உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
அத்தியாயம் - 32 இருதயராஜின் வாழ்வில் கடல் மேல் செல்லும் அத்தியாயம் முடிந்துவிட்டது. வயிற்றைப் பிடித்துக் கொண்டு முனக முடியாமல் முனகுகிறார். சில சமயங்களில் புறக்கடை வாயிற்படியில் அமர்ந்து கடலையும் கடற்கரைக் காட்சிகளையும் ஆற்றாமையுடன் பார்க்கிறார். குடிப்பதற்கு ஒரு பொட்டுச் சாராயம் கிடையாது என்று கட்டிப்போட்டு விட்டார்கள். உள்ளத்தினுள்ளே ஒரு துடிப்பு மிகுந்த நாவாய் ஆற்றாமைகளை வசைகளாகப் பொழிந்து கொட்டிக் கொண்டிருந்த எதிர்ப்புணர்வு உயிரிழந்து விட்டது. அவர் பார்வை சில சமயங்களில் கடலையும் தாண்டிச் சூனியத்தில் நிலைக்கிறது. கட்டுமரங்களும் பாய்த்தோணிகளும் பாயில்லா விசைப்படகுகளும் போட்டி போட்டுக் கொண்டு கடலில் வலை வைக்கும் காட்சிகளைக் கண் முன் பார்ப்பது போல் சில சமயங்களில் உதடுகள் கோணக்கோண முணமுணக்கிறார். வீட்டையும் தொழில் சாதனங்களையும் பணயம் வைத்துத் தோற்றுவிட்ட குற்ற உணர்வில் சில சமயங்களில் கண்ணீர் வடிகிறது. துடைக்கக் கைவராமல் அமர்ந்திருக்கிறார். பீற்றருடன் இப்போது எட்வினின் மாமன் மகன் மான்யுவல் கூலிமடியாகத் தொழில் செய்கிறான். அன்றாடம் அவன் தொழிலுக்குச் செல்கையில் அப்பன், “மாதாவே, இன்று நிறையப் படி அருளும்... கணபதி, முருகா, உம்மையும் சேவிக்கிறேன்...” என்று மனசோடு வேண்டுதல்கள் செய்து கொள்கிறார். இரவு உறக்கமே வருவதில்லை. “ஏக்கி, கதரினாளே, உள்ளுவியாட்டீ? அந்த டாக்கிட்டர்... எதோ மாத்திர கொடுத்தாருண்ணு அமலிப் பொண்ணு குடுத்தாளே, ரொம்ப நோக்காடாயிருக்குட்டீ... அது குடு...” என்று கெஞ்சுகிறார். ஆத்தா கதிரவனின் முன் பனியாக உருகிப் போகிறாள். “சுக்குக் கருப்பட்டி போட்டு வெந்நி எதமா வச்சித் தரட்டுமா?” என்று பரிவோடு கேட்டு, தொட்டாலே உள் நோக்காடு அழன்று நோவைப் பயங்கரமாக உசுப்பி விடுகிறதென்று கூக்குரலிட்டாலும் வயிற்றை இதமாகத் தொட்டுத் தடவுகிறாள். நோவென்று சொல்லவே பிடிக்காத ஜீவன். அவளுக்கு நினைவு தெரிந்து, முன்பு சில நாட்கள் காய்ச்சல் வந்து படுத்த போதுதான் முடங்கி இருந்தார். கடலுக்குப் போகாத நாட்களை வீண் நாட்களாகக் கருதும் ஜீவன்... சுருண்டு அணையும் தருவாயில் மங்கிக் கிடக்கிறார். “கதரினாளே...! ஏக்கி...!” “இங்கத்தானிருக்கே...” அவளுடைய கை இருட்டில் அவள் முகத்தில் படிகிறது. அவளோடு எத்தனை வருஷ வாழ்க்கை தொடர்ந்து சென்றிருக்கிறது...? மணவாழ்வின் வெள்ளி விழாவைக் கொண்டாட வேண்டுமென்று கனவு கண்டதை எல்லாம் நெஞ்சம் எண்ணிப் பார்க்கிறது. “கதரினாளே, நா மண்ணோடு போயிட்டப் பொறவு, எனக்காவ மனஸ்தாவப்படுவியா...