குள் வந்து, வீட்டு வேலைகளில் என்னை மூழ்கடித்துக் கொள்வேன். வேலை செய்யும் போது கூட, மீனியின் கனி மொழிகள் காதில் ஒலித்துக் கொண்டிருக்கும், என்றோ கேட்ட இனியதொரு பாட்டைப் போல.

     அப்பா! குழந்தைகள் நம்முடைய மனத் துயரைத் துடைக்கும் வைத்திய சிரோமணிகளோ, என்னவோ? காந்தி மகான் கூட எப்போதோ சொன்னாராம், “குழந்தைகளுடன் கலந்து கொள்வதில் இருந்த இன்பம் வட்டமேஜை மகாநாட்டில் கலந்து கொண்டதில் இல்லை” என்று. குழந்தைகளுடைய கோமள மேனியிலும், காவியம் உரைக்கும் கன்னக் குழிவிலும், வீணைக் குரலிலும் ஏதோ ஒரு தெய்விகம் மறைந்து கிடக்கிறது துயரின் அசுரக் கைகளால் தொய்ந்து போன, இதய நரம்புகளுக்குப் பசையேற்றி, முறுக்கி நம்முடைய இதயத்தில் மீண்டும் வாழ்வின் இசையை எழுப்பும் சக்தி வாய்ந்த தெய்வப் பாணர்கள் தானா குழந்தைகள்? எனக்கு என்னவோ, மீனி என் கவலைகளை மறக்கடிக்கும் அமிர்த சஞ்சீவினியாகத் தானிருந்தாள்.

     ஆனால், ஒருநாள்:

     காலில், முள் குத்திய இடத்தைச் சுற்றித் தடவிக் கொடுக்கும் போதுள்ள சின்ன வேதனையில், சுகம் இருக்கிறது. ஆனால், தப்பித் தவறித் திடீரென்று, கைவிரல் முள்குத்திய இடத்தில் அழுத்தி விட்டதானால் சுகமெல்லாம் வேதனையாக மாறி விடுகிறது. அந்த மாதிரிதான் என் நிலையும் அன்று ஆயிற்று.

     இதமான மழலைச் சொல்லாடி, என் மனப் புண்ணைத் தடவிக் கொடுத்த மீனி, அன்று அதன் மேல் வேதனை கொப்புளிக்கும்படி செய்து விட்டாள்.

     “மன்னி, அண்ணா அறையைப் பார்க்கவேயில்லியே” என்று அவள் என்னை இழுத்ததுதான் வினையாய் முடிந்தது. ஆனால் தங்கப் பேழையுள் கஸ்தூரி இருக்குமென்று எண்ணி அதைத் திறக்க, உள்ளேயிருந்து கருநாகம் கிளம்பியது போலிருந்தது, எனக்கு.

     அவளுடைய அண்ணா அறையை நான் பார்க்காமலில்லை. ஆனால், அதனுள் என்னென்ன இருக்கின்றன என்பதை நான் அறிந்து கொள்ளவுமில்லை; அறிய விரும்பவுமில்லை.

     மீனி அழைத்ததும், ஒழிந்த நேரத்தை எதிலாவது செலவிடுவோமே என்றுதான் “வா, போகலாம்” என்று அவளையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றேன்.

     தம்முடைய அறையை மிகவும் அழகாகவே வைத்திருந்தார், என் கணவர். பொறுக்கி எடுத்தாற் போல் சில படங்கள், அவசியமான மற்ற சாமான்கள், ஒரு சிறு மேஜை, அதன் மேல் அடுக்கிய சில புத்தகங்கள் - எல்லாம் பார்க்கக் கச்சிதமாக இருந்தது. மீனி என்னை மேஜைப் பக்கம் இழுத்துச் சென்றாள். மேஜையிலிருந்த போட்டோ ஆல்பத்தை எடுத்துக் கொண்டு, “மன்னி, படம் பார்க்கிறியா?” என்று அழைத்தாள்.

     கண்ணைக் கவரும்படியாக இருந்தது, ‘ஆல்பம்’. மீனியும் நானும் அதனுள்ளிருந்த படங்களைப் பார்க்கலானோம்.

     மீனி ஒவ்வொரு படமாகச் சுட்டிச் சுட்டிக் காண்பித்தாள்.

     “இதுதான் அண்ணா, மன்னி! இதிலே, நான் எங்கே இருக்கேன் சொல்லு” என்று கேட்டாள், அவர்கள் குடும்பப் படத்தைக் காட்டிக் கொண்டே.

