உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
அத்தியாயம் - 2 புழுக்கத்தில் வெந்து குமுறிக் கொண்டு, ஒரு கிலோ பாமாலினுக்காக ஒன்றரை மணி நேரம் நின்றும், இவள் முறை வரு முன் கதவை அடைத்து விடுகிறார்கள். ரேஷன் கடை அராஜகங்களில் அகப்படுபவர்கள் எல்லோருமே அவளைப் போன்ற பூச்சிகள் தாம். ரேவு வெற்றுக் கையுடன் அந்தப் பகல் வெப்பத்தில் திரும்பி வருகையில் பூட்டிய கதவுக்கு முன் வேம்பு நிற்பதைப் பார்க்கிறாள். இவளுக்கு ஐந்து வயது இளைய உடன் பிறந்தான். இப்போதைக்கு ரேவுக்குப் பிறந்த வீட்டுச் சொந்தம் என்ற ஒரு உறவுடன் வருபவன் இவன் ஒருவன் தான். குடும்பம் என்ற ஒன்று, தாயின் நடவடிக்கையால் மூர்க்கத்தனமாகக் குலைக்கப்பட்ட போது, இவளுக்குக் கல்யாண நிழல் கிடைத்தது. அவன் எங்கோ ஓட்டலில் எடுபிடியாக ஒதுங்கியிருந்தாலும் அன்றிலிருந்து இத்தனை நாட்களில் ஒரு ‘நிரந்தரம்’ என்ற பிழைப்பாக இருந்திருக்கலாம். ஆனால் எங்கோ அநாதை வேதபாடசாலையில் ஒதுங்கினார்கள் தருமபரிபாலன குருமடத்தார். அங்கே சட்டதிட்டங்கள், பசி பட்டினி என்ற நிதரிசனங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஓடிப் போனான். “அசத்து, சத்தின் வயிற்றில் ஜனித்திருந்தால் தானே வேதம் புண்ணியம் என்று ஒட்டும்? கிணற்றுக்கரை அரிக்கஞ்சட்டியைத் தூக்கிண்டு ராவுக்கு ராவே ஓடிட்டது!” என்ற செய்தியை இவள் நோயாளி மாமியார், நாத்தனார் எல்லாரும் இவளை ஏசுவதற்கு வாகாகக் கிடைத்த எரிபொருளாகப் பயன்படுத்தினார்கள். பிறகு எத்தனையோ வருடங்கள் அவனை ரேவு பார்க்கவில்லை. மாமியார் இறந்து, நாத்தனார் திருமணமாகிச் சென்று, இவளும் குழந்தைகளும், புருஷனும் என்று குடும்பம் செய்த நாட்களில், “அக்கா! எப்படி இருக்கே?” என்று வந்தான். நன்றாக வளர்ந்து, முகத்தில் மீசை தாடி பசைத்து, குரலும் கட்டையாகி, ஆளே மாறியிருந்தான். “வேம்பு வாடா? அடையாளமே தெரியலியே? இவன் உன் பையனா அக்கா? உன்னாட்டமே அழகா வட்ட முகமா இருக்கான்...” என்று அப்போது எட்டு வயசாகியிருந்த பரத்தின் கையை ஆசையோடு பற்றி இழுக்க முயன்ற போது அவன் கையை விடுவித்துக் கொண்டு திரும்பிக் கொண்டது நினைவில் வருகிறது. அன்று பை நிறையப் பழமும் வெற்றிலை பாக்கு, பூ, ஒரு ரவிக்கைத் துண்டு என்று கொண்டு வந்திருந்தான். ஒரு மைசூர் பாகு பாக்கெட்டைத் திறந்து வைத்து, “அக்கா, நமஸ்காரம் பண்ணுறேன்!” என்றான் கண்ணீர் மல்க. அவளுக்கும் அப்போது கண்கள் பனித்தன. அவன் எங்கெங்கோ ரொம்பக் கஷ்டப்பட்டானாம். இப்போது ஒரு ரெடிமேட் துணிக்கடைக்காரரிடம் வேலையாக இருந்ததாகச் சொன்னான். அவர் ‘பாயா’ம். ரொம்ப நல்லவராம். அன்பாக நடத்துகிறாராம். ‘உறவு சனங்களை