உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
28 அந்தக் கிராமத்தில் பள்ளிக்கூடம் விடுமுறையா, விடுமுறையில்லையா என்பதை எப்போதும் கண்டு கொள்வதற்கில்லை. மழை பெய்திருப்பதால் பெற்றோர் காடு கழனி வேலைக்குச் சென்று விடுவார்கள். பெரிய குழந்தைகள் தொழிற்சாலைக்குச் சென்று விடுகின்றனர். எஞ்சியுள்ள, ஐந்து பிராயம், நான்கு பிராயங்கள், கைக் குழந்தைகளே அதிகமானவர். பெரும்பாலோருக்கு வயசு தெரியாது. பிள்ளைகளைப் பள்ளிக்கனுப்ப வேண்டும் என்று சமயம் வாய்க்கும் போதெல்லாம் விஜி சிவகணபதிக்கு உதவி செய்வதுபோல் ஒருமுறை காலையில் குடில்களைச் சுற்றி வந்து திரட்டிச் செல்வாள். இப்போது அதற்கு வாய்ப்பில்லை. பள்ளிக் கூடத்துக்கு ‘அதிகார பூர்வமான’ விடுமுறை! நாயுடுவின் குழந்தைகள் ஒரு துண்டு காகிதம் இல்லாமல் கப்பல் செய்து மிதக்க விட்டுவிட்டார்கள். இன்னும் மழை பெய்கிறது. அன்று முன்னிரவில் கொட்டிய மழை நள்ளிரவுக்குப் பின் ஓய்ந்திருக்கிறது. விஜி குளிருக்கு அடக்கமாக அறைக்குள் படுத்திருக்கிறாள். பொழுது விடிந்து விட்டதா என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. சாலையில் தீப்பெட்டித் தொழிலக வண்டியின் ஒலி கேட்கிறது. அந்தச் சாலையில் வரும் ஒரே வண்டி. முன்பொருமுறை அவள் கணவன் அங்கு வண்டி கொண்டு வந்தான். கோயில் விழாவின்போது அவர்கள் வண்டியில் வந்தார்கள். அவள் கணவன் ஊர் திரும்பியிருப்பானா? பாட்டியின் மரணத்துக்குப் பஞ்சநதம் மாமா வந்தார். அவர் காரில்தான் வந்தார். அவளிடமோ, தந்தையிடமோ பேசவில்லை... அப்போது மயிலேசன் டிசம்பர் பதினைந்து தேதிக்குள் திரும்பி விடுவான் என்று சிற்றப்பாவிடம் சொன்னாராம். தை பிறந்து... வண்டியின் குழலொலி கேட்கிறது. இதை இந்த மக்கள் ‘அலாரம் அடிச்சிட்டான்!’ என்று சொல்கிறார்கள். அலாரம்... மேலும் மேலும் அடிக்கிறான். விஜி எழுந்து சன்னல் வழியே பார்க்கிறாள். வண்டியின் விளக்குவெளிச்சத்தில், எங்கும் தண்ணீர்க் காடாக இருப்பது புலப்படுகிறது. மேடான இவர்கள் வீட்டுக்கு வரும் வழியெல்லாம் நீர்ப் பாயல்... அந்த ஒளியை ஏந்திக் கொண்டு மின்னிக்காட்டுகிறது. இவள் வெளியே வருமுன் மாரிசாமி விந்தி விந்திக் கொண்டு படியிறங்கிச் செல்கிறான். செவந்தி போர்த்துக் கொண்டு படியில் நிற்கிறாள். குரல்கள் உடைத்து சிதறிவிட்ட வளையல் துண்டுகளைப் போல் விஜியின் செவிகளில் ஒலிக்கின்றன. “இந்த வெள்ளக் காட்டுல பிள்ளகளை அனுப்பாதிய?...” “நேத்து ஓடத் தண்ணி வடிஞ்சி வர எந்நேரமாச்சி?” “ராவு இவம் போகாம வண்டிய பெரிய பட்டில நிப்பாட்டி வச்சிருப்பா!...” “வாணாவா? மழயானா என்ன? அந்தப் புள்ளய கொட்டடிக்குள்ளாற பதனமாத்தான இருக்குதுங்க?” “மழ, காத்துன்னு பாத்தா தொழிலாளிங்களுக்கு வகுறு இருக்கல்ல? அனுப்ப மாட்டம்னா, அவுங்க வேற தாவில ஆளக் கொண்டிட்டு வந்திட்டா?...” யார் யார் குரல்களென்று புரியாவிட்டாலும், நாயுடு சிவகணபதி, பெரிய குடும்பன், எல்லாரும் இருப்பது புலனாகிறது. “மாரிசாமி! இருட்டு வெளுத்து, பொழுது விடிந்த பிறகு பார்க்கலாம்னு சொல்லு!” என்று விஜி கத்துகிறாள். இதற்குள் பஸ்ஸிலிருந்து தொடர்ந்து ஒலி வருகிறது. “புள்ளியளுக்கு ஒருநா கூலி குறஞ்சா நீங்க