அத்தியாயம் - 24

     கச்சான் காற்று பன மட்டைகளை அசைத்து விளையாடுகிறது. அதற்கிணையக் கடலலைகள் ஒத்திசை கூட்டிக் கொண்டு ஆரவாரம் செய்கின்றன. கடற்கரை மடிக்காரர் அனைவருடைய செவிகளிலும் அது, ‘றால், றால்’ என்று முழங்குகிறது.

     றால்...! றாலேதான்!

     கடலன்னை உவந்தளிக்கும் புதிய செல்வம் அது!

     கடல் தொழிலாளிகளின் நடையில் ஓர் உற்சாகம்; கண்களிலே ஒரு புத்தொளி!

     கன்னிபுரம் என்ன, கடற்கரையிலுள்ள அனைத்துக் கிராமங்களிலும் அலைகள் வண்மையின் புதிய சங்கீதங்களை இசைக்கின்றன.

     கோளா வலைகளைப் புறக்கணித்து, ‘செட்டு செட்டாக’ இரண்டாம் நம்பர் வலை பின்னுகின்றனர். ஆற்று நீர்முகங்களில் வந்து விழும் எருவும் வண்டலும் படியும் கடல் மடைகளில் ‘இறால்’ என்ற இனங்கள் ‘கலித்து’ப் பெருகுகின்றன. கடலம்மை கனிந்தளிக்கும் இச்செல்வங்களை மடிக்காரர் கட்டு மரங்களிலும், வள்ளங்களிலும், விசைப்படகுகளிலும் அள்ளி வருகின்றனர். கட்டுமரங்கள் கரைக்கு வருமுன்பே ‘இறால்’ ஏஜண்டுகளான பையன்கள் கரையில் வலைப் பைகளுடன் காத்திருக்கின்றனர். இவற்றுக்கு ஏலம் கிடையாது. எவ்வளவுக்குப் போகுமோ, என்ன ஆகுமோ என்ற நிச்சயமில்லாத தவிப்புகளோ, தணதணப்புகளோ இல்லை. ‘றால்’ வலையில் பட்டு விட்டால் கையில் கிடப்பது தங்கமேதான். கொச்சிக்காரச் ‘சப்பை’களின் ஆட்கள் கையில் பணத்தை வைத்துக் கொண்டு எனக்கு உனக்கென்று காத்திருக்கின்றனர்.

     வலையில் கட்டித் தூக்கப் பெரிய இனமாக இருந்தால் ஒரு கிலோ எழுபது ரூபாய் வரையிலும் போகிறது! ஒரு கிலோ, பத்துப்பன்னிரண்டு எண்ணிக்கைக்கு வரும் றால், எழுபதுக்கும் மேலும் கூடப் போகிறது! ஒரே நாளில் ஐநூறு, அறுநூறு என்று வாரி வரும் செழிப்பு...

     பழைய ஊர்களா கடற்கரை ஊர்கள்?

     பெஞ்ஜமினின் வீடு மாடியும் கீழுமாக, மொசைக் தளமும் வண்ணமுமாகப் பளபளக்கிறது. அவன் இப்போது பெஞ்ஜமினில்லை; பஞ்சாட்சரம். ஆல்பர்ட், ஆதித்தனாகி விட்டான். அவர்கள் வீட்டுப் பெண்மக்கள் கழுத்தில் வரி வரியாகச் சங்கிலி - வளையல்கள் இழைகின்றன. ஐசக்கு பிச்சைமுத்துப் பாட்டாவிடம் வாங்கிய வீட்டை மீரான் சாயபுவுக்கு விற்றுவிட்டு, கடலை விட்டுத் தள்ளி நசரேனின் வீட்டை வாங்கிக் கொண்டு குடி பெயர்ந்திருக்கிறான்.