ட்டீ...!” “இப்பம் இதல்லா என்ன பேச்சு... நாதா மொதல்ல மண்ணுக்குப் போவ. பாத்திட்டே இரிம்...” “நீ இரிக்கணம்... ஒன்னால ஒதவியுண்டு. ஜயாளுக்குக் கலியாணம் கட்டணும். ஊமைப்பய்யனுக்கும் ஒரு பொண்ணு கட்டி மவெ பிறக்கணும். ஏக்கி, அந்தப்பய அவன வாரச் சொல்லுட்டீ... இந்த வீடு நெரச்சி எம்புள்ளங்க, எம் புள்ளங்கோட புள்ளங்க எல்லாரும் இருப்பானிருந்தே. ஆருமில்லாம போயிட்டா. நா... ஆருமில்லாம தனிச்சி இருட்டில வழி நடக்கே...” அப்பனின் கண்ணீரை ஆத்தா துடைக்கிறாள். வாசலில் கொடி மரத்தில் பட்டுக் கொடி ஏறுகிறது. பெரிய கோயில் திருநாள். ஊர் முழுதும் வண்ண வண்ணங்களாய் மக்கள் நடமாடுகின்றனர். காந்த விளக்குகளை வைத்துக் கொண்டு ஏதேதோ பொருள்களைப் பளபளப்பும் மினுமினுப்புமாக வியாபாரம் செய்யும் கோலாகலமான கடைகள். ஜெயாளின் கையைப் பற்றிக் கொண்டு திருவிழாக் கடைகளைப் பார்க்க நடக்கிறார். ஆனால் கோயில் முன் கெபி வரையிலும் கூட நடக்க முடியவில்லை. பஸ்ஸில்தான் எத்தனை கூட்டம்? இளவட்டங்கள் மிதிபலகையிலும் சன்னல்களிலும் தொத்திக் கொண்டு போகின்றனர். வலை நிறைய வாரிவரும் மீன் கூட்டங்களைப் போல் மனிதர்கள்... ஜான் இறால் வண்டியில் மேரியைக் கூட்டிக் கொண்டு வந்து இறங்குகிறான். ஒரு சுற்றுப் பருத்திருக்கிறாள் மேரி. “திருநாளுக்கு இருக்கட்டும்” என்று விட்டுவிட்டுப் போகிறான். அவள் புறக்கடையில் சென்று சுழற்றிச் சுழற்றி வாந்தி எடுக்கிறாள். கடற்கரையின் வாரிசுகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. “அப்பச்சி நோவாப் படுத்திருக்காண்ணு ஏஞ் சொல்லி அனுப்பல...?” என்று கேட்கிறாள். “உம் புருசன் இங்க வந்து ஒருநா விசாரிச்சானா...?” என்று ஆத்தா சீறுகிறாள். மாதா சுரூபம் சப்பரத்தில் வீதிவலம் வருகிறது. வாணங்களும் வாத்திய கோஷங்களும் அதிர்வெடிகளுமாக முழங்குகின்றன. மொடுதவம் ஆமை திருப்பினானாம். வக்கட்டாமை. சுகமான ஆணம் வைத்திருக்கிறாள். சோறும், ஆமை - வார் சூப்பும் ஆத்தா வைத்துக் கொடுக்கிறாள். அவரால் ஒருவாய் கூட உண்ண முடியவில்லை. புனிதம் கைக் குழந்தையைக் கொண்டு வந்து அவர் மடியில் வைக்கிறாள். “மாமா சேவிக்கிறேன்?” என்று நெற்றி நிலத்தில் தோய இந்துவாகப் பணிகிறாள், ஆசீர் வேண்டுகிறாள். அந்த நாட்களில் மரியான் பகல், கோயிலுக்கு அழைத்துச் சென்றால் உயர்ந்த மாடத்திலிருந்து புனித நீர் எடுத்து நெற்றிக்கு வைத்துக் கொள்ள தூக்கிக் காட்டச் சொல்வான். விரலால் நீரெடுத்துத் தங்கச்சியின் நெற்றியில் சிலுவை