உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
அத்தியாயம் - 28 மேனி... இவளுக்கு என்ன வந்து விட்டது? பழைய துடிதுடிப்பும் சிரிப்பும் கலகலப்பும் எங்கே போயிவிட்டன? வீட்டின் மூலை முடுக்குகளைப் பார்த்து ஒட்டடை தட்டுவாரில்லை; அழுக்குத்துணிகளைப் பார்த்துச் சோப்புப் போடுவாரில்லை. இரண்டு ஆமை ஓடுகளும் பாய்க்குத் துவர் போட்டு வைக்கக் காலியாக இருக்கின்றன. இந்த வீட்டில் நேரும் கூருமாக எந்தக் காரியமும் நடக்காமல் ஏதேனும் சாபக்கேடு தடுக்கிறதோ? புனிதா அவனுக்கு வெந்நீரை ஊற்றிக் கொடுக்கிறாள். அவன் முன் முற்றத்தில் உடலைத் தேய்த்துக் குளிக்கையில் கணேசு சிரிக்கிறது. ஆத்தா வெற்றிலை புகையிலையை அடக்கிக் கொண்டு ஓர் ஓரத்தில் குந்தியிருக்கிறாள். புனிதாவுக்கு மூச்சு வாங்குகிறது. மடிச்சுமை கூடி வருகிறதே? வானம் நீலமாய், உக்கிரமாய்க் கொளுத்துகிறது. வைகாசி பிறந்துவிட்டது. உள்ளூரில் ராஜன் ‘மைக்கு செட்’ வியாபாரம் தொடங்கிய பிறகு தினமும் ‘மைக்கு’ செட்டு வைக்க ஏதேனும் விசேஷம் வந்துவிடுகிறது. கீறல் விழுந்ததொரு முன்னுரையுடன் “கணபதியே சரணம்...” என்ற பாட்டு துவங்குகிறது. உடனே நின்று போகிறது. தவறாகப் போட்டு விட்டானோ?... ஏனெனில் அடுத்து, “இஸ்பிரிசாந்துவுக்கு நமஸ்காரம்...” என்ற கீதம் ஒலிபரப்பாகிறது. “கலியாணமா? ஆருக்கு?...” என்று அவன் விசாரிக்கிறான். “மேட்டுத் தெருவில், வாத்தியார் சூசைதாஸ் மகளுக்குக் கல்யாணம், தூத்துக்குடில முட்ச்சிட்டு இங்க வந்து பார்ட்டி கொடுக்கா...” என்று புனிதா விவரம் தெரிவிக்கிறாள். “அப்பச்சியக் கூட வந்து பத்திரிகை வச்சிக் கூட்டுப் போனா. போனா எதினாலும் மொய் வய்க்கணும். துட்டில்லண்ணு சொல்லிட்டிருந்தா. அந்தப் பொண்ணு ரெபகாவும் நம்ம மேரியும் வயசுக்கு வந்து அடுத்தடுத்த நாளில் கொண்டாடினம்... இங்கே மொடங்கிக் கிடக்கு. கடனோ ஒடனோ வாங்கிப் பொண்ணைக் கட்டிச்சிக் குடுக்காம நாமதா இரிக்கம்; கடல்ல அல ஓயுமா? வீடு, மரம் இருக்கு. எதா சாமி புண்ணியத்தில றாலுக்கு வெலயுமிருக்கி. இம்மாட்டும் வச்சிட்டு அந்தப் புள்ளயக் கண்ணு கலங்க அடிக்கலாமா?” ஆத்தா மொணமொணக்கத் தொடங்கிவிட்டாள். “...