     மீரான் சாயபு அந்த வீட்டைப் பெரிதாகக் கட்டி, ஒரு ஓட்டலும் நடத்துகிறார். றால் எடுக்க வரும் வியாபாரிகளும், லாரிக்காரரும் மற்றவரும் அங்கே வந்து உணவு கொள்கின்றனர். மரியானின் வீட்டிலும் மாற்றங்கள் இல்லாமலில்லை. புறக்கடையில் அதிக மாற்றம் இல்லையெனினும், முன்புறத் தாழ்வரையைச் சிமிட்டி பூசி மேலே ஓடுபோட்டுக் கட்டி, அழிக்கதவும் போட்டிருக்கின்றனர். வெகு நாட்களாக கனவு கண்ட மின் விளக்கும் போட்டாயிற்று. மரியான், சந்தியாகுவின் கொழுந்தியா மகள் மேபல் பெண்ணைத்தான் கட்டியிருக்கிறான். ஆனால் மரியான் சுப்பிரமணியனாகி விட்டான். சந்தியாகு வீட்டாரும் இந்துவாகி விட்டனர். சந்தியாகு சுந்தரமாக மாறியிருக்கிறான். மேபல் புனிதாவாக மாறி இருக்கிறாள். இவர்களுடைய மணவாழ்வில் மலர்ந்த மலராக, கணேசு அப்பனின் மடியிலும் ஆத்தாளின் இடையிலும், அத்தைமார்களின் கொஞ்சலிலும் துள்ளி விளையாடுகிறான். மேரி மேனகா எனப் பெயர் பெற்றிருக்கிறாள். ஜெயமணி, ஜெயலட்சுமியாக விளங்குகிறாள். இவர்கள் நுதலில் செஞ்சாந்துத் திலகமும், செவிகளில் பொன்னாலான தோடுகளுமாக ஒரு புதிய மலர்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் நடமாடுகின்றனர். பெரிய கோயிலுக்கு நேராக எழும்பியிருக்கும் கணபதி கோயிலின் சந்நிதியில் மாக்கோலமிடுவதும், மாலை தொடுப்பதும் இவர்களுக்கு உற்சாகமளிக்கும் பணிகள். அத்துடன் இவர்களுக்காகவே அங்கே நிலை பெற்றிருக்கும் பீடி ஃபாக்டரியில் இருந்து இலைகளும் தூளும் வாங்கி வந்து பீடி சுற்றுகின்றனர். ஜெயா மட்டும் வாரம் பத்து, பதினைந்து என்று சம்பாதிக்கிறாள். பாதங்களில் சல்சல் என்றொலிக்கும் பாத சரங்களும், வளையல்களுமாக மேனகா அந்தக் கரையின் வாலிபர்களுக்கெல்லாம் கனவுக் கன்னியாக நடமாடினாலும், முன்னர் அருஸ்தீனாக இருந்து இந்நாள் அநந்தனாகி விட்டவனே இவளை மணமுடித்துக் கொள்ள வேண்டும் என்று உறுதி பூண்டிருக்கிறான்.

     மேனகா கோயிலில் கோலம் போடச் சென்றால் இவனும் பின்னால் அங்கு செல்கிறான். மணியை அடிப்பான்.

     “சாமி! திருநூறு கொடுங்க!” என்று இவர்களுக்கு சமயப் பிரசாரகராக வந்து கோயிலில் இறைபணி புரியும் குலசேகர வாத்தியாரிடம் கையேந்தி நிற்பான். திறந்த மார்பு தெரிய இடுப்பில் பாங்காக வேட்டியுடுத்தி திருநீறும் சந்தனமும் துலங்க இவளை வட்டமிடும் பக்தனுக்கு படிப்பு பூச்சியம்தான். நாலாவது வரையிலும் பள்ளிக்குச் சென்றானென்று சொல்வார்கள். ஆனால் சுவரொட்டித் தமிழைக் கூடப் படிக்கத் தெரியாது. இறால் தரும் செழிப்பில், அப்பன், அம்மை, கூடப் பிறந்த அறுவர், மயினி, மச்சான் எல்லோருமாக நூறு ரூபாய்க்குப் பிளஷர் எடுத்துக் கொண்டு நாகர்கோயிலில் சினிமா பார்த்து ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு வருகிறார்கள். தீபாவளிக்கு நூறு ரூபாய்க்குப் படய்க்கமும் மத்தாப்புவும் வாங்கினார்கள். ஞாயிற்றுக்கிழமைக்கு மறுநாள், கடலிலிருந்து திரும்பும் வரையிலும் அடுப்பில் பூனை படுத்திருக்கும். இந்தக் காரணங்களால், ஆத்தாளும் அண்ணனும் மேனகாவுக்கு அநந்தனைக்கட்ட விருப்பமில்லாமல் இழுக்கடிக்கின்றனர். தன் தங்கச்சி இந்த அன்றாட மேடுபள்ள அலைகளுக்கே ஈடுகொடுக்க இயலாத வாழ்வில் முன்னுக்குப் போக முடியாமல் மாயக்கூடாது என்பது மணியனின் எண்ணம். என்றாலும் வேறு மாப்பிள்ளை கிடைப்பானோ என்பது பிரச்னை.

