8

     அன்று என் கல்யாண தினம். எனது உரிமைகளைப் பொடிப் பொடியாக்கி, அதைக் குழைத்து என்னை சிறைப்படுத்த எண்ணிய கோட்டை கட்டும் புனித தினம் அது!

     முந்தின நாள் இரவு முழுவதுமே எனக்குத் தூக்கம் சரியாக இல்லை. அதெப்படி வரமுடியும்? இரவு முழுதும் மனத்தினுள் என்னவெல்லாமோ எண்ணி எண்ணி வெதும்பிக் கொண்டிருந்தேன். எவ்வளவு வெதும்பினாலும், எப்படியும் மறுநாள் காலை ஒருவருக்கு - நான் விரும்பாத ஒருவருக்கு - மனைவியாகப் போகிறேன் என்ற எண்ணம் மட்டும் என் மன நிறைவைப் போக்கிச் சூன்யமாக்கிக் கொண்டிருந்தது. சாளரத்தின் வழியே என் முகத்தில் வந்து விழுந்த ‘க்யாஸ்லைட்’டின் வெளிச்சம் எனக்கு வேதனை தந்தது. சீறி வரும் நாகத்தைப் போல், ‘புஸ்’ என்றெரியும் அந்த விளக்கின் ஒளியை விரும்பி, அந்த ஒளித்தேனைப் பருக விரும்பி, விட்டில்களும், கொசுக்களும் அந்த விளக்கின் சிம்னியை முத்தமிட்டுக் கருகி விழுந்தன. அந்த ஒளி, சூடு பொருந்திய அந்த ஒளி, அவைகளைச் சாந்தப்படுத்தவில்லை.

     என் உணர்ச்சிகளும் அப்படியே தான் இருந்தன. மனத்தில் ஏதோ ஒரு மூலையில் தண்ணொளி பரப்பி வாழ்ந்த அந்த ஒளியை நாடி, எனது உணர்ச்சிகள் பறந்து சென்று முத்தமிடும் போது, அவைகளும் கருகி விழ ஆரம்பித்தன. ‘தங்கம் உருக்கித் தழல் குறைத்துத் தேனாக்கிய’ அந்த ஒளி, தற்போது வெம்மை யெய்தி விட்டதோ என்னவோ?”

     தூக்கமற்ற எனது கண்கள் ஒரு நிலையில் குத்தி நின்றன. கவனிப்பற்ற நீரூற்று கன்னங்களின் வழியாய் வழிந்து கொண்டிருந்தது. மனத்திலிருந்த சோகம் தன்னுள்ளேயே பொருமிக் கொண்டிருந்தது. ‘குபீர்’ என்று அணையை உடைத்துப் பாயும் வேகத்தை, எனது நெஞ்சின் குமுறல் எப்போதோ இழந்து விட்டது; இல்லையெனில், அது மோன நிலையில் தன்னுள்ளேயே பொரும வேண்டிய காரணமில்லை யல்லவா?

     “ரஞ்சி! ரஞ்சி!” என்று யாரோ என்னுடம்பின் மேல் கைதொட்டு எழுப்பிய போது, திடீரென்று அரைத் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து கொண்டேன். அது வேறு யாருமில்லை, சுசீலாதான். எழுந்திருந்த வேகத்தில் அப்படியே அவளைத் தாவித் தழுவிக் கொண்டேன். அந்தத் தழுவலை எண்ணும் போது, இன்னும் என் மனம் கிளுகிளுக்கிறது; அனுபவிக்கிறது.

     விடியப் போகிற நேரம் என்பதை அறிந்து கொண்டேன். முகூர்த்தத்துக்கும் சில மணி நேரந்தான் இருந்தது.

     மனத்தில் உற்சாகமேயில்லை; உணர்வுமில்லை என்று கூடச் சொல்லி விடலாம். குளித்து முடித்த பின், என்னைப் பிறர் கொலுப் பொம்மையை அலங்கரிப்பது போல் அலங்கரித்தனர். எல்லோரிடமும் நான் ஒரு இயந்திரம் போலத்தான் நடந்து கொண்டேன். சுசீலா மட்டும் என் பக்கத்திலேயே இருந்தது, என் மனத்துக்குக் கொஞ்சம் ஆறுதல் அளித்தது.

     வெளியிலே நாதஸ்வரக்காரன் தன் குழல் வழியாய், சோகரசத்தையே வடித்துக் கொட்டுவது போல வாசித்துக் கொண்டிருந்தான். எனது நெஞ்சில் எழும் சோக அலைகளை எதிர்த்தடிக்கும் உணர்வுகளைப் போல, தவுல்காரன் ‘பட பட’வென்று தட்டிக் கொண்டிருந்தான். என் இதய கமலத்தைச் சிதறவடித்து நொறுக்கும் சம்மட்டியடிகளாகத் தோன்றியது அந்தத் தவுலினின்று எழுந்த நாதம்.

