உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
5 வலக்கையில் சாமுவேல் வீட்டுக்கும் இவர்கள் வீட்டுக்கும் இடையில் பாறைப் படிவமாக ஒரு முடுக்கு... குப்பையும் முள்ளிச் செடிகளும் உடைந்த ஓடுகளுமாகக் கிடக்கும் அந்த முடுக்கில் தான் அவர்கள் இயற்கைக் கடன் கழிப்பார்கள். நாய் செவியடித்து உடலை வளைத்துக் கொண்டு ஓடுகிறது. பொதுக் கிணற்றில் நீரெடுக்கக் கூட்டம் கூடிவிட்டது. மரியான் சில்லென்று முகத்தைக் கழுவிக் கொண்டு கோப்பித் தண்ணீரைக் குடித்துவிட்டு மடிப்பெட்டியைப் பார்த்து இடுப்பில் செருகிக் கொள்கிறான். தலைத் துணியைக் கட்டிக் கொண்டு, புறக்கடையில் இறங்கி ஓடுங்கிறான். அலுமினியம் தூக்கில் மேரி வைத்திருக்கும் சோற்றையும் வெங்காயத் துவையலையும் கூட எடுத்துக் கொள்ளாமல் ஓடுகிறான். காற்று மணலை வாரி வீசி அடிக்கிறது. இவன் கரைக்குச் செல்லும் நேரத்தில் மரத்தை நீரில் தள்ளி விட்டார்கள். வெயில் சுடரின் பரப்பாகப் பாய் விரிந்திருக்கவில்லை. கடல் சற்றே ‘வாங்கலா’கவே இருக்கிறது. கடலில் ஆங்காங்கு கூம்பு கூம்பாக பாய்ய்கள் விரிந்து மரங்களைத் தள்ளிச் செல்கின்றன. ஆழிப்பாரில் மடக்கலை யார் மரத்தையோ மறித்து மறித்து விட்டு விளையாடுகிறது. முட்டாப் பயல்கள் தென்கிழக்காகப் போக வேணாம்? பார் தடையில் சிக்குவதை நினைத்தால் இன்று கடலுக்குப் போக வேண்டாம் என்று தான் தோன்றுகிறது. ஆனால்... கடலில், அலையெறியும் கடலில் தொழிலில்லை என்றால் அவர்களுடைய வீடுகளில், அடுப்புகளில் உலையேறாது; பூனை உறங்கும். ஆற்று வெள்ளம் கடல் மடைகளில் பாயும் இந்நாளில் மடக்கலைக்கு அஞ்சிப் பரவன் இருக்க முடியுமா? “மச்சான் சொகமாக் கெனாக்கண்டு உறக்கம் புடிச்சிருக்கியா, வாரதில்லண்டு நினைச்சம்...” என்று கொம்பைப் பற்றியிருக்கும் ஜான் சிரிக்கிறான். மரத்தில் எல்லாவற்றையும் பொருத்திக் கட்டியிருக்கின்றனர். அவனும் பாய்ந்து ஏறிக் கொள்கிறான். “மடக்கலையே மாரிஸா...” என்று ஜான் பாட்டை முண முணக்கிறான். நசரேன் எப்போதும் போல் புறதலையில் நிற்கிறான். இவர்கள் கொம்பைக் குத்தித் துடுப்பைப் போட்டு மரத்தை இயக்குகின்றனர். மரத்தின் மீது தண்ணீரை நாற்புறங்களிலும் வாரியடிக்கிறது அலைகள். ஏற்றம் ஏறி அந்தப் பக்கம் இறங்குவதற்குப் பதிலாக, கரைப் பக்கமே சரிக்கின்றன. பாரின் தடைகடக்கும் வரையிலும் கண்டம் தான். நசரேன் தலைத்துணியை அவிழ்த்துக் கொண்டு ‘மாதாவே இரக்கமாயிரும்’ என்று பிச்சை கேட்கிறான். தடை மீறிவிட்டால் கடல் ஆத்தாளைப் போல் அடுத்து உறவு கொண்டதுதான். மிகவும் சாமர்த்தியமாக ஒரே நோக்காய்ப் பணிந்து தண்டுவலித்துத் தடை கடக்கின்றனர். மரம் ஒரு முறை கூட மறியவில்லை. பெரிய கண்டம் தப்பிவிட்ட மாதிரியில் நன்றி செலுத்துகின்றனர். கச்சான் காலம். ஐப்பசி