     “தெரியவில்லையே!” என்று பாசாங்கு செய்தேன் நான்.

     “போ மன்னி! பொய் சொல்லுறே. இதோ இருக்கேனே” என்று தன் படத்தைக் காட்டிச் சிரித்தாள், மீனி.

     மீனி திருப்பினாள். அடுத்தாற் போல் மீனிக்கு இரண்டு மூன்று வயசு இருக்கும் போது, எடுத்த படம் இருந்தது.

     “இது யார் படம், மீனி?” என்று தெரியாதவள் போல் கேட்டேன்.

     “இதூ... இதூ... நான் சின்னப் புள்ளெயாய் இருக்கயிலே எடுத்தது!” என்றாள் மீனி.

     நான் சிரித்தேன். என்னால் சிரிப்பைத் தாங்க முடியவில்லை; சின்னப்பிள்ளையாய் இருந்த போது எடுத்த படம்.

     இப்போதென்ன, மீனி பெரிய மனுஷியாகி விட்டாளோ? அப்பா! இந்தக் குழந்தைகளின் மனமே இப்படித்தான். ஆழங்காண முடியாத மலைச்சுனைதான் அவர்கள் உள்ளம்.

     “ஏன் மன்னி, சிரிச்சே? நான் நல்லாயில்லையா?-” அவள் முகம் கோணியது.

     “இல்லையில்லை. பேஷாயிருக்கிறியே!” என்றேன் நான்.

     பின்னால் என் கணவர் பள்ளிக்கூடத்தில் பரிசு பெற்ற போது எடுத்த படம். பள்ளிக்கூட விளையாட்டு, தேரோட்ட விழா!, எங்கள் கல்யாணத்தின் போது எடுத்த ‘கப்பிள் போட்டோ’ எல்லாம் பார்த்தோம்.

     கடைசியில் -

     ஒரு படம். ஆறேழு பேர் உள்ள ‘குரூப்’ போட்டோ, அது. மீனி அதற்கு விளக்கம் கூறினாள்: “இது அண்ணன் பள்ளிக்கூடத்தில் படிச்சப்போ எடுத்தது. இதோ கண்ணாடி போட்டிருக்குதே, இந்த மாமா போன வருடம் இங்கே அண்ணாவோடு வந்தது. எனக்கு மிட்டாய் கூட, வாங்கித் தந்தது. இந்த மாமா பேரு, ஞாபகமே வரலைடீ அம்மா! எல்லோரும் அண்ணாவோடே படிச்சவங்க” என்றாள் மீனி.

     நானும் அந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். என் கணவர் ஒருவர்தான் அதில் தெரிந்திருப்பார் என்று எண்ணினேன். ஆனால், அவருக்குப் பின்னால் நின்றது - நிற்பது யார்?

     என் தலை சுழன்றது. என் மனத்தின் மூலையில் இருந்து கொண்டு, விநாடிக்கு விநாடி என்னைத் தொல்லைப் படுத்தும் அவர் தானா? அவர் தான் - கணவருக்குப் பின் நின்றது, சந்துருவேதான்!

     எனக்கு வந்த வேகத்தில், அதை அப்படியே எடுத்துக் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாமா என்றிருந்தது. மீனி என்னையே பார்த்துவிட்டு, மீண்டும் படத்தைத் திருப்ப ஆரம்பித்தாள்.

     “மன்னி, இது...”

     “மீனி, போதும். நாளைக்குப் பார்க்கலாம்” என்றேன். என் தொண்டையில் ஏதோ அடைத்துக் கொண்டது போல இருந்தது. இவ்வளவு நாளும் மனத்தின் மூலையில் அடைபட்டுக் கிடந்த என் நினைவை அது தூண்டி விட்டது. அப்படியே எழுந்து அறையை விட்டு வெளி வந்தேன்.

     நேராகப் போய்ப் படுக்கையில் படுத்துக் கொண்டேன். புகைந்த நெருப்பு மீண்டும் பற்றிக் கொண்டது போலிருந்தது. குமுறிக் குமுறி அமரும் என் சோக உள்ளம் குபீலென அழத் தொடங்கி விட்டது. அப்படியே கட்டிலில் படுத்துக் கொண்டு விக்கி விக்கி யழுதேன். ஆனால், அதில் சாந்தி யேற்படவில்லை.

