உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
1 இருளும் மழைக்காரும் சற்றே திரை விலக்குகின்றன; தாயின் மடிக்குரிய கதகதப்பைக் கொண்டு வர கிழக்கே எழும்பும் சுடரின் ஒளி எங்கும் பரவுகிறது. தன்னிலே வாழ்வை எழுதிக் கொண்ட மானிடக் குழந்தைகளைக் கடலம்மை சோதிக்க வேண்டாம் என்று முடிவு செய்து கொண்டாற்போல், தன் எண்ணற்ற அலைக்கரங்களால் தாங்கித் தாங்கிக் கட்டுமரங்களைக் கரைக்குத் தள்ளி வருகிறாள். மரியான் கால்களை அகற்றி அனியத்தில் ஊன்றி நின்று பாயை விரித்துக் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்துத் தண்டில் சுருட்டிச் சாய்ந்தாற் போல் தோளில் ஏந்திக் கொள்கையில் புறதலையில் நிற்கும் நசரேன் சாய்ந்த தண்டை ஏந்திக் கீழே வைக்கிறான். அலைகளில் உயர்ந்தும் வழுகினாற்போல் தாழ்ந்தும் அந்தப் பூவாகை மரம் பூவாக மிதந்து கரையை நோக்கி வருகையில் நிறைவின் உருவங்களாக அவர்களுடைய முகங்கள் காட்சியளிக்கின்றன. இருவரும் இளைஞர்கள். செம்பழுப்பான திறந்த மார்புகளும் வலைக் கயிற்றை இழுத்தும் தண்டு வலித்தும் உரமேறித் திரண்ட தசைகளுமாக ஆண்மைக்கும் உடலுழைப்புக்கும் இலக்கணமாகத் திகழும் மேனியர். மரியான் தலையில் வண்ணத் துண்டைச் சுற்றியிருக்கிறான். கருத்த சுருள் முடிக்கற்றை அந்தக் கட்டை மீறிக் கொண்டு நெற்றியில் தவழுகிறது. இடையில் கச்சை; வெற்றிலை பாக்குப் புகையிலை வைத்திருக்கும் சிறிய பைபோன்று பன ஓலையால் முடையப் பெற்ற மடிப்பெட்டியைக் கச்சையில் செருகியிருக்கிறான். நசரேன் மரியானை விட முதிர்ச்சி பெற்றவனாகக் காட்சியளிக்கிறான். ஒட்டிய வயிற்றில் கறுப்பான கச்சை போன்ற சல்லடம் மட்டும் அணிந்து சுக்கானை இயக்குகிறான். தென்கரையில் ஈயாகக் கூட்டம் மொய்த்திருக்கிறது. மரத்துக்கும் வலைக்கும் கடன் கொடுத்த வட்டக்காரர்களும் மீனை ஏலம் போடும் ஏலக்காரர்களும், வியாபாரிகளும், ‘பாச்சான்’களாகிய சிறுவர்களும், சுண்டல் கடலை என்று தீனிகள் விற்க வந்திருக்கும் எளிய பெண்களும், சிறு தொழில்காரரும் கூடும் காலை நேரம். பின்னணியில் விண்ணுயர் கூம்பாய் உச்சியில் சிலுவையுடன் மாதா கோயில் விளங்குகிறது. வீடுகள்... குடில்கள்... மரியான், நீண்ட கொம்பை நீருக்குள் குத்தி மரத்தை வடக்கே கொண்டு செல்கிறான். கரையிலிருந்து நூறுகஜம் தொலைவுள்ள அந்த நீண்ட - அகலம் குறுகிய பகுதி அவர்களுக்கு ஒரு தடை. அவர்களுடைய உரத்தையும் நெஞ்சுறுதியையும் விடா முயற்சியையும் சோதனை செய்யும் தடை. ஆழ்ந்து அடியில் பாறைகள் உள்ள அந்தத் தடையில் அலைகள் சுருட்டிக் கொண்டு உள்ளே செல்லும். கட்டுமரங்களைக் கவிழ்த்துக் கரைப் பக்கமே எறியும். ஆனி ஆடிக் காலத்தில் இந்தப் ‘பாரை’த் தாண்டிச் செல்வதே பெரிய கண்டம். ஆவணிக் கடைசி; ஆறுகளில் புதிய வெள்ளம் புரண்டு வர, கடலில் மீன்கள் ‘கலித்து’ப் பெருகும் நாட்கள். பார்* - தடையை தாண்டி லாகவமாக மரத்தைச் செலுத்துகிறார்கள். கரைநோக்கி வருகையில் தடை தடையாகவே இல்லை.