தா, இந்த வீட்டுக்குள்ள ஏன் காலுருத்தணுமிண்ணிருக்கி. யாரக் கேட்டிட்டு அந்தப்பய கூட ஓடிச்சிப் போனா, வந்தா? ஊருல அக்காளைப் பார்க்கப் போயிற்று வந்தாண்ணு சொல்லிவச்சிருக்கம். அந்தால மறச்சிவச்சிர முடியுமா? அவெ ஆத்தாக்காரி இருவதாயிரத்துக்குச் செலவு பண்ணணுமிண்ணு பட்டியல் குடுக்கா. வூடு, மரமிண்ணு நீங்க நினைச்சிட்டிருக்கீங்கண்ணா என்னக்க எதும் வேண்டாம். நீங்க சீதனம் குடுத்துக் கெட்டிச்சிக்குடுங்க. நா இன்னித்தேதியில சொல்லிட்டேன். என்னக் கொண்டு தடசமா நினைக்கவேண்டா. நா எந்தத் தாவுலானும் போயித் தொழில் செஞ்சிப்பே!...” இது அப்போதுதான் புறக்கடை வழியாக உள்ளே வரும் அப்பனுக்குக் கேட்டுவிடுகிறது. கையில் சாராயக் குப்பியுடன் வருகிறார். “தொர... பெரிய சீமதொர, என்னியலே? நீ போயிட்டா ஒலவம் இருண்டிருமோ? மயிரு. போய்க்கிலே. இப்பமே போயிரு. ஊரரெண்டு பண்ணினிய, வீட்டரெண்டு பண்ணுத. நாய்ப்பயலுவ. என்னவோ பயங்காட்டுதா! இந்த ஒடம்பில பெலமிருக்குலே! எம்மவக்கு இருபதாயிரம் செலவு செஞ்சி நா கலியாணம் கட்டுவே. இந்த ஊரிலியே கெட்டுவ. நீ வராண்டாம்! அறுவு கெட்ட பயலுவளா! நீ வக்கத்துப் போயி ஒண்ணுமில்லாம இழுத்திட்டு வந்தே. அப்பிடி நான் கெட்ட மாட்ட. இந்தப் பெரிய கோயில்ல, எம்மவக்கு நா பர்ஸ்ட் கிளாஸ் கலியாணம் கட்டி வய்ப்பே...” மணியன் உடலைத் துடைத்துக் கொண்டு பேசாமலிருக்கிறான். அவர் சண்டைக்கென்று கொடியேற்றிவிட்டார். அவன் எதிர்த்துப் பேசினால்தான் அவருக்குச் சமாதானமாகும். அவன் பேசாமலிருந்தால் மீண்டும் மீண்டும் கெருவுவார். ஆனால் அவன் பேசுவதாக இல்லை. உள்ளே சென்று வேட்டியை உடுத்துக் கொள்கிறான். ஆனால், மருமகளின் வீடாரைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் பேசினால் அவள் சும்மா இருப்பாளா? “வக்கத்துப் போயி ஒண்ணும் நா வந்திருக்கல. பேச்சை எதுண்ணாலும் கொட்டிராதீம்! இன்னிக்குப் பொழப்புக்கு மரம்வாங்கத் துட்டு எப்பிடி வந்ததுண்ணு ரோசிச்சிப் பாரும்! எங்கண்ணெ, பத்தாயிரம் அவுத்துக் குடுத்தாரு! நீங்க மரம் வாங்கினீங்க, வலை வாங்கினீங்க!...” “இவ யார்ரீ... மயிரு, பேச வந்திட்டா?” என்று மொலு மொலுவென்று பிடித்துக் கொள்கிறார். “றால் காசு நூறா ஆயிரமா கொட்டினா எம்பய. ஒன்னக்கா ஆத்தாவூட்டந்து என்னத்தக் கொண்டாந்த? ஒரு கடலு உண்டா? ஒரு பீரோ உண்டா? ஒரு ரோடியோப் பொட்டி உண்டா? ஒரு வாங்கிப் பலவை உண்டா?” “நீருதாம் அதெல்லா வேண்டா, பணம் வேணுமின்னிய...” மணியன் விழித்துப் பார்த்து அதட்டுகிறான். தண்ணீர் தெளித்த அடுப்பு சுவாலை மாதிரி அவள் குரலடக்கிப் புகைக்கிறாள். “ஏக்கி... எதுத்தா பேசுதே...” அப்பன் கையை ஓங்கிக் கொண்டு மருமகள் மீது பாய்கிறார். மணியன் வந்து அவர் கையைப் பிடிக்கிறான். “ஒமக்கு அறுவு இருக்கா? புள்ளதாச்சிப் பொண்ண கய்ய ஓங்கிட்டு வாரீம்? என்னக்கொண்டு பேசும்? அவ வழிக்கு