உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
![]() |
அத்தியாயம் - 17 ரேவு இதற்கு முன் நாடகம் பார்த்திருக்கிறாள். ராம்ஜி, பரத் படித்த பள்ளிக்கூடத்தில் கட்டிட நிதிக்காகப் போட்ட நாடகத்துக்கு இருபது ரூபாய்க்கு டிக்கெட் வாங்கியிருந்தார்கள். கணவனுடன் அவளும் நாடகத்துக்குப் போயிருந்தாள். ‘தனிக்குடித்தனம்’ நாடகம். பிறகு இன்னொரு முறை பள்ளிக்கூடப் பிள்ளைகளே துருவன் நாடகம் போட்டார்கள். ஆனால் இந்த நாடகத்துக்கு மேடையுமில்லை, திரையுமில்லை. பளபளவென்று மின்னும் உடைகளோ, சாய மேக்கப்போ கிடையாது. ஆண் நடிகர்கள், வெற்று உடம்பும், கச்சையுமாக இருந்தார்கள். தோளில் ஒரு சிவப்புத் துண்டு அல்லது, தலையில் கட்டிய துண்டுடன் குதித்துக் குதித்து நடந்தார்கள். மாலதியும் ஷீலாவும் கட்டம் போட்ட ஒரு சாதாரணப் புடைவையை, பின் கொசுவம் வைத்து, கச்சம் பாய்ச்சாமல் உடுத்தியிருந்தார்கள். முடிச்சுப் போட்ட ஒற்றை இரவிக்கை. முடியை வாரி அள்ளிச் செருகி இருந்தார்கள். தங்கச்சி வம்பு பேசுபவளாக, மருமகள் மேல் கோள் சொல்லும் மாமியாக நடித்தாள். நாடகம் என்று கதையே இல்லை. தலையைக் கவிழ்த்து, முட்டிக்காலிட்டு உட்கார்ந்து இருக்கும் பெண்... குடித்து விட்டு வரும் புருஷன். அவன் ஆட்டம் ஒரு புறம் இருக்க, மாமியார்க்காரி, மருமகளையே ஏசுகிறாள். பேச்சு மிகக் குறைவு. உடல், முக அசைவுகளும், பின்னணியாகப் பறைக் கொட்டுப் போன்ற தாளமும் தான் அந்த நடிப்பை முழுமையாக்குகிறது. பிறந்த வீட்டிலிருந்து சீதனம் கொண்டு வரவில்லை; ஆண் குழந்தையைப் பெற்றுத் தரவில்லை. வந்தவுடன் மாமனை விழுங்கினாள்; எனவே தான் அவன் குடிக்கிறான் என்று நியாயம் பேசுகிறாள். அவன் குடித்துவிட்டு இரவில் விழுந்து இரத்தம் கொட்டக் கிடக்கையில், தன் வளையலையும் கம்மல்களையும் விற்று வைத்தியம் செய்கிறாள். சிறுமைப் படுகிறாள். ஆனால், மாமி அவனுக்கு வேறு பெண் பார்த்து, மணம் செய்து வைக்கிறாள். நாயகியாக நடிக்கும் ஷீலா தலைவிரிகோலமாக, சுற்றி இருந்து நாடகம் பார்க்கும் கூட்டத்தினரிடம் நியாயம் கேட்கிறாள்... பிள்ளை பெறுவதும் பெண் பெறுவதும் பெண் கையில் இல்லை... என்று விளக்க உரை தொடருகிறது. இப்படியே எழுத்தறிவுக்கான நாடகம் - குடியின் தீமை நாடகம் - சீதனக் கொடுமை நாடகம் என்று போடுகிறார்கள். அவளுக்குப் பொருந்தவில்லை. இரவு முழுவதும் இப்படித் தொடருமா? ஆமாம்... அவரவர் வெளியே சென்று சாப்பிட்டுவிட்டு வருகிறார்கள். ரேவுவுக்குப் பசியில்லை. ஆனால், ரங்கப்பாவுடன் நடந்து