உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
14 “நாளை இரவு! நாளை இரவு நான் எங்கிருப்பேன்?” படுக்கையில் படுத்துப் புரண்டு கொண்டிருந்த என் மனத்தில் பலவாறான எண்ணங்கள் உருண்டு கொண்டிருந்தன: “இதோ, பக்கத்தில் கணவர் படுத்திருக்கிறார். நாளை இரவு இவருடைய பக்கத்தில் எந்தப் புண்ணியவதி தூங்கப் போகிறாள்? நாளையாவது, அவர் தூங்கவாவது! மனைவியைச் சோரமிழைத்துப் போனதாக நண்பனையும், பதித் துரோகம் பண்ணியதாக என்னையும் கடிந்து கொள்வார். இரவு படுக்கைக்குப் போகு முன், அவருக்குப் பால் கொடுப்பது யார்? அப்பா! நான் போய்விட்டால், அவர் மனம் என்ன பாடுபடும்! துணையை இழந்த அன்றிலைப் போல, மானந் தாளாது தற்கொலை புரிந்தால்? அதை நினைக்கவே பயமாயிருக்கிறதே! அப்போது, நான் கொலைகாரியும் ஆகி விடுவேன். அந்தப் பாவமும் என்னைச் சேரவா? சே! இவர் என்ன அவ்வளவு பலமற்றவரா? நினைத்தால், வேறு கல்யாணம் முடித்துக் கொள்ளுகிறார். ஒரு வேளை பண்ணாவிடில்? என்னையே நினைத்து நினைத்து வாழ்நாளெல்லாம் வீண் நாளாக்குவாரா?” என் மனம் கிடுகிடுத்தது. மெதுவாகப் புரண்டு படுத்துக் கொண்டேன்: “நான் எந்தத் துன்பத்துக்குப் பயந்து ஓடிப் போகிறேனோ, அதே துன்பத்தை அவரிடம் விட்டுச் செல்லுகிறேன். என்னதான் இருந்தாலும் அவர் ஆண்பிள்ளை!” என்று என் மனத்தைத் தேற்றினேன். என் நினைப்பைச் சவுக்காலடித்தது போல, எங்கோ இருந்த ஒரு ஆந்தை பயங்கரமாய் அலறிற்று. இருளின் நிசப்தக் குலைவு என் நெஞ்சில் பயத்தை உண்டாக்கியது. அதையொட்டி, பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் இரண்டு பூனைகள் ஒன்றோடொன்று சண்டையிடும் ‘காச்’ ‘மூச்’ என்ற விகாரக் குரல்கள் என் மனத்தின் பேதலிப்பைப் பெரிதாக்கியது. காதுகளை இறுக மூடிக் கொண்டு தூங்க முயன்றேன். ஆனால், தூக்கம் வந்தால் தானே! அமைதிப் பாதையிலே, என் குருட்டுச் சிந்தனை மீண்டும் தள்ளாடித் தள்ளாடி நடக்க முயன்றது. “மீனி! அவளை விட்டுப் பிரிந்து செல்வதா? புக்ககத்தில் என் துயரை மறக்கடித்த தெய்வச் சிலையை விட்டு விட்டு, இந்த பக்தை எங்கோ கண்காணா மூலைக்கு, காதலுக்காக ஓடுவதா? நான் போய்விட்டால், அவளுக்கு காலையில் காப்பி கொடுப்பது, கணக்குப் போட்டு கொடுப்பது யார்? ‘மன்னி! உன்னோடே டூ விட்டிடுவேன்’ என்று இனி யாரைப் பார்த்து அவள் சொல்வாள்? நான் போன பின் அவளுடைய அண்ணாவிற்கு ஒரு புது ‘மன்னி’ வந்தால், அவள் தான் இவளுக்குப் பிடிக்கப் போகிறாளா? இந்த வீடை விட்டுப் போய்விட்டால், வாய் திறந்து பேசும் அந்தக் குழந்தைத் தெய்வத்தின் கிளிமொழிகளை