அத்தியாயம் - 10

     பிரளயச் சுழற்சியில் அலைமோதுண்ட மரியானுக்கும் நசரேனுக்கும் தங்களைக் கடல் அலைகள் எங்கோ கொண்டு ஒதுக்கிய போது, தன்னுணர்வு இல்லை. வள்ளமாக இருந்தால் தன்னுள் நீரை நிரப்பிக் கொண்டு அவர்களைக் கடலன்னையின் ஆழ் மடிக்கு இழுத்துச் சென்றிருக்கும். நிலத்தில் உயிர் பற்றி வளர்ந்த உருவிலேயே சிதையாமல் இருந்த கட்டுமரம், கடலலைகள் மறித்தாலும் முழுகாமல் மிதக்கும் தன்மை கொண்டதால் அவர்கள் மரத்தோடு தங்களைப் பிணைத்துக் கொண்டிருந்ததால் மிதந்தார்கள். பாரில் முட்டிமோதி அவர்கள் உயிரைப் பறிக்காமல் கடல் நாச்சி தன் அலைக்கரங்களால் அவர்களைக் கரையில் ஒதுக்கியிருக்கிறாள்.

     காற்றின் வெறியும், மழையின் உக்கிரமும் கடலின் ஆராளியும் அடங்கியதும் இருள் பிரியா அந்த நேரத்தில் அவர்கள் ஒதுங்கிய கரையில் குடிசைகளை விட்டுச் சென்றிருந்த குடிமகன்மார் இருவர் பந்தக் கொளுத்தி வந்து பார்த்த போது, மரமொன்று மனிதர்களுடன் ஒதுங்கியிருந்ததைக் கண்டார்கள்.

     பரபரப்பாக இருவருமாகக் கடலிலிறங்கி மரத்தை இழுத்துப் பார்க்கையில் அவர்கள் தங்களை மரத்துடன் பிணைத்துக் கொண்ட நிலையில் உணர்விழந்து இருந்தனரென்று புரிந்தது. கட்டை அவிழ்த்து மணலில் கிடத்திக் குப்புறத்தள்ளி நீரைக் கக்கச் செய்தனர். மரியான் உணர்வு திரும்பக் கண்களை விழிக்கையில் திமிங்கலச் சுறாவின் வயிற்றிலிருப்பதாகவே கருதினான். வயிற்றை அந்தச் சுறா குதறித் தின்று விட்டதோ?...

     அவர்களில் ஒருவன் இதற்குள் சத்தம் போட்டு ஆட்களைக் கூட்டலானான். பந்தம் கொளுத்திக் கொண்டு இன்னும் சிலர் ஓடி வந்தனர்.

     “எந்தக் கரை, எங்கிருந்து வாறீம்?”

     “கன்னியாபுரம்... இது எந்தக் கரை?”

     “இது விடிஞ்சகரை...”

     மரியானுக்கு அனலிடை மெழுகு உருகுவது போல் உள்ளம் உருகக் கண்ணீர் பெருகுகிறது. உப்பு நீர்... கடல் நீர்...

     மாதாவே! சுழலியில்பட்டுப் பிழைக்கக் கரை சேர்ந்திருக்கிறானா? நசரேன் எங்கே... நசரேன்...

     அவன் சுற்றுமுற்றும் பந்தத்தின் செவ்வொளியில் ஆட்களைப் பார்க்கிறான். மனிதர்களா இவர்கள்? விண்ணுலகின் பரிசுத்த ஆவியின் தூதுவர்களோ? சம்மனசுகளோ? ஆஞ்சுகளோ?

     நசரேனையா கவிழ்த்துப் போட்டு நீரெடுக்கின்றனர்?

     உள்ளங்காலைத் தேய்க்கிறான் ஒருவன்.

     நசரேன்... அவனுக்கும் உயிர்... இருக்கிறது...

     “எப்பம் கடலுக்குப் போனீம்?”

