4

     எங்கள் வீட்டுக்குப் பின்னால் ஒரு மல்லிகைக் கொடி வளர்ந்து வந்தது. சின்னஞ் சிறு செடியாய், காற்றினசைவிலே தாலாட்டப் பெற்றுத் தூங்கும் பசிய இலைகளைத் தொடக்கூட, எனக்குத் துணிவு வரவில்லை. இளந் தளிர்கள் நன்றாக வளர்ந்து, பல இலைகளாகப் பரிணமித்துப் பார்க்க ஒரே பசுமையாயிருந்தது. ஆனால், அந்தச் செடி வளர்ந்து, மொட்டு அரும்பி, அதுவும் பூத்த போது என் மனத்தில் என்ன எண்ணம் உதித்தது தெரியுமா? ஆஹா! பால் போன்ற வெண்மையான இந்த மல்லிகை மலரின் மணமும், அழகும் என்னையேன் இப்படித் தூண்டில் போட்டிழுக்கின்றன? அந்த மலர் மட்டும் எனது கருங்கூந்தலை அலங்கரித்தால்...? - இப்படித்தான் தோன்றியது.

     ஆம். கால தேவனின் கைவரிசை இயற்கையில் எவ்வளவோ மாறுதல்களை உண்டாக்குகிறது. கற்பனையுலகில் நீந்துபவர்களுக்கு அதன் விளையாட்டுகள் ஒரே ஆனந்த மயமாகத்தான் தோன்றுகின்றன. ஆனால், என்னைப் போன்றவளுக்கு அவ்வளவும் பேய் வெறியின் பயங்கரப் போக்காகத்தான் தோன்றுகிறது.

     எங்கள் மல்லிகைக் கொடியைப் போலவே, நானும் பூத்துவிட்டேன். ஆனால், எனது அழகை, எவருடைய அழகுணர்ச்சிக்குச் சமர்பிப்பது? நான் கேவலம் - பகுத்தறிவற்ற மல்லிகைக் கொடியல்ல; உள்ளுணர்வுள்ள பெண். அதனால், சமர்ப்பிக்கப்பட வேண்டிய புண்ணியவானைத் தேர்ந்தெடுத்துவிட்டேன். அந்தப் புண்ணியவான்தான் சந்துரு.

     காலதேவனின் சக்திரேகைகள் என் மீது விளையாடின. இளஞ்செடி போலவிருந்த நான், மலர் குலுங்கும் அழகுப் பூஞ்செடியானேன்.

     எனது கண்களில் இளமையிலே மிதந்த குறும்பு மறைந்தது; நாணம் எனது கண்களில் கொஞ்சிற்று; கல கலவென்று தெய்வக்களி துலங்க நகையுதிர்ந்த எனது இதழ்கள், மௌனம் செய்தன. துறுதுறுவென்று எங்குமோடியாடித் திரிந்த கால்கள் அன்னநடை பழகின. துடிதுடிப்பான என் குணம் அமைதியடைய முயற்சித்தது.

     ஆம்; நான் வயதுக்கு வந்துவிட்டேன். கட்டுப்பாடடங்கிய சமூகத்தின் இரும்பு வேலிக்குள் அகப்படத் தயாரானேன்.

     இப்போது நான் வீட்டை விட்டு வெளியே போக முடியாது. கூண்டினுள் அடைபட்ட கிளிபோல, வீட்டுக்குள்ளேயே சுற்ற வேண்டியதுதான். வேலை ஓய்ந்த நேரங்களில், மாடியில் போயமர்ந்து கொள்வேன். வாய்க்கால் கரையில் மேய்கின்ற பசுக்களையும், பிள்ளையார்கோவில் தோப்பையும் பார்த்துப் பெருமூச்சு விடுவேன். அந்தத் தோப்புக்குள்தான் எத்தனை சண்டைகள்! எத்தனை சமாதானங்கள்! அதையெல்லாம் நினைத்தால்... ஹும்... அது ஒரு காலம்!

     சந்துருவை நான் காண முடியாது. அவரும் முன் மாதிரியா இருக்கிறார்?

