அத்தியாயம் - 9

     “ஹார்லிக்ஸ் சர்க்கரை அங்கே இருக்கு. டம்ளரும், ஃபிளாஸ்கில் வெந்நீரும் எடுத்து வச்சுக்கோ. அம்மா ப்ளவுஸும், லூசான பாவாடையும் கேட்டிருக்கா; எடுத்து வச்சிட்டுக் கிளம்பு, நேரமாயிட்டது!”

     “சாந்தி, தனியாகப் போயிடுவாளா?”

     “அவளா? மட்றாசையே வித்துட்டு வருவா!... ம், கிளம்பு!”

     “அங்கே ஓராயா போடுறதாச் சொன்னாங்க நர்ஸம்மா. நீ சீக்கிரம் போயி வேணான்னுடு. நாளைக்கு ஆபரேசன் பண்றாங்களோ என்னமோ... பக்கத்திலேயே கீழ படுத்துக்க...!”

     “ஆகட்டும்... வரேன்க்கா!...”

     “காலம நான் வந்த பிறகு தான் நீ வர வேண்டி இருக்கும்! அங்கே இங்கே போகாதே! பத்திரம்! ராத்திரி நீ பாட்டுல தூங்கிப் போகாதே!”

     அவள் எல்லாவற்றுக்கும் தலையாட்டி, சரி, சரி என்று சொல்லிவிட்டு, வயர் கூடை சாமான்களுடன் படி இறங்குகிறாள்.

     அந்தக் கட்டிலில், வேம்பு அவளுக்குப் படுக்கை விரிக்கிறான். ஒரு போர்வை தருகிறான்.

     “நான் கீழே படுத்துக்கறேண்டா, வேம்பு. எனக்குக் கட்டிலே வேண்டாம்...”

     “எனக்கு அது நீளம் பத்தாது. நீ படுத்துக்கோ. இங்கே குளிராது. கொசுவும் கிடையாது. ஃபான் வேணுண்ணா போட்டுக்கலாம்...”

     விளக்கை அணைத்து விட்டுப் படுக்கிறார்கள்.

     மணி ஒன்பதுதான் ஆகியிருக்கிறது. ஒரு பெரிய சந்தைக் கடை நடுவே சிறு பெட்டி போல் ஓரிடம்.

     எல்லாம் நேர் கோடுகளாகவே இல்லை. ஒருகால் இவள் இன்று வரவில்லை என்றால், அந்தப் பெண்ணும் - வேம்புவும்...

     “அக்கா...! தூங்கிட்டியா...”

     “இல்ல... புது இடம். தூக்கம் அப்படி வந்துடறாப்பல இல்ல...”

     “அக்கா, பாயம்மாக்கு, என்ன உடம்பு தெரியுமோ? பெரும்பாடுன்னு சொல்லுவாளே, அப்படிக் கொட்டறது ரொம்ப நாளாவே இருந்திருக்கு. இங்க பொம்மனாட்டி யாரிருக்கா? பின்னே பார்த்தாயே, காசிம் சாயபு அம்மா நானிஜான் தான் எங்கிட்டச் சொன்னா. அவதா லேடி டாக்டர்கிட்டப் போயி, அஞ்சு மாசத்துக்கு முன்ன காமிச்சா. புள்ளகுட்டிப் பெறல; தீட்டுத் தொடக்கம் போயி ரொம்ப நாளாச்சி. இப்ப இப்படி இருக்கேன்னு காட்டிருக்கா. அவா... இது கான்ஸர்னு சொன்னாப்பல. நான் அப்ப சரஸ்வதி பூசைக்கு முன்ன, இதைச் சொல்லி ஒரு ஒத்தாசை கேக்கத்தான் வந்தேன். என்னப் பெத்த புள்ளக்கி மேல வச்சிட்டிருந்தாங்க. நான் அவாளுக்கு இப்படி ஒரு ஒத்தாசை கூடச் செய்யலேன்னா எப்படி?... ஆனா, என்னமோ நினச்சி, எப்படியோ ஆயிட்டது. பிறகு நானேதான் இந்த சாந்திக்கு எழுதினேன். இது ஒரு நச்சு. பாயம்மாக்கே புடிக்காது. ஆனா, பாவம்... வெகுளி... அவ ஏதோ சொன்னான்னு நீ மனசுல வச்சுக்காதே...”

     “அவளுக்குக் கல்யாணமாயிட்டதுன்னு சொல்றா?”

