உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
29 அந்தப் பெரிய ஊர்தியின் வெளிச்சம் சாலையில் பாய் விரிக்கையில் ராசாத்தி ஓடையில் தண்ணீர் இரு கரையும் புரள மிக வேகமாக ஓடிக் கொண்டிருப்பது தெரிகிறது. பொழுது நீர்பட்ட கண் மையாய்க் கரையக் கரைய, கூட நாதர் கோயிலின் பின்னே காலம் காலமாக வேரூன்றி, விழுதுகளுடன் நிலைத்து நின்றதோர் ஆலமரத்தை, நீர் அணைத்துத் தழுவிக் கொண்டு செல்லப் பெருகியிருப்பதையும் காண முடிகிறது. அங்கிருந்து ஐம்பது கஜம் தொலைவில் அரசனாறு ஓடைப் பெண்ணைத் தழுவுவதுபோல் வரவேற்றுக் கொள்கிறது. இந்த சங்கமத்துக்குச் சாட்சியாக நிற்கும் கூடநாதர் கோயில் இப்போதுதான் தனது பெயருக்குரிய கௌரவத்தை நிலை நாட்டுவதுபோல் விளங்குகிறது. இத்தனை நேரம் வண்டிக்குள் அமர்ந்திருந்த ஓட்டுனன், “மழை விட்டிருக்கு. மேத்தண்ணி ஓடிட்டா வடிஞ்சிடும்” என்று கூறிக் கொண்டு தன் பக்கக் கதவைத் திறந்துகொண்டு இறங்குகிறான். வண்டியைச் சாலையின் இடது பக்கம், ஓடையிலிருந்து சில நூறு அடிகளுக்கப்பால் நிறுத்தியிருக்கிறான். சாலையிலிருந்து சிறிது தொலைவில் சாலையின் வாக்கிலே எந்நாளும் மணலாறாக விரிந்து கிடக்கும் அரசனாறு இந்நாள் நீர் பெருகும் ஓடைப் பெண்ணைச் சேர்த்துக்கொண்டு குதிபோட்டு ஓடுகிறது. ஓட்டுனன் இறங்கி விட்டால், நடத்துனனான ஏசன்டு வண்டிக்குள் இருப்பானா? “சண்ட கிண்ட போட்டு லகள பண்ணாம உக்கார்ந்திருங்க!” என்று ஓர் ஆணையை விதித்துவிட்டு இறங்கிச் செல்கிறான். இருவருமாக சாலையின் வலதுபக்கம் தள்ளி, அப்பால் மேட்டுப்பாங்கான இடத்தில் குந்தி, ஓடையைப் பார்த்துக் கொண்டு பீடி புகைக்கத் தொடங்குகின்றனர். வண்டிச் சன்னல்களில் கண்ணாடிகள் பொருத்தப்பட்டு மூடப் பெற்றிருந்தாலும், சில இடங்களின் சந்து வழியாக நீர் உள்ளே ஒழுகியதால் நீண்ட வரிசையில் உட்கார்ந்திருக்கும் சின்னப்பட்டிச் சிறுவர் சிறுமியர் சிலர்மீது சில்லென்றும் படுகிறது. பேராச்சியும் அழகாயியும் எழுந்துசென்று கடைசி வரிசை ஓரத்தில் நெருங்கிக் கொள்ளப் போகிறார்கள். காத்தமுத்துவும் தொடர்ந்து செல்கிறான். தங்கராசு பெரியபட்டிப் பையன் ஆறாவது படித்தவன். அவனுக்கு இந்த அழுக்குப் பயல் தன்னருகில் அமருவது பிடிக்கவில்லை. அவனுடைய அக்கா மங்கையர்க்கரசி அவனை எட்டிப் போகும்படி வெருட்டுகிறாள். மோதலில் தான் எட்டாமலிருக்க, தங்கராசு வண்டிக் கதவைத் திறந்துகொண்டு கீழே குதிக்கிறான். தொடர்ந்து பலரும் கீழே இறங்கி ஓடிப்பிடிக்கின்றனர். தொலைவில் குந்தியிருக்கும் ஏசன்டு இதைப் பார்த்து விடுகிறான். ஓடி வருகிறான். “எல்லாம் உள்ளாறபோங்க போங்க!” என்று விரட்டுகிறான். உள்ளே எல்லோரும் அமர்ந்ததும் கதவை மூடித் திறக்க முடியாமல் தாழ்போட்டு விடுகிறான். மழை நன்றாக விட்டிருக்கிறது. கீழ்த் திசையில் வெள்ளைத் துணியைப் பிழிந்து காயப்போட்டாற்போன்று வெளுப்பு பரவி வருகிறது. மரக்கிளையும் செத்தையும் சருகுமாக அடித்துவரும் சிவந்த நீர் ஒரே பாய்ச்சல் ஆவேசத்துடன் ஆற்றில் கலக்கச் செல்கிறது. புரண்டு வரும் அந்த ஓடை வெள்ளத்தில் தலையைத் தூக்கிக் கொண்டு ஒரு பாம்பும் வருகிறது. “தலை தூக்கிட்டு வருது, நல்ல பாம்பு!” “மழவுட்டுப் போச்சி. ஒம்பது பத்துக்குள்ள பட்டுனு தண்ணி வடிஞ்சிடும். அடிச்சிட்டுப் போயிடலாம்...” வெளியே கதவைத் தாழிட்டுவிட்டதால், காத்தமுத்துவுக்கு ஆத்திரமாக இருக்கிறது.
