32

     விஜி அந்த ஆறுதல் விழாவுக்குச் செல்லவில்லை. அவளுடைய தந்தையும் சிவகணபதியும் சென்றிருக்கிறார்கள்.

     வீட்டில் அவன் மட்டுமே இருக்கிறாள்.

     கார் வந்து நின்றது தெரியவில்லை. கதவு ஓசைப்படும் போதுதான் அவள் வாயிலுக்கு வருகிறாள்.

     “...வாருங்கள்... வாங்க...”

     ரங்கேசன் அங்கு வருவதை அவள் எதிர்பார்த்திராததால் தயக்கத்தைச் சமாளித்துக் கொள்கிறாள்.

     உள்ளே வந்தவனுக்கு அங்கிருக்கும் ஒரே நாற்காலியைக் காட்டுகிறாள்.

     தான் அறைக்கதவின் பக்கம் நிற்கிறாள்.

     அவன்தான் மெனனத்தைக் கலைக்கிறான்.

     “எனக்கு ரொம்ப நாட்களாக இங்கே வரவேணும், உன்னைப் பார்க்கவேணும் என்று எண்ணம்... அத்தை இறந்த போதுகூட வர முடியாமலாகி விட்டது...”

     அவள் தலையை நிமிர்த்தவில்லை.

     “இந்த ஊர்களிலிருந்து இனி தொழிலுக்கு யாரையும் கூட்டி வரவேண்டாமென்றாகி விட்டது...”

     சட்டென்று நிமிர்ந்து அவனைப் பார்க்கிறாள் விஜி.

     “இந்த ஊரில் இப்போதைக்கு ஏழெட்டுக் குழந்தைகள் கூட உங்களுக்குக் கிடைப்பதற்கில்லை. இன்னும் இரண்டு மூன்று வருஷம் போனால்தான் வேலைக்குக் குழந்தைகள் கிடைப்பார்கள்!”

     “விஜி நடந்ததற்கு நான் சொல்லமுடியாமல் வருத்தப்படுகிறேன். நீ... பத்திரிகையில் எழுதிய கட்டுரையைப் பார்த்தேன். உண்மையில் சிறுதொழில் நிலையில் இந்தத் தீப்பெட்டி உற்பத்தியில் மொத்தத்தில் பாதிக்கு மேல் பங்கு வகிக்கிற தென்றால், இதிலுள்ள போட்டி, மற்றும் பல இடையூறுகளை நீ புரிந்து கொண்டிருப்பாய். வெளிநாட்டுக்காரர் பங்கோடு ஏற்பட்ட யந்திரமயத் தொழிற்சாலையோடு போட்டி போட வேண்டிய நிலை; தொழிலாளர் பற்றாக்குறை எப்போதும் இருக்கிறது. இன்று அதிகமாக வரி கட்டுபவர், இந்த ஸ்மால்ஸ்சேல் செக்டர்காரர்கள்தான். நீ எல்லாவற்றையும் யோசிப்பாய் என்று நினைத்து, உன்னுடன் பேச வந்தேன்...”

     “எனக்கும் நீங்கள் இவ்வளவுக்கு மதிப்புக் கொடுத்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது... நான் ஒன்றும் உங்கள் விரோதியல்ல. குழந்தைகளுக்கு எதிர்காலமில்லாமல் செய்யக்கூடிய தொழிலும், உற்பத்திப் பெருக்கமும், உண்மையில் மகத்தான தேசீய நஷ்டம் என்று சுருதுகிறேன், அண்ணா!”

     “நான் உன் கருத்தை நிச்சயமாக ஒப்புக்கொள்கிறேன் விஜி. நீ... உன்னை மணப்பந்தத்திலிருந்து விடுவித்துக் கொண்டாலும், உன்னை எங்கள் குடும்பத்தவளாகவேதான் கருதுகிறேன். உன்னுடைய எதிர்காலத்திட்டம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால்... எனக்கு உன் நல்வாழ்வில் மிகுந்த அக்கறை உண்டு நீ... டீச்சிங் லைனில் ஈடுபாடுண்டு என்று முன்பு சொன்ன நினைவு, காலேஜில் உனக்கு வேலை காத்திருக்கிறது...”

