13

     “ஏம் மன்னி, கண்ணெல்லாம் சிவந்திருக்கு?” என்று கேட்டாள் பள்ளிக்கூடம் விட்டுத் திரும்பி வந்த மீனி.

     “ஒன்றுமில்லையடியம்மா” என்று மழுப்பினேன், நான்.

     “சொல்லமாட்டியா?” என்று தலையை இறங்கப் போட்டுச் சாய்த்துச் சொன்னாள், மீனி. அவள் கண்களில் ஏதோ ஏக்கம் தேங்கியிருப்பதாகத் தோன்றியது.

     “அடுக்களையுள் வேலை செய்யும் போது, கரி விழுந்து விட்டது” என்றேன், நான்.

     “கண்ணைத் திறந்துக்கோ, நான் ஊதுறேன்” என்று வாயில் மூச்சையடக்கினாள் மீனி, பெரிய டாக்டரைப் போல.

     “ஒன்றும் வேண்டாம். இப்போது எல்லாம் சரியாய்ப் போய்விட்டது” என்று மழுப்பி, “மீனி இப்போதே சாப்பிடுகிறாயா? இல்லை - அண்ணா வந்தவுடன் சாப்பிடுகிறாயா?” என்று பேச்சைத் திருப்பினேன், நான்.

     “அண்ணா வருதா? அப்போ, அண்ணாவுடன் தான் சாப்பிடுவேன்” என்று குதூகலத்துடன் கூறிக் கொண்டே குதித்தோடினாள், மீனி.

     மீனி போனதே நல்லதாயிற்று. கண்களையும் முகத்தையும் கழுவிக் கொண்டு, மனத்தில் உற்சாகத்தை வரவழைக்க முயன்றேன். ஆனால், சலன மனத்தின் கொந்தளிப்பினால் துன்பப்படும் எனக்கு உற்சாகம் எங்கிருந்து வரும்?

     மீனி போன சிறிது நேரத்திற்கெல்லாம் கணவரும் வந்து விட்டார். “வெயில் என்னமாய் அடிக்கிறது! இந்தப் புழுக்கத்திற்கு கட்டாயம் இன்று மழைதான் வரும்” என்று கூறிக் கொண்டே உடுப்புக்களைக் கழற்றி, ஸ்டாண்டிலே மாட்டினார்.

     நானும் வெளியில் பார்த்தேன். வானத்துக் கோடியில் மேகங்கள் திரள ஆரம்பித்துக் கொண்டிருந்தன. அக்கினியைப் போல, வெயில் பொரிந்து கொண்டிருந்தது.

     கால் கை கழுவிக் கொண்டு, சந்துருவை அழைத்தார், கணவர். மாடியிலிருந்த சந்துரு இறங்கி வந்தார். அப்பா! இந்த ஆண்களே இப்படித்தானா? அவருடைய முகத்தில் களை குன்றவேயில்லையே! என்னைக் கண்டு சிறு பிள்ளையைப் போல, கண்ணீர் விட்ட சந்துருதானா, இப்படி உற்சாகத்தோடு வருகிறார்?

     நான் மட்டும்-? என் முகத்தில், மாடியில் நடந்த சம்பவம் அச்சடிக்கப்பட்டிருக்குமே! முகத்தை மீண்டும் ஒரு தடவை கழுவித் துடைத்துக் கொண்டேன்.

     இருவருக்கும் உணவு பரிமாறினேன். எனக்கு உதவியாக மீனியும் கலந்து கொண்டாள். மீனியின் ஒத்துழைப்பு எனக்குத் தைரியத்தை யூட்டியது. உடல் நடுக்கம் ஒன்று மின்றியே, எப்படியோ அவர்கள் சாப்பாட்டைக் கவனித்து விட்டேன்.

     சாப்பிட்ட சிறிது நேரத்தில், கணவர் சந்துருவிடமும் என்னிடமும் விடைபெற்றுக் கொண்டு, ஆபீசிற்குப் போய் விட்டார். சந்துருவும் மாடிக்குச் சென்றார். மீனியும் நானும் கதை பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்தோம். மீனியும் பள்ளிக்கூடத்துக்குப் புறப்பட்டாள். “மீனி, சாயந்திரம் மழை வந்தாலும் வரும்; இந்தக் குடையையும் கொண்டு போ”வென்று குடையையும் கொடுத்தனுப்பினேன், நான்.

