உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
அத்தியாயம் - 11 பங்குக்குரு சேவியர், தமது பங்களாவின் மாடி முகப்பிலுள்ள வராந்தாவில் தம்மைப் பார்க்கவந்த அன்புத் தோழன் ஜேம்ஸுடன் உரையாடிக் கொண்டிருக்கிறார். ஜேம்ஸும் அவரும் பிரகாசபுரம் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நாளிலிருந்தே ஒத்த தோழர்கள். பிறகு கல்லூரிக்குச் சென்று படிக்கையில் விடுதியில் ஒரே அறையைப் பகிர்ந்து கொண்டனர். ஜேம்ஸ் தூத்துக்குடியில் ஏற்றுமதி வியாபாரத்தில் பொருளீட்டிய செல்வக் குடும்பத்தில் பிறந்த பையன் படிப்பில் அத்துணை கெட்டிக்காரனல்ல. என்றாலும் அவன் பொறியியல் கல்வி பயின்று பட்டம் பெற்று, கல்பாக்கம் அணு மின் நிலையக் கட்டிட நிர்மாணப் பணியில் அமர்ந்திருக்கிறான். மனைவியும் பட்டம் பெற்றவள். அவளும் செல்வக் குடும்பத்தில் உதித்தவள். இளம் மனைவியுடன் உவரியூருக்கு வந்தவன், அணிமையில் கன்னிபுரத்தில் சேவியர் பங்குக்குருவாக இருப்பதறிந்து பார்க்க வந்திருக்கிறான். இரண்டு வயசுப் பெண் குழந்தையொன்று அவர்களுடைய இல்லற வாழ்வில் பூத்த புதுமலராக விளங்குகிறது. சேவியருக்கு, இந்தச் சிறு வயதில் உலக இன்பங்களைத் துறந்து கிறிஸ்து ராஜனின் புகழையும் அருளையும் பரப்பும் குருப்பட்டம் பொறுப்பாக வந்தது ஓரளவுக்குக் கட்டாயமென்று தான் கூறவேண்டும். அப்பன் குடிகாரன். பன்னிரண்டு மக்கள். கடலிலிருந்து சிப்பிகளை அரித்தெடுத்து நீற்றித் தொழில் செய்யும் ஏழைக் குடும்பம். வாழைத் தோட்டத்திலோ வெற்றிலைக் கொடிக்காலிலோ அம்மை கூலி வேலை செய்யப் போவாள். இந்தப் பையன் எதற்கும் தெம்பில்லாத நோஞான். ஐந்து வயசு வரையிலும் அந்தோணியார்* பட்டத்தலையும் ஒரு காதில் மாதா வாளியும்# இன்னொரு காதில் ராயப்பர் வாளியுமாகச்$ சூணா வயிறும் பின் தங்கி நழுவிய கைகளுமாகவே இருந்த பிள்ளை. இவன் மீது முதலில் பள்ளி ஆசிரியையாக இருந்த ‘ஸிஸ்டர் அருள்மேரி’ அன்பைப் பொழிந்து இவன் கல்வியில் மிகுந்த ஆர்வம் காட்டினாள். அவளுடைய ஆர்வமே அடித்தளமமைத்துப் பள்ளிக் கல்வியில் அவனை உயத்திச் சென்றது. பிறகு அங்கே பங்குக்குருவாக இருந்த கபிரியேல் சுவாமிகள் இவன் படிப்பிலும் மேன்மையிலும் உவந்து முயற்சிகள் எடுத்துக் கொண்டார். அந்த ஊரிலிருந்து இவர் குருப்பட்டம் பெற்று ஊர்ப்பேரை விளங்க வைக்க வேண்டும் என்பது அவருடைய அருளாசையாக இருந்தது. அந்த