உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
6 மம்முட்டியானின் செருப்பொலி கட்டியம் கூறுமுன் ஒவ்வொரு குடிசையிலும் நாய் குரைக்கிறது. “ஏ மாரி... முனிம்மா, எந்திரிங்க... பஸ்வந்திடிச்சி!...” மூடியிருக்கும் கதவில் கைத்தடியால் ஒரு தட்டு... “பச்ச, பேராச்சி...! எந்திரிங்க! பஸ் அலாரம் குடுத்திட்டா!” ஆழ்கடலில் மத்தைவிட்டுக் கலக்கும் சலனங்கள் அவை. ஆழ்ந்த உறக்கத்தில் துள்ளும் மீன்கள், மின்னும் சிறகுகள், பூக்களின் குளிர்ச்சிகள் தோற்றுவிக்கும் இனிய சுக உணர்வுகளெல்லாம் அந்தக் கலக்கலில் தலைகுப்புறக் கவிழ்ந்து போகின்றன. “ஏவுள்ள? கனாக்காணுற? எந்திரிச்சி மூஞ்சி கழுவிக்க, பசு வந்திடிச்சாம். மம்முட்டியாங் கொரல் குடுக்க வந்திட்டாம் பாரு!” விஜியும் கூட அந்த நேரத்தில் ஆழ்ந்துதான் போயிருக்கிறாள். அந்த ஆழத்திலிருந்து வண்டியின் குழலொலி தான் அவளைத் தூண்டில் போட்டு உணர்த்தி விட்டது. கண்கள் சட்டென்று விடுபடுகின்றன. இன்னும் லேசான பனிக் குளிர் இருக்கிறது. கதவைத் திறந்து விட்டு வெளியே வருகிறாள். காத்தமுத்து உட்கார்ந்திருக்கிறான். விடியற்காலம் கலகலப்பாக, இன்னும் இருள் பிரியவில்லை. இருளிலே முகம் தெரியாக் குரலொலிகள். “...காத்தமுத்துப் பயலாடா? இங்கிட்டு ஒக்காந்திருக்க! எந்திரிடா!” மம்முட்டியான் விஜி கதவு திறந்து உள்ளே நிற்பது அறியாமல் அதட்டுகிறான். “மம்முட்டியானா?... நாந்தாம்பா காயத்துக்கு கட்டுப் போட்டுப் படுக்கச் சொன்னேன் இங்க.” விஜியின் குரல் கேட்டதும் அவன் துணுக்குற்றாப் போல் சமாளிக்கிறான். “கும்பிடுறேம்மா. தெரியாம கேட்டுட்டே...” இதற்குள் இருளில் ஒவ்வொரு புள்ளியாகச் சேர்வது புலனாகிறது. குரல்கள் ஒலிக்கின்றன. “தங்கச்சிய பாத்துக்க? ரசம் சோறு நல்லாப் பெனஞ்சி வச்சிருக்கே. கீள கொட்டாம உண்டுக்கணம்...” “சிட்டையப் பதனமா வச்சிக்க!” “சண்ட போடாதிய!” “ஒறங்கி வுழாதடீ! முளிச்சிக்க...” விஜி உள்ளிருந்து விளக்கைப் போட்டுவிட்டுப் படியிறங்குகிறாள். எட்டி, சாலை முனையில் மரத்தடியில் பஸ் நிற்கிறது. “ஆரு, ஏஜண்டு? கூப்பிடு அவரை...” என்று மம்முட்டியானிடம் பணிக்கிறாள். சற்றைக்கெல்லாம் இரத்தினம் மிகப் பணிவாக அங்கே வந்து நிற்கிறான். “வணக்கம்மா... நீங்க இங்கிட்டு வந்திருக்கியன்னு இப்பதாந் தெரியும்...” “பரவாயில்ல. இந்தப் பய்யன ஏனிப்படி அடிச்சுருக்கீங்க? நேத்து இந்த ஊருப் பிள்ளைகள வழியிலேயே இறக்கி விட்டுட்டீங்க போல