உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
அத்தியாயம் - 8 ரேவு இது வரையிலும் தனியாகச் சென்று ஃபோன் பண்ணியது இல்லை. அவள் ஃபோனில் பேசியதில்லை. இதை சுதாவிடம் சொல்லவும் கூச்சமாக இருக்கிறது. ஆனால் அவர்... அவர் சொன்னார். பயம் எதற்கு? என்ன கூச்சம்? தைரியம், துணிவு வேண்டும்... கடைவீதிக்குத் தினமும் போகிறாள். தொலைபேசி எல்லா இடங்களிலும் இருக்கிறது. அவள் சாமான் வாங்கும் கடையில் இருக்கிறது. மருந்துக்கடை, துணிக்கடை, ஏன், இதற்கென்றே ஒரு கால் ஊனமானவர் கடைபோல் வைத்துக் கொண்டிருக்கிறார். ரேவு துணிச்சலாக அடுத்த நாள் காலையில் அங்கு சென்று நிற்கிறாள். “...வந்து, எனக்கு ஒரு போன் பண்ணனும். எவ்வளவு?” “ஒரு ரூபா... நம்பர் சொல்லுங்க...” இவள் துண்டுச் சீட்டில் எழுதி வந்த நம்பரைக் காட்டுகிறாள். அவரே இலக்கங்களைச் சுற்றிவிட்டு, இவள் பக்கம் கொடுக்கிறார். மணி அடிக்கிறது. யாரோ எடுத்து, ‘பவர் லாண்டிரி!’ என்று குரல் கொடுக்கிறார்கள். “...வந்து ...ப்ளீஸ் வேம்பு, தையல் கடை வேம்புவைக் கூப்பிடுறேளா?” இரவெல்லாம் இவள் ஒத்திகை பார்த்துக் கொண்ட உரையாடல். ‘ஒன் மினிட்’ என்று சொல்லிவிட்டுப் போகிறான். “வேம்பு பையா, வேம்பு பையா!” என்று கூப்பிடும் குரல் கேட்கிறது. சிறிது நேரம் சென்ற பின், “வேம்பு பையா இல்ல. கடை பூட்டிருக்கு. அம்மாள அழைச்சிட்டு ரிக்க்ஷால போனான்.” மிக மெதுவாகக் கேட்கிறது. ரேவுவுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. “ஹலோ... வேம்பு பையன் இல்லீங்க. நீங்க யாரு கூப்பிட்டான்னு சொல்லுங்க போரும்...” போனை அவரிடம் கொடுத்து விடுகிறாள். “மூணு ரூபாயாச்சும்மா!...” ஏன் என்று கேட்கவில்லை. பேசியாயிற்று. அதே ஆறுதல். மூன்று ரூபாயைக் கொடுத்துவிட்டு விடுவிடென்று வீடு திரும்புகிறாள். மனசில் உள்ளே அமுக்கிக் கிடந்த ஆவல்கள் குறுகுறுவென்று தலைநீட்டுகின்றன. அவள் வேம்புவின் வீட்டுக்கு புதிய மனிதர்களின் நடுவே போகப் போகிறாள். இந்த வீடு - இதன் பொறூப்புகள் அரிசி, உப்பு, புளி, அரையல், கரையல், இலுப்பச்சட்டிக்கரி இதெல்லாம் இல்லாத ஒரு இடம்... வேம்பு பாயம்மாவைக் கூப்பிட்டுக் கொண்டு எங்கே போயிருப்பான்? அவளுக்குப் பிள்ளைபோல என்றான். ஆஸ்பத்திரிக்குப் போயிருப்பானோ?... இவள் பாயம்மாவைப் பார்த்து, வேம்புவுக்கு எப்படியோ ஒரு நல்ல பெண்ணாகப் பார்த்துக் கல்யாணம் செய்து வைக்கச் சொல்ல வேணும். சாதி... எந்த சாதியானால் என்ன?... அவனுக்கேற்ற பெண்... அந்த அவர் சொன்னாரே, பணக்கார அம்மா அப்பாவைப் பற்றி... ஒவ்வொரு குடும்பத்திலும் கண்ணுக்குத் தெரியாமல் எத்தனை முடிச்சுகள்! ...