11

     “மன்னி, இங்கே பாரேன்” என்று ரொம்ப ஆர்வத்தோடு அழைத்தாள் மீனி. முற்றத்திலே கோலமிட்டுக் கொண்டிருந்த என்னைத் தாழ்வாரத்தின் மூலையில், பொம்மைகள் வைத்து விளையாடிக் கொண்டிருக்கும் மீனியின் குரல் இழுத்தது. காதில் விழுந்த வார்த்தைகளை ஜீரணித்துக் கொண்டே, நான் கோலத்தை முடிக்க ஆரம்பித்தேன். மீண்டும் கேட்ட மீனியின் அழைப்பு என்னை எழுந்து போகச் சொல்லிற்று. கோலப் பொடிக் கிண்ணத்தை எடுத்துக் கொண்டு தாழ்வாரத்திற்குப் போனேன்.

     “என்னடி, விளையாடுகிறாய்?” என்று அன்போடு கேட்டேன்.

     “ராஜா ராணி!” என்று கைதட்டிச் சொன்னாள், மீனி. எனக்கு உடல் நடுங்கிற்று. சுசீயின் கடிதத்தின் சிந்தனையை இவள் எங்கு கிண்டிவிட்டு விடுவாளோ என்று பயந்தேன்.

     “மன்னி, இங்கே பாரு, இது ஒரு ராஜாத்தி. இந்த ராஜாத்தி, இதோ இருக்காரே, இந்த ராஜாவைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு இருந்தா. ஆனால், இன்னொரு ராஜா வந்து இவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போயிட்டார்” என்று அவள் முன்னாலிருந்த துணிப் பொம்மைகளை வைத்துக் கதை சொல்ல ஆரம்பித்தாள் மீனி.

     “போதுமடி, உன் கதை!” என்று கன்னத்தைக் கிள்ளினேன், செல்லக் கோபத்தோடு.

     “இவாளுக்கெல்லாம் விபூதி பூசு, மன்னி. புதுப் பொண்ணு மாப்பிள்ளையில்லையா?” என்று, கோலப் பொடிக் கிண்ணத்தை எடுத்து, என்னிடம் நீட்டினாள், மீனி.

     நான் சிரித்தேன்.

     குழந்தை இதயமே தனி. உலகத்துப் பொருள்களில் அவர்கள் காணும் அற்புதங்களை, எந்தக் கலைஞனும் காண முடியாது. கிழிந்து கந்தையாய்ப் போய், மூலையில் எறியப்பட்ட பழந்துணி அவர்களுக்கு ராஜாதி ராஜனாக உருவாகி விடுகிறது. பல பேர்களுடைய காலிலும் மிதிபட்டு, உருக்குலையும் கோலப் பொடி புனிதமான விபூதியாய் விடுகிறது. குழந்தைகள் எல்லாம் கவிஞர்களோ, என்னவோ? அவர்கள் பாஷையை மொழி பெயர்க்கும் சக்தி மட்டுமிருந்தால்-?

     நானும் வேடிக்கையாக, கோலப் பொடியை விபூதி என்ற பான்மையில், அந்தப் பொம்மைகளின் நெற்றியில் பூசினேன். பூசிவிட்டு, வீட்டினுள் நுழையப் போனேன்.

     “மன்னி, கதை இன்னும் முடியலெ” என்று சேலை முனையைப் பிடித்திழுத்தாள், மீனி.

     திரும்பினேன்.

     “இவா ரெண்டு பேருக்கும் கல்யாணமாச்சுதா? அப்புறம் அந்தப் பழைய ராஜா எப்படியோ, இந்த ராஜாத்தி வீட்டுக்கு வந்தாரு” என்று மீண்டும் கதையைத் தொடங்கினாள், மீனி.

     எனக்கு நிற்கப் பிடிக்கவில்லை. சூரிய வெப்பத்தால், நீரடியில் பாறைகளில் ஒட்டிக் கிடக்கும் பாசி நெகிழ்வுற்று எப்படி வெளிக் கிளம்பி மிதக்கிறதோ, அந்த மாதிரி ஆயிற்று என் நிலை. என் வாழ்வின் கதையே அந்தச் சிறுமியின் வாயால் வருவதென்றால்? “ஒரு வேளை குழந்தைகளெல்லாம் தீர்க்கதரிசிகளா? கடவுள் அவர்களுடைய பிஞ்சு இதயங்களிலிருந்து கொண்டு, குறி சொல்லுகிறானா? ஒருவேளை, மீனியின் கதையைப் போலவே, சந்துருவும் என்னைத் தேடி? சே! இருக்கவே முடியாது.” அந்தரத்திலே கயிற்றீன் மேல் நடந்து செல்லும் கழைக்கூத்தாடி, நிலையிழந்து தடுமாறி தன்னைத் தானே, காப்பாற்றிக் கொள்ள முயல்வது போல, என் மனம் தடுமாற ஆரம்பித்தது.

