உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
22 சொந்த வாழ்வைத் தியாகம் செய்வதா? சொந்த வாழ்வென்பது முள் நிறைந்ததாக இருக்கையில் அதை விட்டுவிடுவது தியாகமா? உன் சொந்த வாழ்வையும் இந்த வெளிப் பிரச்னையையும் இணைத்துக் கொள்ளாதே என்றார். இணைக்காமல் எப்படி வெவ்வாறாகப் பார்க்கமுடியும்? உலக வரலாறுகள், சமுதாயப் போராட்டங்கள், தொழில் வளர்ச்சிகள் தோற்றுவிக்கும் வாழ்க்கை மாற்றங்கள், பண்பாட்டு மாற்றங்கள் என்றெல்லாம் படித்தும் சிந்திக்கவும் தெரிந்து கொண்டவள், சொந்த வாழ்வு வேறு என்று கூட்டுக்குள் சுருங்கிக் கொண்டு அவள் சிந்தையைப் பாதிக்கும் பிரச்னைகளைச் சம்பந்தமில்லை என்று புறக்கணிக்கலாமா? மயிலேசனை அவள் மணந்துகொள்ள விழைந்தது கூட அவன் வெளித் தோற்ற கவர்ச்சிக்காகவோ, பொருளுக்காகவோ, உல்லாச வாழ்க்கைக்காகவோ அல்ல. அவன் இவள் கருத்துக்களை, முற்போக்கான தன்மைகளைப் புரிந்து கொண்டவனாகப் பேசினான். “எனக்கு ‘இன்டிபென்டன்ட் வ்யூஸ்’ உள்ள பெண் தான் வேண்டுமென்று தேடிட்டிருந்தேன். என்னுடைய அதிர்ஷ்டம் அவளை இங்கே காண்கிறேன்... விஜி... நான் இப்படி அழைக்கலாமா?...” என்று கேட்ட அந்தக் குரலின் மென்மையும் பண்பும் இன்னமும் அவள் நெஞ்சத்துடிப்பில் எதிரொலிக்கிறது. அத்தனையும் பொய்யாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றவில்லையே! பெண்மையை மதித்து சம உரிமை கொடுக்கும் பண்பாளென்று அவள் நினைத்திருந்தால், அவன் குடிப்பதைக் கூட மாற்றிவிடலாம் என்று தெம்பு கொண்டிருப்பாள். ஆனால் அவள் அவனிடம் பணத் திமிர் படைத்த ஆணவக்காரனைத்தான் காண்கிறாள். தொழில்கள் சமுதாய ஏற்றத் தாழ்வுகளைச் சமமாக்கக் கூடிய வகையில் பள்ளத்தை நிமிர்த்தி வளம் கூட்டவில்லை எனின், அந்தத் தொழில் வண்மை எங்கே செல்கிறதென்று சிந்திக்க அவளுக்கு உரிமை உண்டு. அப்படிச் சிந்திக்க உரிமை தராததோர் மணவாழ்வு அவளை அடிமையாகக் கருதுகிறது என்பதில் ஐயமில்லை. மணவாழ்வு என்பது, கணவனின் உடலாசைத் தேவையை நிறைவேற்றுவது என்று மட்டும் அவள் கருதவில்லை. விஜி தீரத் தெளியச் சிந்தனை செய்கிறாள். இந்தப் பெரிய தொழிற் பிரச்னை, தனது வாழ்வுடன் சம்பந்தப்பட்டிருப்பதாலேயே சக்தி வாய்ந்ததாக ஆகிறது என்று தோன்றுகிறது. விஜி, ‘குழந்தைத் தொழிலாளர்’ என்ற தலைப்பில் நீண்டதோர் கடிதத்தை வரைந்து, புகழ் பெற்றதோர் ஆங்கில நாளிதழுக்கு அனுப்பி வைக்கிறாள். அடுத்த