உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
17 சுமதி ஒரு சிறு தொட்டியில் ரோஜாப்பதியன் வைத்திருக்கிறாள், செந்தில் கொண்டு வந்தானாம். எங்கோ ஊருணியிலிருந்து மண் கொண்டு வரச் சொல்லி அதை நட்டு, நாள்தோறும் நல்ல தண்ணீர் ஊற்றி, இடை இடையே அதைப் பார்ப்பதிலேயே ஒன்றிப் போகிறாள். சித்திரை மாசத்தில் மாரி அம்மன் கோயில் விழாவில் கயிறு குத்துப் பிரார்த்தனைக்காரர் கையிலேந்தும் தீச்சட்டியில் எழுப்பும் சுவாலையைப் போல் துளிர் விட்டிருக்கிறது அது. “ஐய்யா! வேலம்மா! இதபாரு! இது துளிர் விட்டிடிச்சி! அக்கா! இதபாரு! துளிர்விட்டிடிச்சி” என்று அவள் ஆர்ப்பரிக்கிறாள். “மழகாலத்துல வச்சாத்தான் துளிர் வரும்னு நினைச்சிட்டிருந்தேன். செந்தில்தா சொன்னா. இப்ப வையி புடிச்சிக்கும்னு...” இதைச் சொல்கையில் அவள் முகம் சிவந்து போகிறது. பார்ப்பவர்கள், சுமதியையும் விஜியையும் சகோதரிகள் என்று சொல்லமாட்டார்கள். மாநிறம், ஒடிந்து விழும் மென்மை... “நான் கரிஞ்சு ஓயிடும் இந்த வெயிலிலேன்னு பயந்திட்டிருந்தேன். சூடு இருந்தால்தான் முட்டை குஞ்சு பொரிப்பது போல், இந்த உயிர்ப்புக்கும் சூடு வேண்டியிருக்கு!” விஜி அவளையே பார்த்துக் கொண்டு சிறிது நேரம் நிற்கிறாள். அன்று அதிகாலையில் தன் கைப் பெட்டியுடன் ரிக்ஷா ஒன்றில் வந்து இறங்கிய அவளை யாரும் இது வரையிலும் சிறிதும் வித்தியாசமாக நடத்தவில்லை. எப்போதும் போல் முகம் கனிந்த அன்புடன் வேலம்மா வரவேற்றிருக்கிறாள். அப்பா அவரும் வாய்விட்டு எதுவும் கேட்கவில்லை. தொழிற்சாலையைப் பூட்டி வைத்து விடுவார்களா? சண்முகம் அன்றே பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்பட்டார். சிறுவர் சிறுமியருக்குப் பகலுணவு நேரம் ஒரு மணி கொடுக்க வேண்டும்; காலையில் ஏழு மணிக்குத்தான் தொழிற்சாலைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்; மாலை நான்கு மணியுடன் திரும்பி விடவேண்டும்; கணக்கப்பிள்ளைகளுக்கு ஊதிய உயர்வு வேண்டும்; மாரிசாமியை வேலைக்கு மீண்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும்... என்றெல்லாம் அவர் வைத்த கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டார்கள். மாரிசாமிக்கு அந்தத் தொழிற்சாலையில் மீண்டும் வேலை கொடுப்பதற்கில்லை. ஆனால், அவர்களுடைய உறவு வட்டத்தில் மயிலேசனின் மாமனுக்குச் சொந்தமான பழைய தொழிற்சாலையில் வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது. அது புது நகரத்திலிருந்து ஐந்து