9

     அன்று, நானும் என் கணவரும் எனது பெற்றோரின் காலடிகளில் விழுந்து வணங்கினோம். ஆனால், கல்யாண தினத்தன்று இருந்த உற்சாகமும், மகிழ்வும் இன்று அவர்கள் முகத்திலில்லை. கண்ணில் மதகு நிறைந்த குளத்து நீரைப் போல, கண்ணீர் பெருகி நின்றது. ஆம், நான் மறு வீடு செல்ல வேண்டிய தினம், அது. பதினெட்டு வருட காலமாய், வாழ்வோடு வாழ்வாய், இன்பத்தோடு இன்பமாய், துன்பத்தோடு துன்பமாய், வாழ்ந்து வந்த எங்கள் குடும்பத்தின் அங்கத்திலொன்றான என்னைப் பிரிவதென்றால், அவர்களுக்குத் தாங்க முடியாதுதான். ஆயினும் என்ன செய்ய முடியும்? அப்பாவும், அம்மாவும் என்னைத் துக்கம் நிறைந்த மனத்தோடுதான் வாழ்த்தினார்கள். அந்தத் துக்கத்தின் விம்மல் கலந்த வாழ்த்தில்தான் வேகமும் சக்தியும் அதிகம் இருப்பதாக எனக்குப் புலப்பட்டது.

     எனக்கும் அன்றுதான் பிரிவின் கொடுமையை நன்கு உணர முடிந்தது. எங்கள் வீட்டை விட்டு, நான் போகப் போவது, ஏதோ ஒரு செங்குத்தான மலையினின்று கீழிறங்கி வரும் போது, காலின் பிடிப்புத் தவறி, முடிவற்ற பாதாளத்திற்குள் உருண்டு போவது போலத் தோன்றியது. என்னுடைய அறைக்குள் சென்று, பிரயாணத்திற்கு வேண்டிய சாமான்களை எடுத்து அடுக்க ஆரம்பித்தேன். புடவை முதலியவற்றை யெல்லாம் எடுத்து வைத்து முடிந்ததும், ஒழிந்த நேரங்களில் வாசிப்பதற்காக இரண்டு புத்தகங்களும் எடுத்துக் கொள்ளுவோமே என்று எண்ணி அலமாரியைத் திறந்தேன். ஆம், கவலை நிரம்பிய மனத்தை மறக்கடிக்கப் புத்தகங்களும் சிறந்த சாதனம். தான் போகிற போக்கெல்லாம் இழுத்துச் செல்லும் புத்தகங்களிடையே நாம் தலையைப் புதைத்துக் கொண்டால், நம்மைக் கவலைகள் அண்டுவதில்லை. அப் புத்தகங்களின் மோனப் பேச்சிலும், கனவுலகிலும் ஈனக் கவலைகளை மறக்க முடிகிறது. ஒரு வேளை, நைந்த உள்ளத்திற்குச் சாந்தியளிப்பதே கவிதையும், கனவுந்தானோ, என்னவோ?

     ஆதலால், இரண்டு மூன்று நாவல்களையும் எடுத்து வைத்துக் கொண்டேன். அவற்றில் கவி தாகூரின் ‘குமுதினி’யும் ஒன்று. முற்றத்திலே இரை பொறுக்கும் சிட்டுக் குருவிகளின் கவலையற்ற செய்கையிலே, மனத்தைச் செல்லவிட்டு, நெஞ்சின் குமுறலைத் தணிக்கும் குமுதினியை என்றுமே நான் மறக்க முடியாது. எனக்கு மிகவும் பிடித்தமான கதைகளில், அதுவும் ஒன்று. என்னைப் போன்ற ஒரு அபலைச் சகோதரிதானே குமுதினியும்?

     புத்தகங்களை எடுத்து வைத்து முடிந்ததும், சுசீ தனது புத்திரச் செல்வத்தோடு அறைக்குள் வந்தாள். அவளுடைய நடையில் உற்சாகமே இல்லை. ‘கலகல’வென்று ஒலிக்கும் அவளது பாதசரம் இடைவிட்டு ஒலிப்பது, அவளது நெஞ்சின் நிலையை எடுத்துக் காட்டியது. அவள் முகத்தில் ஒரு ஆழங் காண முடியாத சோகத்திரை படந்திருந்தது. அவள் அதை வெளிக்காட்டாமலிருப்பதற்காக, ஒரு புன்னகையை உதட்டில் வரவழைக்க முயன்று கொண்டிருந்தாள். ஆயிரம் திரைகளுக்கப்பால், அவள் தன் சோகத்தை மறைக்க முயன்றாலும் அது இன்னுந் தெளிவாகவே தோன்றுமென்பதை அவளால் உணர முடியவில்லை. ஒரு வறட்டுப் புன்னகையிலேயே, சோகம் வாடி மறையக் கூடியதா, என்ன?

