உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
அத்தியாயம் - 19 அந்த ஞாயிற்றுக்கிழமையில் திருப்பலிப் பூசைக்கான மணி ‘ணாம்...ணாம்’ என்று முழங்குகையில் ஒரு உட்பொருள் பொதிந்திருப்பதாக மரியானுக்குத் தோன்றுகிறது. கடந்த மூன்று மாதங்களுக்குள் கோயில் கட்சியாருக்கும், இவர்களுக்குமிடையே மூண்ட பூசல்களில் பல கொலைகள் நிகழ்ந்து விட்டன. இவர்களை அதிகமாக உலுக்கிவிட்டது. பிச்சைமுத்துப் பாட்டாவைக் குத்திக் கொன்றுவிட்டு எவனோ ஓடி விட்டதும் அவர் தாமாகவே குத்திக் கொண்டார் என்று போலீசார் முடிவுகட்டக் கோயில் கட்சியாரும் சாமியாரும் சாட்சியம் கூறியதும்தான். பெஞ்ஜமின் பாளையங்கோட்டைக்கும் ஸ்ரீவைகுண்டத்துக்கும் ஓடி ஓடிப் போனான். வக்கீல் இராமாமிர்தத்திடம் கலந்து யோசனை செய்தான். அவர் கொடுத்த ஆதரவுடன் வேறு சிலரையும் பார்த்து யோசனை கேட்டான். அதன் பயனாக வரும் ஆண்டில், ஊரில் கலவரங்கள் மிகுதியாக இருப்பதாலும், அதன் காரணமாகக் கொலைகளும் நிகழ்ந்திருப்பதாலும், கோயிலுக்கான தெறிப்பு - குத்தகை ஏலம் விட்டால் நிலைமை மிக மோசமாகிவிடும் என்றும், எனவே நிறுத்தி வைக்க வேண்டுமென்றும் தாசில்தாரிடம் இருந்து சாமிக்கு ஓர் உத்தரவு பிறப்பிக்கப் பெற்றிருக்கிறது. திருப்பலிப் பூசையில் இதன் எதிரொலியை அவர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். எல்லோரும் அந்நாள் கோயிலுக்குச் செல்வதாக முதல் நாளிரவே முடிவு கட்டியிருந்ததால், அவன் எழுந்து கோயிலுக்குச் செல்ல தயாராகிறான். அப்பன் உடல் ரீதியாக மிகத் தளர்ந்து இருந்தாலும் வாழும் உறுதியும், முன்னேற்ற நம்பிக்கையும் அவரது உழைப்பில் தளர்ச்சி கொண்டு வந்து விடவில்லை. மரியானும், அவனைச் சேர்ந்த மற்ற இளைஞரும் வழக்கமாகக் கோயிலுக்குச் செல்வதுமில்லை; சென்றாலும் நெருங்கி நற்கருணை பெறுவதில்லை. ஆனால், அப்பனோ, மிகுந்த விசுவாசம் உடையவர். கோயிலுக்குச் சென்று நற்கருணை பெறாத ஞாயிற்றுக்கிழமைகள் அவருக்கு ஞாயிற்றுக் கிழமைகளாகவே தோன்றியதில்லை. அன்று கோயிலில் சிறப்பாகச் சுரூபங்கள் ஜோடிக்கப் பெற்றிருக்கின்றன. பூக்கள், செண்டு செண்டாகச் சுரூபங்களின் அருகில் மலர்ந்திருக்கின்றன. வண்ணக் காகிதத் தோரணங்கள் ஒரு மகிழ்ச்சிக்குரிய காரணத்தை விள்ளுகின்றன. வட்டக்காரரும், சரிகைச் சேலை காலோடு தலையாக இழைய அமலோற்பவமும், வானத்து நட்சத்திரங்களே வெண்பட்டுச் சேலையில் வந்து கண்களைப் பறிப்பது போன்று மின்னல் தேவதையாக ரூபிப் பெண்ணும் முன்வாயில் வழி வந்து உள்ளே சென்று முன் வரிசையில் நிற்கின்றனர். “கல்யாணம்; மாப்பிள பெரிய படிப்புப் படிச்சி தூத்துக்குடிக் கப்பலாபீசில இருக்கியா! சிப்பிகுளம். முப்பதாயிரம் சீதனம் குடுத்துக் கலியாணம்...” என்று மொடுதவத்தின் பெண்சாதி தெரஸாள் கதரினாளிடம் சொல்வது