     அவள் மெல்லிய புன்னகை செய்கிறாள்.

     “மிக்க நன்றி அண்ணா ஆனால்... ஆனால்...”

     லோசனி எப்போதோ கூறிய சொல் நினைவில் மின்னுகிறது.

     “எனக்காக யாருடைய ராஜினாமா கடிதத்திலும் தேதி போட்டு உயிர் கொடுக்க வேண்டாம் அண்ணா!”

     அவனுடைய புருவங்கள் சுருங்குகின்றன.

     “இதெல்லாம் என்ன நான்சென்ஸ் விஜி? உன்னுடைய காதில் யாரோ இப்படி விஷமத்தனமான செய்திகளைப் போட்டிருக்கிறார்கள்!”

     “உங்களைப் பற்றி நான் எதுவும் பேசவில்லை அண்ணா! இது நடைமுறையில் உள்ள கசப்பான விஷயம். இன்று எனக்கு உங்கள் ஆதரவும் உறவும் இருப்பதால் வேலை காத்திருக்கிறது. ஆனால், அது இல்லை என்றால், என் மதிப்பு எவ்வளவென்று தெரியாதா?”

     “போகட்டும், உனக்கு விருப்பமில்லை என்றால் விட்டுவிடு... ஆனால், இந்த யோசனைக்கு மாறுசொல்லமாட்டாய் என்று நினைக்கிறேன். உன் அப்பாகூட இங்கே ஒரு ‘சி’ க்ளாஸ் மாட்ச் வொர்க்ஸ் தொடங்க முயற்சி செய்து கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன். என்னுடைய எண்ணத்துக்கு ஒத்துப் போகிறது. குழந்தைகளை அழைத்துச் செல்வதில்தான் வண்டி. நேரம், எல்லாத் தகராறுகளும் வருகின்றன. இங்கேயே ஃபாக்டரி என்றால், இங்கிருக்கும் மக்களுக்கு இங்கேயே வேலை வாய்ப்பு, நல்ல யோசனை. நீ என்ன நினைத்தாலும், அம்மாவிடம் கண்டிப்பாகச் சொல்லி, உன் பெயருக்கு ஒரு லட்சம் ஒதுக்கி இருக்கிறேன். அதை அப்படியே இங்கே போட்டு தொழிற்சாலையை உன் பெயரிலேயே ‘பி’ கிளாசாகத் தொடங்கிடலாம்...” அவளுடைய கண்கள் திடீரென்று சீற்றமிகு வேங்கையின் பார்வையை உமிழ்கின்றன.

     “நீ...ங்களெல்லாம் மனிதர்கள்தானா?-ஹ்ம்... நீங்கள் பின் வேறு எப்படி எண்ணுவீர்கள்! இன்று இந்த மக்களுக்கு ஆயிரம் வழங்கி அவர்கள் துயரங்களை ஈடுகட்டியிருக்கிறீர்கள் அல்லவா?...”

     அவன் முகம் அவள் குரலில் சிறுத்துப் போகிறது.

     “உங்களை அண்ணா என்று சொல்லக்கூட எனக்கு இப்போது நாக் கூடவில்லை. உங்கள் அம்மா மிதித்த நிலத்தை நீங்கள் கும்பிடுகிறீர்கள். உங்கள் அம்மா, பிள்ளைகள் நலனுக்காக உருகிப் போகிறார். ஆனால்... ஆனால், இங்கே அந்தப் பாசமெல்லாம் தெரியாது. பிள்ளைகள் காசு தேடும் கருவிகளாகி விட்டனர். அவர்கள் இறந்தும் ஆயிரங்களைச் சம்பாதித்துக் கொடுத்துவிட்டனர். பறவை இனம் கூடத் தன் கூட்டுக் குஞ்சுக்குப் பொறுப்பேற்கிறது... மனித இனம்...” அவளுக்குக் கண்ணீர் மல்கக் குரல் தழுதழுக்கிறது.

