உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
13 சிவராத்திரியைத் தொடர்ந்து, பெரியபட்டி அம்மன் கோயில் விழாவையும் நடத்துவார்கள். இதன் பொறுப்பு பெரிய வீட்டைச் சேர்ந்தது. கோயிலைப் புதுப்பித்து, பந்தலும் தோரணங்களுமாக அலங்கரித்து, விளக்குகள் போட்டு எல்லா வேலைகளையும் சாமியப்பன் முன்னின்று நடத்துவார். சிறப்பாக மேளக்காரர்களும், வில்லடிக் கலைஞர்களும் வருவார்கள். அந்த ஊர்ப்பிள்ளைகளுக்கு அன்று தொழிலகத்தில் திருவிழாக் காசு இரண்டு ரூபாயுடன் விடுமுறையும் கூட. குடும்பம் முழுவதும் முதல் நாளே பெரியபட்டியில் வந்து இறங்கி, பொங்கல் வைக்கும் விழாவில் கலந்து கொள்வார்கள். விஜிக்கு இந்த நிகழ்ச்சிகள் எதிலும் ஆர்வமோ, பரபரப்பு உற்சாகமோ கூடவில்லை. அவளுக்குக் கைகளையும் கால்களையும் பிணித்துச் சிறையில் போட்டுவிட்டாற் போல் ஓர் உணர்வு தோன்றுகிறது. அநேகமாக விழா முடிந்ததும் அவள் கணவன் வெளியூர்ப் பயணம் புறப்பட்டு விடுவான். அவளுக்குச் சென்னைக்குச் செல்ல வேண்டுமென்று ஆவலாக இருக்கிறது. தனது பாதை நிச்சயமான இலக்கில் செல்வதான உறுதி நம்பிக்கை அவளுக்கு இன்னும் ஏற்படவில்லை. அன்று அதிகாலையிலேயே எழுந்து நீராடி உள்வீட்டுப் பூசையை முடித்துக் கொண்டு பெரியபட்டிக்குப் பொங்கல் வைக்கக் கிளம்ப வேண்டும் என்று மாமியார் எல்லோரையும் விரட்டிக் கொண்டிருக்கிறாள். பால், சந்தனம், பன்னீர் போன்ற அபிடேகப் பொருள்கள் எல்லாம் ஓர் புறம் எடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றனர் பணியாளர். “தா, விஜி, இந்தப் பருத்தியத் திரிச்சிப் போடு!” என்று கூறிய வண்ணம் வந்தவள், “என்ன இந்தச் சீலய எடுத்து உடுத்திட்டிருக்கிற? கலியாணமாய் முதமுதல்ல பொங்கல் வைக்கப் போறீங்க. சாயம் போயிப் பழசா இருக்கு. நம்ம வீராயி கூட நல்லா உடுத்திருக்கா. போயி தீபாவளிக்கு வாங்கினனே, அந்தச் சீலைய உடுத்திட்டுவா? உன் நாட்டாம எனக்கப்புறம் வச்சிக்க. நா இருக்கிற வரையிலும் யாரும் நாஞ்சொல்றதத்தான் கேக்கணும்!” விஜியினால் இதற்குக் கிளர்ந்த எதிர்ப்புணர்ச்சியை விழுங்கிக் கொள்ள இயலவில்லை. “எனக்கு இதுதா வசதியாக இருக்கு அத்தை. எனக்கு அப்படித் தகடிச்சேலை கட்டி வழக்கமில்லாததுனால எப்படியோ இருக்கு. நான் இப்படியே இருக்கிறேன் அத்தை...” “இத பாரு, நீ வீணா இப்ப இதுக்கெல்லாம் பேச்ச வளர்த்திட்டுப் போவாத. பெரியவங்க சொன்னா, சரின்னு கேக்கணும். சீலய உடுத்திட்டு உங்க வீட்டில போட்ட நெக்லசையும் கைவளையலையும் தோட்டையும் போட்டுட்டு லட்சணமாக வா. நெத்தியில் கொசு மாதிரி ஒரு சாந்து பொட்டு. இது இருக்குதா இல்லையான்னே தெரியல. பளிச்சினு குங்குமப் பொட்டா எடுப்பா