7

     இரண்டு நாள் கழித்து விடிந்தால், கல்யாணம். கல்யாண வேலைகளை அப்பா மிகத் துரிதமாகச் செய்கிறார் என்பதை அவருடைய ஓட்ட சாட்டங்கள் காட்டிக் கொண்டிருந்தன.

     “ஒற்றைக்கு ஒரு பிள்ளை. அது கல்யாணத்தையாவது, நம் வீட்டிலே நடத்த வேண்டாமா?” என்று அப்பா போகிறவர் வருகிறவர்களிடமெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். அதன்படியே என்னுடைய கல்யாணத்தையும் எங்கள் வீட்டிலேயே நடத்த ஏற்பாடு பண்ணி விட்டார். அவருடைய போக்கும், நடையும் கல்யாணத்திற்குப் பல ஆடம்பரமான வேலைகள் செய்வதில் முனைந்திருக்கிறார் என்பதை எடுத்துக் காட்டின. அப்பாவுக்கு என் மேல் மிகவும் பாசந்தான். அனால், அது அளவுக்கு மீறி விட்டது.

     தோட்டத்திலே அந்தச் செடி ஒன்று; அந்த ஒரே செடியின் மீதுதான் தோட்டக்காரனுக்குக் கண்ணெல்லாம். அதற்கு உரம் வைப்பதும், பதனம் பார்ப்பதுமே அவனுடைய வேலையாய்ப் போய்விடுகிறது. அந்தச் செடியின் மீதுள்ள அன்பினால் அவன் அதற்கு அடிக்கடி தண்ணீரும், உரமும் வைக்கிறான். தளிர்த்து வளர்கின்ற இளந்தளிர்களைத் தொட்டுத் தொட்டு, மனப்பூரிப்பு அடைகிறான். அவனுடைய மிதமிஞ்சிய செய்கையினால், தான் வளர்த்து வரும் செடி வளருமா, வாடுமா என்ற கவலையே ஏற்படுவதில்லை. காரணமற்ற, ஆனால் அளவுக்கு மிஞ்சிய அன்பை, அந்தத் தோட்டக்காரன் தான் வளர்க்கும் செடியின் மீது செலுத்தினால், செடி வாடி விடுகிறது; அடியிலே அழுக ஆரம்பிக்கிறது.

     எனது வாழ்வும் அப்படித்தான்.

     அப்பா என் மீது செலுத்துகின்ற அன்பு களங்கமற்றதுதான். ஆனால், அந்த அன்பைப் புலப்படுத்த, அவர் செய்யும் காரியங்கள் - ஆம், எனது கல்யாண காரியம் தான் - என்னை நடுங்க வைக்கிறது. மேலும், அளவுக்கு மிஞ்சிய ஆடம்பரமான செய்கை என்னை பயமுறுத்துவதாகத் தோன்றிற்று.

     அப்பாவின் பார்வையில் படுவதென்றால், ஒருவித நடுக்கம் கொடுத்தது; கூடிய மட்டிலும், அவருடைய கண்களில் படாமலேயே தப்பித்து வந்தேன்.

     எவ்வளவோ நாட்களுக்குப் பிறகு, அந்தச் சாளரத்தின் ஓரமுள்ள பெட்டியில் போய் அமர்ந்தேன்; வானத்தைப் பார்த்தேன்.

     காலைச் சூரியன் வரவினால், மறைந்து விட்டன மேகங்கள். வெறும் நீலம் பாய்ந்த பாழ்வெளியாக இருந்தது வானம். என் மனமும் அந்த மாதிரிதானே இருந்தது? ஆனால், அந்த வெளிறிய நீல வானத்தின் மேல் கோடியில் ஒரு சிறு மேகத்துண்டு மிதந்து நின்றது. ஆம், எனது உள்ளத்தில் மிஞ்சியிருந்த சிறு ஆசைக் கனவைப் போல.

