2

     வழக்கறிஞர் என்ற பலகையை மாட்டிக் கொண்டு வருவாய் இல்லாமல் வறண்டு போயிருக்கும் துரதிர்ஷ்டசாலி ரங்கநாதம். அவருடைய முதல் மனைவி சரஸ்வதி சீரும் சிறப்பும் உள்ள இடத்திலிருந்து வந்தவள். தந்தையின் திரண்ட செல்வத்துக்கு உரிய ஒரே மகள். ‘பையன் பார்க்க லட்சணமாக இருக்கிறான், சட்டப்படிப்புப் படிக்கிறான், நம் இஷ்டத்துக்கு இணைந்து வருவான்’ என்ற எண்ணத்துடன் தான் சரஸ்வதியின் பெற்றோர் அவரை மருமகனாகத் தேர்ந்தெடுத்திருந்தார்கள். ஆனால் அவர்கள் நினைத்தபடி ரங்கநாதம் அவர்களுடைய இஷ்டத்துக்கு இணைந்து கொடுக்கவில்லை. தன்மானமிழந்து பெண் கொண்ட வீட்டில் ஐக்கியமாகிவிட அவர் ஒப்பவில்லை. தொழில் நன்கு நடக்காவிட்டாலும் அவருக்கு உண்ண உணவு கொடுக்கும் பிதிரார்ஜித நிலம் இருந்தது. காவிரி நதி ஓடும் அவருடைய பிறந்த ஊரில் அவருக்கு இருக்க ஒரு வீடுமிருந்தது.

     சரஸ்வதி பெருமையிலும் ஆடம்பரத்திலும் வாழ்ந்தவளாயிற்றே? அவளுக்கு அந்த எளிய வாழ்க்கை எப்படிப் பிடிக்கும்? அவர்களுடைய இல்லறம் ஒழுங்காக, முழுசாக மூன்று மாதங்கள் கூடச் சேர்ந்தாற் போல் நீடித்ததில்லை. பத்து நாட்கள் சண்டை சச்சரவுடன் அவரிடம் வந்து அவள் குடும்பம் நடத்தினால், மீதி வருஷத்தின் முந்நூற்றைம்பதைந்து நாட்களும் பிறந்த வீட்டில்தான் கழிந்தது. இந்தத் தாம்பத்தியத்தில் உதித்த குழந்தை மீனா தந்தையின் வீட்டுக்கே வந்ததில்லை. செல்லத்துக்கும் சீருக்கும் வரும்படியில்லாத வக்கீலிடம் என்ன உண்டு? சரஸ்வதி ‘டைபாயிடு’ சுரம் வந்து சாகும் போது மீனா பதின்மூன்று வயசுப் பாலிகை. பாட்டி, தாத்தா, அம்மா இவர்களுடைய மனப்பாங்குக் கேற்ப வளர்ந்தவள்தானே அவள்? தந்தையிடம் வந்திருக்க அவளும் அவ்வளவாக ஆசைப்படவில்லை. அவள் ஆசைப்பட்டிருந்தாலும் அருமைப் பாட்டியும் தாத்தாவும் விட்டிருக்கப் போவதில்லை. கணவனுடன் இருந்து வாழ வேண்டிய மகளையே அவர்கள் அனுப்பியிருக்கவில்லையே?

     சரஸ்வதி இறந்த பிறகு மூன்று ஆண்டுகள் ரங்கநாதத்தின் வாழ்க்கை அல்லலுமில்லாமல் ஆனந்தமுமில்லாமல் ஜீவனற்றுச் சென்றது. ஏழைப் பெண்ணாகப் பார்த்து மறுவிவாகம் செய்து கொண்டு இன்பமாகக் காலம் தள்ளலாமே என்று உள்ளத்தில் தலைதூக்கும் ஆசைக்கும், ஊராரும், மேலாக சரஸ்வதியின் பெற்றோரும் என்ன நினைப்பார்களோ என்ற தயக்கத்துக்கும் இடையே போராடினாலும் அவர் வாயை விட்டு எவரிடமும் எதுவும் பிரஸ்தாபிக்கவில்லை. ஆனால் ஏற்கெனவே துளும்பிக் கொண்டிருக்கும் நீருக்கு ஒரு போக்குக் கிடைத்தால் வெளிப்பட்டு விடுகிறதில்லையா?

