உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
அத்தியாயம் - 25 தபால்காரர் இந்தப் பெயர் மாற்றம் வந்த பிறகு, இந்துப் பெயர்களானால் கணபதி கோயிலில் கொண்டு வந்து அவற்றுக்குரிய தபால்களைப் போட்டு விடுவார். மேனகா தினமும் அங்கு வந்து குலசேகர வாத்தியாரிடம் தபால் இருக்கிறதா என்று கேட்பாள். “இத பாரு. இது உங்கப்பாவுக்கான்னு பாரம்மா?” ‘இருதயராஜ் தெற்குத் தெரு கன்னிபுரம்’ என்று முத்து முத்தாக முகவரி துலங்குகிறது. அப்பாவுக்குக் கடிதம் எழுதும் ஒரே ஆள், அவருடைய மூத்த மகள் லில்லிதான். அவள் இப்போது ஸிஸ்டர் மோனிகாவாகி விட்டாள். தூத்துக்குடி கன்யாமடத்திலிருந்து, செவிலிப் பயிற்சி பெற்று, புனித அன்னம்மாள் மருத்துவமனையில் பணியாற்றுகிறாள். அவர்கள் இந்து சமயம் சார்ந்து விட்டாலும், அண்ணன் அவளை இடையில் பல முறைகள் சந்தித்துவிட்டு வந்திருந்தாலும், அவள் கடிதத்தை அப்பாவின் பழைய பெயருக்கு மட்டுமே எழுதுகிறாள். பழைய பெயரில்தான் அவள் தோத்திரம் சொல்கிறாள். அன்பு தெரிவிக்கிறாள். தோத்திரப் பட்டியலிலிருந்து அண்ணன் நீக்கம் பெற்று விட்டிருக்கிறார். அப்பச்சியைப் பார்க்க மிகவும் ஆவலாக இருப்பதாலும், மிகவும் விருப்பமாக இருப்பதாலும், ஒருமுறை அவர் தூத்துக்குடிக்கு வந்து போக வேண்டுமென்றும் கோரிக் கடிதம் எழுதியிருக்கிறாள். மதம் மாறிவிட்டதனால் தன்னைக் குடும்பத்திலிருந்து அப்பன் ஒதுக்கிவிடக் கூடாதாம். அவளுக்கு மேரி, செயமணி எல்லோரையும் பார்க்க ஆவலாக இருக்கிறதாம். அழைத்துவர வேண்டுமாம்... மேனகா கடிதத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வருகிறாள். ஆத்தா மீன்கண்டத்துக்கு மிளகாயிடித்துக் கொண்டிருக்கிறாள். முற்றத்தில் குங்கும இதழ்களுடன் விளங்கும் துளசிச் செடியில் மிளகாய்த்தூளும் பறக்கிறது. மயினி கணேசுவுக்குச் சோறூட்டிக் கொண்டிருக்கிறாள். இரண்டாவது குழந்தை அவள் வயிற்றில் வளருகிறது. “அப்பா கடலுக்குப் போயி வந்தாயிற்றா?...” ஆத்தா நிமிர்ந்து பார்க்கிறாள். “ஏ...” “அக்கா எழுத்துப் போட்டிருக்கு...” ஆத்தாளின் கண்களிலிருந்து மிளகாய் நெடி தாளாமல் கண்ணீர் வடிகிறது. “ஆமா...” “அக்காளுக்கு எல்லாரையும் பார்க்கணுமின்னிருக்காம். வாரச்சொல்லி எழுதியிருக்கு... போவம்மா...! எனக்கும் அக்காளைப் பார்க்கணமிண்டிரிக்கி, போவம்மா...” “ஒங்கப்பச்சி வரட்டும் டீ...?” அப்பச்சி, அண்ணன், தம்பி பீற்றர் மூவரும் வரத்தில் சென்றிருக்கின்றனர். புதிய வாழ்வின் துவக்கத்தில் கூட்டிய மரம், வலைகள். “சாமி, கணபதி, முருவா! ரொம்ப