ஏம் போறீம்?” சண்டையில் சூடு பிடித்து விட்டது. அப்பன் மகனைச் சுவரோடு மோதித் தள்ளுகிறார். ஆத்தா கூச்சலிட்டுக் கொண்டு வந்து அப்பனை இழுக்க, ஜெயா ஓடிச் சென்று தெருவில் போய்க் கொண்டிருந்த சாமுவல் மாமனைக் கூப்பிட, கூட்டம் கூடிவிடுகிறது. மணியனை, எல்லோருமாக இழுத்துக் கொண்டு கணபதி கோயில் முன் கூட்டி வருகின்றனர். அவனுக்கு நாணம் ஒருபுறம், ஆத்திரம் ஒருபுறம், அப்பனுக்கும் மகனுக்கும் சண்டை... சீ! ஒரு மனிதனை வாழ்க்கையில் முன்னேற விடாமல் எத்தனைவகை முட்டுக்கட்டைகள்! இந்த அப்பனுக்கு வாழ்க்கையில் முன்னேற வேண்டும், குடும்பம் சீராக இருக்க வேண்டும் என்ற எண்ணமே கிடையாது. இவரைப் போன்ற ஆளுகள் இந்தக் கடற்கரை சமுதாயத்துக்கே விரோதிகள்... “அப்பெ அப்பெண்டு நா பேசாம பொறுத்தே. அந்த ஜான் பயலக்கூட்டு, மவளக்கூட்டி வச்சவரு இவருதா,” என்று பொருமுகிறான். குலசேகர வாத்தியார், “சமாதானமாயிருப்பா, உணர்ச்சி வசப்பட்டு எதும் பேசி, செஞ்சிட்டா திருப்பி நீக்கிட முடியாது. அவரு வயசானவர். பொறுத்துப் போயிடு...” என்று அறிவுரை நல்குகிறார். “பொறுத்துத்தான் இருந்த வாத்தியாரே, புள்ளத்தாச்சிப் பொண்ண குடிச்சிப் போட்டுக் கையை ஓங்கி அடிக்க வரலாமா? அவ ஆத்தாவூட்ட மயிருமட்டண்ணா அவளுக்குக் கோவம் வராதா?” “போவுது. கொஞ்ச நேரம் போனாத் தணிஞ்சிடும். நீரடிச்சி நீர் விலகுமா? நீ பேசாம இரு. சரியாப் போயிடும்...” அவன் பேசவில்லை. ஆனால்... அந்த வீட்டிலிருந்து விலகுவதாக நிச்சயம் செய்து விடுகிறான். அவன் தொழில் தெரிந்தவன். எங்கே போனாலும் அவனால் பிழைக்க முடியும். நாளைக்கு இந்தக் கரையில் இந்த அப்பனுடன் மரத்திலே அவன் கொம்பு குத்தப் போவதில்லை. எத்தனையோ கட்டங்களில் அவன் அப்பனுக்கு விட்டுக் கொடுத்துப் பணிந்து போனான். ஒட்டாத, கூடி வராத பந்தங்களை இழுத்துக்கொண்டு எதற்காக எதிர் நீச்சிப் போட வேண்டும்? புயல் வருகிறதென்று தெரிந்தால் பாயை இறக்கி விட வேண்டும். அப்போது பாய் ஆபத்தானது. புனிதாவுக்குத் தாயில்லாததால், சந்தியாகு வீட்டில், பெரியம்மா மீனாட்சியிடம்தான் போயிருக்கப் போகிறாள். சம்பவம் நடந்த மறுநாளே அவள் குழந்தையைத் தூக்கிக் கொண்டு அடுத்த தெருவுக்குப் போகிறாள். பஞ்சாட்சரத்தின் விசைப்படகு வீரபாண்டிப் பட்டணத்தில் நிலை கொண்டிருக்கிறது. ஆதித்தன் சில கூட்டுக்காரர்களுடன் தொழில் செய்கிறான். மணியனுக்கு இடமா இல்லை? வலைக்காரனாகத் தொழில் தேடி அன்றே போகிறான். ஆத்தா இதை எதிர்பார்த்திருக்கவில்லை. அவன் சுணங்கிப் போனாலும், மனத்தாபப்பட்டு