     மீண்டும் தனிமை வந்து என்னைச் சூழ்ந்து கொண்டது. கணவர், மீனி, சாப்பாட்டு வேலை முதலியவைகளினூடே, எனது நினைவுகளை ஒதுக்கி வைக்க முடிந்தது. எறியப்பட்ட கல்லினால் கலைந்த நீர்ப்பாசி, அலைகள் ஓய்ந்தவுடன் மீண்டும் கூடுவது போல், என் சிந்தனைகளும் மீண்டும் கூடிக் கொண்டு கூத்தாடின:

     “சந்துரு என்னைக் காதலித்திருப்பாரா? இல்லை, இன்னும், வேறொருவருடைய மனைவி என்ற உரிமைக்கு நான் ஆளான பின்னும் காதலிக்கிறாரா? சே! அவ்வளவுக்கு என்னைப் போல பலஹீனராயிருக்க மாட்டார். என்ன இருந்தாலும், அவர் ஆண்பிள்ளை. வாழ்வின் மேடு பள்ளங்களையும் வழுக்கல்களையும் பொருட்படுத்தாமல், முன்னேற வேண்டிய பிறவிகள், அவர்கள். ஆனால், பெண்கள் அப்படியா? ஒரே ஒரு சிறு தோல்வி எங்களுடைய முழு வாழ்க்கையையுமே குலைத்து விடக் கூடும். ஆனால்-?

     “சிதறிய வளையல் துணுக்குகளைப் பொறுக்கிய சந்துருவின் கண்களில் நீர் வரக் காரணம்? போனது கண்டு புலம்புகிறாரா? என்னுடைய சந்திப்பைத் தாங்க, அவ்வளவு சக்தியற்றா போயிருந்தார்? இல்லை. என்னுடைய துக்கத்தில் பங்கெடுக்க வேண்டும் என்ற தியாக நினைவின் ஊற்றா, அந்தக் கண்ணீர்?”

     பேசாமடந்தையின் ஒவ்வொரு உடுப்பினுள்ளிருந்தும் வேதாளம் சொன்ன கதைகளைப் போல, என் சிந்தனையினுள்ளும் எண்ணங்கள் புதிது புதிதாய் முளைத்துக் கொண்டிருந்தன.

     “ஒன்று மட்டும் நிச்சயமாக எனக்குப் புலப்பட்டது சந்துரு இன்று இல்லா விட்டாலும், என்றாவது ஒரு நாள் என்னை விரும்பித்தான் இருக்க வேண்டும். ஆனால், நானோ அன்று மட்டுமல்ல, இன்று கூட சந்துருவை விரும்புகிறேன். என்னைப் போலவே, சந்துருவும், இன்றும் என்னை விரும்பினால்-? விரும்பியும் பலனில்லை. சூடாறிப் போன இரும்பை, சம்மட்டி கொண்டடித்தால் பயன் ஏற்படுமா? என்னை என் கல்யாணத்திற்கு முன்னாலேயே, அவர் அடைய வழி தேடியிருக்க வேண்டும். இப்போது, எனக்குக் கல்யாணமாகி, வேறொருவர் மனைவியாக, வேறொரு வீட்டில் புகுந்த பின்பு-? சே! நான் ஏன் அபாண்டமாக அவருடைய சின்ன அழுகையின் மேல் இத்தனை கோட்டைகள் கட்ட நினைக்கிறேன்? அவரைப் பற்றிய நினைவேயில்லாதிருக்க முடியாதா? முடியும். என் இதயத்திலுள்ள பழங்காதல் நெருப்பு முற்றுற அவிந்தால் முடியும். அப்படியின்றி, அது மீண்டும் பற்றிக் கொண்டால்-?”

     முற்றத்து வராந்தா ஓரம் நின்று, இம்மாதிரிச் சிந்தனைகளில் அடிபட்டுக் கிறங்கி நின்ற என்னை, “ரஞ்சி” என்ற மெல்லிய குரல் உலுப்பிற்று; திரும்பிப் பார்த்தேன்.

     என் பின்னே சந்துரு நின்று கொண்டிருந்தார். கடவுளின் பிரசன்னத்தை எதிர்நோக்கித் துடிக்கும் தபசியைப் போல.

     என்ன துணிச்சல்! மாமன் மாமி முதலியோர் கண்டால், என்ன நினைப்பார்கள்? இப்படியா வெளி முற்றத்தில் பட்டப் பகலில் சந்திப்பது? இவரா பலஹீனர்! பலஹீனம் இருந்தால் என்னை மீண்டும் சந்திக்கத் துணிந்திருப்பாரா?

     “ரஞ்சி, மன்னிக்க வேண்டும். இந்தக் கடிதத்திற்கு உனது நேரடியான பதில் வேண்டும். என் வாழ்வே அதைப் பொறுத்துத்தான்... அதெல்லாமெதற்கு?” என்று ஒரு பொத்தைக் கவரை என் கையில் கொடுத்தார்.

     “நான் வெளியில் போகிறேன். மாலையில் தான் வருவேன். வேதம் வந்து விட்டால் சொல்லு” என்று கூறி விட்டு உடனே கிளம்பினார் அவர்.

