உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
அத்தியாயம் - 30 இருதயராஜுக்கு எத்தனை நாளையக் கனவு ஈடேறுகிறது? ஃபர்ஸ்ட் கிளாஸ் ஓலை வாசிப்பு! நூறு ரூபாய் கட்டியிருக்கிறார்! கோயில் முழுதும் வண்ணக் காகிதத் தோரணங்களாய் அலங்கரித்திருக்கின்றனர். பீடத்தில் மலர்கள்... விளக்கு ஜோடனைகள் ஒவ்வொரு நிலையிலும் இருக்கும் எல்லா ‘சுரூபங்’களிலும் மலர் வைத்து விளக்குப் பொருத்தி இருக்கின்றனர். அப்பன் இதைக் கண்டு மகிழ்ந்து ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார். சாமியார் உற்சாகத்துடன் வழி தப்பித் திரும்பி வந்த செம்மறியாக வந்து சேர்ந்த இருதயராஜ் ஃபர்னாந்துவின் திருக்குமாரி செல்வி மேரி செல்வமணி அம்மாளுக்கும், இதே திருச்சபையைச் சேர்ந்த... யேசம்மா அம்மாளின் திருப்புதல்வன் செல்வன் ஜான் செல்லப்பாவுக்கும் என்று பெயர் சொல்லித் திருமண ஓலையைக் கணீரென்ற குரலில் வாசித்த போது, உயர்ந்த அந்தக் கோயிலின் கூரையளவும் தம் இருதயம் பொங்கி வியாபித்து அந்தக் கோயில் முழுதும் எதிரொலிக்கும் ஒலியில் ஒன்றியதாகவும் உணருகிறார். பெரியமணி, சிறியமணி எல்லா மணிகளும் வசந்தகாலத்துத் தென்றலில் மகரந்தங்கள் சிதறி மணம் அவிழ்ந்தாற்போல் ஒலிப்பூக்களைச் செவிகளில் அநாதமாகப் பொழிந்து மகிழ்ச்சியின் கரங்களை மீட்டுகின்றன. இந்தப் புதிய சாமியார் அவருடைய திருக்குடும்பத்துக்கு ஆசீர் வழங்குகிறார். கிறிஸ்தவர்களாகவே நின்று கோயில் ‘பார்ட்டியார்’ என்று வழங்கப் பெற்றவர்தாம் இப்போது இருதயராஜுக்கு வேண்டிய நண்பர்களாக இருக்கின்றனர். அந்நாளில் இவர்கள் மரத்தை எரியவிட்டவர்கள், வலைகளைத் தூக்கிச் சென்றவர், போலீசுக்கு உளவு சொன்னவர், ஆகியோர் அனைவரும் நிச்சயதார்த்தத்துக்குக் கூடுகின்றனர். நசரேனின் தாய் வரவில்லை. நசரேனும் அவன் மனைவியும் கூட வரவில்லை. ரோசிதா, அவள் தங்கை, தம்பி இன்னும் இரண்டொரு அந்நியமில்லாத உறவினர் வந்திருக்கின்றனர். மணப்பெண்ணுக்கு மோதிரம் போடுகின்றனர். மூன்று ஓலை வாசிப்புக்கு முன்பே கல்யாண நாளை வைத்துக் கொண்டு விட்டனர். ஆத்தா உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு அடுப்படியில் பலகாரம் செய்கிறாள். அவளுக்கு ஊரெல்லாம் சிநேகம். எத்தனை பிள்ளைப் பேற்றுக்காரிகளுக்கு மருந்து இடித்து ஊற்றியிருக்கிறாள்? பாலாளும், குருஸ்மாமன் பெண்சாதி சம்சலம்மாவும் ஊர்வம்பு பேசியபடி