ரேவுக்கு மனம் எங்கெங்கோ செல்கிறது. உடம்பு - கைகள் இயந்திரமாக இயங்குகின்றன. “ஏய்! புத்தி எங்கே ஊர் மேயப் போயிடுத்தா? மோரூத்து! நெய்யைக் கொண்டு வரே” என்று கணவன் கடித்துத் துப்புகிறான். “ஐயோடி!” என்று சிரித்துக் கொண்டு ரேவு தலையில் தட்டிக் கொள்கிறாள். இதற்கு முன்பும் இப்படி மறதியாகச் செய்திருக்கிறாள். ஆனால் இப்போது சிரிப்பு வருகிறது. “என்னடி இளிப்பு இப்ப? எவன நினைச்சிட்டு இளிப்பு? இந்தப் பக்கத்துக் குடித்தனத்தைத் தூக்கி எறிஞ்சாத்தான் நீ வழிக்கு வருவே! நானும் பையன்களும் பகல் முழுதும் இருக்கிறதில்ல. நீ என்ன செய்யறியோ, எங்கே மேயப் போறியோ? யார் கண்டா?” இப்போது, ரங்கசாமி - அவரை நினைத்துக் கொள்கிறாள். ‘என்ன பயம்... என்ன பயம் எனக்கு? சிரிப்பேன்... இதைக் கட்டுப்படுத்த நீ யார்? நான் பத்து நாள் உன்னை விட்டு, இந்த வீட்டை விட்டு நிம்மதியாகப் போகப் போகிறேன்...’ சிரிப்பு உதடுகளில் இப்போதும் எட்டிப் பார்க்கிறது. “ஏண்டி தேவடியா? யாரை நினைச்சிச் சிரிப்பு இப்ப?...” “ஒண்ணுமில்ல, உங்களத் தவிர யாரிருக்கா எனக்கு. நீங்க கோவலனா இருக்கலாம். நான் கண்ணகிதான்.” “என்னடீ? ட்யூன் புதிசா இருக்கு? டயலாக் பேசற? இதெல்லாம் அந்தச் சிறுக்கி சகவாசம். கதவை அறைஞ்சு சீல் வச்சிடறேன் பாரு...” என்று கத்திவிட்டுப் போகிறான். ‘இருடா... நான் மிஷினில்லைன்னு நிரூபிக்கிறேன்...’ என்று கருவிக் கொள்கிறாள். உண்மையில் அவளுக்கு அழுகை வரவில்லை. துணிச்சல் வந்திருக்கிறது. தடை குறுகக் குறுக, அதை மீற வேண்டும் என்ற வேகமே முன் நிற்கிறது. மூன்று நாட்கள், காலையிலும் மாலையிலும் வேம்பு வருவான் என்று எதிர்பார்க்கிறாள். ஒருகால் பாயம்மாவுக்கு உடம்பு சரியில்லையோ என்னவோ? எனவே, மறுபடியும் அதே ஊனமுற்றோர் - பூத்தில் சென்று ‘போன்’ பேசப் போகிறாள். “...பவர் லாண்டிரியா, வேம்புவைக் கூப்பிடுகிறீங்களா கொஞ்சம்? சைதாப்பேட்டையில் இருந்து அக்கா பேசறேன்...” அவன் “லைன்ல இருங்க” என்று சொல்லிவிட்டுப் போகிறான். நெஞ்சு வேகமாகத் துடிக்கிறது. “பிள்ளை யாரப்பா. வேம்பு இருக்கட்டும்... வரட்டும்...” “ஹலோ...” வேம்புதான். “நான் தாண்டா அக்கா ரேவு பேசறேன். மூணு நாளைக்கு முன்னே இப்படிக் கூப்பிட்டேன். நீ இல்லை...” “ஆமாம்க்கா, பாயம்மாவுக்குத் திடீர்னு உடம்பு சரியில்லாமப் போயிட்டுது. ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப் போனேன். ரெண்டு நாள் அங்கே இருக்கும்படி ஆயிட்டது. நேத்துத்தான் கூட்டி வந்தேன்... கடையே திறக்கல நாலு நாளா...” “நான் அங்கு வரேன் வேம்பு. ஒரு பத்து நாள்... உனக்கு ஒத்தாசையாயிருக்கும்.” அவன் திடுக்கிட்டாற்போல், “நீயா? நீ இங்க வரியா?” என்று திருப்பிக் கேட்கிறான். “ஏன், நான் வரக்கூடாதா? சின்ன இடம்னு சொல்றியா?” “அதெல்லாமில்ல அக்கா, நீ வீட்ட விட்டுட்டு எப்படி வருவே? அத்திம்பேர் உன்ன வீட்ட விட்டு வர விடுவாரா?” “அவர் என்ன விடறது? அவர் என்ன, எனக்கு ஜெயிலதிகாரியா? எனக்கும் எங்கேனும் போய் நாலஞ்சு நாள் தங்கணும்னு ஆசையிருக்காதா? இந்த சமயத்தில் உனக்கும் ஒத்தாசையா இருக்கும்...” “நீ வரதப்பத்தி எனக்கொண்ணும் ஆட்சேபம் இல்ல. ஆனா, நாளைக்கு அத்திம்பேர் நான் தான் உன்னை இங்க கூட்டி வந்துட்டேன்னு கன்னா பின்னாவென்று அவதூறு பேசி வம்பு பண்ணினார்னா என்ன பண்ணுறது? நான் ஒரு நாள் வந்ததுக்கு அத்திம்பேர் மட்டுமில்ல, இந்த சின்னப்பையன் பரத் முதற்கொண்டு தூக்கி எறிஞ்சி பேசினான். எனக்கு நீ வரதில சந்தோஷம்தான். ஆனால் அது உனக்கே தீம்பா முடியும். எனக்கு இங்க நிறைய மனுஷா இருக்கா. இப்பவே பாயம்மாவுக்கு உடம்பு சரியில்லேன்னதும், எம்.எல்.ஏக்குத் தெரிஞ்சு வந்து பார்த்தார்...” அவன் எங்கே உதறி விடுவானோ என்று அஞ்சி, “நான் வரேண்டா வேம்பு. பாயம்மாவை இப்ப நான் பார்க்கணும். எப்படி வர, வழி சொல்லு!” என்று பற்றிக் கொள்கிறாள். “அப்படியா? சைதாப்பேட்டைலேர்ந்து அம்பத்தூர் வர பஸ்ஸில் ஏறிக்கோ, பிரிட்டானியா பஸ் ஸ்டாப்பில் இறங்கி வலது கைப்பக்கம் ரெண்டாவது தெரு. ரகுபதி டிரேடர்ஸ்னு ஒரு போர்டு இருக்கும் மூணாவது வீடு. வாசல்ல கடை. உள்ளே சந்து போல போகும் வீடு... ஸ்ரீராம்ஜீயையோ, பரத்தையோ கூட்டிட்டு நாளைக்குப் பத்து மணிக்குமேல் புறப்பட்டு வா. கூட்டம் ரொம்ப இருக்காது!...” நடுக்கதவை, அவன் பெரிய பூட்டுப் போட்டுப் பூட்டி இருக்கிறான். காலையில் வேலைக்காரி தண்ணீர் அடிக்க வரும் போது ரேவு சுதாவைப் பின்னே வரச் சொல்லி அனுப்புகிறாள். “சுதா, நான் முடிவு பண்ணிப் பேசிட்டேன். இது, ஃபோன் நம்பர். நீங்க எதானும் பேசணும்னா, பேசலாம். பத்து மணிக்கு மேலே போறேன்...” “ரேவு மாமி! உங்களுக்கு நல்ல காலம் வந்துடுத்து. கவலைப்படாம போங்கோ! நான் பாத்துக்கறேன்...” என்று அனுப்புகிறாள். வழக்கம் போல் சமைத்து, டிபன் பண்ணி, அவர்கள் மூவரையும் அனுப்புகிறாள். ராம்ஜிக்கு ஏதோ பரீட்சையாம்... இரண்டு மணிக்குள் வந்து விடுவேனென்றான். சுதா வீட்டில், ரகுவிடம் சாவியைக் கொடுத்துவிட்டுப் பையுடன் அவள் விடுவிடென்று நடக்கிறாள். துணிந்த பின் துயரில்லை. பஸ் நம்பரைப் பார்த்து ஏறுகிறாள். கூட்டமில்லை. உட்கார இடம் கிடைக்கிறது. ஏறி உட்காற்ந்த பிறகுதான் வெறுங்கையுடன் போகிறோமே என்று தோன்றுகிறது... இறங்குமிடத்தில் பழம் ஏதேனும் கிடைக்கும், வாங்கிக் கொள்ளலாம் என்று