உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
அத்தியாயம் - 21 நினைவு தெரிந்த நாளாய் அலைவாய்க் கரையில் பிழைத்தவர்கள், கடலின் மீது செல்வது தவிர வேறு வாழ்க்கை தெரியாது. பெஞ்ஜமின் அந்நாள் போலீசுப் படை வந்திருப்பது பற்றி எச்சரிக்கை கொடுக்க வந்ததும் இருதயம், “இவனுவ என்னப் புடிச்சி என்ன செய்வானுவ? மயிரானுவ?” என்று கூறிவிட்டுச் சாராயத்தின் ஆளுகையில் இழுத்துப் போர்த்துக் கொண்டார். ஆனால் என்ன நடந்தது? அவர் கடலுக்குச் சென்று திரும்பியதும் போலீசார் கையைக் கட்டி இழுத்துச் சென்று சாமியார் பங்களாவின் பின்னாலுள்ள கிடங்கு அறையில் வைத்து மூன்று நாட்கள் அடித்தார்கள். அவர் வாயைத் திறக்கவில்லை. பெஞ்ஜமின், மரியான், எட்வின் இவர்கள் எங்கேயென்று கேட்டால் அவருக்கு எப்படித் தெரியும்?... அடியினால் பட்ட புண்கள் காயவே இல்லை. அந்தக் கிடங்கு அறையில் இப்போது இந்த மூன்று மாத காலத்தில் எட்டு பேரிருக்கின்றனர். குடிமகன் இன்னாசி, அம்புறோசா, வெறுநாது, அகுஸ்தீன், ரொசாரியோ, பிரித்தோ, பிலிப்பு... எல்லோரும் இளையவர்கள். இன்னாசிப்பயல் வந்த அன்று இவரைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான். ரொசாரியோ “மாமோ!” என்று அலறினான். சாமியார் வீட்டையே கொளுத்துவதாகச் சூளுரைத்தான். ஆனால் என்ன நடந்தது? போலீசுத் தடியர்கள் அவனைக் ‘குறுக்கை’ முறித்துப் போடுவதாக உறுதிகூறி அவனைக் குப்புறப் படுக்க வைத்துக் குண்டாந் தடியால் அடித்தார்கள். அவன் அடிவிழும் நேரத்தில் மூச்சடக்கி முதுகை வில்லாய் வளைத்துக் கொண்டான். அவனுடைய குறுக்கை உடைக்க முடியவில்லை. சிலுவைப் பிச்சையை உடைமரக் காட்டிலிருந்து இழுத்து வந்து அவர்கள் கண்முன் படுக்க வைத்து இரும்பு உருளை கொண்டு தொடைகளிலும் கால்களிலும் உருட்டினார்கள். அவன் சாகவில்லை. ஆனால் எங்கோ வேற்றிடத்திற்கு இழுத்துப் போனார்கள். கொன்று விட்டார்களா என்பது தெரியவில்லை. இவ்வளவுக்கு உதையும் அடியும் பட்டினியும் அனுபவித்தும் தாம் ஏன் இன்னும் சாகவில்லை என்பது அவருக்கு நினைத்தால் வியப்பாக இருக்கிறது. அவர்கள் யாருமே அந்த அடியில் சாகவில்லை. கடலம்மை கொடுத்த உரம் அது. அவளுடைய அப்பத்தினால் உடலில் ஊறும் ரசமென்று பையன் சொன்னானே, அது உண்மை. சாமியார் ‘பங்களா’வின் உயர்ந்த சுவர்களும் சுற்றுச் சுவர்களுக்கப்பால் வெளி வராந்தாக்களும் மாடி முகப்பும், கொல்லைத் தோட்டமும் தாம் இவர்கள் அந்நாள் வரை பரிசயப்பட்ட பகுதிகள். அந்த வராந்தாவில் நின்று பேசியிருக்கின்றனர். ஆனால் உள்ளே எத்தனை அறைகள் இருக்கின்றன என்பதைக் கூட அறிந்திருக்கவில்லை. சாமியார் - குரு... அவர் கடவுளின் பிரதிநிதியாக அவர்களை