வச்சிட்டுவா!” விஜி பிடிவாதமாக மாமியாரைப் பார்க்கிறாள். “நகைகள் போட்டுக் கொள்ள எனக்கு இஷ்டமில்லை. நான் அதைத் திருப்பிக் கொடுத்துவிட்டேன். இந்தச் சேலை பழசாக இருக்கிறதுன்னா நான் வேற உடுத்துகிறேன். ஆனா, நீங்க சொல்லும் சேலையை நான் உடுத்துவதற்கில்லை. மன்னிக்கணும்...” மாமியார் அதிர்ந்து போகிறாள். அவள் முகத்தில் வியர்வை குப்பென்று பூத்து வழிகிறது. “ஏண்டி? நீ என்னடீ நினைச்சிட்டிருக்கிற? ஒரு நல்ல நாளு, நாலு பேர் பாப்பாங்க. ஒரு கவுரவம் வேண்டாமா? நகையெல்லாம் ஆரக் கேட்டுட்டுத் திருப்பிக் கொடுத்தே?...” “ஆரைக்கேக்கணும்! அது எனக்குக் கொடுக்கப்பட்டது. எனக்குத் தேவையில்லை, திருப்பிக் கொடுத்தேன்.” ‘ஆரைக்கேக்கணுமா? எப்படி எதித்துக் கேக்கிறா?’ “இத பாருடீ இன்னிக்கு நீ இப்படியே வரக்கூடாது. ஒரு பெரிய இடத்துக்கு மருமகள் நீ. கூலிக்காரிச்சி உடுத்தும் சீலையுடன் வந்து நின்னால் நாலு பேர் மரியாதக்குறவா நினைப்பா. நீ உங்க வீட்டில எப்படி வேணுமின்னாலும் இருந்துப்பே. ஆனால் இங்க அப்படி இருக்கக்கூடாது!” விஜி வாயைத் திறக்கவில்லை. ஆனால் எழுந்து அவள் ஆணைக்கும் கீழ்படியவில்லை. “செல்வி, உங்கண்ணனைக் கூட்டிட்டு வா! இன்னிக்கு ரெண்டிலொண்ணு கண்டிப்பாகணும். ஒண்ணு நான் இந்த வீட்டை விட்டுப் போகணும், இல்லாட்டி அவங்க தனியாகப் போகட்டும். என் கண் முன் இது கூடாது!” செல்வி அண்ணனை எழுப்பத் தயங்குகிறாள். ஏனெனில் அவன் காலையில் ஏழு மணிக்குக் குறைந்து எழுந்து வரமாட்டான். அதற்குள் எந்தக் காரணம் கொண்டு எழுப்பினாலும் எரிந்து விழுவான். அதுவும் விஜி வந்த பிறகு செல்வி அந்த வேலைக்குச் சென்றதில்லை. “மயினியே எழுப்பட்டும்!” “என்ன ரகள இங்கே?...” என்று கேட்டுக்கொண்டு அப்போது மயிலேசனே அங்கு வருகிறான். கையில் சிகரெட் புகைந்து கொண்டிருக்கிறது. தாயார்க்காரி அழுகைப் பிரளயம் தொடங்குகிறாள். “என்னால நிதநிதம் லோலுப்படுறதுக்கில்ல சுப்பையா. வேலக்காரங்களுக்கு முன்ன அசிங்கமாயிருக்கு...” “என்னடி அழும்பு பண்ணுற? அம்மா சொல்படிதா இந்த வீட்டில இருக்கணும்!” என்று விஜியிடம் அவன் திரும்புகிறான். “இந்த வீட்டில் என் இஷ்டப்படி இருக்க உரிமை கிடையாதா?” “என்னடி உரிமெ பேசுற? உரிமை? போடீ! சொன்னபடி செய்யி!” வீராயி, தவசிப்பிள்ளை கோலப்பன், அவன் மனைவி சம்பங்கி ஆகியோருக்கு முன் அவன் அவ்வாறு கேட்கும் போது விஜி அதிர்ந்து போகிறாள். கையிலிருக்கும் பருத்தியைப் போட்டுவிட்டு மாடிக்கு ஏறிச் செல்கிறாள். துயர உணர்ச்சி உந்துகிறது. அழக்கூடாது என்றூ உறுதி செய்து கொள்கிறாள். ஆனால் அவளால் விருப்பமில்லாத செயல்களுக்குத் தலைவணங்கவும் இயலவில்லை. தான் தனித்து