(*பார் - கடலுக்கடியில் உள்ள பாறைத்தொடர்) பாய்ச்சல் பிள்ளைகள் கடலில் நீந்தி வந்து மரத்தில் ஏறிக் கொள்கின்றனர். இருவரும் மரியானின் தம்பிகள். “எலேய்? பள்ளிக்கொடம் போவ இல்ல?” “என்ன மீன் பட்டிருக்கி?” “ஏன்லேய் பள்ளிக்கொடம் போவ இல்லங்கறேன்?” அவன் அதற்குப் பதிலே கூறாமல் தடுப்பால் மரத்தைக் கரைக்குத் தள்ளுகிறான். கரையில் ஒதுங்கியதும் பாய்த்தண்டை இழுத்து இருவருமாக வீசுகின்றனர். நசரேனின் தம்பி ஜான் பெரியவன். அவன் வலைகள் அடங்கிய ‘கோட்மாலை’* மரியானுடன் இழுத்துக் கரையில் போட்டு மீனை ஓமலில் தட்ட உதவுகிறான். கொம்பு, தாவுகல்@ ஆகிய சாதனங்களை அகற்றிய பின் அடக்காவியை# வைத்து மரத்தை மணலில் இழுக்க அந்தப் பையன்களுடன் நசரேன் முனைகையில் மரியான் வலைகளிலிருந்து மீன்களைத் தட்டுகிறான்.
(*கோட்மால் - வலைகளை வைத்துக் கட்டும் பெரிய வலைப்பை. @தாவுகல் - கடலுக்கடியில் ஆழத்தையும், பாறையையும் பரிசோதனை செய்யும் கயிற்றில் இணைந்திருக்கும் சிறுகல். #அடக்காவி - கட்டுமரத்தைக் கரையில் ஏற்றப் பயன்படும் முட்டுக்கட்டை.) வெள்ளித்துண்டுகள் போல் சாளை மீன்கள், இடையே அங்கே கரையில் கருப்பட்டித் தண்ணீருடன் காத்திருக்கும் ஆத்தாளின் பக்கம் கறிக்கு வாக்காக இருக்கும் பிள்ளைச்சுறா ஒன்று மின்னல் வேகத்தில் கூடையில் விழுகிறது. இவர்கள் கோளா வலைதான் கொண்டு சென்றிருக்கின்றனர். மரியானின் ஆத்தா கரையில் மீனெடுத்துச் சிறு தொழில் செய்வாள். அவள் கருப்பட்டி நீரை லோட்டாவில் ஊற்றி மகனிடம் கொடுக்கிறாள். “குடிச்சுக்கலேய்! இன்னிக்குச் சாளை பன்னண்டுதான் வெல...” மரத்தை தள்ளிவிட்டு வரும் நசரேனுக்குக் கருப்பட்டிக் ‘கோபி’யை அவள் ஊற்றிக் கொடுக்கிறாள். மேலே நீர்க்காகங்களும், கருப்பு காகங்களும் வட்டமிடுகின்றன. மீன்களைத் தட்ட உதவி செய்யப்புகும் சாக்கில் ஒரு பயல் நான்கைந்து சாளைகளைக் கையில் லபக்கென்று தூக்கிக் கொண்டு ஓடுகிறான். எல்லா மீன்களையும் ‘ஓமல்’ என்ற பன ஓலைக் கூடையில் தட்டிய பிறகு, ஜானும் மரியானும் அதை ஆளுக்கொரு புறம் பிடித்துக் கொண்டு கூட்டம் மொய்த்திருக்கும் மறு ஓரத்துக்கு விரைகின்றனர். அங்கே தான் மீன்களை ஏலம் விடுவதற்குக் காத்திருப்பார்கள். இவர்களைக் கண்டதுமே பிச்சைமுத்துப்பாட்டா ஏலம் கூற வருவாரே? அங்கு ஏதோ சண்டை நடக்கிறது. குருஸ் மாமன் பெண்சாதி சம்சலம்மா பேரன் சக்கிரியாஸிடம் மன்றாடி அழுகிறாள். “இவெ ஆத்தா பெத்திருக்கா. மருந்துசரக்கு வாங்கக் கூடத் துட்டில்ல... எல்லாக் காசையும் எல்லாரும் கொண்டு போயிட்டாங்களே! கஞ்சிக்கு அரிசியில்ல. ஆணம்* வய்க்க ஒண்ணில்ல...”
