உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
3 வாலிபத்தில்தான் ஒரு ஆணோ பெண்ணோ இன்பகரமான வாழ்க்கை நடத்தலாம் என்று எத்தனையோ பேர் கூறியுள்ளனர். ஆனால், எனக்கு என்னவோ இன்னும் அதில் நம்பிக்கை ஏற்படவில்லை. நான் இப்போதுதான் வாலிபத்தின் முதற்படியில் நிற்கிறேன். ஆனாலும் கூட, அந்த முதற்படியிலேயே, அப்பப்பா! என்ன வழுக்கு! என்ன தடுமாற்றம்! எனது அனுபவத்தில் நான் கண்டதெல்லாம் இளம் பிராயத்தின் ஆனந்த அனுபவந்தான். தாங்க முடியாத உணர்ச்சி அலைகளை எழுப்பிக் கரை மீது நம்மை மோதிச் சிதறடிக்கும் இந்த வாலிபத்தை விட, குழந்தையாக, தெருவில் முன் மாதிரிச் சிறு வீடு கட்டும் சிறுமியாக, இருப்பது மிகவும் மேல். நிச்சலமான ஏரியில், காற்றின் கெஞ்சலிலே தவழும் மெல்லிய அலைகளொத்த இளமைக்கும், சண்டமாருதத்தின் தாக்குதலால் கொந்தளிக்கும் வாலிபக் கடலின் துடிப்புக்கும் எவ்வளவு தூரம்! இப்படியெல்லாம் எண்ணும்போது, எனது மனத்தில் ஒரே ஒரு எண்ணந்தான் உதிக்கிறது. நான் பழையபடி, நிர்மலமான இதயத்தையுடைய சிறுமியாக மாறிவிட்டால்...? அப்பா! அப்போது எவ்வளவு சுகமாயிருக்கும்! இந்த மாதிரி எண்ண அலைகளின் கொக்கரிப்புக்கும் உணர்ச்சிகளின் ஓங்காரத்துக்கும் பயப்பட வேண்டியதில்லை யல்லவா?... எனது இளமையை இப்போது நான் நினைக்கும்போதும் ஆனந்தம் பொங்குகிறது. அந்த அழகிய தோப்பிலே, கண்ணாடி போன்ற அந்த நீரோடையின் கரையிலே, நானும் சந்துருவும் விளையாட்டும் வேடிக்கையுமாக நாவல் பழங்கள் தின்றதை நினைத்தால்?... அப்போது எனக்குப் பத்து வயதுதான் இருக்கும். தெருவிலுள்ள மணலில் சிறுவீடு கட்டி விளையாடும் பருவம். அந்த வயதில், எனது முகத்தில் ஒரு நாளாவது துன்பத்தின் வரிக்கோடு படர்ந்தது கிடையாது. விளையாட்டுத் தோழன் சந்துருவுடன் கூட, விளையாடிய குதூகலத்தின் ரேகைகள் தான் ஒளிக்கீற்றுகள் போல, முகத்தில் தவழும். அந்தப் பருவமே கரும்பைப் போலத்தான் - கொஞ்சஞ்கூடக் கைத்தது கிடையாது. சந்துரு எனக்குப் பள்ளித்தோழன்; படிப்பில் தோழன்; விளையாட்டுத் தோழன்; வினைக்கும் தோழன். எல்லாவற்றிற்கும் அவன் இருந்துதான் ஆக வேண்டும். அவனில்லாத விளையாட்டோ, பாடமோ சுவைக்காது. அந்த வயதிலேயே சந்துரு எனக்கு ரொம்பவும் இன்றியமையாதவனானான். சந்துரு எங்களுக்குத் தூரபந்து. அவன் எனக்கு என்ன முறை வேண்டுமோ எனக்குத் தெரியாது. சந்துரு, சந்துரு என்றே அழைத்தே பழக்கமாய்விட்டது. எங்கள் குடும்பத்துக்கும் அவர்கள் குடும்பத்துக்கும் மிக அந்நியோன்யம். நம்முடைய உறவினர்கள் கூட அவ்வளவு அன்புடன் இருக்க மாட்டார்கள். எங்கள் ஊருக்கு வடக்கே ஒரு வாய்க்கால் ஓடுகிறது. ‘குளுகுளு’வென்று அதில் ஓடும் நீரைப் பார்க்கும்போது அதனுள் வீழ்ந்து, அதன் போக்கிலேயே