நிற்கவேண்டும். இந்தச் சிறு உரிமைகளுக்கு அவளுக்குக் கணவன் வீட்டில் இடமில்லை என்றால், பெரிய உரிமைகளை எப்படிக் கேட்க முடியும்? அல்லது பிறருக்கான உரிமைகளுக்கு எப்படி வாதாட முடியும்? மாடியிலுள்ள நடுஹாலில், நின்ற வண்ணம், வாயிலை வெறித்துப் பார்க்கிறார். அங்கிருந்து பார்க்க, தொலைவில் சாலையில் செல்லும் ஊர்திகள் தெரிகின்றன. தோட்டத்துக்கப்பால் கட்டாந்தரையாகவே விரிந்திருக்கிறது. வெயிலில் காய்ந்து காய்ந்து இறுகிப் போன மண் அந்தச் சாலையிலிருந்து பார்க்கும் போது இந்த இல்லம் தனியான கனவு மாளிகை போல் தெரியும். ஆனால் உள்ளே வந்தால் இது சிறைச்சாலை. சிறைக் கைதிக்குத் தன் விருப்பப்படி உடை அணிய உரிமை உண்டா? ஆனால் இந்தச் சிறையில் அவளை யாரும் பிடித்துத் தள்ளவில்லை. அவளாகவே வந்து புகுந்து கொண்டாள். இப்போது இரண்டு வழிகள் தானிருக்கின்றன. ஒன்று, அவள் இவர்கள் சொற்படி கேட்டுக் கொண்டு இருக்க வேண்டும்; இல்லையேல், இதைவிட்டு வெளியேற வேண்டும். வெளியேறுவது என்பது சாமானியமாக நடக்கக் கூடியதில்லை. இங்கே இருந்து கொண்டு போராடி இவர்களைத் திருத்துவதென்பதும் நடக்கக் கூடியதாக இல்லை. அவள் ஒன்றும் புரியாமல் நின்று கொண்டிருக்கையில் கார் ஒன்று பெரிய சாலையிலிருந்து திரும்பி இவர்கள் வீட்டுக்கு வரும் கப்பிச் சாலையில் வருகிறது. ரங்கேஷின் வண்டி தான் அது. மீனா உடல் முழுதும் சரிகை பின்னப்பட்டாற் போல மினுமினுக்கும் இளம் ‘பிங்க்’ சேலையை உடுத்தியிருக்கிறாள். மீனா நல்ல சிவப்பு; ஆனால் பருமன். முகம் முற்றித் தடித்தாற் போல் காணப்படுவதைப் பூச்சுக்களால் மறைத்திருக்கிறாள். ஈரக் கூந்தலை நுனியில் சிறு பின்னலாய் முடிந்து கொண்டு கனகாம்பரமும் மல்லிகையும் சுமையாகச் சூடியிருக்கிறாள். செவிகளில் முத்தும் சிவப்பும் விளங்கும் தோடுகள். அதே போல் முத்துப் பதக்கம் கழுத்தில் துலங்க, மெல்லிய கழுத்தணி. இரண்டு வரிச் சங்கிலி, முழங்கை முண்டு தெரியாத சதைப்பற்றுள்ள கைகளில் முத்தும் சிவப்புக் கல்லுமாகக் கரைபிடித்தத் தங்க வளையல்களின் அடுக்குகள், நெற்றியில் சேலைக்கிசைந்த பெரிய பொட்டு... அவளுடைய அலங்காரத்தை வாயில் முகப்பில் நின்றே பார்த்து விடுகிறாள் விஜி. கீழே கலகலப்பைத் தொடர்ந்து யாரோ வரும் அரவம் கேட்கிறது. மீனாவாக இருக்கும் என்று கருதுகிறாள். வருவது... அவள் கணவன்! “... குட்மார்னிங், என்னம்மா, விஜி? நீங்க ரெடியாகலியா?” “குட்மார்னிங்” என்று முணமுணத்துவிட்டு, சற்றே நிதானமாகப் புன்னகை செய்கிறாள். “ரெடியாக என்ன வேணும்? நான் ரெடியாகத் தானிருக்கிறேன்...” “பின்ன, கிளம்ப வேண்டியதுதானே? எப்பவும் மீனா தான் கிளம்ப நேரம் பண்ணுவா. இங்கேந்து