(* ஆணம் - குழம்பு) சக்கிரியாஸ் பயல் அவள் பிடியை விட்டு ஓடியே போய் விட்டான். வெள்ளைச் சட்டையும் தங்கக் கடியாரமும் சிறு நோட்டுப் புத்தகமுமாக அங்கே வந்திருக்கும் வட்டக்காரரைப் பார்த்து சம்சலம்மா அழுகையைத் தொடருகிறாள். “உளுவை ஸ்றா கொண்ட்ட்டு வந்தா. ஏக்ளாஸ் துவி*, ஏலக்காசு, அஞ்சு மீன் துட்டு, வட்டக்காசு எல்லாம் போயி மிச்சமிருக்கிறதை இவெ அவெ ரெண்டு பேரும் கொண்டிட்டுப் போயிட்டானுவ... நாலணாத் துட்டு வீசி எறிஞ்சிருக்யானுவ...”
(*துவி - சுறாமீனின் துடுப்பு செதில் ஆகிய பகுதிகள்) அவளுடைய ஓலம் மரியானின் செவிகளில் வேதனையின் அழுகுரலாக விழுகிறது. ஓமலைச் சூழ்ந்து கொண்டு வியாபாரிகளும், சிறு பயல்களும் நெருக்க பிச்சைமுத்துப்பாட்டா, “ஏழு... ஏழரை எட்டு...” என்று குரலை உயர்த்துகிறார். கோயில்காரன் ஒண்ணரைக்கண்ணன் *அஞ்சுமீன் தெறிப்பாக @மடிக்காரர்களிடம் வசூல் செய்த மீன்களை ஒருபுறம் ஏலம் கூவுகிறான். #சம்பையாகிய குலசைச் சாயபு, துவிகள் கழிக்கப் பெற்ற உளுவைச் சுறாவைப் பெட்டியில் கட்டி, சைக்கிளில் தூக்கி வைக்கிறார். சுறா மீன்களின் செதிள்களான துவிகளையும் கோயிலில் பணம் கட்டி அவரே குத்தகை எடுத்திருக்கிறார். அவருடைய தம்பி மீரான் மல்சட்டையும் தங்கக் கடியாரமுமாக அந்தக் கரையில் மன்னனுக்குரியதொரு மிதப்புடன் நடக்கிறான்.
(*அஞ்சுமீன் தெறிப்பு - கோயிலுக்குச் செலுத்தும் வரி. @மடிக்காரன் - கடல் தொழிலாளி. #சம்பை - மீன் வணிகன்.) ஜான் ஏலக்காரர் காசைக் கொடுத்த பின் மீதியிருக்கும் பன்னிரண்டு ரூபாயில் ஆறு ரூபாயை மரியானிடம் கொடுக்கிறான். மரம் நசரேனுக்குச் சொந்தம்; வலைகள் மரியானுடையவை. மணற்கரை சற்றே ஏற்றமாக இருக்கும் தொலைவில் அவர்களுடைய வீடுகள் இருக்கின்றன. சில வீடுகள் வெறும் கீற்றுக் குடிசைகள். முன்னும் பின்னும் ஒழுங்கில்லாத வரிசைகள். மூக்கொழுகிக் கொண்டும் பரட்டைத் தலைகளுடனும், அழுக்குச் சட்டைகளுடனும், ஒன்றுமில்லாமலும் சிப்பிகளும் சங்குகளும் பொறுக்கிக் கொண்டு மணலில் விளையாடும் சிறுவர் சிறுமியர்; காயவைத்த வலைகள்; பாய்கள்; கோழிகள்; சாக்கடைகள்; நாய்கள்; குந்தி உட்கார்ந்திருக்கும் முதிய தலைமுறையினர்; இளித்துக் கொண்டும், நெளித்துக் கொண்டும் ‘உலகமே நம் காலடியில் விழும்’ என்ற உள்ளுணர்வின் இளமை மதர்ப்போடும் கிணற்றுக்கு நல்ல நீரெடுக்கச் செல்லும் இளங்கன்னியர் எல்லோரையும் கடந்து முதல் வரிசைக்குப் பின் சந்து போன்ற இடத்திலுள்ள நசரேனின் வீட்டுப்பக்கம் மரியான் செல்கிறான். ஜான் காசை ஆத்தாளிடம் கொடுத்துவிட்டுப் போகிறான். ஆடொன்று முன் முற்றத்தில் கத்திக் கொண்டிருக்கிறது. ரோசிதா ஓரமாக அம்மியில் ஏதோ அரைத்துக் கொண்டிருக்கிறாள். பாய்த்தண்டை கீழே அவிழ்த்தது விரிக்காமல் கிடத்தியிருக்கின்றனர். “என்னம்பு, மச்சான் ஒரு நாளுமில்லாம அபுறுவமா உள்ளிய வந்துட்டீங்க?” என்று சிரிக்கிறாள். வஞ்சனையில்லாமல் தீனிக்கு ஆசைப்படும் சுபாவம் அவள் உடலில் செழித்திருக்கிறது. கண்களும் கறுத்த இதழ்களும் எப்போதும் சிரிப்பைச் சிந்திக் கொண்டிருக்கும் அவளைப் பார்த்தாலே மரியானுக்கு ஏதோ போலிருக்கும். அவளைச் சென்ற இரண்டு ஆண்டுகளுக்கு முன் நாகர்கோயிலானுக்குக் கட்டிக் கொடுத்த பிறகு, அவன் அவள் வந்திருக்கிறாளென்றாலே முற்றம் கடந்து வருவதில்லைதான். இவர்கள் வீடு ஓடு வேய்ந்து, உள்ளே மச்சம் கட்டிய வீடு. விசாலமான நடுக்கூடமும், பின்னால் குசினிப் பகுதியும், காமிரா அறையும், புறக்கடையும் உள்ள பெரிய வீடு. புறக்கடையில் கடலைப் பார்த்த வாயிலுள்ள வீடு. இவளைக் கல்யாணம் செய்து கொடுத்ததுமே நசரேனின் தந்தை சீக்கில் விழுந்து இறந்து போனார். இவளுக்கு அஞ்சாயிரம் சீதனம் கொடுத்து இருபது பவுன் போட்டு ஆடம்பரமாகக் கல்யாணம் செய்தார்கள். அவர் மிகுந்த செலவாளி; பெருத்த கை. நசரேனின் ஆத்தா வீட்டார் இவர்களைப் போல் கடல் தொழிலிலேயே ஊன்றி வாழும் *கம்மாரக்காரரல்ல. அவர்கள் ‘ஸிலோனில்’ வாணிபம் செய்து பொருள் சேர்த்து உயர்தட்டில் பழக்கமுடைய @மேசைக்காரர்கள். எனவே, அம்புரோஸ் பர்னாந்து, கடன்பட்டேனும் தம் மதிப்பைக் குறையின்றிக் காத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆடம்பரக் கொள்கையிலேயே வள்ளச் சொந்தக்காரராக இருந்து, அதை விற்று, வலையை விற்று, கட்டுமரம் மட்டுமே எஞ்சிய நிலைக்கு அவர்களைக் கொண்டு வந்திருக்கிறார்.
(*கம்மாரக்கார - எளிய மீனவரைக் குறிப்பிடும் சொல். @மேசைக்காரர் - பழைய நாட்களில் போர்த்துகீசிய அதிகாரிகளுடன் சமமாகப் பழகி உயர் வகுப்பினரென்று பெயர் பெற்ற வியாபாரிகள்.) “நசரன் எங்கிய?” இவன் குரலைக் கேட்டு நசரேன் பீடியும் கையுமாக வெளியே வருகிறான். அவன் கையில் இரண்டு ரூபாய் நோட்டு இருக்கிறது. “இன்னா மச்சான்?” மரியான் நோட்டைக் கையில் வாங்காமல் அவனை விழித்துப் பார்க்கிறான். “இம்புட்டுத்தானா?” என்று கேட்கும் பார்வை அது. “புடி மச்சான்! தலையக் கிள்ளிட்டுத்தான் த்லாக் கொல்ல நிறுக்கிறான். ரெண்டு கிலோக் கூட வார இல்லை.” “மாப்ள? ஆரோடு கதெ? எடு துட்டை! நா எண்ணி வச்சேன், இருவத்தி மூணுறால் இருந்திச்சி? எம்புட்டு வெல இன்னிக்கு?” “க்லோ ஒண்ணரை ரூவா?...” இவன் பாய்ந்து அவன் இடுப்புத்துணியை அவிழ்க்க முயலுகிறான். மரியானின் கட்டுமத்தான உடலும், நசரேனின் முறுகிய தசைகளும் விம்மிப் பொருத, அவர்கள் முற்றத்தில் மோதி