“ஏசன்டுக் கொத்தா, இங்கிட்டு வாடா, பூசக்கிப் போறே பொதி செமக்க வாடா, மன்னாருசாமி மம்முட்டிச்சாமி மண்ணைத்தின்னுடா மருதக்கிப் போடா...” என்று பாட்டுப் பாடுகிறான், நடுவில் நின்று ஆடிக் கொண்டு, பாட்டுக் கேட்ட வேடிக்கையில் சிலர் கொண்டாட்டமாகச் சிரிக்கின்றனர். ‘மன்னாரு சாமி மண்ணத் தின்னுடா’ என்று குரங்காட்டம் ஆடிப் பலரும் குதிக்கத் தொடங்குகின்றனர். ஒரு இளங்குரல் “அண்ணாச்சி அந்த மானேசருக்கு ஒரு பாட்டுப் பாடு!” என்று கோருகிறது. காத்தமுத்துவுக்குக் கருவம் இளஞ்சிவப்பாக முகத்தில் மின்னுகிறது. “ம்...” என்று சுருதி கூட்டுகிறான்.
“மானேசர் தடியன் மாட்டுக்குக் கொம்பு அப்பமாட்டு கன்னம்...” என்று கன்னங்களைக் காற்றடக்கி உப்பச் செய்கிறான். அத்தனை குரல்களும் சேர்ந்து சிரிக்கின்றன.
“அப்ப மாட்டுக் கன்னம் - ஆட்டுக் கொளுப்பு-” ஹோ என்ற சிரிப்பு வண்டிக்குள் அலை மோதுகிறது. சிரித்துச் சிரித்து அலைகள் ஓயுமுன், ஓர் பேரோசையாகப் பஸ்ஸே சிரித்துக் கொண்டு நகரத் தொடங்குகிறது. பஸ், பூட்டிய கதவுடனான வண்டி, மாடில்லாமல், மனிதனில்லாமல், சக்கரம் சுழற்றாமல் நகருவதை உணர்ந்து வண்டிக்குள்ளிருக்கும் இளசுகள் இன்னதென்று புரியாமல் நோக்குகின்றனர். அழகாயிதான் பின்னிருந்தும் ஆற்றுப் பக்கமிருந்தும் தண்ணீர் வந்து மோதுவதைப் பார்த்துக் கூச்சலிடுகிறாள்... “ஐயோ, தண்ணி. தண்ணி வருது ஆத்தாடி! எம்புட்டுத் தண்ணி!” பீதி இளம் முகங்களைக் கவ்வுகிறது. “நாங்க ஏசன்டையாவ ஒண்ணும் சொல்லல... கதவு தெறங்க! கதவு! கதவு...!” காத்தமுத்து அடித்துப் பிடித்துக்கொண்டு கதவுப் பூட்டைத் திறக்கப் போராடுகிறான். தண்ணீர்... தண்ணீருக்குள் ஓடைக்குள் பஸ் இழுத்துச் செல்லப்படுகிறது ஒருவர் மீது ஒருவர் விழுகின்றனர். பற்றிக் கொள்கின்றனர். மேல் சாதி, கீழ் சாதி என்ற உணர்வுகள் அடிபட்டுப் போக தலைகள் இற்றுவிழ, உயிர் தப்பும் ஒரே நோக்கில் அந்த இளம் பிஞ்சுகளும், பூ மொட்டுக்களும் அபயக் குரலெழுப்புகின்றனர். ஆனால் அந்தக் குரல்களை அமுக்கிக் கொண்டு பேரலை அந்த ஊர்தியை ஓடை வெள்ளத்தில் தள்ளிவிடுகிறது. ஓடையில் பஸ் அமுங்கியும், அமுங்காமலும் போகும் போதுதான் மன்னாருவின் கண்களில் அது சாலையில் நிறுத்தி வைத்த வண்டி என்று மின்னல் வெட்டுகிறது. சாலை முழுதும் பிரளயம். ஆற்றுக்கும் சாலைக்குமிடையே இருந்த இடைவெளி எப்படி மறைந்தது? உள்ளிருக்கும் பிஞ்சுகள் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு பஸ்ஸின் கூரைக்குத் தப்பப் போராடுகின்றனர். காத்தமுத்து ஒரு வழி கண்டுவிட்டான். இடுக்குவழியே மேலே தொற்றி ஏறுகிறான். அந்தப் பேய்ச்சக்திப் போராட்டத்தில் அவனுக்கு எங்கிருந்து வலிமை வந்ததோ. சன்னலுக்கு வெளியே நீட்டிய கைகளை இழுத்துவிடுகிறான். “தங்கச்சியப் பதனமாப் பாத்துக்க... வடிவு... வடிவு... இதோ... பச்ச... ஏ புள்ள... கெட்டிமாப் புடிச்சிக்க...” பஸ்ஸை ஆற்றுக்குக் கொண்டு செல்ல முடியாமல், உள்ளே நீர் புகுத்துவிட, அது இரையுண்ட உயிர்ப் பிராணியாகத் தடுமாறுகிறது. கூச்சல்கள், பீதிகள், ஆசைகள், அற்ப நேரக்களியாட்டங்கள், எல்லாம் மடிந்துவிட, வெறும் ஈயெறும்பின் கூட்டங்களாக, அந்தப் பெரு வெள்ளத்தில் எதிர்ப்புச் சக்தி ஓய்ந்துவிட அவர்கள் ஒடுங்குகின்றனர். ஆனால் காத்தமுத்து பஸ்ஸின் கூரையில் வடிவை ஏற்றி விட்டான். பெரியபட்டிச் சிவப்பியை ஏற்றியிருக்கிறான். மீனம்மா ஒடுக்கிக்கொண்டு தொத்தியிருக்கிறாள். அங்கே, பெரிய ஆலமரக் கிளை தாழ்ந்து இருக்கிறது. அதை அவன் காட்ட அவர்கள் முழுகியும், முழுகாமலும் இருக்கும் கிளையைப் பற்றிக்கொள்கின்றனர். காத்தமுத்து தண்ணீரில் முழுகி, வடிவைக் கிளைக்கு மாற்றுகிறான். சிவப்பி, மீனம்மா, பேராச்சி... நடராசு... ஆலமரத்துக்கிளை அபயம் அளிக்கிறது. கிளையிலிருந்து பெருமரத்துக்கு நகர்ந்து ஒட்டிக்கொண்டு அவன் மேலே போகிறான். தங்கச்சி குளிர் ஒடுக்க, கிளையோடு ஒட்டிக் கொண்டிருக்கிறது. கருணை இல்லமாகத் திகழும் ஆலமரத்திலிருந்து பார்க்கையில்... சாமி! கோயிலும்கூட தெப்பத்தில் மிதப்பது போல் காட்சியளிக்கிறது. அதோ... பஸ் அரசனாற்றின் மடியில் சென்று சாய்ந்திருக்கிறது. “தங்கச்சி, கெட்டியாப் புடிச்சிக்க!” நெஞ்சும் நினைவும் உடலும் மரமும் ஒன்றாக, ஒரே நோக்காக உயிர் பிழைக்கும் நம்பிக்கைத் திரியை எரியச் செய்கின்றன. அப்போது. “அண்ணே...” என்று சிவப்பியும் மீனம்மாளும் கத்துகின்றனர். கண்கள் மருண்டு நிலைக்கின்றன. ஆலமரத்தின் மேலே, உச்சியை நோக்கி, தலை தூக்கிக் கொண்டு ஓர் பாம்பு... முடிச்சோடு முடிச்சாகச் சிறுமிகள் ஒருவரோடொருவர் நெருங்குகின்றனர். முரட்டுத்தனம் மாறாத காத்தமுத்து, மேலேறிவரும் நாகத்தைப் பார்த்துக்கொண்டு சும்மாயிருக்கிறான். “பயப்படாதிய, அதும் தண்ணிக்குப் பயந்து வந்திருக்கு, தண்ணிப் பாம்பில்ல...” இறுக்கிப் பிடித்து ஒட்டிக்கொண்டு அவர்கள் அந்த மரத்திலே பிழைத்திருக்கின்றனர். கூட்டுக் குஞ்சுகள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
|