மைல்களுக்கப்பால் சத்திபுரம் ஊரில் இருக்கிறது. மாரிசாமி அங்கே சென்ற பிறகு ஒரே ஒரு முறைதான் வந்து போனான். “விஜியம்மா! எப்ப வந்தீங்க?...” என்று ஆச்சரியத்துடன் கேட்டான். ‘நீ வேலைக்குச் சேந்து போகும் நாளில் வந்தேனே, அன்றிலிருந்து திரும்பவில்லை’ என்று அவள் சொல்லவில்லை. அக்கம் பக்கம், கேட்பவர்களுக்கெல்லாம் மாப்பிள்ளை வெளி ஊருக்குப் போகப் போகிறார், அந்த நாட்களில் இங்கிருக்கும் ஆசையில் வந்ததாகச் சொல்கிறாள். தன்னால் ஏன் உண்மையைச் சொல்ல முடியவில்லை என்று புரியவில்லை. வறட்சிச் சூழலிலும் ரோஜா துளிர்க்கிறது. அந்த தொழில் பெருக்க நெருக்கடிக் கசப்பிலும் வசந்தத்தின் மென்மைகள் கட்டவிழ்கின்றன. காளிகோயிலில் பத்து நாளைய உற்சவம் தொடங்கி விட்டார்கள். மல்லிகையும் மருவும் மணத்தை வீசிச் சூழலுக்குக் கவர்ச்சி அளிக்கிறது. புதிய தாலிக் கயிறுகளின் மஞ்சட் குங்குமங்கள் துலங்க, கடனும் வறுமையுமாகிய குழிகளை மூடி மறைக்கும் புதிய வேட்டிகளும் மினுமினுப்புச் சட்டைகளுமாக, பஸ் நிற்குமிடங்களில் கொத்துக் கொத்தாக மக்கள் காணப்படுகின்றனர். எங்கோ கிராமத்துக் குலதெய்வத்து விழாவுக்கே கடை கண்ணிகள், ராட்டினம் போன்ற களியாட்டங்கள் சந்தை விரிக்குமானால், பெரிய தொழில் நகரத்தின் புராதனமான காளி அம்மன் உற்சவத்துக்கு மக்களைக் கவர்ந்திழுக்கும் வண்மைகள் இல்லாமலிருக்குமா? கோயில் வளைவுக்குள், கடை வீதிகளில், ‘திருவிழா’ என்று அறிவிக்கும் மிட்டாய்க் கடைகளும், பாத்திரக் கடைகளும், துணிக் கடைகளுமாக நிரம்பி வழிகின்றன. ஒன்பதாம் திருநாளில் இரவில் கோயில் முன் விரிந்த வெளியில், வாணவேடிக்கை எங்கும் காண இயலாத காட்சியாகத் திகழும். அம்மன், வாயிலுள்ள கல் மண்டபத்தில், சிம்ம வாகனத்தில் எழுந்தருளி இருக்கிறாள். விஜி இந்த வாணவேடிக்கைக் காட்சியை முன்பு சிறுமியாக ஐயாம்மாவின் கையைப் பற்றிக் கொண்டு பார்த்திருக்கிறாள். அவள் படிக்கச் சென்ற பின், இந்த விழாச் சமயத்தில் அநேகமாகப் பரீட்சை முடிந்திருக்காது. மேலும் ஐயாம்மா சின்னப்பட்டியே கதியாகச் சென்ற பின், இந்த விழாவுக்கு வருவதில் உற்சாகமும் காட்டுவதில்லை. இப்போது மோதித் தள்ளும் கூட்ட நெருக்கடியில் அவள் நின்றிருக்கிறாள். லோசனியின் மக்கள், சுமி எல்லோரும் நின்றிருக்கிறாள். மண்டபத்தின் வலப்புறத்தில் ஊரின் பெரிய பணக்காரர்களான முதலாளிகள், அவர்கள் குடும்பக்காரர்கள் அதிகாரிகள், செல்வாக்கு மிகுந்தவர்கள் வசதியாக நிற்க இடம் ஒதுக்கியிருக்கின்றனர். விஜி, தான் நின்ற இடத்திலிருந்தே மாமியாரை அவளுடைய வெண்பட்டுச் சேலையில் அடையாளம் கண்டு கொள்கிறாள். பக்கத்தில் செல்வி... செல்விக்கருகில்... குப்பென்று வேர்த்துக் கொட்டுகிறது. இங்கே வேறு யார் கண்களிலேனும் அவர் இருப்பது தெரிந்து “விஜி உன் மாப்பிளை அதோ!” என்று சொல்வார்களோ?... ‘...