இட்டு, “ஆண்டவன் ஏசு கிறீஸ்து மண்ணிலே பிறந்து...” என்று சாமி மாதிரியே பேசுவான். அப்போது அவனை அணைத்து முத்தம் வைப்பார். எவ்வளவு மாறுதல்? சாமியென்பதுதான் என்ன, கடலின் ஓலத்தில், உயிரைப் பணயம் வைத்துச் செல்கையில் ஆண்டவனே என்று பற்றிக் கொள்கிறார்கள். முருகா, மாதா, கடல் நாச்சி... எல்லாம் ஒண்ணு தானா? பூங்குழந்தையின் தொட்டுணர்வில் உடல் சிலிர்க்கிறது. முத்தம் வைக்கிறார். கைகளால் உயரத் தூக்கி. மானுவல் கோட்மாலைக் கொண்டு வந்து மணலில் போடுகிறான். “எம்பிட்டுலே...?” “றாலில்லை. களர், அயிரம் பதினெட்டு...” “ஒரு வலையில கூட றால் படல...?” பதினெட்டில் பத்துக் கொன்று பொதுஃபண்ட்... வட்டக்காரன் வரி ஆறிலொன்று... ஏலக்காரன் காசு... “கதரினாளே...?” “இங்கிய...” மாதாவே! இது சோதனையா? “நொடிக்கு நூறு தரம் அப்பச்சி கதரினாளக் கூப்பிடுது. இப்பம் ரொம்பக் காதல்!” என்று சிரிக்கிறாள் மேரி. “பொதுமை எல சுரூபத்துப் பாதத்தில வச்செடுத்து மரத்துக்கொங்கயிலே கட்டுலே. அல்லாட்ட கணவதி மேல மாலை போட்டிருந்தா சாமிட்ட கேட்டு வாங்கி மரத்துக் கொங்கையில கட்டுலே...” என்று றால் படுவதற்கானதொரு வழியைச் சொல்லுகிறார். “கூடங்கொளத்து அந்தத் தொள்ளாளி ரெண்டு ரூவா குடுத்தா எதோ எழுத்தெழுதிக் காயிதத்தில தாராராம். அத்த வச்சிட்டா நல்ல பாடு இருக்கிண்ணும் சொன்னானுவ. பத்து நூறுரூவாக்கி மீன் படுதுண்ணா ரெண்டு ரூவா பிரமாதமா?...” மனசுக்குள் கணக்குப் போட்டுப் பார்க்கிறார். கோயிலுக்குச் சென்று மரத்தில் தெளிக்க மந்திர நீர் வாங்கி வரவேண்டும் என்று அவா உந்தினாலும் ஓர் அடியும் நிலத்தில் எடுத்து வைக்க முடியவில்லை. மழைக்காலம் துவங்கிவிட்டது. கடலின் மேல் சென்று வலையிழுக்கத் தெம்பு குறைந்தாலும் முதிய தலைமுறைகளும் இளைய தலைமுறைகளும் மரத்தைத் தள்ளுவதற்கும் கரையேற்றுவதற்கும் மீன் தட்டுவதற்கும் உதவிகள் செய்வார்கள். தம்மால் எதுவுமே செய்ய இயலவில்லையே என்று வருந்துகிறார். பல்லி முட்டைபோல் டாக்டர் கொடுத்திருக்கும் மாத்திரையைச் சாப்பிடாமல் உறக்கமே பிடிக்கவில்லை. இரவெல்லாம் விழிப்பு, விடியற்காலையில் பையன் தொழிலுக்குப் போகும்போது அர்த்தமில்லாத அச்சங்கள் அவரைக் கவ்விக் கொள்கின்றன. “லாஞ்சிக்கார மரத்தும் மேல ஏத்தி காத்தாடியால ஒடம்பச் சீவிடப் போறா. செக்கிள் தொழில் போதும்லே...” பீற்றர் தண்ணீர், சோற்றேனம், மிதப்புக் கட்டை எல்லாவற்றையும் சுமந்து செல்கையில் அவனைப் பற்றி முத்தம் கொடுக்க வேண்டும் போலிருக்கிறது. “முருகா...! மீன்படாத