பிறந்தால் தான் கச்சான்* அடையில்# விழும் என்பார்கள். பாய்த்தண்டை நிமிர்த்தி, மரியானும் நசரேனுமாக அனியத்தில் ‘நெட்டமாக’ நிற்கக் குத்தி வைக்கின்றனர். கால்களை அகற்றி நின்று தோளில் மாற்றி மாற்றிச் சாய்த்துப் பாயை விரிக்கையில், ‘பிலன்சு’ இல்லை என்றால் அலைகளும் காற்றும் காலை வாரி வீழ்த்திவிடும்? ஜான் பாய்க் கயிற்றை இழுத்து மரத்தில் கட்டுகிறான். பாயை உந்தித் தள்ள அலைக் கரங்கள் தாங்கித் தாங்கிவிட மரம் செல்கிறது. (* கச்சான் - மேல்காற்று # அடை - அட மழைக்காலம்) ‘வாணி வாடு... அரிநிவாடு*...’ என்று நசரேன் முணமுணக்கிறான். (* வாணி வாடு... அரிநிவாடு - நீரோட்டம் கிழக்கிலிருந்து மேற்கே வருவதைக் குறிக்கும் சொல்.) தாவு கல்லை இளக்கிவிட்டுப் பார் அளந்து, நீரோட்ட இயல்பறிந்து, மரத்தைப் பையப் பையக் கிழக்கே கொண்டு செல்கின்றனர். மீன்கள் பகல் நேரத்தில் ஆழ்கடலை நோக்கிச் செல்லும். செம்பழுப்பாக மடை தெரிகிறது. இன்னும் தொலைவில் கடல் கோடு இழுத்தாற்போல் கருநீலம் பாய்ந்து தெளிந்திருக்கிறது. அது அழிப்பார்... அங்கே கடலுக்கடியில் மலைகள் மூழ்கியிருக்கும் பகுதி கல் றாள் போன்ற மீன்களிருக்கும். ஆனால் இந்த வலைகள் சிக்கினால் அவ்வளவுதான்... இந்த மரம் கொண்டு அங்கே தாக்குப் பிடிக்க ஏலாது. லாஞ்சியானால் ஆழியில் தொழில் செய்யத் தொலைவு செல்லலாம். ‘அண்ணே...! ஓங்கலு... தா... ஓங்கலு...!’ ஜான் தான் காட்டுகிறான். ‘முட்டாப் பய மவெ... எருமை கணக்க புசுபுசுண்ணு முட்டி மூச்சு விட்டுட்டு ஆராளியாக்க... இங்கிய வருது?...’ ‘சொம்மாரு... போயிரும்...’ என்று நசரேன் சாடை செய்கிறான். ‘மாதாவே...! யேசய்யா, இரக்கமாயிரும்...’ அது வலைகளைக் கிழிக்கும்; மரத்தை மறிக்கும்... வலிமையுள்ள முரட்டுக் கடல் பிராணி. நசரேன் பதமறிந்து, ஓட்டமறிந்து மரத்தைச் செலுத்திச் செல்கிறான். உயர்ந்து தாழ்ந்து, உயர்ந்து தாழ்ந்து மரம் நாற்புறமும் எல்லை விரிந்த கடல் நடுவே செல்கையில் அவர்கள் வேறு உலக மனிதர்கள். தங்கள் தொழிலே கண்ணுங் கருத்துமாக இருக்கும் இயந்திரங்கள். கரை கண்களை விட்டு மறைந்து விடுகிறது. இதே கோட்டில் வடக்கே சென்றால், மணப்பாட்டு மலையின் சிலுவையார் கோயிலும், இன்னும் மேலே திருச்செந்தூர்க் கோயிலும் கூட மங்கலாகப் புலப்படும். சற்று எட்ட, நீரில் மீன்கள் அமர்ந்திருக்கும் ‘மாங்கு’ தெரிகிறது. இரவானால் ‘புள் பாச்சிலில்*’ தான் கண்டுகொள்ள வேண்டும். பகலில் எண்ணெய் படிந்தாற் போன்று இருண்டிருக்கும் ‘மாங்கு’ புலப்படும். சில சமயங்களில் கணவாய் மீன்கள் ஒருவித மசியைப் பீச்சியடித்து நீரில் அவ்வாறு தெரிவது போல் ஏமாற்றி விட்டுப் போய்விடும்... மாதாவே...! (*புள் பாச்சல் - கடலின் மீது பறவைகள் பறந்து மீனைக் கொத்த வருதல்) வேண்டிக் கொண்டு அவர்கள் மளமளவென்று வலைகளை அவிழ்த்து