     “நேத்துப் பொழுது வெள்ளாப்புக் குடுக்கு முன்னியே புறப்பட்டோம்...”

     மீன்களை வாரி வலையில் இழுத்துக் கட்டியதும், வலைமேல் தன்னைப் பிணைத்துக் கொண்டதும் அவனுக்கு நினைவுக்கு வருகிறது.

     யாரோ ஒருவன் மணலில் எழுந்து உட்கார்ந்தவனுக்குக் கருப்பட்டி நீரைக் கொடுக்கிறான்.

     பொழுது வெளுத்து, சூரியன் வானில் கடை விரிக்கிறான்.

     ஞாயிற்றுக்கிழமை. இங்கும் கோயில் மணி ஒலிக்கிறது.

     நசரேனும் கண்களை விழித்துவிட்டான், கதை சொல்வதற்கு.

     ஊர் முழுவதும் திரண்டு அவர்களை வேடிக்கைப் பார்க்க வருகின்றனரோ என்று தோன்றுகிறது.

     “லே மரத்தில் சீலாமீன்... வலை தட்டணும்?”

     சீலா... சீலா...!

     சாமரம் வீசுவது போல், முத்தெறிவது போல் அந்தக் குரல் இனிமையாகச் செவிகளில் விழுகின்றன.

     யாரோ ஒரு பெண் பிள்ளை கோபித் தண்ணீரைச் சுடச் சுட லோட்டாவில் விட்டுக் கொண்டு வருகிறாள் இன்னொரு முறை.

     “மச்சான்... எப்படி இருக்கிய?”

     “மாதா கிருபை. அந்தோணியார் கோடியற்புதர். நாம கரை வந்தம்...”

     “இன்னாருங்க, பன் ரொட்டி தின்னுங்க...”

     பசியும் - மனிதன் நெஞ்சீரமும், எவ்வளவு இனியவை!

     கண்களில் நீர் வழிகிறது, இருவருக்கும். தின்று இனிய பான நீர் பருகுகின்றனர்.

     “நெம்ப வந்தனமுங்க. மீனைத் தட்டிப்போட்டு நாங்க போறம்.”

     “கொம்பு வாரிய்க்கல் மட்டும் குடுங்க. பொழுதோடு குடுத்துப் போடுறம்...” என்று நசரேன் நன்றி தெரிவிக்கையில், உரிமையுடன் சில இளம் பையன்கள் மீன் வலைகளைக் கட்டவிழ்க்கின்றனர்.

     நூறுரூபாய்ப் பாடிருக்குமா இருநூறுரூபாய்ப் பாடிருக்குமா?... இன்று விலை அதிகமிருக்குமே?

     ஏலக்காரரோ, சம்பையோ வருகிறார்களாவென்று அவர்கள் பார்க்குமுன் முதலில் இவர்களைத் தேடி வந்த குடிமகன்கள் இருவர் வந்து நிற்கின்றனர்.

     உயிர் பிழைக்க, வேறு ஊர்க்கரையில் ஒதுங்கி மீனைத் தட்டினால் அந்தக் கரையிலுள்ள குடிமகன் மாருக்கு இவர்கள் உரிமை மீன் கொடுக்க வேண்டும். நூற்றுக்கு மேல் கொண்டு வரும் வஞ்சிரம்பட்டிருக்கிறது. ஆயிரத்தில் ஒருநாள் என்று மீன்பாடு காண்பதும், ஆயிரத்தில் ஒருநாள் என்று சுழலியில் படுவதும், ஆயிரத்தில் ஒரு கடல்தொழிலாளிக்குத்தான் வாய்ப்பு வரக்கூடும். அந்த வாய்ப்பு அவர்களுக்கு வந்திருக்கிறது.

     “இன்னாருங்க, குடிமவ நாங்கதா - எங்க பாட்டிதா ஆளுவ அதிகம். அதுனால, மீன் உரிமை எங்களுக்குத்தான் போடணும்...”