சீ இதென்ன மடமை எனக்கு? நான் என்ன தவறு செய்தேன்?’ என்று மனப்பலவீனத்தை அடிமை கொள்கிறாள். அந்தப் பக்கமிருந்து பார்வையை அகற்றித் தன்னைச் சுற்றிப் பார்வையைப் பதிக்கிறாள். “சீ, என்னாடி இது, எப்பிடி நெருக்கித் தள்ளுறாங்க...?” என்று சிடுசிடுக்கும் சுமதி, “விஜி, உங்க வீட்டுக்காரங்கல்லாம் அங்க மண்டபத்துக்கிட்ட இருப்பாங்கல்ல? நாமும் அங்க போவம்...” என்று கூட இழுக்கிறாள். “முதல்லியே போயிருக்கணும். ஏ வாசுகி? எங்கடி பிரிஞ்சு ஓடுற?” என்று லோசனி கத்துகிறாள். வாணவேடிக்கை நல்ல வேளையாகத் தொடங்கி விடுகிறது. ‘வீ...ஸ்’ என்று மேலெழும்பிச் செல்லும் வாணம், ஒலித்துக் கொண்டு உயரே வண்ணமயமாகப் பச்சையும் சிவப்புமாக ஓர் கனவுலகைக் காட்டுகிறது. ஒரே பரவசமாகக் கிளர்ந்தெழும் குரல்கள். “ஆத்தாடி! எம்புட்டு... எம்புட்டு ஒசரப் போவுது பாரு!” “இதாண்டி அவுட் வாணம்!...” “இதெல்லாம் நம்மூருல செய்யறதுதானே?” “இதெல்லாம் நம்மூரில செய்யறது இல்லே...” “ஆமா எங்கப்பாருதாஞ் சொல்லிருக்கா மணி மருந்து கட்டி வச்சிருப்பா, பெசல்லா...!” “அதொண்ணில்ல. சீமேலேந்து தருவிச்சிருப்பா.” “பொய்யி, சீமேலேந்து வாணம் தருவிப்பாகளாக்கும் எரிஞ்சி போயிராது?” “தண்ணில முக்கிக் கொண்டாருவா...” விஜி சுவாரசியமான இந்த உரையாடலைச் செவியுறுகிறாள். இரண்டு குழந்தைகள் - ஒரு ஆணும் பெண்ணும். முன்னே நிற்கின்றனர். இந்தத் தொழிற் சூழலில், அக்குழந்தைகள் இருவருமே உற்பத்தியில் பங்கு பெறுபவர்களாக இருக்கும். “ஏ... குடவாணம்!... குடவாணண்டீ!” மேலெழும்பிச் சென்று குடை போல் வண்ண ஒளி பரப்பும் வாணம்... பாட்டியின் கையைப் பற்றிக் கொண்டு கண்டு மகிழ்ந்த அதே வாணங்கள். அந்தப் பருவத்தில் இந்தக் கருமையும் கனங்களும் படிந்திருக்கவில்லை. இங்கு வந்து இத்தனை நாட்களான பின்னரும் அவள் சின்னப்பட்டிக்குச் செல்லவில்லை. இந்த விழாவுக்கு அங்கிருந்து மம்முட்டியானோ, வேறு குழந்தைகளோ வந்திருக்கக்கூடும். தனது எதிர்காலம், இந்த எதிர்காலமற்ற குழந்தைச் சமுதாயத்துடன் பிணைந்ததாக, அவர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளைப் பெற்றுத் தருவதற்கானதோர் வழியில் நிலைப்பதாக இருக்க வேண்டும் என்று விஜி முடிவு செய்திருக்கிறாள். ஆனால், அத்தகைய