     இப்போது நல்ல வாலிபந்தான். பட்டணத்தில் பி.ஏ. படித்துக் கொண்டிருந்தார். விடுமுறையில் அவர் வரும்போது, மாடியிலிருந்து பார்த்தால்தான் உண்டு - இல்லை, அந்தப் பார்வை கூடக் கிடையாது. சின்ன வயதில் எத்தனை தடவை எங்கள் வீட்டிற்கு வருவார்? ஆனால் இப்போதோ, வாசலிலேயே நின்றுவிடுவார். அப்பாவாவது, அம்மாவாவது நின்றால், “எல்லோரும் சௌக்கியந்தானே?” என்று கேட்பார். “ஆம்” என்று பதில் வரும். உடனே, கொஞ்சங்கூடத் தாமதமின்றி, “வருகிறேன்” என்று கிளம்பிவிடுவார். அந்த ‘எல்லோரும்’ என்னும்போது, என்னையும் சேர்த்துத்தானே விசாரிக்கிறார் என்று நான் பெருமிதமடைவேன்.

     போன வருடம் அவர் வந்திருந்தார். அவர் எங்கள் ஊருக்கு வந்திருந்தால், அவருடைய முகத்தை என்றைக்காவது நான் கண்டுவிட்டேனானால், அன்று முழுவதும் எனக்கு ஒரே கோலாகலந்தான்.

     அம்மாவுக்கு அப்போது உடம்பு சரியாயில்லை. நாலு நாலாய்க் காய்ச்சல். வீட்டு வேலையெல்லாம் நான்தான் பார்க்க வேண்டியிருந்தது. எல்லா வேலையும் முடிந்தவுடன் கருக்கல் நேரத்தில் என் - வயதுப் பெண்களுடன் சேர்ந்து கொண்டு, தண்ணீர் கொண்டு வரப் போனேன். முதல் நாள், நான் தண்ணீர் முகந்து வரும்போது, அந்த மங்கிய மாலையொளியில் ஓர் உருவம் என்னைப் பார்த்து நகைத்தது; அது சந்துருதான். எனது கால்கள் என்னவோ தடுமாறின. அவரைக் கண்டதும், உள்ளம் உவகையால் துள்ளியது. அவரைக் கண்குளிரப் பார்த்து மகிழ வேண்டும் என்று ஏதோ ஓர் உணர்வு தூண்டிற்று. ஆனால், என் கூட வந்த பெண்களின் வம்புப் பேச்சும், நடையும் என் எண்ணத்தைச் சிதறடித்தன. வேறு வழியின்றி, நேராக வீடு திரும்பினேன்.

     மறுநாளும் அம்மாவுக்கு உடம்பு தேறவில்லை. அன்றும் நான் தான் தண்ணீர் கொண்டு வரவேண்டி வந்தது. அன்றைய வேலையெல்லாம் மந்த கதியில்தான் சென்றன. ஆதலால், வீட்டு வேலைகள் முடிவதற்கே நேரம் சரியாய்ப் போய்விட்டது. நான் குடத்தைத் தூக்கி, இடுப்பில் வைக்கும் போதே, மஞ்சள் வெயில் கறுத்துவிட்டது. என் கூடவரும் மற்ற பெண்கள் எனக்கு முன்னமேயே சென்று திரும்பி விட்டனர். அன்று நான் மட்டும் தனியாகப் போக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டது.

     துணை ஒருவருமில்லாததால் விறுவிறு என்று நடந்து சென்றேன். வாய்க்கால் கரைக்குச் சென்றதும் என் மனம் உவகையெய்தித் துள்ளிற்று. இந்த வாய்க்கால் கரையில் என்னென்ன விளையாட்டுக்கள் எல்லாம் விளையாடுயிருக்கிறேன். எனது சந்துருவுடன் எத்தனை தரம் மூழ்கிக் குளித்திருக்கிறேன் என்றெல்லாம் நினைப்பு ஓடியது. தண்ணீரை முகந்து கொண்டு, குடத்தைத் தூக்கி இடுப்பில் வைத்தேன்.

     பிள்ளையார் கோயில் தோப்பைப் பார்க்க வேண்டுமென்று ஆசை சுரந்தது. இரவு வேளைதானே, பிள்ளையாரைத் தரிசித்துவிட்டுப் போகலாமேயென்று கோவிலுக்குச் சென்றேன்.

     சந்நிதியில் நின்று, அந்தப் பிள்ளையாரைத் தொழப் போகும் நேரத்தில், அந்தத் தோப்பின் அமைதியை, ஒரு பழக்கமான குரல் கலைத்தது.

     “யாரது, ரஞ்சியா?” என்ற வார்த்தைகள் என்னை நடுங்க வைத்தன.

     திரும்பினேன். ஆம், கூப்பிட்டது சந்துருதான். அவருக்கு இந்த நேரத்தில் இங்கு என்ன வேலை, என்னைப் போலவே தனது இளமை நினைவுகளை எண்ணி மகிழ வந்தவர் தானா?

