12

     “சந்துரு!”

     “என்னப்பா?”

     “இன்றைக்குப் பேப்பர் பார்த்தாயா?”

     “ஏன்? ஏதாவது வெற்றிகரமான வாபசா?”

     “அதெல்லாமொன்றுமில்லை. பீஹார் மாகாணத்தில் ஏதோ புயல் ஏற்படப் போகிறதாம்.”

     “புயலா?” குரல் கம்மியிருந்தது.

     “ஆமாம். பஞ்சமும், நோயும் பலி வாங்கும் வேளையில் தான் புயலும்.”

     “இயற்கை அன்னை இவ்வளவு ஈவிரக்கமற்றவளா?”
*****

     நடு வீட்டில், விளக்கின் முன் நின்று கொண்டிருந்த, என் காதுகளில் அவர்கள் பேசிய பேச்சு, நன்றாகக் கேட்டது ‘புயல்!’ அந்த வார்த்தையே எனக்குப் பயங்கரமாகத் தோன்றிற்று. இயற்கையன்னை எவ்வளவு ஈவிரக்கமற்றவளாய் இருக்கிறாள்! மனிதர்களைப் பஞ்சத்தாலும், நோயாலும் வாட்டி வதக்கி விடுகிறாளே! என் விஷயத்தில் கூட, அவள் கருணை காட்டவில்லையே! காலப் போக்கில் பிறந்த இயற்கை புணர்ச்சியால் என் மனம் என்ன பாடுபடுகிறது! சந்துருவும், நானும் ஒரே நிழலில் சந்திக்கவா? நெருப்பு பஞ்சை நெருங்கவா?

     என் உடல் நடுங்கியது. விளக்கைக் கொளுத்தினேன். சரியாகப் பற்றிக் கொள்ளாமல், படபடவென்று சிதறி விழுந்தன பொறிகள்.

     “திரியை நிமிண்டி விட்டுக் கொண்டு ஏற்றேன்” என்ற ஆலோசனை பிறந்தது, மாமியாரிடமிருந்து.

     திரியை நிமிண்டி விட்டுக் கொண்டு ஏற்றினேன். விளக்கு எரிய ஆரம்பித்தது.

     திரி ஒழுங்காக இருந்தாலல்லவா, விளக்கின் சுடர் நன்றாக நின்று எரியும்? அதில் கொஞ்சம் ஈரமோ, கரியோ விழுந்து விட்டால், படபடவென்று பொரிந்து தான் விழும். என்னுடைய மண வாழ்க்கையும் அப்படித்தானிருந்தது. சந்துருவின் நினைவினால், நனைந்து போன என் இதயத் திரியில் வாழ்வின் சுடர் ஒளியை எப்படி ஏற்றுவது? அந்த ஈரம் காய்ந்தாலொழிய, என் வாழ்வின் சுடர் ஒழுங்காக எரிய முடியாது. ஆனால், மனத்தில் என்னவோ, அந்த ஈரம் காய்ந்து விடும் என்று உணர்த்திக் கொண்டிருந்தது. சந்துருவே என்னை நெருங்கி எங்கள் வீட்டினுள் வந்திருக்கும் போது-?

     எனக்கு ஒன்றுமே ஓடவில்லை.

     ஏற்றி வைத்த திருவிளக்கின் முன்னின்று, கைகூப்பித் தொழுதேன். மனத்தில் தோன்றிய கலவரத்தைத் தணிக்க முயன்று கொண்டு, “தீபலக்ஷ்மி! என்னைக் காப்பாற்றடி அம்மா! என் மனத்தைக் கெட்டுப் போகும்படி பண்ணி விடாதே! சந்துருவின் வரவினால், புழுங்கித் தவிக்கும் என் மனத்துக்குச் சாந்தியளித்துக் காப்பாற்று!” என்று என் சிக்கிய மனம் பிரார்த்தித்துக் கொண்டது.

