உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
அத்தியாயம் - 20 பிச்சைமுத்துப்பாட்டாவின் மறைவை ஒட்டி, ஃபிரான்ஸிஸ்கா அங்கே மருமகனுடன் வந்து வீட்டிலிருந்த ஒன்றிரண்டு சாமான்களை அகற்றிவிட்டு, வீட்டை வந்த விலைக்கு விற்கிறாள் என்றறிந்ததும், ஐசக்கு அதை எண்ணூறு ரூபாய்க்குக் கிரயம் பேசிக் கொண்டான். ஃபிரான்ஸிஸ்கா அங்கு இருந்த நாட்களில் ஏலி அவளுக்கு உதவியாக வேலைகள் செய்வதும் நீரெடுப்பதும் பொங்கிப்போடுவதுமாகப் பழகியதால், ஃபிரான்ஸிஸ்கா அவளைத் தூத்துக்குடிக்கே கூட்டிச் செல்ல விரும்பி, தன்னுடன் வர வற்புறுத்தினாள். குழந்தைகள் லிண்டாவும், ரஞ்ஜனும் அவளிடம் பிரியமாக ஒட்டிக் கொண்டனர் என்றாலும், தூத்துக்குடியில் நாகரிகமான அந்த வீட்டில் கட்டிப் போட்டாற் போல் அவளால் இருக்க முடியவில்லை. மேலும் அந்தக் கடற்கரையில் அவளுடைய உயிரின் பகுதியையே விட்டுவந்தாற் போன்று ஒரு தாபம் அவளை வாட்டியது. ஃபிரான்ஸிஸ்கா தடுத்தும் கேளாமல் அவள் மீண்டும் ஒருநாள் தன் தகரப் பெட்டியையும் அலுமினியத் தூக்கையும் தூக்கிக் கொண்டு கன்னிபுரம் கடற்கரைக்கு பஸ் ஏறிவிட்டாள். அந்தக் கரையை அவள் விட்டு நான்கு மாதங்களுக்குப் பின் திரும்பி வருகிறாள். வானம் இருண்டு தூற்றல் போட்டுக் கொண்டிருக்கிறது. அவள் பெட்டி தலையிலும், கையில் தூக்குமாகப் பஸ்ஸை விட்டிறங்கி அந்த முற்பகல் நேரத்தில் நடந்து வருகையில் நெஞ்சில் இனம் தெரியாத அச்சம் படர்ந்து வருகிறது. அமலோற்பவத்தின் வீட்டுப் பக்கம் இரண்டு போலீசுக்காரர்கள் ஜீப்பின் பக்கம் நிற்கின்றனர். போலீசு எதற்கு வந்திருக்கிறது? அவள் நேர்ப்பாதையை விட்டு, பனமரங்களின் ஊடாக, பேய்த்தலைகள் போல் முட்களுடன் கிளைவிரித்து நிற்கும் முள் மரங்களின் பக்கமாக நடக்கிறாள். போலீசுக்காரர்கள் அங்கும் இருக்கின்றனர். கிணற்றடியில் யாருமில்லை. தெருவில் சிறு குழந்தைகளைக் கூடக் காணவில்லை. தூற்றல் மழையானாலும் நனைவதையே ஆனந்தமாகக் கருதும் பிள்ளைகள் எங்கே போனார்கள்? பெரிய தொப்பிப் போலீசுக்காரர்களுக்கஞ்சி அவர்கள் வரவில்லையா?... வெளியில் பெண்கள் கூடிக் கூடிப் பேசுவார்கள்; பேன் பார்ப்பார்கள்; சண்டையிடுவார்கள். அவர்கள் இந்த மழையைப் பொருட்டாக்கித்தான் உள்ளே பதுங்கி இருக்கிறார்களா? போலீசு எதற்கு வந்திருக்கிறது? செபஸ்தி நாடான் கடையிலும் காக்கிச்சட்டைக்காரர்களே தென்படுகின்றனர். அவள் எந்தப் பக்கமும் நோக்காமல் நேராக நடந்து செல்கிறாள். பின்னாலிருந்து அவள் இடுப்பில் ஓர் உதை விழுகிறது. பெட்டி கீழே விழுகிறது. தூக்கு நழுவுகிறது. மணலில் அலங்கோலமாக விழுகிறாள் அவள். அவள் எழுந்து சுதாரித்துக் கொண்டு