உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
3 பெரியபட்டியிலிருந்து வரும் சாலையின் இடதுபுறத்தில் உட்தள்ளி முதலில் தெரியும் ஓட்டுக் கட்டிடம் தான் பஞ்சாயத்துத் துவக்கப் பள்ளி. அதற்கு முன் துப்புரவாகக் காணப்படும் இடம் விளையாட்டு மைதானம். பள்ளியின் ஓர் பக்கத்தில் அடிகுழாய் இருக்கிறது. பள்ளியை அடுத்து, ஒரு மொட்டைப் புளிய மரம். ஆட்டுக்குக் குழை ஒடித்தே அந்த இளமரம் மொட்டையாகி விட்டது. அந்த மரத்துக்கு நேராக நாலைந்து ஓட்டு வீடுகள் பகலில் சாலையில் வருபவர் கண்களுக்குத் தெரியும். அந்த வீடுகள் பகலில் சாலையில் வருபவர் கண்களுக்குத் தெரியும். அந்த வீடுகள் வரிசையாகத் தெருவென்ற ஒழுங்கைத் தோற்றுவிக்கும் வண்ணம் அமைந்திருக்கவில்லை. நாலைந்து வீடுகளில் ஒன்று பாழடைந்து, பன்றியும், நாயும், சலவைக்காரச் சிங்காரத்தின் கழுதையும் ஒண்டியிருக்க இடமளிக்கிறது. வாத்தியார் சிவகணேசனின் வீடு ஒன்று. அஞ்சல் அலுவலகத்து ரன்னர் பராங்குச நாயுடு ஒரு வீட்டில் குடியிருக்கிறார். இன்னொரு வீடுதான் சாலையிலிருந்தும், பள்ளியிலிருந்தும் பார்க்கப் பளிச்சென்று இருக்கிறது. வீடு நாகரிகமான பக்கத்துக்குப் பார்வையாக இருந்தாலும், இதன் வாயில் அரிசன மக்களின் குடிசைகளைப் பார்த்த வண்ணமே அமைந்திருக்கிறது. பழைய நாளைய ஓட்டுவில்லைக் கூரையமைந்த திண்ணைகள் இரண்டும் சுத்தமாக விளங்குவது தெரிய, முன் வாயிலில் ஒரு மின்விளக்கு எரிகிறது. திண்ணையொன்றில் அந்த இரவு நேரத்தில் யாருக்காகவோ காத்திருப்பது போல் வெள்ளைச் சீலையும், அள்ளிச் செருகிய நரை கண்ட முடியும், ஒரு காலத்தில் பாம்படம் பூண்டதை விளக்கும் காதுகளுமாக ஒரு மூதாட்டி உட்கார்ந்திருக்கிறாள். உட்புறம் தெரியும் நிலைப்படியில், அந்த இரவுச் சூழலின் கனவுக் காட்சி போல் விஜயம் நிற்கிறாள். பழைய நாளைய குறுகிய வாசற்படி தலையில் இடிக்கும் என்பதை எடுத்துக் காட்டிக் கொண்டு சற்றே முன் தள்ளி நிற்கும் அவள், ஆச்சிக்கு இரண்டாம் தலைமுறைக்காரி என்பதும் தெரிகிறது. கத்தரிப்பூ வண்ணத்தில் அகலமாகப் பூக்கரை போட்ட நூல் சேலை உடுத்து, அதற்கிசைந்த எடுப்பான சோளியும் அணிந்து இருக்கும் அவளும் வாயிலில் யாரையோ எதிர்பார்த்திருப்பதாகவே தெரிகிறது. “ஐயாம்மா, இன்னிக்கு மாட்ச் ஃபாக்டரி வண்டி வந்திச்சோ?...” “எல்லாம் ரோட்டில நின்னிட்டுக் கெடந்திச்சிங்க. வந்திருக்கும், நாம உள்ளாற