உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
8 காத்தமுத்து குச்சிகளுக்கு மெழுகு தோய்க்கும் இடத்தில் தான் வேலை செய்து கொண்டிருந்தான். பிள்ளைகள் கொண்டு வரும் குச்சிச் சட்டத்தை வாங்கி மெழுகு தோய்க்கும் பூவலிங்கத்திடம் கொடுப்பதும், அதை அவன் காயும் மெழுகில் தோய்த்துக் கொடுப்பதும் அப்படியே வாங்கி அருகிலுள்ள மருந்தறையில் கொடுப்பதும் அவன் வேலைகள். இதற்கு மாதச் சம்பளம். காலில் அடிபட்டு, ஆஸ்பத்திரிக்குச் செல்ல வேண்டுமென்று இருப்பதால், அவனைக் குச்சியடுக்க உட்கார்த்தி வைக்கிறான் மாரிசாமி. சின்னப்பட்டிப் பிள்ளைகளுக்கென்ற பகுதியில் கண்காணிப்பவன் மாரிசாமிதான். மாரிசாமிக்கும் சின்னப்பட்டிப் பிள்ளைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அவன் பிறந்த மண் அது. அவனுடைய அம்மா கடலைக் காட்டில் வேலைக்குச் சென்ற இடத்தில் பாம்பு கடித்துச் செத்துப் போனாளாம். அவனுக்கு நான்கு வயதாக இருந்த போது, அப்பன் வேறு ஒருத்தியைத் துணை சேர்த்துக் கொண்டு ஊரை விட்டே வேறெங்கோ பிழைக்கப் போய் விட்டானாம். ஆதரவற்று அந்த மண்ணில் எப்படியோ பிழைத்த அவனைப் பெரிய அரிசன மாணவர் விடுதியில் சண்முகம் தான் சேர்த்து விட்டார். எட்டு வரையிலும் சுமாராகப் படித்தான். பின்னர் ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு வருடங்கள் என்று தங்கி விட்டான். பத்தாவதை முடிக்க முடியவில்லை. இளஞ்சேரன் தொழிலகம் தொடங்கியபின், அங்கே முதன் முதலாக வேலைக்கு வந்தான். தன்னுடைய ஊரென்று மட்டுமில்லை, தாழ்த்தப்பட்ட வகுப்பிப் பிள்ளைகள் என்ற கசிவு அவனுக்கு உண்டு. அவனுக்கென்று தனியாகத் தங்க இடம் ஏதுமில்லை. சில நாட்கள் இரவு பத்து மணிக்குச் சண்முகத்தின் வீட்டுத் திண்ணையில் வந்து படுப்பான். காலையில் எழுந்து செல்வான். தொழிற்சங்க அலுவலகம், படிப்பகம் என்று ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்திருக்கின்றனர். அங்கேயே தங்குவான். காலை நான்கு மணிக்குத் தொழிலகத்துக்குள் வந்தால் ஏழிலிருந்து எட்டுமணி வரையிலான காலைக் கடன்களுக்கான விடுப்பு நேரம் தவிர இரவு ஒன்பதரை அல்லது பத்துமணி வரையிலும் தொழிலகத்துக்குள் தான் வாழ்வு கழிகிறது. யானைக் கொட்டடி போல் விரிந்திருக்கும் கூடத்தில், ஒவ்வொரு யானைக்கும் உரிய இடத்தை வரையறுத்தாற் போன்று குச்சியடுக்கும் பகுதி சிறு சிறு பிரிவுகளாக வரையறுக்கப் பெற்றிருக்கிறது. மாரிசாமி எப்போதோ ஒரு சினிமாவில் பார்த்த யானைக் கொட்டடியைத்தான் அடிக்கடி நினைத்துக் கொள்கிறான். ஒவ்வொரு தடுப்பிலும் ஒரு யானைச் சக்தியே இயங்குவதாக நினைக்கிறான். ஆனால் அங்கு உட்கார்ந்து குச்சியடுக்கும் பொடிசுகளுக்குத் தங்கள் சக்தியைப் பற்றி எதுவும் தெரியாது. ஒட்டு மொத்தமாக, உருவத்திலேயே வலிமைக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் யானையையே மனிதன் அடக்கி விடுகிறான். ஆனால் இந்தப் பொடிசுகளுக்கு ஒற்றுமை பற்றியோ, வலிமை பற்றியோ யார் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்? மாரிசாமி, பசி என்ற