இருக்கு?” “வண்டி... இன்ஜின் கோளாறாயிட்டுதுங்க. எதிர்பாராம நேந்து போச்சி. பெரியபட்டி தாண்டி இங்ஙனதா நிறுத்திட்டு மம்முட்டியாங்கிட்ட சொல்லிப் பதனமாக் கூட்டிப் போகச் சொன்னே. அப்பிடில்லாம் இறக்கிப் போட மாட்டம்மா!” “நிதம் இத்தினி காலயிலா கூட்டிட்டுப் போறிய? வரப்பவும் ஒம்பதாவது போல இருக்கு?” “பிள்ளங்க எந்திரிக்கவே நேரமாகும்மா. இப்பிடித்தான் அங்கேந்தும் அஞ்சு மணிக்குக் கிளப்பிடுவே, நேத்துத்தா நேரமாச்சி! வண்டி தொலவா இருக்கிற ஊருலேந்து முதல்ல கூட்டிக்கிட்டுப் போயி முதல்ல கொண்டு விட்டுடும்...” “அது சரி. இந்தப் பய்யன எதுக்காக இப்பிடி அடிச்சிருக்காங்க? ஆரடிச்சது?” “ஐயோ, அத்த ஏம்மா கேக்குறிய? இந்தப் புள்ளங்க ஒண்ணுக்கொண்ணு சண்ட போட்டுக்கிட்டு வெட்டி மடியிதுங்க. இதுங்க சண்டய வெலக்குறதுதா... ரொம்பக் கஷ்டமாப் போகுது...” “முழங்கால்லேந்து ரத்தமாக் கொட்டிருந்திச்சி. நான் சும்மாத் துணியச் சுத்திக் கட்டுப் போட்டிருக்கே. இவன ஆசுபத்திரிக்குக் கூட்டிப் போயி, டிடனஸ் ஊசி போடணும்...” “புது நகரந்தாம்மா போகணும். இங்க கூடமங்கலத்துல ஊசில்லாம் போட மாட்டாங்க!” “வண்டில ஏத்திட்டுப் போ. ஏ, காத்தமுத்து, போய் ஏறிக்க!” இவ்வாறு பணித்தவள், சற்றே நிற்கிறாள். பிறகு திடீரென்று முடிவுக்கு வந்தாற் போல், “இருங்க...” என்று உள்ளே விரைகிறாள். பாட்டியைத் தட்டி எழுப்புகிறாள். உறக்கக் கலக்கம் தெளியாமல் பாட்டி கண்களைக் கசக்கிக் கொள்கிறாள். “தீட்டி ஆபீசு பஸ் வந்திரிச்சா? மணி என்ன ஆச்சி?” “ஆமா, நாலேகாலாகுது. ஐயாம்மா, நா இந்த பஸ்ஸில ஏறிப் போயிடறேன். அப்பாவப் பாத்திட்டுப் போகலான்னிருக்கிறேன். ஒருக்க, மாப்பிள, பைக்க எடுத்திட்டு வந்தா நான் அப்பா வீட்டுக்குப் போயிருக்கிறன்னு சொல்லிடுங்க!” “பெரிய பட்டிக்கா போற?” “இல்ல, புதுநகரம். சுமதியையும் அப்பாவையும் பாக்கப் போறேன். மாப்பிள வீட்டுக்குப் போகல!” அவள் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவிக் கொள்கிறாள். தலையை சீப்பால் ஒதுக்கிக் கொண்டு, கைப்பையுடன் கிளம்பி விடுகிறாள். அவள் அந்த வண்டியில் ஏறத் தயாராக வருகையில் இரத்தினம், விக்கித்தாற் போல் பார்க்கிறான். பஸ்ஸில் ஏறக் கூடி நிற்கும் கூட்டத்தை விலக்கி, தன் கையில் உள்ள டார்ச்சைக் காட்டி ஒளியடித்து “வாங்கம்மா... முன்னால வந்திடுங்க!” என்று மரியாதையாக வழி காட்டுகிறான். அவள் முதல் வரிசையின் ஓரத்தில் அமர்ந்து கொள்கிறாள். வழக்கம் போல் பெரியப்பட்டிச் சிறுவர்களுக்கு