உட்காருகையில் தன் குச்சியால் அவள் மார்புப் பள்ளத்தில் அந்தப் போலீசான் குத்துகிறான். ஒரு வசை மொழியால் விளித்து, “ஓம் மச்சாம்பய எங்கேட்டீ? இப்ப உண்மையைச் சொல்லலே, முளியப் பேத்துக் கையில கொடுப்பே. சொல்லு! எங்கே போனானுவ எல்லாம்?” என்று அதட்டுகிறான். “எனக்கு எதும் தெரியாது சாமி, நா நாலு மாசமா ஊரிலே இல்லிய. இப்பத்தா வாரம்...” “இந்த மாய்மாலமெல்லாஞ் செல்லாது. எங்கே ஒளிஞ்சிருக்கானுவ நாய்ப்பயலுவ! சாமியார் பங்களாவை கன்னம் வச்சானுவ. சாமியாரைக் கொலை பண்ண வந்தானுவ... என்னடீ! ஒண்ணுந் தெரியாதது போல முளிக்கிறே?...” “தெரியாது எஜமானே, ஆரு அப்படியெல்லாம் செஞ்சாங்க?...” “ஏண்டி களுத. நீ என்னயா திருப்பிக் கேக்கற...?” கம்பால் அந்தக் கிராதகன் அவள் வயிற்றிலும் விலாவிலும் குத்தி மறித்து விழச் செய்து ரசிக்கிறான். “இந்தக் கரயில எல்லாப்பயகளுக்கும் எல்லாப் பொம்பிளகளுக்கும் மச்சாந்தானே? அதா எல்லாப் பொட்டப்பயலுகளும் எங்கே ஒளிஞ்சிட்டான்னு கேட்டேன்...” “கடல் நாச்சி மீதாணையா எனக்கு ஒண்ணுந்தெரியாது சாமி. நா நாலுமாசமா ஊரில இல்ல...” “ஆணை வக்கிறயோ ஆணை? எங்கிட்டப் பொய் சொன்னே, உன்னை தொலைச்சிடுவம். வீடு எதுடீ உனக்கு?...” “தா... குடிசை... கடலோரம்...” என்று காட்டுகிறாள். “உம் மச்சாம் பேரென்ன...?” அவள் ஒருகணம் தயங்குகிறாள். “செத்துப் போச்சி...” “அப்பிடியா சமாசாரம்...?” என்று அவளை ஏற இறங்க ஒரு விரசமான பார்வையால் துளைக்கிறான். “அப்ப காவலில்லா கனிதா... எப்ப செத்துப் போச்சி...?” “மூணு வருசமாச்சி. சினிமாக் கொட்டாயில சண்ட வந்து குத்திப் போட்டா...” “அதானே பாத்தே! அப்ப இந்தக் கரையாளுங்கல்லாம் மச்சாந்தா... போ... பின்ன வந்து பேசிக்கிறம்...” அவள் பெட்டியை எடுத்துத் தலைமேல் வைத்துக் கொள்கிறாள். கையில் தூக்குடன் மெல்ல நடக்கிறாள். கிணற்றுக் கரையைத் தாண்டி கடற்புறத்தில் இறங்குகிறாள். அவளுக்குக் கடற்கரை முழுதும் ஒரு கரிய நிழல் படிந்து கிடப்பதான திகில் புரிகிறது. மீன்வாடிப் பக்கம் மக்கள் நடமாட்டம் இருந்தாலும், கடற்கரையில் வழக்கமான கலகலப்பு இல்லை. கட்டுமரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் தெரிகின்றன. கரையிலும் போலீசுக்காரர்கள் தென்படுகின்றனர். அவளுடைய குடிலின் முன் நாய் படுத்துக் கிடக்கிறது. பிச்சைமுத்துப்பாட்டாவின் வீடு - ஐசக்கு வாங்கிக் கொண்ட வீடு - அடைத்துக் கிடக்கிறது. அவள் அங்கே சென்று கதவை மெல்லத் தட்டுகிறாள். “மயினி...? மயினி...?” கடலின் ஓசைதான் எதிரொலியாகக் கேட்கிறது. வீட்டுக்குள் யாரோ இருக்கின்றனர். ஆனால்... “வூட்ட யாருமில்லிய...? மயினி...? யாரோ வருவதாகத் தெரிகிறது. கதவைத் திறக்கக் கஷ்டப்படுவதும் தெரிகிறது. பிறகு மெள்ள அகன்று, ஒரு பிஞ்சு முகம், சோர்ந்து அந்தச் சிறு இடைவெளியில் காட்சி தருகிறது. ஏலி உள்ளே புகுந்து கதவை மீண்டும் தாழிடுகிறாள். கிழிந்த நாராக ஐசக்கின் அம்மை படுத்திருக்கிறாள். அவனுடைய இளம் மனைவி இடையில் ஒற்றைத் துணியுடன் உட்கார்ந்து அவலமாகக் காட்சி தருகிறாள். கதவு திறந்திருக்கும் சிறுமி மதலேன் அவர்கள் குழந்தை. “ஏலி...” என்று அழைக்கும் சிசிலி பேச முடியாமல் கண்ணீர் பெருக்குகிறாள். பிறகு ஒற்றைத்துணியை அகற்றிக் காட்டுகிறாள். “...ஓ... மாதாவே?” நெஞ்சு ஒட்டிக் கொள்கிறது. இடுப்புக்குக்கீழ் அடித்து இரத்த விளாறாக்கியிருக்கின்றனர், பாவிகள். “எதுக்காவ? யாரு? போலீசா அடிச்சானுவ...?” அவள் ‘ஆம்’ என்று தலையாட்டுகிறாள். “தண்ணிக்குக்கூடப் போவயில்ல. பாவம். மாமியையும் அடிச்சானுவ. இந்தக் கரயில போராட்டம் பண்ணின ஆம்பிளங்க யாரும் இப்பமில்ல. ஏலி, நீ எப்படி வார? எங்கிருந்து வார...?” ஏலி பேசவில்லை. கயிற்றையும் வாளியையும் எடுத்துக் கொண்டு கிணற்றுக்குச் செல்கிறாள். தான் ஒரு பொதுமகள் என்ற நிலையில் கட்டுப்பாடான அச்சத்தை மீறிவிட்டது இப்படியும் பயன்படுமென்று அவள் ஒருகாலும் நினைத்திருக்கவில்லை. மிஞ்சி மிஞ்சி என்ன நடக்கும்? போலீசான் அவள் பெண்மை நலமழிப்பான்... அவளுக்குப் பயமில்லை. தண்ணீர் கொண்டு வந்து வைத்து, அவர்களுக்கு கஞ்சி காய்ச்சிக் கொடுத்துவிட்டு, ஏலி கதவைத் தாளிட்டுக் கொண்டு தன் வீட்டுக்கு வருகிறாள். கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்கிறாள். செபஸ்தி கடை வாயிலில் குந்தியிருக்கும் போலீசான் இவள் கடையிலிருந்து வரும் நேரத்தில் இவளுடனே வருகிறான். பெஞ்ஜமின், ஐசக், எட்வின், மரியான், அகுஸ்தீன் எல்லார் மீதிலும் வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. அவர்கள் கோயிலில் கன்னம் வைத்துக் கொள்ளையடித்தார்கள்; சாமியார் பங்களாவில் கொள்ளையடித்தார்கள்; வைக்கோற் போரைக் கொளுத்தினார்கள்; சாமியாரைப் பல முறைகள் கொலை செய்ய வந்தார்கள்... சாமியாருக்குப் பாதுகாப்பளிக்கப் போலீசு அலைவாய்க் கரையில் அலைந்து கொண்டிருக்கிறது. ஆனால், இவர்கள் யாருமே அந்தக் கிராதகர்களின் கண்களுக்குத் தென்படவில்லை. ஏலி, அந்தப் போராட்டக்காரர்களின் மீதான போலீசானின் வெறிகளை ஏற்றுக் கொள்ளும் பலிபீடமாகிறாள். அவள் அந்தக் கரைக்கு வந்து ஏழெட்டு நாட்களாகியும் மரியானின் வீட்டுப் பக்கம் செல்ல இயலவில்லை. கோயில் கட்சியைச் சேர்ந்தவர்கள் கையில் ஒரு சீட்டு வைத்துக் கொண்டு நடமாடுகிறார்கள். அவர்களுடைய வீட்டுப் பெண்களும் கூட, அதிகமாக