     அவருடைய கடிதத்தை வாங்கவா, வேண்டாமா என்ற முட்டால் விசாரணைக்குப் போகும் முன், அவருடைய கடிதம் என் கையில் ஏறிவிட்டது. முதல் தடவையாக, பிரசங்கத்தைத் தயார் செய்து கொண்டு பேசும் கன்னிப் பிரசங்கத்தைப் போல, அவர் விறுவிறு என்று சொல்லி விட்டுப் போய்விட்டார்.

     கையிலிருந்த அந்தக் கடிதம் என் மனத்தைக் குழப்பியது. என்னவோ, கால சர்ப்பத்தைக் கையிலேந்திக் கொண்டு விளையாடுவது போலத் தானிருந்தது.

     ஆனால், இந்தப் பாவி மனம் மட்டும் அவர் என்னதான் எழுதியிருப்பார் என்று அறியத் தூண்டிற்று; அதை நினைக்கும் போதே நெஞ்சு படபடத்தது. கடிதத்தை எடுத்துக் கொண்டு, மாடியில் கணவர் அறைக்குச் சென்றேன். அறையில் போய் சாவதானமாக, உட்கார்ந்தேன். அப்போது, என் கண்கள் மேஜையிலிருந்த பொருட்களைத் துழாவின. அதோ-

     என்னுடைய உடைந்த வளையல் துண்டுகளைப் பொருத்திப் பொருத்தி வளையம் உண்டாக்கப் பார்த்திருக்கிறார், சந்துரு. சே! இந்தப் பாவியின் சந்திப்பால், அவருடைய மனம் என்ன பாடுபட்டிருக்கிறது!

     உறையைக் கிழித்துக் கடிதத்தை எடுத்தேன். உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை ஏதோ பனிக்கட்டி உருளுவது போலிருந்தது.

     மார்கழி மாதக் குளிரில் காலையில் ஆற்றுக்குச் சென்று, “விறைக்கும்” என்று திட்டமாய்த் தெரிந்தும் மனத்தைச் சரிப்படுத்திக் கொண்டு, ‘குபுக்’கென்று நீரில் பாய்வதைப் போல, நான் அவருடைய கடிதத்தில் நுழைந்தேன்.

     “அன்புள்ள ரஞ்சி,

     “நான் உனக்குக் கடிதம் எழுத உரிமையில்லை என்று நீ எண்ணலாம். ஆனால், என்னை விட உரிமை பெற்றவன் எவனும் இருக்க முடியாது என்பதுதான் என் எண்ணம். நீ இதை ஒப்புக் கொள்வாயோ, மாட்டாயோ? இருந்தாலும் என்னுடைய இந்த வேண்டுகோளை முழுதும் உணர்ந்து கொள்ள மனம் வைக்க வேண்டும்.

     “என்ன எழுதுவதென்றே எனக்குப் புரியவில்லை. உணர்ச்சிகளை வார்த்தைகளில் வடித்தெடுக்க நான் என்ன கவிஞனா? இல்லை. உணர்ச்சிகளின் உறுமல்களுக்குப் பயந்து, கூனிப் பதுங்கும் மானிடப் பிறவிதான் நான்.

     “ரஞ்சி, நீ என்னை உணர்ச்சியற்ற கல், பாறை, மரக்கட்டை என்றெல்லாங்கூட, கருதியிருக்கலாம். ஒரு வகையில், உன்னுடைய குரலின் முன் நான் தலைகுனிய வேண்டியதுதான். பள்ளிப் படிப்பின் வெறியிலே மாணவர் குழுவோடு அரட்டையடித்துக் கொண்டும், புத்தகங்களுக்கிடையே தலையைத் திணித்துக் கொண்டும் இருந்து விட்டேன். உன்னுடைய நினைவு கூட, ஏதோ மங்கிய கனவாகத்தான் பட்டது.

     “படிப்பு முடிந்து ஊருக்குக் கிளம்பிய போதுதான் எங்கே பதுங்கியிருந்த உன் நினைவு என்னைக் கிளறி விட்டது. ஊர் வந்து சேர்ந்தேன். உன்னுடைய முகங்காணாமல், துணையை யிழந்த அணிற்பிள்ளையைப் போல வாடினேன். உன்னுடைய கல்யாண விஷயங்கூட, ஊருக்கு வந்த பின் தான் தெரிந்தது. அப்பாவும் தெரிவிக்கவில்லை. உன் கணவன் கூட, ஒருவரிடமும் தனக்குக் கல்யாணம் ஆகப் போவதாய்க் கூறவில்லை. ஆன பின் தான் விஷயத்தை மெதுவாக வெளியிட்டான். அதைப் பேசிப் பயனென்ன? உன்னிருப்பிடத்தை அறிந்தேன். உன்னைப் பார்க்க நினைத்தேன். அதற்காகவே வந்தேன். பள்ளிப் படிப்பினால், நீறுபூத்திருந்த நெருப்பு நம்முடைய ஊர் பிள்ளையார் கோவில் தோப்பு, அந்த ஓடை, நாவல்மரம் முதலியவைகளால் விசிறப் பெற்று, இன்று கனன்று எரிகிறது. ஆம், இன்றும், உன்னை நான் காதலிக்கிறேன். உன்னை மீண்டும் அடையலாம் என்ற தைரியத்துடன் தான் வந்திருக்கிறேன்...”