வழியின் சாத்தியக் கூறுகள் சட்டென்று புலப்படவில்லை. தந்தையின் அலமாரியிலுள்ள நூல்களை அவள் இதற்குமுன் இவ்வளவு கவனமாக ஆராய்ந்ததில்லை. இப்போது அவளுக்கு ஒரு நூல் தட்டுப்பட்டது. மகாராஷ்டிர மாநிலத்து கோதாவரி பருலேகரின் ‘ஆதிவாசிகளின் கிளர்ச்சி’ என்ற நூல் அவளைப் பெரிதும் கவர்ந்திருக்கிறது. அந்த அம்மை, காடுகளுக்குள் நடந்துசென்று, மிக அவலமாக விலங்களுக்கும் கீழான நிலையில் அழுத்தப்பட்டு வந்த ஆதிவாசி மக்களிடையே எவ்வாறு தன்மானத்தை எழுப்பினாள் என்பதை வீரமும் உருக்கமும், எழுச்சியும் நிறைந்த வரலாறாக எழுதியிருக்கிறாள். நாற்பதுகளில் அத்தகைய துணிவுள்ள பெருமாட்டி செயல்பட்டிருக்க முடியுமானால், எழுபதுகளின் இறுதியாண்டுகளில் செயல்பட முடியாதா? “அடீ... பந்து வாணம்...! பந்து வாணம் பாரு!...” விஸ்ஸென்று உயரத்தில் எம்பிச் சென்று பெரிய பெரிய பந்துக் கொப்புளங்களைத் தள்ள குபுக் குபுக்கென்று வெடிக்கும் பந்துவாணம். “விஜிக்கு அந்தப் பக்கமே கண்ணுபோகுது. வாணத்தையே பாக்கல. ஏம்மா, அங்கிட்டுப் போயி வசதியா நின்னு பாக்கலாமில்ல?” என்று லோசனி அவளையே கவனித்தாற்போன்று கிண்டுகிறாள். ஒரு பெண்ணுக்குத் திருமணமாகிவிட்டால், சுற்றுச்சூழல் முழுதும் அவளைத் தனித்தன்மையற்றவளாகச் செய்வதிலேயே அக்கறை காட்டுகிறது. இது ஒரு சமுதாய நிர்பந்தம் என்று கூடத் தோன்றுகிறது. வேலம்மாவைப் பொருட்படுத்த வேண்டாம். விடுமுறைக்கு குழந்தைகளை அழைத்துக் கொண்டு சித்திகள் சின்னப்பட்டி வரக்கூடும். அப்போது அவள் அங்கு அப்பாவே வெளிப்படையாக எதையும் அவளிடம் கேட்கவில்லை. அவள் அவ்வாறு இணைந்து போக மறுத்து வந்ததை அவர் ஒரு கால் ஒப்பவில்லையோ? அவ்வப்போது ஏதோ தீனி கொடுப்பது போன்று சம்பளத்தைக் கூட்டித் திருப்தி செய்து விடுவது போன்றுதான் தொழிற்சங்க நடவடிக்கை இருக்கிறது. உண்மையில் அந்தக் குழந்தைகளை, கணக்கப்பிள்ளைகள் குழந்தைகளாக நடத்துவார்களா? ஏழு மணியில் இருந்து மாலை நான்கு மணி வரையிலும் என்றபடி வேலை முடித்து கொண்டு விடுவார்களா? இதைப் பெற்றோர் ஒப்புக் கொண்டு குறைந்த கூலிக்குத் திருப்தியடைவார்களா? விஜிக்கு நம்பிக்கையில்லை. இது கட்டாந்தரையில் ஆழப் பதிந்த வேர். தாழ்மையுணர்வும், வறுமையும் பெற்றோரின் இயல்பான கசிவுகளை முழுசுமாக வற்றடித்து விட்டன. அவை நீங்க, நம்பிக்கை நீரைப் பாய்ச்ச வேண்டும். பின்னர் இந்த வேர்களைக் கெல்லி எறிய வேண்டும் என்று அவர்கள் ஒன்றுபட்டால், ‘எங்கள் குழந்தைகளுக்கு எதிர்காலம்’ வேண்டும் என்ற உணர்வு