     “தானத்திலும், தருமத்திலும் எனக்கு நம்பிக்கை போய் விட்டது. அது மனிதனுக்கு அடிமைப் புத்தியை வளர்க்கிறது. எனது சிறிது கால மண வாழ்வுக்கு லட்ச ரூபாய் மதிப்பீடு செய்திருக்கிறீர்கள். கூலி உயர்வுக்காகவும், காசுக்காகவும் ஒன்று மறியாதவர்களைத் தூண்டிக் கொடுக்கும் ஆளாக என்னைக் கருதிவிட்டீர்கள். நீங்க புரிஞ்சுக்குங்க... என் லட்சியம் அதில்லை. இந்த மனிதர்களை, நான் மனிதர்களாகப் பார்க்க விரும்புகிறேன். உழைப்பும், ஊதியமும், எல்லாருக்கும் சமமான உரிமையுமாக வாழ்வதற்கான ஒரு இலட்சியத்துக்காக, நான் ஒரு குறுகிய எல்லைக்குள்ளிலிருந்து என்னை விடுவித்துக் கொண்டிருக்கிறேன். இந்த இலட்சியந்தான் உங்கள் தம்பியின் மனப்போக்குக்கு முரண்பட்டது. என் வேகத்துக்குத் தூண்டுதலாகி இருக்கிறது. நான் அதற்காகப் போராடுவேன்... உங்கள் இலட்சத்தைக் கொண்டு போங்கள்!”

     ரங்கேசன் இத்தகைய கனற்பொறிகளை எதிர்பார்த்திருக்கவில்லை. திகைக்கிறான், என்றாலும் அவன் சாதுரியம் வாய்ந்தவன்.

     “விஜி, உன் துணிவை நான் பாராட்டுகிறேன். நீ நினைக்கும் இலட்சியம் வெற்றி பெறட்டும். உனக்கு எங்கள் வீட்டில் எப்போதும் சோதரியைப் போன்ற உரிமை உண்டு; வரட்டுமா?”

     “மிக்க நன்றி...”

     அவன் எழுந்து வெளியே வருகிறான். வாயிலில் இருள் அப்பியிருக்கிறது. வெண்மையாக உருவங்கள் தெரிகின்றன. அவள் வெளி விளக்கைப் போடுகிறாள்.

     அப்பா, சிவகணபதி, மாரிசாமி... செவந்தி...

     அவன் வணக்கம் சொல்வதுபோன்ற பாவனையுடன் காரில் ஏறி அமர்ந்து கதவைச் சாத்துகிறான்.

     கார் பின்னுக்கு நகர்ந்து சாலையில் திரும்பிச் செல்கிறது.

     “எப்ப வந்தான்? நான் அமைச்சர்கள் போன பிறகு பார்த்தேன், இவனைக் காணல. மயிலேஷ் மட்டுந்தா பைக்கெடுத்திட்டுப் போனான். இங்க வந்திருப்பான்னு நினைப்பே இல்ல!” என்று வியப்புத் தெரிவிக்கிறார் அப்பா.

     “கொஞ்ச நேரமாச்சு...” என்று ஒரே வார்த்தையில் நிறுத்திவிட்டு, செவந்தியைப் பார்க்கிறாள் விஜி.

     “டீத்தூளிருக்கா? டீ போட்டுட்டு வரியா செவந்தி?” அவள் உள்ளே செல்கிறாள்.

     “விஜிம்மா, அண்ணாச்சி சொல்றா. இங்க எல்லாரிட்டயும் பேசி, பணத்தைக் கண்டமானிக்கும் குடிச்சிம் சூதாடியும் கண்ட பொருளை வாங்கியும் செலவுசெஞ்சிடாம, ‘சி’ கிளாஸ் ஃபாக்டரிங்க தொடங்கி, கோப்ரடி மாட்ச் சொசைட்டியாக்கலாம்னு. அதுக்கு இந்தப் பெரிய முதலைங்க விடுவாங்களா? நீங்க வாணாப் பாருங்க, இன்னும் ஒரு மாசத்துக்குள்ள, ஏசன்டு, கொத்தமாருங்க, இன்னும் இருக்கிற நண்டு சிண்டெல்லாம் அடுவான்ஸ் வாங்கிட்டுப் புடிக்கவருவா. நாம தொழிலை தொடங்கினா, கெமிகல்லேந்து சகலத்துக்கும் அவங்க கோட்டாவில கையேந்தி நிக்கணும். பிளாக்கில விப்பா...”