     முகூர்த்த வேளை நெருங்கியது. மணப்பெண்ணாகிய என்னை அழைத்து, மணமேடைக்குக் கூட்டிச் சென்றார்கள். ஓர் ஏழைக் குருடனின் கையிலுள்ள கம்பைப் பிடித்து வழி காட்டும் பரம தயாளுவைப் போல, என் கையைப் பிடித்து, யாரோ அழைத்துச் செல்வதை மட்டும் நான் உணர்ந்தேன். ஆனால், என்னையிட்டுச் செல்லும் அந்தப் ‘பரம தயாளு’ என்னை நல்ல பாதையில் திருப்பி விடுமா, இல்லை - குழிக்குள் எங்கேனும் தள்ளி விடுமா என்பதை என்னால் நிர்ணயிக்க முடியவில்லை.

     தாலி கட்டுவதற்கு முன்னுள்ள சடங்கையெல்லாம் ஏதோ ஒரு முடுக்கி விட்ட இயந்திரப் பொம்மையைப் போலத்தான் செய்தேன். ஒன்றையாவது உள்ளத்தின் உணர்வோடு செய்ததாக நினைவில்லை. முகூர்த்த காலமும் வந்து விட்டது.

     கொந்தளிப்பு உள்ளடங்கிப் போன மனத்தின் மோனக் குமுறலோடு, நான் மண மேடையில் அமர்ந்திருந்தேன். பக்கத்திலே ‘அவர்’ அமர்ந்திருந்தார். முதல் தடவையாக, நான் அவரது பக்கம் அமரும் போது, அவரது கால் விரல்கள் என்னுடைய கையில் பட்டுவிட்டன. அப்போது பார்க்க வேண்டும், என் உடம்பு பட்ட பாட்டை! ஏதோ ‘ஷாக்’ அடித்த மாதிரி புல்லரித்து விட்டது. அப்போதே, என் மனத்தில் ஒரு விவரமற்ற பீதி உருவாக முயற்சித்தது. ஆம், இந்தப் புல்லரிப்பில் என் உயிர் இப்படி நடுங்குமேயானால், இன்னும் எவ்வளவு காலம் இவரோடு? - என் பீதி உருவாக முயற்சித்ததில் தவறொன்றுமில்லையல்லவா?

     பத்திரிகையில் குறிப்பிட்டிருக்கும் சுபவேளை வந்தே விட்டது.

     மேளகாரன் ‘படபட’வென்று தட்டினான். புரோகிதர் வாயில் வந்த மந்திரங்களை யெல்லாம் உளறிக் கொட்டினார். மண மேடையைச் சுற்றி நிற்கும் சிறு பெண்கள் குலவையிட்டனர். ‘அவர்’ கையில் என்னை அடிமைப்படுத்த வேண்டிய புனிதச் சின்னம் ஏறிற்று.

     மேளச் சப்தமும், பெண்களின் அட்டகாசமும் என்னுடைய பொருமலைக் கிளப்பி விடுமோ என்று பயந்தேன். ஆனால், பதை பதைக்கும் வெயிலிலும், பலத்த மழையிலும் தன் பாட்டிலே அமைதி நிலையில், சோகத்தை நினைந்துருகித் தவமிருக்கும் கற்சிலையைப் போல நான் அமர்ந்திருந்தேன். எனது கழுத்தில் ஏறவரும் தாலியை எதிர்பார்த்திருந்தேன். மிஞ்சி வந்த துயரை எதிர்க்கத் துணியும் அசட்டுத் தைரியசாலியைப் போல.

     மேள வாத்தியம் முழங்க, அவர் என்னைத் தன் ‘மனைவி’ என்று உரிமை கொண்டாட வழி வைக்கப் போகும் அந்தத் தாலியை எடுத்து எனது கழுத்தில் கட்ட ஆரம்பித்தார். அவர் போடுகிற அந்த முடிச்சுகள் அப்படியே இறுகி இறுகி, என்னைக் கொன்றுவிடக் கூடாதா என்று எண்ணினேன். மனம் சஞ்சலமடைந்தது. குபீலென்று கண்ணீர் வெளிப் பாய்ந்து விடுமோ என்று அஞ்சினேன். உள்ளத்தின் சோக அணை எந்த நேரத்தில் உடைபடுமோ என்று எதிர்பார்த்தேன். ஆனால் குமுறிச் சீறிய என் இதயம் சத்தியத்துக்குட்பட்ட பாம்பைப் போலத் தனது படத்தைச் சுருக்கிப் படுத்து விட்டது. நான் செயலற்றவளானேன்.

     ஆனால் - ?