ஆத்தாளுக்கும் உதவுகின்றனர். மாவிடித்து முறுக்கும் அதிரசமும் பணியமும் செய்கின்றனர். வீட்டில் கால் வைக்க இடமில்லாமல், கூடைகள். வலைகளை எட்வினின் வீட்டில் போட்டுவிட்டு, முற்றத்தையும் தாழ்வரையையும் ஒழித்து ஜெயாதான் சுத்தமாக்குகிறாள்; வேலாண்டி நாடான் பந்தல் கட்டுகிறான். மேரியின் உள்ளம் பட்டமாகப் பறந்தாலும், பட்டத்து வாலில் கல்லைக் கட்டுகிறான். மேரியின் உள்ளம் பட்டமாகப் பறந்தாலும், பட்டத்து வாலில் கல்லைக் கட்டி வைத்தாற் போன்று சோகம் கவிந்து அமுக்குகிறது. “உன் சுகந்தானேட்டி பெரிசாப் போச்சி?” என்ற அண்ணனின் சொல் நினைக்குந்தோறும் தீயாய்ச் சுடுகிறது. ஒரு பெண் ஆணின் சுகத்தையும், ஒரு ஆண் பெண்ணின் சுகத்தையும் நாடிச் செல்வது மழை பெய்வது போல, காற்றடிப்பது போல, வெயில் கொளுத்துவது போல, காலங் காலமாகத்தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. என்றாலும், மனிதர்களாகப் பிறந்தவர்கள் அனுபவிக்கும் சுகங்களுக்கு விலையாகத் துன்பமாகிய அனுபவங்களையும் பெற வேண்டியிருக்கிற தென்பதை அவள் புரிந்து கொள்கிறாள். அண்ணன், ஏலியிடம் அனுபவித்த சுகத்துக்காக எத்தனை சுமை சுமந்திருப்பான்? ஏலி... அவள் அண்ணனுக்கு வேண்டி எத்தனை துன்பம் அனுபவித்தாள்? பிச்சைமுத்துப்பாட்டாவும் போன பின்பு அவள் எதற்குத் திரும்பி வந்தாள்? வேறு எங்கேனும் சென்று பிழைத்திருக்கக் கூடாதா? இதே கரைக்குத் திரும்பி வந்து, அவர்களுக்காக ஈனப் பெயர் வாங்கினாள், பாடுபட்டாள். குடிசைக்குள் ஈ மொய்த்து அழுகி நாற்றமெடுக்கச் செத்துக் கிடந்தாள்... இதை எல்லாம் அவள் எதற்காக இப்போது நினைக்க வேண்டும்? அவள் கூடாத சம்பந்தம் கொண்டாள், இவள் அப்படியா? அண்ணன் இவ்வளவு கடுமை காட்டலாமா? அண்ணனுக்குச் சட்டையும் சாரமும் எத்தனை நாளைக்குத் துவைத்து மடித்துக் கொடுத்திருக்கிறாள்? ராக்கடைத் தொழில் என்றால் சோறு கட்டி வைத்து, அவனுக்குப் பிடித்த அணமோ, துவையலோ செய்து வைத்திருக்கிறாள். காலை நேரங்களில் காப்பி வைத்துக் கொடுக்காமல் அண்ணனை அனுப்பியிருக்கிறாளா? என்றுமே மேரிக்கு அப்பச்சியை அவ்வளவாகப் பிடிக்காது. அவருக்குப் பணிவிடைகளை ஜயாதான் செய்வாள். முதுகு சொறிவதிலிருந்து சாராயக்குப்பி வாங்கி வைப்பது வரையிலும் கூட அவள் செய்வதுண்டு. அந்தப் பிடிக்காத் அப்பன் இப்போது கல்யாணம் நடத்துகிறார். அந்த அண்ணன் வரவில்லை. நினைக்க நினைக்க