வந்துதான் எங்களைக் கிளப்ப வேண்டியிருக்கும்... இன்னிக்கு எனக்கே நம்ப முடியல. சுப்பையா நான் வந்த பிறகு குளிக்கப் போறான்?” “... உங்களிடம் இனிமேல் சொல்லுவதற்கென்ன அண்ணா, நான் இந்த உடை அலங்காரத்துடன் கோவிலுக்கு வரக்கூடாதுன்னு அத்தை சொல்றாங்க. எனக்கு இப்படி இருந்துதான் பழக்கம். நான் இந்த மாதிரி ஆடம்பரங்களுக்குப் பழக்கப்பட்டவ இல்ல. இதெல்லாம் என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளும் போதே உங்ஞ்களுக்குத் தெரிஞ்சது தானே? மேலும், என் வ்யூஸ் பத்தி உங்க தம்பிக்கும் முன்னமே நான் சொல்லாமலில்லை. ஐ அம் ஸாரி. எங்கேயோ தவறு நேந்து போயிருக்கு... இப்ப வீணாக என் உடை உடுத்தும் உரிமையில் கூடக் கட்டுப்பாடு என்பது எனக்கு ஒத்துக் கொள்ளக் கூடியதாக இல்லை...” “அதெல்லாம் என்னம்மா? உன்னை யாரம்மா கட்டுப்பாடு பண்ணினாங்க இப்ப? யூ ஆர் அஸ் ஃபிரீ அஸ் யு ஆர் பிஃபோர். இதுவும் உன் வீடுதான். ஆடம்பரம்னு நீ ஏம்மா நினைக்கிற? நாங்களெல்லாம் சின்னப் பிள்ளையில் குச்சியடுக்கினவங்கதா. முப்பத்தஞ்சு ரூபாதா நான் காலேஜில படிக்கிற நாளிலே செலவுக்குத் தருவாங்க. மாசக் கடைசி நாளில் சோப்பு இல்லேன்னா, சோப்பு இல்லாம குளிக்க வேணும். அதனால, நீங்க என்னமோ எளிமைன்னும் இவங்க இல்லைன்னும் நினைச்சிக்காதம்மா, எல்லாரும் ஒரே நிலைதான்...” “நீங்க இப்படிச் சொல்வது எனக்குச் சந்தோஷமாக இருக்கு அண்ணா. ஆனா, மத்தவங்க அதுமாதிரி நினைக்கல.” “மத்தவங்கன்னா யாரு? அம்மா... அம்மா அவங்க காலத்தில் ரொம்பக் கஷ்டப்பட்டவங்க. ஏதோ கொஞ்ச காலம் அவங்க இருக்கும் வரை மதிப்புக் குடுத்திடறதுன்னு வச்சிருக்கிறோம். அவ்வளவுதான். நீ அவங்க சொல்றதப் பெரிசா எடுத்திட்டு மனசு வருத்தப்படறது சரியாயில்ல விஜி. யூ ஆர் மெச்சூர்டு. யூ கேன் அன்டர்ஸ்டான்ட்.” பணிவும் இங்கிதமுமாகப் பேசியே எதிராளியை வீழ்த்திடும் இவனுடைய சாதுரியம் அவளை வியக்க வைக்கிறது. “நான் புரிஞ்சுக்கிறேன் அண்ணா, அதனால் தான் எனக்குச் சில ஈடுபாடுகள் உள்ளோடு உடந்தை இல்லேன்னாலும், அவங்களுக்காகக் காலம ஆறு மணியிலேந்து சந்தனம் அரைக்கறதும் பூக்கட்டுறதும், திரி திரிக்கிறதுமா என் பொழுதை வீணாக்கிட்டிருக்கிறேன். இதைவிட, பின் தோட்டத்தில கொத்தி வெண்டை பயிரிடலாம்னு நினைப்பேன். ஆனால், நான் உடுத்தும் உடை போன்ற சொந்த விருப்பு வெறுப்புக்களில் எனது சுதந்திரம் பறி போவதை அனுமதிப்பது எப்படி? பிடிவாதமாக அவங்க அந்த சேலையைத் தான் உடுத்தணும், இந்த நகையைத்தான் போடணும்னு சொன்னா எப்படி...?” “விஜிம்மா, நான் சொல்றேன், ஒரு பேச்சுக்கு, இப்ப இத ஒரு வேட்டிய உடுத்திட்டு நான் வந்திருக்கிறேன். இதோடு ஆபீசுக்குப் போனால், அது