     எனக்கு மேலே படிக்க ஓடவில்லை. என்னைப் போலத்தான் சந்துருவும் தன்னுடைய காதலை மனத்தினுள் போட்டுப் புதைத்திருக்கிறார். ஆனால், தரையில் புதைத்த பந்து வெளிவராமலிருக்கலாம். ஆனால் தண்ணீரில் புதைத்தது வெளிவராமலிருக்குமா? கண்ணில் துளித்த நீரைத் துடைத்துக் கொண்டேன். வெளியே பேய்க் காற்று மண்ணையள்ளித் தூவிக் கொண்டிருந்தது. வானமெல்லாம் இருண்டு வந்தது. இன்னும் சிறிது நேரத்தில், சரியான மழை வரும் போலிருந்தது.

     கடிதத்தை மேலும் படிக்கலானேன்.

     “ரஞ்சி, நீ கல்யாணமானவள், உன்னை நான் அடைய முடியாது என்று நீ நினைக்கலாம். நன்றாக யோசித்துப் பார். நீயாக விரும்பிக் கல்யாணம் செய்து கொண்டாயா? அப்பாவும், அம்மாவும் சாஸ்திரத்திற்குட்பட்டு, பண்ணி வைத்தது கல்யாணமாகி விடுமா? கல்யாணத்தின் போது, உன்னுடைய இளம் மனம் அதை விரும்பியிருக்காது. உன்னை வாழ்விக்க விரும்பவில்லை, அவர்கள். உன்னை விலை சாட்டி விட்டார்கள். ஆனால், நீ நினைத்தால், மீண்டும் புத்துயிர் பெற்றுச் சிறப்புறலாம்.

     “என்னுடைய வரிகள் உனக்குப் புதிர்போலத் தோன்றலாம். ஆழ்ந்து யோசித்துப் பார். கணவனுக்குப் பங்கம் இழைக்கிறோமே என்று எண்ணாதே. கற்பு கற்பு என்று எதையெல்லாமோ பிடித்துக் கொண்டு, கதைக்கிறது இந்த உலகம். கற்பு என்பது தான் என்ன? ‘அளவு கடந்த அன்பினால் ஏற்பட்ட செல்வந்தான் கற்பு’ என்கிறார், வங்கக் கவிஞர். அந்த அளவு கடந்த அன்பை, நீ யார் மேல் செலுத்துகிறாய்? உன்னுடைய அன்புக்குப் பாத்திரமானவன், நான் தான். என் வாழ்க்கை உன்னுடைய சம்மதத்தில் தொங்கி நிற்கிறது. குதர்க்க மொழிகளால், உன்னை மயக்குகிறேன் என்று எண்ணிவிடாதே. நம் வாழ்க்கை வீணையின் அறுந்து போன தந்திகளை உன்னால் தான் இழுத்துக் கட்ட முடியும்...”

     நான் யோசித்தேன். எங்கள் வாழ்க்கை வீணையின் தந்திகளை இழுத்துக் கட்ட வேண்டுமாம். அவருக்கு வெறுந் தந்திகள் தான் அறுந்து போனதாகத் தோன்றுகிறது போலும்? எனக்கோ - சொல்லவே பயங்கரமாக இருக்கிறது - வெறுந் தந்திகள் மட்டும் அறுந்து போகவில்லை; வீணையே முறிந்து சுக்குநூறாக, வெறும் மரச்சிலும்பல்களாகக் கிடப்பதாகத்தான் தோன்றியது.

     என் கண்ணில் தேங்கி நின்ற அந்த ஒரு சொட்டுக் கண்ணீரும் கடிதத்தில் விழுந்தது. வெளியில் காற்று பலமாய் அடித்தது. சவுக்கடிபட்ட சிங்கத்தைப் போல இடி உறுமிற்று. இப்போதோ, மறு விநாடியோ பெரிய மழை கொட்டும் என்று மட்டும் தோன்றிற்று.

     குலைந்த மனத்தை, இழுத்துப் பிடித்துக் கொண்டு, கடிதத்தில் மீண்டும் நுழைந்தேன்.

