உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
1 பனிக்கால வெயில் சிலுசிலுக்கும் காலைக் கடற்கரையில் வெம்மை தேம்பாகாகப் பரவுகிறது. முண்டும் முடிச்சும், அழுக்கும் அவலமும் அச்சமும் ஆயாசமும் இறுக்கிப் பிணித்திருக்கும் கும்பலின் இறுக்கங்கள் அந்த இதமான மணற்கரையில் கட்டவிழ்கின்றன. கறுப்பு, சிவப்பு, மஞ்சள் என்று பல நிறங்களாகப் பெண்கள் அணிந்திருக்கும் சேலைகளும், சிறுவர் சிறுமியர், குஞ்சு குழந்தைகளின் சிலும்பல்களும், பசியும் சோர்வும் பயமும் அகன்றதென்று விழித்தெழும் முகங்களும், உயிர்ப்பயம் நீங்கியது என்ற ஆறுதலின் ஒலிகளும் இனம்புரிய, இந்திய மண்ணின் கரை அவர்களை ஏந்துகிறது. கரையோரம் வந்து ஒதுங்கிய இரு தோணிகளில் இருந்த மக்கள் அனைவரும் விடுபட்டு வந்த பின்னர், உள்ளிருக்கும் பெட்டி, மூட்டை, தட்டுமுட்டுச் சாமான்களை எல்லாம், தலையில் கைலி சுற்றிய பலாட்டியரான சில இளைஞர் மணலில் எடுத்துப் போடுகின்றனர். வெற்று மேனியராக விளங்கும் அவர்கள், கருங்காலியில் கடைசல் பிடித்த சிற்பங்கள் உயிர்த்து வந்தாற் போல் இயங்குகின்றனர். பெட்டி, மற்றும் மூட்டை முடிச்சுக்களுக்கு உரியவர்கள் வந்து அவற்றை இழுத்து வைத்துக் கொள்கையில் இறுக்கம் விடுபட்ட விதலைக் குரல்கள் உரத்துக் கேட்கின்றன. சில பல குழந்தைகள் அழுகின்றன. “இங்கிட்டு ஆமி வருமா அம்மா?” ஒரு ஐந்து வயசுச் சிறுமி கண்களில் கலவரத்துடன் தாயை ஒட்டிக் கொள்கையில், “இங்க வராது கண்ணு, நாம இந்தியாவுக்கு வந்துட்டோம்ல?” என்று ஆறுதல் அளிக்கிறாள். “ஆரம்மா இது? உலக்கைய வுடாம கொண்டிட்டு வந்திருக்கிய?” மர உலக்கை ஒன்று மண்ணில் வந்து விழுகிறது. “அது எண்ட சாமான். எம்புட்டு நாளா எனக்குச் சோறு போட்டுச் சீவியம் தந்த உலக்கை ஐயா!” வயது முதிர்ந்த பெண்மணி ஒருத்தி அதைப் பிள்ளையைக் கட்டி அணைப்பது போல் எடுத்துக் கொள்கிறாள். அவள் காதுகளில் ஊசலாடும் பொன்னாலான பாம்படம் அவளுடைய சீவியத்தின் பெருமையைச் சுருக்கமாக விள்ளுகிறது. “இதா, இந்தப் பையி குட்டிச்சாக்கு ஆரோடது?” “அதா அந்தப் பெரியவரோடது... இங்க கொண்டாங்க...” ஒரு குமரிப்பெண் அந்தக் குட்டிச் சாக்கை வாங்கிக் கொண்டு போய், மணலில் குந்தியிருக்கும் முருகேசுவிடம் வைக்கிறாள். “பாவம், தோட்டத்து ஆளு மன்னாருல செம தூக்கிக்கிட்டிருந்தாரு. மூணு கொமரிப் புள்ளிங்களோட, மூணு மாசமா தாய்நாடு போவணும்னு காத்திட்டிருந்தாரு. புள்ளிங்க மூணும் காணமற் போயிற்று, போன மூணுமாசக் கரச்சல்ல. சனங்க தீ வைச்சப்ப அலையக் கொலைய ஓடினாங்கல்ல?... ரொம்பசனம் தப்பிப் போயிட்டாவ, அப்பவே கப்பல்ல போயிடிச்சுங்களோ, என்னாவோ... இப்ப போட்டுக்கு எட்டு நூறு... எட்டு