ஆத்துமத்துக்கான உயர்வுக்கு நல்வழியில் இட்டுச் செல்ல அவர்களுக்கு மேய்ப்பராக இருக்கிறார் என்றதோர் அசைக்க இயலாத பெருமதிப்பை அரணாக்கி வைத்திருந்தனர். அவருடைய குற்றங் குறைகளைப் பற்றித் துருவுவது கூடப் பாவம் என்று மரியானைப் போன்ற இளந்தலைமுறையினர் ஏதேனும் சொல் உதிர்த்தாலே கண்டித்திருக்கிறார். இந்த நம்பிக்கை, பாறையில் மோதும் அலைகளாகச் சிதறுகிறது. இந்தச் சாமி, கோயிலின் பிரதிநிதியாக இன்னமும் திருப்பலிப் பூசை நடத்துகிறார். சுரூபம் ஒரு அற்புதம் புரியாதோ? இருதயம், மாதாவின் கண்களில் நீரொழுகுவது போன்ற கற்பனையில் திடுக்கிட்டு உடல் விதிர்க்க, அயர்ந்து தூங்கும் போதும் எழுந்து குந்திக் கொள்கிறார். “நீரு வாரும். உம்மை வெளியே விட்டுட்டோம். நாசெஞ்சதுக்கெல்லாம் மன்னாப்பு...” என்று அவரைச் சாமியே வெளிவிடுவதுபோல் ஒரு கற்பனை செய்து கொள்வார். ஆனால் அப்படி எதுவுமே நிகழவில்லை. அலைக்கும் கடலுக்கடியில், கூர்ச்சுக் கூர்ச்சாக மரங்களை உடைத்து வலைகளைக் கிழிக்கும் பாறைப் படிவங்களைப் போல், இந்த அங்கி போர்த்த இவர்களுக்குள் இவ்வாறு ஈரமே இல்லாத கரவுகளும் இருக்குமோ?... மனிதர்கள் இப்படியும் ஒரு நியாயமும் இல்லாமல் உயிர்களை வதைக்க விளையாடுவார்களா? நாட்கள் நகருகின்றன. அடித்து அடித்துக் குற்றுயிராக்கிய பின்னரும் இவர்கள் மறைந்திருப்பவர்களைப் பற்றி ஒரு தகவலும் கொடுக்கவில்லை. காவலுடன் இவர்களைக் காலையில் இயற்கைக் கடன் கழிக்க சாமியார் தோட்டத்தின் பின்னே முட்செடிகளுக்கிடையே அழைத்துச் செல்லும் நேரம்தான் வெளி உலகைக் காணும் நேரம். புல்லரிசி - கேழ்வரகு கொஞ்சம் கொடுப்பார்கள். அதை இன்னாசி கஞ்சி காய்ச்சுவான். எல்லோரும் பகிர்ந்து கொள்கிறார்கள். “விடியாலே நாம போறப்ப, அவனுவள முள்ளப் புடுங்கி அடிச்சிப் போட்டுட்டு நாம ஓடிரலாம்...” என்று ரொசாரியோவும் அகுஸ்தீனும் தினமும் சொன்னாலும், அகப்பட்டவர்களைக் கொன்றுவிடுவார்கள் என்பதால் அதைச் செய்ய இயலவில்லை. “ஒடம்பில வலுவுள்ளவெ, இங்கிய விட்டுத் தப்பி இந்த அக்குருவங்கள வெளியே சொல்லலேண்ணா, நாம இப்பிடியே குத்துயிரும் கொல உசிருமாச் சாவுறதா? மாமோ? கலவம் பொறந்தாதா காலம் வரும். இப்பம்... பெஞ்சமினண்ணே சொம்மா இருக்கமாட்டா... நா தப்பிச்சிட்டும் போயிருவ...” “அப்பம் மோட்டப் பிரிச்சிட்டுப் போவ ஏலுமாண்ணு பாரு?...” “எங்கையில பன்னரிவா இல்லாம எறங்கிட்ட அதான் தப்பாப் போச்சி. இவனுவ அம்மாம் பேரையும் வெட்டிப் போட்டிருப்பம்...” “எனக்கு ஒண்ணு தோணுது மாமோ...!” “இவனுவ கிறிஸ்து நாதர் பேரைச் சொல்லி, குருப்பட்டம் வாங்கி கோயில்னு சொல்லி, நாம ரத்தம் கக்கிக் கொண்டாந்த மீன் பாட்டைக் கொள்ளையடிக்கானுவ. நாம் எதிர்த்தோம். மேற்றி