சரியாயிருக்கிறதில்லை. அதற்கு ஒரு வேசம் வேண்டியிருக்கு. இன்னும் பல சமயங்களில் முழுசாக டை கோட்டுன்னு போட்டுட்டுத் திண்டாட வேண்டியிருக்கு. சுதந்திரங்கறது அப்படிப் பார்க்கப் போனால் ஒண்ணுமில்ல. ஒரு சமுதாயத்தில் வாழுறப்ப, சில சட்ட திட்டங்களுக்கு நாம தலை வணங்கித்தான் போக வேண்டியிருக்கு. இதுனால நான் எங்கம்மா பக்கம் நியாயம் பேசறேன், உன் பக்கம் பாதகம்னு நினச்சிடக்கூடாது. எனக்கு உன் தனித்தன்மை ரொம்பப் பிடிச்சிருக்கு. இப்படி உள்ளவங்கதான் இன்னிக்கு நம் நாட்டுக்கே தேவை. ஆனால் கொஞ்ச காலத்துக்கு, அம்மாளை நீ எதிராளியாக நினைக்கக் கூடாது. அதுவும் பாரு, இரண்டு வருசம் ஆகி, செல்விக்கும் கல்யாணமாயிட்டா, அவங்க கவனிக்கக்கூட மாட்டாங்க. இப்ப என்னடா புதிசா கல்யாணமான மருமகள், நாம் சொல்றோம் மதிக்கலேன்னு அவங்களுக்குக் கோபம் வருகிறது...” “ஐ... ஆம்... ஸாரி அண்ணா! எனக்குக் கல்யாணத்தின் பொழுது உடுத்தச் சொன்ன போது, நான் எதிர்ப்புக் காட்டக் கூடாதுன்னு இருந்திட்டேன். இது... அப்படீன்னா நான் கோயிலுக்கு வரல...” “ஓ... இது அதை விட மோசம்...” “என்னண்ணா? இன்னுமா தகராறு பண்ணிட்டிருக்கா?” மயிலேசன் அங்கே வருகிறான். நீராடிப் புதுமை பெற்று தழையப் பாதம் தெரியாமல் புரளும் சரிகை வேட்டியும், மினுமினுக்கும் ஜிப்பாவும், மெல்லிய தங்கச் சங்கிலியுமாக வந்து நிற்கிறான். “தகராறு ஒண்ணுமில்ல, இப்ப வந்திடுவாள். நாங்க வேற ஏதோ டிஸ்கஸ் பண்ணிட்டிருந்தோம்.” “இப்ப என்ன டிஸ்கஷன், அதுக்கு நேரம் பொழுதில்ல? அம்மா நேரமாச்சின்னு கத்துறாங்க. அவ வந்தா வாரா, வாராட்டி நிக்கட்டும்...” “அதெல்லாமில்ல இப்ப வந்திடுவா. கெளம்பும்மா!” “இப்படியேதான் வருவேன்...” அப்படியேதான் அவள் வண்டியிலேற வருகிறாள். மீனா ஒன்றும் அறியாதவள் போல் வாய் மலரச் சிரிக்கிறாள். பூக்கூடையில் இருந்து ஒரு கட்டு கனகாம்பரத்தையும் மல்லிகைச் சரங்களையும் எடுத்து அவளுடைய கூந்தலில் சுமையாகச் சூட்டுகிறாள். தாயும் இளைய மகனும் கோலப்பனும் ஒரு வண்டியிலும் விஜியும் மீனாவும் ரங்கேசனும் ஒரு வண்டியிலும் கிளம்புகின்றனர். பாதையிலே சைகிளில் நரைத்த கிராப்பும் சட்டை மேல் துண்டுமாக வருவது யார்...? விஜியின் கண்கள் கூர்மையாகின்றன. அப்பா தான். இந்த நேரத்தில் அப்பா... அப்பா எதற்கு வருகிறார்? ரங்கேசன் வண்டியை நிறுத்துகிறான். “அடாடா... வாங்க... வாங்க மாமா...” அப்பாவுக்கு இப்போதுதான் கோயில் விழாவே புரிகிறதா? “நீங்க கிளம்பிடறதுக்கு முன்ன வந்திடணும்னு பார்த்தேன்...” “வாங்க மாமா, கோயிலுக்குத்தான் போயிட்டிருக்கிறோம். வாங்க...” என்றவன் பின்னால் நிற்கும் வண்டியைப் பார்த்து, “கோலப்பா? சைகிளை