     “சந்துரு! - அவர் என் கணவரோடு படித்தவர்; கணவருக்குத் தெரிந்தவர்” - இதை நினைக்கும் போது எனக்கு என்னவோ போலிருந்தது. அப்போதுதான் எனது கல்யாணப் பேச்சின் ஆரம்ப காலத்தில் அப்பா சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தன: “நம் சந்துருவும், அந்தப் பையனும் ஒன்றாய்த்தான் படிக்கிறார்களாம்.”

     ஒன்றாய்த்தான் படித்திருக்கிறார்கள். ஒன்றாகப் படம் பிடித்திருக்கிறார்கள். ஆனால்-? எனது அதிர்ஷ்டம் ஒரு விரற்கடை தூரத்தில்தான் தொலைந்து போய் விட்டது போலத் தோன்றியது. “ஆம், காதல் என்பது குளிர்ந்த பூஞ்சோலையல்ல; காய்ந்து கருகிப் போன மூங்கில் காடு. அது எந்த நேரமும் பற்றியெரியக் கூடும்” என்று ரீங்காரித்தது என் சிந்தனை.

     அன்று முழுவதுமே அந்தப் படத்தை என்னால் மறக்க இயலவில்லை.

     இரவு, என் கணவர் என்னிடம், “ரஞ்சி, யாரோ உனக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள்” என்று ஒரு கவரை நீட்டினார்.

     வாங்கிப் பார்த்தேன். குறுகுறுப்புள்ள அந்த எழுத்துக்களும், வளைவுகளும் அது சுசீயின் கடிதமென்று காட்டி விட்டன.

     அப்பா! புக்ககத்திற்கு வந்த பின்பு, இதுதான் சுசீயின் முதற்கடிதம். இத்தனை நாட்களுக்குப் பிறகு துணிந்து எழுதியிருக்கிறாள். சுசீயை நினைத்ததுமே, அவளுடைய குறும்புச் சிரிப்பு, முத்தை உதிர்ப்பது போலுள்ள அவள் பேச்சு, அவளுடைய கைக்குழந்தை எல்லாம் நினைவுக்கு வந்தன.

     நட்பின் பிணைப்பு ரப்பர் டேப்பைப் போன்றது. எவ்வளவுக்கெவ்வளவு விலகி நிற்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு, அதன் வேகம் அதிகரிக்கும். ரப்பர் நீள நீள அதன் விறைப்பு அதிகமாவது போல், பிணைப்பும் இறுகும். சுசீ விலகி நின்றது, அவள் மேலிருந்த அன்பை வளர்க்கத்தான் செய்தது.

     பரபரவென உறையைக் கிழித்தேன். அப்பா! எத்தனை பக்கங்கள்! “இத்தனையிலும் என்னதான் எழுதியிருக்கப் போகிறாளோ?” என்று அடித்துக் கொண்டது பேதை மனம்.

     கடிதத்தை வாசிக்க ஆரம்பித்தேன்:

     “அன்புள்ள சினேகிதி ரஞ்சீ!

     “பார். உனக்கு என்ன எழுதுவதென்றே தெரியவில்லை. என்னவோ, ஏராளமாக உன்னிடஞ் சொல்ல வேண்டும் போலிருக்கிறது. அப்பா! எல்லாவற்றையும் நேரிலே சொல்லி விடலாம் போலிருக்கிறது; எழுத வேண்டும் என்றால், வரமாட்டேன் என்கிறது. என்ன இருந்தாலும் நீ என்னை விட இரண்டு எழுத்துக் கூடப் படித்தவள். உன் மாதிரியெல்லாம் வக்கணையாக எழுதத் தெரியாதடி அம்மா! உன்னைப் பார்க்க வேண்டுமென்று எவ்வளவு ஆசையாகயிருக்கிறது, தெரியுமா? சரி, உன்னுடைய கன்னத்தை இப்படித் திருப்பு. ‘இச்!’ என்ன என்கிறாயா? என் அன்பு முத்தமடி, அன்பு முத்தம்! என்ன இருந்தாலும் ‘அவர்’ கொடுப்பது போலிருக்குமா? ஏண்டி ரஞ்சி! அப்படித்தானே!”

     நான் ‘களுக்’கென்று சிரித்தேன்.

     அதற்குள் அவர், “என்ன அப்படிப்பட்ட செய்தி?” என்றார், கண்ணாடி முன்னாலிருந்து தலையைச் சீவிக் கொண்டே.

     “ஒன்றுமில்லை. தத்துப்பித்தென்று என்னவெல்லாமோ உளறிக் கொட்டியிருக்கிறாள்” என்றேன்; இருந்தாலும் அந்தக் குறும்புச் சிரிப்பு மறையவில்லை. உடல் கிளு கிளுத்தது.

