உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
அத்தியாயம் - 17 நசரேனுக்குத் தூத்துக்குடியில் கல்யாணம். ஓலை வாசிப்பு, நிச்சயதார்த்தம் பெண் - பிள்ளை வீட்டார் இருவர் சார்புக்கும் தூத்துக்குடியில் நிகழ்ந்துவிட்டது. கன்னிபுரத்தில் நசரேன் வந்திருக்கிறான்; மாப்பிள்ளை சவரம் செய்து கொள்ளும் வைபவம். மணமகனை மணையில் அமர்த்தி, ‘குடிமகன்’ வந்து சவரம் செய்யப் போகிறான். கன்னிபுரத்தில் எட்டுக் குடிமகன் குடும்பங்கள் உண்டு. பரவரின் வாழ்விலும், சாவிலும் வந்து பணி செய்யும் உரிமையுள்ள குடிமகன் பரம்பரையாக ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் உண்டு. குழந்தை மண்ணுலகில் விழுவதற்கு மருத்துவம் பார்க்கவே இவர்கள் பெண்மக்கள் தாம் வருவார்கள். திருமணச் சடங்கில் இவர்கள் பங்கு மிக முக்கியமானதாகும். மேளம் வாசிப்பதும் குடை சுருட்டி, குடை பாவாடை ஆகிய சின்னங்களைத் தூக்கிக் கொண்டு ஊர்வலங்களில் முன் செல்வதும் குடிமகன் உரிமைகள்தாம். இறுதிச் சடங்கிலும் இவன் இன்றியமையாத பணியை ஆற்றுகிறான். ஒரு பரவனை மண்ணுக்குள் அடக்கம் செய்ய, மண்ணை அகழ்ந்து குழியெடுப்பவன் குடிமகன் தான். நசரேன் குடும்பத்தினருக்கு இந்த ஊழியங்களைச் செய்யும் உரிமையைச் சக்கிரியாவின் குடும்பத்தினர் பெற்றிருந்தனர். வழிவழியாக வந்த இந்தத் தொடர்பு, கோயில் தெறிப்புக் குத்தகை காரணமாக ஒரு சங்கடமான நிலையில் வந்து முடிந்திருக்கிறது. நசரேனும் ஜானும், மரியான், பெஞ்ஜமின் ஆகியோரைப் போல் கோயில் மகிமையைக் கட்டாமல் எதிர்க் கட்சிக்காரர்களாக இருந்ததால், அவர்களுக்குக் கோயில் ஆணையை மீறி ஊழியம் செய்ய அவன் வரவில்லை. சாமி, இக்குடிமகன்மாரைப் பிரித்து விட்டால், எதிர்க்கட்சி அமுங்கி விடுமென்று அவர்களை அழைத்து இவ்வாணை பிறப்பித்ததை நசரேனோ, மரியானோ அறியார். ஆனால், இந்தச் சடங்கில், குடிமகனுக்கு வரக்கூடிய வரிசைகள் குறைந்ததல்லவே? சக்க்ரியா வரவில்லையானால் போகிறான், நான் வருகிறேன் என்று சவரப்பெட்டியை எடுத்துக் கொண்டு இசக்கிமுத்து வந்து விடுகிறான். வழக்கமாக இந்தச் சடங்குக் கோலாகலத்துக்கு ஊரைக்கூட்டும் அளவில் செய்தி பரப்புவதையே அவர்கள் தாம் செய்வார்கள். நசரேனின் வீட்டு முற்றத்தில் மணைபோட்டு, கடலைப் பார்த்து அவனை அமர்த்தி இருக்கின்றனர். குடிமகனுக்கும் புதிய வேட்டி போன்ற சிறப்புகள் உண்டு. பெண் வீட்டைச் சேர்ந்த இளைஞர், மைத்துனர்மார் இதற்கென்றே காரைப் போட்டுக் கொண்டு வந்து கூடியிருக்கின்றனர். நசரேனின் சோதரி, ரோசிதா, பெஞ்ஜமின் மனைவி, மேரி, செயமணி என்று இளவயசுப் பெண்கள் இங்கே