     “அப்படீண்ணா?...” என்று நசரேன் வினவுகிறான்.

     இந்தக் கரையில் தொழில்காரர் இரண்டுபட்டுக் கிடப்பதைப் பற்றிச் செய்திகள் கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால் இவர்கள் தாம் அவர்களைக் கண்டு முதலில் ஆட்களைக் கூட்டி அவர்களுக்கு உணர்வூட்டி, உயிர்ச்சூட்டை விளங்கச் செய்திருக்கின்றனர்.

     “இங்க ரெண்டு பாட்டி. இன்னொண்ணு கோயில் பாட்டி, அவனுவ அதோ வரானுவ. நீங்க எங்களுக்கே போடுவமிண்டு உரச்சு மொழி சொல்லும்...”

     இவர்கள் சொல்லி முடிக்குமுன் கையில் கருக்கரிவாளுடன் ஒருவன் வர, பின்னால் படைபோல் பத்திருபது பேர் வருகின்றனர்.

     “அவனுவளுக்கு மீன் போட்டீங்கன்னா, இங்க அந்த மீனுக்கெல்லாம் ஒரு சல்லிகூட உங்க வசம் கிடைக்காது. கோயில் பாட்டிக் குடிமவனுக்குத்தா குடிமவ உரிமை சேரணும். இவனுவ துரோகிப் பயலுவ. இந்தக் கரைய நாசம் பண்ணும் பிசாசுங்க...”

     “...லே, நாய்க்கிப் பொறந்த பயலுவளா? யார்றா துரோகி?...”

     கம்பைத் தூக்கிக்கொண்டு ஒருவன் முரட்டுத்தனமாகப் பாய்கிறான். மரியானும் நசரேனும் அதிர்ச்சியினால் ஊமையாகி நிற்கின்றனர். சிறிது நேரத்துக்கு முன் புயலுக்குப் பின் மீட்சியாக, இனிமையிலும் இனிமையாக, உயிர்ச்சூட்டின் இணக்கங்களாக, மனிதத்துவத்தின் மாட்சிமைகளாக, கருப்பட்டியின் மகிமையிலும், ரொட்டியின் ருசியிலும் பசித் தீயவித்த பண்புகள் இப்போது சிதறிப் போய்விட்டன.

     அவர்கள் பாடுபட்டுக் கொண்டு வந்த மீன்; உயிரையே பணயம் வைத்துக் கொண்டு வந்த மீன்...

     அந்த மீனின் பக்கம் சென்று இவர்கள் ஆளுக்குப் பாதி உரிமை கொடுத்துவிட்டு ஏலத்துக்கு விடக்கூட அந்த இரு குழுவினரும் விடமாட்டார்கள் என்று தோன்றுகிறது. சொற்கள் மோதப் போர் நடக்கவில்லை. அடக்கி வைக்கப்பட்டிருந்த குரூர ஆவேசங்கள் அங்கே கட்டவிழ்கின்றன. ஒருவரை ஒருவர் தடிகளால் தாக்கிக் கொள்ளக் குருதியும் சிந்துகின்றனர்.

     மீன் ஏலம் எடுக்க வந்தவர் பின்னடைகின்றனர்.

     “மச்சான், நாம இங்கே இருந்தா ஆவத்து, நாம இங்கிய விட்டுப் போயிருவம்...”

     கடலின் மீது செல்ல மரத்துக்குத் துடுப்பில்லை; கொம்பில்லை.

     இப்போதைக்கு இவர்கள் இந்தச் சண்டையில் அகப்படாமல் அகன்று விட வேண்டும்!

     நீர்க்கண்டமும் சுழற்காற்றும் கூட இவர்களைக் கருணையுடன் கரைசேர்த்து விட்டன. ஆனால் மனிதனின் ஆவேசங்கள் கொலை வெறிகளாக மாறும் சூழலிலிருந்து மீட்சி காண வேண்டுமே? நசரேனும் மரியானும் மணற்கரையில் விரைந்து, கடுகி ஓடுகின்றனர். கொண்டு வந்த மீனைவிட்டு, உடமையை விட்டு, தங்கள் மண்ணை நாடி ஓடுகின்றனர்.