சில நாட்களில் அவளை அழைத்து, அந்த நாளிதழ் ஆசிரியரிடம் இருந்து ஓர் கடிதம் வருகிறது. வீட்டாருக்கு, விஜி வந்து இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் அவள் கணவனிடமிருந்தோ வீட்டாரிடமிருந்தோ கடிதம் ஏதும் வரவில்லையே என்ற சந்தேகம் இல்லாமலில்லை. இவர்களும் நகை, புடைவை, குளிரலமாரி என்றெல்லாம் விசாரிக்காமலில்லை. பத்திரிகை அலுவலகத்திலிருந்து ‘டைப்’ செய்த முகவரிக் கடிதம் வந்ததும் சித்திதான் அதை அவளிடம் கொடுக்கிறாள். “நாலு நாளா வரிஞ்சி வரிஞ்சி எளுதிட்டிருந்தே டைப் அடிச்சிட்டு வந்தே. அங்கேந்தும் கடிதாசி மாப்பிள உடனே போட்டுட்டாப் பாரு, வரச்சொல்லி!” என்று கேலி செய்கிறாள். சங்கடத்தைச் சிரிப்பால் மறைத்துக் கொண்டு அவள் பஸ் ஏறி அந்த நாளிதழ் அலுவலகத்துக்குச் செல்கிறாள். “வரும் ஆண்டு, குழந்தைகள் ஆண்டு. இந்த விவரங்கள் உதவியாக இருக்கும். ஆனால் நீங்கள் இதைப் படங்களுடன் கட்டுரையாக எழுதித் தந்தால் வெளியிடுவோம்” என்று தெரிவிக்கிறார், தலை நரைத்த பொறூப்பாசிரியர். விஜிக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. அண்ணாசாலை அஞ்சல் அலுவலகத்தில் இறங்கி அங்கேயே தந்தைக்கு ஒரு கடிதம் எழுதிப் போடுகிறாள். ஒரு வாரம் பொறுப்பது மிகுந்த தவிப்பாக இருக்கிறது. “தொழிற்சாலைக்குள் புகுந்து படம் எடுப்பது இலகுவாக இல்லை என்றாலும் மூன்று படங்கள் எப்படியோ சமாளித்து அனுப்பி இருக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார். தொழிற்சாலை எதென்று தெரியவில்லை. வாயிலில் குழந்தைகள் கையில் சாப்பாட்டுத் தூக்குடனும் சிட்டைகளுடன் நிற்கும் படம் ஒன்று. மற்றொன்று குச்சியடுக்கும் சிறு குழந்தைகளின் வரிசை; இன்னொன்று, மருந்துப் பொடி சலிக்கும் பையன், ஃபயர் வொர்க்ஸ் போலிருக்கிறது. உடனே தயாராக வைத்திருக்கும் கட்டுரையுடன் படங்களைக் கொண்டுபோய்க் கொடுக்கிறாள். ‘சின்னச் சின்ன விரல்கள் இயக்கும் தொழிலகங்கள்!’ என்ற தலைப்பில், அந்த ஆங்கில நாளிதழின் ஞாயிறுப் பதிப்பில் அது வெளியாகி இருக்கிறது. இவர்கள் வீட்டில் ஆங்கில நாளிதழ் வாடிக்கை கிடையாது. எனினும் விஜி வந்த நாளிலிருந்து ஆங்கில நாளிதழ் போடச் சொல்லி இருக்கிறாள். அந்தக் கட்டுரையைப் பார்க்கையில் விஜியின் மகிழ்ச்சிப் பூரிப்புக்கு எல்லையே தெரியவில்லை. “சின்னம்மா! பாத்தீங்களா? தீப்பெட்டி ஆபீசுப் பிள்ளைங்களைப் பத்தி