     சொல்ல முடியாத நாணம் எனது உடலில் புகுந்து கிளுகிளுத்தது. அந்த இடத்திலிருந்து ஓடிப் போய்விடலாமா என்று பார்த்தேன். ஆனால், தண்ணீரையும் சுமந்து கொண்டு ஓடுவது அவ்வளவு சாத்தியமில்லை என்று தெரிந்தது. வேறு வழியில்லை. எண்சானுடம்பும் ஒரு சாணாய்க் குறுகியது.

     “ரஞ்சி, எங்கே இப்படி?... பேசக் கூடாதா?” என்று கூறிக் கொண்டே, என் தோள்பட்டையில் கையை வைத்தார், சந்துரு.

     அப்பா! இந்த ஆண்களுக்கு என்ன தைரியம்! அந்த உணர்ச்சி என்னுள்ளத்தில் காந்தம் போலத் தாக்கிற்று; எனது உடம்பு புல்லரித்தது. உதடுகள் நடுங்கின. ஒன்று பேச ஓடவில்லை.

     அவரது கை எனது முகத்தை நிமிர்த்தியது. எனக்கு வெட்கம் அதிகமாயிற்று. அழுது விடலாமா என்று கூட ஒரு அசட்டு எண்ணம் உதித்தது. ஆனால் தெய்வ புண்ணியம்! அப்படியொன்றும் செய்து விடவில்லை.

     முகத்தை நிமிர்த்திய சந்துரு, பிள்ளையார் கோவில் மங்கிய தீபவொளியில் என் முகத்தில் என்ன ஆனந்தத்தைக் கண்டாரோ, எனக்குத் தெரியாது. இமை கொட்டாமல் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். தன்னை மறந்தார்.

     இந்த நிலையில், என்னுள்ளத்தையே அவரிடம் திறந்து கொட்டி, அவர் காலில் விழலாமா என்று கூடத் தோன்றியது. ஆனால் அவ்வளவு தூரம் செய்வதற்கு, எனது இதயத்தில் போதுமான சக்தியில்லை.

     முகத்தைப் பிடித்திருந்த பிடியைத் தளர்த்தினார். எனக்குச் சுயவுணர்வு வந்தது; வெட்கம் அதிகமாயிற்று; தனிமையும், இருளும் பயத்தை ஊட்டியது. குடத்தைத் தூக்கிக் கொண்டு ஓடலானேன்.

     “ரஞ்சி!” என்று பின்னாலிருந்து அவர் குரல் கதறிற்று. திரும்பிப் பார்த்துவிட்டு வீட்டை நோக்கி நடந்தேன். அவர் அந்த இடத்திலேயே நின்றார். அவர் மனத்தில் என்னென்ன உதித்தனவோ, எனக்குத் தெரியாது. நான் வீடு வந்து சேர்ந்தேன்.

     அன்று இரவு வெகுநேரம் வரையிலும் தூக்கம் வரவில்லை. திடீர் திடீர் என்று எனது உடம்பு புல்லரித்தது. என் முகத்தில் அவர் கைப்பட்ட இடத்தில் எறும்பு ஊர்வது போல, ஒரு உணர்ச்சி பிறந்து கொண்டே இருந்தது. ஏமாந்து போய்க் கன்னத்தை அடிக்கடி தடவிக் கொண்டேன்.

     மனம் மட்டும் சமாதானமடையவில்லை. “சே! எவ்வளவு பைத்தியக்காரத்தனம்? நேருக்கு நேராய்ச் சந்தித்தும் அவருடைய மனத்தை நான் முழுதும் அறிந்து கொள்ளாமல் போனேனே! அதுதான் போகட்டும்; நானாவது எனது வெள்ளை இதயத்தை அவரிடம் திறந்து காட்டக்கூடாதா? அதற்கும் சக்தியற்றுப் போனேனே!” என்றெல்லாம் வருந்தினேன்.

     நாட்கள் கடந்தன. அந்த ஒரு நாள் சம்பவத்தைப் பற்றி, எனது வாழ்வில் ஆயிரந்தடவை நினைத்து மனச் சஞ்சலம் உற்றிருக்கிறேன். ஒரே ஒரு விநாடி தைரியமற்ற குறையினால், இன்று என் மனம் ஊசலாடுகிறது.

     ஆம், உள்ளத்திலே மலைபோல உணர்ச்சிகள் நிரம்பிக் கிடக்கும்போது, பேதை இதயம் ஒரு உணர்ச்சியைக் கூட வெளியிடச் சக்தியிழந்து விடுகிறது. இது எனது ஒருநாள் அனுபவம்.