நான்காம் பாகம்

6. உறவும் வேண்டாம் பகையும் வேண்டாம்

     புரட்டாசி மாதத்து இளவெயில் உடலுக்கு இன்பத்தேனாக இருந்தது, மூக்குமலைக் கிழவருக்கு. வெறித்துக் கிடந்த வீட்டில், உழைக்க ஓர் ஆளும் ஒரு பெண்ணும் வந்த தெம்பில், கிழவர் பத்து வருஷம் இளையவர் ஆகி விட்டாற் போல் தோன்றினார்.

     ஒருபுறம் சாமையும் கோதுமையும் பயிர்களாய் பச்சை பிடித்துக் கண்ணுக்குக் குளுமையூட்டின. இன்னொருபுறம் கிழங்கெடுக்கத் தயாராகப் பழுத்துக் காய்ந்த செடிகள் மனத்தில் நிறைவைக் கூட்டின. ஜோகி ஓட்டி வந்த எருமை, சினைப்பட்டுக் காத்திருந்தது. அவருக்குத்தான் முதிய காலத்திலும் எவ்வளவு அதிருஷ்டம்! இருவரும் மண்ணின் செல்வமக்கள்; தொட்டது பொன்னாகும் என்று நிரூபித்து விட்டனரே?

     ஜோகி காலையிலேயே விளைநிலத்தைப் பார்க்கப் போய் விட்டான். பாரு, நஞ்சனுக்கு உணவளித்துப் பள்ளிக்கும் கையில் கட்டிக் கொடுத்து அனுப்ப வேண்டுமே? வீட்டு வேலைகள் முடிந்து அவள் நடுப் பகலுக்குத்தான் விளைநிலத்தைப் பார்க்க வர முடியும். நஞ்சன் மரகத மலைப் படிப்பை முடித்து விட்டு, ஒத்தைக்கே சென்று கொண்டிருந்தான். கல்விப் பசியைத் தீர்த்துக் கொள்ள, எட்டு மைல்கள், மேடு பள்ளம், காடு மலை என்று பாராமல் நடந்து சென்று கொண்டிருந்தான். அவள் பெறாமல் பெற்ற மகன், மழைக்கும் குளிருக்கும் தாங்கக் கோட்டும் காலுக்கு ஜோடும் அணிந்து, புத்தகப் பையும் சாப்பாட்டுப் பாத்திரமுமாகப் பையன் நடந்து செல்கையில், பாருவுக்கு ஒவ்வொரு நாள், வேதனை கண்களில் தேங்கி நிற்கும். பையன் கீழ்ச் சரிவில் இறங்கிச் செல்லும் வரை, அவள் வாயிலில் நின்று பார்ப்பாள்.

     அவளுடைய நஞ்சன் வளர்ந்து வளர்ந்து பெரியவனாகி, என்ன லட்சியத்தை சாதிக்கக் கனவு காண்பாளோ! கிழவர் அதை மனத்தில் காண்பவர் போல் நினைத்துக் கொண்டு, புன்னகையுடன் அன்று கேட்டார்: “பையன் ஸ்கோல் போய் விட்டானா?”

     “போய்விட்டானே? வீட்டில் ஒரு நாள் கூட அவன் தங்க மாட்டான். எத்தனை தூரம் நடக்கிறான்!”

     “இப்படிப் படித்து என்ன செய்யப் போகிறான் உன் மகன்?”

     “ஏன் மாமா அப்படிக் கேட்டீர்கள்? எங்கள் நஞ்சன், இந்த மலையிலேயே உயர்ந்தவனாகப் படித்து வருவானே!”

     “உயர்வாக வந்து உனக்கென்ன லாபம், அசட்டுப் பெண்ணே?”

     “என்ன லாபமா? நான் வளர்த்த மகன் உயர்வாக வந்தால் எனக்கு எத்தனை பெருமை மாமா!”

     கிழவர் அவள் அறியாமையை உணர்ந்து நகைப்பவராகச் சிரித்தார்; “உனக்கு என்ன பெருமை? எனக்குப் புரியவில்லையே?”

     “அதை உங்களுக்கு எப்படி நான் புரியவைப்பேன்? எத்தனை எத்தனையோ புத்தகங்கள் படித்து, நல்ல நல்ல செயல்களைச் செய்வான். காரில் போவான். நான் சொல்ல முடியாத சந்தோஷம் அடைவேன்.”

     “அசட்டுப் பெண்ணே, பையன் அப்படியெல்லாம் உயர்ந்தால் உன்னையா கவனிக்கப் போகிறான்? வாலிபமும், படிப்பும் நாகரிகமும் கூடினால் உன்னை உறவென்று சொல்லிக் கொள்ளவே வெட்கப்படுவான்!”