இடம் விட்டு ஓரத்துக் கடைசியில் இவர்களை உட்காரச் சொல்லிக் கட்டாயப்படுத்தும் குரல் ஒலிக்கவில்லை. விஜி ஓரத்தை ஒரு சிறுமிக்கு விட்டு, தன்னருகில் இன்னொரு பொடிசைக் கூப்பிட்டு அமர்த்திக் கொள்கிறாள். பூ மலரும் மொட்டை முரட்டுக் கையால் பிரித்தாற் போல் உறக்கம் இறுகத் தழுவும் இமையிதழ்களைக் கசக்கிப் பிரித்துக் கொண்டு வந்திருக்கின்றனர். விஜிக்கு இரவுத் தூக்கம் இயல்பாக இருந்திராததால் விழிகள் எரிச்சலில் குளித்தாற் போலிருக்கின்றன. இந்தச் சிறுவர் நாள்தோறும் இப்படி வருகின்றனர். ஆவியிலிருந்து எடுத்த இட்டிலியும் துணியுமாகப் பல பூவிழிகள் ஒட்டிவிட, வண்டிக்குள்ளும் சாய்ந்து விழுகின்றன. பேருந்து வண்டி, மெல்ல நகர்ந்த சாலையிலுள்ள மேடு பள்ளங்களைப் பதம் பார்ப்பதைக் குலுக்கல்களுடன் அறிவித்துக் கொண்டு செல்கிறது. கரையா இருளில் வானத்துத் தாரகைகள் மினுக் மினுக்கென்று சிமிட்டுகின்றன. விஜிக்கு அப்போது, நகரங்களில் தெருவுக்குத் தெருவாகத் தோன்றியிருக்கும் குழந்தைப் பள்ளிகளின் நினைவு வருகிறது. சின்னஞ்சிறு மலர்களின் கொத்துக் குவியல்கள் போல் அப்பள்ளிகளில் ‘ட்விங்கில் ட்விங்கில் லிட்டில் ஸ்டார்’ பாடும் குழந்தைகள் இவ்வாறு இந்நேரத்தில் மினுக்கும் ஆகாயத் தாரகைகளைக் கண்டிருப்பார்களோ? இங்கே இந்தக் குழந்தைகள் இந்தத் தாரகைகள் இருக்கும் நேரங்களில் மட்டுமே கூடுகளை விட்டு வெளியேறுகின்றன. ஆனால் ‘வானக் காட்சிகளைக் காண்பீரோ’ என்று கேட்டுக் கொண்டு உறக்கம் கண்ணிதழ்களை வருடிவிட, அவர்கள் இவ்வுலக நினைப்பை விட்டு நழுவி விடுகின்றனர். பெரியபட்டியில் பெரிய வீடுகளை அவளால் இனம் கண்டு கொள்ள முடிகிறது. இங்கும் ஊர்க்கோடியில் சாலையில் சிறுவர் சிறுமியர் காத்திருக்கின்றனர். இரத்தினம் முதலில் கீழே இறங்கிக் கொள்கிறான். கசமுசவென்று எழும்பிய பேச்சொலிகள், பொங்கும் பாலில் நீர் தெளித்தாற் போன்று கப்பென்று அடங்கி விடுகின்றன. அடங்கிய குரலில் முண முணப்புகள். சின்ன மொதலாளி... பெரிய வீட்டு மருமகள்... வரிசைகள் கலந்து விடுகின்றன. பாலமணி, தங்கம், வெங்கடேசன் என்ற பெயர்களைச் சொல்லி, “உக்காரு... உக்காருங்க அங்கதான்!” என்று இரத்தினம் வழக்கமில்லாத மாறுதலை மெல்லிய குரலில் அறிவிக்கிறான். முதலில் உட்கார்ந்து விட்டவர்களை எழுப்பிப் பின் வரிசைக்குப் போகச் சொல்லவில்லை. அழகாயியின் அருகில் தங்கம் உட்கார வேண்டியிருக்கிறது. தங்கம் அழகாகத் தலைசீவிப் பவுடர் போட்டுக் கொண்டிருக்கிறாள். பெரிய