     “ஐயோ, அது ஒரு பெரிய கதை அக்கா. இவம்மா இவ தாத்தாக்கு ஒரே பொண்ணு. அந்தக் காலத்துல, ஜாதியில்ல, மதமில்லன்னு, எல்லாரும் தேசத்துக்குன்னு சொத்து சுகமெல்லாம் குடுக்கலியா? அப்படி இவ தாத்தா பெரிய மிராசுதார். சுதந்தரப் போராட்டக்காராளுக்கெல்லாம் ஒத்தாசை செய்தார். அப்ப, இவப்பா, மேல் சாதிக்காரருக்குக் கல்யாணம் பண்ணி, சொத்து சுகமெல்லாம் அவனுக்கேன்னு எழுதி வைச்சார். இவ பிறந்ததும் அம்மா செத்துப் போனா... அப்பா உசந்த சாதி. இந்தப் பெண்ணை அப்பா, மேஜராகுமுன்ன தங்கை பையனுக்குக் கட்டி வச்சி எல்லாம் ஒண்ணா வந்துட்டாங்க. தாத்தாவும் கல்யாணத்துக்குச் சம்மதிச்சார்னு சொல்றா. விஷயம் இதுதான். தாத்தா போயிட்டார். இந்தப் பொண்ணை உருட்டி மிரட்டி, வீடு வாசல் நிலமெல்லாம் அவன் பேருக்கு எழுதி வாங்கிட்டதாச் சொல்றா. திருச்சி - தஞ்சாவூர் வழியில் தான் கிராமமாம். திருச்சில காலேஜில சேர்ந்து படிச்சிருக்கா. ஆனா முடிக்கல. அங்கே யாரோ இவா ஜாதி நாயுடுவோ, முத்தரையரோ பையனுடன் சிநேகம்னு சொல்றாங்க. இப்ப இவ அந்தப் புருசனிடம் இருந்து இருந்து டைவர்சும் எழுதிக் கொடுத்த சொத்தும் ஏமாத்தி வாங்கிட்டான்னு கோர்ட்டில் போட்டிருக்காம். அவன் கொடுப்பானா? ரொம்பச் சிக்கலான கேசு. இப்படிக் கட்சிக்காரங்க - பெரியவங்க வீட்டில வந்து சொல்லுவா, தங்குவா... பாய் இருக்கறப்ப அவரும் எத்தனையோ புத்தி சொன்னார். தப்பு இவ பேரிலா அவா பேரிலா, என்னன்னு தெரியாது. இவ அம்மா நகை நட்டெல்லாம் வித்து இப்படிப் பண்ணிட்டிருக்கு. உள் புகுந்து நியாயம் சொல்லவோ எடுத்துப் போட்டுண்டு செய்யவோ யாருமில்ல...”

     ரேவு தன்னைப்பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தாளே!

     பெண்ணாகப் பிறந்து விட்டால், எத்தனை சங்கடங்கள்! பெண் வயசுக்கு வந்து நல்லது கெட்டது தெரிந்து, புரிந்து, ஒரு புருஷனோடு வாழும் வாழ்வு யாருக்குக் கிடைக்கிறது?

     அந்த ஜயவந்திதேவி... அவள் படித்துத் தன் காலில் நின்றதால், தன்னைப் பூச்சிபோல் நினைத்தவனை ஒதுக்கி விட்டு வந்துவிட்டாள். அது ரொம்பப் பெரிய காரியமாகத் தோன்றுகிறது ரேவுவுக்கு.

     பாயம்மா... ஒருத்தரை நம்பி, உறவே இல்லாமல் வந்து... ஏனிப்படி ஆண்டவன் சோதனை செய்ய வேணும்? ஊர் உலகில் எத்தனையோ வியாதிகள் இல்லையா? இப்படியா வரணும்?

     இவள் மாமியாருக்கும் இப்படித்தான் ஏதோ ஒரு வியாதி. இராப்பகலாக ரேவு விசிறுவாள்; பணி செய்வாள். வலி தாங்காமல் எரிந்து விழுவாள். குடும்பம் இருந்தது; கட்டிக் காத்தது... பாயம்மா... ஐயோ, நம் அம்மா...!

     அடிவயிற்றில் சொரேர் என்ற உணர்வு.