வெளிவருவதில்லை. கிழவிகள் தாம் கிணற்று நீருக்கு வருகின்றனர். அவளிடம் சராமாடிய போலீசான் அவளுக்கும் ஒரு சீட்டுத் தந்து இருக்கிறான். இவள் இரவிலோ, பகலிலோ, எப்போதோ எதிர்க்கட்சியான் வீட்டுக்குள் செல்வதை அவர்கள் பார்த்துவிட்டால் அவர்களையும் சித்திரவதைக்காளாக்குவார்கள் என்று அஞ்சி நேரம் பார்க்கிறாள். கடற்கரையோரமிருக்கும் மரங்கள் சிலவற்றை இழுத்துப் போட்டு, சக்கிரியா, உடைத்து விறகாக்கிக் கொண்டு போகிறாள். சாமியார் வீட்டுக்குப் பின்னே போலீசுக்காரர்களுக்காகப் பெரிய பெரிய கற்களை வைத்து அடுப்பு மூட்டிச் சமையல் செய்கிறார்கள். எதிர்க்கட்சி ஆட்கள் வீடுகளிலிருக்கும் ஆடு, கோழி, எல்லாம் அந்த அடுப்புகளில் அவர்களுக்கு உணவாக வேகின்றன. தின்பதும் குடிப்பதும் பெண்களை இழுத்து வந்து வெறி தீர்த்துக் கொள்வதுமாக அவர்கள் கொழுத்துத் திரிகிறார்கள். ஏலி ஒரு வட்டியில் மரவள்ளிக்கிழங்கும் கருப்பட்டியும் வைத்து மூடிக்கொண்டு அன்று காலோடு தலை போர்த்து, விடியற்காலையில் கடற்கரையோடு நடக்கிறாள். மரியானின் வீட்டுப்படியில் நின்று தட்டுகிறாள். “மாமி...? மாமி...” கதவைத் திறக்க வருமுன் மீண்டும் “யாரு யாரு?” என்று குரல் கேட்கிறது. “ஏலியா. கதவுத் தொறவுங்க...” டக்கென்று திறந்து அவளை உள்ளே விட்டதும் மூடிக் கொள்கிறது கதவு. செயமணி... செயமணியா இது? கண்கள் சோர, பட்டினியின் கொடுமையில் வாடிக் கிடக்கிறது அந்த மணி. மேரி அவளை வரவேற்பதுபோல் படுத்திருந்தவள் எழுந்து உட்காருகிறாள். சார்லஸ்தான் உறங்குகிறான். பீற்றரும் கூட எழுந்து வட்டியிலிருக்கும் மரவள்ளியை ஆவலோடு பார்த்து எடுக்கிறான். “மரியானண்ணெ ஒங்கூட்டுப் பக்கம் இருக்கா, ஏலி மயினி?” ஏலி உதட்டைப் பிதுக்கிச் சாடை காட்டுகிறாள். கட்டிலில் துணிக்குவியல் போல் ஆத்தாள் அனக்கமேயின்றிக் கிடக்கிறாள். “அப்பச்சி எங்கே?” “தெரியலியே? போலீசு வந்து எறங்கியதும் பெஞ்சமினண்ணே ராவோடு ராவா வந்து எல்லாரு பேரிலும் கேசிருக்கு. சாமி குடுத்திருக்குண்ணும், அவெவெ தன்னத்தானே பேணிட்டுத் தப்பிக்கணும், அவங்க கையில சிக்கிடக் கூடாதுண்ணு சொன்னாரு. அன்னைக்கு ராவெல்லாம் ஆரும் ஒறங்கல. காலமே எட்வின் அண்ணெயும் மரியானண்ணெயும் மரத் தெடுத்திட்டுக் கடல் மேலதாம் போயி வேறகரை ஏறுதோமிண்ணு சொன்னாங்க. ஆனா மரத்தில போவ இல்ல. தம்பி பாத்திட்டு வந்து சொல்லிச்சி. கொங்கையிலே ரோசிண்ணு எழுத்து வெட்டின மரம் மணல்ல இருக்குண்ணா. நேத்துக் கூட பெஞ்ஜமினண்ணே அப்பச்சியக் கூட்டிப் போறமிண்ணு சொன்னாரு. ஆனா அப்பச்சி இந்த எடம் வுட்டு நவுரமாட்டேண்ணிருந்தா. அப்பம் அண்ணைக்குக் காலமே போலீசு வந்திச்சி. ஆத்தா சயக்கொடியயும் என்னியும் நடுவீட்டில