மிதந்து செல்லலாமா என்று தோன்றும். வாய்க்காலில் புதுத் தண்ணீர் வரும்போது பார்க்க வேண்டும், அடேயப்பா! எங்கும் ஒரே பசுமைதான். வறண்டு கிடந்த வயற்காடுகளில் நாற்றுக்கள் பச்சைப் பசேலென்று தலைதூக்கி நிற்கும். கரையோரம் வளர்ந்திருக்கும் புல்லைத் தின்னக் கும்மாளம் போட்டுக் கொண்டு ஓடிவரும் பண்ணை வீட்டுப் பசுக்கள், வயற்காட்டு ஓடையில் நீரின் போக்கை எதிர்த்துத் துள்ளித் திரியும் சிறு அயிரை மீன்கள், நீர் நங்கையின் குளிர்ந்த கன்னத்தில் முத்தமிட்டு மெய்ச்சிலிர்க்கும் நாணற்புல், ‘சதசத’வென்றிருக்கும் வயல்களிலே ராஜநடை போட நினைக்கும் வெள்ளைக் கொக்குகள் - எல்லாம் பார்க்கப் பார்க்கத் தெவிட்டாது. வாய்க்கால் கரையையொட்டி, தென் பாரிசத்தில் அடர்ந்த தோப்பு ஒன்று உண்டு. தோப்பென்றால், ஏதோ சொர்க்க பூமிக்குள் காலடி எடுத்து வைப்பது போலத்தானிருக்கும். பச்சைத் தகடு வேய்ந்த மரகதத் தேர் மாதிரி மரங்கள் வானோக்கித் தவம் புரியும். உதிர்ந்த மகிழம்பூ, பன்னீர்ப்பூ முதலியனவைகளின் வாசனையே நம்மை மயங்க வைத்துவிடும். அந்தத் தோப்பின் மத்தியில் பிள்ளையார் கோவில் ஒன்றுண்டு. அந்தப் பிள்ளையார் கோவிலைச் சுற்றி ஒரு பெரிய காலியிடம் கிடந்தது. எங்களூர்ப் பிள்ளைகளுக்கெல்லாம் அதுதான் விளையாடுமிடம். பள்ளிக்கூடத்துக்குப் போகாத பையன்களையும், அவர் சகாக்களையும் கண்டுபிடிக்க வேண்டுமானால், வேறு எங்குமே போக வேண்டாம். இங்கு வந்தால், எப்படியும் கண்டுபிடித்துவிடலாம். தோட்டத்தில் பூஞ்செடி வகைகளிலிருந்து மா, பலா, தென்னை முதலிய பெரிய மரங்கள் வரை நிறைய உண்டு. மரங்களினின்று வருகிற வரும்படியெல்லாம் பிள்ளையார் கோவிலுக்குத்தான். மாம்பழக் காலத்தில் மட்டும் தோப்புக்குப் பிரமாதமான காவல் உண்டு. எங்களூர்ப் பையன்களுக்கு அதிலே ஒரு பெருமை. தமக்குப் பயந்தே காவல் வைப்பதாக அவர்களுக்குள்ளே ஒரு எண்ணம். சந்துருவும் நானும் இங்குதான் எத்தனை தடவை விளையாடியிருக்கிறோம்! அங்கு ஒரு நாவல் மரம் உண்டு. ஆடி மாசத்திலே அதில் கருமணிகளைப் போல, நாவற் கனிகள் நிறையத் தொங்கும். “ஆண்டவனே! பிள்ளையாரே! ஒரு பெரிய காற்றடிக்கக் கூடாதா? இந்தப் பழங்களெல்லாம் எங்களுக்குக் கிடைக்கக் கூடாதா? உனக்குப் பத்துக் குட்டும் பத்துத் தோப்புக்கரணமும் போடுகிறேன்” என்று நாங்கள் அந்தத் தோப்படிப் பிள்ளையாரிடம் வரம் கேட்கும்போது எவ்வளவு ஆனந்தமாயிருக்கும் தெரியுமா? எங்களிலேயே ஒன்றிரண்டு பையன்களுக்குத்தான் மரமேறத் தெரியும். அதில் சந்துருவும் ஒருவன். அப்படிச் சொல்வதில் எனக்கு எவ்வளவு பெருமை தெரியுமா? “எங்கள் சந்துரு இப்போது வந்துவிடுவான். உங்களுக்கெல்லாம் நிறைய உலுப்பித் தரச் சொல்கிறேன்” என்று