     மீனாவுக்குக் கல்யாணம் என்று ஒருநாள் அவருக்கு அழைப்பிதழ் வந்தது. மருமகனை பாட்டன் வீட்டார் எங்கிருந்தோ தேடிப்பிடித்து வந்திருக்கவில்லை. ரங்கநாதத்தின் சொந்தத் தமக்கையான கமலம்மாள் அவரை விடப் பத்து ஆண்டுகள் மூத்தவள். உடன்பிறந்தவளாக இருந்தும் அவள் ரங்கநாதத்திடம் வந்து போய் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கவில்லை. மணமாகிப் பாலக்காட்டுப் பக்கம் சென்ற பின் கமலம்மாள் தாய் தந்தை இருக்கும் போது ஓரிரு முறைகள் பிறந்த வீடு வந்ததுதான். அவள் கால் வைத்திருந்த இடம் முந்திரியும் மிளகும், மாங்காயும் தேங்காயும், நெல்லும் கதலியும் ஆண்டுதோறும் செல்வத்தைக் குவிக்கும் இடம். அவளைத் தவிர வீட்டை நிர்வகிக்கும் பெண் மக்கள் அங்கு யாரும் இல்லை. எனவே அவள் பிறந்த வீட்டுப் பக்கம் வருவதற்கு சந்தர்ப்பங்கள் இடம் கொடுக்கவேயில்லை. அவளுடைய ஒரே மகனான கங்காதரத்துக்கும் தன்னுடைய மகள் மீனாவுக்கும் கல்யாணம் நடைபெற இருப்பதாக ஒரு அழைப்பிதழே தன்னைத் தேடி வந்திருந்த போதிலும் ரங்கநாதம் மகிழ்ச்சியே கொண்டார். எவருடைய அலட்சியத்தையும் பொருட்படுத்தாமலேயே அவர் திருமண வைபவத்தில் கலந்து கொண்டார். அத்துடன் அவர் திரும்பி இருந்தால் எப்படியோ அவருடைய வாழ்க்கை கழிந்திருக்கும். ஆனால், விதி என்று ஒன்று குறும்புச் சிரிப்புடன் காத்திருக்கிறதே? ஆட்டக் காய்களைக் கையாளும் ஆட்டக்காரன் போல் அல்லவோ அது மனிதனின் வாழ்க்கையில் திருப்பங்களை ஏற்படுத்தி விடுகிறது? அவர் எதிர்பாரா விதமாக, அத்தனை நாட்களாக இல்லாதபடி, கமலம்மாள் அவருடைய வாழ்க்கையில் அக்கறை காட்டினாள். தம்பியின் தனி வாழ்வைக் காணச் சகியாத தமக்கையாக அவள் அவரிடம் மறு விவாகப் பேச்சைத் துவக்கினாள்.

     “எத்தனை காலம் இப்படிச் சந்நியாசி வாழ்க்கை நடத்தப் போகிறாய்? தலையைக் காலை வலித்தால் உன்னை ஏனென்று கேட்கக் கூடியவர் யார் இருக்கிறார்கள்? உன் உடம்பு என்ன, கல்லால் கட்டிச் சாந்தால் பூசி இருக்கிறதா? வயசுதான் அப்படி என்ன ஆகியிருக்கிறது? இன்னும் நாற்பதாகவில்லையே? ஒரு பெண்ணைப் பார்த்துக் கல்யாணம் செய்து கொள்!” என்று அவள் உபதேசித்த போது அவர் மௌனமாகவே உட்கார்ந்திருந்தார்.

     மௌனத்துக்கு என்ன அர்த்தம் என்பது உலகம் அறிந்த கமலம்மாளுக்கா தெரியாது?

     கங்காதரம் - மீனா திருமணமும் வரவேற்பும் கழிந்த மறுமாதமே பேரூர் ஈசுவரன் அறிய ரங்கநாதம் செல்லத்தின் கரம் பற்றினார். அடுத்த வீட்டிலே மதமதவென்று வளர்ந்து நிற்கும் செல்லத்தை மனசில் வைத்துக் கொண்டு தானே கமலம்மாள் தம்பியிடம் மறுமணப் பேச்சையே எடுத்தாள்? நாதியற்ற சமையல்காரியின் மகளுக்கு ரங்கநாதத்தை விட நல்ல கணவன் எங்கிருந்து வரப்போகிறான்? அவருக்கென்ன, அழகு இல்லையா, படிப்பில்லையா, சொத்தில்லையா?

