உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
அத்தியாயம் - 27 மணியன் தூத்துக்குடிக்குக் கிளம்புகையில் நசரேனிடம் வெட்டு ஒன்று துண்டு இரண்டாகப் பேசிவிட வேண்டும் என்று தான் கிளம்பினான். தாயும் மகனும் இரண்டுபட்டுப் போனதை அவன் அறிந்துதானிருந்தான். என்றாலும், ஜானைப் பார்த்துப் பேசுவதைக் காட்டிலும், அவன் மனதில் ‘கர்வக்காரி’யாகக் கருத்தூன்றி விட்ட தாயிடம் பேசுவதைக் காட்டிலும், அவனுடன் நெருங்கிப் பழகிய நண்பனிடம் இந்தப் பிரச்னைக்கு முடிவு காணலாம் என்று இவர்கள் வீட்டைத்தான் முதலில் தேடி வருகிறான். பஸ்ஸை விட்டு இறங்கி ஓட்டலில் சாப்பிட்ட பின்னரே அவன் வருகிறான். நல்ல வெயில் நேரம். ஞாயிற்றுக்கிழமை. பூக்கள் வாடித் துவண்ட முன் வாயிலில் அவன் வந்து நிற்கிறான். உள்ளிருந்து ரேடியோவோ, இசைத்தட்டோ, ஏதோ சங்கீதம் செவிகளில் விழுகிறது. கறுப்புக் கண்ணாடியும் புள்ளிச் சட்டையுமாக ஒரு இளைஞன் உள்ளிருந்து வந்து வாயிலில் நின்ற ஸ்கூட்டரைக் கிளப்பிக் கொண்டு செல்கிறான்; இவனை யாரென்று கூடக் கேட்கவில்லை. மணியன் உணர்ச்சியை விழுங்கிக் கொண்டு, மணியடிக்கும் பித்தானைப் பற்றிய எண்ணமின்றி, கதவைத் தட்டுகிறான். உள்ளிருந்து ஒரு சடைநாய்க்குட்டி, வள்வள்ளென்று ஓடி வருகிறது. அது குலைக்கும் ஓசைதான் நசரேனின் மனைவியைத் தள்ளி வருகிறது. சென்ற முறை அவன் பார்த்ததுக் கிப்போது பருத்துவிட்டாள். “ஓ, வாங்க, வாங்க, மணியண்ணா, எங்களை ஞாபகம் வச்சுட்டு இப்போதாவது வந்தீங்களே?...” “ஞாபகமில்லாம என்ன?... நசரேனில்லியா?” அவள் அவனை உள்ளே சோபாவில் சென்று உட்கார வைத்து விசிறியைப் போடுகிறாள். குழந்தைக்கு, நான்கு வயசிறுக்கும்; பெண்; படிப்புச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறாள் என்று புரிகிறது. நசரேனின் குட்டித் தங்கை லிஸியைப் போல் அச்சாக இருக்கிறது. ‘பிள்ளைங்க இருக்கு, நெட்டமா வெத்துக் கையோட வந்திருக்கே!’ என்று ஆத்தா கூறுவது நினைவில் வருகிறது; வெற்றுக்கையுடன் தான் வந்திருக்கிறான். “அத்தானுக்கு மன்னார் மடையில் தொழில், மாசம் ஒருநாள் தான் வராரு. இப்பத்தா தம்பி போனா... ஸ்கூட்டரில் போயிருப்பானே, எங்க சித்தாத்தா மகன்... ஊரில எல்லாரும் சவுக்கியமா? எப்ப புறப்பட்டு வந்தீங்க? வாங்க, கைகால் கழுவிட்டு சாப்பிடலாம். கதைப்போம்...” “இல்ல மயினு. சாப்பாடெல்லாம் ஆயிப்போச்சி...” அவளைக் கண்டதுமே அவனுடைய பொங்கெழுச்சி ஆறி, ஒரு பயபக்தி தோன்றிவிடுகிறது. அது பணத்துக்கு மட்டும் உரிய மரியாதையன்று. அவள் படித்தவள்; பண்பாகப் பேசத் தெரிந்தவள். காலைப் பரப்பிக் கொண்டு வாயிலில் அமர்ந்து பேன் பார்த்தவாறு பதில் சொல்லும் பெண் அல்ல. “சாப்பாடெல்லாம் ஆச்சா? எங்கே... அத்தெயப் பாத்துட்டுத்தா