     “மச்சான், ஊருக்குப் போனாலும் கொண்டமிருக்கு கோயில் தெறிப்புக்குத் துரோவமா நடந்ததால்தான் சுழலிக் காத்தடிச்சிண்ணு ஏசுவாங்க...” என்று நசரேன் அஞ்சுகிறான்.

     “எதுக்காவ மாப்ள?... நான் நேத்து அந்தக் காலம்போற ஆராளியிலும் ஒண்ணு நெனச்சேன். நாம செய்யிறது சத்தியத்துக்கு ரோதமிண்ணா, கடல் நேத்து நம்மைக் கரையில் ஒதுக்கியிருக்காது. நாம செயிச்சிருக்கோம். இந்தப் போராட்டத்தில தோல்கல - செயிச்சிருக்யோம்...!”

     பளிச்சென்று கதிரவன் இவர்கள் மேல் ஆசீர் அருளுவது போல் சிரிக்கிறான். முட்செடிகளெல்லாம் துளிர்த்துப் பசுமை பூரிக்கின்றன. முறிந்த பனைகள் கூட அதிகமில்லை. நாடார் விளையின் வாழைத் தோப்புகளும் கூட அதிகமாகச் சேதமாகவில்லை. குடில்களில் குழந்தைகள் விளையாடுகின்றன. பெண்களும் ஆண்களும் சுறுசுறுப்புடன் புயலுக்குப்பின் வீடு, மனைகளைச் சீராக்குவதில் ஈடுபட்டிருக்கின்றனர். மரியானும் நசரேனும் எதுவும் பேசாமலே நடந்து வருகின்றனர். ஒவ்வொருவனுக்கும் தனித்தனியே சிந்தனைகள்; பிரச்னைகள்... மனிதர்கள் தங்களுக்குள் பொதுவான அபாயம் நேரும்போது பிணைப்புண்டு நிற்கின்றனர். ஆனால் அடுத்த கணமே அவர்கள் சுயநலச் சுவர்களை எழுப்பிக் கொண்டும் வெட்டி மடிகின்றனர். வெட்டி மடிந்தபின் எத்தனை வருந்தினாலும் சென்றது திரும்புவதில்லை.

     அலைவாய்க்கரையில் இவ்வாறு எவ்வளவு கொலைகள் சடுதியில் விழுந்து விடுகின்றன? அவனுடைய கரையில் கண் முன்பாகத் தெரிந்து பிச்சைமுத்துப் பாட்டாவின் மகன் ஆல்பர்ட் கொலையுண்டான். அவன் படித்திருந்தான். திருச்செந்தூர் விடுதியில் தங்கிப் பத்துப் படித்து முடித்து வந்தான். மீனவர் முன்னேற்ற சங்கம், எல்லோருக்கும் கல்வி என்று பிரசாரம் செய்தான். வாசகசாலை என்ற ஒன்றை மேட்டுத்தெரு ஆட்களுடன் சேர்ந்து கோயிலுக்குப் பின் ஸக்கிரிஸ்தான் வீட்டுக்குப் பக்கத்தில் கோயிலுக்குச் சொந்தமான ஒரு குடிலில் தொடங்கச் செய்தான். இவனும் அந்த மேட்டுத்தெரு ஆட்களைப் போல் சட்டை, வேட்டி அணிந்து சென்று நாகரிகமாக மாலை நேரங்களில் படிக்கப் போனான். மொடுதவத்தின் ஒன்றுவிட்ட தங்கச்சி, குளோரிந்தாளுக்கு மான்யுவலைக் கட்ட நிச்சயம் செய்திருந்தார்கள். அவள் ஆல்பர்ட்டைத்தான் கட்டுவேன் என்று சொன்னாளாம்.