     “வாழ்வில் காதல் ஒரு சிறிய அம்சம்தான். ‘வாழ்வு முழுவதுமே காதல்ல’ என்று நீ படித்திருக்கலாம். அதை முழுவதும் நம்பிவிடாதே, அப்படி அதையெழுதியது, ஒரு பெண்ணாக இருக்க முடியாது; ஆணாகத்தானிருக்க முடியும். ஆண்களில் சிலருக்குக் காதல் வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கலாம். பெண்களில் எவருக்குமே காதல் அப்படி இருக்க முடியாது. காதலே உங்களது முழு வாழ்வும். ஒரு பெண்ணிற்கு இதைப் பற்றி நான் எழுத முனைவது முட்டாள்தனம். ஆனால், நீ தோல்வியடைந்த உனது காதலை நினைத்து உருகுவதை விட, சமூகத்தின் கம்பிகளைத் தாவிக் கொண்டு, மீண்டும் என்னை அடையலாம்.

     “இவ்வளவு தைரியங்கொண்டு எழுதுகிறேன் என்று எண்ணாதே. என் மேல் உனக்குக் காதல் இருக்கிறதென்று திட்டமாய்த் தெரியும். இல்லையென்று நீ மறைக்க முடியாது. காதல் கஸ்தூரியைப் போன்றது. எப்படிப்பட்ட இதயப் பேழைக்குள் அதை மூடிப் பத்திரப்படுத்தினாலும், அதன் மணம் வெளிவராமல் போகாது. நீ என்னைக் காதலிப்பது மட்டுமல்ல; உனக்கும் எனக்கும் உள்ள தூரத்தை நினைத்து உள்ளூரக் கண்ணீர் உகுக்கிறாய். இல்லாவிடில், அப்போது என் மார்பில் விழுந்து அப்படி விக்கி விக்கி யழுதிருப்பாயா? உனது உணர்ச்சிகளைக் கிண்டி விடுகிறேன் என்று எண்ணாதே. தெரியாத்தனமாய் மனத்தைத் துன்புறுத்தியிருந்தால் மன்னிக்க வேண்டும்.

     “வீணாகக் கடிதத்தை ஏன் வளர்க்க வேண்டும்? வெறும் வறட்டு வார்த்தைகளில் கோவையில், என்னுடைய ஆத்ம உணர்ச்சிகளை எல்லாம் பிழிந்து கொட்ட முடியுமா, என்ன? உன்னோடு நேரில் பேசலாமென்றால், அவ்வளவுக்குச் சௌகரியம் அமையாது; அதனால்தான் இந்தக் கடிதம் எழுதினேன்.

     “சமூகத்தின் பந்தச் சிறையை விட்டு, உன்னை வெளியேற்றி, மகிழ்விக்க வேண்டும் என்பதே என் விருப்பம். என்னுடைய காதல் உன்னுடைய வாய் வார்த்தையின் சம்மதத்தில் சரணடைந்திருக்கிறது. ஆம், புதிர் போடுவானேன்? நான் உன்னை விரும்புகிறேன். என்னுடன் நீ வந்துவிட்டால், நம்முடைய காதல், துக்கம் மறந்து களிப்புறும். இதில் உன் ஆத்மாவுக்கு விரோதமாய் ஒன்றும் செய்யத் தூண்டவில்லை. நீ விரும்பினால், என்னுடன் வந்துவிடு. சாந்தி நிலவும் ஏதேனும் ஒரு மூலைக்கு நாம் போய்விடலாம். நீ வந்துவிடுவாய் என்ற நம்பிக்கை எனக்குப் பூரணமாய் இருக்கிறது. வந்துவிடு. உனது காதலனை மகிழ்விக்க, உனது காதலைப் பூர்த்தி செய்ய என்னோடு நீ வருவாயா? பதில் உடன்.

     உன் சந்துரு.”

     கடிதத்தை முடித்தேன். இவ்வளவு நேரமும் பிரமிப்பு விழுங்கி வைத்த பெருமூச்செல்லாம் ஒன்றாகத் திரண்டு வெளியாயிற்று. ஆனால், மனத்தின் பாரம் குறைந்ததாக இல்லை. சிந்தனையைக் கிளறி, மனத்தின் போராட்டத்தை மூட்டிவிட்டது, அந்தக் கடிதம். சாளரத்தின் வழியே வெளியே பார்த்தேன். பெருந்தூற்றல் போட்டுக் கொண்டிருந்தது. தூற்றலைத் தொடர்ந்து, காற்று பயங்கரமாகச் சீறவாரம்பித்தது. ஈட்டியால் குத்தப்பட்ட களிறைப் போல இடி பிளிறியது. சில விநாடிகளில் தூற்றல், பெருமழையாக மாறிக் கொட்ட ஆரம்பித்தது.

