6

     வழக்கத்திற்கு விரோதமாகவே அன்று அதிகாலையில் எழுந்து விட்டேன். இரவு வெகு நேரமாய்த் தூக்கம் வராமல் புரண்டு படுத்துப் படுத்துப் பார்த்து அலுப்பு, அவயவங்களின் அசைவில் அழுந்திக் கிடந்தது. சூன்யமடைந்த பாழ் வீட்டைப் போல, என் மனம் அந்த அறையின் இருளைப் பிரதிபலித்தது. சாளரத்தைத் திறந்து வைத்தேன். மார்கழி மாதத்து வாடைக் காற்று உள்ளே அம்பைப் போல வீசிற்று. அந்த வாடைக் காற்றின் தழுவலால் முந்திய தினங்களின் நினைவலைகள் மோத ஆரம்பித்தன. இரவு என்னவெல்லாமோ எண்ணிக் கொண்டு, தூங்கியிருக்கிறேன். அந்த எண்ணங்களின் பிரதிபலிப்பாகவோ, என்னவோ ஒரு சொப்பனம் கண்டேன்.

     நல்ல மழை இருட்டு. நானும் எனக்குப் பழக்கமான ஒருவரும் - ஆம், அவருடைய முகம் மிகப் பழகிய முகமாதிரியாய்த் தானிருந்தது - ஒரு காட்டு வழியாய் சென்று கொண்டிருக்கிறோம். அவருக்கு நான் துணையாய், எனக்கு அவர் துணையாய், ஏதோ ஒரு குறிக்கோளற்ற முடிவை நோக்கிப் பிரயாணம் செய்வது போலிருந்தது. அந்த இருள் அமைதியிலே, நான் எனது கண்களை அகலத் திறந்து வைத்துக் கொண்டு சென்றேன். மின்னலும், இடியும் திடீரென ஆரம்பித்தன. அந்தகாரத்தை விநாடிக்கு ஒரு தரம் மின்னல் கிழித்தெறிந்தது. திடீரென, கோடி சூர்யப் பிரகாசமுள்ள ஒரு மின்னல் கொடி பின்னி விழுந்தது. எனது அகன்ற கண்களால் அந்த ஒளியின் தாக்குதலைத் தாங்க முடியவில்லை. ஏதோ, கண்களில் சுளுக்கியது மாதிரியிருந்தது. ‘ஹா’வென்று கதறினேன். கண்ணைத் திறந்து பார்த்தேன். ஒன்றும் தெரியவில்லை; எனது கண்ணொளி செத்துவிட்டது. நான் ஒரு குறுடியாகி விட்டேன். அந்த நேரத்தில், எனது கையைப் பிடித்துக் கொண்டு வந்த மனிதர் கையை நழுவ விடுவதை உணர்ந்தேன். கதறினேன். பதிலில்லை. அந்தகாரமான இருளில், அந்தகாரத்திலே மூழ்கி, இயற்கையின் கோபதாபங்களுக்குள் சிக்கி, அநாதரவாய் நிற்கும் எனக்கு, வழி காட்ட ஒருவருமில்லை போலத் தோன்றிற்று. “வருந்தாதேயம்மா, நான் வழி காட்டுகிறேன்” என்று ஏதோ ஒரு புதிய குரலுடன் என் கையைப் பிடித்தார் ஒருவர். மூடியிருந்த கண்களைத் திறந்தேன், அவரைப் பார்க்க வேண்டுமென்று. ஆனால் கண் தெரிந்தால் தானே! “தாங்கள் யார்?” என்றேன். “போகப் போகத் தெரியும்” என்றார் அவர். கையை விடுவிக்க விரும்பினேன்; தைரியமில்லை. பழையபடி கதறினேன். என்னுடைய கதறலைப் பிரதிபலிப்பது போல, ஒரு பிரமாண்டமான இடி இடித்தது.

     நான் விழித்துக் கொண்டேன். எனது கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. இரவு கண்ட சொப்பனத்தின் பொருள் என்னவென்று என்னால் அறியக் கூடவில்லை.