     “மாமா!” ஆத்திரத்தில் பாருவின் முகம் சிவந்தது. “உங்கள் பையனைப் போலவே எல்லோரும் இருப்பார்கள் என்று நினையாதீர்கள்!”

     “உண்மையைச் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வருகிறது?” கிழவர் மறுபடியும் சிரித்தார்.

     “அவ்வளவு படிப்புப் படிப்பவன், இந்த ஹட்டியில் வந்து என்ன செய்வான்? அதை யோசித்தாயா?”

     “ஒத்தையிலே வேலை பார்ப்பான்; கார் வாங்கிக் கொண்டு போய் வருவான்!” - கிருஷ்ணனின் செல்வாக்கு கௌரவம் முதலியவை தவிர அவள் மனக்கண்ணில் வேறு காட்சிகள் எப்படித் தெரியும்?

     “இந்த மண்ணிலே சாகும் வரை நீ உழை. சம்பாதிக்கும் பணம் எனக்குப் பற்றவில்லை. கூடத் தா என்று கேட்பான். மண்ணை மறந்து தாயையும் தகப்பனையும் மதியாதவன் ஆவான். இளமையும் படிப்பும், ஏற்ற பெண்ணை நாடிச் செல்லும். அவள் சொல்லைக் கேட்கும்.”

     “என் பையன் படிக்கக் கூடாது என்பதிலே உங்களுக்கு ஏன் இவ்வளவு ஆசை?” என்று பாரு கத்தினாள்.

     “நீ வயசுக்காலத்தில் இந்தக் கிழவனைப் போல் ஏமாறக் கூடாதம்மா. எத்தனையோ ஏமாற்றங்களை சிறுவயசிலேயே பார்த்து விட்டாய். என் மகளென்றே சொல்கிறேன்.”

     பாரு மறுமொழி கூறவில்லை. நஞ்சன் நிசமாக அப்படியா மோசம் செய்வான்? மாட்டான், மாட்டான்.

     கோயம்புத்தூரிலிருந்து மாசம் ஒரு முறை கிழவருக்கு மகன் கடிதம் எழுதுவான். அதை நஞ்சன் படித்துக் கூறுகையில் அவள் உள்ளம் எப்படிப் பொங்கிப் பூரிக்கும்? ‘மாட்டான், என் மகன் என்னை உதாசீனம் செய்ய மாட்டான்’ என்றெல்லாம் அவள் பேதையாய் தேறுதல் செய்து கொண்டாள்.

     ஊரிலும் உலகிலும் எவ்வளவோ மாறுதல்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருந்தன. ஆனால், பகை மறக்குமோ?

     பகை பாம்பின் படமாய் இரு குடும்பங்களுக்கும் இடையே தலைவிரித்தாடக் காரணமாக இருந்த பள்ளிக் கூடப் பிரச்னை தீவிர முயற்சியின்றிப் படுத்தே கிடந்தது. பாரு வாய்விட்டு வேறு பூமி கேட்ட விஷயம் மட்டும், கிருஷ்ணனின் நெஞ்சில் குத்திட்டு முள்போல் பதிந்திருந்தது. ஜோகி மூக்குமலைக்கு வந்ததையும், நஞ்சன் எட்டு மைல்கள் நடந்து ஒத்தைக்குப் படிக்க வருவதையும் அவர் அறியமாட்டாரா? மகன் கோபாலன், ஆசிரியப் பயிற்சி முடிந்து, அவ்வாண்டு அந்தப் பள்ளியில் தானே பணிபுரியத் தொடங்கியிருக்கிறான்? ஜோகி, பகை மறக்க, வேறிடம் பெயர்ந்து வந்திருந்தால் என்ன? அவர் அந்த முயற்சிக்கு ஆதரவு கொடுக்க வேண்டாமோ? தலைமுறை தலைமுறையாகப் பிளவும் பகையும் வளருவது அழகா? பகைக்குக் காரணம் என்ன எப்படி மாற்றுவது? கிருஷ்ணனின் சிந்தையை இத்தகைய கேள்விகள் புகுந்து, அமைதி இழக்கச் செய்து கொண்டிருந்தன.

     அன்று மாலை ஐந்து மணிக்கு மேல் அவர் வண்டியை எடுத்துக் கொண்டு ஹட்டிக்குச் செல்வதாகப் புறப்பட்டது ருக்மிணிக்குப் பிடிக்கவில்லை. கட்சி கூட்டும் பகைவர் அதிகமாக அதிகமாக அவளுக்கு அடிமனத்தில் அச்சம் விளைந்தது இயல்புதானே?