நூறு...” பாம்படக் கிழவி, அந்தக் குமரிப்பெண்ணிடம் விவரம் கூறுகிறாள். முருகேசு உண்மையில் பிரமை பிடித்த நிலையில் தான் உட்கார்ந்திருக்கிறான். சுகந்தி, தனம், சரோசா... சுகந்தி வயது வந்த குமரிப்பெண்... தனத்துக்குப் பன்னிரண்டு வயசு, சரோசா பத்து வயசுச் சிறுமி. அவனுடைய தமக்கையின் பேரப் பெண்கள். இதே போன்று இக்கரையில் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன், அவன் தாய் கழுத்தில் மஞ்சட்சரடும் இடுப்பில் குழந்தையுமாக இப்படித் தோணியேறிப் போனாள். கங்காணியின் கீழ் ஒப்பந்தக் கூலிகளாக, மன்னார்க்காட்டில் அவர்கள் நடந்து போன காட்சியை அவன் எண்ணிப் பார்க்கிறான். அந்த மண்ணில் அவள் இரத்தத்தையும் சதையையும் மட்டும் உரமாக்கவில்லை. சூல்பை வெடிக்கப் பத்து நூறாக விதைகள் விழுந்து எங்கெங்கும் தன் வேரைப் பாய்ச்சப் படரும் காட்டுக் கொடியின் மூர்க்கத்துடன் அவர்கள் மக்களையும் பெருக்கினார்களே? ஆனால்... ஆனால், இந்த மானுடபீஜங்கள், வேர்பிடிக்கச் சக்தியற்று, லட்சோப லட்சங்களாக... சூறைக்காற்றில் அலையும் சருகுகளாக, ஒடியும் தளிர்களாக, உதிரும் பூக்களாக மொட்டுக்களாக... முருகேசுவுக்குச் சிந்திக்கத் திராணியில்லை. சில நிமிடங்களில் படகுகள் காலியாகின்றன. புருபுருவென்று நீரைக் கிழித்துக் கொண்டு கிழக்கே செல்கின்றன. மணற்கரையின் வழக்கமான அலைகள் எழுப்பும் மெல்லொலிக்குக் குஞ்சம் கட்டினாற் போன்று இந்த மக்களின் பேச்சொலிகளும், குழந்தைகளின் அழுகை ஒலிகளும் இணைகின்றன. சற்று எட்டத் தெரியும் பனைமரங்களும் மணல் மேடுகளும் இந்த மக்கள் அரவங்களை வாஞ்சையோடு ரசிப்பது போல் இதமாகக் காட்சி அளிக்கின்றன. “இதா ராமேசரமா? ஏம்மா, கோயிலக் கானம்?” “ராமேசரம் இன்னும் அங்கிட்டிருக்காப்பல. இது தனுஸ்கோடின்னில்ல செபமால சொன்னா?” “அதா கடல்ல முழுகிடிச்சின்னி சொன்னாவ.” “அல்லாம் முழுவல, அதா கருப்பா தெரியுது பாருங்க, கோயிலு. இதொரு பாதி மிச்சம்...” “ஏ, இந்தக் கரையில கொண்டு வந்து விட்டுப் போறா? இதுக்கா இம்புட்டுப் பணம்?” புள்ளிச்சேலை உடுத்திய ஒரு பெண், அவள் புருசனைக் கேட்கிறாள். “சொம்மா இரு! ஒனக்கு ரொம்பத் தெரியுமில்ல? அங்கிட்டு ஏதானும் ஆமி போட்டு நிக்கிமாயிருக்கும்?” “இது இந்தியாக்கரைதான? ஆமி இங்கிட்டு வருமா?” பாம்படக் கிழவி மீதமிருக்கும் நாலைந்து பல்லை குத்துகிறாள். பல்லில் ஒன்றும் ஒட்டி இருக்க நியாயமில்லை. வெற்றிலைக் கூடப் போடவில்லை. ஆனால் எதுவும் செய்யத் தோன்றாத போது இது ஒரு நேரம் போக்குத்தான் என்று முருகேசு நினைக்கிறான். “ராமேசரத்துல, ஏற்கனவே சனமான சனம் வந்து நெருங்கியிருக்காம்ல? அங்கிட்டுப் போனா நிக்க உட்காரக் கூட எடமில்ல...!” “அதில்ல