     சீ, என்ன ஆயிரம் இருந்தாலும் குடும்பம் என்ற நிழலைப் பெண்ணாப் பிறந்தவள் விட முடியாது. அதுவும் அவளைப் போன்றவர்கள்... நல்லபடியாக நாளை பாயம்மாவைப் பார்த்துவிட்டு, வீட்டுக்குத் திரும்பி விட வேண்டும். அவன் மிருகமோ, பேயோ, அவன் நிழலைத்தான் ஊர் ஒத்துக் கொள்ளும். அவள் தேய்ந்து மாய்ந்து, எப்படியோ, அவள் மாமியாரைப் போல், பர்த்தாவும் பாத்திருக்க, புத்திரனும் கொள்ளி வைக்க ‘நற்பெண்டாட்டிக்கு நாற்பது வயசு’ என்று போய்விட வேண்டும். அறுபட்டுப் போன குடும்பத்திலிருந்து, ஒரு நல்ல தலைமுறையுடன் சேர வேண்டும். செத்துப் போன பன்னிரண்டாம் நாள் - இவள் சபிண்டீ கரணத்தன்று மரியாதைப்பட்ட இக்குடும்பத்துத் தலைமுறைகளுடன் இணைக்கப்படுவாள். மூன்று தலைமுறை முன்னோர்கள் - மாமியார் - மாட்டுப்பெண் - அடுத்த மாட்டுப்பெண். மாமியார் தர்ம சம்வர்த்தினி - அடுத்து, இவள் ரேவதி - ரேவதி நாம்னி - மம - மாதவின்னு சொல்றது. மாதரம்... என்று புரோகிதர் மந்திரம் சொல்ல, ராம்ஜி தர்ப்பையை விரலில் மாட்டிக் கொண்டு அவளுக்குக் கருமம் செய்யும் போது...

     “அக்கா...! தூங்கிட்டியா?”

     “ம், இல்லேடா... என்னென்னமோ நினைப்பு. பாயம்மாக்கு எதானும் ஆச்சின்னா, கர்மம் யார் செய்வா? எந்த ஜாதிப்படி?”

     “அதுவா இப்ப பிரச்னை? உயிரோடு இருக்கும் போது, இதமா, அன்பா நடந்தா அதுவே ஆயிரம் கர்மத்துக்குச் சமம். இதிலெல்லாம் அவங்க ரெண்டு பேருக்கும் நம்பிக்கை இல்லை. சொல்லப்போனா பாய்க்கே நான் தான் கொள்ளி வச்சேன். சமாதி கிமாதி கிடையாது; கோவிந்தா கோவிந்தான்னு கொள்ளி போட்டேன். கட்சிக்காரா எல்லாரும் ஊர்கோலமா - கூட்டமா வந்து பேசினா. பெரிய கூட்டமே போட்டுப் பேசினா. குணங்களைச் சொன்னா, பிரிஞ்சி போயிருந்தவங்க கூட அவர் முன்னே ஒண்ணே வந்து நின்னா. அதுதான் பெரிசு...”

     “வேம்பு, நம்ம அம்மாவை நினைச்சுத்தான் துக்கம் துக்கமா வருது. நாமெல்லாம் மகாபாவிகள்! அவ எப்படி வயிறெரிஞ்சாளோ?...”

     “நம்மம்மா அப்படிச் சாபமிடமாட்டாள். கோழி முதிச்சுக் குஞ்சு சாகுமா? அம்மா நம்மை எல்லாம் நல்ல படியாத்தான் வைப்பாள். அதனால் தான் இன்னிக்கு நான் ஒரு நல்ல சீலமான இடத்துல வந்து சேர்ந்திருக்கேன். பிறத்தியார் என்ன நினைச்சாலும் நீ மனசில் கல்மிஷமில்லாமல் இருந்தா, அதுவே போதும் அக்கா. அத்திம்பேர் - பரத் கூட என்னைக் கேவலமாப் பேசினாலும் நான் பெரிசா நினைக்கல... சரி, நீ தூங்கக்கா... நானும் தூங்கணும். காலம எழுந்திருக்கணும்...”

     வெகு நேரம் அதையும் இதையும் நினைத்துத் தூக்கம் வராமல் புரண்டவள், வேம்பு அதிகாலையில் எழுந்து, பால் வாங்கி வந்து, அடுப்புப் பற்ற வைத்தது தெரியாமல் அயர்ந்திருக்கிறாள். அவன் குளித்துவிட்டு வேட்டி கசக்கி உலர்த்தும் போதுதான் குற்ற உணர்வுடன் எழுந்து வருகிறாள்.

     “ஏண்டா, என்னை எழுப்பியிருக்கக் கூடாதா? தூங்கிப் போயிட்டேனே?” அடிபம்பில் தண்ணீர் அடித்துப் பாத்திரங்கள், வாளி, ட்ரம் எல்லாவற்றிலும் நிரப்பி வைத்திருக்கிறான்.