நினைக்கிறாள். பஸ்ஸை விட்டு, பிஸ்கோத்து மணக்கும் இடத்தில் இறங்குகிறாள். தெரு முனையில் தள்ளுவண்டியில் பச்சை வாழைப்பழம் வைத்திருக்கிறான். விலை பேசி ஒரு சீப்பு வாங்கிப் பை மேலாக வைத்துக் கொள்கிறாள். ரகுபதி டிரேடர்ஸ்... மூன்றாவது வீடு... இதோ, பவர் லாண்டிரி... மூன்றாவது வீடு... வாயில் தையல் கடை... பூட்டு... சந்து... உள்ளே ரேவதி நுழைகிறாள். இருட்டான கூடம். பழைய நாளைய மரப்பெஞ்சு - கட்டில் போன்றது... ஒரு சாய்வு நாற்காலி... உள்ளிருந்து ஏதோ... நாற்றம்... முகம் சுளிக்கிறது. யாரையும் காணோம், வேம்பு... இதற்குள் உள்ளிருந்து ஒரு பெண் வருகிறாள். வெள்ளையாக இருக்கிறாள். கழுத்தில் கருகமணிச்சரம்; கைகளில் சிவப்பு வளையல்கள் பளிச்சென்று தெருகின்றன. “வேம்பு, பாயம்மா... இல்ல?” “ஆமாம், நீங்க யாரு?... பாயம்மாவுக்கு ரொம்ப உடம்பு சரியில்லாம அவர் ஆஸ்பத்திரில சேர்த்திருக்கிறாரு...” “நீங்க... நீங்க யாரு?...” “நீங்க யாருன்னு முதல்ல சொல்லுங்க...” “நான்... வேம்புக்கு அக்கா, நேத்து, இன்னிக்கு வரேன்னு ஃபோன் பண்ணிருந்தேன். நீங்க யாரு? பாயம்மா உறவா?” “ஆமா. அவங்க அண்ணன் மக...” ‘அண்ணன் மகளா? அப்படி ஒரு உறவு இருப்பதாகவே சொல்லலியே?’ என்று ரேவு சற்றே திகைக்கிறாள். சுற்று முற்றும் பார்க்கிறாள். பழைய ஜமக்காளப் படுக்கை சுற்றி வைக்கப்பட்டிருக்கிறது. சுவரில் வரிசையாகப் படங்கள் காந்தி... ஒற்றைப்பல் தெரியும் சிரிப்புடன்... ஒரு திறந்த அலமாரியில் பழைய புத்தகங்கள்... இவள் வீட்டில் இருக்குமே அப்படி... “நீங்கள் என்ன உள்ளேயே வந்துட்டீங்க! நீங்க யாருன்னே எனக்குத் தெரியல. வாசலுக்குப் போங்கோ...” ரேவுக்குக் கோபமாக வருகிறது. அந்த அகன்ற கட்டில் போன்ற பெஞ்சில் பையை வைத்துக் கொண்டு உட்காருகிறாள். ‘நான் எதுக்குப் போகணும்...?’ வாசலில் பார்வையைப் பதிக்கிறாள். இவளும்... பாயம்மா சொந்தக்காரியா?... அவா ஒண்ணும் சாப்பிடாதவன்னா, மீனோ எதுவோ நாத்தம் குமட்டுது... ஆண்டவனே, இந்த இடத்துச் சமையல் உள்ளைச் சொந்தமாக்கிட்டுப் பத்து நாள் இருப்பதாக வந்தாளே? வேம்புத் தடியன் அதனால் தான் வராதேன்னு சொல்வது போல் தயங்கினானா? இவள்... என்ன ஜாதி துளுக்கச்சின்னா - கருமணி... அவாளும் தான் போட்டுப்பா. கல்யாணமானவளா? யாரை...? அவளிடம் நேராகவே சகஜமாக, “வேம்பு வருவானா இப்ப சாப்பட்டுக்கு?” என்று கேட்கிறாள். “உன்ன நான் வெளில போகச் சொன்னேன்!” “வேம்பு வரட்டும் நான் பாத்துட்டுப் போறேன்... உனக்குக் கல்யாணமாயிட்டுதா?” அவள் முறைத்துப் பார்க்கிறாள். “ஆயிடுத்து, ஆகல்ல, அதைப்பத்தி உனக்கென்ன? நீ முதல்ல இங்கே வெளில போயி