உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
அத்தியாயம் - 14 அமலோற்பவத்தின் மைத்துனன், அடைக்கலசாமியின் சிற்றப்பன் மகன் லயனல் ஜீப் ஓட்டுகிறான். கன்னிபுரத்திலிருந்து இடையன் குடிக்கும், கூடங்குளத்துக்கும், திசையன்விளைக்கும், திருச்செந்தூருக்கும் சினிமா, கடை வீதி, அவசரமான ஆசுபத்திரிக் காரியங்கள் என்று செல்வதற்கு வாய்ப்பாக, அமலோற்பவம் வாங்கி விட்டிருக்கும் வண்டி அது. சாமியாருக்கும், மேட்டுத் தெரு மக்களுக்கும் அது பேருதவியாக இருக்கிறது. இப்போது அந்த ஜீப்பில், பெஞ்ஜமின், எட்வின், மரியான், பிச்சைமுத்துக் கிழவனார் ஆகியோர் அமர்ந்திருக்கின்றனர். வித்யாவதி சென்று போலீஸ் ‘இனிஸ்பெட்ட’ரையும் கூட்டிக் கொண்டு அவர்கள் தூத்துக்குடி செல்லப் போகின்றனர். ஆளுக்கு ஒரு ரூபாய் என்று பங்கு போட்டுப் பணம் செலவுக்குப் பிரித்திருக்கின்றனர். கடைக்குச் சில சாமான்கள் வாங்குவதற்காக, செபஸ்தி நாடானும் ஜீப்பில் வந்தமர்ந்திருக்கிறான். வாழ்க்கையில் ஒரு புதிய ஏடு திரும்பி இருப்பது போன்று மரியானுக்கு உற்சாகமாக இருக்கிறது. “கட்டைக்கும் மீன் போடுவான் காயலான்” என்ற வழக்கு மொழிக்கு ஏற்ப, கோயில்காரன் ஒரு கட்டையை நிறுத்திவைத்துவிட்டுப் போனாலும் கூட இவர்கள் மீன் போடுவார்கள் என்ற வழக்கை மீறி, கண்மூடித்தனத்தை மீறிக் குரல் எழுப்புகின்றனர். பங்குக் குருவை மீறிக் கொண்டு ஆண்டகையைப் பார்க்கச் செல்கின்றனர். போலீசென்றால் ஆளைக்கண்ட நண்டுபோல் வளைக்குள் சென்றொளியும் மக்களாக இருந்த அவர்கள், போலீசு அதிகாரியையே துணையாக அழைத்துக் கொண்டு ஆண்டகையைப் பார்க்கச் செல்கின்றனர். ஜீப்பின் முன் ஆசனத்தில் ஓட்டியாக லயனல். இடையில் பெஞ்சமின், பிறகு போலீசு இனிஸ்பெட்டர்; அவரது காக்கி உடுப்பு மிகவும் கௌரவமாக இருக்கிறது. பின்புறத்தில் பிச்சைமுத்துப்பாட்டா, மரியான், எட்வின், செபஸ்தி நாடார் ஆகியோர் இருக்கின்றனர். சாதாரணமாக அந்த ஜீப் சவாரி போகிறதென்றால், குறைந்த பட்சம் இன்னும் நான்கு பேரேனும் இருப்பார்கள். பண்டிகை நாட்கள், அல்லது பேர் பெற்ற சினிமா என்றால், அந்த வண்டி முப்பது பேரையும் கூட ஏற்றிக் கொண்டு செல்லும்! பெரிய தொலைவு நடந்து வரவேண்டுமே? இது கோயில் முன் சென்று ஆளை இறக்கிவிடுமே? ‘இனிஸ்பெட்டர்’ முன்னால் அமர்ந்திருக்கிறார் என்ற உணர்வில் அவர்கள் யாருமே பின்புறம் பேசிக்கொள்ளவில்லை. இல்லையேல், “இவனுவ யாரு?...” என்று