     ஆம், உலகத்தின் சிக்கல்களுக்கிடையே இந்த மனிதப் புழு அகப்பட்டுத் துன்புறும் போது, தெய்வம் என்ற நாமந்தான் துன்பத்தை மறக்கச் செய்யும் ‘குளோரபாரமா’க உபயோகப்படுகிறது. இந்த மயக்க மருந்தை எந்த மனித உயிர் முதன் முதலில் கண்டுபிடித்ததோ? அவிழ்க்க முடியாத சிக்கல்களின் இறுக்கலிலே அகப்பட்டு நைந்த போது தான், இந்த ‘மருந்து’ அதற்குக் கண்களில் புலப்பட்டிருக்க வேண்டும்!

     என் பிரார்த்தனையில் கொஞ்சம் ஆறுதலிருந்தது. ஆயினும், அது என் மனத் துயர் தீர்ப்பதாயில்லை.

     வேடன் கையிலகப்பட்ட புறாவின் மார்பைப் போல, என் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. சந்துரு ஏன் தான் இங்கு வந்தார் என்று என் பேதையுள்ளம் அங்கலாய்த்துக் கொண்டிருந்தது. ஊதிப் புடைத்த பலூனைப் போல, என் இருதயம் வீங்கிப் போய் இப்படி நெஞ்செலும்போடு முட்டுகிறதா என்று பயந்தேன்; அப்படியிருந்தது எனக்கு. கொந்தளிப்பு உள்ளடங்கிப் போன என் உள்ளத்தில் மீண்டும் பேரலைகள் எழுந்து மோதின. அந்த அலைகளின் தாக்குதலைத் தாங்க முடியாத என் மனமும், உடலும் கரையிலிழுத்துப் போட்ட நீர்ப் பாம்பைப் போல, நெளிந்து கொண்டிருந்தன.

     மனம் கொள்ளாமலிருந்த என்னிடம் வந்து மீனி பாடம் கேட்க ஆரம்பித்தாள். எனக்கு என்ன பண்ணுவதென்றே தெரியவில்லை. மீனியின் பாடப் புத்தகங்களிலே, ஏதேனும் ஆறுதல் தேங்கியிருக்குமா என்று என்னுடைய நிலையிழந்த புண் மனம் எண்ணியது. ஆனால் மனம் வேறு விஷயத்தை விடாப்பிடியாகப் பற்றிக் கொண்டு துன்புறும் போது, மீனிக்கு நான் எப்படிப் பாடம் சொல்லிக் கொடுக்க முடியும்? அவள் தப்பிதமாய்ச் சொல்லி வந்த வாய்ப்பாடுகளுக்குக் கூட, என் வாய் ‘ஊம்’ போட்டுக் கொண்டிருந்தது. “என்ன மன்னி, நான் தப்பிதமாகச் சொல்றேன், நீயும் ஊங்கிறியே?” என்று அவளாக இடித்துக் கூறிய பின் தான் மீண்டும் என் நினைவு வந்தது.

     “புத்தகத்தைப் பார்த்து, நீயாகப் படித்துக் கொள். எனக்கு வேலையிருக்கிறது” என்று மழுப்பிக் கொண்டே சமையலுள்ளில் நுழைந்தேன்.

     சமையல் வேலையிலுங் கூட, அன்று சரியான சிரத்தை காட்ட முடியவில்லை. ரசத்திற்கு உப்புப் போட்டேனா, இல்லையா என்ற சந்தேகம் மட்டுமே பத்துத் தடவை எழுந்திருக்கும். ஒவ்வொரு தடவையும் சுவை பார்த்துப் பார்த்து, உண்மையான சுவை கூட, மறந்து விடுமோ என்றாகி விட்டது. காரணம், பேயாட்டம் ஆடும் மனத்தை இழுத்துப் பிடித்து ஓரிடத்திலே நிலைக்கச் செய்ய முடியவில்லை. தும்பு நழுவியதை யறிந்த காளை, திமிறித் துள்ளித் தறிகெட்டுத் தாவுவது போல, என் மனம் குதித்துச் சாடியது.

     “ரஞ்சி, சாப்பிடலாமா?” என்ற கணவரின் கேள்வியின் பலனாக அவர்கள் இருவருக்கும் உணவு பரிமாற வேண்டி வந்தது.

