5

     பார்த்தீர்களா - என்னவோ சொல்ல ஆரம்பித்து எங்கேயோ போய் நின்றுவிட்டேன்! அப்பா! இந்த மனித உள்ளமே அதிசயமானது. அனுபவிக்கின்ற துன்பங்களை மறக்கவெண்ணிக் கழிந்து போன இன்பங்களை நினைத்து எனது உள்ளத்தைச் சாந்தப்படுத்தலாமென்றால், அது ஒரேயடியாய் அதிலேயே ஆழ்ந்து நின்றுவிடுகிறது. எந்தத் திசையை நோக்கித் திரும்பினாலும், நெஞ்சம் பேய் வேகத்தில் ஓடத்தான் செய்கிறது. ஆனால், அதை இழுத்துக் கட்டுப்படுத்த, நினைத்த திசைக்குத் திருப்ப, நாம் நல்ல சாரதியாயிருக்க வேண்டும். அப்படியில்லாமல் என்னைப் போல் இருந்தால், திண்டாட்டம்தான். மனத்தேரை மட்டும் நாம் ஒழுங்காகச் செலுத்துவோமானால், நாம் உன்னத நிலையைச் சீக்கிரம் அடையலாம். கவி பாரதிக்கு அந்தக் குணம், சாரதித்தன்மை, நிறைய இருந்தது. அப்படியில்லாமலா, அவர் தமது ஞான ரதத்தை நினைத்த உலகத்துக்கெல்லாம் ஓட்டினார்?

     பழையபடியும் என்னுடைய மனத் தேரை ஓட்டஇயலாத சக்தியின்மையைக் காட்டிக் கொண்டேன். இளமை நினைவுகளைப் பற்றி அதிகம் கூறியதற்காகச் சமாதானம் சொல்ல வந்த நான், மனக்குரங்கைப் பற்றித் தத்துவ ஆராய்ச்சி பண்ண ஆரம்பித்து விட்டேன். அப்பா! இந்த மனம் மட்டும் மனிதனுக்கு இல்லாதிருந்தால்?

     என்னுடைய கல்யாணப் பேச்சு மிகவும் முற்றிவிட்டது. அப்பா அடிக்கடி எங்காவது வெளியூருக்குப் போய்க் கொண்டிருந்தார். அவர் திரும்பி வரும்போதெல்லாம் அவர் முகத்தில் வெற்றிதான் பிரதிபலித்தது. என்னுடைய கல்யாண காரியமாய்த்தான் இவ்வளவு அக்கறையோடு ஊருக்கெல்லாம் போய் வருகிறார் என்று அவருடைய பேச்சு அறிமுகப்படுத்திவிடும். பையனுடைய சொத்து, நிலபுலன்கள் இவைகளைப் பற்றியெல்லாம் புள்ளி விவரம் வாசித்தார். அவர் ஊரிலிருந்து வரும்போதெல்லாம், அம்மா எதிர்கொண்டழைத்து, என்னவெல்லாமோ கேள்விகளைப் போட்டுப் பதிலுக்குக் காத்து நிற்பாள். தட்டி மறைவிலிருந்து, அவர்கள் பேச்சை நான் முழுவதும் கேட்பேன். சில சமயங்களில் அந்தப் பேச்சினால், சஞ்சலம் ஏற்படுகிறது என்று எண்ணுவேன். ஆனால், எனது கால்கள் என்னையுமறியாமல் தட்டிக்குப் பின்னால் கொண்டு நிறுத்திவிடும். நான் என்ன யோகினியா, ஐம்புலன்களையும் கட்டுப்படுத்துவதற்கு? கண் பார்க்கும்; காது கேட்கும்; கை நெரியும். மனம் மட்டும் துடிதுடித்து வேதனையுறும்.