வருவான், இன்று, நாளை என்று எதிர்பார்க்கிறாள். அவன் ஒரு வாரமாயும் வரவில்லை. மீன் வாடிக்குச் சென்று கருவாட்டு மீன் வாங்கிவந்து உப்புப் போட்டு வைக்கிறாள். அடுப்படியில் ஜெயா பொங்குகிறாள். மேனி பிரமை பிடித்துப் போனாற்போல் உட்கார்ந்திருக்கிறாள். வீட்டில் கணேசு இல்லாமல் விறிச்சிட்டு விட்டது. அந்தக் குடும்பத்துக்கு, நினைவு தெரிந்த நாளாக, ஆத்தாளுக்கு ஆதரவாக நின்ற பயல்... அவன்தான் குடும்பத்தையே தாங்கி இருக்கிறான். அவன் குடும்பத்தை விட்டுப் பிரிந்து செல்வதைத் தாங்க இயலவில்லை. அவனுடைய கல்யாணத்தில், ஆட்கள் போட்டிப்போட்டுக் கொண்டு பணத்தை வீண் விரயம் செய்யக் கூடாதென்று ஒழுங்கு செய்தார்கள். முன்பு மதமாற்றத்துக்கு வந்து நீர் தெளித்து தீட்சை கொடுத்த சாமிஜியும் குலசேகர வாத்தியாரும் முன்னின்று கல்யாணத்தை நடத்தி வைத்தார்கள். கொலு கட்டி, மொய்யெழுதி ஆசீர்வாதம் செய்தாலும், ஆடம்பர விருந்து, மேளம், ஊர்வலம, வாண வேடிக்கை, ஒன்றுமில்லை. அப்போது தொழிலுக்கு, எந்தச் சாதனமும் இல்லாத நிலையில் மதம் மாறிய எல்லாத் தொழில்காரரும் வறட்சியாக இருந்த நிலையில், சீதனமென்று தந்த முதல் கொண்டுதான் மரமும் வலையும் வாங்கினார்கள். பிறகு இவனும் அவளுக்குச் சங்கிலி, வளையல் எல்லாம் செய்து போட்டிருக்கிறான். இருபக்கங்களிலும் குறை, நிறைகள் இல்லாமலில்லை. அப்பன் அவ்வாறு மருமகளை ஏசியிருக்க வேண்டாம். ஆனால் அவர் குணம் அவனுக்குத் தெரியாதா? அவர் பேசுவது புதிசா? அவர் பிடித்ததுதான். இவர்கள் எல்லோரும் பேர் மாறி மதம் மாறுகையில் அவரும் திருநீற்றைப் பூசிக் கொண்டு நீர் வாங்கிக் கொண்டாரேயொழிய பின்னர் எந்தக் கோயிலுக்கும் போவதில்லை. சுவரில் இருக்கும் மரியம்மை சுரூபத்தைக் கூட எடுத்து விட அவர் சம்மதிக்கவில்லை. கணபதி படமும், திருச்செந்தூர் முருகன் படமும், லட்சுமி படமும் வாங்கி வந்து சுவரில் மாட்டி வைத்திருக்கிறான். அவருக்கு எதுவும் பற்றில்லை. கடலுக்குப் போவதும், வருவதும், குடிப்பதும், பெண்சாதி வெறி வந்தால் கண்மண் தெரியாமல் பாய்வதுமாக ஒரு குணம். ஊமைப் பையனுக்கு வயசு வந்தாயிற்று. அப்பனைப் போல்தான் பிடிவாத குணத்துடன் தலையெடுக்கிறான். நன்றாகக் குடிக்கிறான். நாக்குப் போய்விட்டதால் மூர்க்கத்தனம் அதிகமாகக் கோபம் வருகிறது. அருகில் நின்று பேச முடியவில்லை. இந்த அலைவாய்க்கரையில் அவன் எந்தப் பெண்ணையேனும் துரத்திக் கொண்டு ஓடாமலிருப்பானா? கோயிலில்தான் பஜனை அது இது என்று வண்ணமும் சண்ணமுமாக வந்து