துயரம் ஆறாமல் மண்டுகிறது. ஜானும் அண்ணனும் எத்தனை நாட்கள் ஒன்றாய்ச் சேர்ந்து தொழிலுக்குப் போயிருக்கின்றனர்! ஜானே அண்ணனிடம் சென்று கல்யாணத்துக்கு வரவேண்டும் என்று முடுக்கிக் கூட்டி வரக்கூடாதா? என்றோ குடும்பத் தொடர்பைக் கத்தரித்துக் கொண்டவள்; லில்லியக்காவும் கூடக் கன்யாஸ்திரீ என்ற மேன்மையுடன் வரப்போகிறாள். இவர்கள் ஒரு வேளை கஞ்சிக்கு இல்லாமல் ஏலி எங்கிருந்தேனும் புல்லரிசி வாங்கி வருவதை எதிர்பார்த்துத் தவித்த காலத்தில் அவள் இவர்கள் உயிருடனிருக்கிறார்களா என்று கூடக் கவலைப்படவில்லை... கைநீட்டக் கால் நீட்டக் கூட இடமில்லாமல் சாமான்கள் நிரம்பிவிட்ட நடுவீட்டில் மேரி இரவில் கண்களைக் கொட்டவும் உறக்கம் பிடிக்காமல் விழித்திருக்கையில், கடல் அலைகளின் ஓசைமட்டுமே செவிகளில் விழுகிறது. ‘ஜானை நான் கல்யாணம் கட்டிக் கொள்ளவில்லை... இந்துவாகவே இருக்கிறேன்’ என்று சொல்லிச் சொல்லிப் பார்த்துக் கொள்கிறாள். கண்ணீர் செவிகளில் வடிகிறது. கண்களைத் துடைத்துக் கொண்டு மெல்லப் புறக்கடைப் பக்கம் வந்து கதவைத் திறக்கிறாள். கடலைப் பார்ப்பது சற்றே ஆறுதலாக இருக்கிறது. கடலில் வானத்து நட்சத்திரங்களே பூப் பூவாய் விழுந்தாற் போன்று எத்தனை லாஞ்சிகள்! ஆனி ஆடி ஆவணி புரட்டாசி எல்லாம் இறால் காலமாயிற்றே? வீரபாண்டியன் பட்டணத்திலுள்ள லாஞ்சிகளனைத்தும் வந்துவிட்டிருக்கும்! அப்பனும் பீற்றரும் போயிருக்கின்றனர். கடலிலிருந்து அத்தனை இறாலையும் வாரி வந்து பத்தே நாட்களில் கடனடைத்துவிட வேண்டும் என்ற ஆத்திரத்தோடு அவர் கடலுக்குப் போகிறார். இத்தனை லாஞ்சிகளும் ‘போயா’ போட்டு, தங்கள் தட்டுப் போன்ற சாதனமுள்ள வலைகளை நீருக்குள் இறக்கியிருப்பார்கள். அது அடியோடு அள்ளிக் கொண்டு வந்துவிடுமாம். அப்பனுக்கு ஐம்பதுக்குக் குறைந்து பாடு வந்தால் அன்று முழுதும் வெறி பிடித்துக் கத்துகிறார்; சாராயத்தை மேலும் மேலும் குடிக்கிறார். கரையில் வட்டக்காரர் கொடுத்திருக்கும் பணத்துக்கு அமலோற்பவத்தின் மகன் தானியலே வந்துவிடுகிறானாம். வட்டக்காசு கறிக்கு மீன் இரண்டையும் வாங்கிக் கொள்வான். இவர்கள் பெரிய கோயிலைச் சார்ந்துவிட்டதால் வியாபாரி கட்ட வேண்டிய ‘அடிகாசு’ என்ற சில்லறை வரியை வேறு வாங்கிக் கொள்வான். லாஞ்சிக்காரர்களையும், அண்ணனையும் அப்பன் திட்டிக் கொட்டுவார். மறுநாளைக்கு மறுநாள் கல்யாணம். எனவே கல்யாணத்துக்கு முந்தைய