உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
அத்தியாயம் - 8 ஐப்பசி அடை மழை கொட்டித் தீர்க்கிறது. பொழுது தெரியவில்லை. மழையானாலென்ன, பனியானாலென்ன? கடல் தொழிலாளிகளுக்கு ஏது விடுமுறை? நசரேன் தூத்துக்குடிக்குப் போனவன் அங்கேயே ஊன்றிவிட்டான். ஜானும் மரியானும் வெள்ளாப்புத் தொழிலென்று சென்றவர்கள் பொழுது சாயும் நேரமாகியும் வரவில்லை. கோயில் குத்தகை ஏலம் வழக்கம் போல் குலசைச் சாயுபுவே எடுத்தாலும், இவர்களெல்லோரும் துவி கொடுப்பதில்லை. அதை வாங்க வேறு வியாபாரி, ஒரு கொச்சிக்காரச் சாயபு வருகிறார். ஒரு மாசத்தில் துவியில் மட்டுமே நூறு ரூபாய்க்கு மேல் வந்திருக்கிறது. எனவே இரண்டாம் நம்பர் வலையை கொண்டு, ஆழ்கடல் பக்கம் பெரிய மீன் பிடிக்கவே செல்கிறார்கள். வீட்டில் இருப்புக் கொள்ளவில்லை, அப்பனுக்கு. அவருக்கு உடம்பு நன்றாகத் தேறிவிட்டாலும், முன்போல் கடலுக்குச் செல்லத் தொடங்கவில்லை. மழை விடட்டும், மழையில் நனையலாகாது என்று ஆத்தா தடுத்தாலும் கடற்கரையைப் பார்க்க ஓடிப் போகிறார்; மரம் தள்ளுகிறார். “எங்கேட்டி உங்கக்கப் பெயக் காணம்?...” பிளாஸ்டிக் சீலைத் துணி ஒன்றால் கூடையையும் தலையையும் மூடிக்கொண்டு கடையிலிருந்து உள்ளே வரும் ஆத்தா சிலம்புகிறாள். “காச்ச வந்து ஒடம்பு இப்பம் தா, வாசியா வந்திட்டிருக்கி. கடக்கரயில என்னிய எளவிருக்கி, நனஞ்சிட்டு வந்து நம்ம உசிரை எடுப்பா...லே. பீற்றரு? போயி ஒங்கப்பயெ இழுத்திட்டு வாலேய்! பொளுது என்னியாச்சோ தெரில... மழ என்னப்பு இப்பிடிக் கொட்டுது...!” கருவாடு காய வைக்க முடியாத காலம். விறகுச் சுள்ளி எல்லாம் நனைந்து போயிற்று. அடுப்பின் ஓரம் சாய்த்துச் சாய்த்து வைத்திருக்கிறார்கள். அடுப்பு எரிவதற்குப் பதிலாகப் புகைகிறது. முற்றத்தில் மழை நீருக்காக வைத்த சருவம், தகரம் எல்லாவற்றிலும் நீர் நிரப்பி, கண்ணாடித் திரவம் போல் வெளியே முத்துக்களைச் சிந்துகிறது. பின்புறத்தில் மணல் மேட்டை அறுத்துக் கொண்டு நீர்ப் பெருக்கு செம்பழுப்பாகக் கடலுக்கு ஓடுகிறது. அந்த வாயிலில் நின்று அவள் கடலைப் பார்த்து மலைத்து நிற்கிறாள். அவள் மைந்தன் அந்தக் கடலில் எங்கோ போயிருக்கிறான். கடல் வானும் பூமியுமாக விசுவரூபம் கொண்டாற்ஓல் மழை பெய்கிறது. ஆனால், காற்றில்லை... இது வாழ வைக்கும் மழை... மழை நாளில் உலகில் பிறக்கும் ஜீவராசிகளனைத்தும் பல்கிப் பெருகுகிறது. மீன் குஞ்சியிலிருந்து, நாய்க்குட்டி வரை எல்லாமே பெருகும் காலம். ‘இப்படி ஒரு சாரல் மழைக் காலத்தில்தான் அவள் மரியாளைப் பெற்றாள்; பீற்றரைப் பெற்றாள்; மேரியும் சார்லசும் கூடக் கார்காலத்தில்தான் பிறந்தார்கள். வெளியே சாரல் விசிறியடிக்க, வயிற்றுச் சுமையும் நோவும் நொம்பரங்களும் கரைந்து உடலின் சோர்வே மகிழ்ச்சியின் ஆலவட்டங்களாகக் குளிர்விக்க, கந்தற் கருணையில் மகவை அணைந்து தனக்குத் தானே சிருஷ்டித்துக் கொண்ட அத்தனி உலகின் இலயத்தில் ஒன்றியிருந்த நாட்கள் நினைவில் உயிர்க்கின்றன. மரியான் கடல்மேல் போயிருக்கிறான். அப்போது பிளாஸ்டிக் சீலையைப் போட்டு மூடிக் கொண்டு புறக்கடைப்படியில்... ஏறி வருவது யார்? பிச்சை முத்துப்பாட்டாவின் பெண்சாதி ஸ்டெல்லா... அந்தக் காலத்தில் கரையில் இவள் ஆண்பிள்ளை மனங்களை அழியச் செய்யும் அழகியென்று பேர் பெற்றவள்... “வாரும் மயினி... என்னப்பு இந்த மழயில நனஞ்சிற்று வாரீம்?...” “உன்னியத்தான் அவுசரமா முடுக்கிட்டுப் போவ வந்தம். புள்ள குறுக்க வுழுந்தாப்பல இருக்கு. நாசுவத்தி தலமேல கைய வச்சிட்டா வலியே இல்ல. நிண்ணி போச்சி. நீ, வா