கும்மாளம் போடுகிறார்களே? அந்தக் கோயிலில் இல்லை என்றால் இந்தக் கோயில். அந்தக் கோயிலில் ஒரு மேய்ப்பன் இருந்து அதிகாரம் செலுத்தினான். இந்தக் கோயிலில் அந்தக் கட்டும் இல்லை. இந்த வாத்தியார் மீன், கருவாட்டு வாசமே பிடிக்காதவர். கோயிலைத் தவிர எங்கும் போவதில்லை. முகத்தைச் சுளித்துக் கொள்கிறார். பஜனை சொல்லித் தருவதும், கதை சொல்வதுமாகப் போக்கிவிட்டுப் போய்விடுகிறார் அவர் தமது ஊருக்கு. இரவுகளில் தங்குவதில்லை. இந்த வாழ்க்கையில் உள்ளிரைச்சல்களை அவர் எவ்வாறு அறிவார்? கடலைப் போன்றே இவர்கள் வாழ்க்கையும் இரைச்சல் மிகுந்தது. மிளகாய்த்தூளையும் உப்பையும் தொட்டி மீனுடன் கிளறி மூடிவிட்டுச் சுற்றி வரும் நாயைக் குச்சி எடுத்து விரட்டுகிறாள். பிறகு வட்டியை எடுத்துக் கொண்டு உப்பு வாங்கப் போகிறாள். உப்புப் போதாதோ என்பது சாக்கு. அங்கே சம்பந்த தாரியின் வீட்டுப் பக்கம் போகவேண்டும். வாயிலில் தெருவில் குந்தி வலை பிரைகின்றனர் சுந்தரமும் குரிசுப்பிச்சையானும். கண்கள் அகல அகலமாக இருக்கின்றன. திருக்கை வலை, பெஞ்ஜமினின் வீட்டு வாசலில் கணேசு மண்ணில் படுத்துக் கொண்டிருக்கும் நாயின் மீது மண்ணைப் போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறது. வாயிற்படியில் மொடுதவத்தின் கடைப்பெண் நிமில்டாவும், புனிதாவின் தங்கை மலர்விழியும் பனநார் சீவிக்கொண்டு ஊர்க்கதை பேசிய வண்ணமிருக்கின்றனர். ஆத்தா வட்டியைக் கீழே வைத்துவிட்டுக் குழந்தையை எடுத்துக் குண்டுக் கட்டாகத் தூக்கி முத்தம் வைக்கிறாள். “எலே தங்கம், எத்தினி நாளாச்சிலே, உன்னக் காணாம்...!” அந்த இளம் மேனியின் அழுக்கும் உப்புக்கரிப்பும், அந்தத் தாயின் சுவாசத்தில் எத்தகைய இனிமை சேர்க்கிறது? அவனைக் கட்டி அணைக்கிறாள். அவன் வலையில் பட்ட வஞ்சிரம் போல் முரண்டுகிறான்; முட்டி மோதிக் கால்களை உதைத்து உந்தி அவளை விட்டு விடுதலையடையப் பார்க்கிறான். அவள் விடவில்லை. வட்டியுடன் அவனைத் தூக்கிக் கொண்டு கடைக்கு வருகிறாள். ஒரு பெரிய பழத்தையும் தேங்காய் பர்பியையும் வாங்கிக் கொடுக்கிறாள். “அத்தய வுட்டு பாட்டிய வுட்டு எங்கெவே போயிட்டே? வூடு இருட்டாப் போச்சிலே...” என்று பயல் பழத்தை உரித்துத் தின்ன முடியாமல் முத்தங்களை அப்புகிறாள். அவளுடைய அத்துணை ஆற்றாமையும் அந்தப் பிஞ்சிடம் இலக்காகத் தஞ்சம் புகுவது போன்ற உணர்ச்சி வெளியீடுகள். அவன் போய்விட்டல் அந்த வீடு எப்படி இருக்கும்? அந்தப் படகு எவ்வாறு நகரும்? தண்டும் பாயும் இல்லாத படகாக, குடிகார