அவர்களுக்கு நான் தைரியம் கூறும் போது, எவ்வளவு இன்பம் பிறக்கும்! ஒரு நாள் : சந்துரு வந்தான், வழக்கம் போல் மரத்தின் மீது ஏறினான். கீழே உள்ள பையன்கள் எல்லாம், “சந்துரு! எனக்கு ஒரு பழம்!... எனக்கு இரண்டு பழம்!” என்று கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தார்கள். “நான் எல்லாப் பழத்தையும் உலுப்புவேன். விழுகிறவற்றைப் பொறுக்கி, ரஞ்சியிடம் கொடுத்து விட வேண்டும். நான் வந்துதான் பங்கு வைப்பேன்” என்று சந்துரு உச்சாணிக் கொம்பிலிருந்து கூறிய போது எனது உள்ளம் ஒரே உற்சாகத்தால் துள்ளியது. பையன்கள் எல்லாம் எனக்குக் கீழ்ப்படியத்தானே வேண்டும் என்ற இளமையின் அதிகார விருப்பம் என் பிஞ்சு மனத்திலே கிளர்ந்தது. சந்துரு கிளையை ஆட்டினான். ஆலங்கட்டி மழை விழுவதுபோல், ‘பொலு பொலு’வென்று கனிந்த பழங்கள் கீழே விழுந்தன. பையன்கள் ஓடியோடிப் பொறுக்கி என்னிடம் கொண்டுவந்து கொடுத்தார்கள். அவர்கள் காணிக்கை செலுத்துவதுபோல, என்னிடம் பழங்களைச் சேர்த்துக் கொண்டு வரும்போது, எப்படியிருக்கும்! எவ்வளவுக்கெவ்வளவு பழம் அதிகமாயிற்றோ, அவ்வளவுக்கவ்வளவு மகிழ்ச்சியும் அதிகமாயிற்று. சில பையன்கள் பழங்களைப் பொறுக்கும் போது, ‘ஹை! சுட்ட பழம்! ஹை! சுடாத பழம்!’ என்று ஔவையார் கதையை நினைவூட்டும்போது, எனக்கு ஒரே சிரிப்பாய்த்தான் வரும். எனது மடி நிறையப் பழங்கள் குவிந்தன. பாவாடையெல்லாம் கூடக் கறையாகிவிட்டது. பழம் பெரிதா? பாவாடை பெரிதா? சந்துரு கீழே இறங்க ஆரம்பித்தான். அவன் இறங்குவதே ரொம்பவும் விநோதமாயிருந்தது. ‘விறுவிறு’ என்று இறங்குவதைப் பார்க்க எனக்கு ரொம்பவும் ஆச்சரியமாயிருந்தது. அப்போது என்னையுமறியாமல் ஒரு உணர்ச்சி, ‘குற்றாலத்துக் குரங்கே, கொம்பை விட்டு இறங்கே!’ என்று பாடச் சொல்லிற்று. பாடிவிட்டேன். ஆனால், சந்துருவின் மனத்தில் அது எப்படிப் புகுந்து தைத்ததோ? கீழே இறங்கியதும் ‘பளீர் பளீர்’ என்று கன்னத்தில் இரண்டு அறைகள் கொடுத்து விட்டான். “யாரடி குரங்கு? உன் மூஞ்சியைப் பார்த்தால்தான் குரங்கு மாதிரி இருக்கு!” என்று வார்த்தைகளை வேறு வீசினான். எனக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது. நான் என்ன, அவனை வேண்டுமென்றா ‘குரங்கு’ என்றேன்? என்னையே அறியாமல்தான் அந்த அடியை நான் பாடினேன். ஆனால் அதற்குப் பதில் இதுவா? என் மூஞ்சி குரங்கு மாதிரி இருக்கிறதாம். அது தான் என் மனத்தையும் மிகவும் வருத்தியது. “பழத்தைக் கொண்டா!” என்று அவ்வளவு பழத்தையும் பிடுங்கிக் கொண்டு, மற்றப் பையன்களையும் கூட்டிக் கொண்டு, ஓடைக் கரைக்குப் போய்விட்டான். நான் மட்டும் பிள்ளையார் கோவில் திண்ணையிலிருந்து விக்கி விக்கியழுதேன். என் மனத்தில் சிறிது