விடக்கூடாது. உன் அக்காளைப் போய்ப் பார்த்துவிட்டு வா’ன்னு சொல்லி அனுப்பினாராம். குழந்தைகள் விவரம் தெரியாததால் சட்டை எதுவும் வாங்கி வரவில்லை. அடுத்த மாசம் லீவு தரும் போது நான் அளவா சட்டை நிஜார் கொண்டு வரேன்க்கா” என்று சொன்னான். அதற்குப் பிறகு அவன் மாசம் ஒரு நடை போல் வந்தான். அவள் கணவன் இந்த மைத்துனனை மதிக்கவுமில்லை; பேசவுமில்லை. பையன்களும் கூட அண்டமாட்டார்கள். ஒரு தடவை நவராத்திரியின் போது வந்தான். “முதலாளி ஊருக்குப் போயிருக்கிறார். நான் நான்கு நாள் தங்கட்டுமாக்கா?” என்று கேட்டான். “எட்டு பேரோடு பிறந்துட்டு இப்படி ஒத்தொருத்தரா மாலை அறுந்து விழுந்தாற் போலானோமேன்னு நினைச்சால் அழுகை வருது. மங்களத்தின் விலாசம் கண்டுபிடிச்சுண்டு. அவாத்துக்கு நாக்பூரில் போனேன். ஒரு மகாராஷ்டிரக்காரங்ககிட்ட மிட்டாய்க்கடை வேலைக்குன்னு கூட்டிட்டுப் போனா. அங்கே விடிய விட்ய வேலை செய்ய இன்னொருத்தன் கிட்ட வித்துட்டா. நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு சொல்ல முடியாது அக்கா. அப்ப, அந்த மங்களம் என்னப் படியே ஏத்தலக்கா? ‘திருட்டுப் படவா, நீ நல்ல வழிய வரணும்னு குருசுவாமியே சேர்த்துவிட்டார். இப்படித் திருடித் தாண்டிப் பிழைக்க ஓடுவியா? உன்னால வெளில தலைகாட்ட முடியல! எனக்குப் பிறந்த வீட்டில் எல்லாரும் செத்தாச்சுன்னு தலை முழுகியாச்சு! போ!’ன்னு அடிச்சே விரட்டினாக்கா!” என்று அழுதான். “அது சரி, நீ ஏன் வேதபாடசாலையை விட்டு ஓடிப் போனே?” “அக்கா, பாடசாலையா அது? வாய்க்குவாய், ‘உன் அம்மா அவிசாரி, தேவடியா’ன்னு சொல்லுவா எல்லாரும். சீ! நம்ம அம்மா ஏனிப்படிச் செஞ்சா? கூத்தரசன் டாக்டர வச்சிண்டு ‘அவ குடும்ப மானத்தையே கெடுத்தா’ன்னெல்லாம் பேசினா. எனக்குப் பாதி நாளும் பழைய சோத்துப் பருக்கைக்கூடக் கிடைக்காது. மெய்தான். திருட ஒண்ணுமில்லை. அருக்கஞ் சட்டிய எடுத்துண்டு விடிகாலம் ஓடி வந்து, ஒரு வீட்டில் அதை அஞ்சு ரூபாய்க்குக் குடுத்திட்டுப் பட்டணம் வந்தேன்...” அவளுக்குத் துக்கம் நெஞ்சை அடைத்தது. அந்தத் தடவை - நவராத்திரியில் அவன் எவ்வளவு உதவியாக இருந்தான்? அவளுக்குத் தண்ணீர் அடித்துத் தருவான். கொலு வைப்பதில்லை என்றாலும் அவள் பூஜை, பாராயணம் செய்ய வேண்டும் என்பது கட்டாயம். சமஸ்கிருதம் நன்றாகத் தெரியுது. தமிழ் எழுத்துக்களில் அச்சாகி இருந்த ஒரு பழுப்பேறிய புத்தகத்தில் இருந்து ஸஹஸ்ரநாம பாராயணம் செய்ய வேண்டும். மடியாக ஒன்பது கஜம் உடுத்து, நைவேத்தியம் செய்ய வேண்டும். அவன் குளித்துவிட்டு அவளுக்கு வடைக்கு அறைத்துக் காய் நறுக்கி எல்லா உதவிகளும் செய்தான். அக்கம் பக்கம் நான்கு சுமங்கலிகளுக்கு