     அவர்கள் இருவருக்கும் பரிமாறினேன். எப்படித்தான் அவர்களுக்குப் பரிமாறி மீளப் போகிறேனோ என்றிருந்தது. நூறு கஜ ஓட்டப் பந்தயம் ஓடி வந்தவன் கையில், ஒரு பென்சிலைக் கொடுத்து, ‘அழகான படம் ஒன்று வரை’ என்று கூறுவது போல இருந்தது.

     சந்துருவின் இலையில் நான் பரிமாறும் போது, என்னுடைய கண்கள் அவரைக் கட்டவிழ்ந்த நிலையில் பார்த்தன. அவரும் சும்மாயிருந்தாரா? மெதுவாகத் தலையை நிமிர்த்தி என்னைப் பார்த்தார். அகன்ற ஒளிக் கண்கள் என் கண்களோடு உறவாடின. என் உடல் நடுங்கியது. பார்த்ததோடு விட்டு விடவில்லை. அவருடைய உதடுகளில் குறும்புச் சிரிப்பு வேறு பூத்து நின்றது. எனக்கு மூச்சடைத்துக் கொள்வது போலிருந்தது.

     காரணம்? அவருடைய குறுநகை, திரிபுரத்தை எரித்த சிவபெருமானின் புன்னகையில்லை; பவளக் கொடியை மயக்கிய பார்த்தனின் முறுவலாக இருந்தது!

     எப்படியோ பரிமாறி முடித்து விட்டு, சமையலுள்ளில் சென்று, அடக்கி வைத்திருந்த மூச்சையெல்லாம் நெட்டித் தள்ளினேன். யமகண்டத்திலிருந்து தப்பிய மாதிரி இருந்தது.

     அன்று எனக்கும் சாப்பாடு செல்லவில்லை. சாப்பிட்டோம் என்ற பேருக்கு ஒருவாய்ச் சோற்றை விழுங்கி விட்டு, மாடிக்குச் சென்றேன்.

     மனம் மட்டும் ஒரு நிலையிலில்லை. என்னுடைய சக்திக்கு அப்பாலே நின்று, என்னை வாட்டிக் கொண்டிருந்தது. அதன் போக்கிலேயே நாமுஞ் சென்று வரலாமென்றால் அதுவும் முடியவில்லை. காரணம், மனத்தின் பாதை அகன்ற ராஜபாட்டையாக இல்லை; வாளின் கூர்மை போல் இருந்தது. அதன் மேல் செல்ல ஆரம்பித்தால், சிந்தனைகள் இரத்தக் களறியில் தான் மூழ்க வேண்டும்!

     சந்துருவின் நினைவை எவ்வளவுதான் ஒதுக்கி வைக்க முயன்றாலும், முடியவில்லை. புதுப்புதுப் பயங்கர அலைகளை, சிந்தனை எழுப்பிக் கொண்டிருந்ததனால் தான், அன்று தூங்கக் கூட முடியவில்லை. கணவர் வருவதற்கு முன்னேயே, நான் படுக்கையில் போய்ப் படுத்துப் புரண்டு கொண்டிருந்தேன், கெட்ட சொப்பனங் கண்டு நெளியும் நோயாளியைப் போல. கணவர் வந்து விளக்கை யணைத்து விட்டு படுத்ததெல்லாம் எனக்குத் தெரியத்தான் தெரியும். அன்று அவர் என்னை எழுப்ப முயல்வும் இல்லை; நானும் அதை விரும்பவில்லை. பொய்த் துயில் கொண்டு சிந்தனையோடு முண்டிப் போராடும் எனக்குச் சாந்தி தரும் தூக்கம் எங்கிருந்து, எப்படி வரும்? மனத்திலோ சந்துருவின் உருவமும், நினைவும் அணுவுக்கு அணு நிறைந்திருந்தது. காட்டு மரங்களின் ஊடே திரிந்து, பரபரப்பு உண்டு பண்ணும் மேல்காற்றின் ஒலியைப் போல, எனது இருதயத்தில் சந்துருவின் நினைவு சுற்றித் திரிய ஆரம்பித்தது. வீட்டிலுள்ள புகையை, புகைக் கூண்டு வழியாய் வெளியேற்றி விடலாம்; காற்றை வெளியேற்ற முடியுமா?