நேரத்திற்கு முன் இருந்த உற்சாகமெல்லாம் பறந்தோடிவிட்டது. அவர்கள் ஓடைக்கரையில் நாவல் பழங்களின்மேல் ஒட்டியிருந்த தூசியைக் கழுவும் போதெல்லாம் எனக்கு அழுகை அழுகையாய் வந்தது. “டேய் சந்துரு! பாவம், ரஞ்சனி அழுதா பாரு. அவள் குரங்குன்னு சொன்னாப்பிலே, நீ அப்படி ஆயிருவியா? என்னமோ, தெரியாமத்தான் சொல்லிட்டா” என்று ரங்கன் எனக்காகப் பரிந்து பேசிக் கொண்டிருந்தது, என் காதில் விழுந்தது. “உன் வேலையைப் பார்த்துக்கிட்டுப் போடா. வக்காலத்துப் பிடிக்க வந்துவிட்டான் பய!” என்று எதிர்த்துப் பேசினான், சந்துரு. என் மனம் கலங்கியது. “சந்துரு, என்னடா ஒரேயடியாத்தான் கோபப்படறே? அவளெப் பாக்கவச்சி, நாம் பழத்தைத் தின்னா, அதுதான் செமிக்குமாடா? மேலும், கூடச் சேர்ந்தவளைப் பாக்கவச்சித் தின்னா வயிற்றை வலிக்குமாண்டா!” என்று பயமுறுத்தினான் ரங்கன். “சரி, நானா அவளைக் கூப்பிடமாட்டேன். நீ போய் வேணுமின்னா அவளைக் கூட்டிவா” என்று இரக்கத்தில் பேசினான் சந்துரு. ரங்கன் என்னை வந்து இழுத்துக் கொண்டு போனான். சந்துரு என்னை ஏறிட்டுக் கூட பார்க்கவில்லை. அவன் என்னைப் பாராதது என்னமோ, அவ்வளவு பேருக்கும் மத்தியிலே, அவமானப்படுத்தியது போலிருந்தது; அழுதுவிட்டேன். “சந்துரு, அழுகிறா பாரு. நீயும் அவளைக் குரங்குன்னு சொன்னே, அவளும் உன்னைக் குரங்குன்னு சொன்னா. சரிக்குச் சரியாப் போச்சு. இன்னும் என்னடா சண்டை?” என்று கூறிவிட்டு, “ரஞ்சனி இனிமேல் இதுமாதிரி சந்துருவைச் சொன்னியோ, நாங்களும் உன்னோட பேசமாட்டோம்” என்று கண்டித்தான். “சரி” என்று எனது அடைபட்ட தொண்டையிலிருந்து ஆமோதிப்புப் பிறந்தது. “சரி என்பதெல்லாம் காணாது. தோப்படிப் பிள்ளையாரிடம் சத்தியம் செய்யணும்” என்று மிடுக்காகப் பேசினான், சந்துரு. அதற்கும் இசைந்து, அப்படியே ஆணை வேறு இட்டேன். இதெல்லாம் எதனால் செய்தேன் என்று எனக்கே தெரியாது. என்னவோ ஒரு உணர்ச்சி சந்துருவின் எந்த ஆணைக்கும் கீழ்படியத் தூண்டிற்று. சத்தியம் செய்து முடித்ததும், சந்துரு என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டான். எனக்கும் உடனே சிரிப்பு வந்து விட்டது. எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தோம். “இந்த மாதிரி இனிமேப் பண்ணினியோ?” என்று எனது கன்னத்தைக் கொஞ்சலாகக் கிள்ளினான் சந்துரு. நாங்கள் பழையபடி ஒன்றானோம். அதன்பிறகு, ஓடைக்கரையிலிருந்து நாவல் பழங்களைப் பங்கு போட்டுக்கொண்டு எங்கள் நாக்கெல்லாம் கறுத்துப் போகும் வரையிலும், பழங்களைச் சுவைத்தோம். இந்த மாதிரி எத்தனையோ தடவை நானும் சந்துருவும் பழங்கள் தின்றிருக்கிறோம்; பாண்டி விளையாடியிருக்கிறோம். இன்னும் எத்தனையோ விதமான