உருள்கின்றனர். ஆட்டை உதைத்துத் தள்ளிக் கொண்டு மரியான் வசை மொழிகளை உதிர்க்கிறான். அவன் சும்மாயிருப்பானா? ரோசிதாவுக்கு இது விளையாட்டாக இப்போதும் சிரிப்பாகவே இருக்கிறது. ஆத்தாதான் சத்தம் கேட்டு உள்ளிருந்து வருகிறாள். ரோசிதாவைப் போலின்றி, தாய் சிவப்பாக இருக்கிறாள். முன் பக்கம் சிறிதே நரை கண்ட முடியை எண்ணெய் தொட்டு வாரி முடிந்து கொண்டு, வெளுத்த நீலச் சேலையைப் பாங்காக உடுத்து இருக்கிறாள். கழுத்தில் ஓரிழைப் பொற் சங்கிலியும் அவளுடைய சுத்தமும் அவளை அந்தக் கடற்கரைப் பெண்களிடமிருந்து இனம் பிரித்துக் காட்டுகிறது. “என்னம்புலேய்! எதுக்காவ இப்பம் கட்டிப் புரளுதீங்க?” “உள்ள துட்டைக் குடுக்கச் சொல்லுங்க மாமி! மாதா சத்தியமா ரெண்டு ரூவா தான் ஆளுக்குக் கிடச்சிச்சிண்டு சத்தியம்வுடச் சொல்லுங்க...!” “மாதா சத்தியம்... சாணாப்பயமவெ, சத்தியம் கேக்கான்.” மரியான் முடியைப் பிடித்து உலுக்கிக் கீழே தள்ளியபோது அவனுடைய பல் உதடுகளில் அழுந்தியதால் குருதி கசிகிறது. அது உப்புக்கரிப்பாக நாவில் படுகிறது. “சத்தியம் வுடச் சொல்லுங்க மாமி? றாலுக்கு அந்தச் சம்பை எம்மாட்டுக் குடுத்தா? கரையில் வச்சிட்ட, அஞ்சு மீன் தெறிப்பிண்டு கோயில் காரப்பய அள்ளி அள்ளிப் போட்டுக் கிடுதாண்டு இங்கிய கொண்டிட்டு வந்து சம்பையிட்டத் தெரியாம கொடுக்கேண்டு, என்னிய ஏமாத்தறா மாமி?” “இம்பிட்டுத்தானே? அதுக்கு ஏன்லேய் இப்பிடி அடிச்சிட்டு உருளுதீங்க!... சேசுவே! ரத்தம் ஒழுவுது லேய்!” நசரேன் உதட்டைத் துடைத்துக் கொண்டு உள்ளே செல்கிறான். இதற்குள் வாயிலில் சிறுவர் சிறுமியர் வேடிக்கை பார்க்கக் கூடிவிட்டனர். யேசம்மா அவர்களை விரட்டுகிறாள். “என்னம்புலே வேடிக்கை பாக்குறிங்க? போங்க? அவனவனுவ சண்டை போடுவா, கூட்டுக் கூடுவா...!” மரியானுக்கு கையில் சிறாய்ப்புக் காயங்கள். “வீரிசா மச்சானும் மாப்பிள்ளையும் சண்டை போடுதாக...” என்று ரோசிதா அம்மியைக் கழுவிக் கொண்டு சிரிக்கிறாள். “எண்ட துட்டைக் குடுங்க மாமி! இன்னும் ஒரு ரூவாண்ணாலும் இருக்கு...” “ரெண்டு கிலோ றால் தானிருந்திச்சு. இதபாரு. இப்பத்தான் மூலையில் தலையக் கிள்ளிப் போட்டத கூட்டித் தள்ளினம். ஒண்ணு ரெண்டுண்டு காசப் பதுக்கி வய்க்கிற கூலிப் புத்தி எங்களுக்கில்லலேய்? அது *கூலி மடி செய்யிற கிளாசாளுகளுக்கு இருக்கும். நாங்க ஏதோ காலவசத்தால இன்னிக்கு இந்தால இருக்கிறோமுண்ணு நீ எதும் சொல்லிப் போடுதா? இவெ பப்பா மாதா கொடைண்ணு ஆயிரம் கூட எடுத்துக் குடுப்பாரு. குடுத்துக் குடுத்துத்தா இன்னு, இந்தால கிளாசாளுங்களுக்கு சமமா நிக்கிறோம். ஏன்லே அநாசியமா கண்டதும் நினச்சிட்டு நிக்கே!”