     மனம் தான் ஒரு நிலையில் நிற்கமாட்டேனென்கிறதே! மனம் மட்டும் ஒரே நிலையில் நிற்கச் சக்தி பெற்று விட்டதானால் எண்ணங்களை எந்தத் திசையிலும் ஓட்டிப் பார்க்கலாம். அதனால், ஒரு கெடுதலும் ஏற்படுவதில்லை. நமது நிழல் நீரில் விழுவதால் நம்முடைய உடல் என்ன நனைந்தா போகிறது? எண்ணங்களோடு மனத்தையும் பின் தொடர விட்டுவிட்டால், நிழலோடு உடலும் சேர்ந்து விழ வேண்டிய கதிதான் ஏற்படும். இதற்காகத்தான் அந்தச் சொப்பனத்தைப் பற்றியே நான் ஒன்றும் அறிய முற்படவில்லை.

     அமைதியாக மூட்டைக் கட்டிக் கொண்டு படுக்கையில் அமர்ந்தேன். சாரமற்ற, பனி மூடிய சிந்தனைகள் மூளையை வேலை வாங்கிக் கொண்டிருந்தன.

     அம்மா வந்து கதவைத் தட்டினாள். சாவதானமாக எழுந்து போய், நாதாங்கியைத் தள்ளினேன். அம்மா அறைக்குள் நுழைந்து, “ரஞ்சி, போய்க் குளித்துவிட்டு அலங்கரித்துக் கொள். எட்டரை மணிக்கே அவர்கள் வந்து விடுவார்கள்” என்று கூறிச் சென்று விட்டாள்.

     அப்போதுதான், என்னுடைய மனத்தில் இன்று மாப்பிள்ளை வீட்டார் வரவேண்டிய தினமென்று தட்டுப்பட்டது.

     “அலங்கரித்துக் கொள்ள வேண்டுமாம்! எதற்காக? சந்தையிலே விற்க வருகிற பாத்திறங்களுக்கு, மெருகு போடுவது போலத்தானா? இல்லை - அழகுத் தெய்வத்தையே நாம் அழைத்துக் கொண்டு போகப் போகிறோமென்று வருகிறவர்கள் எண்ணி மகிழவா?”

     “ஆம், இன்று மாப்பிள்ளை வீட்டார் வருகிறார்கள். தமது உபயோகத்துக்காக, அவர்கள் வாங்கப் போகும் ‘பெண்’ எனும் பொருள் நல்ல பொருள்தானா என்று தராதரம் பார்த்து, எடை போடத்தானே வருகிறார்கள்? கல்யாணங்கூட வியாபார மயமாக மாறிவிடுகிறது. இந்த யுகமே, விளம்பர யுகம். விளம்பரத்துக்குத் தான் இந்த யுகத்தில் மதிப்பு. கல்யாண காரியங்களிலுங் கூட, அது ரொம்பவும் தலையிட்டு விட்டது. இல்லாவிடில், அம்மா ஏன் என்னை அலங்கரித்துக் கொள்ளச் சொல்ல வேண்டும்?” என்றெல்லாம் என் மனம் யோசித்துக் கொண்டிருந்தது. மனத்தில் சமாதானமேயில்லை.

     கொஞ்ச நேரத்தில் சுசீ வந்தாள். “ரஞ்சி, அம்மா உன்னை அலங்கரித்து விடச் சொன்னாள்” என்று தான் வந்த காரியத்தை விளம்பரபடுத்திக் கொண்டே, அறைக்குள் காலடி எடுத்து வைத்தாள்.

     அவள் வந்ததே நல்லதாயிற்று. தனிமையிலே வதங்கும் என்னை நானே அலங்கரிக்கச் சாத்தியப்படுமா? மௌனியாக இருந்துவிட்டாலாவது சுசீ வந்த காரியத்தைப் பார்த்து விட்டுப் போய் விடுவாளல்லவா?

     சுசீயின் பஞ்சரிப்புப் பொறுக்கவில்லை. போய்க் குளித்து விட்டு வந்தேன்.