     நீண்ட பெருமூச்சுக்கள் என்னுடைய கணவர் தூங்கி விட்டார் என்பதை அறிவுறுத்தின. திறந்து வைத்த சாளரத்தின் வழியாய் ஆறாம் பிறைச் சந்திரனின் மங்கிய ஒளி சிந்திய பாலைப் போலப் பரந்து கிடந்தது.

     படுக்கை கொள்ளாமல் புரண்டு கொண்டிருந்த என் மேல் கணவரின் தூங்கிய கை விழுந்தது. அந்த அன்புக் கரத்தின் ஆதாரத்திலாவது தூங்கி விட முடியாதா என்று எண்ணினேன். ஆனால் கண்கள் கூட, மூடாமல் இமை திறந்திருந்தன.

     சாந்தியிழந்த என் இதயத்திற்கு மோன நிலையில், இரவில், நெடுவழி செல்லும் சந்திரனாவது இதம் அளிப்பான் எனத் தோன்றியது.

     கணவரின் கையை மெதுவாக எழுத்துக் கீழே வைத்து விட்டுப் படுக்கையிலிருந்து இறங்கினேன். இறங்கி, திறந்த சாளரத்தின் சுவரின் மேல் போய் அமர்ந்து கொண்டேன்.

     இருளின் அமைதியில் எழுந்த என் கணவரின் மூச்சு என் மனத்தில் பயத்தை உண்டு பண்ணியது. சாந்தியை நாடிச் சென்ற சந்திர ஒளியில் சாந்தி கிடைக்கவில்லை. அதற்குப் பதிலாகத் தூக்கக் கிறக்கத்தில் இருந்த உணர்ச்சிகளெல்லாம் விழித்தெழுந்து கொண்டு, என்னைத் துன்புறுத்தின. வெட்டுப்பட்ட கடாவின் உடலிலிருந்து பாயும் இரத்த வெள்ளத்தைப் போல, சிந்தனை வெளிப் பாய ஆரம்பித்தது.

     சந்துரு! அவரோடு, சிறு வயதில் எப்படியெல்லாம் பழகியிருக்கிறேன்? பிள்ளையார் கோவில் தோப்பிலே தான் எத்தனை தடவை அவரோடு சண்டை போட்டிருக்கிறேன்! அப்பா! என் வாழ்வோடு வாழ்வாய், துயரோடு துயராய், மரத்தோடு ஒட்டிய பட்டை போல வாந்து வந்தாரே?

     தூரத்தில் எங்கோ ஊளையிடும் பட்டி நாயின் குரலோடு, காற்றில் சலசலக்கும் பனையோலைகளின் சப்தமும் என் காதில் விழுந்தது. அந்த நேரத்தில் கந்தர்வ கானம் விழுந்தால் கூட, எனக்கு எரிச்சலாய்த்தான் இருக்கும். ஆம், என் இதயத்தின் துக்கத்துக்குப் பின்னால், இறந்த கால அனுபவங்களின் கோரச் சலசலப்புக் கேட்கிறது; ஆனால், அவற்றை நான் கண்ணால் காணத்தான் முடிவதில்லை.

     என் சிந்தனைப் பட்டம் இரவின் அமைதியிலே, திக்குத் திசாந்த முணராமல், பறக்கத் தொடங்கியது. எனக்கு இருந்த ஆத்திரத்தில், அது வாலறுந்து கீழே விழுந்தாலும், நல்லது தான் என்றிருந்தது.