நாளான இன்று நிறைய றால் பட வேண்டும், சாமி, முருகா... யேசு... கணபதி... “ஏக்கி? புறக்கடக் கதவத் தொறந்திட்டு... ஏக்கி, நீ இம்மாட்டு வருந்தி வச்சது காணாதா? இன்னு காத்து கருப்பு புடிச்சி பேயாட்டணுமா? எவண்டி இந்நேரம் காத்திருக்கேண்ணா?” ஆத்தா அவள் கையைப் பிடித்து இழுத்து முகத்தில் இடிக்கிறாள். “சாமி... ஐயோ... இல்லம்மா...” “கத்தாதேடி... கத்தாத... போ உள்ளால! அன்னியே உன்னிய அடக்காத வாசிதா நீ துளுத்துப்போன. கண்ணான பயல வீட்டவிட்டு வெரட்டின. போட்டி...!” இரவின் தணிந்த அந்த மோனத்தில், அவள் விம்மலைக் கடலலைகள் தாம் அமுக்க முயலுகின்றன. காலையில் அலைகள் குதிக்கும் வண்ணம் காற்று வீசுகிறது. அப்பனுக்கு அன்று இறால் படவில்லை. வலையை எவனோ ‘லாஞ்சிக்காரக் கழுத மவன்’ காத்தாடியால் அறுத்துவிட்டான் என்று கத்துகிறார். அந்த அறுந்த வலையைக் காட்டி அவனிடம் இரண்டாயிரம் நஷ்ட ஈடு வாங்க வேண்டும் என்று பீற்றரிடம் சொல்லிக் குதிக்கிறார். லாஞ்சிக்காரன் இறாலைப் பிடித்துக் கொண்டு அவன் வலையில் பட்ட காரலும் களரும் இவருக்குக் கொடுக்க வந்தானாம். பிச்சை வேண்டியதில்லை என்று அவன் முகத்தில் விசிறுவது போல் கடலில் கொட்டி விட்டு வந்தாராம். வீடு நிறைய விருந்தாளிகள் வந்து கொண்டிருக்கின்றனர். அப்பன் யாரிடம் பேசாமல் ஆத்திரம் தீரக் குடித்துவிட்டுப் படுக்கிறார். மாலை நெருங்கும் நேரத்தில் வீடு நிறைய குஞ்சும் குழந்தைகளுமாகக் கலகலக்கின்றனர். ஆத்தாளின் ஒன்றுவிட்ட இரண்டுவிட்ட சோதரியர், சோதரர்கள் ஆலந்தலையிலிருந்தும், பெருமணலிலிருந்தும் வந்திருக்கின்றனர். தேங்காய் உடைத்துத் திருவுவதும், காபி காய்ச்சுவதும், காய் நறுக்குவதுமாகப் பெண்கள் பேசித் தீர்க்கின்றனர். நெடுநாட்கள் சென்று சந்திக்கும் உணர்ச்சிப் பொங்கல்களில் ஏசலும் பேசலும் இல்லாமலில்லை. புறக்கடை முற்றத்தில் கல் கூட்டிவைத்த அடுப்புகள் திகுதிகுவென்று எரிகின்றன. வெள்ளை உடை தயாராக வந்துவிட்டது. ‘நெட்’டைத் தூக்கி வர மணப்பெண்ணின் தோழிகளாகச் சித்தாத்தா மக்கள் ரீதாவும் விக்டோரியாவும் தங்களைத் தாங்களாகவே நியமனம் செய்து கொண்டுவிட்டனர். “பய கல்யாணத்துக்கு வார இல்லியா?” யாரோ அங்கலாய்ப்புடன் கேட்கிறார். “நீரு பேசாம இரிம். அவெ இந்துவா நிக்யாணேண்ணு அவ வேதனப்பட்டு நீறிட்டிருக்யா. நாளக்கோயில்ல வருவா இல்லிய, தாலிகெட்டி வூட்டுக்குக் கூட்டி வாரப்ப, மாப்பிள