     ‘ஊரில் பள்ளிக்கூடம் வந்தால் என்ன, வராவிட்டால் என்ன, எவரேனும் காரை மடக்கி, தீங்கு விளைவித்தால்?’ ருக்மிணி நிலைகொள்ளாமல் தவித்துக் கொண்டிருக்கையிலே அவர் கீழ்மலைப் பக்கம் காரை நிறுத்திவிட்டு, அந்த முன்னிருட்டு வேலையில் மூக்குமலைக்கு நடந்து கொண்டிருந்தார். முதல்நாள் மழை பெய்திருந்ததனால், ஒற்றையடிப் பாதை வழுக்கியது.

     ஜோகி, அன்று அப்போதுதான் பக்கத்து ‘எஸ்டேட் கடையில் உப்பும் தீப்பெட்டியும் குப்பியில் கடலை எண்ணெயும் வாங்கிக் கொண்டு மேலே ஏறிக் கொண்டிருந்தார். அந்நாட்களில் ஆமணக்கெண்ணெய், கலயங்கள் வழிய இருக்கும். இரவில், மாடத்துத் தீபம் முத்துச் சுடராய் ஒளியை உமிழ்ந்து கொண்டிருக்கும். நஞ்சன் இரவு ஏழு மணிக்குத் திரும்பினாலும் வீட்டில் படிக்க அந்தத் தீபம் இருந்தாலும் ஆமணக்கெண்னெய் போதாதே! குப்பியில் அதற்குத்தான் கடலை எண்ணெய்.

     மரகத மலை ஹட்டிக்கு நல்ல பாதை இருந்தது. அங்கு ஏறுவதும் இறங்குவதும் சிரமமாகவே தெரியாது. ஆனால் மூக்குமலையில் கிருஷ்ணனைப் போல் முன்னேறியவரும் இல்லை. போட்டி பொறாமையும் இல்லை.

     பிரிந்து வந்த நாட்களில், ‘ஏன் பிரிந்தாய்’ என்று ரங்கன் அநாவசியச் சண்டைக்கு வருவானோ என்ற அச்சம் ஜோகிக்கு இருந்தது உண்மை. நாட்கள் செல்லச் செல்ல அது விலகி விட்டது. மூக்குமலையில் நகரச் செய்திகளையோ நாட்டுச் செய்திகளையோ அவருக்குக் கொண்டு தருபவர் இல்லை. இந்த மாதிரியான ஓர் உலகம் போதுமே! அதிக ஆசையும் வேண்டாம்; நஷ்டமும் வேண்டாமே!

     தலையிலே நான்கு படி உப்பு, வெல்லம் எல்லாச் சாமான்களுடனும் அவருக்கு மேலே ஏறுவது பளுவாக இருந்தது. மூச்சு விட்டு விட்டு இரைக்க, அவர் ஏறுகையிலே, முன்னே கைத்தடி ஊன்றி, உயரமாக ஓர் உருவம் சென்று கொண்டிருந்தது. கால் சராய், கோட்டு, ஜோடு, தலையிலே பாகை. அத்தகை உடை பூண்ட உருவத்துக்கு உரியவர், எளிய மூக்குமலை ஊட்டியில் எவரும் இல்லையே!

     தம்மை அறியாமலே ஜோகிக்கு ஆத்திரம் வந்தது. நாவைக் கடித்துக் கொண்டார்; முன் சென்ற உருவத்தை எட்டிப் பிடிக்க வேகமாக அடிகளை வைத்தார். பின்னே தொடர்பவரைக் கவனியாமல் முன் சென்ற உருவம் வெகுவேகமாக மேலே போய்க் கொண்டிருந்தது.

     ஜோகிக்கு இன்னாரென்று புரிந்து விட்டது. மூக்குமலையில் அவனுக்குச் சொந்தக்காரர் இல்லை; அவன் சமமாக மதித்து உறவு கொண்டாட, படித்த மனிதர் எவரும் இல்லை. என்ன வேலை? அமைதியாக அவர் வாழும் இடத்திலும் பகைக் கொடியை நாட்ட வருவானேன்? ஜோகிக்கு உஷ்ணப் பெருமூச்சு எழும்பியது.

     அவர் பகையும் வேண்டாம், உறவும் வேண்டாம் என்று ஒதுங்கி வந்த பின், ஒத்தையில் இருந்தவன் உறவு கொண்டாடுவது தெரிந்தால், ரங்கன் வாளாயிருப்பானா? மறுநாளே மாற்றானை அழைத்து, ‘நீ ஏனடா உறவு கொண்டாடினாய்?’ என்று சீறி வரமாட்டானா?