     சந்துருவை நான் காதலித்தேன். என்னுடைய அழகை அவருடைய ஆத்ம உணர்ச்சிக்கே சமர்ப்பிக்க வேண்டுமென்று கனவு கண்டு மகிழ்ந்தேன். ஆனால் அழகும் அந்தஸ்தும் சந்தையில் விலைக்கு விற்கப்படும் பொருளாக, இந்த ‘நாகரிக உலகில்’ கருதுவதாலேயா அவரை நான் அடைய முடியவில்லை? எப்படியோ காலப் போக்கின் தறி கெட்ட பாய்ச்சலிலே என்னை இன்னொருவருக்கு மனைவியாக்கி விட்டார்கள். ஆனால், நான் விரும்பிய அதே சந்துரு இப்போது என்னுடைய பக்கத்திலேயே வந்து இருப்பதென்றால்-? அதைத் தான் என்னால் தாங்க முடியவில்லை.

     இப்போது பக்கத்து அறையில்தான் சந்துரு தூங்கிக் கொண்டிருப்பார். தூங்கவாவது? பரிமாறும் போது, என்னைப் பார்த்துக் குறும்பு நகை புரிந்தாரே, அவரா தூங்குவார்? என்னைப் போலத்தான் அவரும் விழித்துக் கிடந்து துன்புறுவார். என்னைப் பற்றி என்னென்ன நினைக்கிறாரோ?

     ஆனால், நான் என்னவோ அவரை நினைக்காமலேயே இருக்க முடியவில்லை. என்னுடைய விதியை நொந்து, அவருடைய அன்பான பாதங்களில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அழுது தீர்க்க வேண்டுமென்றிருந்தது, எனக்கு.

     மனத்தில் குமுறிய எண்ணங்களின் கரிப்பால் கண்ணில் நீர் துளித்தது.

     “ரஞ்சி!” தூக்கத்தில் விழித்துக் கொண்ட கணவரின் குரல், அது.

     “இதோ வருகிறேன்” என்று சாளரத்திலிருந்து இறங்கினேன். “எங்கு போயிருந்தாய்? தூக்கம் பிடிக்கவில்லையா? உடம்புக்கு...”

     “அதெல்லாமொன்றுமில்லை. தண்ணீர் குடிக்கப் போயிருந்தேன்.”

     “சரி” என்று முணுமுணுத்து விட்டு, கணவர் புரண்டு படுத்தார்.

     அப்பா! தண்ணீர் குடிக்கப் போயிருந்தேனாம். இந்த மனம் எவ்வளவு தைரியமாகப் பொய் சொல்கிறது? முதல் தடவையாக, என் கணவரிடம் ‘முழுப்பொய்’ சொல்லி விட்டேன். “பொய்தான் எல்லாத் துன்மார்க்கங்களுக்கும் முதற்படி” என்று எவனோ சொன்ன வரிகள் நினைவுக்கு வந்தன. என்னுடைய இந்தப் பொய்யும், ஏதேனும் துன்மார்க்கத்துக்கு அறிகுறியா? சேச்சே! இருக்கவே முடியாது.

     சொன்ன பாவத்திற்கு ஒரு வாய் தண்ணீர் குடித்து விட்டுப் படுக்கையில் சென்று படுத்தேன். சிந்தித்துச் சிந்தித்து ஓய்ந்த மனமும் அவயங்களின் அலுப்போடு இணைந்து தூங்க ஆரம்பித்தன. நான் தூங்க ஆரம்பித்ததே, கடைசிச் சாமமாய்த்தானிருக்க வேண்டும்.

     “ரஞ்சி! ரஞ்சி!” உடம்பின் மேல் அழுந்தி எழுப்பிற்று, ஒரு அன்புக் கரம். ஸ்பரிச உணர்ச்சியால் ஏற்பட்ட கிளுகிளுப்பினால் உடனே விழித்துக் கொண்டேன்.

     எழுந்தவுடன் நிமிர்ந்து பார்த்தேன்; எழுப்பியது என் கணவர். வெளியே பார்த்தேன். எதிர் வீட்டு மாடிச் சுவரில் பளீரென்று காய்ந்து கொண்டிருந்தது சூரிய ஒளி.

     எனக்கே வெட்கமாய்ப் போய்விட்டது. “விடிந்து விட்டதா?” என்றேன் ஆச்சரியத்தோடு.