ராணியாரும் இவனுவ பக்கமே இருக்கா. போலீசு, சர்க்காரு அல்லாம் இவனுவ கைக்குள்ள போட்டுட்டானுவ. இந்தக் கரயில, நம்ம கூட ஒண்ணா இருந்து தொளில் செஞ்சி சம்பந்ததாரியா பழகினவங்கல்லாம் பயந்திட்டு கோயில் பாட்டியாயிட்டானுவ... எல்லா சாமியாருமே இந்த அநீதம் சரிண்ணு சொல்லுமா? ஒருத்தருக்காவது இது அநியாயமிண்டு தோணாதா?...” ரொசாரியோவின் இந்தக் கேள்வி இருதயத்தின் உள் மனத்தைச் சுண்டிவிடுகிறது. பால்சாமி... அவரைப் போல் அவர்களிடத்தில் அன்பும் கருணையும் வைத்த சாமி யாருமில்லை. அந்தக் காலத்தில் ஸ்ரா கொண்டு வந்தால், இலுப்பா... அதன் ஈரலை எடுத்துப் பிசைந்து தண்ணீரோடு காய்ச்சுவார்கள், அதுதான் விளக்கெரிக்கும் எண்ணெய். தரையில் குழித்து களிமண் பூசி விளக்குப்போல் எண்ணெய் ஊற்றி ஒரு சீலைத்துணியைத் திரித்துப் போடுவார்கள். விளக்கு எரியும். மொடுவதம் கடலுக்குப் போயிருந்தான். அவன் பெண்சாதி விளக்கை அணைக்காமல் உறங்கிப் போனாள். எலி, மீனெண்ணெய்த் திரியை, அப்படியே கங்கோடு எடுத்துச் சென்று ‘மோட்டில்’ வைத்துவிட்டது. ஓலைக் கூரை பற்றி எரிவதைச் சாமி தன் வீட்டிலிருந்து பார்த்து ஓடோடி வந்தார். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வலை, கட்டை, போன்ற சாதனங்களையும் குஞ்சு குழந்தைகளையும் அவராகவே அப்புறப்படுத்தினார். குடிசை எரிந்து போன மொடுதவத்துக்கு இருபத்தைந்து ரூபாய் கொடுத்தார். பிறகு ஒவ்வொரு நாளும் அவர்கள் வீட்டுப் பக்கமெல்லாம் வருவார். “கள்ளுக்குடிக்காண்டாம்? ஏம்புள்ள, புருசனுக்கு வெந்நி வச்சிக் குடுத்தியா? விளக்க எரியவச்சிற்று ஒறங்கிடாதே! வத்திப் பொட்டியப் புள்ள கையில வச்சிருக்காம் பாரு!”ன்னெல்லாம் புத்தி சொல்லுவாரு. அப்பம் அவரு செறுப்பம்தா. அவருமேல ஒரு மாசு தூசு ஒட்டியிருக்கா? அவரும் சாமி, இவனுவளும் சாமியா?... உள்ளத்தில் சினிமாப் படம் போல் அக்காட்சிகள் தோன்றுகின்றன. “மாமோ? ஏம் பேசாம இருக்கிறிய?” “இல்லலே. பால்சாமியப் பத்தி நினச்சே. அவரு இத்தச் சரிண்ணு சொன்னாருண்ணா, இந்த அக்குருவங்கள நாயமிண்டு சொன்னாருண்டா, நா இந்தக் கோயில் சுருவம், அது இதெல்லாம் ஒடச்செறியுங்கடாண்ணுவ. வந்தது வரட்டுமிண்ணுவே...” அவர் கண்கள் உருகுகின்றன. “அப்ப நாம இந்த இருட்டு ரூம்புக்குள்ளேந்து பால்சாமிய எங்கேந்து பாக்குறது?...” “யாருண்ணாலு ஒத்தம் தப்பிச்சுப் போவட்டும்...” அன்று புல்லரிசி பெற்று வரத் தோட்டத்தின் பக்கம் சென்ற இன்னாசி, ஏலி போலீசுக்காரர்களின் சமையல் பாத்திரங்களைத் துலக்கியதாக வந்து செய்தி சொல்கிறான். எழுத்து எழுதிக் கொடுக்க