     குளியலறை செல்ஃபில் லால் தந்த மஞ்சள் பல்பொடி இருக்கிறது; எடுத்துக் கொள்கிறாள்.

     “தண்ணீர் எப்பவும் அடிக்கலாமா?”

     “இது கிணற்றுத் தண்ணீர்போல எப்பவும் வரும். பின் வீட்டில் நாம் வேலை முடிச்ச பிறகு தான் வருவா... ஸ்டவ்ல வெந்நீர் வச்சிருக்கேன். குளிச்சிடு... நான் இப்ப காலம ஆஸ்பத்திரிக்குப் போய்ச் சாந்திய அனுப்பறேன். நீங்க சமைச்சு சாப்பிட்டுட்டு பத்து பத்தரைக்கு வந்திடுங்கோ. இன்னிக்கு ஆபரேஷன் பண்ணுறாளோ என்னமோ...”

     பாலைக் காய்ச்சிக் காபி கலந்து அவளுக்குக் கொடுக்கிறான். ஒரு எவர்சில்வர் திருகு செம்பில், வெந்நீர் மட்டும் ஊற்றி எடுத்துக் கொண்டு அவன் போகிறான்.

     போகும் சமயத்தில் யாரோ வருகிறான்...

     “வேம்பு தம்பி!...”

     “அட... வாங்க ஸார்... வாங்க...”

     “வர நேரமில்ல. ராத்திரிதான் தெரியும். செல்வராசு சொன்னாப்பல. ஜெயின் நர்சிங்ஹோமில் சேர்ந்திருக்குன்னாங்க. டாக்டர் வெற்றிச்செல்வி, நல்லா பார்ப்பாங்க. இந்தாங்க - இதில ரெண்டாயிரம் வச்சிருக்கேன். சவுகரியமாப் பாத்துக்குங்க. எனக்குத் தாய் தகப்பன் போல அவங்க!...”

     கண் கலங்க நின்று, பணக்கற்றையை வேம்புவிடம் கொடுக்கிறார்.

     “என்ன ஸார் நீங்க? செல்வராஜே எல்லா ஏற்பாடும் செய்து நேத்து ரெண்டாயிரம் குடுத்திருக்காரு... இப்ப... எதுக்குங்க, நான் தேவைன்னா கேட்குறேன்...”

     “இல்லப்பா, ஒரு அவசரம்னா திண்டாடக் கூடாது... ரெண்டணா மசால்வடையும் ஸ்டேசன் கிழவிகிட்ட தயிர் சோத்துப் பொட்டலமும் வாங்கிட்டு வந்து சாப்பிட்டு நாளை ஓட்டினப்ப கூட, அவங்க என்னை மறக்கல. நாளக்கின்னு வச்சிக்கல. தியாகத்துக்கு விலையான்னு கேட்டவங்க. இன்னிக்கு, எனக்கு ‘பன்னீர் செல்வம்’னு ஒரு பேரும் பிஸினசும் இருக்குன்னா, அது அவங்க போட்ட பிச்சை. நா இப்ப அவசரமா பம்பாய் கிளம்பிட்டிருக்கிறேன். நாள் கழிச்சி வந்து பார்க்கிறேன். பாத்துக்கப்பா!...”

     அங்கவஸ்திரம் விசிற விடுவிடென்றூ வாசலில் சென்று நின்ற காரில் ஏறிப் பறக்கிறான்.

     ரேவுவுக்கு ஒன்றும் பேசத் தோன்றவில்லை.

     “பாத்துக்கோக்கா!... இவன் சிமிட்டி பிஸினஸ், ஷீட் அது இதுன்னு பெரிய கம்பெனி... கறுப்போ வெள்ளையோ, அம்மாக்குச் செய்யணும்னு கொண்டு குடுக்கிறான். அம்மா ஒண்ணு வாங்கமாட்டா... ம்...” என்று அதை அலமாரியைத் திறந்து வைக்கிறான்.

     “அக்கா, கிச்சன்ல எல்லாம் எடுத்து வச்சிருக்கேன். பார்த்துக்கோ, அம்மா காஸ் வாங்கல... இந்த கிரேசின் ஸ்டவ்தான்... பதிஞ்சிருக்கு வந்திடும்னா... இதோ குக்கர்... பீன்ஸ் இருக்கு...”

     “எல்லாம் நான் பார்த்துக்கிறேன்ப்பா, நீ போ!”