     என் மனமும் அப்படித்தானிருந்தது. சந்துருவின் கடிதம் என்னுடைய நலிந்த மனத்துக்கு மின்சார வலியூட்டிச் சிந்திக்கத் தூண்டிற்று. ஏதோ பார்த்தறியாத சுகலோகத்துக்கு வழிகாட்டும் வாடாவிளக்கு மாதிரி இருந்தது, அவர் கடிதம்.

     ஆடை படர்ந்தும் கவனிக்கப்படாத பால் எப்படிக் கொதிப்பேறி, பொங்க ஆரம்பிக்கிறதோ, அந்த மாதிரியாயிற்று என் நிலை. மனத்தினுள்ளே, கடிதத்தைத் தொட்ட விநாடி முதல், உணர்ச்சியும் சக்தியும் ஒன்றையொன்று முட்டி மோதவாரம்பித்து விட்டன. அந்த மோதுதலின் எதிரொலி போல, சிந்தனைகள் தெறித்து விழுந்தன. செங்கனலேறிய இரும்புப் பட்டை, சம்மட்டியடியைத் தாங்காமல் சிதறி விடும் தீப்பொறிகளைப் போல.

     “சந்துரு என்னை இன்னும் காதலிக்கிறார். தன்னுடைய காதலில் நம்பிக்கை இழக்காமல், என்னுடைய காதல் வார்த்தையில், தம் வாழ்வையே முடிபோட்டு வைத்து விட்டார். அவர் சொல்வது போலவே, அவருடைய எண்ணத்தைப் பலிதமாக்கினால்? அவரோடு சேர்ந்து, நான் கண்காணாவிடத்திற்கு ஓடிப் போய் விட்டால்?”

     வானத்தில் இரும்புருளை உருண்டதுபோல், பிரம்மாண்டமாக இடி இடித்தது. காற்றின் வேகத்தால், படபடவென்று அடித்துக் கொண்டது கதவு. சாளரத்தின் கதவை அடைக்க எழுந்து போனேன். அதோ, அந்தக் கோயில் தென்னை மரந்தான் ஏன் இப்படிப் பேய் பிடித்தது போலத் தலைவிரித்தாடுகிறது? அதற்குள் ஒரு தென்னைமட்டை அறுந்து, காற்றிலே பறந்து விழுந்தது. ‘கா கா’ என்ற சப்தம். கூர்ந்து கவனித்தேன். மட்டையோடு, பறக்கத் தெரியாத காக்கைக் குஞ்சுடன் ஒரு கூடும் விழுந்து கொண்டிருந்தது! என்னால், அதைக் காணவே சகிக்கவில்லை. அந்தக் காக்கைக் குஞ்சு!

     என் மனத்தின் பிரதிபலிப்பைப் போல, இயற்கை வெளியிலே கோர நர்த்தனம் ஆடிக் கொண்டிருந்தாள். ஊளையிடும் காற்றின் சீறலோடு இடியும், மழையும் கைத்தாளம் போட்டுக் கொண்டிருந்தன.

     பட்டென்று சாளரக் கதவை மூடி விட்டு வந்து உட்கார்ந்தேன். மனம் அந்தத் தென்னை மரத்தைப் போலவே பேயாட்டம் ஆடியது. அதன் உச்சியைப் பிடித்து, ஆட்டத்தை நிறுத்த முடியவில்லை. பரபரவென்று மேஜையிலிருந்து அந்தப் புத்தகத்தை எடுத்தேன். அது பாரதியின் காவியங்கள். “பட்டப் பகலில் பாவலர்க்குத் தோன்றுவதாம், நெட்டைக் கனவுகளில்” மனத்தைச் சாந்தப்படுத்தி விடலாம் என்று எண்ணினேன். கண்ணை மூடிக் கொண்டு, ஒரு பக்கத்தைத் திறந்தேன். பரபரவென்று வாசிக்க ஆரம்பித்தேன் ஆத்திரத்தோடு.

     காற்றைப் பற்றியுள்ள வசனப் பகுதி அது:

     “நடுக்கடல். தனிக் கப்பல்.
     வானமே சினந்து வருவது போன்ற புயற்காற்று.
     அலைகள் சாரி வீசுகின்றன. நிர்த்தூளி படுகின்றன.
     அவை மோதி வெடிக்கின்றன.
     சூறையாடுகின்றன.
     கப்பல் நிர்த்தனஞ் செய்கிறது.
     மின்வேகத்தில் ஏற்றப்படுகின்றது.
     பாறையில் மோதிவிட்டது.
     ஹதம்!...”