உட்காரு! இந்தக் காலத்துல யாரையும் ஒண்ணும் நம்பறதுக்கில்ல. என்னமோ திறந்த வீட்ல நாய் நுழைஞ்சாப்பல திடுதிடுன்னு வந்து உட்காந்திட்டா, கேள்வி கேக்குறா?... ஏய், போ வெளில!” ரேவுவுக்கு உள்ளூற பயம், கோபம், ஆத்திரம் எல்லாம் மேலிடுகின்றன. பையைத் தூக்கிக் கொண்டு நடை வாசற்படியைக் கடக்கும் முன் தலையில் நிலைப்படி இடிக்கிறது. ‘ஏன்டி, பாவி! இப்படி அவமானம் பண்ணுற? இந்தக் கடங்காரன், வேணுன்னு இப்படிப் பண்ணவா என்னை வரச்சொன்னான்...?’ வாசலில் மூணடி அகல இடம் தான்... கீழே சாக்கடை. வெயில் வேறு நேராக விழுகிறது. ரேவு, குத்துப்பட்ட உணர்வுடன் வலியும் சேர்ந்து கொள்ள, பையை வைத்துக் கொண்டு கண்ணீர் விடுகிறாள். சீ... நம் தலைவிதி... எத்தனை நம்பிக்கையுடன் வந்தாள்! ஆனாலும் வேம்புவைப் பார்த்து ஒரு பிடிபிடிக்காமல் நகருவதில்லை என்று உட்கார்ந்து விடுகிறாள். மாலை மங்கி இருள் பரவுகிறது. வேம்பு வேகு வேகென்று வருகிறான். திடுக்கிடுகிறான். “யாரு, அக்காவா? ஏன், நடையில் உட்கார்ந்திருக்கே! வா...” அவள் எரிந்து விழுகிறாள். உள்ளிருந்து ஆற்றாமை பொல பொலவென்று வருகிறது. “நீ என்னைப் பளிச்சினு வராதேன்னு சொல்லியிருக்கலாம். அவ என்னைச் சாக்கடையில் புடிச்சித் தள்ளாத குறையா...” அழுகைக் குடம் உடைகிறது. “யாரு சாந்தியா? சாந்தி... நீ... அக்காவை விரட்டி அடிச்சியா? உனக்கு அவ்வளவுக்கு வந்துடுத்தா? இடம் குடுத்தா மடம் புடுங்கற கதைதான்! சீச்சீ... என்ன திமிருருந்தா நீ இப்படிச் செய்வே?” அவன் குரலில் அவள் சுருண்டு போகிறாள். “தப்புத்தாங்க மன்னிச்சிக்குங்க, ஸாரி. நீங்க எங்கிட்ட இப்படி அக்கா வருவாங்கன்னு ஒரு வார்த்தை சொன்னீங்களா?... நான், இந்தப் பட்டணக் கரையில எப்படி நம்பி?” “அதுக்காக மரியாதை இல்லையா? கழுதை! உன்னை விட அவங்களுக்கு இந்த வீட்டில் உரிமை இருக்கு!” அவள் ஓடி வந்து ரேவுவின் கால்களைத் தொட்டு கண்களில் ஒத்திக் கொள்கிறாள். “ஸாரி அக்கா, எனக்குத் தெரியாம செஞ்சிட்டேன்...” “உன் ஸாரியும் வேண்டாம், பூரியும் வேண்டாம். போ, எட்டி!... அக்கா, நீ வா... பாயம்மாக்கு ரொம்ப வயத்து வலி சாஸ்தியாயிட்டது. ‘எமர்ஜன்ஸி’ன்னு கூட்டிட்டுப் போயிருக்கு. டெஸ்ட்டெல்லாம் பண்ணிட்டிருக்காங்க. நான் நீ வருவேன்னு நினைப்பு வந்துதா ஓடி வந்தேன். இவ இன்னிக்குக் காலமதான் வந்தா. பாயம்மா ஒத்தாசையாயிருக்கட்டும்னு சொல்லித்தான் முன்னமே கடிதாசி எழுதச் சொன்னா...” “நீ எப்ப வந்தே?... எதானும் காப்பி கீப்பி சாப்பிட்டிருக்க மாட்டே. பாவம்...” “பரவாயில்ல வேம்பு... காப்பிக்கென்ன. இங்க ஒரு வாரம் இருந்துட்டுப் போறேன்னுதான் வந்திருக்கேன்...” என்று