ஒவ்வொன்றாய்ப், படுதல் கீழும் மிதப்பான்கள் மேலும் தெரிய நீரின் ஆழத்தில் இறக்கி விரிக்கின்றனர். இன்று கொண்டு வந்திருப்பது சாளை பிடிக்கும் வலையல்ல. வாளை மீன்கள், வஞ்சிர மீன்கள் படக்கூடிய சற்றே பெரிய கண்களை உடைய வலைகள். பழைய விலைக்கு வாங்கிய வலைகள். சீராக்கி முடிந்து வலுவான இணைக்கயிறுகள் தொடுத்துக் கொண்டு வந்திருக்கின்றனர். பத்து வலைகளையும் இணைத்து கயிற்றை நீளமாக விட்டு மரத்தின் கொங்காட்டில் முடித்து வைத்துக் கொள்வதற்குள் பொழுது உச்சிக்கு வந்து விடுகிறது. மேக மூட்டத்திலிருந்து கதிரவன் தலை காட்டுகிறான். உடலின் உரமெல்லாம் உருகிவிட்டாற் போன்று வயிற்றில் பசி குடைகிறது. தலைத் துணியை உதறி மேலெல்லாம் துடைப்பது போல் மரியான் இழுத்து விட்டுக் கொள்கிறான். ஜான் மரத்தோடு இணைந்த அலுமினியத் தூக்கைத் திறந்து கருவாட்டுத் துண்டைக் கடித்துக் கொண்டு சோறுண்ணுகிறான். இவனுக்கு இப்போதுதான் மீசை லேசாக அரும்புகிறது. நசரேனைப் போல் அப்பனின் சாடையில்லை. ஆத்தாளைப் போல் சிவப்பாக இருக்கிறான். ஜான் உண்டு நீர் பருகிய பின் நசரேன் நாலு வாய் சாப்பிடுகிறான். “மச்சான், நீனும் உண்டுக்கோ...” “வாணாம் மாப்ள...” வலைகளை இழுக்குமுன் மரியான் சோறுண்ண மாட்டான். கச்சையில் செருகியிருக்கும் மடிப்பெட்டியைத்* திறந்து வெற்றிலை பாக்கைப் போட்டுக் கொள்கிறான். சுண்ணாம்பு சேர்த்து மென்று கொண்டே, புகையிலைத் தூளைக் கையில் எடுத்து வாயில் போட்டு அடக்கிக் கொள்கிறான். மடிப்பெட்டி புதியது. செயமணி சிவப்புச் சாயம் தோய்த்த ஓலையை ஈர்க்குப் போல் மெல்லியதாகக் கிழித்து, இங்கிலீசில் ‘மரியான்’ என்று பளிச்சென்று தெரிய பின்னியிருக்கிறாள். (*மடிப்பெட்டி - பனைநாரினால் முடையப் பெற்ற வெற்றிலை பாக்குப் பை) “ன்னா... வேணுமா மாப்ள...?” நசரேனுக்கு வெற்றிலையை விடப் பீடிதான் அவசியமாக வேண்டும். ஜான் அதை வாங்கிக் கொள்கிறான். “மச்சான், என்னம்பாய் முடிவு பண்ணிப் போட்டே?” நசரேன் கேட்கிறான். “எதுக்கு?” “மாமெ லாஞ்சி பத்திச் சொன்னதுக்கு...” புகையிலைச் சாற்றை உமிழ்ந்து விட்டு அவன் பேசுகிறான். “அப்பெ அதுக்கு ஒத்துக்கல. எனக்கும் இந்தக்கரய விட்டுப் போறது ஏலாதுண்டு தோணுதா... நானொண்ணு உங்கிட்ட முடிவா கேட்டுடணுமிண்டிருக்கே. இதுல ஒளிக்காம உண்மையாம்படியே சொல்றது மேலு. தங்கச்சி லில்லிப் பொண்ண நீ கெட்டுறதுண்ணு முன்னமே உங்கப்பச்சி இருக்கிறப்பவே சொன்ன பேச்சி. அத்தெ எங்கக்கப்பெ, ஆத்தா இன்னம் நப்பிட்டிருக்கியா. மின்ன அது மெனக்கிண்டு வந்தப்பகூட, நீ எங்க வீட்டுக்கு அத்தத் தேடி ஆசையா வந்ததை இப்பமும் சொல்லிட்டிருக்கா ஆத்தா. ஆனா, ஊரில எல்லாம் இப்ப மாமெ லாஞ்சி வாங்கி விட்டிருக்கிறதப் பத்தியும், நீ மாமெ மகளைக் கட்டப் போறேண்ணும் பேசிக்கிறது காதில