     அந்த மேகத்துண்டைப் பார்த்துக் கொண்டேயிருந்தேன். சிறிதாக இருந்த அந்தத் துண்டு, விரிந்தது. விரிய விரிய, அதனுடைய நிறமும் மங்கியது. சிறிது பரந்து விரிந்த அந்தச் சிறு மேகம் நிறமிழந்து, வானோடு வானாய்க் கலந்து விட்டது. பெரிதாக நினைத்துப் பரவிய மேகம் கடைசியில் தனது சிறிய வடிவையும் இழந்து விட்டது.

     என்னுடைய மனத்திலிருந்த ஆசையும், அப்படித்தான் ஆகிவிட்டது. மூலையிலே தூங்கிக் கிடந்த எனது சிறு ஆசையை வளர்க்க எண்ணினேன். ஆனால், வளருவதாகத் தோன்றிய அந்தக் கடைசி நம்பிக்கையும் அந்த மேகத்தைப் போல மறைந்து எனது உள்ளத்தின் சூன்யத்தைப் பூரணமாக்கியது.

     அந்தக் கல்யாணத்திலிருந்து தப்பித்து விடலாமென்ற சிறு நம்பிக்கை, இரண்டு நாட்களுக்கு முன் பூரணமாக இருந்தது. ஆம், இந்தக் கல்யாண பந்தத்துக்குள் அகப்பட்டு நைந்து கொண்டிருப்பதை விடத் தற்கொலை பண்ணி, உயிரை மாய்த்து விடலாமென்று நான் எண்ணினேன். ஆனால், உணர்ச்சிக்கும், சக்திக்கும் எப்பொழுதும் ஒரு போராட்டம் நடக்கும் அல்லவா? என் உள்ளத்திலும் அதுவே நிகழ்ந்தது.

     தற்கொலை பண்ணிக் கொண்டால், என்னவோ, பின்னால் வரப் போகிற பயங்கரத்தை எதிர்க்கச் சக்தியில்லாது பிராணனைப் போக்கிக் கொண்டதாகத்தான் ஏற்படும். ஆனால், தற்கொலை செய்வது, மனிதனின் பலவீனத்தைத் தான் காட்டுகிறது. வாழ்க்கைப் புயலில் அடிப்படப் பயந்து நடுச்சமுத்திரத்திலே, கப்பலைத் தாழ்த்தி, வாழ்க்கை முடிவை எய்தாமல் போவதுதானே தற்கொலை? ஆம், அது மனித உள்ளத்தின் பலவீனத்தின் துணைவனாகத்தான், சஞ்சீவியாகத்தான் தோன்றுகிறது. ஆனால் என்னைப் பொறுத்த வரையில், என் சிந்தனைச் சக்கரம் எங்கெல்லாமோ சுழன்றது.

     தற்கொலை பண்ணிக் கொள்வதற்குக் கூட, என் மனத்தில் சக்தியில்லை; தெம்பு இல்லை. மனிதன் தனது பலவீனத்தினால், தற்கொலையின் காலடிகளில் விழும்போது, அவனிடம் அது எதிர்பார்ப்பதும் கண நேர தைரியம் தான்; என்னிடம் அந்த ‘கணநேர தைரியமும்’ இல்லை. அதனால் நான் தற்கொலை செய்யவும் முற்படவில்லை. மேலும், எனது பெற்றோர்களின் மகிழ்ச்சிக்காக, நான் எனது வாழ்வையே தியாகம் செய்ய - தியாகமாவது தியாகம்! பலியிடவே - தயாராயிருக்க விரும்பினேன். என்னுடைய பலவீனத்தை நான் பார்க்கும் போது, எனக்குத் துக்கம் ஏற்பட்டது. ஆனால், சந்துரு எனது காதலைப் பற்றிச் சிந்தனை செய்யாமலும், என்னைச் சாந்தப்படுத்த முடியாமலும் இருந்தால், நான் மட்டும் அவருக்காக ஏன் உயிரை விட வேண்டும் என்றும் யோசித்தேன்.

     தற்கொலையின் எண்ணம் எனது மனத்தை விட்டு மறைந்தது. அந்தச் சின்னஞ்சிறு நம்பிக்கையும், அந்த வெளிறிய நீரிழந்த மேகத்தைப் போல, பரந்து விரிய ஆரம்பித்தது. கடைசியில், மனத்தில் சூன்ய நிலையோடு ஐக்யமாகிவிட்டது.