சென்று கடலைப் பார்த்துக் கொண்டு மணிக்கணக்கில் உட்கார்ந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ரங்கப்பா யார்? அவர், அவளுக்கு... உயிரினும் மேலான ஓர் உறவு போல் உணருகிறாள். அவர் அவளை விட்டு மற்றவர்களுடன் நேரத்தைக் கழிப்பதே பொறுக்கவில்லை. இது சரியா, தவறா என்று நின்று நிதானித்து ஆராயும் தயக்கமே அவளுக்கு அப்போது இல்லை. எழுந்து வெளியே வருகிறாள். ரங்கப்பா அவளையே பார்க்கிறார். எழுந்து வருகிறார். “ரேவம்மா, பசிக்கிறதா? போய்ச் சாப்பிடலாமா?” “...ம்...” “இங்கே இட்டிலிதான் போட்டிருக்கிறான். நாம் வெளியே ஓட்டலில் சாப்பிடலாமா?” “ம்...” அவரை எப்படியேனும் அழைத்துக் கொண்டு போய் விட வேண்டும். கொட்டையான புழுங்கலரிசிச் சோறும் குழம்பும் ருசிக்கவில்லை. கோயில் வாசலில் கூட்டம்... வண்ணங்கள்... ஒளி விளக்குகள்... “நாடகம் பார்க்க வேண்டாமா?...” “எனக்கு... உங்கக்கூட அப்படி மணல்ல உட்கார்ந்து கடலைப் பார்த்துக் கொண்டிருக்க வேணும் போல் இருக்கு...” “சரி...” அவருக்கு இஷ்டமில்லை என்று தோன்றினாலும், அந்தக் கருத்துக்கு இடம் கொடுக்காமலே ரேவு பற்றிக் கொள்கிறாள். இருவரும் உயரமான ஓர் இடத்தில் சென்று அமருகிறார்கள். கடலலைகள் - இரவில் கரும் சுருள் போல் ஓசையுடன் வருகின்றன. வானில் நட்சத்திரங்கள் இந்த அலைகளைப் பார்த்து ஏளனம் செய்வது போல் ஒளி சிந்துகின்றன. “நீங்கள் எத்தனை எழும்பினாலும், எங்களைப் போலாக முடியுமான்னு நட்சத்திரங்கள் கேட்கிறாப்போல இல்லை, அப்பா?” உற்சாகமில்லை. ஒருவகைத் தன்னிரக்கம் அக்குரலில் எதிரொலிக்கிறது. “அப்படியில்ல. வானந்தான் அதைக் கவர்ந்து இழுக்குது. கடல் போ, போ, உன் ஜம்பம் இங்கு செல்லாதுன்னு சிரிக்குது ரேவம்மா!” “இல்ல, இல்ல. நான் சொல்றதுதான் சரி. அத்தனை உறுதியும் வலுவும் இங்க... இல்லப்பா...” குரல், தழுதழுக்க, ரேவு முழங்காலில் தலையைக் கவிழ்த்துக் கொள்கிறாள். அவள் குலுங்குவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. “ஷ்... ரேவம்மா? என்ன இது?... நீ தைரியசாலி, கெட்டிக்காரப் பெண், எதுக்கு இப்ப?...” அந்த உணர்வுகள் கரைய நேரமாகிறது. அவர் அவள் முகத்தைத் தூக்கிக் கண்ணீரைத் துடைக்கையில் இன்னும் பெருகி வருகிறது. “ஷ்... ரேவம்மா, யாரானும் பார்த்தால் என்ன நினைப்பாங்க!” “எனக்கு... எனக்குப் பயமா இருக்கப்பா... நா... மலை உச்சி விளிம்பில நின்னுண்டிருக்கேன் போல