     “கடல்மேல் போற தொழிலாளி, மேட்டுத்தெரு ஆளைப் போல நாகரிகம் படிக்கான்! இந்தச் சிறுக்கிமவ அவனைக் கண்ணடிக்கா...” என்று கிளர்ந்த மான்யுவல், குடித்துவிட்டு வந்து அவனை அரிவாளால் வெட்டி மணலில் சாய்த்து விட்டான்.

     மீனைத் தட்டி விட்டுக் குளிக்கக் கிணற்றடிக்குச் சென்றவன், அந்திசாயும் நேரத்தில் ரத்தக்குளத்தில் அத்தமன சூரியனைப் போல் விழுந்து கிடந்தான். உள்ளூற ஒரு பெண்ணே அவன் மனவெழுச்சிக்குக் காரணம். அவர்களுடைய உதிரத்தில் நீராகவும் காற்றாகவும் சேர்ந்துவிடும் கடலின் சாரம், நிலையில்லாக் கொந்தளிப்புகளுக்கும் சடுதியில் உணர்ச்சி வசப்பட்டுச் செயல் புரிவதற்கும் ஆளாக்கிவிடுகிறது. மான்யுவலுக்குச் சட்டம் ஆயுள் தண்டனை விதித்தது. பாளையங்கோட்டையிலோ, எங்கோ சிறையிலிருப்பான். இவ்வாறு எவ்வளவு கொலைகளைப் பற்றி அவர்கள் கேள்விப்பட்டிருக்கின்றனர்?

     அவர்கள் இதற்கஞ்சி, உயிருக்குப் போராடிப் பிழைத்த நிலையில் ஓடி வருகின்றனர்.

     ஊரின் மையவாடியைக் கடந்து வருகையில் பனந்தோப்பில் முதலில் அமலோற்பவத்தையும் வட்டக்காரரையும் தான் பார்க்கின்றனர்.

     “எங்கேந்து இந்தத்தாவுல ஓடி வாரீம்? ஒங்கக்க ஆத்தா, அப்பன் புள்ளங்கள்ளாம் விம்மலும் பொதுமலுமா இருக்கா...” என்று அமலோற்பவம் வரவேற்கிறாள்.

     “மரியானக்க ஆத்தா, நா முச்சூடும் தவதண்ணி பல்ல படாம, மலக்கமா வுழுந்திற்று. பொறவு, பல்லக் கிடுக்கியால தொறந்து கோப்பித் தண்ணி ஊத்தினாங்க. பய சோறு நீரெதும் கொண்டு போகாம, சுழலில போயிட்டான்னு அலவாய்க்கரையில நின்னு அழுகா...”

     இறைச்சித் துண்டம் கண்ட காக்கைகளைப் போல கூட்டம் அவர்களைச் சூழ வருகிறது. அவர்கள் வெற்றி வீரர்களைப் போல் ஊரில் நுழைகின்றனர்.

     கடல் நாச்சி அழிக்கும் ஆவேசத்துடன் பொங்கிய போதும் எதிர் நின்று தலை வணங்கி அவள் கனிவைப் பெற்றுத் திரும்பியிருக்கின்றனர். கோயிலில் பூசை முடித்துச் சாமி அப்போதுதான் வெளியே வருகிறார். எட்வின் கோயிலுக்கருகிலிருந்து வந்து விட்டான். எல்லோருக்கும் முன்பாகச் சென்று சுழலியை எதிர்த்து வெற்றியோடு திரும்பிய வீரர்கள், “வாழ்க!... வாழ்க சொல்லுங்கலே!” என்று முழக்குகிறான். நசரேன் ஆத்தா யேசம்மா, ரோசிதா எல்லாருக்கும் அழுது முகம் வீங்கியிருக்கிறது. மரியானின் ஆத்தாளை அடையாளமே தெரியவில்லை. சேலை அலைந்து குலைய, முடி பிரிந்து தொங்க, சித்தம் பேதலித்தவளைப் போல் தோன்றுகிறாள். அவர்களை வெறித்துப் பார்க்கிறாள். “உண்மையாம்படியே மரியானும் நசரேனுமா?...”