கவனிக்காம இருந்திருப்பம்...” என்று திரும்பிப் பார்க்கும் முதியவள், “அலமேலு கனகாம்பரம் கொண்டாந்து குடுத்தா, அத்த வச்சிக்கல?” என்று கேட்கிறாள். “மல்லிதா வாசனையா வச்சிருக்கிறேனே, அது போதும் ஐயாம்மா!” என்று தலையில் தொங்க விட்டாற் போல் சூடிக் கொண்டிருக்கும் மல்லிகையிலிருந்து ஒன்றை எடுத்து முகர்ந்து பார்க்கிறாள். பெரிய கண்கள், எடுப்பான நாசி, நெற்றி சற்றே குறுகலாக இருப்பது தெரியாமல் கூந்தலைத் தூக்கி வாரிப் பிடரியில் சுருளாகப் புரளும்படி தழையத் தழையப் பின்னல் போட்டிருக்கிறாள். காதுகளில் சிறு தங்கத்தோடும், கழுத்தில் மெல்லிய இழையும், ஒற்றை வளையலும் தான் பொன்னாபரணங்கள். “ஏன் நிக்கிற? உள்ளாற நாக்காலி இருக்குதே, கொண்டாந்து போட்டிட்டு உக்காந்துக்க...” அப்போது, வாத்தியார் சிவகணேசன் அந்தப் பக்கம் வருகிறார். பெரியபட்டிப் பள்ளியை ஒட்டி அரிசன மாணவர் விடுதி இருக்கிறது. இரவு நேரங்களில் வாத்தியார் விடுதிப் பிள்ளைகளுக்குப் பாடம் கற்பித்து விட்டு, அந்நேரத்தில் திரும்பி வருவார். ஆச்சி வெளியில் உட்கார்ந்திருந்தால் ஏதேனும் பேசாமல் போக மாட்டார். “வணக்கம், விஜிம்மா! நீங்க வந்திருக்கிறீங்கன்னு சாமிநாதன் சொன்னான். பெரியபட்டிக்கு வந்திருக்கிறதா நினைச்சேன். வாங்க! வாங்க!” என்று வரவேற்புரை கூறுகிறார். “மாட்ச் வொர்க்ஸ் பஸ் வந்தாச்சா?” “அத்தையேன் கேக்கறீங்க, விஜிம்மா? நீங்க முதலாளி வீட்டம்மாவாப் போயிட்டீங்க, ஆனா நமக்கு வேண்டியவங்க. மூணரைக்குக் காலம வந்து இதுங்களைக் கூட்டிப் போறான். ஏழரை எட்டரையாகுது திரும்பி வர. இன்னிக்கு ஒம்பதும் ஆயிப் போச்சு. பெரியபட்டி வரயிலும் வந்திருக்கு. பிறகு என்னமோ கெட்டுப் போச்சாம். மம்முட்டியான் தானிருக்கிறானே, பத்திக்கிட்டு வந்திட்டான்.” “காலம மூணரைக்கா வருவாங்க?” “என்ன விஜிம்மா, தெரியாதது போலக் கேக்குறிங்களே? எட்டி இருக்கிற ஊருங்களுக்கு மொதல்ல வண்டி வந்திடும். இப்பிடியே முதல்ல கொண்டாந்து விடுகிறதாத்தா சொல்றா. ஆனா, இருட்டுக்கு முன்ன ஒரு நாள் கூடப் புள்ளங்க வந்ததா நினைப்பு இல்ல...” “முன்ன நா லீவுக்கு வந்திருக்கயில பஸ் வரும் போகும் பார்த்திருக்கிறேன். ஆனா, இவ்வளவுக்குக் கவனிச்சதில்ல. மூணரை மணிக்குன்னா, வேலை எப்ப ஆரம்பிக்கிறாங்க?...” “விஜிம்மா. இதெல்லா உங்க மாப்பிளகிட்டக் கேக்கணும்னு நா தயவா தெரிவிச்சிக்கிறேன். அஞ்சு மணிக்கு ஃபாக்டரில