     மனம் முன் மாதிரி, குரங்காட்டம் ஆடவில்லை. ஆனால், ‘கும்’மென்றிருந்தது. மப்புப் போட்ட காலை நேரத்தைப் போல, முன்னெல்லாம் மனத்தில் படியும் துக்க அலைகளை, கண்ணீரினால் கழுவி வந்தேன்; ஆனால் இப்போது அதுவும் இல்லை. கல்யாணப் பேச்சு ஆரம்பமானது முதல் என் மனத்தில் ஏற்பட்ட சலனம் எனக்குப் பழகிப் போய் விட்டது. இப்போது என் மனத்தில் சாந்தியும் இல்லை, சலனமும் இல்லை, ஏதோ மறந்து போன கனவின் சின்னங்களை நினைப்பூட்டும் பேதையைப் போல் இருந்தது மனம்.

     சாளரத்தின் வழியே எட்டிப் பார்த்தேன். வீட்டின் முன்னால், தெருவில் பந்தல் போடுவதற்குரிய ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தனர், வேலையாட்கள். குளோபுகளும், லஸ்தர்களும் வண்டியில் வந்து இறங்குவதை, மாடியிலிருந்தவாறே பார்த்தேன். எவ்வளவோ சாமான்கள் வந்து இறங்கின. பந்தல் வேலை விரைவாக நடந்தது.

     பந்தல் - குளோபுகள் - லஸ்தர்கள் - இவையெல்லாம் ஆடம்பரத்தின் அழியாத சின்னங்கள்தானே! ஆம். அப்பா இதையெல்லாம் மிகவும் விரும்பினார். கல்யாணத்தைப் பற்றி ஏற்கெனவே பயந்து நடுங்கும் என்னுடைய மனத்துக்கு இந்த ஆடம்பரங்கள் பயங்கர உருவங்களாகத் தோன்றின.

     கல்யாணம்! - அது வாழ்க்கைப் பாதையிலே ஒரு சிறு திருப்பந்தான். மோட்டார், வண்டி முதலியன செல்லாத ஒரு சந்திலிருந்து, கொஞ்சம் விசாலமான ஒரு தெருவிற்குள் திரும்பும் திருப்பத்தைப் போலத்தான் மணவாழ்க்கையும் மனிதனுக்கு அமைகிறது. இந்தத் தெருவில் கொஞ்சம் கவனமாகத்தான் நடந்து செல்ல வேண்டும். கார் வரும்; வண்டி வரும்; வாழ்க்கைப் பாதையின் சோதனைகள் இன்னும் எத்தனை உருவங்களிலெல்லாமோ வரும். ஆனால், மனிதனின் மனமோ அட்லாண்டிக் மகா சமுத்திரத்தை விட ஆழமானது; இந்தத் திருப்பத்தைச் சுலபமாகத் திரும்பிச் செல்வதை விட்டுவிடுகிறான். அதைத் திருப்பி இல்வாழ்க்கை என்னும் தெருவிற்குள் நுழைவதற்குத்தான் என்ன ஆடம்பரம்! வெறுமனே அந்தத் திருப்பத்தைத் திருப்புவதை விட்டு, மனிதர்கள் அதைப் பிரமாதப்படுத்தி, ஏதோ கருட வாகனராய் வரும் பெருமாள் ஒரு மாட வீதியின் மூலையைத் திரும்புவதைப் போல, பிரமாதப்படுத்தி விடுகிறார்கள். அப்பாவும் அப்படித்தான் பண்ணி விட்டார்களோ என நான் அஞ்சினேன். இல்லாவிடில் என் மனத்தின் பயம் ஏன் அதிகரிக்க வேண்டும்?