ரொசாரியோவுக்குத் தெரிந்திருந்தாலும் காகிதமில்லை; பேனாவில்லை; அறையில் வெளிச்சமுமில்லை. தோட்டத்தில் அரளிச் செடியின் பக்கம் இன்னாசிக்கு சீசப்பிள்ளை தாவீதுதான் படியளப்பான். தாழ்வரையில் சுள்ளியை வைத்து, அந்த மாவைக் கஞ்சி காச்சி உப்புப் போட்டுப் பருகுவார்கள். கருவாட்டு மீன் சில நாட்களுக்குக் கருணையோடு கொடுப்பான். ஏலிக்கு இவர்கள் இங்கு அடைபட்டிருப்பதைப் பற்றிய செய்தியை அமலோற்பவம்தான் கூறினாள். கிணற்றில் நீரெடுத்துக் கொண்டு திரும்புகையில், அவர்கள் குசினியில் வேலை செய்யும் விர்ஜின் ஏலியை எசமானியம்மா கூட்டி வருவதாகச் சொன்னாள். “இருதயம் மாமனையும் இன்னும் ஏளெட்டுப் பேரையும் சாமியார் வூட்ட வச்சி அடிச்சிக் கொல்றானுவளாம். போலீசுச் சவங்க!... சவந்து மாடனுவ, எருமமாடாட்டும் தீனி திங்கியானுவ. ஆடும் மாடும் வெட்டி ஆணம் வெக்கிறதும் அரிசி பொங்குறதும், மொடா மொடாவாக் குடிய்க்கிறதும்...! கோயிலுக்குப் போய் வாரயில, இந்த நீசனுவ, ரூபிப் பொண்ணப் பாத்துக் கண்ணடிக்கிறான். ‘எள்ளும் பருத்தியும் வெதயுமலா!’ண்டு சிரிக்கான், அவனுவளக் கடல் கொண்டிட்டுப் போவ? இந்தச் சாமிதான் இவனுவளுக்கு இம்மாட்டு எடங்குடுத்திச்சி? எனக்கு என்னமாண்டு வரும்...!” என்று வயிறெரியக் கொட்டினாள். அவள் தோப்பில் ஒரு தெங்கு இல்லை. அவளுடைய கோழிகள், ஆடுகள் எல்லாவற்றையும் போலீசுப் படை தின்றுவிட்டது. அவள் மூன்று ரூபாய்க்கு வாங்கி ஐந்து ரூபாய்க்கு விற்கக் கூடிய சரக்கு, விலையில்லாமலே கொள்ளை போயிற்று. கடற்கரையில் தொழிலில்லாமல் பல குடும்பங்கள் சிதறிப் போய்விட்டன. இதைக்கேட்ட ஏலி, சாமியார் தோட்டத்துக்குப் பின் போலீசுக்குப் பொங்கல் நடக்குமிடத்துக்குக் குற்றேவல்காரியைப் போல் வரத்தொடங்கினாள். அந்தத் தடியன்களே தாம் பொங்கிக் கொண்டார்கள். இவள் பாத்திரம் துலக்கும் சாக்கில் தோட்டத்துக் குழாயடியில், தொட்டியடியில் நின்று அங்கே நடக்கும் நடவடிக்கைகளைப் பார்க்கிறாள். இன்னாசிக்குத் தாவீது புல்லரிசி படியளப்பதை நின்று பார்க்கிறாள். எட்டுச் சிறங்கை அள்ளிப்போட்டு, எட்டுத் துண்டு கருவாட்டு மீன் கொடுத்தான் தாவீது. இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு இருள் பிரியும் நேரத்தில் அவள் உடைமரக் காட்டில் அவர்களைக் கைதிகளாக அழைத்து வருகையில் எல்லோரையும் பார்த்து விடுகிறாள். அவர்கள் திரும்பி செல்கையில் ஏழுபேர் தாம் இருக்கின்றனர். ஏலியுடன் இன்னொரு பெண்ணுருவம் சேலையணிந்து இருளில் செல்கிறது. அவர்கள் சரக்கென்று வட்டக்காரர் வீட்டுப்புறக்கடை வழியே உள்ளே நுழைந்து விடுகின்றனர். ஏலி மட்டுமே ஓட்டமாகச் செய்தி சொல்ல விரைகிறாள். அலைவாய்க் கரையில் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
|