     மரியான் உருகிப்போய் அவள் தோளைப் பற்றிக்கொண்டு மணலில் நடந்து செல்கின்றான்.

     வீட்டில் திருவிழா மகிழ்ச்சி கரை பாய்கிறது. பெஞ்ஜமின், சந்தியாகு, குருஸ், ரொசாரியோ, ஐசக்கு எல்லோரும் வந்துவிட்டார்கள். பெண்டுகளுக்கும் பஞ்சமில்லை. நசரேன் அவன் வீட்டுக்குப் போகிறான். மரியான் முன் முற்றத்தில் குந்தி, ஒவ்வொருவரும் கொண்டுவந்து கொடுக்கும் உபசாரத் தீனியைத் தின்று கொண்டு தான் மரத்தோடு பிணிந்து கொண்டு உயிர் தப்பியதை விவரிக்கிறான்.

     வெற்றிலை, புகையிலையைக் கேட்டு வாங்கிப் பகிர்ந்து கொண்டும் சுருட்டைப் புகைத்துக் கொண்டும், மணலில் துப்பிக் கொண்டும் அவனுடைய அநுபவங்களைச் செவிமடுக்கிறார்கள். ஒரு கடல் தொழிலாளியின் வாழ்வாகிய அலைமோதும் ஏற்ற இறக்கங்களில், இத்தகைய அநுபவம் வானத்து வெள்ளி போல் வந்து எய்துவதாகும். அந்த நட்சத்திரமேந்திய வீரனின் திரண்டதோளை வைத்த கண் வாங்காமல் பார்க்கக் கூடிய இளம் பெண்கள் சிலரும் அந்த முற்றத்தை எட்டிப் பார்த்துக் கொண்டிராமலில்லை.

     “மச்சானும் மாப்பிள்ளையுமா, அம்புட்டு மீனையும் விடிஞ்ச கரைக்காரனுக்கா போட்டுப்பிட்டு வந்தீங்க?”

     “அங்கே குடி மவ சண்டை. ஒரு பாட்டி எனக்கு உரிமைங்கா. இன்னொரு பாட்டி அவெக்கு உரிமைங்கா. நாம கடல்ல பிழைச்சிக் கரை வந்தம். கொலவுழும் எடத்தில இருக்காண்டாமிண்டு ஓடி வந்தம். மேலக்கிதான் போயி, மரத்தைத் தள்ளிட்டு வார வேணும்.”

     “ஆனானப்பட்ட கடல், அதுவே ஒரு வரச்ச வரய்க்கி நிக்கி, மனுசன் ரோதமும் அசூயையும் வெறியும் ஏலாமையுமா ஒருத்தனை ஒருத்தன் வெட்டிக்கிடுதான்...” என்று கூறும் அப்பன், தத்துவார்த்தமானதொரு நோக்குடன் சூனியத்தை வெறிக்கிறான்...”

     “ஆமா? இங்கியும் நாம ரோசனை பண்ணிப் பார்க்கணும். சாமி இன்னிக்குப் பூசையில் கூட அறிக்கை வாசிச்சாரு. துவி குத்தவைக்காரருக்குக் கொடுக்காதவரெல்லாமும் இன்றறுதி துவி வித்தபணமும், அவதாரம் அறுபது ரூபாயும் கெட்டிப் போட்டு, கோயிலுக்கோ, திருச்சபைக்கோ துரோவம் செய்யாத நெல்ல கிறீஸ்தியானிகளா மாறணுமிண்டு வாசிச்சாரு...” என்று அங்கே வந்து குந்தியிருக்கும் மொடுதவம் கூறுகிறான்.