பூதாகாரத் தேவை ஒன்றைப் பிஞ்சுப் பருவத்திலேயே உணர்ந்திருப்பவன். அங்கே உட்கார்ந்து குச்சியடுக்குபவர்கள் யாருக்குமே பெற்றோரின் பாசம் தெரியாது. தாயின் வயிற்றில் உருவாகும் போதே பசி என்ற ஒரே தேவையின் பூதாகார வடிவில் ஆக்கிரமிக்கப்பட்டவர்கள். வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கான ஆசை உந்துதல்கள் எப்போதும் கண்களில் நிழலாடிக் கொண்டிருக்கும். அவற்றில் முக்கியமானது, உறக்கம், மாரிசாமி உறக்கக் கலக்கம் தெளிய வைக்கச் சில சமயங்களில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்துத் துடைத்துக் கொள்ளச் சொல்வான். சட்டங்களைக் கொண்டு வந்து கொடுப்பான்; சின்னஞ் சிறிசுகளுக்குச் சில சமயங்களில் குச்சி தெருட்டியும் உதவி செய்வான். கட்டை என்று அழைக்கப் பெறும் முழுச் சட்டத்தில் குறுக்காக ஐம்பத்திரண்டு வரிச் சட்டங்கள் உண்டு. ‘சக்கை’ எனப்பெறும் அவற்றைத் தனியாக எடுத்து விடலாம். அந்த வரிச் சட்டத்தில் ஐம்பது குச்சிகளைப் பொருத்தி வைக்கக் கூடிய வரைகள் இருக்கின்றன. ஒவ்வொரு சக்கையையும் தனியாக எடுத்து, சிறுவிரல்களால் குச்சியைத் தெருட்டி வரைகளில் படியப் பரப்பி அவர்கள் பொருத்துவதை இடைவிடாமல் கண்காணிப்பாளன் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். இங்கே வேலை மந்தமாகிவிட்டால் முழு இயக்கமும் பாதிக்கப்பெறும். இந்தக் கண்காணிப்பாளனைக் கண்காணிக்க மானேசர் வருவார்; சில சமயங்களில் முதலாளியும் வந்து போவார். குச்சியடுக்கப்பட்டதும் சட்டங்கள் மெழுகுப் பகுதியில் மெழுகுத் தோய்க்கப் பெற்று, மருந்து முக்கும் பகுதிக்குச் செல்லும் நுனியில் மருந்து தோய்க்கப்பெற்று, அங்கேயே காற்றுப்பதம் செய்யப்பட்ட அறையில் அடுக்குகளில் காயும். பின்னர் இச்சட்டங்கள் இன்னொரு கூடத்துக்குச் செல்கின்றன. வரிசை வரிசையாக இளம் பெண்கள் இருபுறங்களிலும் மேல்பெட்டி அடிப்பெட்டி என்று போட்டுக்கொண்டு அமர்ந்திருக்கின்றனர். சட்டத்திலுள்ள வரிகளைப் பிரித்து மருந்து முக்கிய குச்சிகளை ஒரே ‘தாவாக’ அள்ளி அடிப்பெட்டியில் போட்டு, மேல் பெட்டியில் செருகி இன்னொரு சட்டத்தில் அடுக்குகிறார்கள். குரோசு குரோசாகப் பெட்டிகள் சட்டங்களில் அடுக்கப்பெற்ற பின், பெட்டிகளுக்கு மருந்து பூசக் கொண்டு செல்லப்படுகின்றன. பின்னர், மீண்டும் இன்னொரு கூடத்தில் வளைக்கரங்கள் இப்பெட்டிகளை உருவி தொழிலகத்தின் வண்ணச் சீட்டும், சுங்க முத்திரையும் ஒட்டுகின்றன. இறுதியாக ‘டஜன்’ என்று கட்டுக்குள் அடங்கி, ஐந்தைந்து குரோசுகள், அல்லது எழுநூற்று இருபது பெட்டிகள் கொண்ட கட்டுக்களாகக் குவிகின்றன. காத்தமுத்துவுக்கு அருகில் லட்சுமி உட்கார்ந்திருக்கிறாள். மூக்குத்தி துருத்திக் கொண்டு, மூக்குத் துவாரத்தில் கருப்பாக இரத்தம் கட்டியது துடைக்கப்பட்டிருக்கவில்லை. குர் குர்ரென்று மூச்சுவிட்டுக் கொண்டு அவள் குச்சியை அள்ளித் தெருட்டி வரைகளில் இடுவது மிக மெதுவாக இருக்கிறது. அவள் ஒரு சக்கையில் குச்சி நிரப்புமுன் காத்தமுத்து இரண்டு முடித்து விடுகிறான். “ஏ நீ இங்ஙன