(*கூலி மடி - கூலிக்கு மீன் பிடிப்பவன்.) மரியானுடைய முரட்டுத்தனமான உடலுக்குள் மென்மையான தொரு நெஞ்சப் பகுதியில் அவள் சொற்கள் தைக்கின்றன. அவனுடைய மனசுக்குள் அன்று மீன்பாடு பத்து ரூபாய்க்கு குறையாமல் வரும் என்று அசைக்க முடியாததொரு கணிப்பு இருந்தது. எங்கோ குறை விழுந்தாற் போல் அவனால் நம்ப இயலவில்லை. கடற்கரையில் ஏலம் விட்ட போது அவன் கவனிக்காமல் சம்சலம்மாளின் அழுகை ஓலத்தையும், சக்கிரியாஸின் ஓட்டத்தையும், வட்டக்காரனின் அழுத்தத்தையும் நினைத்துக் கொண்டிருந்ததாலும், கடற்கரையில் அவ்வாறு கூட்டுத் தொழில் செய்பவர்கள் ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொள்ள மாட்டார்கள். கொடுக்க மாட்டேன் என்று கள்ளுக்குக் காசு எடுத்துக் கொண்டாலும், அதற்காக அடித்துக் கொண்டாலும், தெரியாமல் மோசம் செய்யும் வழக்கம் அவர்களில் இல்லை. இவ்வாறிருக்கையில் நசரேனிடம் தான் அவ்வாறு நடந்து கொண்டு விட்டதாக உள்ளூற நாணியவனாகச் சற்று நின்றுவிட்டு, உற்சாகம் குன்றிய முகத்தோடு வெளியே வருகிறான். கால்கள் சூடு பிடிக்கும் மணலில் புதைய நடந்து வருகையில் அவனுக்கு அவமானமா, ஆத்திரமா என்று புலப்படவில்லை. சற்று எட்ட ஏலி நீரெடுத்துக் கொண்டு செல்கிறாள். கையில் தோண்டிப்பட்டை, கயிறு, இடுப்பில் குடம் - பெரிய பித்தளைக் குடம். மெல்லிய உடல் அந்தக் கனம் தாங்காமல் வளைந்து, அசைய, கால்கள் மணலில் புதைய அவள் செல்கிறாள். அருகில் சென்று அந்தக் குடத்தை வாங்கிக் கொண்டு அவளை அந்தச் சுமையிலிருந்து விடுதலை செய்ய வேண்டுமென்றோர் ஆசை முகிழ்க்கிறது. அவனது ஆசையைப் புரிந்து கொண்டுவிட்டாற் போன்று பிச்சைமுத்துப்பாட்டா குறுக்கே வருகிறார். “என்னம்ப்புலேய், எங்கிய பார்த்திட்டு நடக்கே? அப்பெ எப்படியிருக்யா? கொஞ்சம் வாசியா? அலவாய்க்கரைப் பக்கம் கால்குத்தி எத்தன நாளாச்சு?” “ஒடம்பில பெலம் புடிக்கல, பாட்டா இன்னம். இந்த முட்டாப்பய காச்ச ரொம்பக் குலச்சுப் போட்டிச்சி. ஆத்தா *பொதும எல மாதா பாதத்தில வச்ச ரச்சிக் கலக்கிக் குடுக்யா. கூடங்கொளம் சர்க்காராசுபத்திரில மருந்து வாங்கி வந்திச்சு மேரி. டாக்டர் குடிக்யக் கூடாதுண்டு சொன்னாருண்ணு சொல்லுதா. அப்பெ கஞ்சுத் தண்ணி கோப்பித்தண்ணி ஒண்ணும் வாணாமிண்டு இரிஞ்சாலும் இரிப்பா... சாராயம் இல்லாம ஒரு நாக்கூட இருந்து கூடாரே...!”
(*பொதும எல - வேப்பிலை) வயிற்றில் பசி உணர்வு நினைத்த மாத்திரத்தில் கிண்டுகிறது. அவன் மறுகோடியிலுள்ள வீட்டுக்கு விரைந்து நடக்கிறான். அலைவாய்க் கரையில் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
|