வேடிக்கைக்கும் கேலிக்கும் வந்திருக்கின்றனர். பிச்சமுத்துப்பாட்டாவும், குருஸ் தாத்தாவும் முதியவர்களாக வந்து குந்திவிட்டனர். ஒரு பெரிய வெள்ளிக் கும்பாவைச் சந்தனத்துடன் கொண்டு வந்து ரோசிதா வைக்கிறாள். மாப்பிள்ளை மணைக்கருகில், இசக்கிமுத்து, தன் கடையைப் பரப்புகிறான். கத்தியைத் தீட்டுகிறான். சோப்பைக் குழைத்து அவன் கன்னத்தில் தடவிவிட்டு, கத்தியால் ஓர் இழுப்பு இழுத்துவிட்டுக் கீழே வைக்கிறான். உடனே மாமன் மகன் தோமை, பெண்ணின் அண்ணன், இரண்டு வெள்ளி ரூபாய்களை எடுத்து முதலில் வெள்ளிக் கும்பாவில் போடுகிறான். மாப்பிள்ளையைச் சேர்ந்தவர்கள் தாங்கள் மேலென்று காட்டிக் கொள்ள வேண்டாமா? நசரேனின் சிற்றப்பன் மகன் ஜார்ஜ் உடனே இரண்டு ரூபாய் நோட்டையும் மேல் ஒரு ரூபாய் நோட்டையும் சபைக்குக் காட்டிவிட்டுக் கிண்ணத்தினருகில் வைக்கிறான். உடனே பிள்ளை வீட்டான் கொடையில் பின் தங்குவானா? பிள்ளை வீட்டின் சார்பில் ஐசக்கு மூன்றரை என்று அதிகமாக்குகிறான். சே, எட்டணா என்ன? சில்க் சட்டையும் தங்கக்கடியாரமுமாக வந்திருக்கும் பெண்ணின் தாய்வழி மாமன்மகன் ஓர் ஐந்து ரூபாய் நோட்டெடுத்து வைக்கிறான். “பெரிய இவுரு, அஞ்சுரூவா நோட்டு வைக்கான்!” என்று ஐந்தோடு ஒரு குட்டியை எட்வின் சேர்க்க, மரியான் ஆறு ரூபாயாக வைக்கிறான். “லே, நாங்க கொடைக் குடும்பம்?...” என்று பெண்ணின் சின்னாத்தா மகன் அம்புரோஸ், பத்து ரூபாய் நோட்டெடுத்து வைக்கிறான். கூச்சலும் கோஷமும் சிரிப்பும் கைத்தட்டலுமாக முற்றம் கலகலக்கிறது. நசரேன் கையில் போட்டிருக்கும் முக்கால் பவுன் மோதிரத்தையே கழற்றிச் சந்தனக் கும்பாவில் போட்டு, இந்தப் போட்டியை முடித்து வைக்கிறான். இந்தச் சளைக்காத போட்டிக் கொடை, இசக்கிமுத்துவின் வாயெல்லாம் பல்லாக மலரச் செய்கிறது. மாப்பிள்ளைப் பையனுக்குச் சொகுசாக மீசையை அழகுபடுத்திச் சவரத்தை முடிக்கிறான். விருந்தினர் அனைவருக்கும் இலை போட்டுப் பழமும் இட்டிலியும் பணியமும் கொண்டு வந்து இளம் பெண்டிர் உபசரிக்கின்றனர். இசக்கிமுத்து, பலகாரம் உண்டு, மோதிரமும், முப்பது ரூபாய் பணமும் புதிய வேட்டியும் தலைச்சுற்றுமாகத் தன் குடிலுக்குத் திரும்புகிறான். ஏலியாவின் குடிலைத் தாண்டி அவன் செல்கையில், வழியில் சக்கிரியாவின் தலைமையில் ஏழெட்டுப் பேர் இவனை எதிர்த்து வழி மறிக்கின்றனர். “வையிலே கீழே, எல்லா வரிசையும்? நாய்மவெ. எங்க வளமைக்கார வீட்ட வரிசை வாங்கியார? எம்புட்டு? மோதரம், தலைக்கட்டு...” சக்கிரியா பனை ஏறுவான். குடிமகன் குடுபங்களுக்கே தலைவன் போன்ற கர்வம் உடையவன். திரணையும் கரணையுமாகத் தசைகள் இறுகிய