யாரிடம் கேட்பது!” என் கண்களில் என்னையுமறியாமல் கண்ணீர் துளித்தது. கடை விழியோரமாக வழிந்தோட, அது முனைந்து நின்றது. மீனியிடம் எனக்குள்ள ஈடுபாடுதான் என்னை இப்படிக் கலங்க வைக்கிறது. போகிற இடத்தில், இவள் மாதிரி ஒரு மீனி அகப்படப் போகிறாளா? என் கண்களில் தூக்கம் வருவேனா என்று முரண்டு பிடித்துக் கொண்டிருந்தது. கருமேகத்திடையே வெட்டி வெட்டி மறையும் மின்னலைப் போல, நினைவுகள் தோன்றித் தோன்றி மறைந்தன. “அதோ, அந்தப் பக்கத்து அறையில் தான் சந்துருவும் தூங்கிக் கொண்டிருப்பார். தூங்கவாவது? தனது இன்பக் காதலியாகிய என்னோடு, எப்படி யெல்லாம் வாழ்க்கை நடத்துவது? எப்படி யெல்லாம் பேசுவது? எப்படி யெல்லாம் சந்தோஷப்படுத்துவது? - என்றெல்லாம் வெற்றி வெறியில் விழித்துக் கொண்டு மனக் கோட்டைகள் கட்டிக் கொண்டிருப்பார். நாளை, நான் அவருடைய சுவீகார மனைவியாய் விடுவேன். சமூகத்தை எதிர்த்தோ, அதற்குப் பயந்தோ நான் அவருடன் ஓடிப் போய் விடுவேன். அப்போது, இந்த வீடு...?” என் கலங்கிய மனத்தின் எதிரொலிப்பாக, நீண்ட பெருமூச்சுகள் வந்தன. மெதுவாகக் கண்களும் உறுத்த ஆரம்பித்தன; பின் அயர்ந்தன. எப்படியோ தூங்கிப் போய் விட்டேன். காலையெழுந்தவுடன் என்ன குதூகலம் எனக்கு! இரவு கண்ட கனவுகள், எவ்வளவு இன்பகரமானவை! சந்துருவுடன் கைகோத்துக் கொண்டு, குற்றாலத்து அருவியிலே குளித்து விளையாடுவது, தன்னை மறந்து, சொக்கட்டான் ஆடுவது, எங்கள் குழந்தைக்கு நிலாவைப் பிடித்துக் காட்டிக் கொஞ்சுவது, அதற்கு “மீனி!” என்றும் பெயரிடுவது! - அப்பா! இன்னும், எத்தனையோ விதமான கனவுகள். இன்பக் கனவுகள் மனித உள்ளத்திற்கு எவ்வளவு ஆனந்தம் ஊட்டுகின்றன தெரியுமா? பிச்சைக்காரன் ஒருவன் அறுசுவை உணவு உண்டதுபோலக் கனவு கண்டால் போதும். சாப்பிட்டது போலவே, மகிழ்ந்து விடுகிறான். என் நிலையும் அப்படித்தானிருந்தது. சந்துருவுடன் இனிய வாழ்க்கை நடத்தப் போகிறோம் என்ற தீவிரமான எண்ணம் அன்று முழுவதுமே எனக்கு முழு உற்சாகத்தை ஊட்டிற்று. என்றைக்குமில்லாதபடி, அன்று மிகவும் உற்சாகத்துடன் தான் வேலைகள் செய்தேன். வேலை செய்யும் உவகையில், சந்துருவை மீண்டும் தனியே காணக் கூட, எனக்குச் சௌகரியப் படவில்லை. “இப்போதென்ன சந்திப்பது? நாளை முதல், அவரோடுதானே இருக்கப் போகிறேன்” என்று மகிழ்ந்தது, விடுதலையின் சுவையைக் கனவு கண்ட என் மனம். அன்றையப் பகல் பொழுது எப்படிக் கழிந்ததென்றே தெரியவில்லை. மாலையில், கணவர் ஆபீசிலிருந்து வரும் போது நிறையச் சண்பக மலர் வாங்கி வந்திருந்தார். வழக்கம் போலவே, அன்றும் அவர் தன்னுடைய கையாலேயே, என் கொண்டை வளைவில் வில் போலச் சூட்டினார். என்றைக்குமில்லாதபடி, அன்று மிகவும் அழகாக உடை தரித்துக் கொண்டேன். எத்தனையோ நாள் மறந்திருந்த சுகம் அவயங்களில் தளிர்விட்டது போலிருந்தது. மேற்கே இருள் கவிந்தது. கீழ் வானத்தில் சுக்ல பக்ஷத்து நிலா வட்டம் முகங்காட்ட ஆரம்பித்தது. நேரம் நெருங்க நெருங்க மனத்திலே பீதி மீண்டும் உருவாக ஆரம்பித்தது. எல்லாப் பிடிப்பையும் அறுத்தெறிந்து விட்டு, தூர லட்சியத்தை நோக்கி நெடுவழியில் செல்லப் போவதாக, என் மனம் பயந்தது. மாடிக்கு ஏறிச் சென்றேன். கணவரின் அறையிலுள்ள விளக்கை ஏற்றினேன். கீழே மீனி உரக்கச் சத்தப் போட்டுப் பாடம் படித்துக் கொண்டிருந்தாள். கணவரும், சந்துருவும் வெளியே உலாவச் சென்றிருந்தார்கள். என் மனம் மீண்டும் பதற ஆரம்பித்தது. கிணற்றில் நீரிறைக்கும் வாளி முக்கால்வாசி தூரம் வந்த பின் அறுந்து விழுந்து, கிணற்றில் மூழ்குவது போல, என் பிரயாணமும் ஆகி விட்டால்? சே! இந்த மாதிரிச் சிந்தனைகளுக்குத் தனிமை தான் காரணம். சந்துரு மட்டும் இப்போதிருந்தால்-? “சந்துரு வந்துவிட மாட்டாரா? எப்படிக் கிளம்புவது என்பதையெல்லாம் அவரிடம் கேட்க வேண்டுமே” என்ற துடிப்பிலிருந்தேன் நான். நினைத்தபடியே, சந்துருவும் சிறிது நேரத்தில் வந்தார். ஆம், அறையினுள் தனியாகத்தான் வந்தார். கூடச் சென்ற என் கணவரை எப்படியோ ஏய்த்து விட்டுத்தான் வந்திருக்க வேண்டும். “ரஞ்சி!” என்றார், சந்துரு. என்னைக் கட்டிய கணவர் கூட, அவ்வளவு அன்பாய் இதுவரையில் கூப்பிடவில்லை போலிருந்தது. கையிலணிந்த வளையல்களை உருட்டிக் கொண்டே நின்றேன். மனத்தில் தோன்றிய பயம் கோர உருவம் எடுக்கத் தொடங்கியது. என்னுடைய சிந்தனையிருளில், திடீரென்று ஒரு மின்னல் - “சந்துருவுடன் நான் போகாவிட்டால் தான் என்ன?” மிரண்ட என் கண்கள் நாற்புறமும் சுற்றிப் பார்த்தன. சுவரில் தொங்கிய அந்த ‘கப்பிள் போட்டோ’ தான் என் பார்வையில் பட்டது. அந்தப் படத்தில் தான் நான், கட்டிய கணவரின் தோளோடு எப்படி இடித்துக் கொண்டு நிற்கிறேன்? அப்படிப்பட்ட கணவரையா பிரிந்து செல்வது? என் மனம் பேதலித்தது. அதோ ஏற்றி வைத்த விளக்கின் பாதத் தடியில் இருக்கிறதே, அந்தத் திருமங்கல்யச் செப்பு! ஆம், அதில் தான் என் கழுத்தில் இப்போது கிடக்கும் தாலி அமர்ந்திருந்தது. அந்தப் புனிதப் பேழையிலிருந்து தானே அதை எடுத்து என் கழுத்தில் கட்டினார்? அதற்குத் துரோகம் நினைக்கவா? என் மனம் அலை பாய்ந்தது. சந்துரு என் முகத்தில் தோன்றிய வியப்பை உணர்ந்து விட்டாரோ, என்னவோ! “ரஞ்சி, என்ன திகைக்கிறாய்? புறப்படு- ம்...?” நான் பதில் சொல்லவில்லை. அகலிகையிடம் காதல் பிச்சை கேட்கும் இந்திரனின் நினைவு வந்தது. அதை நினைக்கவே என் உடம்பு கிடுகிடாய்த்தது; நடுங்கினேன். கீழே பாடம் படித்துக் கொண்டிருந்த மீனியின் குரல் தெளிவாகக் கேட்டது: “பொன்மானைப் பிடித்துத் தரத்தான் வேண்டும் என்று சீதை பிடிவாதம் பிடித்தாள். ராமனும் மானைப் பிடிக்க ஓடினார். சிறிது நேரத்தில், ‘சீதா லக்ஷ்மணா அபயம்’ என்ற குரல் கேட்டது. அண்ணனைக் காப்பாற்ற, லக்ஷ்மணன் ஓடினான். இந்த நேரத்தில் இராவணன் கபட சந்நியாசியாக வேடம் தரித்து சீதையிடம் வந்து பிச்சை கேட்டான். பிச்சை போட்ட சீதையைத் தூக்கிக் கொண்டு, ஆகாய மார்க்கமாய்...” எனக்கு, மேலே கேட்கப் பிடிக்கவில்லை. “சீதையை அபகரிக்க வந்த இராவணன் போலவா, சந்துரு வந்திருக்கிறார்? இல்லை - அகலிகையைக் கற்பழிக்க வந்த இந்திரனாக வந்திருக்கிறாரா?” என்று விவரமற்றுப் பீதியடைந்த என் மனம் சிந்தித்துப் பார்த்தது. மனக் குகையில் இருளிலே மீண்டும் ஒரு பளீர் மின்னல்! என் ஞான சூன்ய இருள் மங்கி மடிந்ததாகத் தோன்றியது. என் கண் முன்னே பல உருவங்கள். எத்தனையோ வருடம் தீவாந்திர சிறைவாசத்திலும், தன் கற்பு நெறி தவற விடாத சீதாதேவி, எமனையே தொடர்ந்து சென்று அவனை வெற்றி கொண்ட சாவித்திரி, உலகத்தை உய்விக்கும் சூரிய பகவானையே, “உதிக்காதே!” என்று வீர ஆக்கினையிட்ட நளாயினி, கற்புத் தீயினால் மதுரை நகரையே சுட்டெரித்த கண்ணகி - எல்லோருடைய முகங்களும் என் கண் முன் நின்று கொண்டு, “போகாதே! போகாதே!” என்று தடுத்து நிறுத்தின. என் பஞ்சை மனத்திலும் ஒளியுண்டாயிற்று. “ஆம்; யுகாந்திர காலமாக, பெண்ணினம் தங்கள் கற்பு நெறியைத் தான், பெண்மை நலனைத்தான் பேணி வந்திருக்கிறார்கள். இந்தப் புண்ணிய பூமியின் தாய்மார்கள் பெண்மையை இத்தனை நாள் போற்றி வந்ததனால் தான் இன்று இவ்வுலகமே நிலைத்து நிற்கிறது. யுகாந்திர காலமாகக் காக்கப்பட்டு வந்த பெண்மையின் தியாகச் சரித்திரத்தை இந்தப் பாவியின் காதலுக்காக மாசுபடுத்துவதா? முடியாது!” குழைந்து சாய்ந்த என் மனக்கொடி மீண்டும் நிமிர்ந்தது. சந்துரு கேட்டார்: “ரஞ்சி, வரவில்லையா?” “ஆம்” என்றேன், முரட்டுத் துணிவோடு. சந்துருவின் உடல் நடுங்கியது. “என்ன, பைத்தியம் பிடித்து விட்டதா?” “அதெல்லாமில்லை. என்னுடைய காதலுக்காக, பெண்மையைக் களங்கம் செய்ய மாட்டேன். யுகாந்திர காலமாகக் காப்பாற்றப்பட்டு வந்த திரவியம், இந்தப் பாவியால் கொள்ளை போக வேண்டாம்.” “அப்போது நீ வரமாட்டாயா?” அவர் குரல் நடுங்கியது. “ஆம், வர முடியாது. முடியவே முடியாது!” என் தொண்டையில் இரும்புக் குண்டை வைத்து