வெற்றிலை பாக்குக் கொடுப்பது எப்போதும் வழக்கம். அவர்களிடம் தன் தம்பி என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டாள். அவனுக்கு ஒரு சட்டைத் துணியேனும் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் ஒவ்வொரு காசுக்கும் கணக்கு உண்டு. அவளால் எப்படிப் பிறந்த வீட்டு உறவைச் சீராட முடியும்? “அக்கா, நீ அந்த வயசிலேயே ஒம்பதாவது வந்திருந்தே. நான் மூணாவதில் இருந்தேன். நீ அப்பவே எனக்குப் பாடம் சொல்லிக் குடுப்பே. ‘படிக்கணும்டா வேம்பு. நாமெல்லாம் படிச்சித்தான், முன்னுக்கு வரணும். நான் எப்படியானும் டீச்சராவோ நர்சாகவோ ஆயிடுவேன்’னு சொல்லுவியே! இந்த அம்மா கடங்காரி மட்டும் நம்மை எல்லாம் அம்போன்னு விட்டுட்டு ஓடிப் போகாம இருந்தா இந்தக் கதி வருமா? எப்படியோ உன்னை நல்ல இடத்தில் அப்பா கல்யாணம் பண்ணிட்டார்...” என்று அவன் சொன்ன போது ரேவு காதைப் பொத்திக் கொண்டாள். “அதெல்லாம் இப்ப எதுக்குடா வேம்பு! பழசெல்லாம் மறக்கக்கூடிய ஒரு நல்ல வரம் ஸ்வாமி நமக்குத் தந்திருக்கிறார். அதை மறந்திடு!” என்றாள் அப்போது. “எப்படியக்கா மறக்க முடியும்? பழைய முதலாளி என்னைச் சரக்குக் கொண்டு போறப்ப கோயமுத்தூர் கூட்டிண்டு போனார். அங்கே ஒரு ஓட்டல்ல பாலு அண்ணாவைப் பார்த்தேன். சரக்கு மாஸ்டரா இருக்கானாம். கல்யாணம் காட்சி இல்லாம, ஒரு விடோ பொண்ணைத் தொடுப்பா வச்சிட்டிருக்கிறான். ஃபுல்லா குடிச்சிட்டு அவ வீட்டிலேயே உருண்டு கிடக்கிறான். சீ... என்ன குடும்பம்! அப்பா பாகவதர், வேதவித்துன்னு பரம்பரை, தருமம் சொல்லும் குருமடத்தில் காலட்சேபம்... இதெல்லாம் சொல்லுக்கும்படி இல்லியே?” “வேம்பு, அதெல்லாம் மறந்துடுடா, நீ ஏதோ வந்தே, எனக்கு ஒத்தாசையா இருந்தே. உன்னை உட்கார்த்தி வச்சி, ரெண்டு வேளை சாதம் போடறேன். அதுவே திருப்திதான்டா. வந்துண்டு போயிண்டு இரு” என்று அனுப்பினாள். ஆனால் அவன் வெளியில் சென்ற அடுத்த நாளே அவள் புருஷன் கடுகடுவென்று குதித்தான். “திருட்டுப் பயலை என்ன சீராட்ட வேண்டியிருக்கு? என் சட்டைப் பையில் குத்திட்டிருந்த பேனாவை அபேஸ் பண்ணிண்டு போயிட்டான்!” என்று அபாண்டப் பழியைச் சுமத்தினான். பிறகு எப்போதாவது அபூர்வமாகவே வருவான். வருஷத்தில் ஒரு தரம் - என்ற மாதிரி. பழம், பூ, ஸ்வீட் பாக்கெட் என்று வருவான். “இதெல்லாம் எதுக்கடா வேம்பு செலவழிக்கிறே?” என்று சொல்வான். அவன் வேலை செய்யுமிடமோ விலாசமோ கூடக் கேட்டதில்லை. இப்போது வெகுநாட்களுக்குப் பிறகு, ஒன்றரை வருஷமிருக்கும் வந்திருக்கிறான். உடம்பு வாடிக் கறுத்து முன்முடி கொட்டிக் காட்சியளிக்கிறான். “வாப்பா வேம்பு, ரொம்ப நாழியாச்சோ? பாமாயில் போடுறான்னு