உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
அத்தியாயம் - 16 ஆழக்கடலினின்று அமுதகலசமாய்ச் சந்திரன் எழும்பிய பொங்கிவருகிறான். இந்நேரம் கடலுக்கு யாரும் வரவில்லை; நாளைக்கு நாயராட்சை (ஞாயிற்றுக்கிழமை) என்று கடலின் மீது படிந்த நிலவின் கதிர்கள் அவன் செவிகளோடு மொழிகின்றன. கரை மணலில் யார் யாரோ பேசிச் செல்கின்றனர். இளங்குரல்களின் ஒலிகள் செவிகளில் விழுகின்றன. ஆனால்... ‘அண்ணே, படய்க்கம் வாங்கத் துட்டு தாண்ணே...’ என்று கேட்டு வந்த இளங்குரல் கடைசியாகிவிட்டது. இனி அவன் குரல் ஒலிக்காது... இனி அவன் பேச்சு ஒலிப்பூக்களாக இக்கரையில் ஒலிக்காது... நெஞ்சு வெடிக்கப் பெண்பிள்ளை அழுவது போல் அழுதாலேனும் துயரம் கரையுமோ என்று பார்க்கிறான். தொழிலுக்குப் போய்வந்த பின்னர், வீட்டுக்குள் இருக்கப் பிடிக்கவில்லை. ஏலியாவின் வீட்டுப் பக்கமே தடை கட்டினாற் போல் அந்த நினைவுகள் கவ்விக் கொள்கின்றன. செபஸ்தி நாடார் கடை வாசலில் பீடிகுடித்துக் கொண்டு வேறுபலர் பேசுவதைக் கேட்கப் பொருந்தவில்லை. கோயிலின் பின்புறச் சுவரில் சாய்ந்து நின்று, குடித்துவிட்டு வருபவரைக் கண்டு கேலி பேசவோ, ஏசவோ மனம் ஒன்றவில்லை. கடலின் பக்கத்தில்தான் சிறிது ஆறுதலாகத் தோன்றுகிறது. அது அவன் கால்களை வந்து அலப்புகையில், ‘பீற்றர் ஊமையாப் போனதற்கு நீ காரணமில்லை; விசனிக்காதே’ என்று தேறுதல் கூறுவது போல் இருக்கிறது. என்றாலும்... அன்று அவன் ஏலியாவை நாடிச் சென்றிருக்கவில்லையெனின் பீற்றர் அங்கு வந்திருக்க மாட்டான். அவன் அங்கு வந்திருக்கவில்லையெனின் ஏலி சீடை கொடுத்திருக்க மாட்டாள். அவள் சீடை கொடுத்திருக்காவிட்டால், அவன் அடி படய்க்கத்தைச் சீடை என்ற நினைவில் வாய்க்குள் வீசிக் கொண்டிருக்க மாட்டான். அன்று அவன் கோயில் பக்கம் சென்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கலாம், லயனலின் ஜீப்பை ஐயன் பிறப்போடு பவனி எழுந்தருளச் செய்ய அலங்கரித்துக் கொண்டிருந்தார்கள். பாட்டுக் கேட்டுக் கொண்டு நின்றிருந்திருக்கலாம். கடந்த காலத்தை எவ்வாறு திருப்பி வைக்க இயலும்? பீற்றர் ஊமையாகிவிட்டான். நாக்கு எட்டுத் துண்டாகக் கிழிந்துவிட்டது. ஆனால் உயிர் பிழைத்து விட்டான். செபஸ்திதான் நாடார் குடிலில் கிறிந்துமஸ்ஸுக்காகத் தகப்பன் வீடு வந்திருந்த ஒரு இளம் டாக்டரைச் சைக்கிளின் பின்வைத்துக் கூட்டி வந்தான். ஜீப்பை ஜோடித்திருந்தார்கள். அது உதவவில்லை. அந்த டாக்டர், இவனைப் பார்த்துவிட்டு நாகர்கோயில் ஆசுபத்திரிக்குத் தூக்கிப் போனால்தான் எதேனும் செய்ய முடியும் என்றான். கன்னிபுரம் கடற்கரையில், கிறிஸ்து நாதர் பிறந்த அந்நாள் இரவு ‘பண்டியல்’ பீற்றரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்ற பின்னரே