     பெஞ்சமின் சுருட்டுச் சாம்பலைத் தட்டிவிட்டுத் தொண்டையைக் கனைத்துக் கொள்கிறான். சிறிது நேரம் எதுவும் பேசவில்லை. அங்கே கூடியிருக்கும் பல இளைஞர்கள் எதுவும் பேச இயலாதவர்களாக இருக்கின்றனர். கோயில் குத்தகைக்காரரிடம் துவி கொடுக்காமலிருப்பதனால் ஏற்படும் ஆதாயத்தை உணர்ந்து பெஞ்சமினை அவர்கள் ஆதரிப்பவர்கள். ஆனால் மரியான் பேசுகிறான், சாவதானமாக லோட்டாவிலுள்ள இனிப்பு நீரைப் பருகிவிட்டுச் சொற்களைக் குழப்பாமல் கூறுகிறான்.

     “இப்பம், நாங்க மாதாவுக்கு ஒரு துரோவமும் செய்யலேண்டு நிரூபமாயிருக்கி, நாங்க செஞ்சது நாயமிண்டு தெய்வம் ஒப்புக் கொடுக்குண்ணு ஆயிற்று. அல்லாம இருந்தா, ஆராளிக் கடல்லேந்து நாங்க கரய்க்கி வந்து இப்பம் இங்கிய பேசமாட்டம். சாமி சொன்னபடி அவுராதம் கெட்டணுமிண்டு நினைக்கிற வங்கல்லாம் கோவமில்லாம ரோசிச்சிப் பார்க்கணும். நாமெல்லாரும் ஒத்துமயா நிண்ணா, கடல் தொழில் செய்யும் நமக்குத் தான் லாவம், நமக்குத்தான் மேன்மை. வெள்ளைச் சட்டை போட்டு ரீடிங் ரூம்பில படிக்காண்ணு ஆல்பர்ட் பயல மானையுவல் வெட்டிப் போட்டான். ஆருக்கு லாவம்? நமக்கு கவுரமா, நாலுபேரு சங்கிக்க இருக்கணுமிண்டு எல்லாருக்கும் ஆச இருக்கு. அதுக்குத் தக்கன நாம நடக்கவும் வேணும் இல்ல? ஒருத்தனுக்கு வாழு கொறயாப் போச்சுண்ணா மொத்தப் பேருக்கும் நன்ம கூடாதுண்ணு சொல்றதக் காட்டியும் எல்லாருமே நல்ல படியாயிருக்கணுமிண்டு நினைக்கிறது சரியில்லியா?”

     “இவெ, நேத்துப் பெறந்த பய எம்மாட்டுக் கதெக்கான்!” என்று அப்பன் பெருமிதமடைகிறான்.

     “மக்கா, இம்புட்டுப் பேசனது போதும். அவெவ சோலியப் பார்க்கட்டும் போயி! நாளத் தொழிலுக்குப் போகண்டாமா?...” என்று கேட்கிறான். முணமுணப்புடன் அவர்கள் எழுந்து செல்கின்றனர்.

     ஆத்தா இவனைக் கண்டபின் வெள்ளாட்டு இறைச்சி வாங்கி வந்து ஆணம் வைக்கிறாள். பப்படம் பொரிக்கிறாள். பண்டியல் சாப்பாடுபோல் உண்டு மகிழ்கின்றனர். அப்பன் நிறைவுடன் இளைப்பாறப் படுக்கிறார். ஆத்தாளும் நடு வீட்டில் முடங்குகிறாள். மேரி, புறக்கடையில் விறகைக் காயவைத்து, ஈரச் சாக்கை உதறிப் போட்டுக் கூட்டுகிறாள். கடலின் அலைகளின்மேல் வானத்து மேகங்களின் நிழல் படிகிறது.