பாட்டி, பாஸ்போட்டு அது இது இல்லாம தான இப்ப மிச்சம் பேரும் வந்திருக்கிறம்? அங்க கங்கானிப்பாவ இல்ல?” “செத்த சொம்மா இருக்க மாட்டிய?” என்று பூப்போட்ட சட்டையும் கைலியும் அணிந்த ஒரு நடுத்தர வயசுக்காரன் அதட்டுகிறான். ஒரு தாய் அலையில் நனைந்த துணி மூட்டையைத் திறந்து, உள்ளே அலுமினியம் குண்டில் மூடி வைத்திருக்கும் புளிச்சோற்றை வெளியாக்குகிறாள். எங்கிருந்தோ காக்கைகள் வந்து குந்துகின்றன. அவற்றை ஒரு கையால் விரட்டிக் கொண்டு, நண்டும் சிண்டுமாக இருக்கும் மூன்று குழந்தைகளுக்கும் கையில் வைத்துக் கொடுக்கிறாள். இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் வேறு சில குழந்தைகளுக்கும், ஏன் பெரியவர்களுக்கும் கூட பசி கிளர்ந்தெழுகிறது. ஆனால், எல்லாராலும் இதைப் பின் பற்ற முடியவில்லை. அழியாத ரோஸ் குங்குமத்துடன் விளங்கும் இளந்தாயொருத்தி, தன் நான்கு பிராயச் சிறுமியை வெறி வந்தாற் போல் அடிக்கிறாள். சோறு தண்ணீர் காணாமல் எங்கோ பதுங்கி, எப்படியோ தப்பினாற் போதும் என்று வந்த பெண் அவள். அவள் புருசன் படகைத் தள்ளிக் கொண்டு எங்கோ பத்திரமாக நிறுத்தப் போயிருக்கிறான். திருட்டுப் படகு தள்ளும் கூலிக்காரன் அவன். கையில் காசிருந்தாலும், வயிற்றுப் பசியை அவிக்க இயலாத கொடுமை. “பசிக்கி... அம்மா பசிக்கி...” என்று அந்தச் சிறுமி, அடியும் வாங்கிக் கொண்டு தேம்புகிறாள். முருகேசு தன் குட்டிச் சாக்கைத் திறந்து, கைவிட்டுத் துழாவுகிறான். பாண் துண்டுகள் அகப்படுகின்றன. “இந்தா...ட்டீ? இந்தா... தின்னுக்க?” ஏழெட்டுக் கைகள் நீள்கின்றன. சாதியும் மீதியும் அடிபட்டுப் போகும் பசி. முருகேசு இன்னும் துழாவுகிறான். நமுத்துப் போன பிஸ்கற் பொட்டலம் வருகிறது. “ஒரு வெத்தில போடாம நாக்கு அறுவறுத்துப்போச்சி. வார அவசரத்தில, வெத்திலப் பெட்டிய எடுக்க இல்ல. கட்டின துணியோட வந்திருக்கம். இனி என்ன ஆவுமோ? நம்மள ஆண்டவ இம்புட்டுக்குச் சோதிக்கிறா...” பாம்படக் கிழவி சிலுவைக் குறி செய்து கொள்கிறாள். “இந்தியாக்கரயில, ‘கவுர்மென்டு’ சீட்டுக் குடுக்காவ, சோறு போடுதாவ, தேத் தண்ணி குடுக்காவன்’ல்லாம் சொன்னாவ, இவனுவ உண்டான காசையும் வாங்கிட்டு, இப்பிடி விட்டுப்போட்டுப் போயிட்டானுவ?...” ரோஸ் குங்குமக்காரி, பொறுக்காமல், “விட்டுப் போவ இல்ல. போட்டப் பதனமா வச்சிட்டு வருவா?” “ஆமா, போட்ட விட்டுப் போட்டு, பிளசர் எடுத்திட்டு வருவா!” என்று ஓர் இளைஞன் நையாண்டி செய்கிறான். எந்தச் சூழலிலும் சிரிக்கும் இளமை. பசியாறிய பிள்ளைகள் கரையில் இறுக்கம் விட்டு விளையாடுகின்றன. ஒரு பயல் எட்டிச் சென்று, பாரைக் குட்டி மீன் பிடிக்கிறான். இவர்கள் ஏறக்குறைய அனைவருமே