வந்திருக்கு!” என்று படங்களைக் காட்டுகிறாள். “அட...? ஆமாம்?...” “இது... யார் எழுதினது தெரியுமா உங்களுக்கு?” “யாரு? அப்பாவா?...” ராசுச் சித்தப்பா பரபரப்புடன் வந்து பார்க்கிறார். “அட... நீ தானாம்மா? நீதானா எழுதியிருக்கியா? அட சபாசு! பாரல? விஜியக்கா இங்கிலிசு பேப்பரில எழுதியிருக்கா! ஏம்மா? நீ சொல்லவேயில்லையே...?” என்று பூரித்துப் போகிறார். எதிர்வீட்டு வீரராகவன் எல்.ஐ.சி. அலுவலகர். சிற்றப்பா அவரிடம் கடைக்குச் செல்கையில் சைகிளை மிதித்த வண்ணம், “பார்த்தீங்களா? நம்ம விஜி இன்னிக்குப் பேப்பரில எழுதியிருக்கு!” என்று பெருமை பொங்க விளம்பரம் செய்து கொண்டு போகிறார். “விஜி... எம்புட்டுப் படிச்சிருக்கு! சும்மாவா பெரிய வீட்டிலேந்து மாப்பிள வந்து கட்டியிருக்கா?” என்று அத்தையின் மாமியாரான ஆச்சி முதல் அதிசயப்படுகிறார்கள். “ஹலோ, விஜியா? உன் ஆர்ட்டிகள், வொண்டர் ஃபுல்!” என்று பாராட்டுகிறான் பக்கத்து வீட்டுக் கல்லூரி விரிவுரையாளனான சுந்தரவரதன். இன்னொரு பகுதிக் குடித்தனக்காரன் மணவாளன் அஞ்சல் அலுவலகக்காரன் - யூனியன் ஈடுபாடுள்ளவன். “ஒரு நாளைக்குப் பத்துமணி நேரமா வேலை வாங்குறாங்க? முதலாளிகள் அக்கிரமம்! யூ ஹேவ் பிராட் அவுட் எ ப்ளாக் ஹோம் டு லைம் லைட்!” என்று புகழ்ந்துரைக்கிறான். தேசிகாச்சாரி ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர். “விஜி நீ எழுதியிருக்கிறேன்னு இப்பதா உன் சித்தப்பா சொன்னார். உன் இங்கிலீஷ் நடை பிரமாதம் போ, என்னால் நம்ப முடியல. ஆமாம்... உங்க வீட்டுக்காரங்க கூட, எதோ மாட்ச் ஃபாக்டரி பிஸினஸ்னு சொன்ன நினைப்பு... அப்படீன்னா நீயே எழுதுவியோ?” என்று கழுகுக் கண்களால் பார்க்கிறார். “ஏன் சார் எழுதக் கூடாது, யாரானாலும் நியாயம் நியாயம்தானே?” என்று அவள் சிரிக்கிறாள். “அப்ப உன்னை ரொம்பப் பாராட்டணும்.. நீ ஜர்னலிசம் கோர்ஸ் எதானும் பண்ணறியாம்மா?” “அதெல்லாம் இல்ல சார்...! உங்க கமன்ட்ஸுக்கு ரொம்ப நன்றி...” விஜி அந்தப் பத்திரிகைத்தாளை அவர்களிடமிருந்தெல்லாமும் வாங்கிக் கவனமாக நான்கு பிரதிகள் கத்தரித்து வைத்துக் கொள்கிறாள். ஒன்றை எடுத்துக் கொண்டு பேராசிரியை வீட்டுக்குச் செல்கிறாள். பேராசிரியை கண்ணாடியைப் போட்டுக் கொண்டு முழுதும் படித்து முடிக்கும்வரை, அறையில் உள்ள அலமாரிப் புத்தகங்கள், ஜப்பானிய ஓவியம், தொலைக்காட்சி செட் என்று ஆராய்ந்து