     மரியானுக்குப் படுத்தாலும் படுக்கை கொள்ளவில்லை. புறக்கடைப் பக்கம் வருகிறான். தாழ்வரைக் கூரையும் தடுப்புக் கீற்றுகளும் சேதமடைந்து தட்டு முட்டுக்களும் வலைத்துண்டுகளும் பழையதாகி ஒடிந்த நார்க்கட்டிலும் மேரிக்கு ஒழுங்கு செய்ய வாய்ப்பளிக்கின்றன. அப்போது அங்கே அந்தப் புறக்கடை வாயிலில் ஏலி வந்து நிற்கிறாள். அவளுடைய கண்ணீர் வடிந்த கன்னங்களும், சீவியிராத கூந்தலும், அவனைத் திடுக்கிடச் செய்கின்றன. அவனையும் மீறி, அந்தப் படியிறங்கி, காற்றில் நடுங்கும் தளிராக நின்ற அவளை ஆதரவாகப் பற்றிக் கொள்வதை மேரி பார்த்துத் திகைத்து நிற்கிறாள்; கடலும் காற்றும் வானும் சாட்சிகளாகப் பார்க்கின்றன.

     “புள்ள... புள்ள... ஒங்கக்க மவெ... மாதாவே...!”

     விம்மல் நெஞ்சைப் பிளந்து கொண்டு வருகிறது.

     அவனால் எதுவும் பேச முடியவில்லை. அந்தச் சிசு, அவன் தனது உடலின் அணுக்களால் உருவானதென்று நம்பிய பூஞ்சிசு, மரித்துவிட்டது. அவளுடைய சோகத்தைப் பகிர்ந்து கொள்ளும் உணர்வை வெளியிட அவனுக்குச் சொற்கள் இல்லை.

     “ஒங்கக்க மவெ ஞானஸ்நான மில்லாம இருட்டு ஸ்தலத்துக்குப் போவு என்னியல்லாங் கெனாக்கண்டே! புள்ளக்கி வெள்ளயுடுப்புப் போட்டு, கோயில் சுரூபமெல்லாம் வத்தி எரிய, எல்லா மணியும் அடிக்க, ஒங்கக்க ஆத்தா கும்பாதிரி ஆத்தாளாயிக் கையிலவச்சிக்க, சாமி நெம்பப் பரிமளத் தயிலமும் நீரும் வச்சி, இஸ்பிரி சாந்துவைக் கூட்டிப் பேரு சொல்லணுமிண்டு... எல்லாம் வெறும் கனவாப் போச்சி...”

     “போனாப்போவு. அளுகா புள்ள” என்று ஆறுதல் கூற முற்பட்டாலும் அவனுக்கு நாவில் தடை கட்டினாற்போல் சொற்கள் எழும்பவில்லை.

     ‘போனால் போகிறது. இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ளலாம்’ என்று சொல்வானா?

     கூரை பெயர்ந்த அந்தக் குடிலில், ஒரு கீற்றின் மேல் துணிக்கந்தையைச் சுற்றி வைத்து, ஏனம் கவிழ்த்து மூடிவிட்டு வந்திருக்கிறாள். அவள் அதை எடுத்துக் காலன் திருகி எறிந்த அப்பூம் பிஞ்சைக் காட்டியதும் அவன் நெஞ்சம் பிரிய, “மாதாவே!” என்ற சொல் எழும்புகிறது. கூரையில்லா வாரிக் கல்லில் காகம் ஒன்று உட்கார்ந்து, இந்த வீட்டில் ஒரு உயிரில்லாப் பிண்டம் இருக்கிறதென்று கூவுகிறது.

     இரண்டு அழகிய சம்மனசுகள் விளங்கும் பெட்டியில் அவை வைத்து வெண்ணுடை தரித்த அப்பன் அப்பூவுடலை ஏந்திச் செல்லவில்லை; வழியில் உப்பும் மிளகும் வாரி இறைக்கவில்லை. மண்ணையும் குழியையும் யாரும் மந்திரிக்கவில்லை. அங்கே பக்கத்திலே மரியான் குழி வெட்டினான். சிசுவை இறக்கி மண்ணைப் போட்டார்கள். அப்போது மாலைப் பூசைக்கான மணி முழங்கிக் கொண்டிருந்தது.