அப்பனின் செவிகளில் விழுகிறது. கண்முன் உலகம் இருண்டுவருவது போன்று ஒரு தோற்றம். “சிப்பிகுளமா?...” “ஆமா?... இந்த ஊரில் எவெ கட்டுவா? அது எச்சியான பொண்ணு!” என்று ஆத்தாள் தன் வெறுப்பை வெளியிடுகிறாள். அப்பன் எதிரே பீடத்தில் அன்னை கைகளில் பெம்மானைக் குழந்தையாக ஏந்தியிருப்பதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார். நெஞ்சுத் துயரம் இளகி விம்மலாக வருகிறது. சாமியின் வாசகங்கள், வருகை சங்கீதம், எதுவுமே அவருக்கு வேறு உணர்வைத் தரவில்லை. அவருடைய ஆசைகள், கனவுகள், ஒன்று கூட ஏன் நனவாக மலரவில்லை? ரூபிப்பெண்ணை மரியானுக்குக் கட்டி வைக்கும் ஆசைக் கனவும் சரிந்து மண்ணாகிவிட்டது. அவர் வீட்டில் ஒரு கல்யாணமும் நடக்கப் போவதில்லையா? ரூபிப்பெண்ணுக்குத் தூத்துக்குடி கப்பலாபீசில் வேலை செய்பவன் மாப்பிள்ளையாக வருகிறான். மரியானல்ல. சுருபமெல்லாம் ஜோடித்திருக்கிறார்கள். அறிக்கையை சாமி வாசித்ததும் எல்லா மணிகளும் முழுங்குகின்றன... ஓலை வாசிப்பு. முப்பதினாயிரம் சீதனம்... பக்கத்தில் எட்வின் அவர் தோளைத் தொட்டு இடிப்பது போல் ஒரு வசைச் சொலை உதிர்க்கிறான். கசமுசப்பு ஆங்காங்கு புகைகிறது. சாமியார் யார் யார் பேரெல்லாமோ வாசிக்கிறார். “யோசுவாபர்னாந்து, பெஞ்ஜமின்பர்னாந்து, ஐசக் பர்னாந்து, இருதயராஜ், மரியான்தாஸ், எட்வின் பூபால ராயன், மிக்கேல்ராயன்...” “இவர்களெல்லாரும் திருச்சபைக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாலும், திருச்சபையின் சட்டதிட்டங்களை மறுப்பதாலும், மற்றவரை அவிசுவாசிகளாகத் தூண்டிவிடுவதாலும் திருச்சபையிலிருந்து நீக்கம் செய்யப் பட்டிருக்கின்றனரென்று, மேற்றிராசன ஆண்டகையினால் அறிவிக்கப்பட்டிருக்கிறது - திருச்சபையிலிருந்து நிக்கம் செய்யப் பட்டிருக்கின்றனரென்று - இருதயராஜ், மரியான்தாஸ் - இருதயராஜ் திருச்சபையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டிருக்கிறான்... இருதயராஜ்.” அப்பனின் பார்வை அந்தப் பீடத்துச் சுரூபத்தின் மீதே ஒன்றியிருக்கிறது. இரு கண்களிலும் நீர் வழிகிறது. சபையில் யார் யாரோ ‘ஏமென்’ கூறுகின்றனர். அவனுடைய நெஞ்சம் எழும்பித் தணிகிறது. “ஆவே மரியா...? மாதாவே! உன்னக்க புள்ளங்கல்லியா நாங்க? எங்கள நீ எப்பிடி விலக்கம் செய்யிவே? நீ... எங்கள நீக்கம் செய்யிறதிண்டு வச்யா. ஒன்னக்க வலிமையுள்ள அலையால ஆழிப்பாரில அடிச்சி மோதிர ஏலாதா? இது பொய்யி...! பொய்யி...! ஆமா, பொய்யி... பொய்யிலே...! நாஞ் சொல்லுதேன், இவஞ் சொல்லுறது பொய்யி. இவனுவள மாதா விலக்கம் செய்யிவா! இவனுவள மாதா விலக்கம் செய்யிவா?” அப்பன் சத்தம் போட்டுக் கத்துவது மேரிக்கு நாணமாக இருக்கிறது. அவர் கைகளைப் பற்றி அமர்த்துகிறாள். அவருடைய கழுத்துத் தசையின் தளர்ச்சியில் உருண்டையான மணி - தனியாத் தெறித்து விழுந்து விடுமோ என்று மேரி அஞ்சும் வண்ணம் அவர் ஒவ்வொருவரையும், ஒவ்வொன்றையும், துரித்து நோக்குகிறார். அது தெறித்து விழ அப்பன் அங்கேயே விழுந்து விடுவாரோ என்று திகிலில் அவர் கையைப் பற்றிக் கொள்கிறாள். “அப்பச்சி, நாம போவலாம்...!” “போ...