கொண்டு செயல்பட்டால், இந்தப் பிரச்சனைக்கு மாற்று காண முடியும். அவளுக்குத் தெரிந்து அப்பாவுடன் கட்சி, தொழிற்சங்க அபிமானிகளாக இருந்தவர் பலரை நினைத்துப் பார்க்கிறாள் விஜி. எபனேசர் சொந்தமாகப் பட்டாசுத் தொழில் செய்கிறான். லாபம் மட்டுமே குறியாகத்தான் சிறு தொழில்காரன் இயங்க முடியும். சட்டப்படியான பாதுகாப்பு விதிகளைப் பெரும்பாலான சிறுதொழிற்சாலைகளில் நினைத்துப் பார்க்க முடியாது. ருத்ரய்யா தெலுங்கன். ‘வார்னிஷிங் பிளான்ட்’ சிறிய அளவில் செய்யும் தொழில். வேலை செய்யும் பையன்களைக் கண்மண் தெரியாமல் அடிக்கிறான் என்று அப்பாவே சொல்வார். காளத்தி சிறிய அளவிலான கட்டிட கான்டிராக்டர். அவன் தினமும் குடித்துவிட்டுப் பெண்சாதியை அடித்துக் கொல்லுவா. கட்டியவள் வேறு. கட்டாதவள் வேறு. சந்திரன் தீப்பெட்டி அலுவலகத்தில் எழுத்தனாக இருக்கிறான். அவன் மனைவி சுசீலா மிக அழகாக இருப்பாள். அவள் மின்சார அலுவலகத்தில் பணி புரிந்து கொண்டிருந்தாள். திருமணமானதும் வேலையை விடச் சொல்லிவிட்டான். நான்கு குழந்தைகள். தேய்ந்து மாய்ந்து, அந்த அழகின் சுவடுகள் இல்லாமல் நோயாளி போலிருக்கிறாள்; திப்பெட்டி ஒட்டுகிறாள். இவர்களெல்லாரும் தாம் ஏற்றத்தாழ்வில்லாத புது யுகத்தைக் கொண்டு வரப்போகும் கட்சிக்குப் பேசுகிறார்கள். கூட்டம் போடுகிறார்கள், கோஷங்களை உருவாக்குகிறார்கள். கோஷங்களும், நடவடிக்கைகளும், உடலுழைக்காமல் காரில் போய்க் கொண்டு சொகுசு வாழ்க்கையை அனுபவிக்கும் முதலாளிகளின் வாழ்க்கைத்தர பொருளாதார மேன்மையைத் தான் இலக்காகக் கொண்டிருக்கின்றன. ‘எல்லாருக்கும் எல்லாம்’ என்ற சமத்துவக் கோட்பாட்டின் அடி நிலையில் உழைப்பு மூலதனம் என்பதுதான் உயிர்க்கரு. அந்த அடிப்படையில் விழிப்புணர்வு வரவில்லை. கல்வி, தொழில், ஏன், வாழ்க்கைக் குறிக்கோளே, பணம், உழைக்காத சுகபோகம் என்ற இலக்குகளைப் பிடிப்பதற்காகவே இன்று கருவிகளாக இருக்கின்றன. விஜி பட்டப்படிப்பைப் பெண்கள் கல்லூரியில் தான் முடித்தாள். பின்னர் மேற்படிப்பு இரண்டாண்டும் ஆண்களும் படித்த கல்லூரியில் தான் கழிந்தது. மாணவர் சம்மேளனத்து ரமணி, முற்போக்கு அணியைச் சேர்ந்தவன். மாணவிகளிடையே ஆதரவாளர்களைச் சேர்க்க அவன் அவளை நாடி வந்திருக்கிறான். உயர்ந்த இலட்சியங்களைப் பற்றி அழகாகப் பேசுவான். ஆனால் இவர்கள் இலட்சியங்களையும், பேச்சுக்களையும் கேலியும் கிண்டலும் செய்தவர்கலே பெரும்பான்மையினராக இருந்தனர். பெண்கள் கல்லூரியிலோ, முற்போக்குக் கருத்துக்களைப் பற்றி நினைப்பது கூட