     ஏழைப் பெண் என்ற ஒரு யோக்கியதாம்சமே ரங்கநாதத்துக்குத் திருப்தியைக் கொடுக்கக் கூடியதாக இருந்துவிட்டது. அவரைப் பொறுத்தமட்டில் இல்லறம் அமைதியாகவே ஆரம்பமாகி நடைபெற்றது. அசட்டுப் பிசட்டென்று கனவுகள் கண்டு, அப்படியே வாழ்க்கையையும் நடத்த ஆசை கொண்டலையும் நிலையில்லாத இளம் பருவத்தை அவர் தாண்டி இருந்தார். மனம் பருவகாலச் சுழற்சிகளிலிருந்து விடுபட்டு அமைதியாக நிற்கும் காலம் அது. எனவே அவள் என்ன நினைக்கிறாள், தன்னைப் பற்றியே இன்பக் கனவுகள் கண்டவண்ணம் இருக்கிறாளா என்றெல்லாம் இரண்டாம் மனைவியைப் பற்றிய அதீதமான சிந்தனைகளில் அவர் தன் மனசை உழப்பிக் கொள்ளவில்லை. அவருடைய தேவைகளை அவள் கவனித்து நிறைவேற்றினாள். அவருக்கு அதுவே போதுமானதாக இருந்தது. அவள் மூலமாக அவர் நான்கு குழந்தைகளுக்கும் தகப்பனாக ஆனார். மூத்தவள் விமலா; இரண்டாவதாக பாலு; அடுத்து முறையே ஜானகியும், சுந்துவும். பெண்களும் பையன்களும் வளர்ந்தார்கள். வளர்ச்சியின் பாரம் தாங்காமல் வருவாயில்லாத அவருடைய குடும்பம் தானாகவே வளைய ஆரம்பித்து விட்டது. விமலாவுக்கு உரிய காலத்தில் ஒரு மருமகனைத் தேடி மணம் செய்விப்பதற்கு அவருடைய குடும்பத்தை உரமூட்டி வளர்த்த பூமியும் கைமாற வேண்டி இருந்தது.

     கஷ்ட நஷ்டங்கள் வந்தால் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து வருவது வழக்கம். ரங்கநாதத்தின் வாழ்க்கை ஓட்டத்தில் ஒரு திடீர்த் திருப்பத்தை ஏற்படுத்தி, பாதையைக் கஷ்டங்கள் நிறைந்ததாகப் பிரித்துவிட்டுக் கை கொட்டிச் சிரித்தது விதி. இல்லாவிட்டால் கால் இடறிக் கீழே விழுவதில்லையா எவரும்? அத்துடன் காலே ஊனமாகி விடுமா?

     ரயில் வண்டியில் ஏறும் போது ஒரு நாள் அவர் கால் இடறிக் கீழே விழுந்தார். சுளுக்கிக் கொண்டது போல் கால் வலித்தது. வீட்டுக்கு வந்ததும் அதற்கான பரிகாரங்களைச் செய்தார். ஆனால் முழங்காலில் வீக்கம் கண்டது. வலியால் புழுவாகத் துடித்தார். அந்த ஊரில் புதிதாக வைத்தியம் செய்ய வந்திருந்த இளம் மருத்துவரும் தன்னாலான சிகிச்சைகளைச் செய்து பார்த்தார். வீக்கத்தில் சீழ் கட்டி விட்டது. திருச்சி நகர வைத்திய சாலையில் ஆறு மாதப் படுக்கையுடன் காலின் சுவாதீனத்தையும் அமைதியையும் இன்பத்தையும் இழந்துவிடும் வரையில் அவரைப் பிடித்த சனியன் விடவில்லை. எலும்பும் தோலுமாகத் தாடி மீசையுடன் அவர் கோலின் உதவி கொண்டு தம் வீட்டுப் படி ஏறுகையில் செல்லமும் அவரைப் பழைய செல்லமாக வரவேற்கவில்லை. அவளுடைய பொலிவு, புன்னகை, பொன்னகை எல்லாவற்றுடன் அவளுடைய பழைய அமைதியான குணமும் போயிருந்தது.

     அவளுடைய கஷ்டங்களை அவர் உணர்ந்து இருந்தார். அதனாலேயே அவர் அவள் மனம் விட்டுச் சுடு சொற்களை உதிர்க்கையில் வாய் திறவாமல் சகித்து வந்தார். ஏற்கெனவே குடும்பச் சுமையைத் தாங்க இந்த வெறும் தொழிலை நம்பிப் பயனில்லை என்று அவர் உருப்படியாக இரண்டு காசு தேடும் வகையில் நான்கு பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லித் தந்து கொண்டிருந்தார். இப்போது ஒற்றைக் காலனாக ஆகி விட்ட பிறகு அவர் நிரந்தர உபாத்தியாயர் உத்தியோகத்துக்குத் தாவி விட்டார்.