நாட்களில் இவனுக்குத் தனித்துச் சிந்தனை செய்யத் திறனேது? சாமி என்றால் தனி மதிப்பு. பங்குக்குரு என்றால் ஊரின் ஆட்சியே கைக்குள் அடங்கியது போன்றதோர் கௌரவம். இவ்வாறு மிடிமையும் சிறுமையும் நிறைந்த பிறந்த இடத்துக்குரிய கொச்சை மொழிகளையும், அசுத்தங்களையும், நாகரிகமற்ற நடவடிக்கைகளையும் அவர் கல்லூரிக்குச் சென்ற நாட்களிலேயே மறந்து போனார். குருமடத்தில் குருபட்டத்துக்கான பயிற்சி பெற்றுக் குருவாக வந்த பிறகு, இவருக்கு அந்த மக்கள் தம்மைச் சுற்றி இருந்தாலும், உள்ளூற வேறுபாடும் வெறுப்புமே மிகுந்திருந்தன. நாகரிகமாகப் பேசும் மேட்டுக் குடிமக்கள் சிறுவர்களே இந்தச் சாமியிடம் ஒரு புன்னகையேனும் பெற இயலும். முதல் ‘கிளாஸ்’ ஞான ஸ்நானம் - முதல் கிளாஸ் திருமணம் - முதல் கிளாஸ் - சாவிலும் கூட. அதற்கான கிரியைகளிலும் கூட நெறிமுறையாக்கப்பட்டிருந்தது. அந்த மேல் வகுப்புக்குரிய கட்டணத்தை வைக்காதவருடைய சடங்குகளுக்கு சாமி வரமாட்டார். ஸக்கிரிஸ்தானே அறிக்கை வாசிப்பது போன்ற கடமைகளை நிறைவேற்றி விடுவான். (* அந்தோணியார் பட்டம் - அந்தோணியாருக்கு வேண்டிக் கொண்டு குறிப்பிட்ட வயது வரையிலும் விளிம்பில் வரைகட்டி மொட்டைபோடும் பிரார்த்தனை. # மாதா வாளி $ ராயப்பர் வாளி - மாதாவுக்கும் ராயப்பருக்கும் நேர்ந்து கொண்டு செவிகளைத் துளைத்துப் போடும் சிறு வளையங்கள்.) ஜேம்ஸையும், அவனுடைய இளம் மனைவி குழந்தையையும் வரவேற்று அந்தப் பிற்பகலின் ஓய்வு நேரத்தில் அவர் பேசிக் கொண்டிருக்கிறார். உள்ளே ‘சீசப்பிள்ளை’யாகிய பணியாளன் தாவீது, தேநீர் தயாரித்துக் கொண்டிருக்கிறான். அப்போது, அந்தப் பங்களா வாசலில், வராந்தாவில் ஒரு கூட்டம் புருபுருத்துக் கொண்டும் கூச்சலிட்டுக் கொண்டும் வந்து நிற்கிறது. சாமி அதைக் கவனித்தும் கவனியாததுமாகப் பழைய நண்பர்களைப் பற்றியே அளவளாவிக் கொண்டிருக்கிறார். தாவீது குரல் கொடுக்கிறான். “உள்ளே வாங்க; டீ சப்பிடலாம்...” இவர்கள் தேநீருக்கு எழுந்திருக்கு முன் மாடிப்படியில் அவர்கள் ஏறி வரும் ஓசை... சாமி விரைந்து படிக்குச் செல்கிறார். “சாமி... சாமி...!” “வாழ்ளம் விழ்தேன்... வழ்லையும் விழ்தேன்... வாளா வழ்ல... பு...ண...