அசாத்தியம். ஒரு சமயம் முத்தமிழ் விழாவில் பேச வந்த இலக்கிய ஆய்வாளர் ஒருவர், பெண்களின் சில உரிமைகளை, தனித்தன்மையுடன் இயங்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்திப் பேசிவிட்டார். தலைவிக்கு அங்கேயே அச்சம் வந்து விட்டது... அவர் கருத்துக்களை ஒப்புக் கொள்வதற்கில்லை என்று பேசினாள். “மாணவப் பருவத்தில் எல்லோரும் புதிய சிந்தனைகளை ஆர்வமாக வரவேற்க முடியும். பெண், குடும்பப் பொருளாதார உற்பத்தியில் பங்கு கொள்ளும் போது, தனிப்பட்ட முறையில் ஓர் மதிப்பும் கௌரவமும் பெறுகிறாள். இதுவே தன்னம்பிக்கையும் ஆற்றலும் பெருக வாய்ப்பளிக்கிறது. ஆனால் இன்றைய குடும்ப அமைப்பில் இன்னும் ஆண் பெண்ணைத் தனக்குக் கீழ்ப்படிய வேண்டியவள் என்று கருதும் நிலை போகவில்லை; இது பிரச்னை” என்றார் அந்தப் பேச்சாளர். இதை அத் தலைவி ஒப்புக் கொள்ளவில்லை. நிசமான வாழ்க்கையில் அநுபவித்தறியும் உண்மைகள், மாணவப்பருவ நினைப்பிலிருந்து எத்தனை வித்தியாசப்படுகிறது! “அதோ...! கோழிக்கால் வாணம் அக்கா! கோழிக்கால் வாணம்!” மேலெழும்பிய வாணம், பல கீறுகளாக, கிளைகளாக கோழிக்கால் சீந்தி விடுவது போல் வெடித்துக் கோலம் காட்டுகிறது. காளி அம்மன் திருவிழா இது என்று விஜி சிந்தையை இழுத்துக் கொண்டு வருகிறாள். கொட்டுக்கள் முழங்குகின்றன. குருக்கள், கழுத்தில் உருத்திராட்சம் தவழ, அம்மனுக்குக் கற்பூர ஆரத்தி காட்டுகிறார். வாணப்புகை குழம்பிய வானைப்போல் கூட்டத்திலும் அமைதி காட்டி விட்டுப் போன கசகசப்புக்கள்... குழப்பங்கள் மேலிடுகின்றன. இனி அம்மன் பவனி வரத் தொடங்குவாள். கூட்டத்தில் குழந்தைகளை நழுவ விடாமல் கையைப் பற்றிக் கொள்ள, லோசனியும் சுமியும் அவளும் வீடு திரும்புகிறார்கள். வீட்டில் சிவகணபதி வாத்தியார், அந்த இரவில், வாசலில் உட்கார்ந்திருக்கிறார். அவளைக் கண்டதும் எழுந்து கை குவிக்கிறார். “வாங்க... வாங்க சார்... எப்ப வந்தீங்க? ஊருல எல்லாரும் சுகமா?” என்று வரவேற்கிறாள். “எல்லாமே சுகந்தான். திருவிழால்ல? நீங்க இங்க இருக்கீங்கன்னு இப்பதாந் தெரியும்; வந்தேன்...” “ஊரில மாட்ச் ஃபாக்டரிப் பிள்ளைங்களை இப்பல்லாம் ஏழு மணிக்குக் கூட்டிட்டுப் போயி நாலு மணிக்குக் கொண்டு விட்டுடறாங்கல்ல?” அவர் புரியாமல் புருவத்தை நெறித்துக் கொள்கிறார். “அப்படியெல்லாம் இல்லியே? நாலு மணிக்கு வந்து ஏழு மணிக்குக் கொண்டு விடுகிறான்... கொஞ்சம் முன்ன...” என்று தெரிவிக்கிறார். கூட்டுக் குஞ்சுகள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
|