கூச்சல் போட்டுப் பேசுவார்கள்! சாலையின் இருமருங்கிலும் கைப்பிள்ளைக்காரியின் தளர்ச்சியுடனும், பெருமிதத்துடனும் குலைதள்ளி முதிர்ந்து நிற்கும் வாழைத் தோப்பு; இந்த மண் எங்கள் உரிமை... என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டு கடற்கரையோரமுள்ள அச்சாலையில் கண்களுக்கெட்டிய வரை குடிபிடிக்கும் பனைகள்; எங்களுக்குந்தான் உரிமை என்று தலை விரிச்சிகளாகப் போட்டி போட்டுக் கொண்டு காட்சிதரும் உடை மரங்கள்; இடையிடையே நீர்க்கால்கள் எல்லாம் வருகின்றன. அங்கெல்லாம் மனிதரின் உழைப்புக்கு உவந்து கொடையளிக்கும் பூமித்தாய் நெல்மணிகள் சாய்த்தாழ்ந்து வணங்கும் கதிர் குலுங்கக் காட்சியளிக்கிறாள். காற்றில் ஓர் இனிய கார மணத்தைக் கலந்து கொண்டிருக்கும் வெற்றிலைக் கொடிக்கால்கள் மனதைப் பரவசத்திலாழ்த்துகின்றன. மேட்டிலும் பள்ளத்திலும் அதிர்ந்து குலுங்கிக் கொண்டு வண்டி விரைந்து செல்கிறது. உவரியூர், ஆலந்தலை, மணப்பாடு, திருச்செந்தூர் எல்லாம் கடந்து சாஹுபுரத்தில் எழும்பும் பெரிய தொழிற்சாலைக் காலனியருகில் சற்றே நிற்கின்றனர். பின்னர், பதினோரு மணிக்கெல்லாம் ஆத்தூர் வந்துவிட்டார்கள். தாமிரபருணியின் குளிர்ந்த நீர்க்கரை தென்னஞ்சோலைகள்... பின்னர் பரந்த ஏரி... ஆத்தூர் ஏரி. ஏரிக்கரை வழியே வண்டி செல்கிறது. தூத்துக்குடி எட்டிப் பிடிக்கும் தொலைவாகி விட்டது! என்ன இனிமை! தூத்துக்குடியில் நசரேனைப் பார்க்க முடிந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்! லில்லிப் பெண்ணைப் பற்றியும் நினைத்துப் பார்க்கிறான். பண்டியலுக்குக் கோயமுத்தூர் போவதாக எழுதிவிட்டாள். அவனுக்கு நினைக்க வியப்பாக இருக்கிறது. அவனோடு கடற்கரை மணலில் பொத்திப்பூச்சி பிடித்து விளையாடிய தங்கச்சி, பாறை இடுக்குகளில் அழகிய சிறு பாரக்குட்டி, மீன்களைப் பிடித்து விளையாடிய தங்கச்சி, இன்று சேற்றிலிருந்து தலைதூக்கும் லில்லி மலராக ‘கன்யாஸ்திரியாவேன்’ என்று சொல்கிறாள்! அந்தக் கடற்கரை முழுவதும் அவளைப் போல் ஒரு பெண்ணும் இருப்பதாகத் தெரியவில்லை. அவளைப் போன்ற பல பெண்களும் ஆணொருவன் வந்து தொட மாட்டானா என்று ஏங்கும் சதைப் பசியுடன் மதர்த்து நிற்பவர்களாகவே கண்களுக்குப் படுகின்றனர். லில்லி, பாவக்கறை படக்கூடாது என்று ஒதுங்கி நிற்கிறாள் - அவள் பெரிய படிப்புப் படித்து, டீச்சராக - கன்னியாக வருவாள்! தூத்துக்குடி நகரின் சந்தடியும் கூட்டமும் - பாரவண்டிகளின் நெரிசலும், அவர்களைச் சூழ்ந்து