நின்னேன், நின்னேன். கடைசியில் இன்னிக்கு கிரசின், சர்க்கரை, எதுவும் போடல. ஊமை வெயில் உருக்கறது...” என்று சாவியை எடுத்துக் கதவைத் திறக்கிறாள். “உள்ளே வா! ஏம்ப்பா. எப்படியோ இருக்கே? உடம்பு சரியில்லையா?” “அதெல்லாம் இல்லக்கா... ஒரு வாரமாவே சாப்பாடு சரியில்ல. பாயம்மா போய் டாக்டர்ட்டக் காட்டிக்கோன்னா. அவன் யூரின் டெஸ்ட் பண்ணிட்டு மஞ்சக் காமாலை இருக்குன்னான். சும்மா சொல்லக் கூடாது. பாய் இருக்கறப்பவே என்னைப் பிள்ளையாட்டந்தான் பாத்துண்டிருந்தார். அவர் போனப்புறம், பாயம்மாக்கு நான் தான் எல்லாமே! அக்கா, பாயம்மா நம்மவங்க. பாய்தான் முஸ்லிம். எனக்கு அம்மாவே தான். அவங்க வீட்ல கறி மீன் எதுவும் கிடையாது. முன்னே வேலை செய்தேனே அவ வீட்டில அதெல்லாம் உண்டு. நமாஸ் பண்ணுவா; துவா சொல்லுவா... ஆனா இவா வீட்டில் ரொம்ப வித்தியாசம்...” என்று விவரிக்கிறான். “போதும்டா வேம்பு. நீ பாய் வீட்டிலே சாப்பிட்டுண்டு இருக்கேன்னு சொல்லிக்காதே. ஏண்டா, நா முன்னேயே கேட்கணும்னு இருந்தேன். நீ பூணூல் போட்டுண்டு இருக்கியோ?... சந்தி பண்ணுறியோ இல்லையோ தெரியல...” “அக்கா அதெல்லாம் வேஷம். இந்த பாய்கிட்ட நான் வந்து ஏழு வருஷம் ஆகப் போவுது. இப்ப அவர் காலமாய் ஆறு மாசம் ஆறது. இவர் பெரிய தேசபக்தர். சுதந்தரப் போராட்டத்தில் ஈடுபட்டு ஜெயிலுக்கெல்லாம் போனவர். ஆனால் கம்யூனிஸ்ட். சாமி, தொழுகை அது இதுன்னு வேஷம் போடமாட்டேன் தம்பி. நான் மனிதன்; நீ மனிதன். தெய்வம்னு ஒண்ணை மனுஷன் தான் படைச்சு, தன் பலவீனத்தை அதில் மறைச்சுக்கறான் என்பார். சுதந்தரப் போராட்டத்தில் ஈடுபட்டு, ஜெயிலில் கசையடி வாங்கித் தியாகம் பண்ணினவருக்கு, அரசு தியாகி, நிலம், சலுகை எல்லாம் கொடுத்ததை வாங்கிக் கொள்ளவேயில்லை. அவ்வளவு உத்தமர். தொழிலாளர் - பாட்டாளி சங்கங்களுக்கெல்லாம் தலைவர்ன்னாலும் பாட்டாளியாகவே இருந்தார். ‘தையல் கடை’ தான் பிழைப்பு. நானும் மிஷின் ஓட்டறேன். இருக்கும் வீடு கூடச் சொந்தமில்லை. பாயம்மா பதினஞ்சு வயசில் போராட்டத்தில் ஈடுபட்ட காலத்தில், அதாவது இவள் அண்ணன் ரயில்வேயில் வேலை பார்த்த காலத்தில், இவர் வீட்டில் பாய் வந்து தங்கினாராம். அப்போது கல்யாணம் பண்ணிக் கொண்டாராம். குழந்தைகளே பிறக்கலியாம். கடையில் ஏதோ வருது... எல்லோரும் ரெடிமேட்னு போயிடறாங்க...” என்று இப்போது தான் விவரம் கூறுகிறான். “சாப்பிட்டாயா நீ? மஞ்சட்காமாலைன்னா? கீழாநெல்லியை அரைச்சு மோரில கலக்கிக் குடுக்கலாம். முன்ன இந்த வீட்டிலே கொல்லை வாசல்னு இருந்தது. எல்லாம் தான் வித்து, மண்ணே இல்லாத சிமிட்டியாயிடுத்து. இந்தச் சைதாப்பேட்டையில் கையகல மண்ணில்லாம