வந்திருக்கும். பெஞ்ஜமினும், அகுஸ்தீனும் டெயிலர் சூசையும், அந்நாள் செய்த உதவிகளை என்றுமே மறக்க இயலாது. எங்கோ சென்ற லாரியை நிறுத்தி, அதில்தான் பையனைக் கொண்டு சென்றார்கள். கிறிஸ்து நாதர் பிறந்த போது தொடங்கிய துன்பம் தவசு மாதத்தின் துக்க நாட்கள் அனைத்தும் துக்கமாகவே தொடர்ந்து சென்றது. ஆத்தா ஆஸ்பத்திரியோடு, பிள்ளையோடு இருந்தாள். ஆசையோடு வாங்கிய திருக்கை வலையை, நானூறு ரூபாய்க்கு விற்றான். ‘தங்காலம்’ ஓடிவிட்டது. கிறிஸ்து நாதர் எப்போது பிறக்கிறார், எப்போது மரிக்கிறார்? உண்மையில் கிறிந்து நாதர் நற்கருணையாக மாறி எல்லோருடைய உடலிலும் கலக்கிறாராம். சாரத்தை அருந்தும் குரு...சாமி, அவர்களுக்கு அபராதம் விதித்திருக்கிறார். பெஞ்ஜமின் தம்பிக்கு பிறந்த குழந்தை ஞானஸ்நானம் பெறவில்லை. ஊர் இரண்டு கட்சிகளாகப் பிரிந்து கிடக்கிறது. குடிமகன் உரிமை முதல், இரண்டுபட்டுவிட்டது. திருப்பலிப்பூசை தோறும் அபராதம் கட்ட வேண்டும் என்று சாமி சொல்கிறார். மனசில் விண்டுரைக்க முடியாத ஆற்றாமை அழுத்துகிறது. அவன் ஆஸ்பத்திரிக்கும் ஊருக்குமாக அலைந்து கொண்டிருந்த நாளில் அப்பன் சாளவலையை எடுத்துச் சென்று பாரில் போட்டுக் கிழித்துவிட்டார். நசரேன் ஒருநாள் நாகர்கோயில் ஆஸ்பத்திரியில் வந்து பார்த்தானாம். கன்னியாகுமரிப் பக்கம் தொழில் செய்வதாகவும், ‘நல்ல விருத்தி’ என்றும் சொல்லி ஆத்தாளிடம் செலவுக்கு ஐம்பது ரூபாய் பணமும் கொடுத்தானாம். கண்களில் கனிந்த முத்தைச் சுண்டி எறிகிறான் மரியான். இந்தத் தோழமை அன்புக்கு உவமை யேது? வலைகள் ஏதுமில்லாமல், கிடைத்ததில் பாதி எவ்வாறு கொண்டு வரமுடியும்? அறுபதுபங்கு மரச் சொந்தக்காரனுக்கு; பிறகு மிஞ்சியதிலும் பங்குதான் கிடைக்கும். இரண்டும் மூன்றும் கூலி வாங்கி அவன் எந்நாள் முன்னேறப் போகிறான்? அப்பன் இரண்டு, ஒன்று என்று கொண்டு வந்தால் குடிப்பதற்கே வைத்துக் கொள்கிறார். ஆத்தாளும் கூட முன்போல் மீன் வாங்கிக் கருவாட்டு வியாபாரம் செய்ய எல்லா நாட்களும் செல்வதில்லை. அப்பன் வாயில் வசை தவிர நற்சொல்லே பிறப்பதில்லை. அதனால் தானோ என்னவோ, கருத்தாக அப்பனுக்கு ஆத்தாளே சாராயம் வாங்கி வந்து வைத்து விடுகிறாள்; ஒருகால் அவளும் பாவிக்கிறாளோ என்று கூடத் தோன்றுகிறது அவனுக்கு. மேரியையும் செயமணியையும் நினைத்தால்தான் நெஞ்சு நைந்து போகிறது. எவ்வளவு பொறுமை! பன நார் கிழித்துக் கிழித்து விரல் தேயப் பெட்டியும் தட்டும் முடைந்து வாரத்துக்கு ஏழு எட்டு சம்பாதிக்கிறார்கள். அடுப்பில் அதனால்தான் பூனை தூங்கவில்லை. மலையாளத்திலிருந்து அல்பிசாத்தபடி வருத்தி, பால் நாடான் கைத்திறத்தில் சந்தத்துடன் உருவாகப் போகும் மரத்தைப் பற்றி கனவு கண்டான். வலைகளே இல்லாமல் கூலி மடியாக மாறும் நிலைமைக்கு வந்துவிட்டானே! முன்பு