வாழைப்பழச் சீப்பை வெளியில் எடுத்து வைக்கிறாள். கூடத்தில் ஒரு புறம் பழைய நாளைய மர பீரோ இருக்கிறது. அதைத் திறந்து வேம்பு, சட்டைப்பையிலிருந்து பர்சை வைக்கிறான். சட்டையைக் கழற்றிக் கையில் எடுத்துக் கொண்டு, “நான் குளிச்சிட்டு வரேன்... ஏ, சாந்தி...?” என்றவன் உள்ளே சமையல் அறையில் எட்டிப் பார்த்து எதற்கோ திட்டுகிறான். “இந்த இடம் எல்லாம் சுத்தமாகக் கழுவி விடு... அசத்து! பாயம்மா இல்லேன்னா, உனக்கு... சீ...!” தலையில் அடித்துக் கொள்கிறான். வீடு நீளப் போகிறது. பின்னே அடி குழாய். குளியல் கழிப்பறைகள், ஒரு கதவு, அந்த ஒழுங்கையில், பின் இருக்கும் குடித்தனக்காரர் பகுதியைத் தடுக்கிறது. அந்தப் பகுதியில் இருந்து ஒரு மூதாட்டி, முஸ்லீம் பெண்மணிதான்... “உம்... ஒண்ணில்ல. குழா போட்டு வச்சிருக்காங்க. செல்வராசு வந்திருந்தாரு. ஸ்பெஷல் ரூம் எடுத்து வசதியா போட்டு வச்சிருக்கு...” “இது என் அக்கா... நானி ஜான்... சைதாப்பேட்டையில் இருக்குன்னு சொன்னேன்ல்ல...” புகையிலை போட்ட பல் கறுப்புடன் பார்த்து மகிழ்ச்சி தெரிவிக்கிறாள். ஸ்டவ்வைப் பற்ற வைத்து அவனே ரொட்டி மா பிசைந்து வைக்கிறான். கிழங்கு வேக வைக்கிறான். சாந்தி பால் வாங்கி வருகிறாள். “நான் இட்டுக் குடுக்கறேண்டா...” “அக்கா, நீ நிங்க ஒரு வேலையும் செய்ய வேண்டாம்; ரெஸ்ட் எடுத்துக்கோ. பாயம்மா, பாவம் உன்னைக் கூட்டிட்டு வரச் சொல்லிட்டே இருந்தா, இப்ப நீ வரப்ப இல்ல. ஏ சாந்தி! ஏ நிக்கிற? தட்டெல்லாம் கழுவி வை. உள்ள ஒரு புதுத் தட்டு இருக்கு பாரு. அதை அக்காக்கு எடுத்து வை! நாளைலேர்ந்து தையல் இலை வாங்கிட்டு வரேன்...” “எதுக்குப்பா இத்தனை சிரமம், உன் பிரியமே போரும். நீ எதுக்கு பாவம் அவளை இத்தனை கோச்சுக்கறே! சமையல் உள்ளெல்லாம் அலம்பி விட்டிருக்கா!” “பின்னென்ன? இந்தச் சனியன், பாயம்மாக்கே அதான் புடிக்காது...” “ஏம்ப்பா வெறுமனே திட்டறே?” “உனக்குத் தெரியாது அக்கா! இவ தஞ்சாவூர் மராட்டிப் பிராம்மணக் குடும்பம். ஆனா, மீன் குழம்பு வச்சுத் திங்கணும்! பாயம்மா இல்ல, நானில்ல... வச்சுட்டா! உன்ன அதுனாலயே வாசல்ல போன்னு அடிச்சு விரட்டிருக்கு!...” ரேவுவுக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. “சீ... பாவம், குழம்பக் கொட்டச் சொல்லிட்டியா?” “ஐயோ, அவளா கொட்டுவா? ஓசைப்படாமல் கொண்டுக் குடுத்திருப்பா. சோத்த எடுத்திட்டுப் போய் மொக்கிட்டு வருவா...” “ஏய், சாப்பிட்டு நீ ஆஸ்பத்திரிக்குப் போ? ராத்திரி நீதான் ரூமில படுக்கணும். நான் காலம காபி எடுத்திட்டு வரேன்! என்ன? போ...!” ரேவுவுக்கு எல்லாமே புதுமையாக இருக்கிறது. ஆனாலும் ஓர் ஆறுதலை உணருகிறாள். |