றால் பட்டிருக்கணும், எல்லாம் றாலாவே வாரணும்...” என்று வேண்டிக் கொண்டு அவள் புறக்கடையில் இறங்கி நிற்கிறாள். கடற்கரையை ஆராயும் கண்களுடன். அப்போது, கோளா வலையைத் தூக்கிக் கொண்டு, முடியில் எண்ணெயும், வாயில் வெற்றிலைச் சிவப்பும் வழிய, அகுஸ்தீன் அவளை அணுகி வருகிறான். “ஏம் மேனவா? ஆரைப் பாக்கே?” அவள் முகத்தைத் திருப்பிக் கொள்கிறாள். ஆனால் அவன் மிக நெருங்கி அவளுடைய கன்னத்தோடு இழையும் பாங்கில் வருகையில் அவள் சடக்கென்று திரும்ப முயலுகையில் முள்ளிச் செடியின் மீது விழுகிறாள். அகுஸ்தீன் அவளைத் தொட்டுத் தூக்கிவிடும் சாக்கில் அவள் கன்னத்தில் இதழ்களைப் பதித்து விடுகிறான். ஈரவலை அவள் மீது படிய, அவன் தன்னை வளைத்து விட்டதை உணர்ந்து வெறுப்புடன் பற்றித் தள்ளுகிறாள். “சீ...?” அவன் அவள் பிடியை விட்டாலும், “சிக்கிட்டியா இன்னிக்கி?” என்ற வெற்றிச் சிரிப்புச் சிரிக்கிறான். அவளுக்கு அடக்க இயலாத கோபம் வருகிறது. உள்ளே வந்து புறக்கடைக் கதவை அறைந்து சாத்திவிட்டுப் போகிறாள். நடுவிட்டுக் கட்டிலில் விழுந்து கன்னத்தை அழுத்தி அழுத்தித் துடைக்கிறாள். மிருகம்...! ஜானுடன் அவள் எதுவுமே பேச முடியவில்லையே? எப்படியேனும் இந்த மிருகத்திடமிருந்து அவளை விடுவித்து அழைத்துப் போய்விட வேண்டுமென்று அவனிடம் சொல்ல வேண்டாமா? வீட்டில் யாருமில்லாத சமயமென்று இருப்பதில்லை. அவனைத் தனிமையில் எங்கு, எப்படிச் சந்திப்பாள்? அவன் எப்போது வந்தாலும், ஆத்தா இருக்கிறாள்; இல்லையேல் அப்பா, இல்லாவிட்டால் மயினி, ஊமை, ஜெயா... யாரேனும் இருக்கிறார்கள். பீடி பாக்டரிக்குக் கூட அவள் தனியாகப் போக முடிவதில்லை. யாரேனும் வருகிறார்கள். மாதா கோயில் பக்கமுள்ள கிணற்றுக்கு இவர்கள் நல்ல தண்ணீருக்குச் செல்வதில்லை. இவர்களுக்கென்று தனியாக ஒரு கோடியில் ‘போர்’ போட்டு ‘பம்ப்’ வைத்திருக்கிறார்கள். மையவாடியும் இவர்களுக்கென்று தனியாக முளைத்திருக்கிறது. ஒதுக்கலுக்குப் பெண்பிள்ளைகள் அதைத் தாண்டித்தான் முள்ளிக் காட்டு மறைவுக்குச் செல்ல வேண்டும். அங்கே நின்றால் சாலையில் வண்டிகள் வருவது தெரியும். அன்று மாலை அங்கே நின்றுதான் இறாலெடுக்க வரும் அந்த வண்டியோட்டியின் கவனத்தை ஈர்க்க வேண்டும். “ஏக்கி, கெனாக் காணுத? வெய்யப் போயிட்டிருக்கி, முத்தம் பெருக்கி மூங்கிப்பாய விரிச்சிப் போட்டீ! இத பாரு, புள்ள ஒண்ணுக்கிருந்திருக்யான் சொளவில, தண்ணி ஊத்திக் கழுவி வய்யி? துணிகெடக்கு... தொவக்கிய இல்ல. ரெண்டு கொடம் நல்ல தண்ணி தூக்கியாந்து