இருக்கு... நா... நான் செத்துப் போயிருக்கக் கூடாதா?...” அவர் கைக்குட்டையால் கண்ணீரைத் துடைக்கிறார். “இப்படியெல்லாம் ஏன் நினைக்கிற?... உனக்கு நான் இருக்கேன். பயப்படாம இரு; உன்னை இங்க யாரேனும் ஏதேனும் கேட்டாங்களாம்மா?” “கேட்கல. என் அந்தராத்மா கேட்கறது. கொல்லுது. நீ கட்டின புருஷன விட்டுட்டு இப்படி இன்னொரு புருஷன் கூட தனியாக இருக்கணும், பேசணும், சிரிக்கணும்னு ஆசைப் படலாமா? பாவம் பண்ணுறியேன்னு இடிக்கிறது. எனக்கு எப்பவும் உங்க கூடவே இருக்கணும் போல தாபமா இருக்கு. நான் ஏன் இப்படியானேன்...? எனக்கு அப்பா சுகம் தெரியாது; அகமுடையான் சுகமும் தெரியாது. பிள்ளை மேல் கொஞ்சம் பிடிப்பு இருந்தது. அதுவும் பொய்யாயிடுத்து. கூடப் பிறந்தவாளும் எனக்கு இல்லேன்னு ஆயிட்டுது. அப்பா... அப்பா... நீங்களும் என்னை ஒதுக்கினால்... நான் தாங்க மாட்டேன். அதுக்கு முன்ன நீங்களே என்னைக் கொன்னு போடலாம். ரெண்டுக்கு நாலு தூக்கமாத்திரையைக் கரைச்சுக் குடுத்துட்டு...” அவர் அவள் வாயைப் பொத்துகிறார். “என்னைப் பேச விடுங்க ஸார்!” “வேண்டாம் உனக்குப் பேசத் தெரியல...” அப்படியே அவள் உட்கார்ந்திருக்கிறாள். இரைச்சலுக்கு நடுவே மௌனம். கண்ணீர் காய்ந்து போகிறது. சில்லென்று சாரல் வீசினாற் போல் குளிர்ச்சி படிகிறது. மணி எத்தனை ஆகியிருக்கும் என்று தெரியவில்லை. “ரேவம்மா... அவங்கல்லாம் எனக்காகக் காத்திருப்பாங்க...” அவள் பதில் கூறவில்லை. “அந்த நாடகங்களெல்லாம் பார்த்துட்டு, நான் பேசணும் தாயே!” “இப்படியே மணல்ல சரிஞ்சு, தண்ணிலே விழுந்திட்டா, சாவு சுகமாக இருக்குமாப்பா!” “உனக்கு சுகமா இருக்கலாம். ஆனா, போலீசு என் கையில் விலங்கை மாட்டிக் கூட்டிட்டுப் போய் அடைக்கும். அப்படி ஒரு நல்லது எனக்குச் செய்ய ஆசைப்படுறியா?” “நான் இனிமேல் படிச்சுப் பாஸ் பண்ணி, கவுரவமா வேலை செய்வேன்னு நீங்க நம்பறேளா?” “நம்பறேன்...” “ஆனா நான் நம்பலியே?” எப்படியேனும் அவரைத் தடுக்க வேண்டும் என்பது ஒன்றுதான் குறியாக இருக்கிறது. “ரேவம்மா, நீ ஏன் இப்ப இப்பிடி அடம்பிடிக்கிற தெரியுமா?” “உம்...?” “ஒரு பொண்ணு, ஓர் ஆணை எப்போதும் சார்ந்திருக்க... நெருங்கியிருக்க ஆசைப்படுகிறாள். அது இதுவரைக்கும் உனக்குக் கிடைக்கல; இதை நான் புரிஞ்சிட்டிருக்கேன். இதே போலத்தான் ஒரு ஆணும் பெண்ணைச் சார்ந்திருக்க ஆசைப்படுகிறான். அதனாலேயே அவளைக் கொடுமைப்படுத்தறான். எப்படின்னு கேட்கிறியா? ஒரு பெண் ஆணைச் சுமக்கிறாள்; பெறுகிறாள்; பால் கொடுக்கிறாள். முதலில், அந்தத் தாய்ச் சார்பில் கண் முழிக்கும் ஆண் எப்போதும் அதற்கு