குடுப்பியளா? பெரியபட்டிப் புள்ளிய போகல? கூடமங்கலத்துப் புள்ளிய போகல? அதுங்க போறப்ப நமக்கென்ன? இம்புட்டுத் தூரம் ரோடு போட்டு புள்ளியளக் கூட்டிப்போசு ஆளுவச்சிச் சம்பளம் குடுக்கிறவ, ஓடயில கடாசிடுவாங்களா என்ன?” குடும்பனின் குரல் போலிருக்கிறது. இதற்குள் யாரோ பஸ்ஸிலிருந்து இறங்கிச் செல்கிறான். “என்ன தகராறு?...” குரல் பிசுறலுடன் ஒலிக்கிறது. “மம்முட்டியா இல்லியா?” “புள்ளியள உசுப்பப் போனவ வரல இன்னும். இந்த மழயில ஓடக்கடந்து எப்பிடியய்யா போவிய?” என்று மாரிசாமி கேட்கிறான். “ஓடயில தண்ணி ஓடுறப்ப விடுவமா? பாத்துத்தா நின்னு போவம். வடியிற சமயம் பாத்துக் கடந்திடுவம்...” என்று ஆத்திரமாக அவன் பதில் கொடுக்கிறான். “அதுதான். பொழுது வெள்ளென விடிஞ்சி கூட்டிட்டுப் போங்கன்னு விஜிம்மா சொல்றாங்க...” “பொழுது விடியக் காத்திருக்கிற நேரத்தில மழ ஊத்திச்சின்னா? இப்ப மழை இல்ல. எல்லாம் வாங்க!” “மானம் பொத்திட்டாப்ப, ஊத்திருக்கு. வூட்டுக்குள்ளாற காஞ்ச எடம் ரவயில்ல...” என்று ஒரு பெண் குரல் ஒலிக்கிறது. “தீட்டி ஆபீசில கம்முனு உக்காந்து புள்ளங்க பாதுகாப்பா இருக்கிறது. இந்தாளுக்கு எரிச்சலாயிருக்கு. எகிறிக் குதிக்கிறா...” “குடும்பனாரே, வார்த்தை தடிக்கவேணாம்...” “பின்ன என்னடா நீ? காலச் சாச்சிட்டு எதுக்கு இங்கிட்டு வார? எங்கிட்டுப் போனாலும் தகராறு! நாங்க பெத்த பிள்ளியள நாங்க அனுப்பறம், சாவ அடிக்கிறம். உனக்கென்ன வந்திச்சி இதில?” தண்ணீரில் கால்கள் அளைந்துவரும் சிலுங் சிலுங்கென்ற ஓசையுடன் ஈசல் கூட்டம் போல் சிறுவர் சிறுமியர் வருகின்றனர். “ராசாத்தி! சிட்ட சில்லுப்பொட்டி பதனமா வச்சிருக்கியா? ஏலே காத்தமுத்து? தங்கச்சிய பதனமாப் பாத்துக்க! அங்ஙன இங்ஙன விட்டிராதக் கூட்டிட்டுச் சோறுண்ணுக்க!” “நாச்சி, குறும்புத்தனம் பண்ணாத... சோறு நல்லரசம் ஊத்திக் கலந்து வச்சிருக்கே. கொட்டிப்புடாத...” “பராக்குப் பாக்காம குச்சியடுக்கிக்குடு! கட்ட கொறயக் கூடாது!” மாரிசாமி தோல்வியடைந்து வருகிறான். அறிவுரை கூறும் தாய்மார் அங்கேயே நிற்கின்றனர். இடுப்புக் குழந்தைகளில் ஏதோ ஒன்று அழுகிறது. மம்முட்டியான் முன்னே டார்ச் அடித்து ஒளிகாட்டிச் கொண்டு செல்கிறான். அழகாயியின் கன்னங்கள் தேய்ந்து கழுத்தெலும்பு துருத்தியிருப்பது புலனாகிறது. மின்னல் வெட்டினாற்போல் உணர்வு துணுக்குறுகிறது. வண்டியில எல்லோரும் ஏறிக்கொள்கின்றனர். எப்போதும் ஓட்டுபவன் குழந்தைகள் ஏறுமுன் வண்டியைத் திருப்பிக் கொண்டிருப்பான். இன்று பின் செலுத்தி வட்டமடிக்கையில், இறுதியாக வெளிச்சத்தை வீசி, அங்கு நிற்கும் பெற்றோரிடம் விடை பெற்றுக் கொண்டாற் போலிருக்கிறது. அப்போது விழுந்த வெளிச்சம் விஜியின் மீதுகூடத் தேய்ந்த கதிரினால் தொட்டுக் காட்டிவிட்டு, தூற்றல் பொடிப் பொடியாக விழுந்து கொண்டிருப்பதையும் உணர்த்திவிட்டு நகருகிறது. சளக் சளக்கென்று குழிகளில் தேங்கிய நீர் எங்களுக்கு எம்மாத்திரம் என்று கேட்டுக் கொண்டு செல்கிறது. மார்கழிக் குளிரோ, கார்த்திகை மழையோ எங்களை எதுவும் செய்துவிட முடியாதென்று அறைகூவிக் கொண்டு மறைகிறது. கூட்டுக் குஞ்சுகள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
|