வரீங்களா?...” “இல்ல... எனக்கு அந்த வீடு எங்கேண்ணே தெரியாது...” “பின்ன?... ஓட்டலுக்கா போனீங்க?...” அவன் சிரிக்கிறான். “போங்க... உங்களிடம் பேசவே கூடாது. இவ்வளவுக்கு வேத்து ஆளா நினைச்சிட்டீங்க...?” “இல்ல மயினி மன்னாப்பு. நானொரு அவுசரகாரியமா வந்த... ஜான் இங்க நிதம் வருவானா?” அவள் புருவம் சுருங்குகிறது. “இல்ல... மணியண்ணா, உங்ககிட்டச் சொல்லுறதுக்கென்ன? ஜானும் வரதில்ல. லிஸி, ரோஸிதா, சீமோன் யாரும் வரதில்ல. நாந்தா சர்ச்சுக்குப் போனா போயிட்டு வருவேன்...” ஒரு புன்னகைக் கீற்று தோன்றி மறைந்து விடுகிறது. கரையில் துடித்து விழுந்த மீனின் பளபளப்பை நினைவூட்டுகிறது அந்தப் புன்னகை. “அப்படியா?” என்று நெஞ்சுக்குள் கேட்டுக் கொள்கிறான். “அத்தைக்கு இங்கே எதுவுமே பிடிக்காமப் போயிற்று. எனக்கே இப்படி அவங்க தனியாகப் போனது நினைக்கவே வெக்கமா, வருத்தமாயிருக்கு. அவங்க அந்தக் காலத்தில இருந்தாப்பல எல்லாம் இருக்கணுமின்னா முடியுமா? என் தங்கச்ச் இங்கே இருக்கா. ஸ்கூலில் ‘வொர்க்’ பண்ணுறா. அவள் புருஷனும் ‘போட்’ தொழில்தான். ரோஸிதா புருஷன் வீட்டுக்கே போகல. நாஞ் சொன்னேன். தையல் படிச்சுக்கட்டுமே, சும்மா பொழுது போக்குவது நல்லதில்லன்னேன். லிஸியும் சீமோனும் ஸ்கூலுக்குப் போய் நல்லாப் படிக்கணுமின்னுதான் ஸ்கூலில் போட்டோம். லிஸி படிக்காது. நான் கண்டிச்சுப் படிக்கச் சொன்னே. அதெல்லாம் அத்தைக்குப் புடிக்கல.” “நீ யாருடி என் பிள்ளைகளை அதிகாரம் பண்ணன்னு வாயில் வந்ததப் பேசினாங்க. தினமும் இதான். அவங்க பிள்ளைங்க படிச்சு முன்னுக்கு வந்தா அவங்களுக்குத்தானே நல்லது? புருசனிடம் சண்டை போட்டுட்டான்னு ரோஸிதாவை இப்படியே வச்சிக்கிறதும் நல்லதா? எதானும் நயம் சொல்லிச் சேத்து வைக்கணுமின்னு அப்பாவும் சொல்லிப் பார்த்தார். அப்பாவுக்கு என்னை யாரானும் கெடுதலாப் பேசினா கோபம் வந்திடும். போன வருஷம் ஏர்கிராஷில என் தம்பி இறந்து போனதிலேந்து அவருக்கு ரொம்ப மனசு ஒடுங்கிப் போயிற்று. தொழிலும் பாருங்க, லட்சக்கணக்கில் கடன் வாங்கி ஒரு தொழில் நடத்துறோம்னா அதுக்குத் தகுந்த பொறுப்பு இருக்குதில்லையா? திடீர்னு லாபம் வரும்; எதிர்பாராம நஷ்டமும் வரும். குடும்பத்தில் பெரியவங்க எல்லாம் பார்த்து, பொறுத்துப் போகலேன்னா என்ன செய்ய? என்ன சொல்லியும் கேக்காம போயிட்டாங்க. இப்பக்கூட என் தங்கச்சி சொல்லிட்டிருந்தா, லிஸி மார்க்கே எடுக்கலேன்னு...” அவன் தன் பிரச்னையையே மறந்து போகிறான். கல்வியும், முன்னேற்ற மாறுதலும் ஆண்களிடையே மட்டுமின்றி, பெண்களிடையிலும் எத்தனை வேற்றுமையையும் மோதலையும் கொண்டு வந்திருக்கின்றன! நசரேன் அதிர்ஷ்டக்காரன்... “வெளிலே பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க? இவ மாமியாளக்கூட அண்டவிடாம துரத்திட்டான்னு நினைப்பாங்க. உங்க சிநேகிதரிட்டச் சொன்னா, “நீயேம் புலம்பற. அம்மா தனியே போறன்னா வுடு”ங்கறாரு. இங்கே தம்பி அண்ணெல்லாம் கூடத் தனித்தனியே வீடு வச்சிட்டிப் போயிட்டாங்க. அப்பாவும் தங்கச்சியும் தான் இருக்கிறோம். இவங்க வேத்து ஆளா? நீங்க பாத்தா சொல்லுங்க அண்ணா, வெளியே பாக்குறவங்க கேவலமா நினைக்கும்படி இருக்கில்ல இது?...” அவன் நெடுமூச்செறிகிறான். “நான் அங்கே போய்ப் பார்க்கத்தா போறேன்...” “நான் எங்க கதையே படிச்சிட்டேன் இந்நேரம். மாமா, மாமி சுகமா? உங்க கொழுந்தியாளை ஒருநாள் பஸ் நிறுத்தத்தில பார்த்தேன். பக்கத்துத் தெருவில் அவ மாமி இருக்கா. எனக்கு அப்புறம்தான் தெரியும். பிறகு வீட்டுக்கு வந்தாங்க.” “மதம் மாறிட்டா சிநேகம் கூடப் போயிடுமா அண்ணா?” “அதெப்படி?... எங்களுக்கு முழுநேரமும் தொழில்லியே போயிடுது. நா வாழத்தோப்பு ஒண்ணு வாங்கி பயிர் செய்யிறே. செரியாப் போகுது. தங்கச்சி கான்வென்டிலேந்து காகிதம் எழுதிட்டேயிருக்கா... இப்ப பாத்துட்டுப் போவணும்.” “ஆமா... நாங்ககூட அப்பாவுக்குப் போன மே மாசம் தம்பி போன செய்திகேட்டு ‘அட்டாக்’ வந்தபோது ஆஸ்பத்திரியில வச்சி ஆக்ஸிஜன்லாம் குடுத்தோம். அப்ப, இவங்கதா ஸிஸ்டர் மோனிகான்னு சொன்னாங்க... வந்ததுதான் வந்தீங்க. புனிதா, மேரி, எல்லாரையும் கூட்டிட்டுவரக் கூடாதா? நான் போன வருஷம் கொஞ்சம் நேரம் ஊருக்கு வந்திருந்தப்ப மாமா எவ்வளவு பிரியமா விசாரித்தார்? அவரையும் அழைச்சிட்டு வரக்கூடாதா?” “அவரு சொல்லுவாரு. கிளம்ப மாட்டாரு. ஊரே ஆராளியானப்ப கூட, இந்தக்கரைய விட்டு வரமாட்டேண்டிருந்தாரு... அப்பம்... நசரேன் வந்தா சொல்லும்... நா வாரம்...” “என்ன அப்படிக் கிளம்பிட்டீங்க? இருங்க... லிண்டாப் பொண்ணு, மாமாகிட்டப் பேசிட்டிரு...” என்று குழந்தைக்குச் சொல்லிவிட்டு உள்ளே செல்கிறாள். லிண்டா வெட்டிய அழகு முடியும், பாலாவித்துணியில் ஃபிராக்குமாக அகன்ற விழிகளால் பார்க்கிறது. இவனுக்கு அந்தக் குழந்தையிடம் சரளமாகப் பேசக்கூட நா எழவில்லை... தன் வீட்டையும் சுற்றுப்புறங்களையும் இந்த வீட்டையும் அவன் உள் மனதோடு ஒப்பிட்டுப் பார்த்துப் புழுங்குகிறான். பணம் ஒன்று மட்டும் முன்னேற்றமல்ல... அவனுடைய வீட்டில் சுத்தமென்பதே கிடையாது. அவன் வீடு மட்டுமல்ல. எங்கு பார்த்தாலும் கருவாட்டுச் சிதறல்... குழந்தை அசுத்தம் செய்தால் அப்படியே கிடக்கும். மேனி கொஞ்சம் சுத்தமாக இருப்பாள். ஆனால் அவளுக்கும் பண்பு போதாது. அவள் இந்த வீட்டுக்கு இவள் உறவாக வந்துவிடப் போகிறாளா?... கோபியும் பிஸ்கற்றும் தந்து உபசரித்து அவள் அவனை