வீடு... மோருஞ்சாதம் சாப்பிடுறியா?...” “பாயம்மாக்கு உடம்பு சரியில்ல. பாவம். அவளால் ஒண்ணும் முடியல. எங்கிட்ட என்ன உடம்புன்னும் சொல்ல மாட்டேங்கறா. ‘எனக்கு ஒண்ணும் இல்ல, வயசாச்சில்ல, நீ போயி உன் அக்கா வீட்ல தங்கி பத்தியமா எதானும் சாப்பிட்டு உடம்பப் பார்த்துக்கப்பா, கடை கிடக்கட்டும்’னு அனுப்பினா. நம்ம குடும்ப உறவெல்லாம் தெரியாது. எனக்கு ஒரே ஒரு அக்கா, நீதான் உறவுன்னு சொல்லிருக்கேன். மோருஞ்சாதம் இருந்தாப் போடு” என்று உட்காருகிறான். அவனை உட்கார்த்திவிட்டு, உள்ளே சென்று கை கால்களைக் கழுவிக் கொள்கிறாள். ஒரு தட்டை வைத்துச் சாதமும் மோருமாகக் கரைத்துப் போடுகிறாள். ஒரு உப்பு நாரத்தங்காய்த் துண்டமும் வைக்கிறாள். அவன் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டே நிற்கிறாள். “ஏன்க்கா, நிற்கிறே? நீ சாப்பிட்டாச்சா...?” அப்போதுதான் அவளுக்குத் தான் சாப்பிடவில்லை என்ற நினைவே வருகிறது. “சாப்பிடணும்... உனக்கு இன்னும் கொஞ்சம் போடட்டுமா வேம்பு?... சாயங்காலமா கோவில்ல ஒரு குருக்கள் மந்திரிப்பார்னு சொன்னா - முன்ன பரத்துக்கு வந்திருந்தது. அப்படியே அங்கே எங்கானும் கிழாநெல்லி இருந்தா எடுத்துண்டு வரேன். படுத்துக்கோ பேசாம...” என்று கூறுகிறாள். அந்தக் கூடம் தாவாரம் - முற்றம் என்று பழைய பாணி வீட்டில், ராம்ஜியும் பரத்தும் படிக்க இரண்டு மூங்கில் பிரம்பு மேஜைகள் கூடத்தில் தான் கிடக்கின்றன. பழைய சுவர் அலமாரிகளில் அவர்கள் புத்தகங்கள். மேலே குக்குக்கென்று சத்தமிடும் பழைய விசிறி. முற்றம் திறந்திருந்தால் பத்திரமில்லை என்று சிமிந்துத் தகடு போட்டு அடைத்திருப்பதால் காற்று கொல்லை வாயிற் புறங்களைத் திறந்தால் தான் வரும். இப்போது ‘கரண்டும்’ இல்லை. ஒரு பாயை ஓரமாகப் போட்டு, கை விசிறி ஒன்றைத் தேடிக் கொடுக்கிறாள். பின்னே ஒரு பழைய கிணறு இருந்தது. அதில் எப்போதுமே அவளுக்குத் தெரிந்து நல்ல தண்ணீர் கிடையாது. ஒரே உப்புக் கடலாகக் கரிக்கும். அதைக் குளிக்க, துணி துவைக்கக் கூட உபயோகப்படுத்த முடியாது. அதிலும் தண்ணீரே இல்லாமலான பின் மூடி விட்டார்கள். ஒரு அடிபம்பு போர் போட்டு இறக்கி இருக்கிறார்கள். அதில் அடித்துத் தண்ணீர் எடுக்க வேண்டும். அது சுமாராக நன்றாக இருக்கும். வெளியில் கார்ப்பரேஷன் குழாயில் இருந்து முன்பு தண்ணீர் கொண்டு வருவார்கள். இப்போது, லாரியில் தான் கொண்டு வந்து ஊற்றுகிறான். தண்ணீர் எடுப்பதிலேயே ரேவு தேய்ந்து போகிறாள். அதுவும் மாதம் மூன்று நாள் வந்துவிட்டால், ஆசாரம், வேலைக்குக் குந்தகமாகாதாம். அவன் வைத்திருக்கும் சாஸ்திரம்; தண்ணீரடிக்கலாம்! சோற்றில் குழம்பை ஊற்றி, உருட்டிப் போட்டு