நசரேனின் மாமன் வந்து அழைத்தபோது இவனும் சென்றிருக்கலாம் என்று தோன்றுகிறது. வலைக்காரனாக ‘மிசின் போட்’டில் இருந்தால் அதில் ‘பாடு’ கிடைப்பது அதிகமல்லவா? புண்பட்ட நெஞ்சுக்கு இந்த எண்ணம் ஆறுதலாக இருக்கிறது. தூத்துக்குடிக்கோ வீரபாண்டிக்கோ சென்று அவன் அவ்வாறு ஒரு வலைக்காரனாகத் தொழில் தேடலாம். வீட்டிலே சோகம் கவிந்த சூழலை உருவாக்கியிருக்கும் ஊமைப் பையனையோ, ஆத்தாளையோ அப்பனையோ பார்க்க வேண்டாம். அவன் வீடு திரும்பி வந்து வாயில் முற்றத்தில் படுக்கிறான். நிலவு பாலாய்ப் பொழிகிறது. சித்திரைப் பௌர்ணமி. கோடைக்காற்று துவங்கும் காலம் வந்துவிடும். மேரி, தம்பிக்கு ஏனத்தில் சோற்றையும் ஆணத்தையும் மசித்து வாயில் ஊட்டி விடுகிறாள். துடிதுடிப்பாக இருந்த அந்தப் பையன், அடிபட்ட நாய்க்குட்டி போல் சுருண்டு ஆத்தாளின் அருகில் படுத்துக் கொள்கிறான். அவனுடைய வாழ்வு... இந்த ஊனத்துடன் எவ்வாறு செல்லப் போகிறது? சக்கிரியாஸின் தம்பி ஒரு பயல். அந்தக் கரையில் அரைப்பைத்தியமாகப் பேச்சு வராமல், உதடு தொங்க, உளறி உளறிப் பேசுவான். கடற்கரை நெடுகிலும் அந்தோணியார் பட்டத்தலையும் ராயப்பர் வாளியும், கோணல் உடம்புமாக அந்த அரைப் பைத்தியம் அலைவான். திடீரென்று ஒருநாள் வீட்டில் காலையில் அவனைக் காணவில்லை. மறுநாள் அலைகள் அவனை ஒதுக்கியிருந்ததைச் சிப்பி அரிக்கும் இசக்கிமுத்து கண்டுவந்து சொன்னான். அண்ணன் பெண்சாதியும், மற்றவர்களும் அவனை ஏசிப் பேசுவதும், சோறு போடவும் மனமின்றித் துன்புறுத்துவதும் காணச் சகியாமல் ஆத்தாளே அவன் இடுப்பில் கல்லைக்கட்டிக் கடலில் தள்ளிவிட்டாள் என்று கூடச் சொன்னார்கள். தாய்க்கும் கூடப் பாரமாகிவிடும் ஒரு அபாக்கியவானாக அப்படி இவனுமாகி விடுவானோ? அவனையுமறியாமல் வானைப் பார்த்துக் கொண்டு முற்றத்தில் கிடந்தவன் கண்களில் நீர் வழிந்திருக்கிறது. மேரிதான் அவனைத் தொட்டசைத்திருக்கிறாள். “அண்ணே, சோறுண்ணவாண்ணே... அண்ணே...?” அவள் கையைப் பற்றிக் கன்னத்தில் வைத்துக் கொள்கிறான். “அண்ணே... அண்ணே, ஏனளுகா...! நீரு கண்ணீருவுட்டா, எனக்கும் அழுவையா வரும்...” “இல்ல... இல்ல மேரி, தூள் விழுந்திற்று” என்று சொல்லுகையில் குரல் நெகிழ்கிறது. “பொய் சொல்லுறீம். அண்ணே, நீங்க சிரிச்சிப் பேச இல்லேண்டா, எப்படியோ இருக்கி. எங்களுக்கும் வூடு கடுத்தமாப் போச்சி...” “மேரி நாளைக்கு நான் இந்தக் கரைய வுட்டு வேற கரைக்குத் தொழில் செய்ய போவலாமிண்டிருக்யே... நீ யாரிட்டயும் சொல்லாத...” “ஏண்ணே...? நீங்களும் வீட்டுக்கு வார இல்லேன்னா, நாங்கென்ன பண்ணுவம்...?” “எம் மனசு முள்ளாப் புடுங்கிட்டிருக்கி. நா சுத்தவாளனாயிருக்யணுமிண்டு நினச்சாலும் இருக்க முடியாம தோழ்சவாளனாயிட்டம்... தொழில் சரியில்ல; நீ ஆத்தாகிட்ட