     இந்த ஐந்தாறு வருஷத்தில் நசரேனின் குடும்பம் தூத்துக்குடியிலேயே ஊன்றிவிட்டதென்றாலும் அவர்கள் மதம் மாறாமல் கிறிஸ்தவர்களாகவே இருந்தாலும் இறால் ஏஜ்ன்ட் என்ற நிலையில் ஜான் ஐஸ் வண்டியை ஓட்டிக் கொண்டு அந்தப் பக்கம் அன்றாடம் வருகிறான். அவர்கள் வீடு தேடி வராமல் போவதில்லை. மாலையோ, மதியமோ, முன்னிரவோ எப்போது வேண்டுமானாலும் வந்து, சிறு ஏஜன்டுகள் சேமித்து ஐஸ் பெட்டியில் வைத்திருக்கும் இறாலை வாங்க வருகிறான்.

     “பர்ள் லாப்ஸ்டர்ஸ்...” என்ற எழுத்துகளைத் தாங்கி வரும் பெரிய மஞ்சள் நிறச் சரக்கு வண்டி - அதன் மீது பெரிய மீசையுடன் இரண்டு றால் ஒன்றையொன்று வளைந்து கவ்வும் மலைபோல் வண்ணச் சித்திரம் தீட்டப் பெற்ற வண்டி, மணியனின் வீட்டு வாயிலில் நிற்கிறது. பூத்துவாலையைத் தலையில் சுற்றிக் கொண்டு, கருத்த முடிச்சுருள்கள் வழிய, அரும்பு மீசைக்குக் கீழ் புன்னகை இலங்க, சட்டைக்குள் மார்பில் குரிசுடன் தங்கச்சங்கிலி தவழ, அவன் வருகிறான். அந்தி மங்கி இருள் பரவும் நேரம் அப்பன் கட்டிலில் அமர்ந்து சாராயம் பருகிக் கொண்டிருக்கிறார்.

     “மாமோய்...! எப்பிடி இருக்கீரு!...” என்று விசாரித்த வண்ணம் அவரருகில் அமருகிறான்.

     அப்பச்சி மிக நுட்பமாக அவனை எடை போடுவதுபோல் கூர்ந்து நோக்குகிறார்.

     ஜான், அவரை விசாரித்துவிட்டுப் போகவா வந்திருக்கிறான்?

     “வாலே, நிதம் கடாபுடாண்ணு இந்தக் காரு வண்டிய ஓட்டிட்டு வாரியே? ஆத்தா, அண்ணெய ஒருக்க கூட்டிவார தானே?”

     “ஆத்தாளைப் பாக்குறதேயில்ல மாமோ! மாமியாளும் மருமவளும் பொழுது விடிஞ்சா மல்லு நின்னிட்டிருந்தா. இப்பம், ஆத்தா பெரிய கோயிலுக்குப் பக்கம் தனிச்சு வந்திரிச்சி. நா இங்கிய போன மயினி சொணங்குவா; அங்கிய போனா ஆத்தாளுக்குச் சுணக்கம். றால் கொண்டு போயி பாட்டரில் போட்டுட்டு அங்கியே எங்கனாலும் சோறுண்ணுப்போ... மாமோ... றாலுக்கு ஏகமா டிமாண்ட். ஃபாரின் எக்ஸ்சேஞ்ச் கொண்டிட்டு வருதுண்ணு டெல்லி சர்க்காரில் மிசின் போட்டுக்குண்ணு மூணு கோடி சாங்சன் பண்ணியிருக்கா. மரியானண்ணெ லாஞ்சி வாங்கணுமிண்ணு அப்பமே சொன்னா. நா எப்பம் வந்தாலும் அண்ணெயப் பாக்குறதில்ல...”

     அப்போது வெளியிலிருந்து வரும் மேனகா தூக்குப் பாத்திரத்துடன் உள்ளே செல்கிறாள்.

     “...ஹ... மேரியா இது? பொட்டுதொட்டு, சலங்கையெல்லாம் போட்டிருக்கவே, ஆளே மாறிட்டாப்பல இருக்கி!”

     அப்பன் எங்கோ பார்த்துக் கொண்டு பெருமூச்செறிகிறார்.