பூப்போட்ட நைலக்ஸ் சேலையும், ஃபிட்டான மினுப்பு ரவிக்கையும் அணிந்திருக்கிறாள். உலிஉலி சீலை, புருசோ சீலை என்று பெயர் சொல்லி வகை வகையாகச் சீலை உடுத்துபவள் தங்கம். இவள் கொஞ்சம் வாயாடி. ஏசண்டு சொன்ன இடத்தில் உட்கார்ந்து விடுவாளா? இன்று மூச்சுப் பிரியவில்லை; ஒரு சொல் ஒலிக்கவில்லை. காரணம் அழகாயிக்குப் புரியாமலில்லை. பெரிய ஆச்சி பேத்தி விஜிம்மா, மாட்ச் வொர்க்ஸ் முதலாளியைக் கல்யாணம் கட்டியிருக்கிறாள். பெரியபட்டிப் பெரிய வீட்டில் தான் கல்யாணம் நடந்தது. அன்று எத்தனை கார்கள் வந்திருந்தன! அவர்களுக்கெல்லாம் இனிப்புடன் சாப்பாட்டுப் பொட்டலம் கொடுத்தார்கள். இவர்களுக்கெல்லாம் முதலாளி வீட்டின் வேறு பெண்கள் யாரையும் தெரியாது. ஆனால்... விஜியம்மா ரொம்ப நல்லவள்... பேராச்சி தூக்க மயக்கத்தில் ருக்குவின் மீது சாய்கிறாள். கூடமங்கலத்து ஆஸ்பத்திரிச் சுவரின் குடும்ப நலத்திட்ட விளம்பரங்கள் இருளிலும் புரிகின்றன. ராசாத்தி ஓடையில் இறங்கிச் செல்லும் குலுக்கலில் உறக்கங்கள் உசுப்பப்படுகின்றன. விடியற்காலைக் காற்று, மிகச் சுகமாக, இதமாக முகத்தில் வந்து படிகிறது. கிராமங்களைப் பின்னுக்குத் தள்ளிக் கொண்டு வண்டி விரைகையில் வழியில் ஓர் டீக்கடை வாசலில் கும்பல் கூடினாற் போல் சிலர் நிற்கின்றனர். அவர்கள் இந்த வண்டிக்காகக் காத்திருப்பார்களோ என்ற ஐயத்தை உறுதிப்படுத்தும் வண்ணம் இரத்தினம் வாயிலில் நின்று, “போ... ரெய்ட்!” என்று கொடி காட்டிவிடுகிறான். “ஆரோ... பெரியவங்க போறாப்பல இருக்கு!” “பாக்கல...” காற்றுவாக்கில் வந்து செவியில் விழும் ஒலிகள் விஜிக்கு அவள் வருவது அசாதாரணம் என்று அறிவுறுத்துகிறது. புதுநகரத்தில் இரவு என்பது மிகக் குறுகிய பொழுதாகும். தேநீர்க் கடைகள் பல சுறுசுறுப்பாக இயங்குகின்றன. இன்னும் பாயிலர்கள் புகைகின்றன. தெருவில் சைக்கிள்களின் ஒலிகள் கேட்கத் தொடங்கிவிட்டன. இரவின் நெடுநேர விழிப்பின் பின் ஓய்ந்த புரோட்டாக் கடைப் பெஞ்சுகளில் ஆழ்ந்துறங்கும் ஆட்கள் கண்களில் படுகின்றனர். இரவு பகல், உறக்கம் விழிப்பு நேரங்கள் என்பதை பார்த்துக் கொண்டிருந்தால் தொழிலும் பொருளும் முடங்கிக் கிடக்காதா என்று அந்த நகரம் கேட்பது போலிருக்கிறது. முன்னே ஒரு லாரியும், அதற்கு முன் குழந்தைகளைக் கொண்டு செல்லும் இன்னொரு தொழிலக வண்டியும், எதிரே வரும் ஒரு பாரவண்டிக்காக நிற்கின்றன. அப்போது அவளருகில் வரும் இரத்தினம் பணிவாக, “முதல்ல