வழியனுப்புகிறாள். அழிப்போட்ட குறுகிய வீட்டின் வாயிலில் ரோசிதா இன்னும் ஒரண்டொரு பெண்களுடன் வம்படித்துக் கொண்டிருக்கிறாள். இவனைக் கண்டதும், “வாங்க வாங்க மச்சான்!... அம்மா? இங்கிய வந்து பாரு, ஆரு வந்திருக்காங்கண்ணு!” என்று கூவுகிறாள். ரோசிதா இன்னும் தடித்து, அன்று கண்டாற் போலவே இருக்கிறாள். யேசம்மாவை அவன் பார்த்து அதிக நாட்களாகிவிட்டன. முகத்தில் சுருக்கங்கள் விழுந்து, இளைத்துத் தளர்ந்து போயிருக்கிறாள். “தோத்திரம் மாமி?... சுகமா?...” “வாப்பா... நீங்கத்தா வேறயாப் போயிட்டீங்க...” அவன் உள்ளே சென்று நீண்ட ஒழுங்கையிலுள்ள பெஞ்சில் அமருகிறான். எதிரே வாசற்படியில் அவளும் அமருகிறாள். “மேபல் பொண்ணு எப்படி இருக்கா? ஆத்தா இல்லாம சித்தாத்தா வளத்த பொண்ணு. பதவிசா இருக்கும்... ஒரு புள்ளத்தானே, ஆண்?...” “ஆமா.” “அப்பெ எப்படி இருக்கா! தொழிலுக்குப் போறாரா?” “போயிட்டிருக்கா...” விஷயத்தை எப்படி ஆரம்பிப்பதென்று தெரியவில்லை. அதற்குள் அவளே பாடத் தொடங்கி விட்டாள். “அப்பமே நசரேனுக்கு லில்லிப்பொண்ணக் கட்டியிருக்கலாம். கதரினா வூடுதேடி வந்துகேட்டா, இவெ வந்து என்னக்க மண்டயக் கொழப்பி அடிச்சிட்டா. முன்னமே இவம் பொஞ்சாதி மேட்டிமத்தனம் தெரிஞ்சதுதான்? ஏதோ அவளும் காலம் போயிற்றா, தாயில்லாப் பொண்ணு புள்ளிக, அவெனும் வேற கலியாணம் தொடுப்பொண்ணில்லிய. பெறந்த வந்தா, அம்மாட்டுக் கூப்பிடுதான்னு சரின்னிட்டே. இவ புருசனைச் சட்ட செய்யிறாளா? எவெ எவெல்லாமோ வர்றா. மச்சிலேந்து குசினிவர போறா. வெள்ளக்கார வரா. கொச்சிக்கார வாரா. தாட்டு பூட்டுனு இங்கிலிசில பேசிட்டு அவனுவகூட நேரம் போது இல்லாம காரில போறதும், வாரதும்... அந்தக் கேடு கெட்ட பயலுக்குச் சொரணையில்ல. கரைக்கு வந்தா குடிச்சிட்டு மச்சில்ல போயிப் படுத்துப் புரளுவா. இங்கிய என்ன நடக்குண்டு ஒண்ணும் கவனிப்பில்ல. அதாம் போவட்டுமிண்ணா, இவவாயில நானும் எம்புள்ளிகளும் பேச்சுக் கேக்கணுமா? நா சுத்தமில்லியாம்; எங்கியும் எச்சித் துப்புறேனாம். எம் பிள்ளைங்களை செல்லங் குடுத்துப் படிக்காம கெடுக்கேனாம். ரோசிதா... இவக்கு ஒரு சொவமில்ல, இவளக் கண்டா ஆகாது. சொம்மாப் பொழுதுபோக்கா, வேல செய்யலேங்கா. அவப்பச்சி இருந்தா, மவ மொகஞ் சொணங்கச் சம்மதிப்பாரா? இவளுவ அக்காளுந் தங்கச்சியும் மச்சில படுத்துறங்கிட்டு ஏழு மணிக்கு எழுந்து வருவாளுவ. எம் பொண்ணும் நானும் காப்பி வச்சி முட்ட பொரிச்சி மேசல கொண்டு வக்யணும்... என் தலயெழுத்து... அப்பமே லில்லிப் பொண்ணைக் கெட்டி வச்சிருந்தேன்னா இப்படிச் சீரழியுமா? ஊரோடு நீங்க தொழில் செய்ய இல்லியா?...” மணியனுக்கு ஒரு இலக்கு கிடைத்து விட்டது. “மாமி, இப்பம் ஒண்ணும் கெட்டுப் போயிடல. ஜானுக்கு