     அன்று அம்மாவும் அப்பாவும் முற்றத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள். மாப்பிள்ளை வீட்டார் இரண்டு நாளில் வருவதாய்த் தெரிந்தது. என்னுடைய மனம் புழுவாய்த் துடித்தது. “இந்தக் கல்யாணம் எனக்குப் பிடிக்கவில்லை” என்று எனது உள்ளத்தை, பெற்றோர் முன் திறந்து காட்டி விடலாமா என்ற கானல் நீர் போன்ற தைரியம் பிறந்தது. ஆனால் சொல்ல வேண்டும் என்று எண்ணும் போதெல்லாம், நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. ‘குப்’பென்று முகமெல்லாம் வியர்த்துக் கொட்டியது. எனது உதட்டிலிருந்து ஒரு வார்த்தை கூடப் பிறக்கச் சாத்தியமில்லாமலிருந்தது. இந்த மாதிரி உள்ளுக்குள்ளேயே வதங்கும் எண்ணப் புண்களையாற்ற, எனது மருந்து அழுகைதான். தனிமையில் அமர்ந்து அழுது, அழுது ஆற்றப் பார்ப்பேன்.

     “ரஞ்சனியிடமும் ஒரு வார்த்தை கேட்டு வைப்போமே? கல்யாணமாகப் போகிற பெண்ணுக்குச் செய்தியைத் தெரிவிக்காமலா இருக்கிறது?” என்றார் அப்பா சாய்வு நாற்காலியில் சாய்ந்த வண்ணம்.

     “என்னவோ சொன்னது போலிருக்கிறதே? இந்தக் காலத்து ‘சிறிசு’களுக்கு நாம் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? இதற்கு முன்னாலேயே தெரிந்து கொண்டிருப்பாளே” என்று நீட்டினாள் அம்மா.

     அப்பா என்ன நினைத்தாரோ, தெரியவில்லை. “ரஞ்சி!” யென்று உரக்கக் கூப்பிட்டார். பதில் ஒன்றும் சொல்லாமல் அவர் பக்கம் போய் நின்றேன். நாணத்தாலும், சஞ்சலத்தாலும் கண் கலங்கியது.

     “ஏனம்மா, உனக்கு இந்தக் கல்யாணம் பிடித்தம் தானே” என்றார் சாவதானமாக எக்களிப்புடன்.

     எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அப்படியே அப்பாவின் காலில் விழுந்து காலைக் கட்டிக் கொண்டு அழலாமா? எனது எண்ணத்தை அப்படியே உடைத்துக் காட்டலாமா? - என்று எண்ணினேன். ஆனால், ஒன்றும் ஓடவில்லை. நெஞ்சி ‘படபட’வென்று அடித்தது; உடம்பு நடுங்கியது. நான் வாயைத் திறக்கவில்லை.

     “அவளிடம் கேட்டால் எப்படிச் சொல்வாள்? வெட்கமாயிராதா? மௌனமாயிருப்பதே தெரியவில்லையா? சே! இந்த ஆண்களுக்கு...” என்று வக்காலத்துப் பிடித்தாள் அம்மா.

     “ஆமாம், மௌனம் சர்வார்த்த சாதகம் தானே” என்று கூறி வாயைக் குதப்பினார், அப்பா.

     இந்த நிலையில் எனக்கு ஒரே ஒரு யோசனைதான் தோன்றியது. எனக்கு வயது குறைவென்று சொல்லி, இந்தக் கண்டத்திலிருந்து தப்பி விடலாமா என்று நினைத்தேன். நான் மட்டும் அப்படித் தப்பி விட்டால்?

     அம்மாவிடம் பேச, எனக்குக் கொஞ்சம் தைரியமாய்த் தானிருந்தது.

     “அம்மா, எனக்கு வயது கொஞ்சந்தானே” யென்று இழுத்துப் போட்டேன், இவ்வளவு நேரமும் சிரமப்பட்டுச் சேகரித்த அசட்டுத் துணிவோடு.

     “போடி! நீ என்ன இன்னும் சின்னப்பிள்ளையா? சுசீலாவைப் பார், உன்னை விட இரண்டு வயது இளையவள் தானே! அவளுக்கு எப்போதே கல்யாணமாய்விட்டது. ஒரு குழந்தை கூடப் பெற்றுவிட்டாள்!” என்று அம்மா உதாரண பூர்வமாகத் தர்க்கித்தாள்.

     எனக்கு மேற்கொண்டு அங்கு நிற்க முடியவில்லை. விர்ரென்று வீட்டிற்குள் நடந்தேன்.