     “இல்லையடியம்மா, இன்னுங் கோழி கூடக் கூவவில்லையே” என்று சிரித்துக் கேலி பண்ணினார் கணவர்.

     “எழுந்தவுடனேயே கேலிதானா?” என்று சலித்துக் கொண்டேன், நான்.

     “சரி, போய் காப்பி கொண்டு வா. இங்கே பார், அடுக்களையிலும் போய்த் தூங்கி விடாதே” என்று கிண்டினார், மீண்டும்.

     அவருடைய கேலியைப் பொருட்படுத்தாமலேயே மாடியை விட்டுக் கீழிறங்கினேன்.

*****

     சாப்பாட்டையெல்லாம் முடித்துக் கொண்டு, என் கணவர் ஆபீசிற்குக் கிளம்பும்போதுதான், சந்துரு சில நாள் அவரோடு தங்கப் போவதாகவும் அதுவரையிலும் தனக்குச் சாப்பாடு கொடுத்தனுப்ப வேண்டாமென்றும், தானே வந்து விடுவதாகவும் கூறினார்.

     மங்கியெரிந்த என் சிந்தனை நெருப்பில் நெய் வார்த்தது போலிருந்தது அவருடைய சொற்கள். சந்துரு இங்கு இன்னும் சிலநாள் தங்கப் போகிறார். ஏன்? இந்த அபலையின் மனத்தைச் சூறையாடிப் பாழாக்கவா?

     என் மனம் ஓய்வு நேரத்தில் சம்பாதித்த பலத்தைக் கொண்டு, மீண்டும் ஓட ஆரம்பித்தது.

     சந்துரு இங்கு தங்குவது ஒருவகையில் நல்லதுதான். அவருடைய கனிந்த முகத்தைப் பார்த்தாவது, இந்த பஞ்சையுள்ளத்தைப் பரவசப்படுத்தலாமல்லவா? ஆனால், நான் நினைப்பது போலன்றி, சந்துருவின் முகம் நீறு பூத்த என் காதல் நெருப்பை ஊதிப் பெருக்கி விடுமேயானால்-? அப்போது, அவர் இங்கிருந்து சென்று தானாக வேண்டும்!

     நங்கூரமற்ற கப்பல், பேரலைகளின் பிடியிலே அகப்பட்டுத் தள்ளாடுவதைப் போல இருந்தது, என் மனம்.

     இந்த நிலையில், நான் மாடிக்குச் சென்றதே தப்பு என்று தான் படுகிறது. ஆனால், ஒதுக்கி வைத்த கனியை வேண்டுமென்றே எடுத்துச் சுவைத்த ஆதாம் ஏவாளைப் போலத்தான் என்னுடைய கால்கள் என்னை மாடிக்கு இழுத்துச் சென்றன. ‘சாத்தான்’தான் எத்தனை உருவில் மனித மனத்தைப் பாழாக்குகிறான்!

     மாடியில், கணவரின் அறையில், சந்துரு உட்கார்ந்து கொண்டிருந்தார். அவர் கையிலிருந்த அந்தப் படம்? கூர்ந்து கவனித்த பின்புதான், அது எங்கள் மணவினையின் போது, எடுத்த ‘கப்பிள் போட்டோ’ எனத் தெரிந்தது. “சந்துருவுக்கு அந்தப் படத்தில் என்ன வேலை! ஒரு வேளை தன் பால்ய சிநேகிதியைப் பார்த்துப் பரவசமடைகிறாரோ?”

     என் கை வளையல்களின் குலுங்கல் சப்தம் அவருடைய நிலையைக் குலைத்து விட்டது; திரும்பிப் பார்த்தார். இருட்டிலே போலீஸ்காரனின் பார்வைக்கு அகப்பட்டுக் கொண்ட திருடனைப் போல, அப்படியே நின்று விட்டேன். நடக்கக் கூட, காலில் தெம்பு இல்லை. முழங்காலுக்குக் கீழே குளிர்ந்து விட்டது போலிருந்தது, எனக்கு.