     ரேவு சில நிமிடங்கள் திகைத்துப் போய் நிற்கிறாள். இருபத்தைந்து வருடங்கள், குடும்பம் என்று ஒரு மிருகமான மனிதனை முன்னிறுத்தி அவள் உடம்பைத் தேய்த்திருக்கிறாள். அதில் எந்த மணமும் வரவில்லை. தேசம் - மனிதர்கள் என்பது அவ்வளவு உயர்த்தியா? எல்லாம் துறந்து வாழ்பவர்கள்... வெளிக்குத் தெரியாது போனாலும், மணம் கமழ வாழ்கிறார்கள்.

     சமையலறையில் எத்தனை சிட்டையாக எல்லாம் எடுத்து வைத்திருக்கிறான்!...

     இவள் சமையலை முடிக்குமுன் சாந்தி வந்துவிடுகிறாள்.

     “அக்கா, நீங்க உக்காருங்கோ. பாவம் ரெஸ்ட்ன்னு வந்த இடத்துல நீங்க வேலை செய்யக்கூடாது! நான் இத குளிச்சிட்டு வந்திடறேன்...” அதே கூடத்தில், படங்களுக்குக் கீழ் ஒரு தட்டில் இரண்டு ஜோதி விளக்குகளும் ஒரு பீங்கான் யானை ஊதுவத்தித் தட்டும் இருக்கின்றன. ரேவு, அதில் எண்ணெய் ஊற்றி ஏத்தி, ஊதுபத்தி தேடி எடுத்துக் கொளுத்தி வைக்கிறாள். “எல்லோரும் நல்லபடியாக இருக்கட்டும்!” என்று வேண்டிக் கொள்கிறாள்.

     சாந்தி குளித்து விட்டு வந்து உயர்ந்த கொடியில் குச்சியில் சேலை பாவாடைகளை உலர்த்துகிறாள்.

     வெளுப்பு மட்டுமில்லை. முடியும் கூட சுருட்டையாக, செம்பட்டையாக, தேய்த்தெடுத்த தேங்காய் நார்போல் இருக்கிறது. விழிகளும் கறுப்பில்லை. காதில் ஒரு பச்சை ஸ்டட். முத்து மூக்குத்தி - இடது பக்கம் போட்டிருக்கிறாள். இவளைப் பார்த்துச் சிரிக்கிறாள். பற்கள் கூட மஞ்சள் பூத்திருக்கின்றன.

     “ஏனக்கா, நீங்க வேம்பு ஸாருக்கு சொந்த அக்காவா?”

     “என்ன சந்தேகமா? எங்களைப் பார்த்தால் சொந்தமாகத் தோணலியா?”

     “இல்ல, நீங்க வட்ட முகமா, சின்ன மூக்கோடு அழகா இருக்கிறீங்க... பொம்பிளக்கி அது அழகு. அவுரு நீள முகம் கூர் மூக்கு. சாடை ஒத்துமையாத் தெரியல... அதான் கேட்டேன்...”

     “நாங்க ரெண்டு பேரும் ஒரு அப்பா அம்மாக்குப் பிறந்தவங்கதான்... சரி, இப்ப ரெண்டு பேரும் சாப்பிட்டு விட்டுக் கிளம்பலாம். இன்னிக்கு ஆபரேஷன்னு சொன்னாளே, ஆயிடுத்தா?”

     “அப்படின்னுதான் சொன்னா. ராத்திரியே டாக்டரெல்லாம் வந்து பாத்திட்டிருந்தா. காலம பத்து மணிக்கு வெற்றிச் செல்விதான் ஆபரேஷன் பண்ணறா. ரொம்ப வீக்கா இருக்கா; ரத்தம் குடுக்கணுமாம்...”

     ரேவுக்குப் பரபரப்பாக இருக்கிறது. கொஞ்சம் சாதம், குழம்பு எல்லாம் எடுத்து வைத்துவிட்டு இருவரும் சாப்பிடுகிறார்கள். பிறகு கதவைப் பூட்டிக் கொண்டு கிளம்புகையில், வெளியே பவர் லாண்டிரி வாசலில்... ரேவதிக்கு நெஞ்சுத் துடிப்பு ஒரு கணம் நின்று போகிறது.

     அந்த தீபாவளிக்கு வாங்கின கால்சட்டை, அடிக்க வரும் சிவப்பில் தொள தொளவென்று மேல்சட்டை. முடி வாராமல்... பரத்... பரத்தான்.