     புத்தகத்தை அப்படியே மூடி மேஜை மீது எறிந்தேன். சாந்தி தேடிய எனக்கா இந்தப் புயலும், கப்பலும்! நிர்த்தூளி படுகிறதாம்! வெடிக்கிறதாம்! ஹதம்! - சே! என்னுடைய மன நிலையையே வார்த்தைகளில் வடித்தெடுத்து, மொழி பெயர்த்து விட்டானே, இந்தக் கஞ்சாக்கவி!

     சிந்தனையின் போதையிலே, மீண்டும் என்னை மறந்தேன்.

     “சந்துருவுடன் ஓடிப் போனால், என்னைப் பொறுத்த வரையிலும் சுகமாகவேயிருக்க முடியும் என்று படுகிறது. இத்தனை நாள் மனத்திற்குள்ளேயே கிடந்து புழுங்கித் தவித்த தவிப்பிற்கு ஒரு முடிவு வந்துவிடும். சாந்தி நிலவும். வாழ்க்கையை எங்கேனும் ஒரு இடத்தில் அனுபவிக்கலாம். ஆனால் அங்கு சென்ற பிறகும் என் கணவருக்கு நான் துரோகம் இழைத்து விட்டேனே என்ற நினைப்பு என்னைக் கவ்விக் கொண்டால்? மீண்டும், வாழ்வு கசந்துதான் போகும். மேலும் நான் போய்விட்டால், உலகம் என்னை என்ன சொல்லும்? “விபசாரி! கள்ளி! கற்பிழந்தவள்!” என்றெல்லாம் தூற்றும். என் பெயரின் மேல் பழியை ஏற்றிக் காறியுமிழ்ந்து, தனது ஆத்திரத்தைத் திர்த்துக் கொள்ளும். ஆனால், தூயவை துணிந்த பின்பு பழி வந்து நம்மைச் சூழ்ந்து கொள்ளுவதேது?”

     அர்த்தமற்று நகைத்துக் கொண்டேன், நான்.

     என் சிந்தனைச் சக்கரம் மாறிச் சுழன்றது, அதே பேய் வேகத்தில்:

     “சந்துருவின் எண்ணப்படியே, அவரோடு போகாமல், மீண்டும் என் கணவருடனேயே வாழத் தீர்மானித்தால்? அப்போது, என் இதயத்தினுள்ளே பதிந்து போன சந்துருவின் நினைவு என்னை உருக்கி நாசமாக்கிவிடும். சாகும் வரையிலும், என்னுடைய கணவருக்கு என் ஆத்மாவைச் சமர்ப்பிக்க, உரிமையாக்க முடியாது. ஆனால் கையெட்டு தூரத்தில், வலிய வந்து நிற்கும் காதல் அதிர்ஷ்டத்தைக் காலால் உதறித் தள்ளிவிட்டு, மீண்டும் துன்புறவா? நீறு பூத்த என் காதல் நெருப்பு அணையுமென்று எண்ணினேன். அதற்கு மாறாக, அது பிரம்மாண்டமான வடவை அக்கினியைப் போலப் பற்றிக் கொண்டதே! இந்த வேளையில் நான் சந்துருவின் ஆசையை, காதலை நிராகரித்தால், அந்தத் தீயிலேயே என்னை ஆகுதியாகப் பொசுக்கிக் கொள்ள வேண்டியதுதான்!”

     “ஆம், பொசுங்க வேண்டியதுதான்!” என்று கர்ஜிப்பது போல், இடி இடித்தது. திடுக்கிட்டு விழித்தேன். அறையினுள் சந்துரு வந்து கொண்டிருந்தார். அவருடைய உடையெல்லாம் ‘தெப்பமாய்’ நனைந்திருந்தது. தலையிலிருந்து தண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. எனக்கு ஒன்றுமே ஓடவில்லை. அப்படியே இருந்தேன், ஏதோ உரிமை பெற்ற துணிச்சலோடு.

     சந்துரு உடை மாற்றிக் கொண்டு, தலையைத் துவட்டிக் கொண்டே, என் பக்கம் வந்தார்; நான் எழுந்தேன். நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. ஆனால், முன் மாதிரி ஓடி விட வேண்டும் என்ற பைத்தியக்கார எண்ணம் மனத்தில் உதிக்கவில்லை. அவர் என்ன கேட்டாலும் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு, பதிலளித்து விடுவது என்று அசட்டுத் தீர்மானம் செய்து கொண்டேன்.

     எதிர்பார்த்ததைப் போலவே, சந்துரு பேச ஆரம்பித்தார்: “இப்படி மழை வருமென்று எண்ணவேயில்லை. திடீரென்று, காற்றும் மழையும் சேர்ந்து கொண்டால்...?”

     நான் பேசவில்லை; நின்றேன்.