பங்களாக்குப் போயிடலாமா?” என்று வினவுகிறான். “நான் பங்களாவுக்குப் போகல. எங்கப்பா வீட்டுக்குப் போகிறேன். வீடு தெரியுமில்லையா? தேவி விலாஸ் ஓட்டல் பக்கம் ரோட்டில் வண்டிய நிறுத்திட்டாப் போதும்; நான் போயிடுவேன். குறுக்குத் தெருவில் பஸ் வரவேண்டாம்.” “அப்ப பாக்டரில பிள்ளங்கள இறக்கி விட்டிடலாமில்லியா?” “விடலாம். நானும் ஃபாக்டரிக்குள்ள பாக்கிறேன்!” இது ஏதோ விபரீதம் என்று இரத்தினத்துக்குத் தோன்றுகிறது. இந்த வண்டியில் இவர்களை ஏற அனுமதித்திருக்கக் கூடாதோ என்று கருதுகிறான். இதுவரையிலும், முதலாளி வீட்டைச் சார்ந்தவர்கள் யாரும் தொழிற்சாலைக்குள் வந்திருக்கவில்லை. மற்றவர் யார் வருவதாக இருந்தாலும் அலுவலகத்தில் மானேஜர் அனுமதி பெற்ற பின் தான் உள்ளே விடுவது வழக்கம். மேலும் இந்த இருட்டு நேரக்காலையில் இவளை அனுமதிக்கலாமா என்றே புரியவில்லை. இந்தச் சின்னம்மாளின் தந்தை, தொழில் சங்கத்துக்காரர். புதுநகரத்துத் தொழிலகங்களில் வலுவான தொழிற்சங்கத்தைத் தொழிலதிபர்களுக்கு எதிராகத் தோற்றுவிக்க ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக் கொள்கிறார் என்றும் தெரியும். இது பெரிய விவகாரம்; பெரிய இடத்து விவகாரமும் கூட. “இல்லையே? உங்கள முதல்ல வீட்டுப்பக்கம் விட்டுப் போட்டு வண்டி வரலாங்க!” “வேண்டாம், வேண்டாம். தொழிற்சாலைக்கே போகட்டும்!” வண்டி பெரிய மதில் சுவருக்கு வெளியே நிற்கிறது. குறுக்கே சட்டங்கள் போட்ட பெரிய வாயிற்கதவைத் திறக்கிறான் காவலாளி. சிறுவர் சிறுமியர் இறங்கும் போது, இரத்தினம் எதுவும் சொல்ல நாவெழாமல் நிற்கும் போது, அவன் இறங்குமுன் காத்தமுத்துவின் கையைப் பற்றி மெள்ள இறக்குகிறாள். வாயிலுக்கு அங்கு முன்பே வந்திருக்கும் கணக்குப்பிள்ளைகள் வருகின்றனர். மாரிசாமி அவள் கண்களில் படுகிறான். “மாரிசாமி! மாரிசாமி!” என்று அவள் கூப்பிடுகிறாள். இதற்குள் இரத்தினம் வெளியே வரும் இன்னொரு ஆளின் காதில் ஏதோ கேட்கிறான். பிறகு உள்ளே விரைகிறான். சிறுவர் சிறுமியர் தூக்குப் பாத்திரங்களுடன் உள்ளே செல்ல நிற்கின்றனர். “அட... விஜியம்மாவா?...” என்று வியப்புக் குரலில் அடக்கமாகக் கூவும் மாரிசாமி, “இந்த நேரத்தில், ஊரிலேந்து வாரீங்களாம்மா?” என்று விசாரிக்கிறான். “ஆமாம். இந்தப்பய காத்தமுத்துவை உனக்குத் தெரிஞ்சிருக்குமே? இவனக் கூட்டிட்டு ஆசுபத்திரிக்குப் போயி மருந்து போட்டு, ஒரு டிடனஸ் ஊசி போடச் சொல்லணும்... ஃபண்டாசுபத்திரிக்குப் போகலாமில்ல?” “போவலாம். எட்டு