கொள்கின்றன. விண்ணை நோக்கி உயர்ந்த மாதா கோயில்களின் வெண்மையான குரிசுத்தூபங்கள் - உடல் சிலிர்க்கச் செய்கின்றன. கடைத் தெருவில் மிட்டாய் பழங்கள், பொரிகடலைக் குவியல்கள் எல்லாம் அவனுக்கும் இறங்கிவிடும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. வண்ண வண்ணங்களாக ஆடையணிகள், பளபளக்கும் பாத்திரம் பண்டங்கள் என்று நகரத்துக் கடைவீதி புதுமைக் கவர்ச்சிகளாக விரிந்திருக்கின்றன. ஆண்டகையைப் பார்க்கச் செல்வதால் பெஞ்ஜமின் திராட்சை, ஆரஞ்சு, ஆப்பிள் என்று பழங்கள் வாங்கிக் கொள்கிறான். பிறகு வண்டி செல்கிறது. மாளிகை முகப்பில் போசன்வில்லா சுமைதாங்கவொண்ணாக் குவியல்களாக மலர்ப் பொதிகளைச் சுற்றுச் சுவரில் வைத்து இளைப்பாறுகிறது. ‘இன்ஸ்பெக்டர்’ முதலில் இறங்கினார். பிறகு பெஞ்ஜமின் இறங்கி வந்து, “நீங்கல்லாம் வெளியே இருங்க. நாங்க முதல்ல உள்ளே போய் ஆண்டகை இருக்கிறாரா, பேச வருவாராண்ணு பாத்துச் சொல்லுறம். பொறவு வரலாம்” என்று கூறிவிட்டுப் பழங்களுடன் உள்ளே செல்கிறான். அவர்கள் வண்டியிலிருந்து ஒவ்வொருவராக இறங்குகையில் இன்ஸ்பெக்டரும் உள்ளே செல்கிறார். பத்து நிமிடங்கள் ஆவலும் துடிப்புமாக அவர்கள் பொறுத்துக் கொண்டு வாயிலில் நிற்கின்றனர். அதற்கு மேல் பொறுக்க இயலாமல் மரியான் பூங்கொடிகள் அழகு செய்யும் வாயிலைக் கடந்து வராந்தாவின் மீது ஏறி நிற்கிறான். உள்ளே யாரோ பேசும் குரல் கேட்கிறது. ஆங்கிலத்தில் பேசுகின்றனர். வெளி ஜன்னல் வழியாக அலமாரிகளில் தோல் கெட்டி அட்டை போட்டுக் கில்ட் எழுத்துகள் பொறிக்கப் பெற்ற பெரிய புத்தகங்கள் தெரிகின்றன. சம்மனசுகள் மாலையேந்தி, மரியம்மையின் இளம்பாலனுக்கு அழகு செய்யும் சிறு வடிவம் கண்ணாடிப் பெட்டியில் மிக அழகாக இருக்கிறது. அந்தப் பெட்டிக்குள் சிறு ஜோதி ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. அந்த மாதிரி ஒரு சிறு விளக்குப் போடவேண்டும் என்று அவனுடைய அப்பச்சிக்கு ஆசை. இன்ஸ்பெக்டர் சாயபு என்று பெஞ்ஜமின் சொன்னான். அவர் ‘குட்மார்னிங் ஃபாதர்’ என்று சொல்வது செவிகளில் விழுகிறது. இப்போதுதான் வந்திருக்கிறாரோ? பெஞ்ஜமின் வாயிற்படியில் வந்து அவர்களைப் பார்த்து, ஆண்டகை இருப்பதாகவும், தான் அழைக்கும் வரையிலும் வரவேண்டும் என்றும் சாடையால் சொல்லிவிட்டுப் போகிறான். கதவுக்கப்பால் இன்ஸ்பெக்டர் பேசுவது செவிகளில் விழுகிறது. “உங்களுக்கு... விஷயம் தெரிஞ்சிருக்கும். கன்னிபுரம் ஊரிலேந்து