வுழுகுதா. அதாம் கேக்கேன்...” நசரேன் பீடியைக் கையிலெடுத்துக் கொண்டு புகையை எங்கோ பார்த்துக் கொண்டு விடுகிறான். சிறிது நேரம் சென்ற பின் அவனைப் பார்க்காமலே கூறுகிறான். “ஊருல சொல்லுவா. ஊருக்காரங்களுக்கு என்னம்பு அதப்பத்தி - ஆத்தாளுக்கு அண்ணெ மவளைக் கெட்டணுமிண்டிருக்கு... எங்க மாமி சாகும் வரயிலும் மைனியும் இவளும் எலியும் பூனையுமாச் சண்டை போட்டிட்டிருந்தா. இப்பம், அங்கே பெரியவ ஆருமில்ல. மாமெ எல்லாம் யோசிச்சித்தான் வந்திருக்காரு. ஆனா...” பேச்சு இழை அறுந்து போனாற்போல நிற்கிறது. வானில் யாரோ அல்லிப் பூக்களை விசிறியடித்தாற் போன்று கடற்காகங்கள் பறக்கின்றன. “மாமெ மக சிலோன்ல படிச்சிட்டிருந்திச்சில்ல?” “ஆமா, பி.எ. படிச்சிருக்கா. அதான் வாணாமுன்னே. அவ மதிக்க மாட்டா. மேசையிலதா சாப்பிடுவா, கட்டில்லதா ஒறங்குவா. கவுனு, லுங்கிதா உடுத்துவா. எங்கம்மா சீதனம் வருமிண்ணு பாக்கா. ஆனா, எனக்கு இட்டமில்லிய. நா லில்லிப் பொண்ணத்தா மனசில வச்சிருக்கே. தொழில் மேம்மைய நினச்சித்தா தூத்துக்குடி போறேனே தவுர, எனக்கு லில்லிப் பெண்ணத்தா நினப்பு.” மரியானுக்கு இதைக் கேட்க உள்ளம் குளிர்ந்தாலும் காட்டிக் கொள்ளவில்லை. “எப்பிடின்னாலும் நீங்க ஒசந்தவங்களாப் போயிட்டீங்க...” “அப்பிடிக் கொண்ணும் வித்தியாசமாப் பேசாதே மச்சான். நாம இப்ப நடுக்கடல்ல நிண்ணு பேசுதோம். மாம மகளைக் கெட்ட, மனசோடு இஷ்டமில்ல. நா தொழில நினச்சிப்போறாம். இங்க ஜான் வரான். இதே மரத்தில் நீங்க தொழிலைத் தொடர்ந்து செய்யிங்க...” அவன் பேச்சு மிக இதமாக இருக்கிறது. நடுக்கடலில் வாக்குக் கொடுப்பது போல் பேசியிருக்கிறான். கடலின் அலைகளனைத்தும் சாட்சியாக ஆசீர் அருளுகிறது. அந்த இரைச்சல் மென்மையாக விழுகிறது. பிறகு வலைகளை இழுக்கத் தொடங்குகின்றனர். வியர்வையும் உப்பு நீரும் ஒன்றாகக் கரைய அவர்கள் தசைகள் முறுக வலைகளை இழுக்கின்றனர். இவர்களுடைய உடலுழைப்பின் சாறாக உவர் நீர் கலந்துதான் கடல் உப்பாகிப் போயிற்றோ? வாளை, சூடை... என்று வெள்ளிக் குருத்துகளாகக் கடலின் மடியிலிருந்து வரும் செல்வம். ஐந்தாவது வலையில் மூன்று சுறாக்கள். பொடி மீன்களுக்கிடையில் அரச குடும்பத்துப் பிதிர்க்களாகச் சுறாக்கள். இரண்டு ஆண்; ஒன்று பெட்டை. ஒவ்வொன்றும் நான்கு நாலரையடி நீளமுள்ளது. நைலான் வலைக் கயிறுகளை ஆத்திரத்தில் கடித்துக் குதற முயன்றிருக்கிறது. கயிறு கழுத்தில் பட்டு அறுத்து இரத்தம் கசிய, துடுப்புகளால் வளைந்து அடித்துக் கொண்டு போராடுகின்றன. மரியானும் நசரேனும் கணக்குப் போடுகின்றனர். அன்றையப்பாடு... நூறு ரூபாய் கொண்டு வரலாம். ஆளுக்குப் பாதி பிரித்துக் கொண்டு, தங்கள் பகுதியில் கால் பங்கை இருவரும் ஜானுக்குக் கொடுப்பார்கள். கரை வரவர உற்சாகம் கரை புரண்டோடுகிறது. ஏலே லோ ஏல ஏலோ ஏலே லோ தாந்தத்கினா... ஏலே லோ லவங்க மொடு தாந்தத்தினா இஞ்சி மஞ்சள் க்ராம்பு ஓமம் தாந்தத்தினா வால் மிளகு சீரகமும் தாந்தத்தினா வங்காள பச்சையுடன் தாந்தத்தினா வேளரிசி கருட பச்சை தாந்தத்தினா வீரி சிங்கி வசம்பு ஓமம் தாந்தத்தினா தால மதி அக்கரா சித்திரத்த ஓமம் தாளிச பத்திரி சாதிக்காய் ஏலம் - நாதமுடன் கப்பலின் மீதினில் ஏற்றி - நளின சிங்காரமொடு வருகிறது பாரீர்... ஜானுக்குப் பாட்டு உற்சாகமாக வருகிறது. இவர்கள் கரையேறி வலைகளைத் தட்டுமுன் இந்தக் கடற் செல்வத்தைக் காணப் பிள்ளைகள் கூட்டம் சூழ்ந்து விடுகின்றனர். அந்தோணியார் பட்டத்தலையும் ராயப்பர் வாளிக்காதுமாகப் பொடிப்பயல்கள் எத்தனை பேர்? எல்லோரும் கடல் தொழிலுக்கு ‘வாரிசு’கள். சுய பலத்தையும் தன்னம்பிக்கையும் படித்துத் தரும் இந்தக் கடல் தொழிலுக்கு, அந்தப் பள்ளிக் கூடத்தின் ஏட்டுப் படிப்பைப் புறக்கணித்துவிட்டு வந்திருக்கின்றனர். வாய் பிளக்க, இரத்தக் கீறல்களுடன் சுறாக்கள் மணலில் விழக் கண்டதும் கூட்டம் வேடிக்கை பார்க்க மொய்க்கிறது. “...ஸ்றா!... மேச்சுறா...!” எத்தனையோ மடிக்காரர், எத்தனையோ மேச்சுறாக்களைப் பிடித்து வந்து இக்கரையில் கிடத்தியிருக்கலாம். ஆனாலும் “ஸ்றா” என்றால் ஓர் புத்தார்வம். ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் மரங்களின் வருகையை எதிர்பார்த்து, அதிர்ஷ்டச் சீட்டுக் குலுக்கலுக்கு மக்கள் கூடுவது போல் குழுவி விடுகின்றனர். கதிரவன் மலை வாயில் விழ விரைந்து கொண்டிருக்கிறான். பிச்சைமுத்துப்பாட்டா விரைந்து வருகிறார். மீன் கொட்டடியிலமர்ந்திருந்த குலசைச் சாயபு துவி கழிக்க வளைந்த கத்தியுடன் விரைந்து வருகிறார். அற்பமாகப் பட்டிருக்கும் காரல் மீன்களை நிராகரித்து கோயில் ஒண்ணரைக் கண்ணன் பத்துக் கொன்று கணக்குப் போட்டுக் கொண்டு பிடுங்க நிற்கிறான். குடிமகன் சக்கிரியாஸ் சில பொடி மீன்களைப் பெற்றுக் கொள்ள வருகிறான். “பத்து... பத்து... பதினொண்ணு... பதினஞ்சு, இருபது...” உயர்ந்து கொண்டு செல்கிறது, பாட்டாவின் குரல். “இருவத்தஞ்சி, நுப்பது, நுப்பத்து மூணு, நுப்பத்தஞ்சு, நுப்பத்தெட்டு... நாப்பது... அம்பது, அறுபது” வரையிலும் சென்று இரண்டிரண்டாக உயர்ந்து ‘எழுபத்திரண்டில்’ சென்று நிற்கிறது. ஆனால் மரியானின் முகத்தில் உற்சாகமில்லை. துவிகள் இன்னும் ஐம்பது ரூபாயைக் கொண்டு வரக் கூடும். ஒன்பது துவிகள் வெட்டியிருக்கிறார். “மாப்ள நீ நாயராட்சை, நாளச் செண்டு தூத்துக்குடி போ. பெஞ்சமின் நாமெல்லாஞ் சேந்து ஒன்னிச்சிப் பேசி இந்தத் தெறிப்புக் கெள்ளய நிப்பாட்டணுமிண்டு சொல்லிருக்யா. நீ போயிராத...” “சரி...” என்று நசரேன் தலையசைக்கிறான். ஆனால்... அவன் அன்று ஊரிலில்லை. அலைவாய்க் கரையில் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
|