     மறு விநாடி நான் அங்கு நிற்கவில்லை, ‘மன்னி’ என்ற மீனியின் குரல் மாடிப் படியிலேறிச் சென்ற என் காதுகளில் விழுந்தது.

     கடலின் அமைதியைக் காற்றுக் கிளறும் போதுதான் ஓசை பெற்றுயரும் அலைகளும் உண்டாகின்றன. மனித இதயமும் அப்படித்தான். சாந்த நிலையிலே, கனவு காணும் உள்ளத்தை, சமய சந்தர்ப்பங்கள் கிண்டி விடும் போது, நம் மனத்திலும் பேரலைகள் எழும்புகின்றன.

     என் நிலைமையும் அந்த மாதிரிதான் ஆயிற்று.

     மாடிக்குச் சென்ற என் மனத்தில், மீனியின் பொம்மை விளையாட்டும், கதையும் பழங்கால எண்ண அலைகளை எழுப்பி விட்டன. ஏற்கனவே, முந்தின நாள் நடந்த சம்பவங்களை இதோடு ஒத்துப் பார்க்கும் போது, என்னவோ ஒரு பெரும் நிகழ்ச்சி நிகழப் போகிறது என்று மட்டும் என் பேதை இதயம் தீர்மானித்தது. எனது கணவரின் அறையிலுள்ள ‘குரூப் போட்டோ’, இறந்த காலச் சிந்தனைகளை வைத்து சொக்கட்டான் ஆடும் சுசீயின் கடிதம், மீனியின் ராஜாராணி விலையாட்டு - இவையெல்லாம் என் மனத்தில் ஆழத்தில் குமுறிக் கொண்டிருக்கும் உணர்ச்சியலைகளைக் கிண்டிவிட்டு வேடிக்கை பார்த்தன.

     சுசீயின் கடிதம்! இளமை முதல் என்னோடு கைகோத்து வாழ்ந்த தோழியிடமிருந்து கடிதம் வருவதென்றால் வரவேற்கத் தக்கதுதான். தோழியரின் கடிதங்கள் விரும்பக் கூடியவைதான். வெந்த புண்ணுக்கு விளக்கெண்ணெய் போடுவதுபோல, அவர்கள் கடிதம் நம்முடைய மன வேதனைக்கு இதமளிக்கத்தான் செய்யும். ஆனால், சுசீயின் கடிதம் வேறு விதமாய் அமைந்து விட்டது. இளமையிலே நாங்கள் விளையாடின விளையாட்டுக்களைப் பற்றிக் கூறினால், என் மனம் குதூகலமடையும் என்று நினைத்துத்தான் அவள் எழுதியிருந்தாள். ஆனால் வாயில் சுகமாகப் பச்சரிசியை மென்று கொண்டு, அதில் ஊறும் இனிப்பான ரசத்தைக் குடித்து, ஆனந்திக்கும் போது, திடீரென்று கடை வாயில் ஒரு கல் கடிபட்டு உடைவது போலத்தானிருந்தது, அவள் கடிதத்தின் அந்தப் பகுதி. அதனால்தான் அந்தக் கடிதத்தை மேற்கொண்டும் வாசிக்க என்னால் முடியவில்லை.

     மீனியின் விளையாட்டும், கதையும்! பாவம். மீனி சிறு குழந்தை. தன்னுடைய குழந்தையுணர்ச்சியைத் திருப்தி செய்வதற்காக, துணிப் பொம்மைகளை வைத்து விளையாடி மகிழ்கிறாள். கோலப் பொடியைக் கொண்டு, விபூதி பூசச் சொல்கிறாள். சுருட்டி வைத்த துணிச் சுருள்களை ராஜா ராணியாக்கி, அவர்களுக்குள் காதலையும் மூட்டி விடுகிறாள். அவர்களுக்குப் பிரதிநிதியாகவிருந்து கதையும் சொல்கிறாள். தன்னுடைய குழந்தையுள்ளத்தில் எழும் விபரீத அதிசயங்களை, தன்னையுமறியாமல் பிறருக்கு மொழி பெயர்த்துச் சொல்கிறாள், மீனி. ஆனால், அதே கதை என் வாழ்க்கையின் பிரதிபலிப்பாக இருக்கும் போது? மீனியின் கதையைப் போலவே, சந்துருவும் என்றாவது ஒரு நாள் என்னைத் தேடி வந்தால் - ? மீனியைச் சொல்லக் குற்றமில்லை. அவளுடைய அந்தக் குழந்தைக் கதையின் பலமற்ற அடிப்படையின் மேல், கோட்டை கட்ட நினைக்கும் என்னைத்தான் நான் நொந்து கொள்ள வேண்டும்.