     “ரஞ்சி! என்ன, கடிதத்தைப் பார்த்தாயா?... இன்னுமா வெட்கம்?” என்று என் முகத்தைக் கொஞ்சலாகத் திருப்பினார். அந்த ஸ்பரிசத்தில் ஆயிரம் வருடமாகத் தவம் கிடந்து எதிர்பார்த்த ஆனந்தம் இருந்தது.

     “உம்” என்று ஆமோதித்தது, என் பேதை வாய்.

     “அப்படியானால், நாளை இரவு புறப்படலாமல்லவா?”

     அவருடைய குரலில் உற்சாகமும் தைரியமும் தொனித்தது. “இதற்கும் ‘ஊ’ன்னு சொல்லேன்” என்றார் மீண்டும்.

     நான் மௌனம் சாதித்தேன்.

     “பேசக் கூடாதா? நான் சொல்வது...?”

     மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு சொன்னேன் என் பதிலை - ஒரு பழமொழி வாயிலாக: “சமாதிக் குழியில் சங்கீதம் பாடினால், சவத்துக்கு என்ன திருப்தி ஏற்படும்? பாடுகிறவருக்காவது திருப்தி ஏற்படும்?”

     “அப்போது, உன்னிடம் உணர்ச்சியே இல்லையா?”

     “இல்லை!” என்றேன் உரத்து.

     “இல்லையாவது! உனக்கு என் மேல் ஆசையிருக்கிறது. உன்னுடைய உடம்பு கூட இதோ புல்லரிக்கிறதே! உனது அவயவங்கள் சந்திரனைக் கண்ட கடலைப் போல்...”

     “இருக்கலாம். நீங்கள் மட்டுமென்ன? எந்த ஆணையும் கண்டால், பெண்களுக்கு உடம்பு நெகிழத்தான் செய்யும்.” ஏதோ தீர்க்க முடியாத புதிருக்கு விடையளித்தது போல் இருந்தது, எனக்கு.

     “ஆனால், நான் உனக்கு அந்நியனல்ல. உன் உள்ளத்தைக் கவர்ந்தவன்!”

     “ஆம், ஒரு காலத்தில்!”

     “இப்போதில்லையா?”

     “இல்லை. என்னுடைய உள்ளம் வேறொருவருக்கு; அது உங்களுக்கு இல்லை.” எனக்கு அழுது விடலாம் போலிருந்தது.

     “மனமாரப் பொய் சொல்கிறாயே? நன்றாக யோசித்துப் பார். உன் மனத்தின் ஒரு சின்ன ஆசை, அங்கேயே பயத்துடன் பதுங்கிக் கொண்டு வெளிக் கிளம்பத் தவிக்க வில்லையா?”

     “உங்கள் ஞாபகம் என் வாழ்க்கையில் கலந்து ஐக்கியமாகி விட்டதே! அதைத் தேடிப் பிடித்து...”

     “தேடிப் பிடிப்பானேன்? அதனால் தான் என்னோடு வந்து விடு என்கிறேன். ரஞ்சி, என் நிலையை நீ உணர வில்லையா?”

     என் மனம் நெகிழ்வுற்றது. சந்துருவின் வார்த்தைகளும், கருணைப் பார்வையும் என்னை மயக்கி விட்டன. அவருடன் நான் போனாலன்றி, என் வாழ்வு இன்பமடையாது என்று ஏதோ சொல்லியது.

     “ரஞ்சி, ஏன் பயப்படுகிறாய்?”

     “உலகம்?”

     “என்னை விடவா, இந்த உலகம் உனக்குப் பெரிதாய் விட்டது?”

     நான் தயங்கினேன். சந்துரு என்னைத் தன் கரங்களால், தடவிக் கொடுத்தார். என் கண் முன் சந்துருவே உலகமாய், பெற்றோராய், கணவராய், தெய்வமாய்(!) தோன்றினார்.

     “சந்துரு!” என்று என்னை மறந்து கூவிக் கொண்டு அவர் மார்பில் சாய்ந்தேன். மடியிலேறிய குழந்தையைத் தடவுவது போல், என்னை அவர் தடவிக் கொடுத்தார். என் கண்களிலிருந்து கவனிப்பற்ற கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

     இப்படியே எவ்வளவு நேரம் இருந்தேனோ, எனக்கே தெரியாது. திடீரென்று, “மன்னி, குடை ஒடிஞ்சி போச்சி” என்ற மீனியின் குரல் மாடியிலிருந்த என் காதில் விழுந்தது.

     சந்துருவிடமிருந்து விடுபட்டுக் கொண்டு, ‘விறுவிறு’ என்று வெளிவந்தேன்.

     “நாளை இரவு - மறந்து விடாதே!” என்று நினைவு மூட்டினார், சந்துரு.

     என்னுடைய மலர்ந்த புன்னகை அவருக்குப் பதில் அளித்தது!