     குபுக்கென்று ஏதோ எழும்பி முகத்தை மறைத்தாற் போலிருக்கிறது. ராம்ஜி பசி தாங்குவான். இது பசி தாங்காது. வீம்பில் படுத்தாலும் இரவில் கூப்பிட்டு அவள் சோறு போடுவாள்; அன்றொரு நாள் தான் போடவில்லை. திரும்பி இவளைப் பார்த்துவிட்டு ஓட்டமாய் வருகிறான்.

     “ஏம்மா போயிட்டே? ஏம்மா... ஏம்மா...” என்று அவள் கையை எடுத்து முகத்தில் வைத்துக் கொண்டு விம்முகிறான், தெருவென்றும் பாராமல்.

     இவன் இப்படி ஓடி வருவான் என்று அவள் நினைத்திருக்கவே இல்லை. குற்ற உணர்வு, வெட்கம் எல்லாமாக அவளைக் குழப்புகிறது. பூட்டிய வீட்டுக்கதவை சாந்தி திறக்கிறாள். உள்ளே வந்ததும் ஓவென்று அழுகிறது.

     “அப்பா உன்னை ஓடுகாலி அது இதுன்னு திட்டுகிறார். நீ திரும்பி வீட்டுக்கு வந்தா, காலை வெட்டிப் போடுவாராம். ராம்ஜி ஒரு சாதம் மட்டும் வச்சிச் சாப்பிட்டுட்டு ஸ்கூலுக்குப் போயிடறான். என்னை அப்பா போட்டு பெல்ட்டால அடிச்சிட்டார், பாரு...”

     சட்டையைக் கழற்றுகிறது.

     அட... மகாபாவி! இப்படி அடிப்பியா, குழந்தையை? சிவப்பு உடம்பில் நீலமாகக் கன்றிய வீறல்களின் முத்திரைகள்.

     “அய்யோ, அக்கா? யாரிப்படி அடிச்சது?” என்று சாந்தி கூவுகிறாள்.

     “அவருக்குக் கோபம் வந்துட்டா கண்மண் தெரியாது. நானும் இல்லே...”

     “ஐயோ, ரத்தம் கசியிதே?...”

     “அக்கா பர்னால்... ஆயின்ட்மென்ட் போடலாமா...?”

     அவளே எங்கிருந்தோ ஒரு நசுங்கிய ட்யூபை எடுத்து வந்து அந்தக் காயங்களின் மீது பிதுக்கிப் பிதுக்குத் தடவுகிறாள்.

     “அம்மா எனக்கு ரொம்பப் பசிக்குதம்மா... நேத்திலேந்து சாப்பிடல.”

     அவளுக்கு எதுவும் செய்யத் தோன்றவில்லை.

     “அக்கா, நீங்க வச்சிருக்கிற சாதத்தைப் போட்டுடறேன். வேம்பு ஸார் அப்படியே ஓட்டலில் சாப்பிட்டுப்பார்...” என்று பரபரவென்று சாந்திதான் தட்டு வைத்து அவனுக்கு அந்தச் சாப்பாட்டைப் போடுகிறாள்.

     “இத்தனை தூரம் வந்துட்டு பாயம்மாவைப் பார்க்காமல் வீட்டுக்குப் போகக் கூடாது... எதுக்கும், நீ இங்க படுத்திட்டு இரு பரத், நானும் சாந்தியும், ஆஸ்பத்திரிக்குக் கிளம்பிக்கிட்டிருந்தோம். இந்த வீட்டு அம்மாக்கு ஆபரேஷனாம். பார்த்துட்டு, மாமாவுடன் நான் வந்துடுவேன். பிறகு நாம போகலாம்...”

     “சரிம்மா; நானும் அதான் நினைச்சேன்... நான் டயர்டாயிட்டேன். படுத்துத் தூங்கிடுவேன்...”

     “சரி, நீ கதவை உள்ள தாப்பாள் போட்டுக்கோ... ஆமாம், நான் இங்கே இருக்கேன்னு உனக்கு யார் சொன்னது?”

     “ராம்ஜி சுதா ஆன்ட்டிகிட்டக் கேட்டிட்டிருந்தாப்பல... அப்பத்தான் சொன்னா...”

     “ஓ!...”

     எப்படியானாலும், அவர் காலை வெட்டினாலும் தலையை வெட்டினாலும், அவர் பாரம். குழந்தைகளை விட்டு வந்தது தப்பு... திரும்பிப் போய் விட வேண்டும்... என்று ரேவு முடிவு செய்து கொள்கிறாள்.