ட்டி. இவனுவ சொல்லுறது பொய்யி!” கையை உதறுகிறார். பலிபீடத்தின் பக்கம், சாமியின் பக்கம் முன்னேறிச் செல்கிறார். “என்னம்ப்பு, கோயில்ல லகள செய்யிறீம்” என்று அவரை நான்கு பேர் வெளியே திமிரத் திமிரக் கொண்டு வருகின்றனர். “அப்பச்சி, போவலாம். அண்ணெ, பெஞ்ஜமினண்ணே எல்லாம் போயிட்டாவ. ஆத்தாளும் போயிரிச்சி...” “கருணை வாங்காம போவமாட்டே. கருணை வாங்கிற்று வாரம்...” “கருணை குடுத்தாச்சியப்பா. பொறவுதா அறிக்கை வாசிச்சிருக்கு...” “இல்ல. இவனுவ நீக்கம் செஞ்சா நீக்கமாகுமா?...” வெளியே பெஞ்ஜமினும் ஐசக்கும் ரொசாரியோவும் அவனைத் தேற்ற முயலுகின்றனர். “இது எதிர்பார்த்ததுதா. இனிமே நாம கேசு கொடுப்பம். ஒண்ணும் ஆவாது. நமக்கு ஒரு போராட்டம் தொடங்கிச்சிண்ணா, விரிசா நடத்தணுமில்ல...? திருச்சபையவுட்டு நீக்கம் செய்யுவாண்டு தாம் எதிர் பார்த்தம், பாப்பம், எம்மாட்டுக்குப் போயி நிக்கிண்டுதா.” அப்பன் அதை ஏற்கவே மறுக்கிறார். அவருடைய உள்ளம் ஏற்றுக் கொள்ளவில்லை. சவேரியாரு காலத்தில், அவர் பாட்டனுக்குப் பாட்டன் கருணைவாங்கி, கிறிஸ்துவின் திருச்சரீர அணுவினால் அந்தப் பரம்பரை தொடர்ந்திருக்கவில்லையா? “எம்பொஞ்சாதியோடு கூடி நாம் பெத்த பயல ஒருத்தன் இல்லையிண்டு சொல்லிற்றா அவெ எம்பயலா இல்லாம போயிருவானா? ஏ...லே...?...” கைகளை யாரு தொட்டழைத்தாலும் கோயில் வாசலை விட்டு அடி கூட வைக்காமல் நிற்கிறார். ரூபியின் திருமண அறிக்கை வாசிக்கப்பெற்று மணிகளனைத்தும் முழங்குகின்றன. கோயில் கட்சியாட்களுக்குத்தாம் மகிழ்ச்சி, கோலாகலம் எல்லாம். எதிர்க்கட்சிக்காரனுக்குத் திருச்சபை இல்லை... அவர்கள் கோயிலைவிட்டுப் போகிறார்கள். அவர்களுக்கு ஞானஸ்நானம், திருமண மந்திரம், எதுவும் கிடையாது. கெபியின் முன் கண்கள் பெருக நிற்கிறார். பாடுபடும் கிறிஸ்து ராஜரே?... தாமே பெரிய சிலுவையைத் தூக்கிக் கொண்டு மலை மீது ஏறுவதுபோல் ஒருகணம் உடலில் சிலிர்ப்பேறுகிறது. ஆண்டவரே! நீங்க எங்களுக்குள்ள இல்லியா? எவெனெவெ கருணைவாங்காம வந்தாலும் நா வார இல்லியே? நான் குடிக்கேன், முடியாம வாரப்ப கதரினாளை அடிக்கேன். கத்துதேன் - ஆனா, அப்பப்ப காபகப்பெரண்டக்கூட நான் நானில்லேண்டு ஆயிப்போயிருவனா? எம்புள்ளிய, மவெ, மவ இந்த அலவாய்க்கரை, ஆழி, பார், இதெல்லாம் எப்படி நிசமோ, அப்பிடி நீயும் நிசமில்லியா? இந்த நிசத்தத்தானே அப்ப மிண்டும் ரசமிண்டும் சொல்லுதா? அந்த அப்பம் இத்தினி காலமா, இந்த ஆத்துமத்துக்குள்ள போக