     முக்கலும் முனகலுமாகக் குடும்பம் இந்த நிலையில் அரை வயிற்றுக் கஞ்சிக்குத் தாளம் போடும் போது, பாலுவை உயர்தரக் கல்வி பயில விடுவது எப்படி? அவன் பொறி இயல் கல்லூரியிலோ, அல்லது வேறு துறையிலோ இன்னும் சில வருஷங்கள் கல்வி கற்கப் பெரிதும் ஆசைப்பட்டான். சாதகமாக ‘இன்டரில்’ வேறு முதல் வகுப்பிலும் தேர்ச்சியடைந்து விட்டான். அவனைக் கலாசாலையில் சேர்த்துப் படிக்க வைக்கவே முதலில் ரங்கநாதத்துக்கு இஷ்டம் இருக்கவில்லை. ஆனால் செல்லத்தின் அதீதமான அன்பில் பொறுப்பறியாமல் வளர்ந்திருந்த அவன் முணுமுணுத்தான். பக்கபலமாகச் சிபாரிசுகள், செல்லத்தின் திடமான பேச்சு எல்லாமாக அவரை சம்மதிக்க வைத்திருந்தன. திருச்சிக் கல்லூரியில் இரண்டாண்டுகள் அவன் படித்த நாட்களிலே அவர்கள் திணறிய திணறல் கொஞ்ச நஞ்சமல்ல. குடும்பத்தில் அதன் மூலமாக ஏற்பட்டிருக்கும் கூனலே இன்னும் கூனவே இடமில்லாதபடி வளைந்து இருக்கிறது. மேலும், குடும்பக் கஷ்டத்தில் இவ்வளவேனும் நம்முடைய கல்விக்காகப் பெற்றோர் பாடு படுகின்றனரே என்று மனம் நிறைந்து ஒதுங்கிப் போகும் தன்மை இல்லை பாலுவுக்கு. பணத்தைத் தண்ணீர்பட்ட பாடாக வாரி இறைத்துக் கொண்டு உல்லாசமாகத் துள்ளித் திரியும் கல்லூரி மாணவனாக இருக்க முடியவில்லையே என்ற தாபம் அவனைச் சிறு குறையையும் மலையளவுள்ளதாகப் பாராட்டிக் கடுகடுக்கச் செய்தது. பரீட்சை முடிவு வந்ததிலிருந்து அவன் நிலையறியாமல் மேலே என்ன செய்யட்டும், நான் படிக்கத்தான் படிப்பேன் என்றெல்லாம் இரகசியமாகத் தாயையும் தந்தையையும் நச்சரிக்கத் துவங்கி விட்டான்.

     எண்பதாம் ஆண்டுக் கல்யாண வைபவம் ஒருவாறு முடிந்து விட்டது. உறவினர்கள், நண்பர்கள், கங்காதரத்தின் சங்கீதத்தை ரசிக்க வந்தவர்கள் எல்லோரும் விடை பெற்றுக் கொண்டு கிளம்பி விட்டார்கள். செல்லம், ரங்கநாதம் முதலியவர்கள்தான் பாக்கி. கங்காதரமாக வந்து, ‘பாலு என்ன செய்யப் போகிறான்’ என்று கேட்கவில்லை. சகஜமாக மீனா வந்து சின்னம்மாவிடம் அருமைத் தம்பியைப் பற்றி விசாரிக்கப் போகிறாளா? ஆனால் செல்லம் இந்த வைபவத்துக்கு ரங்கநாதத்துடன் கிளம்பி வந்ததே பாலுவின் மேல்படிப்புக்கு உதவி பெறும் நோக்கத்தைக் கொண்டு தான். எனவே அவர்களாக வந்து விசாரிக்க வேண்டும் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.

     “நீங்கள் தான் அவரை அழைத்துக் கேளுங்களேன்? நாம் என்ன, முன்பு கேட்டோமா, பின்பு கேட்கப் போகிறோமா? உடனுடன் ரவி இதே பரீட்சையில் மூன்று வருஷங்களாகத் தோற்கிறான். படிக்கும் குழந்தை, ஆசைப்படுகிறான். கோயம்புத்தூரில் குடித்தனம் வைக்கப் போகிறார்களாம். கொஞ்சம் சிரமம் பார்த்தால் ஆகுமா?” என்று ரங்கநாதத்தை ஆனபடியும் அசைத்தாள் அவள். அவர் பிறந்தது முதல் அதுவரை யாரிடமும் உதவி கேட்டதில்லை. அதுவும் மருமகனிடம் வாய் விட்டுக் கேட்க லஜ்ஜையாக இருந்தது. செல்லத்தின் இடைவிடாத வற்புறுத்தலின் பேரில் கடைசிப் பையன் சுந்துவை அழைத்து, “அத்தானை அப்பா கூப்பிடுகிறார் என்று அழைத்து வாடா!” என்று அனுப்பினார்.



அன்புக் கடல் : 1 2