மேனகா இஷ்டந்தா. அவனுக்கும் அவெமேல ஆசதா. நா இப்ப ஒங்களப் பாத்துக் கேக்கத்தா வந்தம்...” யேசம்மா சற்றே திகைத்தாற் போல பார்க்கிறாள்... “அவனுக்கும் வயசு தெகஞ்சி போச்சி. அவனக்கப் பொண்ணு கெட்ட எடம் வந்திட்டுத்தானிருக்கி. இங்கியே எங்க கொழிந்தியாளுக்கு மாமமக இருக்கு. அவங்க... கன்யாமாரில வியாபாரம். சீதனமா பத்தாயிரம் தந்து இருபது பவுன் போடுறமிண்ணு சொல்லி வந்தாங்க... பின்ன, பெரிய தாழையிலேந்து அது உறமுறைப் பொண்ணுதா, உங்கப்பச்சிக்கெல்லாந் தெரியும். அவ பேத்தியா - அதும் நல்ல எடம். எட்டாயிரம் ரொக்கங் குடுத்து முப்பது பவுன் போடுறமிண்ணா. இந்தப்பய வண்டி எடுத்திட்டு றால் கொண்டார போறா, வாரா, வூட்ட வந்து பாத்து சோறுண்ணக்கூட நேரமில்லாம ஓடிட்டிருக்கா. பேசுறதுக்கில்ல... நீங்க மதம் மாறினவங்கல்லாம் திரும்பக் கிறீஸ்தவத்தில சேந்திட்டாங்கண்ணு சொல்லிட்டாங்க...? அப்பிடியா? நெசமா?...” அவள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் தங்களை ஆழம் பார்ப்பதை அவன் புரிந்து கொள்கிறான். “அது எப்படி மாமி? அதெல்லா ஒண்ணில்ல. அந்தக் கோயில்காரங்களுக்கு இவங்க பிரிஞ்சி போயிட்டாங்களேண்ணு சங்கட்டமாத்தா இரிக்கி. எதேனம் எல்லாத்துக்கும் தடசம் பண்ணிட்டுத்தானிருக்கா. நா இப்பம் விசயத்த உம்மகிட்ட வெளிச்சமாச் சொல்லிப் போடறம் மாமி. நீங்க மேரிப் பொண்ண ஜானுக்க கட்டிச்சிவய்க்க சம்மதப்படுவீங்களாண்ணு கேக்க வார இல்ல. இப்ப நெலம மீறிப் போயிரிக்கி. இந்துண்டும் கிறிஸ்தியன்னும் பாத்திட்டிருந்தா சிரிச்சிப் போயிரும். ஆத்தா சோறெடுத்து அஞ்சு நாளாச்சி. எம்மாட்டோ கஷ்டம் வந்திச்சி. இப்பம் இப்பிடி ஒரு தலக்குனிவு வந்திரிக்கி. ஜான் கலியாணம் கட்டிக்கிறே. இந்தவாரேண்ணுஞ் சொல்லுதா. ஆனா அதுக்கு மேல இங்ககிட்ட உளுமயச் சொல்லத் தவக்கமாயிருக்கியா...” யேசம்மா சீறி விழுகிறாள். “அதெப்பிடி? ஒங்க பொண்ணு எங்க வீட்டுக்கு வாராளா, அல்ல இவெ அங்கிய வாரானா? நாயம் எது மக்கா? அவ கிறிஸ்தியானியாயிட்டு எங்க கோயில்லதா கலியாணம் நடக்கணும்...” அவன் அதிர்ந்து போய் நிற்கிறான். “அம்மாட்டுக்கு அறிவில்லாதவளாவ ஒரு பொண்ணு தலக்குனிவா நடந்தா? இது இங்கெத் தெரிஞ்சா இன்னு கேவலம். கொட்டு முழக்கமில்லாம மஸ்வாதிகெட்டுண்ணு விடிகாலத் தாலி கட்டிப் போடக்கூட நா சம்மதிக்க மாட்டே. பொறவு அவ உசத்தி இவ தாழ்ச்சிண்ணாவும். பொண்ணுக்கு இருவது சவரன் போட்டு சீதனம் பத்தில்லேண்ணாலும் எட்டாயிரமிண்ணாலும் குடுத்து, கோயில்ல பர்ஸ்ட்கிளாஸ் கலியாணம் நடக்கணும். ஒங்கக்க குனிவ நாங்க ஏ ஏத்துக்கணும்?...” அவனுக்குப் பேசவே நாவில்லை. அலைவாய்க் கரையில் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
|