இல்லியா? இப்பம் திருச்சபைய வுட்டு விலக்கமிண்டு எப்படிச் சொல்லுதா?... கோயிலில் பூசை முடிந்து எல்லோரும் அகல அந்தச் சூழலே விறிச்சிட்டுப் போகிறது. கோழியும், வேறு இறைச்சியும் கூட்டி ஆணம் வைத்து, மெனக்கி நாளைக் கொண்டாடப் போய்விட்டார்கள். வட்டக்காரரின் வீட்டில் ஓலை வாசிப்பு விருந்து நடக்கும். மரியானோ, அந்த ஏலிப் பெண்ணிடம் தன் ஜீவ சத்தை விரயமாக்குகிறான். ஜீவிதம் இந்த எகனை முகனையில், பாரில்பட்டுக் கிழியும் வலைபோல் கிழிந்து போகிறது. லில்லிப் பெண் கன்யாஸ்திரீயாகப் போகிறாள்... உடல் சிலிர்க்கிறது. வெள்ளை உடுத்து, ஜபமணி மாலையும் புத்தகமுமாக சம்மனசு போல... ஆனால் இவர்களைத் திருச்சபையை விட்டு நீக்கம் செய்வது எப்படி? இந்த வீட்டில் இருந்து ஒரு பெண், தேவ சேவைக்குப் போகிறாளே?... வெகு நேரம் கெபியின் முன் முழந்தாளில் அமர்ந்திருக்கிறான். எட்வின் குடித்துவிட்டு வந்து ஒரு கல்லை எடுத்து வீசுகிறான்; வசைகள் உதிருகின்றன. வீட்டில் அப்பச்சி பின்னே வந்து விடுவார் என்று மேரி நினைத்தாலும் அவர் வரவில்லை. ஆத்தா செயமணியையும் சார்லசையும் விரட்டுகிறாள். பெரிய துண்டாக ஆட்டிறைச்சி அகப்பையிலிருந்து விழ, ஆணத்தைக் கலக்கி விடுகிறாள். மெனக்கி நாளில் சேர்ந்தமர்ந்து, அப்பச்சி ஜபம் சொல்ல அவர்கள் உண்ணுவார்கள். கையைப் பிடித்து அவர்கள் அப்பனை அழைத்து வருகையில், மரியானும் தலையைத் தொங்கவிட்டுக் கொண்டு ஆழ்ந்த சிந்தனையிலிருப்பவனைப் போன்று வருகிறான். அப்பனுக்கு எதிரே கண்ணாடிக் கூண்டிலுள்ள அன்னையின் உருவத்தில்தான் கண்கள் நிலைக்கின்றன. அடக்க முயன்றாலும் இயலாதபடி கண்ணீர் வழிகிறது. “ஏனளுகா? இவெ திருச்சபையை விட்டு நீக்கிட்டேண்டு சொன்னா நாம விசுவாசிகளல்லவாயிடுமா? அவெங் கெடக்கா! அவெ, எலி எண்ணெத்திரியக்கொண்டு ஓலப் புரயில வச்சாண்டு இந்தால இது செஞ்சிருக்கியா. இதுக்கெல்லாம் முசிக்காண்ட. கடலிருக்குமட்டும், மீனிருக்கும் மட்டும், நம்மள இவெ ஒண்ணுஞ்செஞ்சிர ஏலாது. கடல் இவனுதல்ல. மீனு இவெக்குஇல்ல. நம்மக்க திருச்சபை அதா ஆழிக்கடல்ல இருக்கி. மாதா அங்கெ இருக்யா! அப்பச்சி இப்பம் எதுக்காவ மனசு வாதனைப் படறீம்? இந்த ஒடம்புல ரசமிருக்கி. அப்பம் கடல்ல இருக்கி. இந்த ரசமிருக்கி மட்டும் பெலமிருக்கி, இந்தப் பெலம் இருக்கி மட்டும் அப்பமிருக்கி. அப்பச்சி அளுகாண்ட, சோகிக்காண்ட, சுணங்காண்ட...” மரியான் சொல்லச் சொல்ல ஆத்தா அழுகிறாள். ஆத்தா அழுவது கண்டு அப்பன் விம்மி அழுகிறார். அது கண்ட மேரியும் செயமணியும் கூடக் கண்கள் பனிக்க நிற்கின்றனர். ஊமையாகிப் போன பீற்றருக்கும் கண்ணீர் முட்டுகிறது. பேச்சற்றுப் போன அந்தச் சூழலில் கடலலைகள் மட்டும் ஹோவென்று இரைகிறது. அலைவாய்க் கரையில் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
|