விளையாட்டுக்கள் எல்லாம் விளையாடியிருக்கிறோம். அந்தப் பிள்லையார்கோயில் முன்புறத்தில், பிள்ளைகள் கோலி விளையாடும்போது, அதில் சந்துருவும் சேர்ந்து விளையாடினால், எனக்கு எவ்வளவு உற்சாகமாயிருக்கும்! “சந்துரு! ரெங்கன் ஒன்பதாங்குழி போட்டுட்டான். ஜாக்கிரதை!” என்றெல்லாம் நான் எச்சரிக்கை செய்யும் போது சந்துரு எவ்வளவு களிப்படைவான்! ஆனால், ஒருநாள்: சந்துரு, ரங்கன் எல்லோரும் கோலியாடிக் கொண்டிருந்தார்கள். நான் அவர்களுடைய விளையாட்டை மிகவும் உற்சாகத்தோடு பார்த்துக்கொண்டே இருந்தேன். ரங்கன் முதலியோர் எட்டாங்குழியைக் கடந்துவிட்டார்கள். ஆனால், சந்துரு மூன்றாங்குழி போடவே தடுமாறுகிறான். மற்றவர்கள், ‘விறு விறு’ என்று மேலே போவதைக் கண்ட அவன் மனமெல்லாம் கலங்கியது; முகத்தில் கலக்கம் பிரதிபலித்தது. தோற்றுவிட்டால், ‘இரண்டாங்குழி முட்டு’ வைக்க வேண்டும். ‘பொட் பொட்’டென்று கோலிகள் அவனது புறங்கையில் மோதுமே யென்று என் மனம் வருந்தியது. சந்துரு முட்டு வைக்காமல் தப்பிப்பதற்கு ஒரு வழியும் இல்லை. இந்த நிலையில், என்னுடைய மனம் மிகவும் வாடியது. சந்துரு தோற்றேவிட்டான். அவன் கண்கள் கலங்கி நின்றன. முட்டைப் பிசைந்து கொண்டு நின்றான். “வையேண்டா சீக்கிரம்!” என்று பையன்கள் ஆரவாரித்தனர். சட்டென்று என்னுடைய மூளை வேலை செய்தது. “சந்துருவுக்குப் பதிலாக நான் முட்டு வைத்தால்?” - என் மனம் துள்ளியது. “ஏய்! சந்துருவுக்குப் பதிலாக நான் வைக்கிறேன். அடிங்கடா” என்று ஆத்திரத்தோடு சொன்னேன். என்னுடைய தொண்டை அடைப்பட்டது போலிருந்தது. “அடேயப்பா! கூட்டாளிக்கு உதவி வாரதைப் பாரு. சரி ரெங்கா கோலியை எடுத்துப் போடு” என்று உறுமினான் மணி. “ஏலே மணி, பாவம்டா, பைய அடி!” என்று பரிதபித்தான் ரங்கன். ‘பட்பட்’டென்று கோலி, எனது முட்டைத் தாக்கியது. இரண்டு மூன்று அடிகளைத் தாங்கத்தான் எனக்குச் சக்தியிருந்தது. அதற்குமேல் விரல்கள் வலியெடுக்க ஆரம்பித்தன. கண்ணில், அணையை உடைத்துக் கொண்டு வெளியே வரத் தயாராயிருக்கும் தேக்கத்தைப் போல, கண்ணீர் பெருகி நின்றது. உதட்டை மடித்துக் கடித்துக்கொண்டு முட்டு வைத்தேன்! உள்ளம் துடித்தது. எனக்கு எவ்வளவு அடிபட்டாலும், அப்போதெல்லாம் சந்துருவை வேதனையிலிருந்து தப்புவிக்கிறோம் என்ற உணர்ச்சிதான் எனக்கு அவ்வளவு முட்டையும் தாங்கத் தைரியம் அளித்தது. இப்படி எனது பால்ய வயதில், எத்தனையோ நிகழ்ச்சிகள். அதையெல்லாம் நினைக்கும்போது, இந்த நேரத்தில் எனது கண்ணீர் பெருக்கெடுக்க எண்ணுகிறது. அந்தச் சிறு வயதிலேயே, சந்துரு எனது இதயத்தில் எவ்வளவு கோலாகலமாக வீற்றிருந்தான்! ஹும்... அதை நினைத்து என்ன பயன்? இப்போது அந்த இடத்தில் வேறொருவரை அமர்த்தச் சதி நடக்கிறதே, அதற்கு நான் என்ன செய்யமுடியும்? |