     “சுசீ!” - என் குரல் கம்மிற்று; மறைக்க முயற்சி செய்யாத எனது உள்ளத்தின் சோகக் குமுறலின் ஒலியாக, இவ்வார்த்தை ஒலித்தது.

     சுசீலா பதில் ஒன்றும் பேசவில்லை. அப்படியே என்னை அணைத்துக் கொண்டாள். அந்த அணைப்பில் என்னவோ ஒரு ஆனந்தம் இருந்தது. அந்த ஆனந்தத்தில் நான் அப்படியே மூழ்கிக் கிடந்தேன். நாங்கல் இருவரும் அப்படியே எவ்வளவு நேரம் இருந்தோமோ, எனக்குத் தெரியாது. சுசீயின் குழந்தையின் கூக்குரலைக் கேட்டுத்தான் நாங்கள் விழிப்படைய முடிந்தது.

     “ரஞ்சி, கவலைப்படாதே. வாழ்வில் பிரிவு என்பது இயற்கைதானே? பிரிவு என்று ஒன்று இருந்தால்தானே, நட்பின் முடிச்சும் இறுகும்” என்று தத்துவம் பேசி என்னை மயக்க முயன்றாள், அந்தப் ‘பெரிய மனுஷி’.

     எனக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. ஆம், பிரிவு! பிரிவின் கொதிப்பைத் தாங்க முடியாதுதான். எங்களூர் கம்பராமாயணப் பிரசங்கி ஒரு தடவை கூறியது என் நினைவுக்கு வந்தது. ராமன் வனம் போவதற்கு முன்னால், சீதையிடம், “காட்டில் கல்லும் முள்ளும் நிறைந்திருக்கும். கானல் வேட்கை உன்னைக் கருக்கி விடும்” என்று கூறியதற்கு, “உன் பிரிவினுஞ் சுடுமோ, பெருங்காடு?” என்று சீதை பதில் சொன்னாளாம். ஆம், கொடிய பாலைவனத்தின் மணலின் சூட்டைக் கூடத் தாங்கி விடலாம். ஆனால் பிரிவின் கொதிப்பை மனித உள்ளம் தாங்க வேண்டுமானால், அதற்கு எவ்வளவோ மனப்பக்குவம் வேண்டும்.

     துக்கத்தின் எல்லைக்குள் திக்குமுக்காடும் என்னை மகிழ்விக்க எண்ணியோ, என்னவோ சுசீ என்னைப் பார்த்து, “ரஞ்சி, அடுத்த தடவை நான் இவ்விடம் வரும்போது, இதோ என் பிள்ளை இருக்கிறானே, இவனுக்கு ஒரு தம்பியோடு நீ இருக்க வேண்டும்” என்று கூறி நகைக்க முயன்றாள். ஆனால் அவளது பேச்சளவிலேயே நகைப்பு நின்று விட்டது; உள்ளத்தைத் தொடவில்லை.

     தம்பி! சுசீயின் மகனுக்கு ஒரு தம்பி! - என் துக்கம் மாறுவதாகத் தோன்றவில்லை. அப்படியே அவள் குழந்தையை எடுத்து அணைத்துக் கொண்டேன்.

     கண்களைத் துடைத்துக் கொண்டு, சுசீ குழந்தையை வாங்கிக் கொண்டாள். இருவரும் ஒன்றும் பேசவில்லை. எனது சிந்தனை அசைவற்ற வான மண்டலத்தின் சூன்ய வெளியிலே முயங்கி நின்றது. உள்ளத்திலே, அலைபாயும் சோகத்தின் ஒலிகள் வானை எட்டிப் பார்த்தன. சிந்தனா சக்கரம் பேய் வேகத்தில் கறங்கியது.

     உலகில் பிரிவு என்பது இயல்புதான். மனித உலகத்தில் சிநேக பாசத்தால் கட்டுப்பட்ட உள்ளங்களின் உடல் பிரிகிறது; உயிர் பிரிவதில்லை. ஆவி கலந்த ஆன்ம நேயம் உண்டானால், ஆவி பிரியாது; உடல் தான் பிரிய முடியும். ஆனால், மனித உள்ளமோ உடம்பின் மீதுதான் அதிகமான நம்பிக்கையும் அன்பையும் வைத்திருக்கிறது. ஆன்ம நேயத்தை அறிய, பக்குவம் அதிகம் வேண்டும். அதனால்தான், பிரிவின் வேதனை பெரிதாகத் தோன்றுகிறது.