     சுசீயோ என்னைப் படாதபாடு படுத்தினாள். அவள் தேர்ந்தெடுத்துக் கொடுத்த புடவையைத் தான் உடுத்திக் கொண்டேன். அவள் தான் நகைகளைப் பூட்டினாள்; தலைவாரிப் பின்னினாள்; பூ முடித்தாள்; எல்லாம் அவள் தான் செய்தாள். ஆனால், என் முகத்தில் மட்டும் புன்னகையோ புது மகிழ்வோ உதிக்கவில்லை. அவள் என்னை அலங்கரிக்கும் போது, என் மனம் கொஞ்சங் கூட அமைதியாயிருக்கவில்லை.

     சுசீ என்னை அலங்கரித்து விட்டுக் கீழே இறங்கினாள்.

     அவள் போன பின்பு தான் மனத்தின் கொந்தளிப்பு அதிகமாயிற்று; அதை நிறுத்த முடியவில்லை. படுக்கையில் குப்புறப் படுத்துக் கொண்டேன். என்னையுமறியாமல் கண்ணீர் வந்தது. அந்தக் கண்ணீர்த் துளிகள் நான் கட்டியிருந்த பட்டுச் சேலையில் பட்டும் படாமலும் விலகி நின்றன.

     அம்மாவின் வற்புறுத்தலின் பேரில் கொஞ்சம் சாப்பிட்டேன். நான் சாப்பிட்டது, என் உடம்பை அழுத்திக் கொண்டிருக்கும் பாரத்தைக் கூட்டியது போலவேயிருந்தது. பேதி மாத்திரைகளை விழுங்குவது போலத்தான் சாப்பிட வேண்டியிருந்தது. துன்பங்களை மட்டும், அப்படி விழுங்க முடியவேயில்லை; விழுங்கினாலும், அது செறிப்பதுமில்லை.

     சுசீ வந்தாள்; வரும்போது, அவளது குழந்தையையும் கொண்டு வந்தாள். அந்தச் சிசுவின் முகத்திலாவது ஏதேனும் சாந்தி கிடைக்குமா என்று என் கண்கள் துருவிப் பார்த்தன. ஆனால் நிம்மதியிழந்த மனத்துக்கு எங்கிருந்து தான் சாந்தி வரவேண்டுமோ?

     “ஏண்டி, பொட்டெல்லாம் அழிந்திருக்கிறது? கண்ணும் கலங்கியிருக்கிறதே” என்று அதிசயத்தோடு கேட்டாள்.

     எனக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. மனத்தில் பொதிந்திருந்த துக்கமெல்லாம் ஒன்று சேர்ந்து, தொண்டையில் மோதிற்று. அப்படியே சுசீலாவைக் கட்டிக் கொண்டு அழுது விட்டேன்.

     சுசீயின் கண்களும் நிலை தடுமாறிக் கலங்கின.

     “ரஞ்சி, ஏன் அழுகிறாய்?” என்று கொஞ்சிக் கொஞ்சிக் கேட்டாள் அவள்.

     “எனக்கு என்னவோ அடிக்கடி பயமாயிருக்கிறது” என்று பதில் கூறினேன். அதற்கு மேல் ஒன்றுங் கூற ஓடவில்லை.

     சுசீ தேறுதல் கூறினாள். கடைசியில் நானும் எனது மெழுகு போன்ற இதயத்தை இளகவிட்ட அசட்டுத் தன்மைக்காக வருந்தி வெட்கிப் போனேன்.

     நான் அழுதது, சுசீயைக் கூடப் பாதித்ததே என்று எண்ணி, அவளை மகிழ்விக்கும் நினைப்போடு, ஒரு வறட்டுப் புன்னகையை வரவழைக்க முயன்றேன்; முடியவில்லை. அமைதியோடு சுவரில் கிடந்த பாலகிருஷ்ணன் படத்திலே தான் எவ்வளவு சாந்தி ததும்பிக் கொண்டிருந்தது! பெரு விரலைச் சுவைப்பதாகக் காட்டியிருக்கும் அந்த இளம் மாதுளம் உதடுகளில்தான் என்ன உயிர்! ஆனால், என் மனத்தில் மட்டும்...?