மீனவர் தாம். கடற் கரையிலேயே பிறந்து வளர்ந்து வாழ்கையும் போராட்டமும் முடிவுமே கடல் என்று பழகியவர்கள். இவர்கள் பிரச்னை விடுக்க முடியாத சிக்கலில்லை. அந்தக் கரையில்லை என்றால் இந்தக் கரை, என்று தொழில் செய்து சீவிப்பார்கள், ஆனால், அவன்...? மகன் வந்து நெடு நெடுவென்று மூன்றாண்டுகளுக்கு முன் இப்படி ஒரு நாள், காலையில் அவன் முன் வந்து நின்ற போது... பிரட்டுக்களம் நோக்கிக் கிளம்பிக் கொண்டிருந்தவன் திடுக்கிட்டான். பேச்சு வரவில்லை. கண்களில் நீர் மல்கியது. தன் ஒரே மகன், கண்ணான கண்ணாக வளர்த்த மகன் தான்... என் மகன் தோட்டக்காரனின் மகனாக வளரக் கூடாது, அவன் படித்துப் பெரியவனாக... தோட்டத்துக் கிளாக்கர், சூபரிண்டு என்று வரவேண்டும் என்றல்லவோ கனவு கண்டு உதிரத்தை உருக்கிப் பிள்ளையைப் படிக்க வைத்தான். லட்சத்தில் ஒருத்தனே அப்படிப் படிக்க வைக்க முடியும். ஆனால் அவன் கிளாக்கராகவோ, சூபரிண்டாகவோ தோட்டத்துக்கு இவன் மதிப்பை உயர்த்தும் வகையில் வரவில்லை. இவர்களைத் தோட்டக்காட்டான் என்று பழிக்கும் ஒரு படியில் துணை தேடிக் கொண்டு, பிரிந்து போனான். ராமாயி... அந்தத் தாய்... அவள் சாவுக்கும் கூட வரவில்லை. “என்னடா?...” வெறுப்பனைத்தும் திரண்டு நெஞ்சுக் குழியில் வந்தது. “அப்பா... அவுசரமா வந்தேன். நீங்க... இந்தியா போயிடுங்கப்பா... நம்மாளுங்க நெறயப் பேரு போறாங்க. நீங்க வயசு காலத்தில தனியா இருக்கிறதுக்கு இங்க ஒண்ணுமில்ல. எனக்குப் பிரஜா உரிமை இருக்கு. ஆனா ஒண்ணுமே செரியில்ல. நீங்க அந்தக் கரைக்குப் போயிடுறதுதா நல்லது. நீலகிரியில, வேண்டியவங்க, தோட்டம் கரை வாங்கிட்டு செட்டிலாயிருக்காங்க. நீங்க போயிடுங்க. நா ஏற்பாடெல்லாம் பண்ணுறேன்...” அப்போது, முருகேசுவின் குமுறல், எப்படி வெடித்தது? குதிரை, கீள தள்ளிட்டு குழியும் பறிச்சுதாம்...? “ஏண்டால? அப்பன் மேல இப்பக் கரிசனம் எங்கேந்துடா வந்திச்சி? நீ மகனுமில்ல, நா அப்பனுமில்ல... அவ... ராமாயி... மகனப் பாக்கலியே, பாக்கலியேன்னு துடிச்சி செத்தா... பாவிப் பய... உன்டை அட்ரசு கூடத் தெரியாது; அங்க ஆளனுப்பி, இங்க ஆளனுப்பி காயிதம் எழுதச் சொல்லி... என்ன பாடுபட்டிருப்பே? தோட்டத்துல பெறந்து, எங்க அழுக்கிலும் மலத்திலும் ஜனிச்சி உருண்டவந்தான்டால நீ! மகன் இங்கிலீசு படிக்கணும், துரையாவனும்னு எங்க சக்திக்கு மீறி உழச்சி அம்பதும் நூறும் அனுப்பிச்சிக் குடுத்தம் பாரு? அதுக்கு நல்ல புத்தி படிப்பிச்சிட்ட. ஆறு தடவ குறப்பிள்ளப் பெத்து ஏழாவதா உன்னியப் பெத்தா. அந்த ஆறப்போல இதும்னு எப்பவோ மனசைக் கல்லாக்கிட்ட. எனக்கு இனி இந்தியாவில என்ன இருக்கு? என்ன இருக்கில? யாரு சொந்தம், யாரு