     சுசீலா - ஆம், என்னை விட வயதில் அவள் இளையவள் தான். அவளுக்குக் கல்யாணமாகி, இரண்டு வருடமாய் விட்டது. போன வருடம் பிறந்தகம் வந்துவிட்டுத் திரும்பிப் புக்ககம் போகும் போது கையில் ஒரு ஆண் குழந்தையோடு தான் போனாள். அவள் முகத்தில் நான் இதுவரையிலும் சஞ்சலம் என்பதை கண்டதேயில்லை. சின்னக்குழந்தை முதல் அவளோடு எத்தனையோ தடவை விளையாடி இருக்கிறேன். அப்போதுங்கூட, அவள் ஒரு நாளாவது மனவருத்தமடைந்ததை நான் கவனிக்கவில்லை. அவளுக்குக் கல்யாணமாவதற்கு முன்னும், ஆன பின்னும் கூட, எப்போதும் குதூகலத்துடன் தான் ஒளிர்ந்து வந்தாள். அவளுடைய கல்யாண தினத்துக்கு முன்னால் கூட, நான் அவள் கூட எவ்வளவு பேச்சுப் பேசியிருக்கிறேன்! அப்போதுங்கூட, அவளுக்குப் பிறந்தகத்தை விட்டுப் போகிறோமே என்ற எண்ணம் அவளைக் கலக்கவில்லை. அப்பா! அவளை நினைக்கும் போது, நானெல்லாம் எம்மாத்திரம்?

     இப்போது அவள் ஊரில் தானிருந்தாள். அடிக்கடி என்னை வந்து பார்த்துப் போவாள். ‘கலகல’ வென்று முத்தை யுதிர்ப்பது போலப் பேசுவாள். அவள் மட்டும் வரட்டும். அவளிடம் ஒரு கேள்வி கேட்கிறேன் என்று தீர்மானித்துக் கொண்டேன்.

     “ரஞ்சி, மாடியிலேதான் இருக்கிறாயா?”

     அது சுசீலாவின் குரல்தான். கீழே அம்மாவுடன் ஏதோ வம்பளந்து விட்டு, உயரே வர அனுமதி கேட்கும் பாவனையில் அவள் கேள்வி இருந்தது.

     “யார் சுசீயா? மேலே வாயேன்” என்று வரவேற்றேன் நான்.

     அவள் வந்ததும் வராததுமாய் அவளிடம் நான் என் மனத்திலே முடிவுகட்டி வைத்திருந்த கேள்வியைக் கேட்க வேண்டுமென்று எண்ணினேன்; முடியவில்லை.

     “ஏண்டி, மாப்பிள்ளை வீட்டார் இன்னும் இரண்டு நாளையில் வருகிறார்களாமே” என்று கேட்டுக் கொண்டே, எனது அறைக்குள் நுழைந்தாள். அவளுடைய இடுப்பில் அவள் மகன் - தனது பிள்ளை என்று உரிமை கொண்டாட அவளுக்கு வழி வைத்த ஒரு உயிர் - தனது சிறு கண்களை உருட்டி விழித்துக் கொண்டிருந்தான். அந்தக் குழந்தை என்னைப் பார்த்து நகை புரிந்தது; அந்த நகையின் அர்த்தம் என்னவோ தெரியவில்லை.

     நான் சுசீலாவுடன் ஒன்றும் பேசவில்லை.

     அவளாகத்தான் ஆரம்பித்தாள்: “ரஞ்சி, அதற்குள்ளேயே வெட்கம் வந்துவிட்டதா?”

     “சரி, நான் ஒரு கேள்வி கேட்பேன். நீதான் அதற்குப் பதில் சொல்லணும், தெரியுமா?” என்று எடுத்த எடுப்பிலேயே பீடிகை போட்டேன்.

     “என்னடி? வந்ததும் வராததுமாய்... ம்... பிரமாதமான கேள்வியோ?” என்று தலையை உயர்த்தினாள் சுசீ.

     “ஒன்றுமில்லை. நீ... நீ உன் கணவனை விரும்பித்தானே விவாகம் செய்து கொண்டாய்?”

     சுசீ சிரித்தாள்.