வேலை ஆரம்பிச்சிடுவா. நாலரைக்கேன்னும் சொல்றா... டிமான்ட் அதிகம் இருக்கிறப்ப கூடுதலா வேலை வாங்குறா. சாயங்காலம் ஆறு மணி வரையிலும் வேலன்னு வச்சாக்கூடக் கணக்குப் பாருங்க!” “பதிமூன்று, பதிநாலு மணி நேர வேலையா?...” “அதுதா. மாப்பிள்ளையும் பைக்கில வந்ததாச் சொன்னானே சாமிநாதன்? பெரியபட்டியில இருக்கிறாரா?” “இவ சைவிள எடுத்திட்டு டுர்ருனு வந்திட்டா. மாப்பிள இங்க வந்து கூட்டிட்டுப் போறன்னு சொன்னாராம். அதான் பாத்திட்டு நிக்கிறம். பால் வாங்கி வச்சி, பகடா போட்டு வச்சி...” விஜிக்கு முகம் சிவப்பேறுவது தெரிகிறது. “என்ன ஐயாம்மா, இதெல்லாம் போய்ச் சொல்லிட்டு?” “என்ன சொல்லிப்பிட்டேன் இப்ப, ஊரு ஒலவத்தில இல்லாததை?” என்று பாட்டி முக்காலும் போய் எஞ்சியிருக்கும் ஒன்றிரண்டு பற்கள் தெரியச் சிரிக்கிறாள். மம்முட்டியான் இங்கே விளக்கெரிவது கண்டு வந்து ஒதுங்கி நிற்கிறான். பட்டணத்திலிருந்து சிற்றப்பன் மக்களுடன் விஜி கோடை விடுமுறைக்கு வரும்போதெல்லாம் நடந்து ஆற்றுக்கரை வரையிலும் போவார்கள். இவர்களுக்குச் சொந்தமாகப் பத்து சென்டு நிலம் உண்டு. மழை விழுந்தால் மம்முட்டியானும் மாமனும் தான் இதில் பாடுபட்டு விதைப்பார்கள். விஜியம்மா கபடம் தெரியாமல் அவர்களுடன் ஊர்க்கதை பேசுவாள். அவனும் மற்ற விடலைகளும் ‘வெறுவு’ வேட்டைக்குச் செல்வதைப் பற்றிய கதைகளைச் சுவாரசியமாகக் கேட்பாள். இந்த விஜியம்மா மலையவ்வளவு உயரத்துக்குப் போய், அவர்களுக்குப் படியளக்கும் தீப்பெட்டி ஆபீசு முதலாளியின் பெண்சாதியாகி விட்டாள்... “மம்முட்டியான் தானே? எப்படி இருக்கிற?” என்று விசாரிக்கிறாள் விஜி. “அவனுக்கென்ன? புள்ளங்கள உசுப்பிவிட நாற்பது ரூபாய் சம்பளம். அழவாயியக் கட்டப் போறான்!” “யாரு, இவக்கா மக, சின்னதா இருக்குமே!” “சின்னதென்ன? சமஞ்சி ஒரு வருசமாச்சில்ல? மூணு வருசமாத் தீப்பெட்டி ஆபீசுக்குப் போறாளே?” “இந்த ஊரிலேந்து எத்தினி பேர் போறாங்க?” என்று விஜி வினவுகிறாள். “இந்த ஊரு உருப்படி எல்லாம் இளஞ்சேரன் மாட்ச் வொர்க்ஸுக்குத்தான் போகுதுங்க; முப்பதுக்குக் குறையாது. ஏண்டா, காத்தமுத்துப்பய வரலியே?” “இல்லீங்க வாத்தியாரையா. கவலிப்பாயிருக்கு. மாடசாமி டைவர் மக சடயப் புடிச்சி இளுத்தானாம். ஏசன்டு அடிச்சிட்டான்னு அளவாயி, இன்னும் புள்ளங்கல்லாம் சொல்லுதுங்க...” என்று அவன் விவரிக்கிறான். “ஆரு மாடசாமி, பெரிய வீட்டில் பெரிய