அடிமையாவது போலாகிறான். ஒரு குழந்தையும் பால் குடியை விடாது. ஆனால் பலவந்தமாக அவனைப் பிரிக்க வேண்டி இருக்கு. அந்த வன்மம் அவன் பெரியவனாகி, ஒரு பெண் தனக்கு உரிமையாகும் வரை இருக்கு. கஷ்டப்படுத்துறான்...” “அப்படிப் பார்க்கப் போனால் ஒரு பெண் குழந்தையும் இப்படித்தானே சார்ந்து இருக்கணும்...?” “ஆமாம். அதனால் தான் எந்த ஒரு பெண்ணும் இன்னொரு பெண்ணைப் புரிஞ்சுக்கறதில்ல. பொறாமைப் படுறா...” தன்னையே குத்துவது போல் இருக்கிறது. “நான் பொறாமைப் படுறேனாப்பா?” சுருதி இறங்கிப் போகிறது. “இல்லம்மா, இதெல்லாம் இயற்கையில் ஏற்படுவதுதான். இயற்கை இரண்டு பாலாரையும் ஒருவருக்கொருவர் அனுசரணையாக, ஆதரவாக இருக்கத்தான் படைச்சிருக்கு. ஒருத்தரை ஒருத்தர் வீணாக மனத்தாபப்பட்டுக் குதறிக்கிட்டா வாழ்க்கை நரகமாயிடும். நீ ஒரு தப்பும் பண்ணல. எழுந்து வா. ரூமில படுத்துத் தூங்கு... ரேவம்மா...” கனிந்த ஆதரவுடன் அவள் கைகளைப் பற்றி எழுப்புகிறார். மறுநாள் காலை கடலில் நீராட, மாலதியும் ஷீலாவும் தங்கச்சியும் கூட்டிச் செல்கிறார்கள். வரிசையில் நின்று கன்னியாகுமரி அம்மனைத் தரிசிக்கிறார்கள். காந்தி மண்டபம், விவேகானந்தர் மண்டபம் செல்கிறார்கள். கடலுக்கு நடுவில் பாறையில் - தியான மண்டபம், கடலிரைச்சலுக்கு மேல் மனித இரைச்சல், ஓம் என்ற அடையாளமும் விவேகானந்தரின் சிலையும், பார்க்கும் சில நிமிடங்களுக்கப்பால் மனசில் எந்தப் பாதிப்பையும் கொடுக்கவில்லை. சுசீந்திரத்துக்குத் தங்கச்சி மட்டுமே வருகிறாள். பெரிய குளத்தில் நீராடுவது சுகமாக இருக்கிறது. ‘கோயில் முழுதும் கண்டேன்... தெப்பக்குளம் கண்டேன்... தேரோடும் வீதி கண்டேன்... அந்த தேவாதி தேவனை நான் தேடியும் காண்கிலேனே...’ என்று மனம் மந்திரிக்கிறது. தங்கச்சியோ பரம பக்தையாக, ஒவ்வொரு சந்நிதியிலும் கும்பிடுகிறாள். நெடிதுயர்ந்த ஆஞ்சநேயரின் சிலைக்குப் பன்னீர் வாங்கிக் கொடுத்துச் சேவை செய்கிறாள். வழிநெடுகிலும் அவள் பேசவேயில்லை. அன்று ஆண்கள் பெண்கள் எல்லோருமாகப் பொதுப் பந்தியாக உணவு கொள்கிறார்கள். “ரேவம்மா, சுசீந்திரம் ஆஞ்சநேயர் பார்த்தாயோ?” “ஓ, பார்த்தேனே?...” “அதில் ஒரு விசேசம் கண்டாயா?” “என்ன... என்ன விசேசம்?” புரியவில்லை. மிக உயரம். ஏணிப்படிகளில் ஏறி பன்னீர் அபிடேகம் - மாலை சாத்தல் எல்லாம் நடத்தினார்கள். “பெரிதாக உயரமாக இருந்தது...?” “தங்கச்சி ஒன்றும் சொல்லலியோ?” ரேவு தங்கச்சியைப் பார்க்கிறாள். “எந்தப் பக்கம் நின்னு பார்த்தாலும் நம்மையே