விழுங்குகிறாள். இந்தச் சோற்றுக்கு, என்ன உழைப்பு! உழைப்பு மட்டுமா?... கண்ணீரை விழுங்கிக் கொண்டு தட்டைக் கழுவிவிட்டு சாப்பிட்ட இடத்தைச் சுத்தம் செய்கிறாள். வேம்பு படுத்த சுருக்கில் தூங்கி இருக்கிறான். அவனைப் பார்க்கும் போது பரிதாபமாக இருக்கிறது. எட்டு வயசுப் பிள்ளை... அவனைக் கொண்டு எங்கோ விட்டுக் கைகழுவின அப்பன்... அப்பன்...! சட்டென்று பத்திரிகையை அப்படியே வைத்த நினைவு வருகிறது. அந்த அறையில் ஒரு கட்டை மணையைத் தலைக்கு வைத்துப் படுத்தபடியே ரேவு பத்திரிகையைப் பிரிக்கிறாள். “எங்கள் தாம்பத்தியம் பொன்விழாக் கண்டது!” என்ற சிறப்புடன் நித்யசுமங்கலி - பகுதியில் வந்திருக்கும் கட்டுரையில், அறுபதைக் கடந்த சுபலட்சுமியும், அவள் கணவர் எழுபத்திரண்டு வயசுச் சுந்தரராமனும் மாலையுடன் காட்சி தருகின்றனர். என் வாழ்க்கை நிறைவாக இருக்கிறது; எனக்கு நான்கு பெண்கள்; மூன்று பிள்ளைகள். என் பதினான்காம் வயசில் இவரை மணந்து கொண்டு மைத்துனர்கள், நாத்தனார்கள் மாமியார் - மாமனார், கொட்டில் பசு என்று பெரிய குடும்பத்துக்கு வந்தேன்... “சட்... இதெல்லாம் மேல் பூச்சு! நிசமாக சந்தோஷமாடீ?” இந்த மாசப் பரிசு பெறும்... சவ்வரிசி டோக்ளா... கேழ்வரகு கட்லெட்... பெரிய டின்னர் செட் பரிசு பெற்ற பெண்ணின் படம்... வாழைக்காயில் பர்பியும், போண்டாவும் செய்யலாம்... குருசுவாமிகள் அருளுரை... அபயஹஸ்தம் - முத்திரைப் பல் சிரிப்பு; முட்டாக்கு. பெண்கள் இக்காலத்தில் வேலை செய்யப் போகிறார்கள். அவர்கள் வீட்டில், பதிக்கேற்ற சதியாக இருப்பதுதான் பாரத தர்மம். அம்பாள் இந்த பூலோகத்தையே கர்ப்பத்தில் தாங்கினாள். ஸ்ரீமந்நாராயணன், தன் பத்னியாகிய பூமிதேவிக்கு அந்தச் சிரமம் வரக்கூடாது என்று அந்தப் பளுவைத் தன் உந்திக் கமலத்தில் பெற்று, பிரம்மதேவனை உண்டாக்கினார். பிரும்மா இந்த உலகைப் படைத்தார். பெண்கள் என்றும் எப்போதும் பதிசேவையை மறக்கலாகாது. திருமணமாகாமல் இருப்பதும் இந்து தர்மத்துக்கு விரோதமானது. இதனால் தான் இன்று பூலோகத்தில், வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கை உத்பாதங்கள் நிகழ்கின்றன... எனவே அதர்மங்களுக்குப் பெண்கள் காரணமாகிறார்கள். சாஸ்திர விரோதமான காரியங்களில் அவர்கள் ஈடுபடக் கூடாது... நாராயணா... ரேவு பரக்பரக்கென்று பக்கங்களைத் தள்ளுகிறாள். சொர்க்க ஆறுதல் கற்பித்த பத்திரிகை இன்று விஷமாகிறது. நெஞ்சமர் தோழி - தீர்ப்பாம் தீர்ப்பு! எல்லாம் பொய்! பத்திரிகையைத் தூக்கிக் கூடப் போட முடியாது. பிறத்தியார் சொத்து...! பரத் வந்து விட்டான். அதுதான் கதவை இப்படித் தள்ளிக் கொண்டு வரும்! ரேவு எழுந்து வருகிறாள். |