     “நீங்கதான் மாறாம நிண்ணிட்டீங்க. எப்படியெல்லாமே நினைச்சிருந்தம். அந்தப் பொண்ணு கன்யாஸ்திரீயாயிட்டா. இல்லேண்ணா, நசரேனக்க அவதா பொஞ்சாதியாயிருப்பா. உங்கப்பச்சி எம்மாட்டுக்கு ஆச வச்சிருந்தாரு! எல்லாம் ஆண்டவ நெனப்பு. இப்பமும் கோயில் மணியடிக்கையிலே ‘யேசுவே’ண்டுதா வாயில வரும். இவங்கல்லாம் இந்தக் கோயிலுக்குப் போறாங்க, கணவதிங்கிறாங்க, முருவாண்ணு பாட்டுப் படிக்கானுவ, திருச்செந்தூர் கும்பிடப் போறானுவ, பஜன பண்ணி கல்பூரம் கொளுத்தறானுவ, துண்ணூறு பூசுதானுவ, எனக்கு அதொண்ணும் நெத்தத்தோடு பாந்தமாவல. எனக்குத் தெரிஞ்சி, அறிஞ்சி, அந்தக் கடலொண்ணுதா சத்தியமாயிருக்கி. அந்தச் சாமி ரூம்பில வச்சி, போலீசு எங்களை அடிக்கையிலே, மச்சிலே அவனுவ ஜபம் பண்ணிட்டிருந்தானுவ. என்ன ஜபம்? ஆருக்கு வேண்டிப் பண்ணினாரு? அப்பல்லாம் எத்தனையோ ராவில, கோயில் பீடத்தில் - மாதா சுரூவத்தின் கண்ணிலேந்து நீரொழுகுறாப்பல நெனச்சிட்டிருப்பே. அவனுவ பாத்திட்டு அறுவு ஒரச்சி மன்னாப்புண்ணு ஓடிவந்து கேக்கணுமிண்டு நெனப்பே. அதொண்ணும் நடக்க இல்ல - பின்னக்க இவனுவ கொடத்து தண்ணியத் தெளிச்சிட்டானுவ. சாமிஜி, தீச்சைண்ணு தண்ணியத் தெளிச்சி விபூதி இட்டுப் பேரை மாத்திச் சொல்லிட்டாரு...”

     “நீங்களுந்தானே ஆனீங்க மாமோ?”

     “ஆனம். இந்துண்டுதா சொல்றானுவ. பேரைக் கூடத்தா மாத்திப் போட்டானுவ...”

     “ஒங்கக்க பேரென்ன மாமோ? எனக்கு எத்தினி தபா கேட்டாலும் பேருமட்டும் மறந்து போவு...”

     அவர் சிரித்துக் கொள்கிறார்.

     “என்னிய பேரு? என்னியோ பேரு ராமுசாமி, கிருஷ்ணசாமி, சுப்புரமணியண்ணு பேரு... பெறந்துதும் பாதிரி அப்பெயும் ஆத்தாளும் கையிலவச்சி இஸ்பிரி சாந்து வைச்சி சாமி கூட்டி ஞானஸ்நானம் குடுக்கிறப்ப இருதய ராஜிண்டு வச்சாங்க. இம்மாங்காலமா இருதயராஜ் இருதய ராஜிண்ணே ஒறச்சிருக்கி. கடக்கரையில எல்லாரும் இருதயமாமோண்ணு, இருதய மச்சாண்ணுந்தா கூப்பிடுவா. புதுப்பேரு இப்பமும் ஆருக்குச் சட்டுனு வருது! நா மேரிங்கே செயமணிங்கே, பீற்றர்ங்கே, சார்லசுங்கே...”

     மேனகா இலைப் பொதியில் ஏதோ கொண்டு வருகிறாள்.

     “என்னது?”

     “வெள்ளிக்கிளம கோயில்ல பொங்கலு பெரசாதம்...” என்று ஜானுக்கும் அப்பனுக்கும் கொடுக்கிறாள்.

     அவன் தலையாட்டிக் கொண்டு வாங்கிச் சாப்பிடுகிறான்.

     “இந்துவானது நல்லாத்தானிருக்கு... மாமோய்! நா கூட இந்துவாயிரலாமிண்ணு பாக்கேன்!” என்று மேனகாவுக்குத் தெரியும்படி கண்களைச் சிமிட்டுகிறான்.

     “நீங்கதான் அப்பமே ஒதுங்கிட்டீங்களே! வேற வழியில்லாம போச்சி. பெஞ்ஜமின் அப்பா உன்னக்க அப்பெ எல்லாரும் இருந்த காலம் வேற. துணிஞ்சி சண்டை போட்டானுவ. ஆண்டகையே எதுத்து இந்துவாவும் ஆனம். ஆருக்கும் துவி தெறிப்பு அஞ்சுமீன் ஒண்ணுமில்லேண்ணாச்சி. அந்த சாமியும் போயிற்றா. ஆண்டகையும் வேற தெசக்கி மாத்தமாயிட்டாருண்ணு சொல்றா. எல்லாம் மாறுது. கஷ்டப்பாடுண்ணு வந்து கலங்கறப்ப றாலுக்கு வளமை வருது. எது எப்படிண்ணாலும் கடல் சத்தியம். எப்பமேனும் கடல் நாச்சி வாங்கலாயிருந்தாக்கூட தாயேண்ணு நினைச்சிட்டா மோசஞ் செய்ய மாட்டா. நசரேனும் இவனும் சுழலியில் அம்புட்டு வார இல்லியா?... ஏக்கி உன்னக்க ஆத்தாளெங்கட்டீ?”

     “பெரசாது மாம பொஞ்சாதிய ஆசுபத்திரில விட்டிருக்கியா. ஆத்தா போயிருக்கு...”

     “இந்தக் கரயில முன்ன இவெதா நாசுவத்தி. இப்பம் ஆசுபத்திரி கெட்டி இருக்கு. கன்யாஸ்திரீங்க பிரசவம் பாக்க வந்திருக்கா. என்னியாண்டும் இவெ இடுப்புவலிப் படுறவளப் பாத்திட்டுப் போறா!”

     ஜான் எழுந்திருக்கிறான்.

     “அப்ப நா வாரம். இன்னும் தாழை, ஒவரி, மணப்பாடு எல்லாம் நிப்பாட்டி நிப்பாட்டிப் போவணும். மச்சா வந்தா நான் வந்து போன சங்கதி சொல்லும்...”

     “நீயே வந்து சொல்லிக்கலே...”

     மேனி சிரிக்கிறாள்.

     “பாரு மேனி? நா வந்து சொல்லணுமா, வந்து போன சங்கதிய, மாமெ... ரொம்பக் குறும்பு...”

     “பொறவென்ன? அவென்னியோ தோப்பு வாங்கதா போயிருக்கா, வாழத்தோப்பு. நா இந்தப் பொண்ணுக்குக் கல்யாணம் கெட்டிச்சிக் குடுக்காண்டாமாண்ணிருக்கே. இப்பம் நாலு தாவில பாக்க ஏலாம, இத்துண்டு ஒரு தடக்க வேற ஆயிரிச்சி. அகுஸ்தீன் பயலுக்குக் கேக்கா. அவெ நட்டமா நிக்கியானே தவுர, ஒரு எழுத்துப் படிக்கத் தெரியாது. இது படிச்ச புள்ள. அவெ ஆத்தா சண்டக்காரி. அவெ குடிக்கான்னல்லாம் மரியானும் குறுக்கஞ்சொல்லிட்டுப் போறா. இந்தக் கடக்கரையில எந்தத் தொழிலாளி குடிய்க்காதவெ, எந்தப் பொம்பிள சண்டக்காரி இல்ல? அவளவுளுவ நாக்கக் கெட்டவித்து விட்டா புளுத்த நா குறுக்க போவாது. பனமட்ட சிலும்புது. கடல் எரயிதுண்டு ஒறக்கம் குலயிதுண்ணு சொல்லலாமா?”

     “வார மாமோ... மேனி, வாரம்...”

     அவன் பின் மேனகா தொடர்ந்து வாசலுக்குச் செல்கிறாள். ஐஸ் கட்டிகளிலிருந்து கீழே நீர் இற்றுச் சொட்டியிருக்கின்றது. அவன் முன்புறக் கதவைத் திறந்து கொண்டு ஏறி அமருகிறான்.

     அவன் புன்னகைச் சமிக்ஞையால் விடை பெறுவதை நிலவின் கிரணங்கள் அவளுக்கு உணர்த்துகின்றன.

     உலகம் இன்ப மயமாக இருக்கிறது. உடலின் ஒவ்வொரு அனுவிலும் மலர்ச்சியின் பூரிப்பு மத்தாப்புச் சொரியும் துளும்பல். வீடு திரும்புகிறாள். புறக்கடைக் கதவு சாத்தியிருக்கவில்லை. தொலைவில் கடலில் நட்சத்திரங்கள் விழுந்தாற் போன்று சில விசைப்படகுகள் தெரிகின்றன.

     வாழ்க்கை முன்னேறுகிறது.

     “நானும் இந்துவாவேன்” என்றல்லவா அவன் சொன்னான்? அவனைக் கல்யாணம் செய்து கொண்டால் இந்தக் கடற்கரையின் அத்துவான வாழ்வில் அல்லல்பட வேண்டாமே...!