இன்ஜின் வண்டி ஓட்டுறான், அவன் மவளா?” என்று கேட்கிறாள் பாட்டி. “ஆமாங்க. வெளுப்பா, துடிப்பா ஒரு புள்ள...” “அவங்கல்லாமா தீப்பெட்டி ஆபீசுக்குப் புள்ளைய அனுப்பறாங்க?” வாத்தியார் குறுக்கிடுகிறார். “அட, துட்டு வந்தா ஆருதா விடுவா? இரத்தினம் பய, பெரியபட்டி முச்சூடும் குடும்பம் குடும்பமா வளச்சிட்டு, பொம்பிளப் புள்ளியள குச்சியடய்க்க, லேபில் ஒட்டன்னு கூட்டுட்டுப் போறா. வயசுப் புள்ளிகள... என்னயென்னவோதாஞ் சொல்லிக்கிறா!” “ஆமா. சமஞ்சிட்டா வீட்ட விட்டு அந்தக் காலத்துல பொம்பிளப் புள்ளிய தலை நீட்டுமா? இப்ப ஆணும் பெண்ணும் பாடுபட்டு உழச்சாலும், அகாத வெல விக்கிது? அதுல மானம், அச்சம், ஈனாயம், ஈனாயமில்லாதது எல்லாம் அவிஞ்சி போவுது.” பாட்டியின் பேச்சுக்கு வாத்தியார் ஒத்துப் போகிறார். “ரொம்ப வாஸ்தவமான பேச்சு ஆச்சிம்மா! இந்தத் தொழிலுக்கு வர்ற முன்னல்லாம் பட்டினி கெடந்தோம். இப்ப அரவயித்துக்கஞ்சி குடிக்கிறமின்னு இந்த மொத்த ஊரிலும் பேசிக்கிறானுவ. பசி இருந்திச்சி; வேல இல்ல; சரி, ஒப்புக்கிறேன். ஆனா இப்ப நாலு வருசமா இந்த ஊரு அசலூருக்கள்ளாமிருந்து மொத்தப் பிள்ளைங்களும் தொழிலுக்குப் போவுதுங்க. என்ன முன்னேறிடிச்சி? என்ன முன்னேறியிருக்காங்கன்னு கேக்குறேன்?” வாத்தியார் விஜிக்குப் புதியவரல்ல. வெண்மை மாறாத வேட்டியும் அரைக்கைச் சட்டையும் மேல் ஒரு துண்டுமாக, ஒல்லியும் சுமாரான உயரமுமாக அவரை அந்த ஊரில் நினைவு தெரிந்த நாளாகப் பார்க்கிறான். சின்னப்பட்டியில் பள்ளி துவங்கப் பெற்ற போது, அவரும் அவருடைய இளம் மனைவியுமாக அங்கே ஆசிரிய தம்பதியாக வந்தார்களாம். அவருடைய மனைவி பார்வதி வெளுப்பாக நிறைய முடியுடன் அழகாக, புளுப்போல் இருப்பாளென்று ஐயாம்மா சொல்வாள். வந்த சுருக்கில் கருவுண்டாகி, பிள்ளை பெற முடியாமல் மருத்துவ வசதி இல்லாமல் இறந்து போனாளாம். அதற்குப் பிறகு இங்கு ஆசிரியர்களாக வந்தவர்கள்தாம் அருள்தாசும், அவன் மனைவியும். அவர்கள் பெரிய பட்டியில் வீடு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். சிவகணபதி சாரை, இது வரையிலும் அறிந்திராததொரு கோணத்தில் பார்க்கிறாள் விஜி. கேள்வியைக் கேட்டுவிட்டு அவரே பதிலையும் கூறிக் கொள்கிறார். “என்ன முன்னேத்தம்? அதே அறியாமை, அதே அடிதடி, சண்டைச் சச்சரவு. தெனமும் பெரியப்பட்டிப் புள்ளங்க, சின்னப்பட்டிப் புள்ளங்க முந்திய இடிச்சாங்க, முழங்கைய