வேண்டப்பட்டவங்க? இந்தத் தோட்டம், இந்தப்பச்ச, இந்தக் கஸ்டம், நட்டம் எல்லாம் தான் எனக்கு இனியும் சீவியம். நீ ஒரு புள்ள இல்லன்னான பெறகு, இங்க எத்தினியோ புள்ளங்களப் பார்க்கிறேன். நா இங்கதா பொறந்தவன், சீவிச்சவன். என் ராமாயி, இங்கதா மண்ணோட கிடக்கா. நானும் இங்கேயே முடிஞ்சி போவன். நீ போயிடு...!” கண்களை நீர்ப்படலம் மீண்டும் மறைக்கிறது. ஒரு மொட்டைக்கல்லில் வண்ணமாய்க் குந்தியிருக்கும் மீன்கொத்தி, கரைந்து போகக் கண்களைத் துடைத்துக் கொள்கிறான். தப்பு யார் மீது? குமாரு அப்பேர்க்கொத்த பையனாக இருந்தானா?... கல்யாணம் கட்டி வந்த போது கூட, வணக்கமாக அந்தப் பெண்ணுடன் காலைத் தொட்டுக் கும்பிட்டான். கட்டைக் குட்டையான அந்தப் பெண்... படித்து நாகரிகமடைந்த மெருகுடன், தனியாக வேலை பார்க்கும் முதிர்ச்சியுடன், நேராகப் பார்த்தாள். “மாமா, நீங்களும் எங்க கூட வந்திருக்கலாம். இனியும் நீங்கள் பாடுபட்டு சீவிக்கத் தேவையில்லையே?” என்றாள். அவள் கலாசாலையிலே ஆசிரியராக இருந்தால். குமாருக்கு, தினசரிப் பத்திரிகை ஆபிசில் வேலை இருந்தது. அவனுக்கு ஆங்கிலம் படிப்பித்து, மிகவும் ஊக்கம் காட்டி முன்னுக்கு ஏற்றி விட்ட கிறித்தவ சாமியார் அவனைத் தோட்டக் காட்டிலிருந்தே பிரித்துவிட்டதாக அப்போது கடுங்கோபம் கொண்டான். “தாத்தோ...? உங்களத்தான்...?” முருகேசு திடுக்கிட்டாற் போல் திரும்பிப் பார்க்கிறான். முப்பது முப்பத்திரண்டு பிராயக்காரன். கறுப்புக் கண்ணாடி, மடிப்பான மினுமினு சராய், சர்... “யார்ல...? போட்டில வந்தவ இல்ல போல இருக்கு?” அரும்பு மீசைக்குக் கீழ் இளம் நகை மெல்ல அரும்புகிறது. “என்னா வச்சிருக்கீரு, டேப் ரிகாடரு, சீல, கெசட், எதுன்னாலும் எடுத்துக்கிடறோம்...” மீண்டும் ஒரு நகை. முருகேசு வாயைத் திறக்கவில்லை. கையால் குட்டிச் சாக்கைப் பற்றிக் கொள்கிறான். அந்தாள் கீழேயே நெருக்கமாக உட்கார்ந்து காதுகளில் கிசுகிசுக்கிறான். “பிஸ்கற் இருந்தாக் கூட... எடுக்கிறோம்.” முருகேசு சுதாரிக்குமுன், இவனைப் போல் நாலைந்து பேர் அந்த கும்பலிடையே புகுந்திருப்பதைக் கண்டு கொள்கிறான். “அட போப்பா, ஒண்ணில்ல, எப்பமோ வாங்கி வச்ச பிஸ்கற்று, புள்ள அழுவுதுன்னு குடுத்தே. ஏது பிஸ்கற்...?” “தாத்தா, நீங்க பகடி பேசுறிய. நாங்கேட்ட பிஸ்கற் வேற. உங்களுக்கு நாங்க ஹெல்ப் பண்ண வந்திருக்கிறம். நல்ல நேரம் நீங்க இந்தக் கரையில எறங்கியிருக்கிறிய. இல்லாட்டி உங்கள இதுக்குள்ளாற சூழ்ந்துகிட்டு, போலீசே கொள்ளையடிச்சிட்டுப் போயிருவா?” முருகேசு பேசவில்லை. ஆனால் நீரலைகளைத் தவிர, ஒரு புதிய சலசலப்பு அலை அங்கே பரவியிருக்கிறது. பெண்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர். “இப்ப