     அவர் என் கழுத்தில் அந்தத் தாலியைக் கட்டின போது, ஒரே ஒரு துளி சூடு பொருந்திய கண்ணீர் அவரது கையில் பட்டு விட்டது. உடனே அவர் ‘சுரீர்’ என்று தேள் கொட்டிய மாதிரி கையை இழுத்துக் கொண்டார். அவரது இந்தத் திடீர்ச் செய்கையைக் கண்டு, மெதுவாகத் தலை நிமிர்ந்தேன். அவர் கண்கள் என்னைச் சந்தித்தன. சட்டென்று குனிந்து கொண்டேன். உள்ளத்தின் குமுறலை அடக்கிக் கொண்டு. என் முகத்தில் மிகுந்த கலவரத்தை அவர் உணர்ந்து விட்டாரோ என்று மனம் பரிதவித்துக் கொண்டிருந்தது. ஒரு வேளை அறிந்திருந்தால் என்ன நினைப்பார்? திரும்பியும் அவர் முகத்தைப் பார்க்கச் சந்தர்ப்பம் ஏற்படுமா என்று என் மனம் துடித்தது.

     அடுத்தாற்போல, மணச் சடங்குகள் ஒழுங்காக நடைபெற ஆரம்பித்தன. ‘அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும்’ சடங்கு வந்தது. கல்யாண வைபவத்தில், இதுவும் ஒரு சடங்கு. கல்யாணமாகும் மணப் பெண்கள், “கற்பிழந்த அகலிகையைப் போலல்லாமல், கற்பு நிலையினால், தாரகை மண்டலத்தில் இடம் பெற்ற அருந்ததியைப் போல் வாழ்வேன்” என்று குறிப்பாலுணர்த்தும் ஒரு சடங்கு இது. அகலிகை, தனது கணவரது சாபத்தால் கல்லாய்ப் போனாள். ஆதலால், அம்மி மிதிப்பது கல்லாகிய அகலிகையை மிதிப்பதாக ஐதீகம். ஆனால் அகலிகையைப் பொறுத்த மட்டில் அவள் கற்பிழந்தவள் என்று கூற எனக்குத் தைரியமில்லை. ‘உலகத்துப் பெண்களைத் தன் சகோதரி என்று நினையாத’ ஒரு துன்மார்க்கனின் காம வெறிக்குப் பலியானாள் அகலிகை. அவள் உள்ளத்தால் களங்கமடையவில்லை. அகலிகையை நினைக்கும் போது, அவள் வாழ்வு குலைந்ததை எண்ணும் போது, “சந்தர்ப்பத்தால், அபலை களங்கமானால், அவள் என்ன செய்ய முடியும்?” என்று வினவும் ஒரு புதுமை எழுத்தாளரின் பொன்வரிகள்தான் என் காதில் ஒலிக்கின்றன. அகலிகை இந்திரனைக் கண்ணாலும் காணவில்லை; கருத்தாலும் எண்ணவில்லை. தனது கணவன் உருவில்தான் அவனைக் கண்டாள். தன் கணவனென்று நினைத்துத்தான் அவன் கருத்துக்கும் இசைந்தாள். காலத்தின் போக்கில் இந்த மாதிரி அசந்தர்ப்பம் என்னும் பாறை அவள் மீது உருண்டால், மற்றவர்கள் அதை விலக்கி அவளைக் காப்பதை விட்டு, அவள் மீது இன்னும் ஒரு பெரும் பழி என்னும் பாறையை உருட்டி விட்டால், அது ஆண்மைக்கு அழகாகுமா? எது என்னவாயினும் சரி, அகலிகை மாசு மறுவற்ற சகோதரி என்பதுதான் எனது எண்ணம்.

     அம்மியை மிதிக்கக் காலையெடுத்து வைத்தேன். என்னுடைய சிந்தனா சக்கரம் பேய் வேகத்தில் சுழன்றது. களங்கம்ற்ற ஒரு அபலைச் சகோதரியின் மணியான கௌரவத்தை மாசு படுத்துவது போல இருந்தது. காலை வைக்கும் போது, என் உடம்பு நடுங்கியது. கட்டுப்பாடும் புரோகிதமும், பாவம், இப்படி ஒரு பெண் தெய்வத்தின் புனிதத்தைப் பங்கப்படுத்தவா எண்ண வேண்டும் என்று வருந்தினேன். ஆனால், நான் என்ன செய்ய முடியும்? எனக்கும் சந்தர்ப்பம் அப்படி வந்து வாய்த்து விட்டதே! அம்மியை மிதித்தேன்.