இப்பம் ஒண்ணுஞ் சொல்லாதே. மேரிப்பொண்ணு, நான் எப்பிடியும் மரம் சொந்தத்துக்கு வாங்கணும். வலை பிரயணும். நாம் போறம். பின்னக்க ஒருநா வருவே...” குசினிக்குச் சென்று சோறுண்ணுகிறான். மீண்டும் வெளிமுற்றத்தில் பாயை விரித்துத் திறந்த வெளியில் படுக்கிறான். சர்க்காரு கடனுக்குப் படகு வாங்கிக் கொடுத்தால் வாங்கித் தவணை கட்டிக் கொள்ளலாம். உடலில் வலுவும் நம்பிக்கையும் இருக்கின்றன. தொழில் செய்வான்; உழைப்பான்... யாரோ முற்றத்துக் கதவைத் தள்ளிக் கொண்டு வரும் அரவம்... “மச்சா...!” விருட்டென்று மரியான் எழுந்து உட்காருகிறான். “நசரேனா...? மாப்ளே!” “மேரி...? விளக்கெடுத்திட்டுவா புள்ள...” நண்பனைக் கண்டதும் நெஞ்சம் உருகுகிறான். அவன் வாசற்படியில் நிற்கிறான். மேரி விளக்கைத் தூண்டுகிறாள். விளக்கொளியில் ஆத்தாதான் முதலில் எழுந்து அவனைப் பார்க்கிறாள். “தோத்திரம் மாமி! மாமா - தோத்திரம் சொல்லுதேன்...” “வா மக்கா” என்று குரல் கொடுப்பவளுக்குக் குரல் நெகிழ்ந்து போகிறது. மேலே சொல் பிரியவில்லை. “மாமி, எப்படி... இம்மாட்டு அடையாளம் தெரியாம போயிட்டீரு?... பீற்றர் இப்ப எப்படியிருக்யா? சோறு தண்ணீ சாப்புடறானா?...” “மயிச்சி மயிச்சிக் குடுக்கா. பேச்சுதான் அடச்சிப் போச்சு...” “அட, பேச்சுப் போனா மயிருபோச்சி. உயிர் பிளச்சது பாரும்? மாமா எப்படி இருக்காரு? தொழிலுக்குப் போறாரில்ல...” அப்பன் குரல் கேட்டுக் கட்டிலில் எழுந்து உட்காருகிறார். “நசரேனா?... “தோத்திரம் மாமா...” “தொழில் எப்படியிருக்கி?...” “பரவாயில்ல இப்பம் நாலு பேராத்தான் சேந்திருக்கம். விருத்தியாவுமிண்ணுதான் தோணுது. இன்னொரு மிசின் போட்டும் இது மாதரியே பங்காளியா நாலஞ்சு பேரு சேர்ந்தெடுத்துத் தொழில் பண்ணலாமிண்டு மாம ஜானையும் வாரக் காட்டிட்டிருக்யா... மாமா, கலியாணம் கூடி, பறவாசிப்பெல்லாமாயிற்று...” ஒரு குற்ற உணர்வோடு அவன் இதைச் சொல்வது போலிருக்கிறது. சில நிமிடங்கள் கடலலைகளின் ஓசை மட்டுமே கேட்கிறது. “ஆமா...?” என்று மௌனத்தை மரியான் கலைக்கிறான். “வர்ற பொதங்கிளமை கலியாணம் அங்கியே எல்லாரும் போயிடலாமிண்டிருக்கம். லில்லிப் பொண்ணையும் சீமோனையும் தூத்துக்குடிலியே ஸ்கூல்ல சேர்த்துப் படிக்கப் போறதாவும் வீட்டக் காலிபண்ணிற்றுப் போயிடலாமிண்ணு நினச்சிருக்கம். மரத்தை விட்டுப் போட்டுப் போறம் மச்சா, நம்ம குடும்பங்களுக்குள்ள தொடுப்பு விட்டுப் போயிரப் படாதுண்டு எனக்கு... நீ ஒரு வெல போட்டு எடுத்துக்க.” “மாப்ள...!” “நீங்கள்லாம் கலியாணத்துக்கு வரணும். மாமி, உங்கக்க புள்ளயாட்டம் இங்கே இருந்தவே நா...” ஆத்தா கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறாள். அலைவாய்க் கரையில் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
|