ரெண்டாள் வந்திருக்காங்க. ஃபாதர்கிட்ட தொழில்பத்தியும் கோயில் மகமை பத்தியும் பேசணுமின்னு வந்திருக்காங்க. வெளியே நிக்கிறாங்க. வரச் சொல்லட்டுமா?...” “எதுக்குக் கூட்டிட்டு வந்தீர்? அவங்களிடம் நான் பேச என்ன இருக்கு? அதெல்லாம் பங்குக்குரு என்ன சொல்றாரோ அப்படித்தான்...” மரியானுக்கு அவர் பேசுவது நன்றாகப் புரியவில்லை. எனினும் சாதகமில்லை என்று புரிந்து அதிர்ந்து குலுங்குகிறான். பெஞ்ஜமின் வாயிற்படிக்கப்பாலே நிற்கிறான். யாரும் பேசவில்லை. மௌனத்திரை கலைகிறது. ‘நீர் போகலாம்!...’ “ஃபாதர்... நீங்க அப்படிச் சொல்லக் கூடாது. விசாரியாமல்...” “எல்லாம் விசாரித்தாகி விட்டது, போகலாம்!” இன்ஸ்பெக்டர் மிடுக்கு நடையுடன் திரும்பி வருகிறார். முகம் செவ செவ என்றிருக்கிறது. பெஞ்ஜமினை இன்ஸ்பெக்டர் ஏறிட்டுப் பார்க்கவில்லை. பெஞ்ஜமினோ அவருக்கு முன் எல்லோரையும் வண்டியில் சென்று ஏறிக் கொள்ளச் சைகை காட்டுகிறான். இப்போது இன்ஸ்பெக்டர் டிரைவருக்கு அருகில் அமருகிறார். பெஞ்ஜமின் இவர்களுடன் பின்புறம் ஏறுகிறான். “விடப்பா வித்யாவதிக்கு!” என்று இன்ஸ்பெக்டர் ஆத்திரமாகப் பணிக்கிறார். “ஸார் ரொம்ப மன்னிக்கணும். உங்களுக்கு ரொம்ப ரொம்ப சிரமம் கொடுத்திட்டம்...” “இவனெல்லாம் பிஷப்பா? மனுஷனை மனுஷன்னு மதிக்கும் மரியாதை கூட இல்லாத இவனெல்லாம் மேய்ப்பன்களாம்!” போலீஸ் அதிகாரிக்கு ஒரு அவமானமான நடப்பல்லவா இது? ஒருகால் இவர்கள் போலீஸ் அதிகாரியைக் கூட்டிச் சென்றதால்தான் ஆண்டகைக்குக் கோபம் வந்து விட்டதோ? ஆனால் இன்ஸ்பெக்டரையே மறுத்துத் திருப்பி அனுப்பிவிட்ட ஆண்டகை, அவர்களை மதித்துப் பார்க்கவே அனுமதித்திருப்பாரோ? வண்டி திரும்பிப் போகிறது. பெஞ்ஜமின் பழங்களை முன்கூட்டியே பங்களாவின் உள்ளே கொண்டு வைத்து விட்டான். ஏமாற்றம்...! பிச்சமுத்துப்பாட்டா வண்டியிலிருந்து இறங்காமலே உட்கார்ந்தபடியே ஒரு உறக்கத்தில் இருந்திருக்கிறார். சட்டென்று அதிர்ந்தாற்போல் நிமிர்ந்து பார்க்கிறார். வண்டி செல்கிறது. நெருங்கிக் கொண்டு பெஞ்ஜமின்... எட்வினோ ஆண்டகைக்குமுன் தனது மொழிவன்மையை எவ்வாறு காட்டிக் கொள்ள வேண்டுமென்று யோசனை செய்து கொண்டிருந்தான். இப்போது ஒன்றும் புரியவில்லை. ஒரு குப்பி அருந்திவிட்டு வந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. “என்னம்ப்பு? ஆண்டகையிட்டக் கூட்டிப் போறோமிண்டு சொல்லிற்று மரிச்சுப் போறீங்க? ஆண்டகை தூத்துக்குடியில இல்லியா? வடக்கன்குளம், எங்கியானும் போயிருக்கா?” என்று பிச்சமுத்துப்பாட்டா கேட்கிறார். பெஞ்ஜமின் காதில் விழாததுபோல் முன்பக்கம் இன்ஸ்பெக்டரையே பார்க்கிறான். “ஆளுங்களைப் பாக்கண்டாமிண்டு ஆண்டகை சொல்லிட்டாப்பல...” என்று மரியான் முணமுணக்கிறான். “கிறீஸ்துநாதருக்கு இவங்கல்லாம் உண்மையாம்படி நடக்கிறானுவளா?” என்று கேட்கிறார் பாட்டா. “ஸியா, (தாத்தா) இவனுவல்லாம் கிறீஸ்து நாதர்னு சொல்லிட்டு நம்ம நெத்தத்தை உறிஞ்சிறானுவ. நம்மகிட்ட நாயம் இருக்கிறதால பாத்துப் பேச பயமாயிருக்கு...” என்று எட்வின் பொங்குகிறான். திருச்செந்தூர் வரும் வரையிலும் வண்டி நிற்கவில்லை. திருச்செந்தூரில் ஓட்டலில் இறங்கி, இன்ஸ்பெக்டரை ஓட்டலுக்குச் சாப்பிட அழைத்துச் செல்கின்றனர். “இங்கே வரும்போது நான் சமரசமாகப் போக பிஷப் வழி காட்டுவார்னு நினைச்சே. ஆளுங்களைப் பார்க்க மாட்டேன்னு சொல்லலாமா அவரு?...” “ஸார், எங்களால உங்களுக்கு இப்பேர்க்கொத்த கொறவு வந்தது. மன்னிக்கணும். நானும் நம்பிக்கையோடு இருந்தேன். பத்தைம்பது ரூவா செலவுபண்ணிப் போடுறம். அது பெரிசல்ல. ஆளுகளை நேராகக் கண்டு, ‘அது சவுரியமில்லேப்பா. இப்போதைக்குக் கட்டுங்க’ன்னு சொல்லியிருந்தாக்கூடப் பரவாயில்ல...” பெஞ்ஜமின் மிக வருந்துகிறான். “போவட்டும்லே. இவுரு மயிறு, பாக்காட்ட போறாரு? நம்மக்க ஆண்டவன், அங்கே இருக்காரு. அவருட வலிமைய நாம நெதமும் பாக்குறம்! நம்மக்க நியாயத்தையும் அந்தரங்க சுத்தியையும் நிதம் நிதம் சோதனைக்கு வய்க்கிறம். அதுனால, இவெ பாக்க மாட்டேன்னிட்டா, சவண்டு போயிர மாட்டம்...” இனிய பயணம், கனவுகள், எல்லாம் பயனற்றவையாகி விட்டன. அந்த நிமிஷமே குதித்துச் சென்று அவர்களை அவமதித்த அந்த அங்கிக்காரனைக் கீழே தள்ளித் தாக்குவதற்குப் போதுமான பொங்கெழுச்சியால் அவர்கள் கொதித்தாலும், பெஞ்ஜமினின் நிதானமான அமைதியான பேச்சினாலும் நடப்பாலும் அவர்கள் அடங்கியிருக்கின்றனர். “என்னால் உங்களுக்கு எதுவும் செய்வதற்கு இல்லையேன்னு வருத்தமாயிருக்கு. நீங்க ஆனா தைரியமாயிருங்க. நியாயத்துக்கு விரோதமாக எதுவும் நடக்காதபடி நான் பார்க்கிறேன்...” என்று இன்ஸ்பெக்டர் விடைபெற்றுக் கொள்கிறார். இன்ஸ்பெக்டர் சென்றதும் கட்டவிழ்ந்த உணர்ச்சிகள் வசைச் சொற்கலாகப் பொலபொலக்கின்றன. பெஞ்ஜமின் அறிவுரை மொழிகிறான். “இப்பம் இதுக்கு நாம கோவப்பட்டாப்பல நடக்கக் கூடாது. ஏண்ணாக்க, சாமி இது சமயம் பாத்துத்தான் ஏதேனும் திரியா வரம் செய்யும். ஆனாக்க ஒண்ணுமட்டும் வெட்டிப்பாய் வெச்சுக்கும். ஆரும் அவுராதமும் கெட்டாண்டாம். துவியும் கொடுக்காண்டாம். ஆனா அமைச்சலா நடந்துக்கணும். நான் இது விசயமா பாளையங்கோட்டை, ஸ்ரீவைகுண்டம் எல்லா எடத்திலும் வக்கீல்மாரைக் கலந்து புத்தி விசாரிக்கணுமிண்டிருக்கே. வுட்டுப் போட மாட்டம். இங்கியும் ஆலந்தலை, மணப்பாடு, கூத்தங்குளி, அமலி எல்லாக் கரைக்காரரையும் சேத்து ஒருமிச்சு இந்த முடிவுக்கு வாரக்காட்டணும். சும்மா அவுசரப்பட்டு வாய்க்கி வந்ததைப் பேசிடறதும், அந்தந்த நேரத்தில் தோணினதைச் செஞ்சிடறதுமா இருக்கம். ஒருமிச்சி ஒண்ணா எதுவும் செய்ய ஏலாம ஆயிப் போவு. இப்பம் நீங்கள்லாம் எதுவும் நடபடியானாப்பல காட்டிக்காண்டாம். போயி அவுங்கவுங்க சோலியப் பாருங்க...” கோயில் முன் ஜீப்பை விட்டு இறங்குகையில் பொழுது சாய்ந்து கொண்டிருக்கிறது. மரியான் காரியம் முடிந்து வரும்போது பண்டியலுக்குத் துணி வாங்கி வரவேண்டுமென்று செயமணியிடம் கேட்டு நூறு ரூபாய் பெற்று வந்திருந்தான். எதுவும் வாங்கவில்லை. ஆரஞ்சியும் திராட்சையும் வாங்கி, முகம் கொடுக்க மறுத்த ‘ஆண்டகை’க்கு வைத்துவிட்டு வந்தார்கள்! ஒரு அரையணா மிட்டாய் கூட வாங்கவில்லை. நூறு ரூபாய் பணம் பிரித்து வெட்டி செலவு செய்திருக்கின்றனர் என்று அத்தனை பேரும் அவர்கள் மீது பாய்ந்தாலும் ஆச்சரியமில்லை! பிச்சைமுத்துவும் எட்வினும் நேராக அமலோற்பவத்தின் வீட்டுக்குப் பின்னாலுள்ள குடிசைக்குச் செல்கின்றனர். ஏமாற்றத்தைத் தவிர்க்க மூக்கு முட்டப் போட்டுவிட்டு வருவார்கள். பெஞ்சமின் லயனலிடம் பேசியபடி பணத்தை எண்ணிக் கொடுத்துவிட்டு வீட்டுக்கு நடக்கிறான். பீற்றர் அவனருகில் ஓடிவந்து, “அண்ணே படய்க்கம் வாங்கியாந்திருக்கியா?” என்று கேட்கிறான். “இப்பம் வாலேய் வாங்கித் தாரேன்?...” “தூத்துக்குடிலேந்து வாங்கிச்சு வார இல்ல? இந்தக் கடை படய்க்கம் நெல்லா இல்ல. வாணாம்...” மரியான் அவனை வெறித்துப் பார்க்கிறான். பிறகு மனம் இளகிப் போகிறான். “போவட்டும்லே. ஆலந்தலை மாமன் மவ பறவாசிப்புக்குப் போவையில எல்லாம் வாங்கி வாரம்...” கோயில் தூபியின் மாடத்திலிருந்து புறாக்கள் கீழிறங்கி வருகின்றன. லயனலின் இளைய மகள், அவள் இறைத்த தானிய மணிகளை அவை கொத்துவதைப் பார்த்துக் கொண்டு நிற்கிறாள். மரியானும் எந்தவித எண்ணமுமின்றி அதையே பார்த்தவாறு வீட்டை மறந்து நிற்கிறான். அலைவாய்க் கரையில் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
|