வாங்கிக் கொண்டு ஓட்டிட்டுப் போயி வீட்டில விட்டுடு!” “வேண்டாம். இங்க பழனியாண்டவன் கடையில நிறுத்தி வையி, சௌகரியமாயிருக்கும்...” என்று கூறி விட்டு அப்பா ஏறிக் கொள்கிறார். சில வினாடிகளில் விஜி ஏதேதோ எண்ணுகிறாள். அவர் ரங்கேசனின் அருகில் அமர்ந்ததும் வண்டி நகர்ந்து செல்கிறது. “நேத்து ராத்திரியே வரணும்னு நினைச்சேன்...” “என்ன விஷயம், சொல்லுங்க மாமா!” “உங்களுக்கு ஏதும் தெரியாதா? இளஞ்சேரனில் நேத்து... மாரிசாமிய வேலையவிட்டு நிறுத்திட்டா. மானேசர் சாமியப்பனுக்கும் கூவனுக்கும் தகராறு...” “... எனக்குப் போன் பண்ணினான். ‘பவர்கட்’ பாருங்க ரொம்பத் தொல்லையாயிருக்கு. நான் அது விசயமாப் போயிருந்தேன். ஏதோ பெண்கள் தகராறு போல இருக்கு. இது ஒரு பிராப்ளம் மாமா. நாம என்ன ஒழுங்கு வச்சாலும் வேலைக்கு வரும் இளம்பெண்கள், கணக்கப்பிள்ளைகள்னு விவகாரங்கள் எப்படியும் வந்திடுது. மாரிசாமி ஏதோ பெண்ணிடம் ஒழுங்கு மீறி நடந்திட்டானாம். அது போயி மானேசரிடம் புகார் பண்ணிருக்கு. பாத்திட்டிருந்து புடிச்சிருக்கிறான்.” விஜியினால் இதை நம்ப முடியவில்லை. செவி மடல்கள் சிவக்கின்றன. “தம்பி, மாரிசாமிய எனக்கு அஞ்சு வயசிலேந்து தெரியும். இந்த மாதிரி அநியாயங்கள எதுத்துப் போராடுறவன் அவன். அவன் ஒழுங்கு மீறி நடந்தான்னா அது நம்பமுடியாதது. அவன் என்னிடம் சொல்லும் சமாசாரம் நேர்விரோதமாயிருக்கு. ஒரு பெண்ணை, சின்னப்பட்டிப் பெண்ணை, கைபார்க்கும் மன்னாரு கடத்திட்டே போனதைப் பார்த்தேங்கிறான். பண்டல் எடுத்துக் கொடுக்கையில் முறைகேடா நடந்திட்டதைப் பல பிள்ளைங்க பார்த்தாங்கன்றான். அந்தப் பெண் பயந்திட்டுப் பேசாம இருக்கு. ஏன்னா, பெட்டி அடச்சது சரியில்லன்னு கலச்சிப் போட்டுடுவான். கூலி குறைஞ்சிடும். பயப்படாம சொல்லுன்னு அந்தப் பிள்ளையைக் கேட்டிட்டிருந்தானாம். இதை வச்சிட்டு மானேசர் அபாண்டப்பழி போட்டுட்டார்ங்கன்னு சொல்றான். இதை நான் நம்பமுடியும்...” ரங்கேசன் சிரித்துக்கொண்டு பதிலளிக்கிறான். “சாமியப்பன் எங்கப்பா முதல் முதல்ல பஞ்சப்பட்டியில் மாட்ச் வொர்க்ஸுனு தொழில் துவங்கிய காலத்தில் சிறு பையனாக வந்து சேர்ந்தவர். எங்களை எல்லாம் தோளில் தூக்கிக் கொண்டு விளையாடிய நாளிலிருந்து நம்பிக்கை பெற்றவர். அதனால் அவர் தப்பாகச் செய்திருக்க மாட்டார் என்று நானும் நம்ப வேண்டியிருக்கு...” “இல்லை தம்பி, நீங்கள் தீர விசாரிக்கணும். வேலை போனதை விட, இந்த அவமானம் தான் எரிச்சலாயிருக்கு. நீங்க நியாயமாக விசாரணை செய்தால் பல முறைகேடுகள் தெரிய வரும்...” ரங்கேசன் சட்டென்று பதில் கூறவில்லை. கூட்டுக் குஞ்சுகள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
|