     நாற்காலியிலிருந்து எழுந்து வந்தார் சந்துரு. எனக்கு ஒன்றும் ஓடவில்லை. அதிர்வெடித் திரியில், நெருப்பு வைக்கப் போவது போலிருந்தது, அவர் வருகை.

     “ரஞ்சி!” - அவருடைய குரல் கம்மியிருந்தது. என் முன்னால் வந்து நின்று கொண்டார்.

     என்னால் பதில் சொல்ல முடியவில்லை. என்னத்தைச் சொல்லுவது?

     “பேசக் கூடாதா?” என்றார் அடைத்துப் போன விம்மலோடு.

     எனக்கு அழுது விடுவோமா என்றிருந்தது. அவரை எதிர்த்துப் பார்த்தேன்; கருணை வீசும் அந்தக் கண்களில் ஓடும் சிவப்பு ரேகைகளைக் கண்ட என் தலை தானாகவே குனிந்து கொண்டது.

     “ஊரில் மாமா மாமியெல்லாம் உன்னைப் பார்க்க வேண்டுமென்று எவ்வளவு ஆசைப்படுகிறார்கள் தெரியுமா?” என்று பேச்சைத் தொடங்கினார்.

     எனக்கு மௌனமாயிருப்பது என்னவோ போலிருந்தது. சிரமப்பட்டுச் சேகரித்த அசட்டுத் துணிவோடு, “எல்லோரும் சுகந்தானே” என்றேன், விக்கிய குரலில்.

     “சுகத்திற்கு ஒன்றும் குறைச்சலில்லை” என்று சலித்துக் கொண்டார், நீண்ட பெருமூச்சுடன்.

     அப்போது அவரைப் பார்த்தேன். ஆம், அவர் கண்களிலும் காதலொளி களியாடிக் கொண்டிருந்தது.

     “வரட்டுமா?” என்று எங்கள் சந்திப்புக்கே முத்தாய்ப்பு வைக்க முயன்றேன்.

     “அதற்குள்ளாகவா?” என்று என் பிசையும் கரைத்தைப் பற்றினார்; எனக்கு உடல் நடுங்கியது.

     “விட்டுவிடுங்கள். நான் போகவேண்டும்” என்றேன், கம்மிய ஒலியில்.

     அவருடைய பிடி தளரவில்லை. அந்தப் பிடியில் ஏதோ ஒரு ஆறுதலைக் கண்டவர் போல நின்றார். நானாகக் கையை உதறியிழுத்துக் கொண்டு, வெளியேற முயன்றேன்.

     அதற்குள், அவருடைய துடியான கைகள் என் சேலை முனையைப் பற்றின. என் தலை கிறுக்கிற்று. என்னையறியாமலேயே சந்துருவின் மேல் சாடி விழுந்து விட்டேன். எல்லாம் அவசரத்தில் நேர்ந்த தடுமாற்றங்கள்!

     என் உடம்பு புல்லரித்தது; இவ்வளவு நேரமும் முண்டித் தவித்த அழுகையும் வெளிப்பட்டு விட்டது.

     அழுதேன், அழுதேன்; விக்கி விக்கியழுதேன்.

     “ரஞ்சி” யென்று என் தலையைத் தடவினார் சந்துரு, உடலில் பாய்ந்த அம்பைப் பிடுங்கி யெறிந்து விட்டு, புறாவைத் தடவுவது போல.

     தன்னுணர்வு பெற்ற நான் அவருடைய பிடிப்பிலிருந்து திமிறித் தப்பித்து, இறங்க முயன்றேன். ஆனால் அவசரத்தில், என் கை வளையல்கள் நொறுங்கிச் சிதறி விழுந்தன.

     அவற்றை மிதித்துக் கொண்டே மாடிப்படியில் கால் வைத்தேன். கடைசிப் படியிலிறங்கும் போது மாடியை ஏறிட்டுப் பார்த்தேன்.

     மாடிப்படியெல்லாம் சிதறிக் கிடந்த அந்தக் கண்ணாடி வளையல் துண்டுகளை, சந்துரு பொறுக்கிக் கொண்டிருந்தார்.

     அவருடைய சிவந்த கண்களிலிருந்து, கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது!