2

     கண்ணைத் திறந்தேன். விடிந்திருந்தது. மேல் காலெல்லாம் ஒரேயடியாய் வலியெடுப்பது போல இருந்தது. துன்பகரமான நினைவுகள் உடலைக்கூட பாதிக்கும் போலும்!

     சோம்பல் முறித்துக்கொண்டே, வெளியே எழுந்து வந்தேன். அம்மா வீட்டு முற்றத்தில் நின்று ஈரச்சேலையைப் பிழிந்து கொண்டிருந்தாள். எனதுள்ளத்தையே பிழிந்து, அதிலுள்ள உயிரையே வடிப்பது போலிருந்தது. அம்மா எப்பொழுதுமே, அருணோதயத்திலேயே எழுந்துவிடுவாள். குளிப்பு முழுக்குகளையெல்லாம் சீக்கிரமே முடித்துவிட்டுப் பிரார்த்தனை செய்வாள். அதன்பின்தான் மற்றைய வேலைகள்.

     அம்மாவைக் கண்டதும் எனக்குத் திகிலடித்தது. முந்தின இரவு நடந்த உரையாடல் காதில் ‘கண் கண்’ என்று ஒலித்துக் கொண்டிருந்தது. அம்மாவைக் காணவே, எனக்குக் கூச்சமாயிருந்தது. அது எதனால் என்று இன்னும் எனக்குப் புரியவில்லை. கண்களில் இருந்த வேதனை இன்னும் தெளியவில்லை.

     “ரஞ்சி, ஏனடி, கண்ணெல்லாம் ஒரேயடியாய்ச் சிவந்திருக்கிறதே! இரவு நன்றாய்த் தூங்கவில்லையா?” என்று பரிவோடு கேட்டாள். தாயுள்ளத்தின் அன்பொலி அதில் தொனித்தது; ஆனால் என்னுள்ளத்தைத் தொட, அதற்குச் சக்தி போதவில்லை. எனது கண்களில் மிதந்த கலக்கத்தை அம்மா அறிந்து கொண்டாள் என்று எண்ணும்போதே, எனக்கு என்னவோ பண்ணிற்று. ஏதோ சாக்குக் கூறித் தப்ப முயன்றேன்.

     “ஒன்றுமில்லையம்மா, கொசுக்கடி தாங்க முடியவில்லை” என்றேன், என்னையும் அறியாது.

     மனிதனது உள்ளுணர்வு, சமயங்களில், அவனைத் தன் சொந்த சாமர்த்தியத்தால் கூடக் காப்பாற்றி விடுகிறது. ஆச்சரியந்தான்!

     “கதவைத் திறந்து போட்டுப் படுத்துக் கொள்ளாதேயென்று, எத்தனை தரம் சொன்னேன்? வேண்டுமென்றால், கொசுவலையைக் கட்டிக்கொள்கிறது” என்று உபதேசம் பண்ணிவிட்டு அம்மா கிளம்பினாள்.

     உற்சாகமற்ற மனத்தோடு, நான் குளித்துவிட்டு வந்தேன். முற்றத்தில், அம்மா ஜெபமாலை உருட்டிக் கொண்டிருந்தாள். ‘சிவ சிவ’ என்று அவள் அந்த மணிகளை உருட்டும்போது, அவளது மனம் எவ்வளவு நிச்சிந்தையாய் இருந்திருக்கும்?

     ஆனால், பாவி என் மனமோ?

     நானும் அம்மாவைப்போல் எனது உள்ளத்தில் ‘சந்துரு சந்துரு’ என்று தினம் தோத்திரம் பண்ணிக் கொண்டுதானிருக்கிறேன். ஆனால், அம்மா அந்த மணியை எண்ணுவதற்கும், எனக்கும் எவ்வளவு வேறுபாடு! ஒரு மணியில் ஆரம்பித்தால், நூற்றியெட்டு விநாடிகளுக்குள் அவளது கோரிக்கை நிறைவேறியதாகவே அம்மா கருதுகிறாள். ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு மணியாக எண்ணிகிற எனது காலமும் கோரிக்கையும் தண்டவாளங்களின் போக்கு மாதிரி நீண்டு கொண்டே போகிறதே!

     நான் தினசரி உபயோகிக்கின்ற, எனது சிந்தனை மணிகளால் கோக்கப்பட்ட துளசிமாலை, இடையிலே எங்கேனும் அறுந்து தொங்குகிறதா?

     அடுக்களையுட் புகுந்து, எனது காரியங்களைக் கவனிக்கத் தொடங்கினேன். என் மனத்தில் எழுந்த கவலைகள் எல்லாம் கொஞ்சம் மறைவதுபோலத் தோன்றின. வீட்டு வேலைகளில் நிறையப் பங்கெடுக்க வேண்டும் என்று உள்ளம் தூண்டுவது போலிருந்தது. ‘விறு விறு’ என்று ஒரு இயந்திரத்தைப் போல, எனது வேலைகளைச் செய்து கொண்டு போனேன். இடையிடையே என்னையுமறியாமல் ஏதோ ஒரு முகம் என் முன் தோன்றி என்னை பரிதபிக்கச் செய்தது. ஆனாலும், வீட்டு வேலை என் புண்பட்ட மனத்துக்கு ஆறுதல் அளித்தது. ஆம். தாங்க முடியாத துன்ப அலைகளை மட்டுப்படுத்த வேண்டுமானால், பல அலுவல்களுக்குள், தலையை நுழைத்துக் கொண்டிருப்பதுதான், எனது அனுபவத்தில் கண்டது.

     எனது தந்தையும், தாயும் எனக்கென்று தீர்மானித்து வைத்திருக்கும் அந்த மனிதர் யார்? அவர் யாராயிருந்தாலென்ன? அவர் என் சந்துரு இல்லை. எப்படியும் அவர் வேறு மனிதர்தானே!

     அம்மாவின் ஒவ்வொரு பேச்சும் எனது உடைமையைப் பறிப்பதுபோல இருந்தது. ‘சந்துரு என்னுடையவர் தான்’ என்று நான் மனத்தினுள் கட்டியிருந்த உறுதியையெல்லாம் சிதறவடிப்பதுபோல, அம்மா பேசினாள். சந்துருவுக்கு உடைமையான என்னை, வேறு யாருக்கோ தானம் வழங்குவதுபோல் இருந்தது. எனது உடைமையின் பிரமாண்டமான உருவம், என்னையுமறியாமல் வெயிலைக் கண்ட பனி போல் மங்கி மடிவதைக் காண, என்னால் தாங்கமுடியவில்லை. முதல் நாளிரவிலிருந்தே, அது கரைய ஆரம்பித்திருக்க வேண்டும்.

     என் மனம் நிம்மதியடையவில்லை. காரணம், மனக் கவலைகளை மறக்கக்கூடிய சாதனம் தீர்ந்துவிட்டது. ஆம், வீட்டு வேலைகள் முடிந்துவிட்டன. அது எவ்வளவு நிம்மதியைத் தந்தது தெரியுமா?

     ஆனால், அம்மா அப்பா இருவர்களின் ‘சதி’யைப் பார்க்கும்போது, என் மனம் சாந்தியை அள்ளித் தரும் ஒரு முகத்தையே எண்ணி அலைக்கழித்தது; அது ‘சந்துரு’வின் முகந்தான்.

     எனக்கென்னமோ இந்த நிலையில் சந்துரு என் பக்கத்திலிருக்க வேண்டும். அவரைக் காணவாவது வேண்டும் என்று தான் தோன்றிக் கொண்டிருந்தது. “அந்த முகத்தைக் காணவேண்டும், காணவேண்டும்” என்பதுதான் என் உள்ளத்தின் சிந்தனை ஆக இருந்தது. என்னுள் உறைகின்ற ஏதோ ஒன்று, அந்த முகத்தைக் கண்டாலாவது, என் நெஞ்சை அழுத்திக் கொண்டு நிற்கும் பாரம் குறையும் என்று தூண்டிற்று. “சந்துரு! அவர் இப்போது எங்கே இருக்கிறார்? நானூறு மைல்களுக்கப்பால்! புத்தகங்களின் பக்கங்களுக்கிடையே தலையை விட்டுத் துன்பப்பட்டுக் கொண்டிருப்பார். பரீட்சையில் வெற்றி பெறப் பாடல்களை மனனம் செய்து கொண்டிருப்பார். நான் அவரது பெயரையும், உருவத்தையுமே மனனம் செய்கிறேன். ஆனால் இப்போது அவருக்கு என்னைப் பற்றிய நினைவாவது வருமா?”

     ஆம். இவ்வளவும் நான் தனிமையில் இருந்து எண்ணியவைதான். தனிமை எவ்வளவு நல்லதோ, அவ்வளவு கெட்டதுங்கூட. ஆனால் தனிமையிலே மனம் ஆழவேண்டுமானால், சிந்தனை வேண்டும். ஆம். தனிமையில், சென்று மறைந்த இன்ப துன்பங்களைச் சிந்தனை பண்ணவேண்டும். அதிலேதான் ஆனந்தம் பிறக்கிறது. சிந்தனை செய்வது எனது தொழிலாகிவிட்டது; அதில் எனது வாழ்வின் ஒரு பகுதி ஒட்டிக் கொண்டிருக்கிறது.

     அன்றைக்குப் பொழுது எப்படிப் போயிற்றென்றே எனக்குத் தெரியவில்லை. வெளியே எட்டிப் பார்த்தேன். சூரியன் மலைவாயிலில் அமிழ்ந்து கொண்டிருந்தான். எனது நெஞ்சை விழுங்கிய இருள் போல, நான் மறைக்க எண்ணும் உள்ள உணர்வைப் போல இருள் கவிந்தது.

     வான அரங்கில் சடைவிரித்தாடும் காளியின் பேய்க் கூத்தை யெண்ணியவாறே, வெளியே நோக்கியிருந்தேன். சந்திரன் இன்னும் கிளம்பவில்லை. அவன் அப்போதைக்குள் வருவதாயும் தெரியவில்லை. எனது பாழடைந்த மனத்தின் மூலையில் சுடர் விடும் ஒளியைப் போல, இருள் படர்ந்த வானிலே, மங்கிய தாரகை ஒன்று முளைத்தது. என் மனம் அந்தக் கருநீல வானிலே சாந்தியைத் தேடலாயிற்று.

     “ரஞ்சி! சாப்பிட வா!” என்ற அம்மாவின் அழைப்பு, என்னைப் பிடித்திழுத்தது.

     மூலையில் தூங்கும் கவலைகளைத் தட்டிக் கொடுக்கக் கூடிய ஒரு நீண்ட பெருமூச்சு வெளிக் கிளம்பியது. கலங்கியிருந்த என் கண்களைத் துடைத்துக் கொண்டு, சாப்பிடப் போனேன்.

     அன்று என்னவோ சாப்பாடு பிடிக்கவில்லை. அம்மா ஏதேனும் எண்ணிவிடக் கூடாதேயென்று, எப்படியோ சாப்பிடப் பார்த்தேன். ஆனால் ஏதோ ஒன்று தொண்டையிலிருந்து, சாப்பாட்டை வெளியே உதைத்துத் தள்ளுவது போலிருந்தது.

     சாப்பாடு செல்லவில்லை. அம்மா ஏதேனும் கேட்டு விடக்கூடாதே என்று பயந்தேன்.

     “ஏண்டி, இன்றைக்கு ஏன் நன்றாய்ச் சாப்பிடவேயில்லை? உடம்புக்கு ஏதேனும்...” என்று இழுத்தாள், அம்மா.

     இனியும் மௌனம் சாதிக்க வழியில்லை. சட்டென்று, “தலையைக் கொஞ்சம் கனத்தாற் போலிருக்கிறது. வேறு ஒன்றுமில்லை” என்று மழுப்பினேன், நான். ஆனால் உண்மையில் எனக்குத் தலைவலியுமில்லை; தலைக்கனமும் இல்லை. மனந்தான் வலியெடுத்துக் கொண்டிருந்தது. அம்மா நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள்.

     “உடம்பை வீணாய் அலட்டிக்கொள்ளாதே. போய்ப் படுத்துக்கொள்” என்றாள்.

     இதுதான் சமயமென்று எழுந்திருந்து, கையை அலம்பி விட்டுப் படுக்கப் போனேன். படுக்கையில் படுத்தும் தூக்கம் வரவில்லை. மனம் குரங்காட்டம் ஆடியது. அதை இழுத்துப் பிடித்துக் கட்ட எனக்குப் போதிய சக்தி இல்லை.

     கையில் ஒரு விளக்குடன் அம்மா அறைக்குள் வந்து கொண்டிருந்தாள், அவள் தோளிலே கொசுவலை தொங்கிக் கொண்டிருந்தது.

     “என்னம்மா?” என்று ஆரம்பித்தேன் நான்.

     “இன்னும் நீ தூங்கவில்லையா?” என்று படுக்கையண்டை வந்தாள். அவள் கையில் நீலகிரித் தைலம் இருந்தது.

     “ரஞ்சி, இந்தத் தைலத்தை நெற்றியில் தடவிக்கொள். மண்டையிடி யெல்லாம் போய்விடும்” என்று கூறிவிட்டுத் திறந்தாள்.

     மண்டை யிடித்தாலல்லவோ தைலத்தைப் போடலாம்? “வேண்டாமம்மா?” என்று மறுத்தேன் நான்.

     “போடி, உனக்கு ஒரு காய்ச்சல் மண்டையிடி வந்தால், எனக்கல்லவோ சங்கடம்? நீ சும்மா படுத்துக்கொள், நானே தடவிவிடுகிறேன்” என்று கூறிக்கொண்டே, சூடு பறக்கத் தேய்த்தாள். அந்தச் சூட்டின் வேகத்தால், முத்து முத்தாக வியர்வைத் துளிகள் எனது நெற்றியில் பூத்தன.

     “காலையிலேயே சொன்னேனே, கொசுவலையைக் கட்டிக்கொள் என்று. உனக்கென்ன? இதோ கொண்டு வந்திருக்கிறேன். நான் கட்டிவிட்டுப் போகிறேன்” என்று கொசுவலையின் ஒரு மூலையைக் கட்ட ஆரம்பித்தாள்.

     அவளை ரொம்பவும் துன்பப்படுத்தக் கூடாதென்று, “அம்மா, நீ போ. நானே கட்டிக் கொள்கிறேன்” என்றேன்.

     “போடி, நீ படுத்துக்கொள். இதென்ன சீமை வேலையா?” என்று தட்டிப் பேசிவிட்டுக் கொசுவலையைக் கட்டினாள். பின், நெற்றியில் ஒரு தரம் விரலை வைத்துப் பார்த்துவிட்டுப் புறப்பட்டாள்.

     என்னைப் பற்றி அவளுக்கு ஏன் அவ்வளவு கவலை? தாய்மை யன்பின் கனிவுதான் இந்தச் செய்கையெல்லாம் செய்யச் சொல்லுகிறது போலும்! அப்படியானால், எனது கல்யாணம் எனக்கு நன்மையைத் தருமா, கெடுதலைத் தருமா என்று அவள் யோசித்துத்தானே செய்வாள்? நன்மையைத் தருமென்றுதான் செய்கிறாள். ஆம். அளவு கடந்த அன்பு எனது அனுமதியைக் கூடக் கவனிப்பதில்லை. அன்பு அளவு கடந்துவிட்டால், கேள்விமுறையேது?

     என்னைச் சுற்றி, கொசுவலை பனி மூடியது போல் விரிந்து கிடந்தது. என்னைச் சுற்றி வலை! ஆம். என் வாழ்க்கையைச் சுற்றிக்கூட, வலை வீசியாய்விட்டது. கட்டுப்பாடு, நாணம், பணிவு என்ற பல நூல்களால் பின்னப்பட்ட வலையினுள் நான் அகப்பட்டுக் கொண்டேன். என்னைச் சுற்றியிருந்த அந்த வெண்மையான கொசுவலை, பெண்மையையே பிடிக்க எண்ணி வீசிய வலை மாதிரி இருந்தது.