பொழுதைத் தள்ளுகிறாள். சாந்திதேவி கண்ணாடியைக் கழற்றும்போது ஆவல் துடிக்க அவள் முகத்தைப் பார்க்கிறாள். “வெல்... நீ எழுதியதை அப்படியே போட்டிருக்காங்களா, எடிட் பண்ணி, மாத்திருக்காங்களா?...” விஜியின் ஆவல் அப்படியே விழுந்து உயிரை விடுகிறது. அவளால் உடனே எந்த மறுமொழியையும் கூறமுடியவில்லை. “இல்ல, இவங்களுக்கு நான் இரண்டு மூன்று கட்டுரை எழுதியிருக்கிறேன். கடிதமும் எழுதியிருக்கிறேன். ரொம்பச் சுருக்கி, சிதைத்துத்தான் போட்டாங்க. அஃப்கோர்ஸ், உனக்கு உங்கப்பா, ஹஸ்பென்ட் வீட்டு பாக்கிங் இருக்கில்ல?” ‘சீ!’ என்று தோன்றுகிறது, விஜி அடக்கிக் கொள்கிறாள். அவளும் சமாளித்துக் கொண்டு புன்னகை செய்கிறாள். “...ஸோ, யூ வில் ஷைன் ஆஸ் எ ஜர்னலிஸ்ட்!” விஜிக்குக் கத்த வேண்டும் போலிருக்கிறது. ஜர்னலிஸ்ட்! நூறு விஷயம் பார்த்துவிட்டுக் கூலிக்கு மாரடிப்பதுபோல் வெள்ளைத் தாளில் கறுப்பாக வாந்தியெடுத்துவிட்டு உடனே மறந்து போகும் தொழில்! “எனக்கு ஜர்னலிஸ்ட் ஆகும் தொழிலில் ஆசையில்லை. ஒரு வகையில் இந்த பப்ளிஸிட்டி ஆசையே நமது நாட்டில் சாபக்கேடாகி விட்டது! எங்க ஊர்ப்பக்கம் ஐந்தாறு வருடம் முன்பு கடுமையான பஞ்சம் வந்து, மக்கள் மிகுந்த கஷ்டப்பட்டார்கள். அப்போது பெரிய காமிராக்காரர்களும், பத்திரிகைக்காரர்களும் கார்களைப் போட்டுக் கொண்டு வந்து பேட்டிகள் கண்டு பத்தி பத்தியாக எழுதினார்கள். அதற்கு மேல் எதுவும் நடக்கவில்லை. என் அப்பா சொன்னார், இந்த பப்ளிசிட்டி பணத்துக்கு இரண்டு கிணறுகள் தோண்டி இருக்கலாமென்று!” “பின் நீயும் அதற்கு ஆசைப்பட்டுத்தானே பத்திரிகையில் எழுதியிருக்கிறாய், விஜி?” “இல்லை. இந்த அநியாயத்தை வெளி உலகுக்குத் தெரிவிக்க ஒரு கருவியாகப் பயன்படுத்தியிருக்கிறேன். இதன் எதிரொலியை நான் எதிர்பார்க்கிறேன்...” என்று கூறுகிறாள். அவள் நம்பிக்கை பொய்க்கவில்லை. அந்தக் கட்டுரை பலர் கண்களில் படுகிறது. ஒரு வாரத்துக்குள் கற்றையாகக் கடிதங்கள் சேர்ந்துவிட்டன. எல்லாம் நாளிதழிலிருந்து அனுப்பப் பெற்றவை. அவற்றில் ஒன்று, சமுதாய சேவையில் குழந்தை நலம் என்ற பிரிவில் பழுத்த அநுபவம் வாய்ந்தவராகப் புகழ்பெற்ற ஒரு பெண்மணியிடமிருந்து வந்திருந்தது. வடநாட்டைச் சேர்ந்த அவர், சென்னையில் தங்கியிருந்தாலும், பல மாதங்கள் பம்பாயிலும் இருப்பார். அவர் அந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு, வரப்போகும் குழந்தைகள் ஆண்டை