இப்பம்... ஒனக்குத்தா நல்ல கை. அந்தப் புள்ளக்கி ரெண்டு முக்கு முக்கக் கூட வலுவில்ல...” “ஆருக்கு?...” “ஆரு எதுண்டெல்லாம் கேக்கால்தே கதரினா, ஆணானாலும் பொண்ணானாலும் யாரானாலும் ஒரு பொண்ணாப் புறந்தவ வவுத்திலே முட்டி மோதி சதையக்கிழிச்சி நெத்தம் வழிய நொம்பரப்படுத்திட்டுத்தான் வெளியே வருதா, அம்புட்டுப் பேருக்கும் இதான் கேக்காம வா...” ஆத்தா அவளை உற்றுப் பார்க்கிறாள். இன்னும் இவள் அழகுதான். இவளுடன் தொடுப்பு வைத்துக் கொண்ட பலரில் நசரேனின் அப்பனும் உண்டு. புருஷனும் பெண்சாதியும் கரையே நாறுமளவுக்குச் சொற்களால் ஏசிக்கொண்டு சண்டை போடுவார்கள். இவள் பெற்ற பெண்ணையே மருமகன் அனுப்புவதில்லை... “என்னம்ப்பு வாரியா, இல்லியா?...” “யாருண்டு சொல்லாம புதுருப் போட்டா எப்பிடி? நானென்ன மருத்துவச்சியா? புள்ள குறுக்கில வுழுந்திச்சிண்ணா கூடங்கொளம் ஆசுபத்திரிக்கு ஆளனுப்பி டாக்கிட்டரைக் கூட்டியாரச் சொல்லும்...!” ஆத்தாளுக்கு ஊகம் அதிகம்; நொடிக்கிறாள். “அப்ப நீ வார இல்லீயாக்கும்!” “அட அந்தோணியாரே! நா அப்படியா சொன்னே! யாருண்டு வெவரம் கேக்கேன்...” “வெவரம் எதுக்கு? ஒரு பொண்ணு, ஒன்னயும் என்னயும் எல்லாரையும் போல நொம்பரப்படுதா, நீ வந்து எதுண்ணாலும் சேஞ்சி புள்ளவேறு தாய்வேறுண்டு ஆவுமாண்ணு பாரு. பொறவு மாதாவிட்ட வழி...” முன் வாயிற்படியில் சார்லசுக்கு செயமணி கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறான். சாரல் தாழ்வரையெல்லாம் நனைத்து, மண் தரையை ஊறச் செய்திருக்கிறது. சுருக்குப்பையை அவிழ்த்துப் புகையிலைக்காம்பைத் தறித்து வாயில் அடக்கிக் கொள்கிறாள். பிறகு பிளாஸ்டிக் சீலைத் துணியை வாயில் கீற்றிலிருந்து எடுத்து உதறிப் போட்டுக் கொள்கிறாள். “ஏக்கி மேரி, நானிதா வாரம். அப்பெ வந்ததும் சோறு வையி...” என்று கூறிவிட்டுப் புறக்கடை வழியாகவே இறங்கிப் போகிறாள். மேரி குசினியிலிருந்து வருமுன் அவர்கள் படியிறங்கி விட்டனர். “யாரு வந்தது செயா?...” “ஸ்டெல்லாமாமி. ஆருக்கோ புள்ளவலி வந்திருக்யாம்...” “இவெதா இந்தக்கரயில நாசுவத்தி?...” என்று மேரி முணமுணத்துக் கொண்டு நடுவீட்டு ஈரத்தைத் துடைக்கிறாள். மழை சற்றே நின்றிருக்கிறது. அப்பனை அழைக்கப்போன பீற்றர், கரைக்கு நேராகத் தரகர் வேலாயுத நாடாரின் கீற்றுக் கொட்டகையில்தான் வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கிறான். பிளாஸ்டிக் சீலையால் மூடிக்கொண்டும், தாழங்குடை சீலைக்குடைகள் பிடித்துக் கொண்டும் வியாபாரிகள் நிற்கின்றனர். சைக்கிளின் பின் மூங்கிற் பெட்டியில் ஒரு கூடை ‘களர்’ மீனை அமுக்கி அமுக்கி வைத்து அழுத்திக் கும்பாரமாக்கி, மெழுகு சீலையால் மூடிக்கட்டுகிறான் ஒரு சம்பை. மணலின் ஏற்றத்தில் பீற்றர் அவனுக்குச் சைக்கிளைத் தள்ளி விடுகிறான். ஒரு மரம் வந்து ஒதுங்குகிறது. பெரிய கூரல்மீன்... மீனை இழுத்துக் கொண்டு வெற்றி வீரனைப் போல் வருகிறான் சந்தியாகு. இருதயம் கண்களை அகலவிரித்துக் கொண்டு பார்க்கிறார். புட்டாச் சீலை உடுத்துத் தலையோடு கால் போர்த்து வரும் மணவாட்டியைப் போல் அல்லவோ பளபளக்கிறது! உடல் முழுதும் கண்ணாடிச் சில்லாய்ப் பளபளக்கும் அழகுசெதிலும் வாலும் அளவான அழகான மச்சம். சந்தியாகு வயிற்றைத் திருப்பி கத்தியின் நுனியால் கீறி, கைதேர்ந்த திறமையுடன் துல்லியமாக அதன் பள்ளையை எடுத்து விடுகிறான். இரத்தக்களரியாக அது கிடக்கிறது. பள்ளையைக் கடலில் நன்றாகக் கழுவிப் பையனிடம் கொடுத்து விடுகிறான். இப்போது இவர்கள் கோயில் தெறிப்பென்று கொடுப்பதில்லை. “இருபத்தஞ்சு, நுப்பது, நுப்பத்தஞ்சு, நாப்பது...” சவரிமுத்து