     எனது கால் முதல் தலைவரையிலும் கிடுகிடுக்க ஆரம்பித்தது. அகலிகா தெய்வத்தின் தெய்வீகத்தை மாசுபடுத்தும் அம்மி மிதிப்பும், என் மனக்குறும்புஞ் சேர்ந்து, என்னை நடுங்க வைத்தன. ‘கற்புடையவளாக வாழ்வேன்’ என்று ஆணையிடும் விதத்தில் இந்தச் சடங்கிற்கு நான் உட்பட்டிருக்கிறேன். ஆனால் அகலிகையைப் போல் எனக்கும் ஒரு சந்தர்ப்பம் நேரிட்டால்? எப்போதாவது சந்துரு என்னை விரும்பி...? அப்பா! என் மனம் சிலிர்த்தது. நானும் கற்பையிழந்து விடுவேனோ என்ற பயம் என்னை நடுங்க வைக்கக் காரணமாயிருந்தது.

     அம்மி மிதித்து, அருந்ததியைப் பார்ப்பதற்காகத் தலையை நிமிர்த்தினேன். மேலே வானும் இல்லை; அருந்ததியும் இல்லை. வெள்ளைவெளேரென்று வெளிறிய பந்தலும், லஸ்தர் மணிகளுந்தான் இருந்தன; “பெண்ணே! என்னத்தைப் பார்க்கிறாய்? நீல விதானத்தையும், தாரகைச் சுடர்களையுமா? அது இப்போது முடியாது; நீ கட்டுப்பாட்டுக்கு அடிமைப் பட்டவள்; சமூகத்துக்கு அஞ்சியவள். உனது பார்வை விலாசமாக இருப்பது இனிக் கடினம். வானத்தையும் விண்மணியையும் நீ இப்போது காண முடியாது. உனது பார்வை குன்றிவிட்டது. ஒரு குறிப்பிட்ட எல்லைக் கோட்டுக்குள் உனது பார்வை நின்று விட்டது. இந்தப் பந்தல் வானத்தையும் அதில் தொங்கும் செயற்கை லஸ்தர் மணிகளையும் தான் நீ காண முடியும். இதைப் பார்த்துத்தான் நீ மனந்தேற வேண்டும், தெரியுமா?” என்று வாய்விட்டுக் கத்தி, என்னைப் பார்த்துச் சிரிப்பது போன்றிருந்தது, அந்தப் பந்தல்.

     என் மனம் கிறுகிறுத்தது. முகத்திலெல்லாம் முத்து முத்தாக வியர்வைத் துளிகள் துளிர்த்து நின்றன. மூளையில் ஏற்பட்ட எண்ணக் கொதிப்பை, முகம் புலப்படுத்தி நின்றது.

     அடுத்தாற்போல் மாலை மாற்றும் சடங்கு. இது ஒரு நல்ல சடங்குதான். ஒருவருக்கொருவர் ஆத்ம சமர்ப்பணத்தைப் புலப்படுத்த உபயோகப்படும் ஒரு முறை. முதலில் அவர் தான் என் கழுத்தில் மாலையைப் போட ஆரம்பித்தார். அவருடைய கைகள் என்னை நெருங்கும் போது, “அவர் போடுகிற இந்த மாலை, அப்படியே கால சர்ப்பமாக மாறி, என்னைத் தீண்டிவிடக் கூடாதா?” என்று எண்ணினேன். அவர் அன்போடு சூட்டுகிற இந்த மாலை, அப்படி ஒன்றும் மாறிவிடவில்லை.

     மாலையின் குளிர்ச்சி என் உள்ளத்தின் புல்லரிப்பை அதிகரித்தது. அடுத்தாற் போல், நான் எனது கழுத்தில் கிடந்த வேறொரு மாலையை அவர் கழுத்தில் சூட்டத் தயாரானேன். அந்த மாலையை அவர் கழுத்தில் போடும் போது, என் மனத்தில் எவ்வளவோ உணர்ச்சிகள் உருண்டன. உடலும், அவயமும் அதை ஒரு இயந்திரத்தின் செய்கையாகவே செய்து முடித்தன. அந்த மாலையில் என் அன்பு என்னும் மணம் சேரவில்லை. தாளினால் செய்த வாசனையற்ற, போலி மாலையின் நினைவுதான் எனக்கு வந்தது. எனது ஆத்மாவை அவருடைய காலடிகளில், அந்த மாலையோடு சமர்ப்பிக்கப் போதிய தைரியமில்லை; முடியவுமில்லை.

     எல்லாச் சடங்குகளும் முடிந்தன. கடைசியாக எங்கள் பெற்றோர்களுடைய பாதங்களில் விழுந்து, வாழ்த்துரை பெற வேண்டிய நேரம் வந்தது. கையைப் பிடித்துக் கொண்டே, உள்ளே நடக்க ஆரம்பித்தார் அவர். நானும் தொடர்ந்தேன். தம்பதிகளாக எனது பெற்றோர் காலடியில் வணங்கி, அவர்களது பரிபூரண வாழ்த்தைப் பெற்றோம்.

     இனி, நான் அவர் மனைவி; அவர் என் கணவர்.