     இத்தனை நாளும் சாந்தியடைய முயன்று வந்த மனம், இந்த ஆடம்பரங்களைக் கண்டவுடன் நிலை பெயர ஆரம்பித்தது. பிறந்த இடத்திலேயே, எங்கள் வீட்டிலேயே, எனது கல்யாணத்தை நடத்துவது மட்டும் கொஞ்சம் ஆறுதலைக் கொடுத்தது. ‘வேறு இடத்தில் நடந்தால்?’ என்பதை எண்ணவே மனத்தில் தைரியம் போதவில்லை.

     “ரஞ்சி!” என்ற குரல், சாளரத்தின் ஓரத்திலிருந்து மனத்தைத் திரிய விட்டு, குரங்காட்டம் ஆட்டிய என்னை இழுத்தது. உடனே திரும்பினேன்.

     சுசீ ஒரு சின்னப் பெட்டியும் கையுமாய் நின்று கொண்டிருந்தாள். நான் பார்த்ததும் என் பக்கம் ஓடி வந்தாள்.

     “ரஞ்சீ, இந்தப் பெட்டியில் என்ன இருக்கிறது தெரியுமா?” என்றாள் குதூகலத்தோடு. எனக்கு அவளுடைய விளையாட்டில் கலந்து கொள்ளவே விரும்பமில்லை. எனினும், மனத்தைப் பலவந்தமாக அவளது விளையாட்டில் ஆழ்த்திக் கவலையை மறக்க உத்தேசித்தேன். ஆனால் நினைவுப் புலன்கள் எவ்வளவுதான் கவலையை ஒதுக்கி வைத்தாலும், மனத்திற்குள் ஏதோ ஒரு உட்புலன் ஒன்று, அந்தக் கவலையைத் தனக்குத்தானே பெருக்கிக் கொண்டிருந்தது. கவலையை மறப்பது கடினம்; அதுவே ஒரு பெரிய கவலையாயிருந்தது. அழுக்காய்ப் போன ஆடையை உடனே மாற்றிக் கொள்ள முடிகிறது; ஆனால் அம்மை விழுந்த உடம்பை மாற்றிக் கொள்ள முடியுமா? கவலைகளும் அப்படித்தான். நாளாவட்டத்தில் தான் கவலைத் தழும்பு மறையக் கூடும்.

     “சொல்லேன் பார்ப்போம்” என்று சுசீ மறுபடியும் கேட்ட போதுதான் எனக்குத் தன் உணர்வு வந்தது. சிரமப்பட்டு வரவழைத்த போலிப் புன்னகையை விளம்பரப்படுத்திக் கொண்டு, “எனக்கு எப்படித் தெரியும்? நானென்ன மந்திரவாதியா?” என்றேன்.

     “உன்னாலே சொல்லவே முடியாது. கண்ணைப் பொத்திக் கொள், காட்டுகிறேன்” என்றாள் சுசீ.

     “கண்ணைப் பொத்திக் கொண்டால் எப்படியடி காண முடியும்?”

     “அடி அசடே! நீ ஒரு மூடம். நான் திறக்கச் சொல்லும் போதுதான் திறக்க வேண்டும். அப்போ...” சுசீ சிரித்தாள்.

     நான் கண்களை மூடிக் கொண்டேன். என் புறக்கண்கள் இருண்டிருந்தன. ஆனால், மனத்திற்கும் கண்கள் உண்டோ, என்னவோ - மனத்தின் ஏதோ ஒன்று அந்தப் பெட்டியைத் திறந்து, அதனுள் இருக்கும் பொருளைக் காண முயன்றது. அதற்குள் சுசீயின் உத்தரவு பிறந்தது.

     கண்களைத் திறந்தேன்.

     அந்தப் பெட்டி திறந்திருந்தது! பெட்டியினுள் நிறைய நகைகள். எனது மனத்தின் இளகிய தன்மையைக் கண்டு எக்களிப்புடன் நகைக்கும் கடினமான வைர நகைகள்!

     “யாரடி அனுப்பினார்கள்?” என்றேன் வியப்போடு. அந்த நகைகளெல்லாம் எனது துன்பத்தை அதிகப்படுத்த வேண்டி, அனுப்பிய தூதர்களாகத் தோன்றின.