வக்கியாம, எட்டி மலச்சி மறிச்சி நிக்கே? எந்த பயலாண்டும் தொட்டுச் சிலுப்பினானா? ஏட்டி, மூஞ்சி நெத்தம் போலச் செவக்கு? உளுமையென்ன?...” “ஒண்ணில்ல... நா அப்பச்சி வருதாண்ணு பாத்தே...” என்று மேனி முணமுணத்துக் கொண்டு சளகை நீரூற்றிக் கழுவி வைக்கிறாள். கணேசுவுக்குச் சோறூட்டி விட்டு அவன் முகம் கழுவி மயினி அவனை அவளிடம் நீட்டுகிறாள். “நீ இவனப் பாத்துக்க. நா தண்ணி கொண்டாரே, முத்தத்தில காய வக்கிறதயெல்லாம் மண்ணில கொண்டு போடுவா...” மேனகா அவனைத் தூக்கிக்கொண்டு மயினியோடு பம்பு குழாயடிக்குப் போகிறாள். அவனுக்குக் கோழியைக் கண்டால் இறங்கி ஓட்ட வேண்டும்; ஆட்டைக் கண்டால் பிடிக்க வேண்டும். பைநிறைய சிங்கிறாலுடன் குரூஸ் பையன் போகிறான். “இன்னிக்கு நூறு ரூவாக்கி றால் படுமா, மயினி? ரெண்டு வெரல்ல ஒண்ணத் தொடும்...” புனிதா நீண்ட விரலைத் தொடுகிறாள். “போ மயினி! கெடக்காதுண்ணிட்ட. இன்னிக்கு நூறு ரூபாக்கிக் கெடச்சிண்ணா, சினிமாவுக்குப் போவலாண்ணு அண்ணெட்டக் கேக்கலாமிண்ணிருந்தே.” “நா வேற நெனச்சிருக்கே. மினுமினுண்டு ஒரு துணி புதிசா வந்திருக்கி. பிளவுஸ்போட்டா அளவா ஒடம்போட ஒட்டியிருக்கி. எங்க மாமி தச்சிட்டிருக்கா - பச்சையில நல்லாயிருக்கி.” “எனக்கு அவுங்க மிசின்ல தச்சிக்குடுத்த பிளவுஸ் அளவா இல்ல. நா மிக்கேல் டயிலரிட்டக் குடுத்துத் தச்சுக்கப் போறம், இனி.” “நாவர்கோயில் கடயில ஒரு மாதிரி தச்சாப்பல ப்ளவுசு வச்சிருக்கா. அப்பிடியே பிட்டா அளவா ஒட்டிக்கிது. இருவது ரூவாயாம. அன்னைக்கு நம்ம கோயிலுக்கு நாடார் விளையிலேந்து சம்முக நாடார் பொஞ்சாதி கூட, அவ கொழுந்தியாளைக் கூட்டி வந்திருந்தாளே, அவ போட்டிருந்தா. நல்லா இருந்திச்சி. நாமும் அப்பிடிக் கருப்பில ஒண்ணு வாங்கி வச்சிட்டா எந்தச் சீலையிண்ணாலும் ‘மேச்’ ஆவும். ஒங்கண்ணெ நீ சொன்னாத்தா சரிம்பா. நாங்கேட்டா ஒடனே ஆத்தா காதுக்கு எட்டிரும். ஆத்தா சிலும்பிட்டிருப்பா. ஒங்கப்பச்சி குறுக்க என்னியாலும் பேசுவா. சண்டை பெலக்கும்...” “மயினி, அக்கா காயிதம் போட்டிருக்கி, எல்லாரையும் பாக்கணுமிண்ணு. நாம ஒருக்க தூத்துக்குடிக்குப் போவலாம். நாவர்கோயில்தான் பாத்திருக்கம். முன்ன இந்துவானப்ப எல்லாரையும் கூட்டிட்டு திருச்செந்தூர் போனப்பகூட நா ஒதுங்கியிருந்தால போவ இல்ல. இப்பம் எல்லாரும் ஒருக்க போவலாம் மயினி.” “ஆமா, நசரேனக்க ஆத்தா ஏசம்மா மாமி எங்க பக்கம் ஒறமுற தா. எங்கக்க பாட்டாவும், யேசம்மா மாமி அப்பச்சியும் ஒரு முறைக்கி சகல தா.” “நசரேனண்ண பொஞ்சாதி, அவெண்ணே, நசரேன்லாம் முன்னொரு