     வாசலில் வண்டி வந்து நின்ற ஓசை கேட்டது. மாப்பிள்ளை வீட்டார் வந்து விட்டார்கள் போலும்? மாடியிலிருந்து நானும் சுசீயும் பார்த்தோம். ஒரு வயதான பெண், ஒரு யுவதி - என்னை விட நாலு வயசு வேண்டுமென்றால் கூட இருக்கும் - ஒரு சிறுமி, இன்னும் இருவர் இவ்வளவு பேரும் முற்றத்தைக் கடந்து வீட்டினுள் நுழைவதைப் பார்த்தோம்.

     சுசீ கீழே இறங்கிப் போனாள். நான் மாடியிலேயே இருந்தேன். மனம் மட்டும் பழைய நிலையில் தான் இருந்தது. ஆனால், அழுகை வரக்கூடிய அளவுக்குக் கொந்தளிக்கவில்லை; கொஞ்சம் மட்டுப்பட்டிருந்தது. அடித்து வைத்த கற்சிலை போல, மூளியிரவின் மோனத்திலே வானை அண்ணாந்து நோக்கியிருக்கும் குறிக்கோளற்ற மொட்டைப் பனைமரம் போல, அமர்ந்திருந்தேன். என்னுடைய மனத்தில் எங்கோ ஒரு மூலையில் இன்னும் மடியாது இருந்த ‘நம்பிக்கை’ பனிக் கட்டியைப் போல, உருகி எங்கோ கண்ணுக்குத் தெரியாமல் வழுவி ஓடுவது போலிருந்தது. என்னை விலைக்கு வாங்க வந்தர்கள் தானே கீழே உட்கார்ந்திருக்கிறார்கள்! “என்னை விலைக்கு வாங்கலாம்; என் ஆத்மாவை விலைக்கு வாங்க முடியாது. அழகை விலை பேசலாம். அன்பை விலை பேச முடியாது” என்றெல்லாம் எண்ணி மனத்தைத் தேற்றிக் கொள்ளப் பார்த்தேன்.

     கீழே இறங்கிப் போன சுசீ மேலே வந்தாள். அவளுடைய முகத்தில் உற்சாகம் பொங்கிக் களியாட்டம் ஆடிக் கொண்டிருந்தது. அவளுடைய முத்துப் பற்களின் மோஹனப் புன்னகை அவளுடைய குதூகலத்தைக் காட்டிற்று. சினேகிதிக்குக் கல்யாணம் என்ற உற்சாக வெறியோ என்னவோ!

     “ரஞ்சி, கீழே வாடி, அம்மா அவசரப்படுகிறாள்!” என்று கூறிக் கையைப் பிடித்திழுத்தாள்.

     “வருகிறேன்” என்றேன் தழுதழுத்த குரலில். என்னுடைய குரலில் உயிர் இல்லை. வெறும் சுருதி மட்டும் உதிர்த்த வீணை போலிருந்தது. அதில் இனிய நாதமேயில்லை. உயிர் இல்லை. வெறும் சப்தம்!

     என்னைக் கையைப் பிடித்து, நடத்திக் கூட்டிக் கொண்டு போனாள் சுசீ, அனாதரவான அந்தகனை நேரான வழியில் நடத்த முயலும் கருணையாளனைப் போல.

     கீழே சென்றதும் அம்மா காப்பி பலகாரத்தைப் படைக்கச் சொன்னாள். அம்மா சொன்னதையெல்லாம் ஒரு இயந்திரம் போலவே செய்து முடித்தேன். ஆனால் ஒரு தடவை -

     நான் காப்பியை ஊற்றிக் கொடுத்து விட்டு நிமிர்ந்தேன்; அந்தப் பெரியவளின் பக்கத்தில் அமர்ந்திருந்த சிறுமி, “அம்மா, இதுதானா மன்னி? வேத அண்ணா மாத்திரம் இப்போ இருந்தா? அம்மா, நாம் போகும்போது மன்னியையும் கூட்டிக் கொண்டு தானே போகணும்?” என்று கேட்டாள். “போடி, பெரிய மனுஷிமாதிரிதான் - சாப்பிடு” என்று செல்லமாக அதட்டிவிட்டு, என்னைப் பார்த்தாள். அந்தப் பெயரின் உச்சரிப்பு என்னை ஒரு உலுப்பு உலுப்பிற்று. நரம்புக் கால்களில் ஓடிய இரத்தத்தில் குளிர்ச்சியை ஏற்றிய மாதிரி இருந்தது. அந்தப் பதட்டத்தில் கை நடுங்கிற்று, டம்ளரில் இருந்த காபியைச் சிறிது கொட்டி விட்டேன். உடனே உள்ளேயிருந்து, “பார்த்துக் கொடடீ!” என்ற குரல் வந்தது. அது சுசீயின் குரல்தான். என் மனத்தில் அந்த நேரத்தில் ஏற்பட்ட சிலிர்ப்பை அவள் உணர்வாளா?