வாட்ட சாட்டமான ஆள். இசக்கியோ வலுவில்லாதவன். அச்சத்துடன் பணத்தையும் தலைக்கட்டு வேட்டியையும் எடுத்துக் கொடுத்து விடுகிறான். ஆனால் மோதிரம்... அதை எப்படிக் கொடுப்பான்? “மரியாதியா மோதிரத்தையும் களட்டி வையி. இந்தா, சவரத்துக்குக் கூலி ஒரு ரூபா... எடுத்திட்டுப் போ...” ஒற்றை ரூபாய்த்தாளைப் பறக்க விடுகிறான் சக்கிரியா. மோதிரத்தைக் கொடுக்கக் கூடாதென்று இசக்கி, தன் மகன் பச்சையைக் கூவி அழைக்கிறான். “லே பச்சேய்...!” பச்சைக்குப் பதினாறு வயசு திகையவில்லை. கச்சலாக இருப்பான். ஆனால் இரும்பு உடல். கையால் ஒரு பிடி பற்றினால் எலும்பு நொறுங்கிவிடும். கடலுக்குப் போகிறான். “மோதிரத்தைக் கீளவையின்னா ஏண்டா மவனெக் கூப்பிடுதே? ஒன்னக்க முளிய நோண்டிக் கடல்ல தள்ளிருவம்! எடுரா...?” சக்கிரியா இவன் மீது பாய்ந்து விட்டான். கை மோதிரத்தை அவன் உருவி எடுக்கு முன் அவன் கழுத்தை நெறிக்கப் பச்சை அவன் பின் வருகிறான். பற்களைக் கடித்துக் கொண்டு முகம் பயங்கரமாக மாற, அவன் கழுத்தை நெறிக்க வருகையில் சக்கிரியா தன் இரையை விட்டு உயிர்தப்பும் விலங்காக அவன் கைகளைத் தன் வலுவான கையால் அகற்றப் போராடுகிறான். இசக்கி மெல்ல அவன் உடலின் அழுத்தத்திலிருந்து விடுபட்டு வந்து, அவன் தலை முடியை உலுக்க, சக்கிரியா திமிறித் தலையாலேயே அவனை மோதித் தள்ளுகிறான். இந்தக் கைகலப்பு, பெண்களைக் கிலியிலாழ்த்தி விடுகிறது. “ஐயோ, கொல பண்ணுறானுவளே, கொல... கொல...” என்று ஒருத்தி கத்துகிறாள். யாரை யார் அடிக்கிறார்கள் என்பது புரியாமல் மணலில் கட்டிப் புரளுகின்றனர். தடிகள் வருகின்றன. இசக்கியின் மேலெல்லாம் காயம். பல்லால் கடித்தும், கீறியும் மோதியும் குருதி கசிந்திருக்கிறது. சக்கிரியாவின் பயல் மதியாஸ் எங்கிருந்தோ மிதப்புக் கட்டை ஒன்றைத் தூக்கி வந்து பச்சையின் மண்டையில் போடுகிறான். அது படாத இடம் பட்டு, அவன் மணலில் வேர் பறித்த இளமரமாகச் சாய்கிறான். தலையில் குருதி ஒழுகுகிறது. “ஐயோ கொல பண்ணிட்டானே...!” ஓலக்குரல் கடலோசையில் பட்டு எதிரொலிக்கிறது. திருமண மாப்பிள்ளை, வெந்நீரில் நீராடிப் புத்தாடை தரிக்கவில்லை. இங்கே ஒரு கொலை விழுந்து விட்டது. மோதிரம் ரத்தக் களறியில் குளித்து மணலில் உருண்டு கிடக்கிறது. வேட்டி, ரூபாய்நோட்டுகள் எல்லாமே மணலில் சிதறி வீழ்ந்து தமக்குரிய மதிப்பை இழந்து அவலமாகக் காட்சி தருகின்றன. மரியான் ஏலியின் குடிலைக் கடந்து சென்று பார்க்கிறான். நா மேலண்ணத்தில் ஒட்டிக் கொள்கிறது. அலைவாய்க் கரையில் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
|