அப்பனும், ஊமைப் பையனும், கன்னிமை குலைந்த பெண்ணும்... உமை அப்பன் வழியிலேயே செல்கிறான். சிறியவன் பள்ளிக்குச் செல்கிறான் என்று பெயரிருந்தது. மதம் மாறிய பிறகு, அந்தப் பள்ளிக்கூடத்து வாத்தியார்கள் பேரில் தப்போ, இவனுடைய சாக்கோ, அந்த வாத்தியார்கள் மீது தினமும் புகார் கொண்டு வந்து கொண்டிருந்தான் சார்லசாக இருந்த ரமேசு. இப்போது பள்ளிக்கும் செல்வதில்லை; கடலுக்கும் செல்வதில்லை. இறால் சேகரித்துக் கொண்டு பத்துக்கு ஒரு ரூபாய் கமிசன் என்று திரிகிறான். வெற்றிலை, புகையிலை, பீடி சிகரெட்டு என்று செலவழிக்கிறான். சினிமா... பஸ் ஏறி இரவில்லை, பகலில்லை என்று சினிமா மோகம் பிடித்துத் திரிவதும் ஆத்தாளிடம் பணம் கேட்பதும், அயர்ந்து மறந்தால் அவனே ஜெயாவின் பெட்டியைக் குடைந்து கிடைத்ததை எடுத்து விடுவதுமாக உலவுகிறான். ஒரு கால்துட்டுக்கூட அவர்கள் தாய்க்கென்று கொடுப்பதில்லை... மணியனை வீட்டை விட்டுப் போக விடக்கூடாது... கூடாது... குழந்தையையே அந்தச் சங்கற்பமாக உருவகப்படுத்திக் கொண்டாற்போன்று அவனை இறுகப் பற்றிக்கொண்டு அவள் வீட்டுக்கு வருகிறாள். மேனி தேங்காய் திருகிக் கொண்டிருக்கிறாள். இவனைக் கண்டதும் பளீரென்று முகம்மலரப் பால் கசியும் துருவலை அவனுடைய பழம் பிசுபிசுக்கும் வாயில் அடைக்கிறாள். “அங்கே போயிருந்தியாம்மா?” “ரோடில ஆடிட்டிருந்தா. மலர்விழியும் நிமில்டாவும் ஓல சீவிட்டிருந்தாளுவ. நா தூக்கியாந்தே. புள்ள வந்திருக்யா. கருப்பட்டி வாங்கியாந்திருக்கே. தேங்காய்ப் போட்டுப் பதப்பரிசி கொஞ்சம் பொங்குட்டீ!...” கணேசு இந்த அன்பு முழுக்காட்டலில் அம்மையைத் தேடவில்லை. அன்று கடலில் பத்துரூபாய்க்குக் கூட மீன் கிடைக்கவில்லை. இரண்டே இறால் எண்ணிக்கையாகப் பட்டிருந்தன. அது இரண்டு ரூபாய்... மிகுதி களர்மீன். ஏலக்காசு போகத் தேறியது எட்டே ரூபாய். அப்பனும் மகனும் குடிக்க ஐந்து ரூபாய் வைத்துக் கொண்டு மூன்று ரூபாய் வீட்டுக்குக் கொடுக்கின்றனர். ஜெயா தாயைப் பார்க்கிறாள். ஆத்தாளோ மனசில் குமைந்தாலும் சண்டை போடக் கூடாதென்று பல்லைக் கடித்து அடக்கிக் கொள்கிறாள். “ஏக்கி? இந்தப்பய எங்க வந்தா? நாய்க்கிப் பொறந்தவ. புள்ளயவுட்டுச் சமாதானத்துக்கு வாராளோ?” என்று சொற்களைத் துப்புகிறார் அப்பன். “நாயி பேயிண்டு ஏம் பேசறீம்? புள்ளமேல கையவச்சீம்? எனக்குக் கெட்ட கோவம் வரும்? நாந்தா தூக்கியாந்த...” என்று அம்மை சீறுகிறாள். அப்பனுக்கு ஜெயாதான் வட்டிலில் சோறு வைக்கிறாள். பிள்ளைஸ்றாக் கண்டமிட்ட