     “அம்மா கொடுத்தனுப்பினாள். அவளுக்கு வேலை சரியாயிருக்கிறதாம். அதனால், என்னை அனுப்பி இவைகளை உனக்கு பூட்டச் சொன்னாள்” என்றாள் சுசீ.

     எனக்குப் பதில் கூற ஓடவில்லை. ஆனால் சுசீ, இந்த மாதிரி வேளைகளில் மிகவும் தாட்டிகமாய் நடந்து கொள்வாள். இல்லையெனில், என்னுடைய அனுமதியையும், பதிலையும் எதிர்பார்த்து நிற்காமல், ஏன் அவள் பாட்டுக்கு நகைகளைப் பூட்ட ஆரம்பிக்க வேண்டும்? பூட்டும் போதே, என்னிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருந்தாள்.

     “உனக்கென்னடி உற்சாகமேயில்லை? பிறந்த வீட்டை விட்டுப் போகிறோமே என்று வருத்தமா?” என்றாள் பரிதவிப்போடு.

     என் உதடு அசைந்தது; பதில் வரவில்லை. கண்ணில் நீர் கசிந்தது. சுசீயோ பேசாதிருக்கவுமில்லை.

     “நானெல்லாம் போகவில்லையா? பெண்ணாய்ப் பிறந்தால் பிறந்த வீட்டிலேயே இருக்க முடியுமா?”

     ‘பெண்ணாய்ப் பிறந்தால்’ - ஆம், நான் பெண்ணாய்ப் பிறந்தது தான் என் குற்றம். ஒரு ஆண் மகனாய் மட்டும் பிறந்திருந்தால் எனது உரிமைக்காக வாதாட, எவ்வளவு தைரியமிருக்கும்? ஆனால், நான் பெண். எனக்கு எனது உரிமைக்காக வாதாட வழியில்லையானாலும், இரங்குவதற்குக் கூட தைரியம் போதவில்லை. பெண் பிறவியே இப்படித்தான். மனத்தினுள் போட்டு எதையும் மென்று விழுங்க வேண்டிய பிறவி அது!

     அந்த மோதிரத்தை சுசீ மாட்டும் போது, என் மனம் பழைய சிந்தனைகளை வலுவில் ஏன் இழுக்க வேண்டும்? பிள்ளையார் கோவில் தோப்பிலே, சந்துருவுக்காக முட்டு வைத்த அதே விரல்களில் மோதிரம் ஏறும் போது என் மனது அப்படியே நைந்தது.

     சுசீ வந்த காரியத்தை முடித்து விட்டுப் போய்விட்டாள்.

     ஆம், ஆடம்பரத்தின் மற்றொரு பகுதியான நகைகளையும் நான் சுமக்க வேண்டி வந்தது. தங்கத்தாலும் வைரத்தாலும் இழைத்த விலங்குகளால் நான் கைதியாக்கப் பட்டேன். தங்கமானால் என்ன? வைரமானால் என்ன? விலங்கு விலங்குதானே?

     சுசீ போன பின் பழையபடி சாளரத்தில் போய் அமர்ந்தேன்; நிம்மதியற்ற மனத்துக்குச் சாந்தியளிக்கும் இயற்கை விதானமான வானைப் பார்க்கத் திரும்பினேன். ஆனால், வெளியில் இருண்டிருந்தது. வானை நான் பார்க்க முடியவில்லை. காரணம், பந்தல்காரன் பந்தலின் மேல் தட்டியை சாளரத்துக்கு மேலாகவே கட்டியிருந்தான். அந்த சாந்தி தரும் வானைப் பார்க்க விடாதபடி, திரையிட்டது போல அமைந்திருந்தது பந்தல்.

     உடலைச் சிறையிட்டது போலச் சிரித்தன நகைகள். உள்ளத்தின் ஓட்டத்தைச் சிறைப்படுத்தியது போலச் சிரித்தது பந்தல். ஆம், என் சிந்தனை வானும் ‘கப்’பென்று மூடிப் போயிற்று. ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள் அது அடங்கி விட்டது.

     அது விரிந்து பரந்து விசாலமாகும் நாள் எந்நாளோ? யார் கண்டது?