மூப்பன் ஏலம் கூறுகிறார். கடற்கரையில் தொழில் முடக்கமே கிடையாது. “இந்தப்பய ஏனின்னும் வார இல்ல?...” “அப்பச்சி? ஆத்தா உன்னியக் கையோட கூட்டியாரச் சொல்லிச்சி!” அவர் கடலில் ஆங்காங்கு தெரியும் பாய் மரங்களைப் பார்த்தவாறே எழுந்திருக்கிறார். தானும் கடலில் சென்று அலைகளின் இரைச்சலில், தாழ்ந்தும் உயர்ந்தும் போராடும் கட்டுமரத்தில் நின்று ஓடி ஒளியும் மீன்களை வாரி வரும் நாளை நினைத்தபடியே நடக்கிறார். மழை பிசுபிசுவென்று எப்போதும் திருப்தியுறாத பெண்சாதியைப் போல் பிடித்துக் கொள்கிறது. கடற்கரை மணலில், ஈரத்தில் அடிகள் பதிய நடக்கையில் ஒருவித சுகம் தோன்றுகிறது. யாருக்கோ வலையில் நச்சுப்பாம்பு விழுந்திருக்கிறது... பழுப்பு நிறமாகக் கரையில் கிடக்கிறது. நசுங்கிக்கிடக்கும் நண்டுக் கூடுகள், கடல் பாசிகள். பொழுது என்னவாயிருக்கும்? வயிற்றில் பசி குடைகிறது. மேரி முணமுணத்துக்கொண்டு அவருடைய ஈரம்பட்ட துணிகளை மாற்றச் சொல்கிறாள். கைலி ஒன்றைக் கொடுக்கிறாள். பிறகு உள்ளே தட்டு வைத்துச் சோறு வைக்கிறாள். ஆணம் எட்டூருக்கு மணக்கிறது. வாளை வறுத்திருக்கிறாள். தட்டில் சோற்றைத் தொடுமுன் அன்றன்றைய அப்பத்தைத் தருவதற்கான நன்றியைக் கூறாமல் அவர் தொடமாட்டார். உண்டதும் கண்களைச் சுழற்றிக் கொண்டு வருகிறது. புகை குடித்துக் கொண்டிருக்கையிலேயே புலன்கள் மங்குகின்றன. நார்க்கட்டிலில் சுருண்டு முடங்குகிறார். உறக்க மயக்கத்தில் கடலில் செல்வது போல் உணர்வு. இலுப்பா... இலுப்பா ஸ்றா... முட்டாப்பய மவெ, வலையில் பட்டுவிட்டது. தம் கட்டி இழுக்கிறார்... ஆ... தட்டுமடி...! அதானே பார்த்தம்... இவனுவ தொழிலா செய்யிறானுவ? நிலான் கயிற்றை அது குதறிப் போடுமே? பொறவு, அது கழுத்து வாயெல்லாம் அறுத்து மீன் நெத்தம் சிந்திட்டா மீனுக்க இருசி இருக்குமா?... “லே மக்கா! இலுப்பா, தட்டுமடில கொட்டாந்திருக்கேன். எம்மாட்டிருக்கி பாரு! மரத்துக் கொங்கயில கட்டி இளுத்தாந்தே... ஈரலைப் பினைஞ்சுவச்சுனா காச்சி நெய்மாதிரி துல்லியமா எண்ணெய்... பஷ்டாயிருக்கும்...” “நீரு எளவு தண்ணியப் போட்டுப்பிட்டுப் பெனாத்தும்! ஒன்னக்கமவெ வேசகிட்டப் போயிச் சீரழியிறா! இந்தப் பொம்பிளங்களைக் கட்டிச்சுக் குடுக்கணும், குந்துமணி பவனில்ல...” “நீ போடி அறுவுகெட்டவளே, அவெ ராஜாப்பய... அமலோற்பவத்தின் மவ, அந்த ரூபிக்குட்டி, எப்படீ மினு மினுக்யா! அவ அப்பெ, முன்ன, எனக்குச் சிநேகம்டீ! இப்பமும் இன்னு அந்தப் பக்கம் போனாலும் சங்கையோட வாங்கண்ணேன்னுதா அமலோப்பவம் கூப்பிடுதா. நானு முடிச்சி வச்சிட்டே. இந்தக் கரயில, இருதயம் கவுரவப்பட்டவன். பிரமாணிக்கியமா இருக்கிறவ. நினச்சிக்க. பறவாசிப்பே பர்ஸ்ட்கிளாஸ்ரி. பொறவு பர்ஸ்ட் கிளாஸ் கலியாணம். சுருபமெல்லாம் கோயில்ல சுவடிச்சு, பூவெல்லாம் வச்சி, எல்லாமணியம் அடிச்சி, பேண்ட் வாண வேடிக்கை சங்கீதமெல்லாம் வச்சி, நடபாவாடை குட சுருட்டி எல்லாமுமா பய கலியாணம்... “அப்பச்சி கண்ண மூடிட்டே பெனாத்துது...” “பய இன்னம் வார இல்லியா? பொளுது இருட்டிட்டு வருதே?... ஏக்கி மேரி எனக்குச் சோறொண்ணும் வாணாம் சுக்குப்பொடி நெம்பப் போட்டுக் கோபித்தண்ணி கொண்டா...” ஆத்தாதான் நனைந்த சேலையை உதறிப்போட்டு விட்டுத் தலையைத் துடைத்துக் கொண்டிருக்கிறாள். அப்பன் கண்களை விழித்துப் பார்க்கிறார். மேரி சிம்னி விளக்கை ஏற்றிச் சுவரில் மாட்டிவிட்டுப் போகிறாள். “இன்னும் மரியான் வார இல்ல?...” “இல்லை” என்று செயமணி தலையாட்டுகிறாள். ஆத்தா பதிலே சொல்லவில்லை. விளக்கின் அடியில் முடியை