     என்னுடைய சிந்தனைச் சுழற்சி அப்பாவின் அழைப்பினால், சடக்கென்று நின்றது.

     “ரஞ்சி, நேரமாகிறது. சீக்கீரம்!” என்ற வார்த்தைகள் என்னைப் பூமிக்கு இழுத்து வந்தன. சுசீயும் நானும் வெளியில் வந்தோம். கதவின் ஓரமாக நான் ஒதுங்கி நின்று கொண்டேன். வெளியில் சம்பந்தி வீட்டாருடன் அம்மாவும் அப்பாவும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

     “மாப்பிள்ளை! குழந்தை சின்னஞ் சிறுசு. அறியாக் குழந்தை. இனிமேல் நீங்கள்தான் அவளுக்கு எல்லாம். நான் அதிகமாய் ஒன்றுங் கூற வேண்டியதில்லை.”

     “வருத்தப்படாதீர்கள். உங்கள் பிள்ளை வேறு, நம் பிள்ளை, வேறா? பூவோ பொன்னோ என்று பார்த்துக் கொள்வோம்” என்று சமாதானம் செய்தார் மாமா.

     எனக்கு என்ன பண்ணுவதென்றே தெரியவில்லை. மனத்தில் போட்டிருந்த அணை உடைந்து விட்டது. ‘கோ’வென்று அழுதுவிட்டேன். என்னுடைய அழுகைச் சப்தம் வெளியில் நின்ற அம்மாவை உள்ளே இழுத்து வந்து விட்டது. அம்மா என்னை அன்போடு தடவிக் கொடுத்து, “ரஞ்சி, அழாதேயம்மா! நீயே அழுதால், அதன்பின் எங்களுக்கு யாரம்மா ஆறுதல்? அப்பா அடிக்கடி உன்னை வந்து பார்த்துக் கொள்வார். அழாதே” என்று தேற்றினாள். பின் அவள் தனக்குத்தானே, “நீ போய்விட்டால் இந்த வீடும் சிலையிழந்த வெறுங்கோவில் தான். வீடே வெறித்தோடிப் போய்விடும்” என்று தனக்குத் தானே முனகிக் கொண்டதும் எனக்குக் கேட்காமலில்லை.

     அவள் கண்களில் ஒரு துளி நீர் தேங்கி நின்றது. தொண்டையின் குரல் கம்மியது. மேற்கொண்டு ஒரு வார்த்தை கூட அவளால் கூற முடியவில்லை. ரயிலுக்குப் போக வேண்டிய நேரமும் நெருங்கியது.

     எல்லோரிடமும் செலவு பெற்றுக் கொண்டு வண்டியில் ஏறினோம். முதலில் நான் ஏறிக் கொண்டேன். பின்னால் அந்தச் சிறுமி - என் கணவரின் தங்கை - ஏறினாள். கடைசியில் அவர் ஏறிக் கொண்டார். எங்கள் இருவருக்குமிடையில், அந்தச் சிறுமி வந்து அமர்ந்தது என் மனத்துக்குக் கொஞ்சம் ஆறுதல் அளித்தது.

     மற்றவர்களெல்லாம் வேறு வண்டிகளில் ஏறிக் கொண்டனர். எல்லா வண்டிகளும் ‘ஜல் ஜல்’லென்று கிளம்பின.

     போகிற வழியில் -

     அந்தப் பிள்ளையார் கோவில் தோப்பு, சந்துருவும் நானும் நாவற்பழத்திற்குச் சண்டையிட்ட தோப்பு, விரல் கனிய முட்டு வைத்த விளையாட்டுத் தோப்பு, கடைசி முறையாக, சந்துருவின் ஸ்பரிசம் பெற்ற தோப்புத்தான் - அது என் கண்ணில் பட்டுவிட்டது. பசுமை குலுங்க நிற்கும், அந்தத் தோப்பின் மரங்கள் என் மனத்தை இறந்தகால இன்ப நிலைக்கு இழுத்துச் சென்றன. எனது இளமையில் குளுமை பெய்த அதே கற்பகச் சோலைதான் இன்று என் உள்ளத்தையே தகிக்கச் செய்யும் காண்டவ வனமாக மாறி விட்டது. அந்தத் தோப்பைக் காணக் காண என்னுடைய தனிமையின் தன்மை விசாலமாவது போலத் தோன்றிற்று. மெல்ல மெல்ல, என் கண்களிலிருந்து, அது மங்க ஆரம்பித்தது. அது மங்கினாலும், மனத்தில் அந்தத் தோப்பு வரைந்த பழங்கால நினைவுச் சித்திரங்களின் கோடுகள் மங்குவதாகத் தெரியவில்லை.