மணிக்கித்தா ஆசுபத்திரி திறப்பா.” இதற்குள் மானேசர் சாமியப்பன் விரைந்து வருகிறார். கன்னங்கள் உப்பி, கட்டைக் குட்டையாக இருக்கிறார். கல்யாணத்தில் பெரியபட்டி வீட்டில் பார்த்திருக்கிறாள். “வணக்கம்மா, இந்தக் காலையில...” “ஒண்ணில்ல, அந்தப் பய்யன் ஏதோ அடிதடி சண்டன்னு முழங்கால உடச்சிட்டு வந்தான், ராத்திரி எங்க வூட்டுப் பக்கம். அவன ஆஸிபத்திரிக்கு அனுப்பிச்சி ஊசி போட்டுக் கட்டுப்போட்டு வரச் சொன்னேன். அப்படியே பாத்திட்டுப் போகலான்னு...” “ரொம்ப சந்தோசம்மா...” குச்சியடுக்கும் இடத்தில் தான் குழந்தைகள் உட்கார்ந்திருக்கிறார்கள். ஏற்கெனவே வேறு இடங்களிலிருந்து வந்திருக்கும் குழந்தைகள் அவர்கள். மெழுகு முக்குபவர் ஆறு மணிக்குத்தான் வருவாராம். பிள்ளைகள் சாப்பிடும் இடம், தண்ணீர்க் குழாய், கழிவு அறை எல்லாவற்றையும் காட்டுகிறான் சாமியப்பன். அலுவலக அறையில் நல்ல காபி வரவழைத்து வைத்திருக்கிறான். “தினமும் இப்படி ஐந்து மணிக்கே வந்துடுவீங்களா நீங்களும்?” “ஆமாம்மா, கணக்கப் பிள்ளைகளும் வந்திடுவா. ஏழரை மணிக்குத் திரும்ப வீட்டுக்குப் போய் காலை வேலையெல்லாம் முடிச்சிட்டு ஒம்பது மணிக்கு வருவோம் மறுபடி.” “பிள்ளைங்க?” “அதுங்களும் எந்திரிச்சி முகம் கழுவிட்டு எதனாலும் சாப்பிடும். உள்ளாற டீக்காரன் வருவான். சில பேருங்க டீ வாங்கிக் குடிப்பாங்க. சிலதுங்க பத்து மணி வரையிலும் அடுக்கிட்டுச் சோறு தின்னும்... பட்டினி கிடையாது!” “ஏழுக்கெல்லாம் ரங்கேஷ் வந்து பார்த்திட்டுப் போவாரு. போன் பண்ணி நடராசுவ வண்டி எடுத்திட்டு வரச் சொல்றேன்...” “வேணாம் ஒரு ரிக்ஷா கொண்டாரச் சொல்லுங்க. எங்க வீட்டுக்குப் போறேன்...” சாமியப்பன் அவள் கூடவே வெளியில் வருகிறான். மெழுகு முக்கும் ஆள், மருந்து தோய்க்கும் ஆள், கட்டை சரி பண்ணும் தொழிலாளி என்று வந்த வண்ணமிருக்கின்றனர். முற்றத்தில் வெளுப்புத் தெரிகிறது. அவள் வண்டியில் ஏறிக் கொள்கிறாள். அது புதுநகரத்தின் சாக்கடைத் தெருக்களைத் தாண்டிச் செல்கிறது. புது நகரத்தின் பழைய பகுதிகளின் நெருக்கமான வீடுகள். வாசல் தெளித்துக் கொண்டும் பெருக்கிக் கொண்டும் இருக்கும் பெண்கள் ரிக்ஷாவில் யார் உட்கார்ந்திருக்கிறார்கள் என்று பார்க்கின்றனர். வீட்டு வாசலில் வேலம்மா கோலமிட்டுக் கொண்டிருக்கிறாள். அப்போது ரிக்ஷா வந்து நின்றது. கூட்டுக் குஞ்சுகள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
|