வந்திட்ட?” என்று மறுபக்கம் உட்கார்ந்திருக்கும் பேராச்சி அவனைக் கேட்கிறாள். “நா இங்க விட்டுப் போட்டுப் பட்டணம் போகப் போறேன். இப்ப வந்திட்டுப் போனாகளே, விஜிம்மா அவங்க கூட்டிட்டுப் போவா...” என்று மெல்லக் கிசு கிசுக்கிறான். “நெசமாலுமா?” “ஆமா. நேத்து ராத்திரி அவுங்கதா கால்ல கட்டுப் போட்டா. சோறும் பகடாவும் குடுத்தா. அப்ப சொன்னாக, என்னப் பட்டணம் கூட்டிட்டுப் போறேன்னா.” “சீ, பொய்யி!” “நீ வாணாப் பாரு. அவியதா மொதலாளியம்மா. இப்ப அவிய வந்து கணக்கவுள்ளட்டச் சொல்லித்தா, மாரிசாமி அண்ணாச்சி இங்க கொண்டிட்டு வந்தா...” “ஏ, என்ன குசுகுசுப்பு? விரிசாவட்டும்!” மாரிசாமி கையில் சக்கையை வைத்துக் கொண்டு அதட்டுகிறான். ஏழரை மணிக்குள் இரண்டு சட்டம் அடுக்கிவிட்டான் காத்தமுத்து. லட்சுமி ஒன்றே முடிக்கவில்லை. ஒரு சட்டம் அடுக்கினால் பதினைந்து பைசாவுக்குரிய ‘சில்லு’ கிடைக்கும். மாரிசாமி தான் வீடு செல்லுமுன், “லே, காத்தமுத்து வாடா!” என்று கூட்டிக் கொள்கிறான். கழுகாசலம் அடுத்தப் பிரிவுக்குப் பொறுப்பாளன். “அண்ணாச்சி, இந்தப் பயலுக்கு ஊசி போட்டுக் கட்டுக் கட்டிட்டுவார, கொஞ்சம் முன்னப் பின்ன ஆனா பாத்துக்குங்க...” என்று கேட்டுக் கொள்கிறான். “நடப்பியாடா? பண்டாசுபத்திரிக்கு?...” “ஊசி போடுவாங்களா அண்ணாச்சி...?” “ஆமா, ஒனக்கு நல்லதுக்குத்தா...” அலுவலகத்தில் சீட்டு வாங்கி வரச செல்கையில் மானேஜர் பார்க்கிறார். “நீயா கூட்டிட்டுப் போறே? வாணாம். உன் வேலயப் பாரு போயி! நா வேற ஆள அனுப்புறேன்!” அலுவலகப் பணியாளனிடம் சீட்டைக் கொடுத்து, “போப்பா, முதலாளியம்மா சொல்லியிருக்காவ... ஒரு ஊசி போட்டுக் கட்டுக்கட்டச் சொல்லு! இதுங்க அடிச்சி மண்டய ஒடச்சிட்டு எல்லாம் நம்ம தலையில வய்ப்பா!...” என்று அனுப்புகிறார். மாரிசாமி எட்டரைக்குள், மீண்டு தன் பொறுப்பேற்க வந்ததும் கழுகாசலம் “என்ன மாரிசாமி பொசுக்குன்னு வந்திட்ட? அதுக்குள்ளாறயா ஆசுபத்திரிக்குப் போயி வந்தாச்சி?” “இல்ல இல்ல, மானேசருக்கு அதுக்குள்ளாற ஆயிரம் சந்தேகம். நீ உன் சோலியப்பாரு போன்னு அனுப்பிச்சுட்டா...” “ஆமா, காலமே சின்ன முதலாளியம்மா வந்தாங்களாமே? நிசமா?...” “அதா, பெரியபட்டிக்கி நேத்துப் போயிருக்காப்பல. சின்னபட்டிலதானே பெரியாச்சி இருக்காங்க? எப்படியோ என்னமோ, காலம பஸ்ஸில பிள்ளங்ககூட வந்தாங்க பாத்தேன். நேத்து பஸ்ஸில் போறப்ப...” மாரிசாமி டக்கென்று பேச்சை நிறுத்திவிட்டு விரைகிறான், தன் இடத்துக்கு. இந்தத் தொழிலகம் துவங்கி ஐந்து ஆண்டுகள்தானானாலும், இவர்களுடைய பழைய முள்ளுப்பட்டித் தொழிற்சாலையில் இருபது ஆண்டுகளாகக் கணக்கு வேலை பார்த்திருப்பவர் சாமியப்பன். இவருடைய மகன் மேல் நாட்டுக்குச் சென்று வந்து, சென்ற வருசத்திலிருந்து வண்ண அச்சுத் தொழிலில் ஈடுபட்டிருக்கிறான். ஒண்ணரை லட்சத்துக்குக் காமிரா வாங்கி வைத்திருக்கிறான் என்று சொல்கிறார்கள். வீரம்மன் காலனியில் மிகப் பெரிய வீடு கட்டியிருக்கிறார். கண்கள் எப்போதும் ஓர் துருவும் பார்வையால் துளைத்துக் கொண்டிருக்கும். கோபம் வந்துவிட்டால், நாவில் வசைகள் கூத்தாடும். “மாரிசாமி... இங்க வாடா!” அவன் சட்டென்று திரும்பி நின்றான். “என்ன ஸார்?” “மணி என்ன ஆச்சு?” இளரத்தம் இந்த அசாதாரணமான தாக்குதலுக்குப் படிந்து போகாமல் கிளர்ந்துவிடுகிறது. “அறுவது ரூபா சம்பளத்தில் வாட்ச் வாங்கக் கட்டல சார்!” மானேசரின் உப்பிய கன்னங்கள் சினத்தால் சிவக்கின்றன. “...