     ஆனால், எண்ணங்கள் எப்போதும் தனியாக வருவதில்லை. அவைகள் ராஜாக்களைப் போன்றவை. இன்பந் தரும் எண்ணங்கள் பவனி வரும் ராஜனைப் போல, தன்னுடைய பரிவார சகிதம் கோலாகலத்துடன் வரும். துன்ப நினைவுகளோ, பரிவார சகிதம் பவனி வராது; படைகள் சகிதம் போருக்கெழுந்து வரும்.

     என் மனத்திலும் எண்ணங்கள் படையெடுத்தன. ஒன்றன்பின் ஒன்றாய்ச் சம்பவங்களும் நினைவுச் சுழல்களும் என்னை வாட்டி வதக்கின. இதயக் களத்தினுள்ளே, நுழைந்து விட்ட துன்ப எண்ணங்களை ஒழிக்கும் சக்தி எனக்கு இல்லை. குமுறல் ஓய்ந்து வந்த என் மனத்தில் மீண்டும் குமுறல் ஆரம்பித்தது. உள்ளத்தின் வேதனை, கண்ணின் வழியாய், நீரை உதைத்துத் தள்ளியது.

     “ரஞ்சி!” என்ற குரல், என்னை உலகத்துக்கு இழுத்து வந்தது.

     “இந்தா, இந்தச் சட்டையைக் கொஞ்சம் தைத்துக் கொடு” என்று ஒரு சட்டையை என்னிடம் கொடுத்தார் கணவர்.

     சட்டையை வாங்கிக் கொண்டு ஊசி நூல் எடுக்கப் போனேன். நல்ல வேளை! என் முகத்தில் மிதந்த கலவரத்தை அவர் அவசரத்தில் உணரவில்லை. அதிலே எனக்கொரு திருப்தி. சட்டையில் கிழிந்திருந்த பாகத்தைத் தைத்துக் கொடுத்தேன். மகிழ்வு தேங்கிய முகத்துடன் அதைக் கையில் வாங்கிக் கொண்டு, பிரதியாகச் செல்லமாகக் கன்னத்தைக் கிள்ளினார். அவர் கிள்ளிய இடத்தில் கை வைத்துப் பார்த்துக் கொண்டே, மாடியை விட்டுக் கீழிறங்கினேன்.

     ஆனால், மனத்தில் மட்டும் அன்று முழுவதுமே நிம்மதியில்லை. கோடை காலங்களில், வானமெல்லாம் கறுத்து இருண்டு, காற்றினசைவு சிறிதுமின்றி, மழையில்லாமலிருக்கும் போது, புழுக்கம் உண்டாகும் தெரியுமா? அந்த மாதிரி அமைதியின் இருளிலே, என் இதயம் புழுங்கிக் கொண்டிருந்தது. மனங்குளிர, மழை பெய்தாலன்றி, அந்த இதயப் புழுக்கம் நிற்காது போலிருந்தது.

     அமைதியற்ற சிந்தனைச் சுழல்களால், அன்று வீட்டு வேலைகளில் கூட, ஓட்டமில்லை. தூக்கத்திலே, கட்டிலை விட்டு நகர்ந்து விழப் பார்க்கும் தலையணையை நம்முடைய கைகள் சரியாக இழுத்து வைத்துக் கொள்வதைப் போல, என்னுடைய உடலும் அவயங்களும் என்னையுமறியாமலேயே வேலை செய்து கொண்டிருந்தன. பொழுது கழிவதே, பெரும்பாரமாயிருந்தது, எனக்கு.

     எது என்னுடைய மனச் சிந்தனையைக் கிளறிக் கலக்கிற்றோ, அது - அந்த மீனி - இல்லாதது, என்னுடைய தனிமையை விகாரப்படுத்திற்று. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் மனிதனுக்கு ஏதோ ஒரு மரத்தின் வேர் தட்டுப் படுவதைப் போலத்தான் நான் மீனியை விரும்பினேன்.