கால் கழுக மச்சான் வருவா. மோதிரம் போடுவாங்க இல்லை?” என்று கேட்ட மாமனின் பெண்சாதி பதில் கொடுக்கிறாள். யார் யாரோ புதிய முகங்கள். கலியாணச் சடங்கும் பூசையும் பத்துமணிக்கு மேல்தான் நடக்க இருக்கிறது. காலையில் இட்டிலியும் குருமாக் குழம்பும், பழமும் காப்பியுமாக எல்லாரும் பலகாரம் செய்தாலும், மணப்பெண்ணும், தாயும் தகப்பனும் எதுவும் உண்ணார். சமையலுக்கென்று அமலோற்பவத்தின் மேற்பார்வையில் வந்திருக்கும் ஆட்கள்தாம் பொறுப்பேற்றிருக்கின்றனர். அதிகாலையிலேயே மைக்செட்டுக்காரன் வந்தாலும், எட்டு மணிக்குத்தான் பாட்டுகளை ஒலிபரப்பத் தொடங்குகிறான். பாண்டு வாத்தியக்காரர் வேறு முழக்க வந்து விட்டனர். ரோசிதா, மணமகனின் தாய், மணமகன் தோழர்கள் எல்லோரும் பத்துமணி சுமாருக்குத்தான் ஒரு வண்டியில் வந்திறங்குகின்றனர். நசரேனும் அவன் மனைவியும் குழந்தைகளும் தனியாக வந்திருக்கின்றனர். மாமனுக்கு உடல் நலமில்லாததால் வரவில்லை. இரண்டு பிள்ளைகளும் மயினிமாரும் வந்திருக்கின்றனர். மணமகன் வாயிலில் பெண்ணழைக்க வரும் நேரத்தில், ஸிஸ்டர் மேனிகா, ஒரு ஜீப்பில் வந்திறங்குகிறாள். தாய் தகப்பனுக்கு முன் அவள் வருகையில் அவர்கள் தோத்திரம் சொல்லுகின்றனர். அப்பன் பட்டு உருமாலைக் கட்டிக் கொண்டு வெண்மையான சரிகை இழை வேட்டியும் சட்டையும் கையில் இடுக்கிக் கொண்ட தோல்பையுமாக எல்லோரையும் பார்த்து அளவளாவுகிறார். “சம்பந்ததாரியாயிட்டோம். எல்லாம் மாதா கிருபை. இந்தக் குடும்பத்தில் ரெண்டு கலியாணந் தட்டி மூணாவதா நாம சம்பந்ததாரியாறோம்...” என்று யேசம்மாளிடம் அப்பன் மகிழ்ச்சியுடன் பேசுகிறார். “ஆமா? மரியாம்பய எண்ணாண்டு இப்பிடி அசிங்கியமா நடக்கான்? அவெம் பொஞ்சாதி, பெஞ்ஜமின், சந்தியாகு ஆரும் வார இல்ல?” “எந்த மயிரா வந்தாயென்ன, வாராட்டி என்னிய. நா எம்மவக்கு ஃபஸ்ட்கிளாஸ் கலியாணம் முடிப்பே. கோயில் ஜோடிச்சிருக்கு” என்று இறும்பூது கொள்கிறார். மணப்பெண்ணை அலங்கரிக்கிறாள் பாலாள். அவள் இந்துவாகியிருந்தாலும் அடுத்த வீட்டுத் தோழியல்லவா? ‘நெட்’டணிவித்து முடிவில் வெண்மையான மலர் வளையத்தை வைக்கிறாள். அந்த மலர் வளையமே சுமையாக அழுத்துவது போல் மேரிக்குத் தோன்றுகிறது. எதிரே குழுமிய கூட்டத்தில் வெண்ணுடை கன்யாஸ்திரீ... லில்லி... லில்லி அக்காள்... கல்யாணமே வேண்டாம் என்று எவ்வளவு சுளுவாகச் சொல்லிவிட்டாள்!... கழுத்தில் கட்டம் போட்ட