நா ஆரோ வெள்ளக்காரங்களைக் கூட்டிட்டுக் காரில வந்தப்ப, அவ காதில மீனுமாதிரி ஒரு வளையம் போட்டிருந்தா. மீனு கண்ணு பச்சை. முழுக்க செவப்புக்கல்லெழச்சி நல்லாயிருந்திச்சி. அதுக்கு நூறுரூவா கூலிண்ணு ஜெயா சொல்றா, ரூபிக்கிக்கூட அப்பிடி ஒண்ணு இருக்கிண்ணு. அதுமாதிரி ஒண்ணு நமக்கும் பண்ணிக்கணும் மயினி... நீ பாக்க இல்ல?” “நா என்னியாலும் ஒங்கண்ணெகிட்ட சொன்னேண்ணா ‘ஏட்டி கெடந்து புலம்புத, இப்ப ஒண்ணும் கெடயாது. தோட்டத்துல வாழ வச்சி அடுத்த பொங்கலுக்குக் கொல தள்ளுறப்ப நாவர்கோயில் சந்தக்கி ஏத்திவிட்டு வாரப்ப உனக்கு என்ன வேணுமோ வாங்கிக்க’ம்பா!” குழாயடியில் பெண்கள் சளசளப்புக்குக் குறைவில்லை. அடி பம்பை அடித்துக்கொண்டே சினிமா, சேலை, நகை என்று பேசுகிறார்கள். கம்பும் கையுமாக வாத்தியார் அங்கு வந்து ஆங்காங்கு விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர் சிறுமியரைப் பள்ளிக்கு விரட்டிச் செல்கிறார். அந்தோணியார் பட்டத் தலைகளும், திருநீற்று நெற்றிகளுமாக இருந்தாலும் மூக்கொழுகலும் அழுக்கும் எல்லோருக்கும் பொதுவாக இருக்கின்றன. “ஏம்மா, பிள்ளைங்களைக் கொஞ்சம் சுத்தமாக் குளிப்பாட்டித் தலை சீவித் துடைத்து பள்ளிக்கூடத்துக்கு ஒழுங்காக அனுப்பக்கூடாதா?” என்று அவர் சொல்லிக் கொண்டு போகிறார். அது காற்றோடு செல்லும் சொற்களாகப் போகின்றன. “அடுத்த வாசம் கணேசை, மேரி ஸ்கூலுக்குத்தா அனுப்பணும் மயினி. அங்கத்தா இங்கிலீசு சொல்லிக் குடுக்கா. குளோரிந்தா புள்ள மூணு வயசு, இங்கிலீசு பாட்டெல்லாம் படிக்கா... நூறு வரயிலும் இங்கிலீசில நெம்பர் சொல்லுறா...” “ஒங்கண்ணா சாமியார் ஸ்கூலில போடுவாரா?” “அண்ணெ கெடக்கு. நா எங்க கணேச, இங்கிலீசு பள்ளிக்குடத்திலதாம் போடுவ...” என்று கூறிக் குழந்தையின் கன்னத்தில் மேனகா முத்தமிடுகிறாள். சாலையில் பஸ் ஒன்று வருகிறது. “மயினி, நீ தண்ணி அடிச்சிட்டு வார வரைக்கும் நா இங்கே நிக்கே. இவெ அங்கிட்டு வந்தா நாந்தா பம்படிப்பேண்ணு வம்பு பண்ணுவா!” என்று அவள் முட்செடிகளைக் கடந்து சாலையோரம் நடக்கிறாள். முன்பெல்லாம் அந்தப் பாதை குண்டும் குழியுமாக இருந்தது. லயனலின் ஜீப்பே தூக்கித் தூக்கிப் போடும். இப்போதோ தார் சாலையாகச் சீராக இருக்கிறது. நாகர்கோயில், தூத்துக்குடி, திசையன்விளை, என்றெல்லாம் செல்லும் பேருந்துகள் உள்ளே கிளைச்சாலையில் வந்து கன்னிபுரத்தைத் தொட்டுவிட்டுச் செல்கின்றன. ஒரு நாளைக்கு நான்கு பஸ்கள் வந்து செல்கின்றன. அவள், பஸ் செல்வதை வேடிக்கை