விரித்துக் கொண்டு அமருகிறாள். “புள்ள பெற இல்லியா? ஆரு அது...?” என்று மேரி கோபித் தண்ணியை நீட்டிய வண்ணம் கேட்கிறாள். “ஆரு...! ஏதோ ஊர்க்களுத... காலுவந்திச்சி. இளுத்துப் போட்டுட்டு வந்தெ. அது ஆணா பொண்ணாண்டு கூடப் பாக்க இல்ல... சவம்...” அவளுக்கு வெறுப்பு குமைந்து வருகிறது. ஆனால் அடுத்த கணமே அது ஆவியாகப் போவதுபோல் மனம் கரைகிறது. சுக்கு - மல்லி மணத்துடன் சூடான கோபி இதமாக இருக்கிறது. இந்தக் கரையில் வாலிபம் கிளர்ந்து வர ஆணாய்ப் பிறக்கும் அத்தனை மக்களும் தங்கள் உழைப்பின் சூட்டைச் சுமையாக்கிக் கொண்டு ஒரு பெண்ணைத் தேடாமலில்லை. மனிதனாகச் செய்து கொள்ளும் கட்டுப்பாடுகள் வரம்புகளுக்கெல்லாம் அந்த வெப்பம் அடங்குவதில்லை. நீரோட்டம் மாறி மரத்தை இழுத்தாலும், அலைகள் குப்புற மறித்தாலும், ஈடு கொடுக்கும் வலிமையுடன் ஒரு மகனை அவளுக்கு மாதா கொடையாகத் தந்திருக்கிறாள்... ஆனால், பதினெட்டுக்குள் ஒரு பெண்ணைக் கட்டி வைத்து வரம்பு முறை என்று அங்கே யாராலும் செய்து கொள்ள முடியாமல் எத்தனையோ தடைகள். சட்டி நிரம்பிப் பொங்கும்போது, தீ எரிந்து தளாங் திளாங்கென்று கொதிக்கையில் வெளியே பருக்கைகள் விழாமலிருக்கின்றவா? கடலின் அலைகளுக்கு ஒரு நேர் விளம்பு பிடிக்க இயலுமா? மனிதனின் இளமையின் குருதித் துடிப்புக்கும் பாடுபடும் ஆராளியில் எழும்பும் கனலுக்கும் வரம்பு பிடிக்கமுடிவதில்லை. அவளுக்குத் தெரிந்து அந்தக் கரையில் மேனிவளம் துளும்பும் இளம் பெண்கள் எவரானாலும் அஞ்சு பத்துமார் ஆழக்கடலின் கரையோரம் கலிக்கும் மீன்கள் போன்றவரே. எந்தப்போதில் எந்த இளைஞனின் உடற்சூட்டுக்கு உட்பட்டுப் போவார்கள் என்று சொல்ல இயலாது. கடற்கரையில் கடலின் உப்புநீர் படாமல் பனித்துளி புனிதம் காக்க ஏலுமோ? தலிக்கட்டு இல்லாத மார்பிலும் பால் சுரக்கிறது. ஏலிக் குட்டி... பெற்றிருக்கிறாள். அவளுடைய பன ஓலைப்புரையில் துப்புரவான தையில் பாயில், கந்தல் கருணையில் புதிய உயிர் வந்து விழுந்ததுமே கைகளையும் கால்களையும் இழுத்து உதைத்துக் கொண்டு முதல் அழுகையினால் அந்தக் குடிலைப் பவனமாக்கியது... ஏலியின் முகம்... அத்துணை நோவிலும் பொறுமை சுமந்த முகம், எப்படி அவ்வளவு அழகாக இருக்கிறது? பனிநீரில் குளித்த ரோஸாப்பூ போல...! குழந்தை ஆண் என்றாள் ஸ்டெல்லா. கருப்பு முடி நெற்றியில் கவிய, இந்த மேரிக் குட்டிக்கு அப்படித்தானிருந்தது... சை! ஆத்தா எழுந்து புகையிலைச் சாற்றைத் துப்புகிறாள். மரியான் வலைகளுடன் வருகிறான். புறக்கடையில் வலைகளைப் போட்டுவிட்டு உள்ளே வருபவன் கையில் ஒரு ‘கோமரயன்’ மீன் வைத்திருக்கிறான். “மக்கா...?” அப்பன் எழுந்து உட்காருகிறார். “அண்ணெ, ஈரத்தை அவுத்து மாத்திட்டு வாண்ணே, நடுவூடெல்லாம் ஈரலிச்சிப் போச்சி...” என்று புருபுருத்துக் கொண்டு மேரி வருகிறாள். “வூட்டுக்குள்ள வாரயிலேயே ஒங்காருவாரு. ஏவே, ஒரு தும்பு கொண்டாலே, இத்தக் கெட்டி வைப்பம் வாசப்பக்கம்...” “கோமரயனா? கெட்டிவை. மூஞ்சில முளிச்சா அதிட்டம்...” “வெந்நி காச்சியிருக்கா? பசிக்கி...” ஆத்தா ஒரு பேச்சும் அனக்கமும் இன்றி உட்கார்ந்திருக்கிறாள். இதற்குள் பரபரத்துக் கோபித் தண்ணீரைக் கொண்டு வருவதும், குசுனிக்கும் புறக்கடைக்கும் நடப்பதுமாகச் சலம்புவாளே? “என்னிப்பு, ஆத்தா சொணக்கமாயிருக்கு?...” மடிப்பெட்டியைத் திறந்து நான்கு பத்து ரூபாய் நோட்டுகளை அவள் முன் நீட்டுகிறான். அப்பனுக்குத்தான் கண்கள் அகலுகின்றனவே ஒழிய இவள் ஒரு காலைக் குத்திட்டு மடித்துக் கையில் தலையை வைத்துக் கொண்டு குந்தியிருக்கிறாள். பீற்றர் தும்பு