அடைப்பது போல இருந்தது. “உனது அன்பின் மேல் நம்பிக்கை வைத்ததற்கு, இது தானா உனது கடைசி வார்த்தை?” “ஆமாம்.” “அப்படியானால், உனது அன்பு?” “செத்து விட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள்.” அதற்கு மேல் என்னுடைய உணர்ச்சிகளைத் தாங்க முடியவில்லை. அப்படியே விக்கி விக்கி யழுதேன், பாவ மன்னிப்புக் கோரும் கொலையாளியைப் போல. சிறிது நேரங் கழித்து, கண்களைத் துடைத்துக் கொண்டு, தலை நிமிர்ந்தேன். சந்துருவைக் காணவில்லை. மேஜை மீது அவர் பொருத்திப் பொருத்திப் பார்த்த, அந்த வளையல் துண்டுகள், தாறுமாறாய்க் கிடந்தன. என்ன முயன்றாலும் உடைந்த வளையல் துண்டுகளை ஒன்று சேர்க்க முடியுமா? என் மனத்தில் வெற்றிக் களி தாண்டவமாடியது. சஞ்சலத்தால், என் மனத்தில் பின்னப்பட்ட கருந்திரை கிழிபடப் போவது போலத் தெரிந்தது. அறையை விட்டு வெளியே வந்து மாடி வராந்தாவில் நின்றேன். மனத்தில் சாந்தியும் இல்லை, சலனமும் இல்லை; புயல் ஓய்ந்த கடல் அமைதியைப் போல மனமிருந்தது. வராந்தாவில், வானிலேறிய வெண்ணிலவின் பால் ஒளி அமிர்த மழை பொழிந்து கொண்டிருந்தது. சந்திரனின் ராஜ நடையிலே மனத்தை லயிக்க விட்டு அண்ணாந்து நிமிர்ந்தேன். வானத்தில் வெள்ளிப் படகு போல, சுக்லபக்ஷத்துப் பிறை மிதந்து சென்று கொண்டிருந்தது. படகைச் சுற்றி வைடூரிய மணிகளைப் போல, மினுங்கிக் கொண்டிருந்தன தாரகைகள். சந்திரனை மூழ்கடித்து, மறைந்திருந்த கருமேகம் விலகி வெகு விரைவாகச் சென்று கொண்டிருந்தது. தியாகச் செம்மை துலங்கும் என் மனம், பெருமிதத்தால், வானலோகம் வரையிலும் நிமிர்ந்து நின்றது. “அதோ சிதறிக் கிடக்கின்றனவே, தாரகை மணிகள் - அவற்றில் அந்தக் கற்புக்கரசி அருந்ததி எங்கு இருக்கிறாளோ? ஆம், கற்புக் கனல்களெல்லாம் உலகத்துச் சூழ்நிலைக்குள்ளும், அதற்கு அப்பாலும் நின்று ஒளி வீசுகிறார்கள். சீதைக்குக் காவிய மாளிகை கட்டிக் கொலு அமர்த்தினான் கம்பன்; கண்ணகிக்குக் கோயில் கட்டிக் கைதொழுதான் சேரன்; அருந்ததிக்கு வானிலே இடங்கொடுத்தான் ஈசன். ஆம், இன்றைய என்னுடைய வெற்றி மகத்தானதுதான். கற்பு மகளிரின் தோளோடு தோள் நிற்கும் பாக்கியம் அல்லவா நான் பெற வேண்டும்? அருந்ததியைப் போல, இந்த உலகின் அந்தகாரத்தில் நானுமல்லவா ஒளி விட வேண்டும்!” ஜில்லென்ற ஒரு உணர்ச்சி, என் தோள்ப்பட்டையில் குளிர்ந்து ஓடியது. திரும்பினேன்; என் கணவர் நின்று கொண்டிருந்தார். என் மலர்ந்த புன்னகை அவரை வரவேற்றது. “ரஞ்சி! வானிலே என்ன அவ்வளவு லயிப்பு? வான சாஸ்திரம் பயில்கிறாயா?” என்றார் கணவர். “ஆமாம்” என்றேன் நான். முற்றும் |