ஒட்டி, திட்டங்கள் தீட்டுவதற்கு முன்னோடியாக ஒரு குழு அமைக்கப் போவதாகவும், கட்டுரையில் வந்த விவரங்கள் தமது கருத்தைக் கவர்ந்திருப்பதாகவும், தம்மைச் சந்திக்க இயலுமா என்றும் கோரியிருந்தார். விஜி உடனே சென்று அவரைச் சந்திக்கிறாள். பிரமிளா தாயிக்கு அவளுடைய தந்தையைக் கூடத் தெரிந்திருக்கிறது. “மிக மகிழ்ச்சி விஜி, உன்னை நான் எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைக்கிறேன். பம்பாயில் இதற்காக ஒரு மாநாடுபோல் கூட்ட இருக்கிறோம். நீ அவசியம் வரவேண்டும். இந்தப் பிரச்னையை ஆராய ஒரு கமிஷன் வைக்க வேண்டும் என்று கோருவோம். நிச்சயமாக நாம் செயலாற்றினால் பிரச்னைக்கு விமோசனம் வரும்!” என்று சொல்கிறாள். “இருபதாயிரத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் என்றால் விட்டுவிட முடியாது. வேலை நேரம் குறைய சத்துணவு, கல்வி இவற்றுக்கு ஏற்பாடு செய்ய, கோரிக்கை விடுப்போம்!” என்றெல்லாம் பேசியதும், விஜி ஆகாயத்தில் மிதப்பதாக உணருகிறாள். தன்னாலும் ஓர் செயலைச் செய்யத் தூண்ட முடியும் என்ற தன்னம்பிக்கை எத்துணை இனிமையானது! இந்தக் கிளர்ச்சியில், அவளுடைய கட்டுரை, சம்பந்தப்பட்ட தொழிலதிபர்களைக் கவர்ந்து, அவர்கள் பத்திரிகைக்காரர் பலரை அழைத்து, அந்தக் கடுமையான தொனிக்கு மாற்றாக, மறுப்புக் கட்டுரை எழுதச் சொல்லி பரவலாக அது வெளியானதும் கூட அவளைப் பாதிக்கவில்லை. வைகாசி இறுதியில் அவள் சென்னை புறப்பட்டு வந்தாள். ஆனி முழுதும் ஓடி ஆடியும் பிறந்துவிட்டது. அன்று பிரமிளா தாயின் வீட்டுக்குச் சென்று அவள் திரும்பி வருகையில் ஒரே ஊமைப் புழுக்கமாக இருக்கிறது. வீடு திரும்புகையில் பகல் ஒன்றரை மணி இருக்கும். வாயில் முன் அழிவராந்தாவில் ஆறுமுகநேரியிலிருந்து வந்திருக்கும் சித்தியின் தந்தை அமர்ந்து வெற்றிலை போடுகிறார். சித்தப்பாவும் இருக்கிறார். “எங்கம்மா போயி வர, இந்த வெயிலில?” “சில்ட்ரன் இயர் வருதில்ல? அதுக்குன்னு ஒரு கமிட்டி முன்னோடியாப் போட்டுத் திட்டங்களைப் பற்றி ஆலோசனை செய்யறாங்க. அது சம்மந்தமாக நானும் உதவணும்னு பிரமிளா தாயி கேட்டாங்க. அவங்க ஆபீசுக்குப் போயிட்டு வரேன்... எப்ப வந்தீஙக் மாமா? ஊருல எல்லாம் சுகமா?” “எல்லாம் சுகம்...” என்று ஒரே வார்த்தையில் மாமா வெற்றிலைத் தாம்பூலத்தை வாயில் வைத்துக் கொண்டு பதிலளிக்கிறார். “அத்தையைக் கூட்டிட்டு