     சிறிது நேரத்துக்கெல்லாம் ரயில்வே ஸ்டேஷன் வந்தடைந்தோம். பிளாட்பாரத்திற்குச் சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் எத்தனையோ பிரயாணிகளை இறக்கி விடும் உற்சாகத்தில், முதுகை நெளித்து விட்டுக் கொண்டு பெரு மூச்சுடன் நின்றது ரயில். ஏற வேண்டியவர்களெல்லாம் ஏறிக் கொண்டாய் விட்டது. அப்பாவும் அம்மாவும் வேறு சிலரும் பிளாட்பாரத்திலேயே நின்றார்கள். அப்பாவின் கண்கள் கலங்கியிருந்தன.

     என் பெற்றோர்களிடமிருந்து, என்னை எங்கோ இழுத்துச் செல்லப் போவதாகத் தோன்றும் ரயிலைப் பார்த்ததும் என் மனம், மீண்டும் கலங்கியது. அழுது விட்டேன். நான் அழுவதைக் கண்ட அவரது தங்கை என்னைப் பார்த்து, “ஏன் மன்னி அழறே?” என்று பரிதாபத்தோடு கேட்டாள். எனது பதில் வெறும் விம்மலாகத்தான் இருந்தது. மீண்டும் அவள் அவரைப் பார்த்து, “அண்ணா, மன்னி ஏன் அழுதா?” என்று தன் சந்தேகத்தை நிவர்த்திக்கும் பாவனையில் கேட்டாள். அந்தக் கேள்வி அவரை என் பக்கம் திருப்பிற்று.

     “ரஞ்சி!” என்ற குரல். அவர் தான் அவ்வளவு மெல்லிய குரலில் அழைத்திருக்கிறார்.

     நான் ஏறிட்டுப் பார்த்தேன். அவரது கண்களிலே அன்பின் அபூர்வ ரேகையின் ஒளி நிரம்பியிருந்தது. அதை என்னால் எதிர்த்து நோக்க முடியவில்லை. தலையைச் சட்டென்று குனிந்து கொண்டு அழுகையை நிறுத்தினேன். கண்களையும் துடைத்துக் கொண்டேன்.

     ரயில் ‘ஹோ’வென்று வீறிட்டுக் கொண்டு புறப்பட்டது. என் உள்ளத்திலும் ஏதோ ஒன்று அப்படியே அலறுவது போலிருந்தது.

     பிளாட்பாரத்தில் நின்றவர்கள் உருவம் மறையும் வரை, தலையை வெளியே நீட்டி அமர்ந்திருந்தேன். தொலைவில் சென்று மறையும் நினைவைப் போல, அவர்கள் சாயைகள் மறைந்து மடிந்தன.

     குப்குப்பென்று சப்தமிட்டுச் செல்லும் ரயிலின் சப்தத்தோடு, துக்கத்தைக் கரைக்க முயலும் எனது ஆழ்ந்த பெருமூச்சுகள் பல போட்டியிட்டன. அப்படியே அசையாது அமர்ந்திருந்தேன்.

     ஆடிப்பாடிச் செல்லும் ரயிலைப் பார்த்ததும் அந்தச் சிறுமி:

     “குப் குப், குப் குப் - ரயில் வண்டி
     கூவுது பாரிதோ - புகை வண்டி!”

     என்று பாட ஆரம்பித்தாள்.

     அவளுடைய குறுகுறுத்த பார்வையும், பாடலும் எனது துக்கத்தை மாற்றும் சஞ்சீவியாகி விட்டன. அப்படியே சிரித்து விட்டேன்.

     அவளுடைய குறுகுறுத்த விளையாட்டும், துடிதுடிப்பும் என்னை மிகவும் வசீகரித்தன. பிறந்தகத்தில் சுசீ நிறைவேற்றிய பங்கை, புக்ககத்தில் இந்தச் சிறுமிதான் நிறைவேற்றுவாளோ, என்னவோ என்ற சிந்தனையில் மனத்தைப் போக்கினேன்.

     ரயிலும் தன் போக்கில், ‘குப் குப்’என்று சென்று கொண்டிருந்தது.