யும் விழ்தேன்...” ஒருவன் மூக்குமுட்டக் குடித்து ஆடிக்கொண்டும் குரல் இழைந்து தடுமாறியவனாகப் பாடிக் கொண்டும் அவர் காலைப் பற்றிக் கொள்கிறான். சாமியார் உதறுகிறார். “சீ, போடா! பட்டப்பகலில் திருட்டுச் சாராயத்தைப் போட்டுவிட்டுச் சாமியாரையே வந்து தாக்குகிறீர்கள்! இவர்களுக்கு எத்தனை சொன்னாலும் தெரியாது! எவ்வளவு பணம் சம்பாதிக்கட்டும்? அத்தனையும் குடி. டேவிட்! இவர்களை வெளியே கடத்தி விட்டு வா!” தாவீது அவர்களைப் படிக்கப்பால் பிடித்துத் தள்ளி விட்டுக் கதவைப் போடுகிறான். “சை... என்ன இது? ஃபாதர் கிட்டக் கொஞ்சம் கூட மரியாதை இல்லாம நடக்கிறாங்க?” என்று நண்பனின் மனைவி அதிசயப்படுகிறாள். “இப்படித்தான். திருப்பலிப் பூசைக்கு வரமாட்டாங்க. வந்தாலும் வெளியே நின்னிட்டுப் போவாங்க. வாயில வந்ததும் பேசுவாங்க. அதற்கும் மேலாக இப்போது திருச்சபைக்கென்று விதித்திருக்கும் மகமை கூடக் கொடுக்க மறுக்கிறார்கள். பாருங்கள், இப்படிக் குடிக்கிறார்கள். கோயில் வரிக்கான கொஞ்சம் மீன், கொடுக்கமாட்டோமென்று எதிர்க்கிறார்கள். அவர்களுக்குள்ளாவே வெட்டி மடிவார்கள்... ரொம்ப மோசம்...” “எல்லாருக்கும் நல்ல எஜுகேஷன் கொடுக்கணும் ஃபாதர்” என்று இயம்புகிறாள் அவள். “கொடுக்கணும். கவர்மெண்டும் என்ஃபோர்ஸ் பண்ணணும். இப்போது திருச்சபையே தருமத்தில் இயங்குகிறது. திடீரென்று இந்த ‘மார்க்ஸிஸ்ட்கள்’ வேறு சந்து எங்கே பொந்து எங்கே என்று புகுந்து விஷவித்தை வைக்கிறார்கள். அவங்க முதல் ‘டார்ஜெட்’ அங்கிபோட்ட நாங்கள்தான்...” தாவீது திரும்பி வருகிறான். “என்ன, போனாங்களா?” “அவங்க போவாங்களா? யாரோ இறந்து போயிருக்கிறாளாம். அந்திமத்துக்கு சாமி வரணுமாம்...” சாமி மாடி முகப்பிலிருந்து எட்டிப் பார்க்கிறார். எட்வின் தேர்ந்தெடுத்த வசை மொழிகளை உதிர்க்கிறான். ரொசாரியோ, “சாமி தோத்திரம். திருச்சபையைச் சேர்ந்த பிச்சியமுத்துவின் பெண்சாதி மரிச்சுப் போனா. அடக்கம் செய்யணும் சாமி...!” என்று உரக்க மொழிகிறான். “இப்பம் மட்டும் சாமி வேணுமோ? நீசப்பயங்க...!” என்று மறுமொழி உதிர்த்துவிட்டு, நண்பர்களிடம், “வாருங்கள் டீ சாப்பிடலாம்” என்று அழைக்கிறார் பங்குக் குரு. மேசையின் மேல் நல்ல விரிப்பு இலங்குகிறது. ‘பந்தோல்’ எனப்பெறும் இனிப்புப் பண்டம், கூடங்குளத்திலிருந்து வந்த ரொட்டியைத் துண்டாக்கி வெண்ணெயும் பழப்பாகும் தடவி வைத்த கூறுகள், மிக்ஸ்சர் வாழைப்பழம் எல்லாம் மேசையை அணி செய்கின்றன. பூப்போட்ட பீங்கான் கிண்ணங்களில் தேநீரை வடிக்கிறான் தாவீது. சாமியார் வெளியில் உள்ள கூட்டத்தை மறந்துபோக முயலுகிறார். ஆனால் கூட்டம் அவ்வாறு