     அவர்கள் இருவரும் அடித்துக் கொள்ளட்டும்; மிரட்டிக் கொள்ளட்டும்; அவரை ஏன் இழுக்க வேண்டும்?

     எத்தனை விரைவாக நடையைப் போட்டாலும், வீட்டின் அருகில் வருமுன்பு தான் கிருஷ்ணனை அவரால் முந்த முடிந்தது.

     பாரு அடுப்படியில் இருந்தாள். கிழவர் விளக்கருகில் பிரார்த்தனை கூறிக் கொண்டிருந்தார். அப்போதுதான் பள்ளியிலிருந்து வந்த நஞ்சன், அடுப்படியில் அம்மையிடம் பள்ளிச் செய்திகள் சொல்லிக் கொண்டிருந்தான்.

     நுழைந்ததுமே மூட்டையைக் கீழே வைத்த ஜோகி, பரபரப்புடன் தீப மாடத்து விளக்கை எடுத்துக் கொண்டு சென்ற போது, கிழவர், ‘நரி ஏதேனும் வந்திருக்குமோ?’ என்று எண்ணிக் கொண்டார்.

     “நில்! நில்லடா அங்கே!” - காலமெல்லாம் அடக்கிக் கொண்டிருந்த உணர்ச்சித் தீ தான் சொல்லாக வந்ததோ? பாருவின் கையில் பிடித்த தேநீர்ப் பாத்திரம் நழுவி விட்டது. வாயிலுக்கு ஓடி வந்தாள்.

     கையில் தீபத்துடன் ஜோகி, நடுங்கும் உடலுடன், துடிதுடிக்கும் உதடுகளுடன் எதிரே, அவள் காண்பவர்? கனவா, நினைவா?

     “சண்டைக்கும் சச்சரவுக்கும் அப்பால் எட்டி வந்தேனே! இங்கும் அமைதியைக் குலைக்க வந்தாயா? போ! போய் விடு!”

     ஜோகியண்ணணா கத்துகிறார்?

     “ஜோகி, இந்த விரோதம் முடிவில்லாமல் வளர வேண்டுமா? வேண்டாம். விரோதத்தை தீர்த்துக் கொள்ள, மனச்சுமையைக் குறைத்துக் கொள்ள, நான் வந்தேன்” கிருஷ்ணனின் குரல் தழுதழுத்தது.

     “நீ இங்கே வந்து உறவு கொண்டாடினால் இப்போது பகையும் விரோதமும் தீருமா? அந்த எண்ணம் முன்பே உனக்கு ஏனடா இல்லை? எங்களை விரோதிகளாகவே பாவித்து, விரோதத்தை வளர்க்கவே நீ எதிர்க்கட்சி கட்டவில்லை? உன் ஆட்களும் உறவும் ஊரும் வீம்புடன் எங்கள் மீது வருமம் காட்டவில்லை? ஊருக்கெல்லாம் பிளேகு ஊசி போட்டாய். ஆபத்தில் கூட எங்கள் மீது நீ பகை காட்டவில்லை? அம்மை காலமெல்லாம் சொல்லி அழுதார்களடா, காலமெல்லாம் சொல்லி அழுதார்கள். உன் பணமும் பதவியும் மதிப்பும் எங்களுக்கு வேண்டாம். போய் விடு. எங்கள் அமைதியை, இன்பத்தைக் குலைக்க நீ வராதே. உங்கள் பகையை வளர்க்க, நான் உறவு வேண்டவில்லை. போ! போ!”

     ஆயிரம் பதினாயிரம் கூரிய கற்களை வீசி அடித்திருந்தால் கூட, கிருஷ்ணனின் நெஞ்சில், அந்தச் சொற்களைப் போல் அவை குத்திக் கிழித்திருக்க மாட்டா.

     ஜோகியின் வாயிலிருந்து வந்த ஒவ்வொரு ‘போ! போ!’ என்ற ஒலியும், ஆயிரம் பதினாயிரம் வேல்களாகத் தாக்க, அவற்றைச் சகியாதவராய், இருளில் தனித்த உருவமாகக் கிருஷ்ணன் நடந்து சென்றதைப் பார்த்தாள் பாரு.

     வெறியின் உச்சத்திலிருந்து தணிந்தவராய், ஜோகி இரைக்க இரைக்க, தீபத்தை மாடத்தில் வைத்துவிட்டுக் கீழே அமர்ந்தார்.

     யாருமே பேசவில்லை.