     “மாரிசாமி!...” என்று சாட்டையடிப்பதுபோல் விஜி கத்துகிறாள். அவன் என்ன, சிவகணபதியே நடுங்கிப்போகிறார்.

     “இந்த அவநம்பிக்கைப் பேச்சை விட்டொழியுங்கள்! இதுங்கள எதிர்த்து நிக்கிறதுதான் போராட்டம். இன்னிக்கு இந்த நிமிசத்திலேந்து இவங்க மனசில, பணத்துக்கும், தய நம்பிக்கைக்குமுள்ள தொடர்பை உணர்த்தணும். பணம் இவங்களை மேலும் அடிமையாக்கக் கூடாது? உழைப்பும், உரிமையுமாக வாழ நம்பிக்கை கொடுக்கணும்!...”

     இருளிலே யாரோ ஊளையிட்டு அழும் குரல் ஒலிக்கிறது.

     “யாரது? மம்முட்டியானா” - என்று சிவகணபதி பார்க்கிறார்.

     “மம்முட்டியானுக்கும் மாமனுக்கும் சண்டை. இவன் எனக்குப் பத்தாயிரம்னு சொல்ல, அவன் குடுக்க மாட்டேன்னு சொல்ல... அங்கேயே பஞ்சாயத்து. அழவாயிக்குக் கலியாணமாயிருக்குன்னே சொல்லலியே, எப்பிடி உனக்குப் பணம் வரும்னாரு பஞ்சாயத்துல...” என்று தொடர்ந்து விவரிக்கிறார்.

     ஆனால் ஊளையிட்டு அழுபவன் மம்முட்டியானல்ல; காத்தமுத்து. அவர்களுக்கு முதுகைக் காட்டி நின்ற வண்ணம் கையில் இருக்கும் கற்களை யார் மீதோ எறிந்து கொண்டிருக்கிறான். விஜி பதறிய வண்ணம் படியிறங்குகிறாள்.

     “காத்தமுத்து!... ஏய், நீயாடா? நீயாடா?...” அவன் கண்ணீர் பெருகும் முகத்துடன் திரும்பிப் பார்க்கிறான். வெறிக்குரலில் வசைகள் பொல பொலக்கின்றன.

     “ஏண்டா... உங்கம்மாளையடா திட்டுற?...” என்று வாத்தியார் அதட்டுகிறார்.

     “நல்லாத்திட்டுவே... குடிச்சிப் போட்டு அவங்கூடச் சேந்து என்ன அடிச்சா... விஜிம்மா! எனக்கு ஏன் மொதலாளி பத்தாயிரம் குடுக்கல? நாந்தான ஆத்து இளுப்பில முளுவி, அவுங்களெல்லாம் வண்டிமேல ஏத்திவுட்டேன். மரத்துமேல ஏத்திவுட்டேன். பொடவிலேந்து பாம்பு வந்தப்ப... சினிமாவிலே வராப்பல, ஒண்டிட்டு, பயப்படாம நாந்தான இருக்கச் சொன்னே? எனக்குத் தான பத்தாயிரம் குடுக்கணும்...?”

     விஜி அந்தச் சிறுவனைத் தாவி அணைத்துக் கொள்கிறாள், அவன் கண்களை முகத்தைத் துடைக்கிறாள்.

     “முத்து, நீ தா ரொம்ப தைரியசாலி, நீதா எல்லாரக் காட்டிலும் பெரிய வீரன். உனக்குப் பத்தாயிரத்துக்கெல்லாம் கிடைக்காத பிரைஸ் கிடைக்கும். நீ நிச்சயமா பெரியவனா, எல்லாருக்கும் மேல வரப்போர.”

     எரிச்சலுக்கு இதமான சொற்களில் அவன் கேவல் அடங்குகிறது.

     செவந்தி செம்பில் சூடான தேநீரையும் கிளாசுகளையும் கொண்டு வருகிறாள்.

(முற்றும்)