பார்க்கும்.” ரேவுவுக்கு வெட்கமாக, கோபமாக வருகிறது. தன்னை மட்டம் தட்டுகிறாரா? இதை முன்பே ஏன் சொல்லவில்லை? ஏன் எதிலும் தனக்கு மனம் பற்றவில்லை? இறுதி நாள் உபசாரம், வரவேற்பு உபசாரம் போல் இல்லை. அவரவர் மூட்டை கட்டுகிறார்கள். விடைபெற்றுக் கொண்டு திரும்ப பஸ்ஸுக்கு வரும் போது, ரேவுவுக்கு மனம் லேசாக இருக்கிறது. தெரிந்தவர் அறிந்தவர் என்ற பந்தம், பயம் இல்லை. காற்றிலே மிதந்து வரும் பூவிதழ் போல் மனசு சந்தோஷப்படுகிறது. “எனக்கு ஓரத்து ஸீட்...!” “சரி உட்காரு...” “இல்ல, நீங்களே உட்காருங்கோ!” அவளுக்கென்று ஒரு பயணப்பை... அவருக்கென்று ஒரு பயணப்பை. “நாம் நேராக மட்றாஸ் போறமா?” “பொறுத்திருந்து பாரேன்!” அவளுக்குப் பரபரப்பாக இருக்கிறது. எங்கோ தெரியாத இடத்துக்குப் போகிறார்களா? முன்பின் தெரியாத இடத்துக்கு... “எந்த இடம் அப்பா? சொந்தக்காரங்க, சிநேகிதங்க வீடுன்னா, நான் வரமாட்டேன்...” “நீ எனக்குச் சொந்தமா, சிநேகமா?” “ரெண்டுக்கும் மேல...” மெதுவாகச் சொல்கிறாள். அவர் கையைத் தன் கைக்குள் வைத்து அழுத்திக் கொள்கிறாள். பஸ் போகும் போது, அந்தக் காலை நேரத்தில், மிக இனிமையாக இருக்கிறது. ஓரிடத்தில் குழந்தை குட்டிகளுடன் நிறையப் பெண்கள் ஏறுகிறார்கள்... அலுவலகம் செல்லும் ஆண்களும் ஏறுகிறார்கள். குழந்தையுடன் நிற்கும் ஒரு பெண்ணுக்கு இடம் கொடுக்க ரங்கப்பா எழுந்து நிற்கிறார். ரேவுவுக்குப் பிடிக்கவில்லை. தடுக்கவும் முடியவில்லை. பத்து மணிக்கு நெல்லை வந்து சேர்ந்த பின், மீண்டும் பயணம் தொடருகிறது. ஓ... மலைகள் அருகே வருகின்றன. கோயில், குளம், வளைந்த பாதை... “மிக்க நலமுடைய மரங்கள் - எந்தப் பக்கத்தையும் மறைக்கும் வரைகள்... அங்கு பாடி நகர்ந்து வரும் நதிகள்...” அவர் தாம் அவள் காதருகே மெல்லப் பாடுகிறார். புல்லரிக்கிறது. கோயிலின் முன் வண்டி நிற்கிறது. பதினோரு மணி வெயில் ஏறும் கடுமை. மரங்களிலிருந்து வால் குரங்குகள் இவர்களைக் கண்டதும் சூழ்ந்து கொள்கின்றன. ரேவு அஞ்சி அவரைப் பற்றிக் கொள்கிறாள். “பயப்படாதே ரேவம்மா... போயிடும் அதெல்லாம்.” “பை, பர்சைக் கண்டா வரும்... தா...” என்று ஒருவன் ஓட்டுகிறான். மலைப்பாறைகளை உருட்டிக் கொண்டு ஆறு பளிங்காய்ப் பாய்ந்து செல்கிறது. ஆற்றில் முழுகி எத்தனை... நாட்களாயின? காவேரி - அகன்று மணலாக இருக்கும். இதுவோ... சுழித்து வேகமாகப் பாய்கிறது... பாறைகள்... “இதிலே குளிக்கலாமாப்பா?...” அவள் பரவசமாகிறாள். “ஆமாம்...” என்று மண்டபத்தில் பைகளை வைக்கிறார் அவர். |