கலைந்துவிடவில்லை. வாயிலை விட்டுப் பின்புறம் தோட்டத்தின் வழியாக உள்ளே நுழைந்திருக்கிறது. பெஞ்சமின் பின்வாயிலில் வந்து நிற்கிறான். ஸக்கிரிஸ்தானையும் கூட்டிக் கொண்டு வந்து அவரை மாடிக்கு அனுப்பிவிட்டு இவன் நிற்கிறான். தோட்டம் எவ்வளவு பெரியது? கிணற்றிலிருந்து மின் இறைவைப் பொறி ஆகாயத்தொட்டியில் தண்ணீரை நிரப்புகிறது. கீழே ஒரு பெரிய தொட்டி. தென்னை, வாழை, முருங்கை என்று தோட்டம். அரளி மலர்கள் கொத்துக் கொத்தாக அலர்ந்திருக்கின்றன. தோட்டத்தில் பெரிய கோழிக்கூடு, பன்றிக்கென்று ஒரு சிறு கட்டிடம். வைக்கோல் போர்; மாட்டுக் கொட்டில் - கூண்டில் வான் கோழி ஒன்று கூவிக் கொண்டிருக்கிறது. ஒரு வேலைக்காரப் பெண் சாமான் கழுவிக் கொண்டிருக்கிறாள். ஒரு சாமியாருக்கு இத்துணை மாட்சிமை... என்று பெஞ்சமின் கருதிக் கொள்கிறான். அப்போது சாமி ஸக்கரிஸ்தானுடன் வருகிறார். “ஸ்தோத்திரம் ஃபாதர்!” சாமி அவனைப் புரிந்து கொள்கிறார். அவன் தான் அங்குள்ள எளியரை உசுப்பி இணைத்து வைத்திருக்கும் சக்தி என்ற எண்ணம் அவனைக் காண்கையிலேயே தோன்றுகிறது. “எங்கே வந்தே? உங்களுக்குத்தான் கோயிலை மீறிப் போகும் துணிச்சலும் மேதைத்தனமும் இருக்கிறதே? இப்பொழுது மட்டும் சாமியார் வேணுமா?” “ஃபாதர், அப்படி நீங்க ஒரேயடியாச் சொல்லிடக் கூடாது. திருச்சபையில் ஒரு பெண் மரித்திருக்கிறாள். நியாயமான கிறிஸ்தவர்; அவள் திருச்சபையை அவமதித்து எதுவும் செய்து விடவில்லை. நீங்கள் அவளுடைய அடக்கக் கிரியைக்கு வரலேண்ணா... சரியில்லை. நீங்க நினைச்சுப் பார்க்கணும் ஃபாதர்!” அப்போது பிச்சமுத்துப்பாட்டா, சற்று எட்ட இருந்தவர் தள்ளி வருகிறார். “நீர் எங்களுக்குக் குருவாயிருக்கிறீர் சாமி! நீங்க வார இல்லேண்டு சொல்லலாமா?” “இறந்தவர் யாரு?” “இவர் சம்சாரம்.” “இப்ப இதைக் கேட்கும் நீங்கள் யாரைக் கேட்டுக் கோவில் குத்தகைகளை அலட்சியம் செய்தீர்கள்? உங்களிடம் சாமி வந்து கெஞ்சணுமோ? ஒரு நல்ல கிறிஸ்தவனுக்கு, இதெல்லாம் முக்கியம் என்று தெரியாதா? அப்போது நீங்கள் யோசித்தீர்களா? எத்தனை தடவை அறிக்கை கொடுத்தேன்? நீங்கள் கோயிலை எதிர்க்க வேணும், சாமியை எதிர்க்க வேணும் என்றே நிற்கிறீர்கள். மகமை நிறுத்தினால் கோயில் எப்படி நடக்கும்? காலம் காலமாக உள்ள ஒரு ஒழுங்கு. அதை நீங்களாக நினைத்து நிப்பாட்டுவதா?” சாமியாரின் கறுத்த முகத்தில், சிவப்போடுகிறது. விறுவிறென்று