வந்திருக்கியளா?” “இல்லம்மா. நாமட்டும்தான் இப்படி வந்தேன்... விஜி உள்ளே சென்று சாப்பிட அமருகிறாள். சின்னம்மா இருவரிடமும் ஏதோ மாறுதல் வந்துவிட்டாற் போல் இருக்கிறது. சொர்ணம் பரிமாறிக் கொண்டே மெதுவாக, “இங்கே இந்த ஆபீசுக்கெல்லாம் போகணும்னுதான் தங்கியிருக்கியா விஜி?” என்று கேட்கிறாள். விஜி சோற்றைப் பிசைந்து கொண்டிருப்பவள் நிமிர்ந்து பார்க்கிறாள். “ஆமாம்... ஏன் சின்னம்மா?” “இல்ல, உன் மாப்பிள வீட்டில ஒண்ணும் சொல்ல யோசிச்சிட்டிருந்தம்...” “அவங்க சொல்றதுக்கு ஒண்ணுமில்ல. சொன்னாலும் நான் முன் வச்ச காலைப் பின்னிழுக்கமாட்டேன்...” அவள் பொருட்படுத்தாததோர் அலட்சியத்துடன் கூறிவிட்டுச் சாப்பாட்டை முடித்துக் கொள்கிறாள். “அவா பேப்பரில மறுப்பு எழுதியிருக்காளாமில்ல?...” சித்தப்பா அவளிடம் வந்து கேட்கிறார். “ஆமாம், முழுப்பூசணிக்காயைச் சோத்தில் மறைக்கும் விவகாரம். குத்தமுள்ள நெஞ்சு குறுகுறுங்குது...” “அதுக்கில்ல விஜி, மாமா வந்து எதோ சொல்கிறார். எங்களுக்கெல்லாம் கவலையாயிருக்கு... அதனால...” என்று நிறுத்துகிறார். “என்ன...?” “வீட்டில், ஊரில் பிழைக்க வழியில்லேன்னு நாம் கூடத்தான் கடைக்குப் பையன்களை அங்கிருந்து கூட்டி வந்திருக்கிறோம். அதத் தப்புன்னு சொல்ல முடியுமா? பெத்தவங்க அனுப்புறா, பிழைக்க வருது தீப்பெட்டி ஆபீசில... இதுக்காக நீ அவங்களப் பகச்சிக்கிடலாமா?... இப்ப மாமா சொல்றா, மாப்பிள்ளைக்கு வேற தாவில பெண் பார்க்கிறதாக...” குப்பென்று செவிப்பறையில் எதோ மோதிவிட்டாற் போன்று அதிர்ச்சியாக இருக்கிறது. மறுகணம் சமாளிக்கிறாள். “அப்படியா?” நிதானமாக அவள் கேட்பது சின்னம்மாவைத் திகைக்கச் செய்கிறது. “என்னம்மா சொல்றே? அவங்க எதுக்காக வேற பொண்ணு பாக்கணும்? உன்ன விலக்கணும்னு அவங்க எதுக்காக நினைக்கிறாங்க? நாங்க விடுவமா? பழைய காலத்துல இஷ்டத்துக்குப் பொண்ணு கட்டினா! அது சரியா?” என்று உள்ளே வருகிறார் சிற்றப்பன். “அவர் என்னை விலக்கிட்டார்னு ஏன் நினைக்கிறிய? நான் தான் அவரை விலக்கிட்டேன்னு வச்சிக்குங்க!” படிப்பு விபரீதத்துக்குப் பாய்ந்துவிடும் என்று அவர்கள் அதுகாறும் கருதியிருக்கவில்லை. “பொம்பிளப் புள்ளக்கு என்னலே இன்னும் படிப்பு? சும்மாப் படிச்சிட்டு?” என்று ஒரு சமயம் அம்மா சொன்னாள். விஜி படித்த காரணத்தினால்தான் கணவன் வீட்டாரை உதாசீனம் செய்கிறாளா? ஒருகால் மாமியார் நாத்தி இல்லாமல் தனியாக