     “பக்கம் பக்கமாய் எழுதியிருக்கிறாளே, இந்தப் பஞ்ச காலத்திலே! என்னிடம் சொல்லக் கூடாதா? மகாராணியின் ராஜ்ய அந்தரங்கமா?” என்று நையாண்டி பண்ணினார் கணவர்.

     நான் பதில் பேசவில்லை மீண்டும் வாசிக்க ஆரம்பித்தேன்:

     “ஏனடியம்மா, புதுமாப்பிள்ளை எப்படியிருக்கிறார்? கல்யாணத்தின் போது அப்பாவி போல இருந்தாரே! உன்னைப் பிடிக்கிறதாடி, அவருக்கு? அம்மா, நீயும் கல்யாணம் ஆவதற்கு முன்னால் என்னவோ பயந்து போய், அழக்கூடச் செய்தாயே, இப்போது சிரிக்கத் தானே செய்கிறாய்!

     “ரஞ்சி, எங்கள் ராஜா - அவன் தான் என் பிள்ளை - இப்போது அவன் அப்பாவைப் பார்த்து ‘வவ்வவ்’ வென்று அழகு காட்டுகிறான். ‘கொன்னுடுவேன்’ என்றூ பத்திரஞ் சொல்கிறான். அவன் அப்பாவுக்கு அவனைக் கண்டால் உயிர். ‘பாரு, உன் கண்ணை அப்படியே உரித்து வைத்திருக்கிறது’ என்று கூறி அவனை யெடுத்து நெஞ்சோடு அணைத்து முத்தமிடுகிறார். அன்றைக்குப் பார், ‘இப்படிச் செய்தால் பச்சைக் குழந்தை என்னத்துக்காகும்?’ என்று கேட்டு விட்டேன். அதற்கு அவர் என்னடி சொல்ல வேண்டும்? கொஞ்சமும் வெட்கமில்லாமல், ‘நீ என்ன ஆனாய்?’ என்று கேட்கிறார். இந்த ஆண்பிள்ளைகளே இப்படித்தான் - ஏதாவது கிண்டிக் கிண்டிப் பேசி நம் வாயை அடைத்து விடுகிறார்கள். ஆனால், உன் புருஷர் எப்படியோ? ‘இவர்’ எப்போது பார்த்தாலும், என்னை ஏதாவது சொல்லிக் கொண்டேயிருக்கிறார். அவர் அப்படி யிருப்பதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது.

     “கேள், இன்னொரு விஷயம். நம் சந்துரு தெரியுமல்லவா?...”

     என் மனக்காடு மீண்டும் பற்றிக் கொண்டது.

     “அவர்தாண்டி, கோடிவீட்டுப் பிள்ளை! பரீட்சை முடித்து விட்டு ஊருக்கு வந்திருக்கிறார். இப்போது என்னமாய் வளர்ந்திருக்கிறார்! ரஞ்சி, உனக்கு ஞாபகம் இருக்கிறதா? நாம் எல்லாம் பிள்ளையார் கோவில் தோப்பிலே ‘பொண்ணு மாப்பிள்ளை’ வைத்து விளையாடினோமே அப்போது அவனுடைய குடுமியில் தங்க அரளிப் பூவைச் சுற்றி-! நினைத்தாலே சிரிப்பாய் வருகிறதடி, அம்மா. நீ கூட அவன் பக்கம் ரொம்பவும் அனுபவப்பட்ட புதுப்பெண் போல், தலையைக் குனிந்து, முட்டின்மேல் கைகோத்து இருந்தாயடி...”

     சுசீ ஏன் தான் எனக்குக் கடிதம் எழுதினாள் என்றிருந்தது. இரண்டு புறமும் கூர்மையுள்ள க்ஷவர பிளேடை சிறு குழந்தையின் கையில் விளையாடக் கொடுத்தது போல இருந்தது, அவள் கடிதம். அது என் உள்ளத்தின் எந்தெந்த பாகத்தையெல்லாம் கிழித்தெறியும் என்றே தெரியவில்லை.

     எனக்கு அதற்கு மேல் படிக்க ஓடவில்லை. அப்படியே கடிதத்தை மூடி வைத்துவிட்டு அமர்ந்தேன்.

     “கடிதத்தை முடிக்கவில்லையா?” என்றார், கணவர்.

     “நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம்” என்றேன் விக்கிய குரலோடு.