போகிறார். “ஃபாதர், நாங்கள் கடலோடு மன்னாடிப் பிழைக்கிறோம். கோயில் எதிர்ப்பு சம்பந்தமாக நீங்கள் எங்களோடு கூட்டம் போட்டுப் பேச்சுவார்த்தைக்குக் கூப்பிடுங்க ஏற்பாடு செய்யிறோம்; பேசுதோம். அதுக்கும் இதுக்கும் சம்பந்தமில்ல. அதற்காக நீங்கள் இப்போது கோபிச்சி மையம் மந்திரிச்சு, மரிச்சவருக்கு நீங்க குருவாச் செய்ய வேண்டிய கடமையைச் செய்யாம மறுத்தா வீணாகக் கலவரம் உண்டாகும். நீங்க இப்பம் கிருபையோடு இத்தை நிறைவேத்த வேணும். மேலும் மரித்தவள் பெண். அவள் புருஷன் கடல் போய் தொழில் செய்பவருமில்லை. அவர் ஏலக்காரர். சிறிய வியாபாரி. தெறிப்பு சம்பந்தமாகப் பின்னே பேசுவோம். நீங்க இப்போது வரணும்...” சாமிக்கு அவன் கூற்றில் நியாயம் இருப்பது உறைக்கிறது. “கோயிலுக்கு இப்பச் சேரவேண்டியதெல்லாம் கட்டுங்கள். கொஞ்சம் விருந்தாளிகள் வந்திருக்கிறார்கள். அவர்களை அனுப்பிவிட்டு வருகிறேன்...” சாமியாருக்குத் தெளிவாக ஒரு உண்மை பளிச்சிடுகிறது. இந்த பெஞ்ஜமின் வெளியுலகு கண்டவன். படித்து வேறு தொழிலும் செய்தவன். இவனிடம் மீனவர் நாகரீகமாக முன்னேற வேண்டும் என்ற கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால், அது கிறிஸ்தவத்தை ஒட்டி, அவர் மதிப்பது போல் கோயிலை ஒட்டி, பரம்பரை நம்பிக்கைகளை ஒட்டியதாக இல்லை. பங்குச்சாமியை விரோதமாக நினைக்குமளவுக்கு ஒரு விஷக்கருத்தை இவன் அந்தக் கவடறியா மக்களைத் தூண்டி விடப் பயன்படுத்துகிறான். இன்று துவிக்கட்டளை நின்றால், நாளை ஞானஸ்நானம், திருமணம், மரித்தோர் சடங்கு இவற்றுக்கும் பங்குச்சாமிக்கு எதற்குப் பணமும் வரிசையும் கொடுக்க வேண்டும் என்று தூண்டி விடமாட்டான் என்பது என்ன நிச்சயம்? சிறு பொத்தலுக்கு இடம்கொடுத்தால் படகைக் கவிழ்க்கும் அளவுக்குப் போகும். நன்மை தீமை, பாவக் கிரியைகளில் பயம் இவை மீறுமளவுக்கு விடக்கூடாது. ‘நாங்களே பார்த்துக் கொள்கிறோம்’ என்று அவர்கள் மனம் திரும்பிவிடலாகாது. அதேசமயம்... அதே சமயம் சாமிக்குப் பிரச்னைதான். சாமி, மையம் மந்திரிக்க வருகிறார். குடிமகனாகிய நாசுவன் மேளம் எடுக்கிறான். குடை சுருட்டி, குடை பாவாடை எல்லாம் தொடர, ஸ்டெல்லாவின் சடலம் மந்திரிக்கப்பெற்று மையவாடிக்குச் செல்கிறது. குடிமகன் குழியைத் தோண்ட பெட்டியை இறக்கியதும் சாமியார் ஜபம் சொல்லி முதல் மண்ணைப் போடுகிறார். அலைவாய்க் கரையில் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
|