நாட்களில், அவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்த நாட்களிலும் மிதப்பாவை வீசிப் போடுகையில், “திருச்செந்தூர் மச்சானுக்கு?” என்றுதான் சொல்லுவார்கள். முருகன் அவர்கள் இனத்தில் பெண்ணெடுத்த மச்சானல்லவா?” சாமியெல்லாம் மனிதனைப் போல்தானென்று சொல்கிறார்கள். ஆனால் மனிதனுக்குள்ள சாமியுமிருக்கிறது; மிருகமும் இருக்கிறது. மிருகமாயிருந்து தெம்பெல்லாம் போன பிறகுதான் மனிதன் மிருகத்துக்கு மேல் என்று தெரிகிறது. மழை அடித்துக் கொட்டுகிறது. நடுவீடு ஒன்றுதான் பத்திரமாக இருக்கிறது. நாடார் குடியிலிருந்து சொர்ணத்தாச்சி பாம்படமும் காதுமாகப் பால் கொண்டு வந்து ஊற்றுகிறாள். அவருக்குத்தான். காய்ச்சிக் கருப்பட்டி போட்டுக் குடிக்கச் சொல்லியிருக்கிறார், டாக்டர். ஆத்தா கருப்பட்டி வாங்கக் கடைக்குச் சென்றபோது கணேசு அவளுடன் ஓடி வந்து விடுகிறான். புனிதம் நாற்தோறும் மாலையில் மாமனுக்கு ஏதேனும் நாவுக்கு ருசிக்கப் பழமோ பணியாரமோ கொண்டு வருகிறாள். இப்போது கணேசு, ஆத்தா சுள்ளியைப் போட்டுப் பாலைக் காய்ச்சுமுன் அருகில் அமர்ந்து ‘எனக்கு...? எனக்கு...?’ என்று ‘ரிஜிஸ்தர்’ செய்து கொள்ளுகிறான். பாலை ஆற்றிக் கருப்பட்டிச்சில்லைப் போட்டுக் கலக்கி ஒரு சிறு தம்ளரில் அவனுக்கு ஊற்றித் தந்துவிட்டு லோட்டாவைப் பாட்டனுக்குக் கொண்டு வருகிறாள். பாட்டன் எழுந்து பாலைப் பார்க்கு முன் பயல் தன் தம்ளரைக் குடித்து முடித்துவிட்டு “இன்னும்... இன்னு...” என்று ஓடி வருகிறான். பாட்டி ஒரே வாய் ஊற்றிவிட்டு, “ஏக்கி, ஜயா, இவன அந்தால தூக்கிட்டுப்போ. அப்பெ ஒருவாய் பால் குடிக்க விடமாட்டா... அந்த ஆச்சி, தங்கம் கணக்கில் பால் அளக்கா... எந்திரிச்சி இதக் குடிச்சிக்கிங்க. வவுத்தில் ஒண்ணில்லேண்ணா காந்தல் நெம்பப் புரட்டும்...” ஜயா பையனைத் தூக்க வருகிறாள். ஆனால் அவன் அசைகிறானா? பாட்டியிடம் தம்ளரும் கையுமாக ஒட்டிக் கொண்டு லோட்டா பாலை விடச்சொல்கிறான். பாட்டன் அந்த இளங்குறுத்தை வெளுத்துச் சுருங்கிக் காய்ந்த கையினால் பற்றுகிறார். புதிய தளிர், சூடுள்ள இரத்தம் பாய்ந்து கடல் புறத்தை உயிருடன் வைக்க இருக்கும் சந்ததி. “அவெ ஒங்கக்க ஒருவாய் பாலில்லாம குடிச்சிப் போடுவா. நீங்க ஒருவா முழுங்கிக்குமுன்ன மடுக்கு முடுக்குண்ணு குடிச்சிடுவா. அவெக்கு நா இட்டிலி மாவாட்டி வச்சிருக்க, சுட்டுத்தார. பாலு, நீங்க குடிச்சிக்கிங்க...” என்று பாட்டி கூறினாலும் பாட்டன் விடவில்லை. “அவெ குடிச்சா, நா குடிச்சாப்பல...” அவன் கைத் தம்ளரில் லோட்டாவைச் சரித்துப் பாலை ஊற்றுகிறார். அவன் குடிப்பதை, கன்னங்கள் உப்ப