இருக்கவேண்டும் என்று கோரி மாப்பிள்ளை இடம் கொடுக்கவில்லையா? “ஏம்மா, விஜி, உனக்கு விவேகமாயிருக்கத் தெரியும்னு நினைச்சிருந்தோம் ஊருல பலதும் பேச எதுக்கும்மா இடம் கொடுக்கணும்?” “சித்தப்பா, ஊரில் பலதும் பேசுவான்னு நான் ஒரு காரியம் செய்ய முடியுமா? விவேகம் இருக்கிறதாலதான் கண்ணியமாக வந்திட்டேன்...” “அப்ப... எல்லாம் நெசந்தானாம்மா?” அவள் மீது அடங்காப் பெருமை கொண்டிருந்த அவருக்கே அவள் உறுதி கண்டு அதிர்ச்சியாக இருக்கிறது. “எல்லாம்னா என்ன? ஃபாக்டரி விஷயத்தில் நான் தலையிடக் கூடாது. இப்ப நீங்க கடைப் பையன்கள் கூட்டி வந்திருக்கிறீங்க. இங்கே முன்ன வேலை செஞ்சானே காளி, அவன் சொந்தமா இப்ப வியாபாரம் செய்யிறான். இதுபோல இல்லை அது. அந்தக் குழந்தைகளைப் பார்த்து, நான் வேறாளாக இருந்தாலே ஏற்று நியாயம் கேட்கப் போவேன். இப்போது பாத்தியப்பட்டவள் - கேட்டேன். எனக்கு எதற்கும் உரிமையில்லே. அடிமைபோல் கிடக்கவேணும் என்றார். அடிமையாக இருக்க வேறு ஆள் பார்க்கிறாங்க...” “உன் நடத்தையிலல்ல அபாண்டமாப் பேச்சு வருது? மாரிசாமி, அவன் இவன்னு கூலிப்பயங்ககூட நடக்கிறதா கேவலமாப் பேசுறாங்களாம் ஊருல!” அவள் முகம் இரத்தமாகச் சிவக்கிறது. “என்ன அபாண்டம்? யார் பேசினாங்களாம். இப்படி மாரிசாமி காதில் பட்டாக் கிழிச்சிப் போடுவான்!” “பொறி விழுந்து கூரைப் பத்திக்கிது. எது முதல்ல பத்திக்கிது, எப்படிப் பத்திக்கிச்சின்னு சொல்ல முடியுமா விஜி? மாரிசாமிங்கறவ அடிக்கடி உங்க வீட்டுக்கு வருவானா?” “பொய்யி! அவனுக்கு எங்க வீடு கறுப்பா சிவப்பான்னு கூடத் தெரியாது. அவன் பேரில ஏதோ பழிபோட்டு அவங்கதா ஃபாக்டரிய விட்டு நிறுத்தினா. பிறகு அப்பா சொல்லி வேற இடத்தில வேலை வாங்கிக் குடுத்திருக்கா, சித்தப்பா. நீங்க நம்புவீங்களா முதலில்...?” “எனக்கு வேதனையாக இருக்கம்மா. எவ்வளவோ பெருமையாக இருந்தேன். எப்படின்னாலும் நீ ஊருக்குப் போயிடும்மா!...” விஜியின் கண்கள் பனிக்கின்றன. அவளை அதுவரையிலும் ஒருவர் கேவலமாகப் பேசியதில்லை; பள்ளியிலும் கல்லூரியிலும் அவளை எல்லோரும் உயர்வாகவே கொண்டாட உருவாகியிருக்கிறாள். இந்த அபாண்டம் கருக்கரிவாளாக விழுந்து அவள் மென்மை உணர்வுகளைக் கிழிக்கின்றது. உதிரும் கண்ணீர் முத்துக்களை ‘சீ!’ என்று மனசோடு தள்ளிக்கொண்டு துடைத்துக் கொள்கிறாள். கூட்டுக் குஞ்சுகள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
|