     அன்றைக்கு மாடிக்குப் போகவே நேரமில்லை. கதவுக்குப் பின்புறமிருந்து, சுசியின் வம்பளப்பைச் சாவதானமாகக் கேட்டுக் கொண்டேயிருந்தேன்.

     சாயந்திரமானதும் அவர்கள் கிளம்பிப் போக நிச்சயித்தார்கள். பெண் பிடித்திருக்கிறது என்றும், முகூர்த்தத்தை இன்றே நிச்சயம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் அப்பாவிடம் பேசிக் கொண்டார்கள். கடைசியில், புரோகிதரை வரவழைத்து முகூர்த்தம் நிச்சயித்தார்கள். எனது உரிமை முழுவதும் பறிபோனது போல இருந்தது.

     எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. காலையிலிருந்து துக்க அலைகள் ஒன்றுக்கு மேல் ஒன்றாய் எனது நெஞ்சை அமுக்கிக் கொண்டிருந்தன. அவ்வளவு அலைகளையும் வெளியே திறந்து விட்டு, அந்த அலைகளின் மோதலினின்று என்னை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணினேன்.

     அவர்கள் போனதும் நேரே மாடிக்கும் போனேன். படுக்கையில் சாய்ந்து கொண்டேன். மனம் ஒரே நிலையில் நில்லாமல் காலையிலிருந்து நடந்தவைகளைத் திருப்பித் திருப்பிக் கற்பித்துக் கொண்டிருந்தது.

     “என் மனத்திலே காதல் ஏன் உதயமாக வேண்டும்? காதல் எப்படி யுண்டாயிற்று? அதை என் மனத்தில் உற்பத்தி செய்தது சந்துருதானா? இல்லை - இயற்கையின் காலமும், தூரமுந்தானா? கடவுளே, நான் காதல் கொண்டு விட்டேன். சமூகத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, எனக்குப் பிடிக்காத வேறொருவருக்கு மனைவியாகப் போகிறேனே! எனது காதல் பாபகரமானதா? காதல் செய்வது பாவமா? நான் காதல் கொள்வது பாவமானால், நான் பிறந்தது பாவமில்லையா? வாழ்வது பாவமில்லையா?... என் மனம் ஏன் இப்படிக் கொந்தளிக்கிறது?” என்றெல்லாம் நினைத்து நினைத்து வருந்தினேன்.

     சமூகத்தின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டோம் என்று எண்ணும் போது, என்னுடைய கண்கள் கலங்கி நின்றன. துக்கத்தைத் தணிப்பதற்காக அழுதேன். மௌனமாக கண்ணீர் விட்டேன். நெஞ்சின் பாரம் குறைந்தது போல இருந்தது.

     “காதல் - கடமை - சந்துரு!” - இந்த வார்த்தைகள் உள்ளடக்கி நின்ற உருவங்கள், பயங்கரக் கனவுகள் எல்லாம் என் மனத்தைக் குழப்பிக் கொண்டிருந்தன. எவ்வி எவ்வித் தணியும் கடலலையைப் போல, மனம் தத்தளித்துக் கொண்டிருந்தது. ஒவ்வொரு விநாடி கழியும் போது நான் உயிரற்ற வாழ்க்கையை எட்டிப் பிடிப்பதற்கு நேரம் நெருங்குவது போல இருந்தது. ஆம், அது எனது கல்யாண தினந்தான்.

     கல்யாணத்திற்கு இன்னும் இருபது நாட்களே இருந்தன.



புயல் : 1 2 3 4 5 6