தம்ளரைக் கவிழ்த்துக் கொண்டு மொடுக்மொடுக்கென்று குடிப்பதை ஆர்வத்துடன் பார்க்கிறார். குண்டு முகம், மருமகளைப் போல். அவள் நல்ல பெண். பிள்ளையாகப் பெற்று, வாழவைக்கிறாள். “என்னம்ப்பு - நீங்க குடியும்... ஏலே, பாட்டா பாலு குடிக்கட்டும்லே, பாட்டா, நீங்க குடியுமிண்ணு சொல்லு...” பாட்டி சொல்லிக் கொடுப்பதை ஏற்க அவனுக்கு விருப்பமில்லை. போலியாகத் தன் ஆசைகளை மறைத்துக் கொண்டு பேசும் பண்பு அவனை இன்னும் தொடவில்லையே? “இவெ எப்படிக் காலயில இங்க வந்தா?...” “கருப்பட்டி இல்ல, கடதொறக்க இல்ல. அங்க போனம். புடிச்சிட்டான்” என்றுரைக்கிறாள் அவள். கடை திறக்கவில்லை என்பது பொய்... அவர் அதை ஊகிக்க மாட்டாரா? கருப்பட்டி வாங்கக் கையில் துட்டு இல்லை. “இவெப்ப எப்பம் வாரான்?” “கோயில் திருநாளுக்கு முன்ன ஒருநா வந்திற்று, புள்ளயப் பாத்திட்டு, ராவோட வாழத் தோட்டத்துல வேலையிருக்கிண்ணு போயிட்டானாம். மெனக்கி நாள்ளல்லா அங்க போயிடறா. செலவுப்பணம் மாட்டும் ஆல்பர்ட் பய வந்தா கொண்டாரா. அவதா முப்பது நாப்பதுண்டு செலவுக்குக் குடுக்கா, மாம மருந்து மாத்திரய்க்கு நீங்க பணங்குடுக்காண்ட மிண்ணா...” “நல்ல பொண்ணு. குணமுள்ளவ.” “அந்தப் பொண்ணு மேனிய அகுஸ்தீனுக்கே கெட்டிச் சிரிந்தா இம்மாட்டு வட்டக்காசு கொடுக்காண்டாம். கூலி மடி போலச் சாவ வேண்டா...” என்று அவர் சொல்லிக் கொள்கிறார். “ஜான் பயல வூட்டுக்கு வா வாண்ணு வாராக்காட்டி கல்யாண ஆசயப்போட்டவ நாந்தா அந்தச் சிறுக்கி, திருநாளுக்கு வந்தவ, அப்பச்சி நமக்காவத்தானே கடம்பட்டுப் போனாருண்ணில்லாம, சீலையெடுக்கல, பலகாரம் பண்ணல, அதெல்லாம் செய்யாக்காட்டி மாமியா ஏசுவாண்ணு சொன்னா, கழுதச்சிறுக்கி, அப்பச்சிக்கி ஒரு கா ரூபாக்கிக் கருப்பட்டி மிட்டாய் வாங்கியாறத் தோணல. அவெ, மயினர் கணக்க, வண்டியக் கொண்டாந்து நிறுத்திட்டு இவள வாரச் சொல்லி ஏத்திட்டுப் போறா, மாமா எப்படியிருக்கீயிண்ணு கேட்டானா? நன்னியத்தவ... நசரேன் தா கொணமுள்ளவ...” மனம் எதிலெல்லாமோ விழுந்து கொட்டுகிறது. அன்றொரு நாள் பிரிந்து போவென்று சொன்ன பிறகு மரியானை அங்கே அப்பன் பார்க்கவேயில்லை. இப்போது, அவன் இந்த வீட்டுக்கு வரவேண்டுமென்று ஏங்கி மனம் அழுகிறது. ஆனால் அதை வெளியிட அவருக்குத் தகுதி இல்லை. உடம்பில் சூடும் சொரணையுமுள்ள பயல், அப்பனானால் என்ன, யாரானால் என்ன, அப்படித்தானிருப்பான்... அவன்... இருதயராஜின் மகனல்லவா? இந்த எண்ணத்தில் நெஞ்சு பெருமிதம் கொள்கிறது. அலைவாய்க் கரையில் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
|