     “போடி, கேள்வியைப் பார். அம்மாவும் அப்பாவும் அவருக்குத்தான் என்னைக் கட்ட வேண்டும் என்று தீர்மானித்தார்கள். அவரைக் கல்யாணம் ஆன பிறகுதான் நான் விரும்பினேன்” என்று சொல்லும் போதே அவள் தலை கவிழ்ந்தது.

     “உனக்குக் கல்யாணம் நடக்கும் போது மகிழ்ச்சியாகத் தானே யிருந்தது?”

     “ஆமாம்.”

     “உன்னுடைய கல்யாணத்துக்கு முன் வேறு யாரையாவது விரும்பியது உண்டா?” இந்தக் கேள்வியைக் கேட்கும் போது, என் நெஞ்சு கிடுகிடுத்தது.

     “அப்படியொன்றுமில்லை” என்றாள் சுசீ.

     “அப்போது, நீ பாக்கியசாலிதான். நான் தான்...” என்று ஆரம்பிப்பதற்குள், எனது தொண்டை கம்மிப் போய்விட்டது. கண்ணில் நீர் கூடச் சுரந்தது.

     “ரஞ்சி, எதற்கு இதெல்லாம் கேட்கிறாய்? உன் மனம் சரியாயில்லை யென்றுதான் தெரிகிறது. என்னடி, என்னிடம் சொல்லக் கூடாதா?” என்று பரிவோடு என்னுடைய தாடையைத் தாங்கிக் கொண்டே கேட்டாள் சுசீ.

     எனது உலர்ந்த உதடுகளிலிருந்து ஒரு வார்த்தை கூடப் பிறக்கவில்லை. சுசீயிடம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எனது கண் கலங்கிற்று. மௌனம் சாதித்தேன். இந்த நிலையில், சுசீ என்னை விட்டுப் போக வேண்டும் என்று தோன்றிற்று. ஆனால், அவளை எப்படிப் போகச் சொல்வது என்று தான் தெரியவில்லை.

     நல்லவேளையாய், அவளுடைய குழந்தை அழத் தொடங்கிற்று. சுசீ அதை எவ்வளவோ நிறுத்தப் பார்த்தும் முடியவில்லை. கடைசியில், குழந்தையைத் தூக்கிக் கொண்டு விடை பெற்றுப் போய்விட்டாள்.

     அவள் போனதே நல்லதென்று பட்டது. “சுசீலா பாக்கியசாலி! பாக்கியசாலி!” என்று கூறி, கோரமாய் எனது உள் மனத்தில் ஏதோவொன்று சிரிக்கும் சப்தம் கேட்டது; அந்தச் சிரிப்பின் வேகத்தை என்னால் தாங்க முடியவில்லை. தொப்பென்று கட்டிலில் விழுந்து, தலையணைக்குள் முகத்தைப் புதைத்துக் கொண்டு அழுதேன். கண்ணீர் தலையணையை நனைத்தது; உள்ளம் மட்டும் வறண்டு போயிருந்தது.

     சந்துருவின் நினைப்பு என்னை மிகவும் சஞ்சலப்படுத்திற்று. அவரை நினைத்து, நினைத்து எனது உள்ளம் ஏங்கிக் கொண்டிருந்தது. அவரை மறப்பதற்கு வழியேயில்லையா?

     “சென்று போன நாட்களின் சிந்தனையிலே ஆழ்ந்து துயரப்பட்டுக் கொண்டிருக்கும் மனிதனின் கண்களைக் குத்தி விடு; தன் கபோதித்தனத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்குவான். அதனாலாவது, அவனுடைய பழைய சிந்தனைகள் மாறும்” என்று யாரோ ஒரு அயல்நாட்டுக் கவி எழுதி வைத்திருப்பது நினைவுக்கு வந்தது.

     சந்துருவை மறப்பதற்கு வழியா? ஆம், நான் என் பெற்றோருடைய விருப்பத்துக்கிணங்க வேண்டும். அப்போதாவது சந்துருவை மறக்க முடியும்? ஆனால், இந்தப் பாழும் மனத்துக்கு அவ்வளவு தைரியம் ஏற்பட்ட மாட்டேனென்கிறதே! அதற்கு நான் என்ன பண்ண முடியும்?



புயல் : 1 2 3 4 5 6