தேடி வந்து கோமரயன் மீனை வாயிற்படியில் தொங்கக் கட்டுகிறான். மழை நின்று, இருளில் தெருவில் செல்பவர் நிழலுருவங்களாகத் தெரிகின்றனர். “என்னிய மீன்லே?” “தள மீன் ரெண்டு, பொறவு வாளை. சீலா ரெண்டு பெரிசு. எல்லாமா நூத்துச் சில்வானம் போச்சி...” “அஞ்சு ரூபா குடு லே. லேவியம் வாங்கித்தரமிண்ணா சக்கிரியா...” ‘குடுக்காதே, எளவு சாராயங் குடிச்சிப் பாளாப் போவாரு’ என்று ஆத்தா உடனே பாய்ந்து வரவில்லை. அவன் தனக்கு வைத்திருந்த இரண்டு ஐந்து ரூபாய் நோட்டுக்களில் ஒன்றை அப்பனிடம் கொடுத்துவிட்டு, நான்கு பத்து ரூபாய்களில் ஒன்றைத் தனக்கு வைத்துக் கொள்கிறான். “தங்காலம்* வருமுன்னம், திருக்கை வலை பிரஞ்சுக் கிடணும்... ஆத்தாக்கென்ன, ஒடம்பு சொகமில்லியா? ஏக்கி மேரி?” (* தக்காலம் - சிறு மீன்கள் படாத மாசி, பங்குனி மாதங்கள்) “என்னியோ ஒண்ணும் சொல்லலே. காலமே ஸ்டெல்லா மாமி வந்து யாருக்கோ புள்ள வலிண்டு கூட்டிப் போனா. விளக்கு வக்கையிலதான் வந்திச்சி. சோறு தண்ணி வாணாம். கோபித்தண்ணி போதுமிண்டு வாங்கிக் குடிச்சிச்சி...” “ஆமா? ஒடம்பு நல்லாயில்லேண்ணா, இவ ஏம் போறா? ஊர் களுதங்களுக்கெல்லா இவ நாசுவத்தி! அந்த வேசச் சிறுக்கி ஏலிக்களுதக்கி இவ பேறு பாக்கப் போயிருக்யா? பாவத்தில ஜனிச்சது, அவெவ உத்தரிக்கிற எடத்துக்குப் போவு. இவக்கு என்ன? ஸ்டெல்லா, அவ ஒரு வேச. புருசன வச்சிட்டே ஊருப்பரவன் காசெல்லாம் தனக்குண்டு படுத்திட்டவ...” சில விநாடிகள் மரியானுக்கு உலகத்து அசைவுகள் அனைத்தும் நின்றுவிட்டாற் போலிருக்கிறது. கடலின் அலைகளும் இரையவில்லை. அந்தத் தளைமீன்களின் சிறகுகள் போல் இரண்டு தனக்கும் முளைத்து வானில் பறந்து செல்வது போன்றதொரு கற்பனை உணர்வாக மாறுகிறது. அவன் பறந்து கொண்டிருக்கிறான். ஏலி... ஏலி பெற்றிருக்கிறாள். ஆத்தா மருத்துவம் பாக்கப் போனாள்! ஸ்டெல்லா மாமி, பிச்சமுத்துப் பாட்டாவின் சம்சாரம் வந்து அழைத்துப் போனாள்! ஆத்தா... என்னக்க ஆத்தா...! ஆத்தா தலை சீவி முடிந்து சிங்காரித்துக் கொள்ள மாட்டாள். ஸ்டெல்லா மாமியைப் போலவோ நசரேன் ஆத்தாளைப் போலவோ பாடி தெரிய பிளவுஸ் போட்டுக் கொண்டு மடிப்புக் கொசுவம் வைத்துச் சீலை உடுத்த மாட்டாள். கோயிலுக்கும் கூட நினைத்த போதுதான் போவாள். அவள் ஜபம் கூடச் சொல்ல மாட்டாள். ஆனால், என்னக்க அம்மா... எம்புட்டு அழவு நீ! கழுத்தில் கையில் ஒண்ணுமில்ல. அழுக்கான வெள்ள பிளவுஸ்... வட்டியும் இடுப்புமாக மீனெடுத்து வரும் கோலத்திலோ, கருவாட்டைச் சுமந்து நடக்கும் கோலத்திலோ, அப்பனுடன் சலம்பும் கோலத்திலோ ஆத்தா, ஆத்தாளாகவே முழுசும் இருக்கிறாள். இவளைப் போல் ஒரு ஆத்தா எங்கும் கிடையாது; யாருக்கும் கிடையாது... “என்னியலே தெகச்சிப் போயி நிக்கே? போயிக் குளிச்சிட்டுச் சோறுண்ணுவே!” என்று முத்துதிர்த்து விட்டுத் தலைப்பை விரித்துப் படுக்கிறாள். என்ன பிள்ளை என்று கேட்கும் ஆவல் துள்ளுகிறது. குளிக்கப் போகிறான். பணத்தை செயமணி வாங்கி அவளுடைய பிளாஸ்டிக் பெட்டியில் வைக்கிறாள். ஏலி அவனுடைய மணவாட்டியாக வந்துவிட்டாற் போலும், அவள் இந்த நடுவீட்டில் பேறு பெற்றிருப்பதைப் போலும் நினைத்துப் பார்க்கிறான். உடல் புல்லரிக்கிறது. அவனுக்கு அன்று சோறு இறங்கவில்லை. பக்கத்தில் முதுகை முட்டிக் கொண்டு உராய்ந்த வண்ணம் உட்காரும் நாய்க்குக் கவளம் கவளமாகப் போடுகிறான் கீழே. “தா, போ வெளியே, குசுனிக்குள்ளாற வந்து சோறுண்ணும்போது படுக்கு...” என்று மேரி விரட்டுகிறாள். மரியான் சாப்பிட்டு விட்டுச் சட்டையை எடுத்துப் போட்டுக் கொள்கிறான். கண்ணாடியைப் பாராமலே