இடிச்சாங்கன்னு பஸ்ஸில சண்ட போட்டு அடிச்சிப் போடுதுங்க. இங்க யாருன்னாலும் இதப்பத்திக் கேக்கிறாங்களா? ஆறுமுகத்தின் டீக்கடயில தனிக்கிளாசு வச்சிருக்கிறான். மம்முட்டியான் போனா, தானே எடுத்துக் கழுவி டீ வாங்கிக் குடிச்சிட்டுக் கழுவி வய்க்கிறான்... உண்டா இல்லையா கேளுங்க?” விஜி விழிகள் நிலைக்கப் பார்க்கிறாள். “யாரு, நம்ம ஆறுமுகத்தின் டீக்கடையிலா? இப்பவும் அப்பா அங்கே தங்குவாரு, அங்கேந்து சைகிள் எடுத்திட்டு முன்னெல்லாம் நான் வருவேனே? இதைக் கவனிச்சதில்ல?” “நீங்க இதுக்காவன்னாலும் போயிப் பாருங்க!” ஆச்சிக்கு அந்தப் பேச்சுப் பிடிக்கவில்லை. “வாத்தியாரு இத்தயெல்லாம் எதுக்கு இப்பச் சொல்றிய? ஆதிநாள்ளேந்து காந்தி சொன்னாருன்னு எல்லாரும் அரிசனம் அரிசனம்னுதா தூக்கி வச்சிருக்கா. அததுக்கு ரத்தத்திலே வரணும். நீங்க ஆயிரம் கரடியாக கத்தினாலும் அதெல்லாம் வராது.” பாட்டி இவ்வாறு தீர்க்குமுன் நாய் குலைப்பது கேட்கிறது. இடுப்பில் பிள்ளையுடன் சடச்சிதான். “வாத்தியாரையா, ஆச்சிம்மா, எம் புள்ளயக் கொல செஞ்சி போட்டாங்களோன்னு பயமாயிருக்கு... ஏசன்டு மண்டயில அடிச்சான்னு அந்தவுள்ள பச்ச சொல்லுது...” என்று அழுகிறாள்... வாத்தியாருக்குக் கோபம் வருகிறது. “ஏ அழுவுற? அளுதிட்டாப்பல எல்லாம் ஆயிப் போகுமா? ஒளுங்கா படிச்சிட்டிருந்த பையன். நல்லாப் படிப்பு வந்திட்டிருந்திச்சி. பெரியபட்டி ஸ்கூல்ல சேத்து விடறேன். புஸ்தகம், சாப்பாடு எல்லாம் சர்க்காரு ஏத்துக்குதுன்னு கெஞ்சினே, கேட்டியா? இப்ப எட்டாவது முடிச்சிருப்பா! இந்த மாட்ச் வொர்க் ஏசன்டுகிட்ட அட்வான்ஸ் பணத்தை வாங்கிட்டு, புத்தி சொல்ல வந்த என்ன வெரட்டியடிச்சீங்க, வெத நெல்லுன்னு பாராம அட்வான்சு குடுக்கிறவனுக்கு வித்துப் போடுறிய. அவன் பொறி பொறிக்கிறா; அவுலிடிக்கிறா. இப்ப புள்ள புள்ளன்னு மாயுற! எல்லாம் வருவா. இவனவிட்டா இன்னொரு தீப்பெட்டி ஆபீசு பஸ்ஸில புடிச்சிப் போட்டுப்பா. நா வரேன் ஆச்சி, விஜிம்மா, வாரன்...” வாத்தியார் சொல்லிவிட்டுப் போகிறார். “சரி, மம்முட்டியா எதுக்கு நிக்கிற? காலம புள்ளியள உசுப்பிப் போகணுமில்ல போ!...” விஜி உள்ளே சென்று தான் கழற்றி வைத்திருக்கும் கடிகாரத்தில் மணி பார்க்கிறாள். மணி பத்தே கால். பாட்டி வாசல் விளக்கை அணைத்துக் கதவையும் சாத்துகிறாள். கூட்டுக் குஞ்சுகள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
|