ப்பயலே? எப்படியிருக்கு? சீட்டுக் கிழிஞ்சி போகும். ராஸ்கல்! எட்டு மணிக்கு வர வேண்டியவன். எட்டரைக்கு மெள்ள வர; கேட்டா, பேச்சு தடிக்கிறது; சாக்கிரதை!” “சார், அநியாயமா ஏன் திட்டுறீங்க? நீங்க பெரியவங்க. நான் சின்னவன் தான். அதுக்காக மரியாதியில்லாம பேச வேணாம் சார்?” “என்னடா, மரியாதி, பெரிய மரியாதி? ...ப்பயங்களுக்கு மரியாதி வேணுமாமில்ல? நீ ஏழு மணிக்குப் போயிட்டு எட்டு மணிக்கு வர வேண்டியவந்தானேடா?” “நான் எங்க ஸார் ஏழு மணிக்குப் போனேன்? விஜிம்மா வந்து சொன்னாங்கன்னு...” “அயோக்கியப் பயலே!” அடி கொடுப்பது போல மானேசர் சீறுகிறார். “நாங்களே முதலாளி வீட்டுப் பெண்களைப் பேர் சொல்ல மாட்டோம்?... புழுக்கப் பயல், பேரில்ல சொல்றான்? போடா வேலையப் பாரு!” மாரிசாமி இதைச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்றாலும் துடிக்கும் உதடுகளை அழுத்திக் கொள்கிறான். மானேசர் ஐயா வந்து சத்தம் போட்டுவிட்டுப் போவதென்றால் அந்தப் பகுதி முழுமைக்கும் சவுக்கடி கொடுத்தாற் போலாகும். அதிலும் மாரிசாமியைக் கடிந்து கொண்டால், சின்னப்பட்டிப் பிள்ளைகளுக்குத் தங்களுக்கே தண்டனை நேரிட்டாற்போல ஒடுங்கிப் போவார்கள். பதினோருமணி சுமாருக்கு காத்தமுத்து புதிய கட்டுக்கள் தெரியும் கால்களுடன் வந்து உட்கார்ந்து கட்டை அடுக்கவில்லை. இளைப்பாறுவதற்கென்று ஒரு நீளமான அறைஉண்டு. அதில் தான் பசிக்கும் போது அவர்கள் வந்து சோறுண்ணுவார்கள். லேபிள் ஒட்டியோ குச்சி அடைத்தோ வேலை செய்யும் சில கைப்பிள்ளைக்காரிகள் ஏணை போட்டிருப்பார்கள். காத்தமுத்து அங்கு வந்து சுருண்டு படுத்துக் கொள்கிறான். பித்தானில்லாத நிசாரோ, சட்டையோ கவுனோ நழுவி விழ, முடிபிரிந்து விழ, கண்களும் மூக்கும் சுத்தமில்லாமல் நீர் வடிய, அந்தச் சிறுவர் சிறுமியரைக் காணக் காண மாரிசாமிக்கு ஆத்திரம் வருகிறது. அவர்களுடைய பெற்றோரைக் கண்டால் கொன்று விடலாம் போன்ற கோபம் உண்டாகிறது. “ஆவட்டும், ஆவட்டும்... என்ன பேச்சு?” என்று கனலைக் கொட்டுகிறான். எப்போதும் போல் கட்டையைத் தூக்கிச் செல்ல இயலாத சிறிதுகளுக்கு உதவவில்லை. தங்கப்பன் லொட் லொட்டென்று ஒவ்வொரு கட்டையையும் இறுக்கிக் கொடுக்கும் போதே, கைபார்க்கும் பழனிசாமி சரியாயில்லை என்று யாருடைய கட்டையையேனும் கலைத்துத் திருப்பி அடுக்கச் சொல்லும் போதோ அவன் அங்கு நின்று பார்க்கவில்லை. நீள நெடுக நடந்து கொண்டு, “ம், ஆவட்டும்! விரிசா!... யே, பேசாத...!” என்று திருப்பித் திருப்பிச் சொல்லுகிறான். சரேலென்று அழுகை உந்துவது போல் துயரம் நெகிழ்கிறது. விழுங்கிக் கொள்கிறான். கூட்டுக் குஞ்சுகள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
|