ஈர முடியைச் சீப்பெடுத்து வாரிக்கொண்டு வெளியே வருகிறான். மழை நன்றாக நின்று போயிருக்கிறது. வானில் எங்கோ ஒரு ஒற்றைத் தாரகை மினுக் மினுக்கென்று தெரிகிறது. மழைக்கு முடங்கியிருந்த சைக்கிள் வியாபாரிகள் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு செல்கின்றனர். கோயில்முன் தெரியும் குழல் விளக்கில் பூச்சிகள் பறக்கின்றன. செபஸ்தி நாடார் கடைப்பக்கம் சிறிது நேரம் பீடி குடித்துக் கொண்டு நிற்கிறான். பரபரப்பை அவனால் அடக்கிக் கொள்ள இயலவில்லை. அவள் குடிலுக்குச் சோரனாக அவன் செல்கையில் தன்னை எவரேனும் பார்த்து விடுவார்களோ என்ற உணர்வு உறுத்தியதில்லை. ஆனால் இப்போது... அவள்... அவள் பெற்றிருக்கிறாள். அவளருகே அமர்ந்து நெஞ்சிலே பூவாகத் தாங்க வேண்டும் போலொரு வேட்கை. அந்தப் பூஞ்சிசு, எப்படி இருக்கும்? இந்த வேட்கை எப்படி, அவனைப் பரபரக்க வைக்கிறதென்பதே நூதனமாக இருக்கிறது. ஏலியின் வீட்டுக்கு முதன் முதலில் அவன் செல்லத் தொடங்கிய நாள்... சென்ற கோயில் பண்டியலுக்கு முன் ஒரு நாள்... அவன் கூடங்குளம் சினிமாவுக்குப் போய்விட்டு, இரவு பத்துமணிக்குத் திரும்பிய பஸ் ஒன்றில் ஏறிச் சாலையில் இறங்கிய போது, அவளும் இறங்கினாள். அந்தச் சாலையிலிருந்து இரண்டு மைல் போல் அவர்கள் கடற்கரைக்கு நடக்க வேண்டும். அவள் வட்டியில் ஏதேதோ சாமான்களும், புதியதாக வாங்கியிருந்த அலுமினியம் தூக்குமாக நடந்தாள். இன்னும் இரண்டொருவரும் பஸ்ஸிலிருந்து இறங்காமலில்லை. ஆனால் கன்னிபுரம் கரைக்கு வருபவர்களாக அவர்கள் மட்டுமே இருந்தார்கள். ஏலியைப் பற்றி அவனுக்குத் தெரியும். சில ஆண்டுகளுக்கு முன் எங்கோ வடக்குக் கரையிலிருந்து இவளைக் கல்யாணம் செய்து கொண்டு புதிதாக அங்கு வந்து ஊன்றிய இன்னாசியின் மனைவி ஏலி. அவன் தாய் தகப்பனை மீறி கான்வென்டில் அநாதையாக வேலை செய்து கொண்டிருந்த இவளைத் திருட்டுக் கல்யாணம் செய்து கொண்டு இங்கே வந்தான். கூலி மடியாகத் தொழில் செய்தான். அரசியல் கூட்டங்களென்றால் பைத்தியமாகப் போவான். அவன் தொழில் செய்து குடும்பம் காப்பாற்றுவான் என்று தோன்றவில்லை. அப்போதே ஏலி கரையில் வடையோ பணியாரமோ போட்டுக் கொண்டு வந்து விற்றுக் காசாக்குவாள். சில பெண்களைப் போல் ஆணைத் தூண்டிவிடும் மேனி வளப்பம் கிடையாது. மெல்லிய கொடி போல், ஆழ்ந்த கண்களும், தேய்ந்த கன்னங்களுமாக, பற்றாக் குறையிலும் சிறுமையிலும் பதம் பெற்ற பெண்ணாகவே இருந்தாள். இன்னாசி அவளைக் கைப்பிடித்து ஓராண்டுக் காலம் முடியுமுன், உவரியூரில் சினிமா பார்க்கப் போனவனை அரசியல் கட்சிச் சண்டையில் ஏதோ ஆங்காரமாகப் பேச, நாடார்விளையில் வெட்டிப் போட்டு விட்டார்கள். ஏலிப் பெண் அந்தக் கடற்கரையோரக் குடிசையில் தன்னந்தனியே விடப்பட்டாள். தற்காப்புக்கு எந்த வழியுமில்லாத ஏலி கடற்கரையில் வேட்கையைத் தீர்த்துக்கொள்ள வழி இல்லாத பரவனுக்கெல்லாம் இரையானாள். ஆனால்... அவள் கடற்கரையில் மீன் வாங்க வந்தாலும் சிறு தீனி செய்து விற்க வந்தாலும் யாருடனும் எந்த உறவும் கொண்டவளென்ற பாவத்தையே காண இயலாது. கடற்கரைக்கு உள்ளம் துள்ளச் செய்யும் கோலத்தில் வந்து சிரிக்கச் சிரிக்கப் பேசும் குமரிகள் இல்லாமலில்லை. ஒருசமயம் குருசு மிக்கேல் இவள் கரையில் மீனெடுக்க வந்தபோது, அவள் வட்டியில் குத்துமீன்களை எறிந்தான். “பொளுது சாய வாரம் போ. வெல வாங்கிக்க!” என்று அடர்ந்த மீசையைப் பல்லில் கடித்துக் கொண்டு இளித்தான். அவள் மீனை அங்கேயே மணலில் தட்டிவிட்டு ஊசி பட்டாற்போன்று முகம் சுளித்துப் போனாள். அவன் அவளை அவ்வாறு