ஆணம். வாழைக்காய் புரட்டியிருக்கிறாள். மேரி கணேசுவை இடுப்பில் வைத்து, கருப்பட்டியும் தேங்காயும்ம் போட்டுப் பொங்கிய பொங்கலை ஊட்டிக் கொண்டிருக்கிறாள். அப்போது வாசலில் இறால் வண்டி தடதடவென்று ஓசையிட்டுக் கொண்டு செல்வது செவிகளில் விழுகிறது. மேனகைக்கு உடல் தூக்கி வாரிப் போட்டாற் போல் விதிர் விதிர்க்கிறது. கன்னிபுரத்துக்கு எப்போதும் போல் அந்த வண்டி வருகிறது. ஆனால் அவர்கள் வீட்டுவாயிலின் முன் வண்டி நிற்பதில்லை! மேனகைக்கு, அந்த வண்டியின் கடபுடாவென்ற ஓசை இந்த உலகில் எல்லா ஒலிகளைக் காட்டிலும் இனிமையாக ஒலித்த காலமிருந்தது. இப்போது அந்த இனிமை, அச்சம் கலந்ததோர் ஆதூரமாக மாறிவிட்டது. அவளுள் ஒரு பிரளயத்தைக் கொண்டு வந்திருக்கிறது. அவள் நிராசையின் படிகளில் நம்பிக்கையிழந்து நிற்கிறாள். ஆண் வர்க்கம் இப்படித்தானிருக்குமோ? வந்து வந்து ஆசையைத் தூண்டி விட்டு, அவளைச் சொப்பனபுரியான ஓர் உலகுக்கு அழைத்துச் சென்று கொண்டு விட்டவன், இங்கே வரமாட்டானா? இதே நடுவீட்டில் வந்தமர்ந்து, “எனக்குச் சீதனம் வேண்டாம். நான் இந்துவாய் மாறி உங்க மகளைக் கட்டுகிறேன்” என்று சொல்லக்கூடாதா? கணபதியையும் முருகனையும் படத்தில் பார்த்து அவள் தினமும் கும்பிடுகிறாள். அந்தப் பெரிய துன்பங்களெல்லாம் வந்த போது, மாதாவையும் திருக்குமரன் யேசுவையும் ஆத்தா வாயோயாமல் ஜபித்தாள். கடைசில எப்படி எப்படியோ நடந்துவிட்டது. இப்போது இந்தச் சாமிதான் மெய்யென்று துதிக்கிறார்கள். பிரசாது மாமனுக்குப் பஜனை பண்ணும்போது ‘சாமி’ வந்து விடுகிறது. கற்பூரம் காட்டிக் கும்பிடுகிறார்கள். இந்தச் சாமிகளை அவள் அந்தரங்க சுத்தத்தோடுதானே வேண்டிக் கொள்கிறாள்? ஜான் வராமலே போகிறான்; அண்ணன் வீட்டை விட்டுப் போய்விட்டான்... தட்டிலே சோற்றை வைத்துக் கொண்டு கண்ணீர் துளும்ப அமர்ந்து விட்ட மகளைப் பார்த்து ஆத்தாள் நெஞ்சு கரைகிறாள்! “ஏக்கி, கண்ணுகலங்குதே? கடல்மேல பறக்கும்புள்ள சீதாப் புள்ளும்பா; அதுக்குப் பெலமில்ல. அது கரக்குமேல பறக்கவாராது. வந்தா மனிசன் கல்ல எறிஞ்சி கொன்னிடுவா. பொண்டுவளாப் பெறந்தவா அப்பிடிக்கொத்தவா தா. அளுது கரஞ்சி என்ன செய்ய?...” சொல்லில் மிளகுப் பொடியின் காரம் இருந்தாலும் கையின் பரிவு கண்ணீரைத் துடைக்கிறது. இந்த ஆத்தாளும் யார் மீதிலேனும் ஆசைவைத்த பின்னரே இந்தக் குடிகார அப்பனைக் கட்டியிருப்பாளோ? துடைக்கத் துடைக்கக் கண்ணீர் மாயாமல் பொங்கி வருகிறது. அலைவாய்க் கரையில் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
|