     “அப்பா! பள்ளிக்கூடம் நாலரை மணிக்கல்லவா விடுகிறது? அதுவரையிலும் எப்படிப் பொழுதைப் போக்குவது? மீனி வந்துவிட்டால், அவளுடைய குறும்புச் சிரிப்பிலும் குழந்தைப் பேச்சிலும் எத்தனை யுகம் வேண்டுமானாலுங் கழித்து விடலாமே! என் சிந்தனையின் சீறல் அவள் வரவால், தென்றலாக மாறிவிடாதா!” என்று பற்றுக்கோடற்றுத் தனிமையில் வதங்கிய என் பேதை உள்ளம் நினைத்துருகியது.

     மீனியின் வரவு நோக்கி, மாடிச் சாளரத்தின் அருகமர்ந்து, தெருவை நோக்கியிருந்தேன். கண்கள் தெருவை நோக்கியிருந்ததே தவிர, சப்பாத்திக் கள்ளிப் புதரில் விழுந்தெழுந்த உடலைப் போல, மனம் உறுத்திக் கொண்டிருந்தது. “அந்த மூலையில் இன்னுஞ் சிறிது நேரத்தில் இளம்பிறையைப் போல, மீனி தோன்றி விடுவாள். என் மனத்துயர் துடைக்கும் பொற்சிலை வந்துவிடும்” என்று, காலக் கணக்கை எண்ணி முடித்து, ‘நாலரை’ என்று முணுமுணுத்த என் மனம் கூறியது.

     ஆவல் தேங்கிய பார்வையைத் தெரு முனையில் செலுத்திப் பார்த்துக் கொண்டிருந்தேன். பள்ளிப் பிள்ளைகளெல்லாம் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர்.

     அதோ! மீனியும் வந்து விட்டாள்.

     மாடியிலிருந்து இறங்கி, அவளை வரவேற்கப் போகு முன்னமே, “காப்பி எங்கே, மன்னி?” என்ற தெய்வ ஆணை அந்தச் சிறு குழந்தையின் வாயிலிருந்து பிறந்தது.

     அப்படியே போய் மீனியை வாரியணைத்து முத்தமிட்டேன். மீனிக்குக் காப்பி கொடுத்தானதும், அவளுக்குத் தலை சீவி, பூ முடித்து, உடையும் மாற்றினேன். எனது துக்கத்தை, அந்தப் பொற்சிலையை அலங்கரிக்கும் உற்சாகத்தில் மறந்திருக்க முடிந்தது.

     மீனியோடு நான் மாடியறையில், உற்சாகமாய்ப் பேசி, என் மன வேதனையை மறக்க முயன்று கொண்டிருக்கும் வேளையில், “மீனி” என்ற என் கணவரின் குரலும் கேட்டு விட்டது.

     “அண்ணா”வென்று என் மடியிலிருந்து துள்ளிக் குதித்து ஓடியது, அந்தத் ‘தாவாச் சிறு மான்’.

     திரும்பி வரும் போது அவளுடைய கையில் வாழையிலையில் சுற்றிக் கட்டிய மலர் தன் வரவையும் கூறிற்று. “மன்னி, அண்ணாவுக்குக் காப்பி வேணுமாம்” என்றாள், கையிலிருந்த பூவை என்னிடம் கொடுத்துவிட்டு.

     “ஏது, என்றுமில்லாத திருநாளாய், இன்று பூவை மீனியிடம் கொடுத்தனுப்பினார்?” என்று என் சிந்தனை வட்டமிட்டது.

     கீழே இறங்கிப் போய் ஒரு தம்ளரில் காப்பி எடுத்துக் கொண்டு நடுக்கட்டில் நுழைந்தேன். அதற்குள் மீனி குறுக்கிட்டு, “மன்னி, அண்ணாவுக்கு மட்டுமில்லே, கூட யாரோ ஒரு மாமா இருக்கா” என்றாள்.

     பூவைக் கொடுத்தனுப்பிய புதிர் விளங்கிற்று.

     மீண்டும் ஒரு தம்ளரில் காப்பி எடுத்துக் கொண்டு, முன்கட்டுக்குப் போனேன்.

     முற்றத்தில் கிடந்த நாற்காலிகளில் என் கணவருடன் யாரோ உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

     காப்பி தம்ளர்களை அவர்கள் எதிரில் கிடந்த மேஜையில் வைத்துவிட்டு நிமிர்ந்தேன்.

     என் கணவருடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தவரைப் பார்த்ததும், என் தேகம் நடுங்கிற்று; உள்ளம் சிலிர்த்தது.

     ஆம், என் கணவருடன் இருந்தது...? சந்துரு!