கடற்கரையில் பலரறியப் பொதுமைப்படுத்தும் வகையில் பேசியதை அவள் ஏற்காமல் துவண்டு போனாள். “பெரீ... பத்தினி கோவிக்க...” என்று தொடங்கிக் காது கூசும் வசைகளால் தூற்றினான். இதெல்லாம் அப்போது அவனுக்கு நினைவு வந்தது. நல்ல இருட்டு. அந்த இருளில் அவன் ஒரு ஆண் என்று மட்டும் தெரிந்திருக்கும் அவளுக்கு. அவள் குடிலுக்கு மைய வாடியைச் சுற்றியுள்ள பனந்தோப்பைக் கடந்து செல்ல வேண்டும். காற்று கருப்பு பயங்களுண்டு. அவளாகவே அவன் காது கேட்கச் சொல்லிக் கொண்டாள். “பசு* ஆறு மணிக்கு வாராம, பத்து மணிக்கு வந்திச்சி... இன்னு அம்மாட்டுப் போவணும்...!” (* பசு - பஸ்) “எங்கிய போவணும்? தெக்குத் தெருவா...?” “இல்லிய, அதா பாறமுக்குக்குப் பின்னக்க பிச்சிய முத்துப் பாட்டா, ஸ்டெல்லா மாமி வீடு தள்ளி... அந்தத்துல...” அவன் புரிந்து கொண்டான். எதுவும் பேசவில்லை. “என்னக்க பனவெடலி தாண்டிப் போயிற்றப் பயமில்ல. பொறவு வட்டக்காரர்வூட்ட வெளக்கெரியும், நீங்க... மேட்டுத் தெருவாளா?” அவன் ஏதும் பதிலின்றி நடந்தான். மைய வாடியைச் சுற்றிக் கொண்டு பனைக்கூட்டம் கடந்து பின்னும் தொடர்ந்தான். “இனிம நீங்க ஒங்கக்க பாதைக்குப் போவலாம்’ என்று அவள் முணமுணத்தும் அவன் போகவில்லை. சினிமாவில் கண்ட காட்சிகள், வாலிப உள்ளங்களைக் கிளர்த்தும் காட்சிகள் அவனுள் ஒரு வெறியைக் கிளப்ப உயிர்த்தன. அவள் பூட்டுத் திறக்க நெருப்புக்குச்சியைக் கிழித்துக் காட்டினான். கதவைத் திறந்ததும் உள்ளே போனான். அவள் கோழிமுட்டைச் சிம்ணியை ஏற்றி வைத்துக் கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள். முதன் முதலில் யாருமாரும் இல்லாத வாழ்க்கையில் தன்னந்தனியாக நின்றபோது, கடலே அவளுக்குத் துணையாய் இரைந்து கொண்டிருப்பதாக நினைத்துக் கொள்வாள் செம்பழுப்பான மடைக்கு அப்பால் கருநீல ஆழி நீண்ட பாயல் விரித்தாற்போன்று அலைகள் நுரைக்கச் சிரிக்கும்... முதன் முதலில் அவள் வீட்டில் நுழைந்து அவள் நிறையழித்தவன் சாமுவல். உயரமும் உறுதியுமாக ஒரு தடியன். அவளால் எதிர்ப்புக் காட்டவே இயலவில்லை. அவன் பெண்சாதி அப்போது பெற்றிருந்தாள். சாராய நெடியும் உடல் வெறியுமாக... புயலில் எழும் அலைகள் தோணியை மோதி மறிப்பது போல் அவன் அவளை வீழ்த்தினான். கட்டுக்காவலில்லாத வீடுகளில், அது எவ்வளவு பெரிய வீடானாலும் வேலிகள் போட்டாலும் ஆடுகள், நாய்கள் புகுந்து திண்ணையையேனும் இருப்பிடங்களாக்கிக் கொள்கின்றன; பெருச்சாளிகள் குழிபறிக்கின்றன. உடம்பு வேர்வையின் அழுக்குகளும் கவர்ச்சி நெடியையுமே இனி மணமாக்கப் போதையூட்டும் மானுடத்தின் பலவீன நெகிழ்ச்சிகளை அந்நியமாக்க இயலாத நிலைக்கு அவள் பலவந்தமாகப் பழக்கப்படுத்தப் பட்டாள். ஆனால் கருக்கலிலே அவள் குடிலுக்கு வந்தவனை அவள் வீதியிலோ, கடை வாயிலிலோ, மீன் தட்டும் நேரத்திலோ பார்த்தாலும் இனம் தெரிந்தாற் போன்று காண்பித்துக் கொள்ளமாட்டாள். மரியானின் தொடர்பு இவ்வாறுதான் தொடங்கிற்று. கடல் தொழில் செய்து திரும்பும் ஒரு புருஷனை வீட்டில் உள்ள பரவத்தி மகிழ்ச்சியும் நிறைவும் பிரியமுமாக வரவேற்பது அரிது. ஆற்றாமையும் ஏசலும் பூசலுமாகத்தான் உரிமையைக் காட்டிக் கொள்வார்கள். ஆனால், இவள் இவனுக்கே படைக்கப்பட்டவள் போல் நினைத்துக் கொள்கிறான். அந்த முதல் நாளில் அவளுடைய குரலைக்கூட இவன் கேட்கவில்லை. சுவரில் ஒரு பழைய காலண்டர் படம் இருந்தது. அந்தோணியார் யேசு பாலனை முகத்துக்கு நேராக ஏந்தினாற் போன்று ஒரு படம். சிம்னி விளக்கின் மங்கிய ஒளியில் அவளுடைய முகம், மங்கிய பூப்போட்ட வாயில் சேலை... கனவுக் காட்சிபோல் தான் நினைவில் நிற்கிறது. அன்று