பார்த்தவளாகக் குழந்தையுடன் பேசிக்கொண்டு நிற்கையில் கடகடவென்று அதிர்ந்து கொண்டு அந்தக் கல்றால் படம் போட்ட வண்டி வருகிறது; தென்னமரத்தடியில் நின்றுவிடுகிறது. ஜான் இறங்கி வருகிறான். தென்னமட்டையில் இரண்டு பச்சைக் கிளிகள் ஊஞ்சலாடுகின்றன. அந்த மரங்களெல்லாம் அமலோற்பவத்துக்குச் சொந்தமானவை. மழை பெய்த பசுமை பொங்கிப் பூரித்திருக்கிறது; இறால் தந்த வண்மை செழித்திருக்கிறது. “ஆரை எதிர்பாத்து தேவகுமாரி நிக்கி?” மகிழ்ச்சிப் பொங்கலின் சிரிப்பு பூக்களாய்க் குலுங்கப் பூரித்துப் போகிறாள் அவள். “றாலெடுக்க வரும் ராஜ குமாரரைப் பாத்துத்தான்...” என்று மொழிந்து நிலம்பார்க்கத் தலைகுனிகிறாள் மேனி. “அடி சிங்கிறாலே...!” “நீங்க இந்துவாயிடுவீங்களா?” கவலையும் ஏக்கமும் கனக்க உடனே தொடரும் கேள்விக்கு அவன் பதில் கூறாமல் கீழே குந்தி கட்டெறும்பைப் பிடிக்கும் கணேசுவைத் தூக்கிக் கொண்டு வண்டிக்குப் போகிறான். அவனுக்கு ஒரே மகிழ்ச்சி. குழலை அமுக்கிக்காட்டி, நிஜார்ப்பையில் கை விட்டு ஒரு மிட்டாயைக் கொடுத்து இருக்கையில் அமர்த்துகிறான். மேனகா மகிழ்ச்சியும் பரபரப்புமாக, வண்டிக்கருகில் ஓடி வருகிறாள். “என்னிய அவனத் தூக்கிட்டீங்க? மயினி இப்பம் தண்ணி எடுத்திட்டு வரும்...!” “நா இவனக் கொண்டு போற. விரிசா ஏறு...” காய்ச்சல் வேகப் பரபரப்பு. அவன் கையைப் பற்றி அவளை ஏற்றுகிறான். ஐஸ் பெட்டியிலிருந்து நீர் கீழே சொட்ட, வண்டி திரும்பி வட்டமிட்டு எங்கோ போகிறது. வளைந்து அவன் கை அவளை நெருக்கி அழைக்கிறது. “சும்மா இரீம்... புள்ள... அவெ பாக்கா... எப்பிடியோ இருக்கி...” அவளுக்கு மூச்சுத் திணறுகிறது. “பாத்தா என்ன? அவெக்கிப் புதிசா? அவெ ஆத்தாளும் அப்பனும் எப்படி இருப்பா?...” கணேசு சிரிக்கிறது, அரிசிப்பல்லைக்காட்டி. “வேணா வுடுங்க. நா... வூட்டுக்குப் போற...” “பொறவு மனத்தாபப்படக் கூடாது...” “இல்ல. நீங்க இந்துவாயிண்டு...” “இந்து, இந்து, இந்து, இந்துண்ணா கொம்பு முளைக்கிதா?” “எங்கண்ணெ கெட்ட சம்மதிக்கலேண்ணா?” “நா சம்மதிக்கவச்சா?” “அப்பச்சி சம்மதிக்கும். அண்ணே...” “அப்பம் உனக்குதா சம்மதமில்ல...” “ஐயோ...” “என்னிய ஐயோங்கே?” அவள் தலை குனிந்து செஞ்சாய நகத்தைக் கிள்ளுகிறாள். “உன்ன இப்பிடியே தூக்கிட்டுப் போயிற்றா சம்மதியாம என்ன செய்வா அண்ணே?” “பயமாயிருக்கி...” அவன் வண்டியை உடைமரக்காட்டினருகே நிறுத்திவிட்டு அவளை நெருங்கி அணைக்கிறான். கணேசு சிரிக்கிறது. அலைவாய்க் கரையில் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
|