குட்டையை மடித்துக் காலரில் செருகிக் கொண்டு உயரமும் முரட்டுத்தனமாக வளர்ந்துவிட்ட பீற்றர் நிற்கிறான்... மேரிக்குக் கைகள் கசகசவென்று வேர்க்கின்றன. திடீரென்று நா வறண்டு போகிறது. தண்ணி... தண்ணி... என்று சைகை செய்கிறாள். ரமேசு சோடா உடைத்துக் கொண்டு வருகிறான். ஜயா விசுறுகிறாள். கோஷங்கள் காது செவிடாகிவிடும் போல் ஒலிக்கிறது. வெளியே மணலை வாரியடிக்கிறது காற்று. கேலிகளும் கிண்ணாரங்களும் செவிகளில் விழாத பாண்டு... ‘நெட்டும் வீலும்’ படபடக்கிறது; சேலைகள் பறக்கின்றன. கோயிலுக்குள் செல்கின்றனர். ஆத்தா... அந்த மண ஊர்வலத்தைத் தொடர்ந்து கோயிலுக்குள் செல்லவில்லை. அவள் தன் முடியை எண்ணெய் தொட்டு வாரியிருக்கவில்லை; புதிய சேலை உடுத்தியிருக்கவில்லை. அவள் தெற்குத்தெரு திரும்பி கணபதி கோயிலின் வலப்புறம் பஞ்சாட்சரத்தின் வீட்டுப் படியில் சென்று நிற்கிறாள். “மாமி...? நீங்க கலியாணத்துக்குப் போக இல்லியா?” மருந்தகத்தில் வேலை செய்யும் அமுதாதான் கேட்டுக் கொண்டு வருகிறாள். “கணேசு புள்ள எங்க? புனிதம் எங்க? எம்பய மக்கா...!” அவள் அழவில்லை. ஆனால் சொல்லெழும்பாத உணர்ச்சி நெஞ்சைப் பிடிகிறது. “புனிதத்துக்கு ஒடம்பு சுகமில்ல மாமி. திருச்செந்தூர் ஆசுபத்திரிக்குக் கூட்டிப் போனா... மாமியும் போயிருக்கா...” அவள் அந்த நடையிலேயே மண் குவியலைப் போல் உட்கார்ந்து விடுகிறாள். நெஞ்சம் வெடித்து வருகிறது. மகள் ஒரு மணவாளனுடன் இணையும் காட்சியை அவள் பார்க்கவில்லை. வண்ணான் நடை பாவாடை விரிக்கிறான்; குடிமகன் புதிய துணி உடுத்தி, குடைசுருட்டி குடைபாவாடை பிடித்து வருகிறான். பாண்டு முழங்குகிறது. வீட்டு முன்முற்றப் பந்தலில் கொலுகட்டி இருக்கிறார்கள். பெண்ணுக்கு ஆத்தாளெங்கே? பால் பழம் தந்து சந்தனம் பூசி மணமக்களை வரவேற்க அம்மையெங்கே? மருமகனின் காலைக்கழுவ, மச்சான்... ஒரு மரத்தில் தொழில் செய்த பிள்ளைகள்... ஒரே ஏனத்தில் சோறு கட்டிச் சென்று மச்சான் மாப்பிள்ளை என்று பழகிய பிள்ளைகள். அந்த மச்சான் கேலியும் பரிகாசமுமாகக் கால் கழுவவில்லை. ‘நீ மோதிரத்தை முன்னே வை; நான் கழுவுவேன்’ என்று சிரித்து மோதிக் கொள்ளும் சந்தோஷங்கள் இல்லை... அவன் மனைவியை அழைத்துக் கொண்டு போய்விட்டான்... அவள் தலைக்குள் கடல் பிரளயமாகப் பொங்குவது போலிருக்கிறது. அலைவாய்க் கரையில் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
|