ஒரு ரூபாய்தான் அவனிடம் இருந்தது. விளக்கடியில் அந்தத் தாளை வைத்துவிட்டு வெட்கத்துடனும் நாணம் மிகுந்ததோர் புதிய அமைதியுடனும் அவன் வீடு திரும்பினான். இவன் ஒருவனை மட்டுமே அவள் ‘வருகிறானோ’ என்று எதிர்பார்க்கலானாள். இவனில் மட்டுமே கள்ளின் நெடியோ சாராய வெறியோ இல்லை. அவள் இவனுக்கே சொந்தமென்றான பிறகு, மற்றவருக்குக் கதவைத் திறக்காமலிருக்கத் துணிவு வந்தது. எது அருமையாகச் செய்தாலும் இவனுக்கே அதைச் செய்வதாகத் தோன்றிற்று. இவன் கதவைத் தட்டுவது இனிமையாக இருக்கும். அவளுக்கு இப்போது ஸ்டெல்லா மாமிதான் மிகுந்த நேயமுடைய துணை. புதிய மணவாட்டியைக் கேலி செய்வதுபோல் இவளைக் கிண்டு, நாணமுறச் செய்வாள். வேறு எவரேனும் அந்தப் பக்கம் குடித்துவிட்டு வந்தால், அவள் வாசலில் நின்று, நாவில் நரம்பின்றி வசைபாடுவாள். ஏலியா தாய்மைப் பேறு பெறப் போகிறாள் என்று தெரிந்த நாளில் அவனை எப்படி வரவேற்றாள்!... “வாரும் மாப்ள! உன்னக்க சிங்கிறால்... சினைப்பட்டிருக்கு...” என்று பூ உதிர்த்தாள். உண்மையில் வலையிற்பட்டு அவன் கைக்கு வந்த சிங்கிறாலின் ஏலாமை மிகுந்த துடிப்பை அவளுடைய கண்களும் உதடுகளும் வெளியிட்டன. அவனைப் பார்த்துப் பேதையாகச் சிரித்தாள்... ‘பச்சையும் பகளமும் வச்சிழச்சாப்பல என்ன அழவு இந்தக் களுதை’ என்று சிங்கிறாலைப் பார்க்கையிலே நெஞ்சு வியக்கும். வலையில் பட்டுக் கரையில் வந்து உயிரின் கடைசித் துடிப்பு அடங்குவரை அது போராடும். நசரேன் அதன் துடிப்பைப் பார்க்கவே கண்களை விரலால் அமுக்குவான். வாலை வளைத்தடிக்கத் துடிக்கும். அவனுக்குப் பார்க்க ஏலாது. “விடுமாப்ள! களுத எம்மாட்டுப் போராடுது!” என்பான். அவ்வாறு மௌனத் துடிப்பில் தவித்துக் கொண்டிருந்த ஏலிக்கு, ஆத்தா போய் பிரசவம் பார்த்திருக்கிறாள்...! மரியானுக்கு என்ன அதிர்ஷ்டம்! கோமரையன் கிடைத்து வாயிலில் கட்டி வைத்திருக்கிறான்! நாற்பத்தைந்து ரூபாய்க்கு மீன்பாடு! தளைமீன்கள்... பெரிய நாரை அலகும் மிகப் பெரிய சிறகுகளுமாக மீன்கள். இருளில் அவன் அந்தக் குடிலின் கதவை மெள்ளத் தட்டுகிறான். விளக்கை எடுத்து வந்து ஸ்டெல்லா மாமி கதவைத் திறக்கிறாள். கூரை நனைந்து ஊறி இற்றுச் சொட்டுகிறது. துணித்திரி எரியும் ஒரு சிறு கிரசின் விளக்கடியில் ஏலியாவும் குழந்தையும்... கருநீலமும் செம்மையுமாகக் கலந்த நிறம்... எவ்வளவு முடி...! அது உறங்குகிறது. இந்த அதிசயத்தை அவன் கண்கள் பாலாய்ப் பொழியப் பார்க்கிறான். “அது ஒன்னுதுலே...!” என்று யாரோ மந்திரிக்கின்றனர் செவிகளில். அதன் அருகில் அமர்ந்து குனிந்து அந்தப் பச்சைச் சிசுவின் நெற்றியில் மிக மென்மையாக மோந்து பார்க்கிறான். தன் மடியிலிருந்த பத்து ரூபாய் நோட்டை எடுத்து அதன் கைமேல் வைக்கிறான். ஏலியாவின் குரல் நைந்து போயிருந்தாலும் பரவசமாக ஒலிக்கிறது. “என்னப்பு இதெல்லாமும்?” “இன்னிக்கு என் பங்கு அம்பதுக்கு - தளமீனும் சீலாவும் பட்டிச்சி. என்னக்க புள்ள... பையனுக்கு நொம்ப அதிர்ஷ்டமுண்டு...” அந்தப் பூங்கைகளை, கால்களை, பட்டைப் போல் தொட்டு மகிழ்ந்தான். “நெம்பப் பாடுபடுத்திட்டா. நாசுவத்தி தாம் பொறவு ஒங்கக்க ஆத்தாளை வாரக்காட்டச் சொன்னா. ஸ்டெல்லா மாமி போயி வாரக்காட்டி வந்தா... ஒங்கக்க ஆத்தா... கோயில்ல சுருபமாயிருக்யற மாதா எறங்கி வந்தாப்பல வந்தா...!” கண்கள் பளபளத்துக் கண்ணீர் இறங்குகிறது. “ஏனளுகா! நாம கெட்டிப்போம்... அளுவாத ஏலி...” அந்தக் கண்ணீரை அவன் துணியெடுத்து ஒத்துகிறான். அலைவாய்க் கரையில் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
|