ஒளிச்சி வச்சி, வலைத்தும்பு பாயி எல்லாம் போட்டிச்சி. ஆத்தாளை அடிச்சாங்க. அப்பச்சியையும் அண்ணெ எங்கேயிண்டு விசாரிக்க இளுத்திட்டுப் போனாங்க. மயினி, நாங்க அன்னிக்கி பூர செத்தோமிண்ணே நினச்சம்...” “பொறவு அண்ணெ வார இல்ல?” “உஹும். பெஞ்ஜமின் அண்ணே அனுப்பிச்சாருண்ணு ஐசக்கு ஒரு பழக் கொல், பத்து ரூவால்லாம் கொண்டாந்து தந்தா. பீற்றரும் சார்லசும் மீன் வாடில மரம் தள்ளப் போனாக் கூட அடிகொள்ளும். பாவம். எதினாலும் பாரக்குட்டியோ, நண்டோ பிடிச்சாரும். ஆத்தா ராத்திரி போயி தண்ணி எடுத்தாரும். நாங்க எதுக்குமே வெளியே போவ இல்ல. கடலக் கூடப் பாக்க இல்ல மயினி மூணு மாசமா! பன ஓல கொண்டு வாரமிண்ணு சார்லசு போனா அவனைப் போட்டுக் காலமாடனுவ அடிச்சிருக்கா... ஒருக்க மூணு நாளாக் கஞ்சிகாச்சக் கூட ஒண்ணில்ல. பொறவு, சந்தியாகு மாம வீட்டேந்து புல்லு (கேழ்வரகு) வாங்கிற்றுவந்து கஞ்சி காச்சினம். புல்லெல்லாம் உண்டு பழக்கமில்ல - ஆத்தா வயித்து நோவுண்ணு படுத்திருக்கு...” ஏலி குசினிப்பக்கம் போய்ப் பார்க்கிறாள். அடுப்பெருக்கச் சுள்ளி கூட இல்லை. வெளியே சென்று முதல் நாள் சக்கிரியா கட்டுமரத்தை வெட்டிய இடத்திலிருந்து சில்லுகள், சிறாய்கள் தெறித்து விழுந்ததைப் பொறுக்கி வருகிறாள். பிறகு கிணற்றுக்குச் சென்று தண்ணீர் தூக்கி வந்து வைக்கிறாள். அவளுடைய வாழ்க்கைக்கு இப்போது ஒரு முக்கியத்துவம் கூடியிருக்கிறது. புதிய பொருளை அவள் உணருகிறாள். போலீசுத் தடியன்கள் அவளை உடலெரிய மனமெரியச் சக்கையாக்கிப் போட்டாலும், அவள் அந்தக் கடலின் நீரிலே குளிர்ச்சி பெற்று அந்தக் குடும்பத்துக்கு உதவ வருகிறாள். வாழ்க்கையில் அந்தந்த நேரத்துக்கு உரியனவாக அவள் முன் கனவுகள் எழும்பியதுண்டு. கான்வேன்ட் சுவருக்குள் வெறும் அடிமைப் பெண்ணாக உடலுழைத்த காலத்தில், அந்த ஒளியற்ற வாழ்வுக்கு உதய ஞாயிறாக இன்னாசி தோன்றினான். பின்னர் அந்தக் கனவு சிதைந்த பின் கடற்கரையில் மரியானின் பொற்கரம் அவள் கனவுகளுக்கு மீண்டும் உயிர் கொடுத்தது. குழந்தை பிறந்தது. ஆனால், பூ மலருமுன் கருகி உதிர்ந்தாற் போன்று அந்தக் கனவும் இருளில் மறைந்தது. அவளிடம் அன்பும் ஆதரவும் காட்டிய ஸ்டெல்லா மாமியும் பாட்டாவும் கூட இல்லாமலாகி விட்டனர். பனமரத்தின் மட்டைகள் வெறும் வரையை மட்டும் பதித்துவிட்டு விழுந்து விடுகின்றன. அவளுடைய வாழ்க்கையில் இப்போது மலர்ந்திருப்பது மட்டைகள் போன்ற கனவு அல்ல. இது மரத்தின் பயனை விள்ளும் கூம்பு... ஏலி அந்தக் குடும்பத்தைக் காப்பாற்ற, போலீசுக்காரர்களுக்குத் தன்னை இரையாக்குகிறாள். அலைவாய்க் கரையில் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
|