ஏதும் செய்ய ஏலாது. இங்க ஆம்பிளங்க போட்ட நிறுத்திப் போட்டு வருவாக. நாங்க ஆமி வாரதுன்னு அலயக் கொலய அள்ளிப் போட்டுக்கிட்டு ஓடி வந்தம். எங்க ஒண்ணு ரெண்டு சாமானமெல்லாம் வங்கில வச்சத கொளும்புக்கு சீல் போட்டு அனுப்பிட்டாவ...” என்று பாம்படக்கிழவி மொழிகிறாள். “பாட்டி... எங்களுக்கு போட்டுகாரங்க தகவல் சொல்லிதா இங்க வாரம். செத்தப் போனா, கஸ்டம் ஆளுக இங்க வந்து லாரில கொண்டிட்டுப் போவா. அங்க என்ன பண்ணுவாங்கன்னு சொல்ல முடியாது. முதலுக்கே நஷ்டமாகிப் போவும். நாங்க சும்மா கேக்கல, வெலை குடுத்து வாங்கிக்கறோம்...” இந்தக் கொக்கியில், ‘எங்க ஆம்பிளங்க வரட்டும்’ என்ற குரல்கள் தொய்ந்து விழுகின்றன. ஆட்கள் பிரிந்து வளையமாகிறார்கள். தகரப் பெட்டிகள், மூட்டைகள் பிரிபடுகின்றன. கேசட்டுகள், டார்ச் லைட்டுகள், சீலைகள், சட்டைத் துணிகள் என்று வெளியாகின்றன. உயிர் பிழைக்க இன்றியமையாத உணவைத் தயாரிக்கக் கூடிய சில்லறைச் சாமான்களும் கூடக் குறைந்த அந்தத் தட்டுமுட்டுக்களிடையே, அந்நியத் தன்மையைப் பறை சாற்றிக் கொண்டு; பல பொருள்கள் கைமாறுகின்றன. சாராய போத்தல்கள் சட்டுப்புட்டென்று பெரிய பைகளுக்குள் அடக்கமாகின்றன. வுலி வுலி, நைட்குவீன், என்ற சொற்களுடன் இழியும் சேலைத் துணிகள் கைமாறுகின்றன. சிறிது நேரத்தில் அங்கே அந்நியச் சுவடுகள் சுத்தமாக அகற்றப்படுகின்றன. அந்தப் புதிய ஆட்களும் மணற் கரையில் மறைந்து போகிறார்கள். வெயில் சுள்ளென்று படிகிறது. சொல்லி வைத்தாற் போல் போலீசு ஆட்கள் வருகின்றனர். குழந்தைகள் காக்கிச் சட்டையைக் கண்டதும் தாய் தகப்பன் என்று கிலியுடன் ஒண்டிக் கொள்கின்றனர். “எல்லாம் வண்டியில போய் ஏறுங்க...? அவரவர் மூட்டையுடன் சற்று எட்டி நிற்கும் லாரியில் ஏறச் செல்கின்றனர். “கிழவா? மூட்டையில என்ன வச்சிருக்க?” முருகேசு அசையவில்லை. “என்னாடா? என்ன வச்சிருக்கே?...” அந்தக் கருப்புக் கண்ணாடிப் பயல் எட்ட இருந்து வேடிக்கைப் பார்க்கிறான். “ஒண்ணுமில்ல...” “ஒண்ணுமில்ல...?” கைக்கம்பு கொண்டு குட்டிச் சாக்கையும், அவன் பிடித்திருந்த சிலுவார் பையையும் குத்துகிறான். “நட...?” எல்லோரும் லாரிக்குள் ஆடு மாடுகளைப் போல் ஏறி அடைகின்றனர். கையில் காசு, லாரிப் பயணம் இரண்டையும் அநுபவிக்கும் குடும்பத் தலைவர்கள், குழந்தைகள்... ஆனால் முருகேசுவுக்கோ இனம் புரியாத குழப்பம், கிலி. பூவரச மரத்தடியில் லாரி அவர்களை இறக்குகிறது. “லே, கிழவா, இங்க வா, உம் மூட்டய எடுத்துட்டு?” ஒரு தட்டித்தடுப்பு அறை. மேசையடியில் இன்னொரு காக்கிச்சட்டை உட்கார்ந்திருக்கிறது. குட்டிச் சாக்கை அவிழ்க்கிறார்கள். பழைய நைந்த சேலை இரண்டு, இவனுடைய ஒரு லுங்கி, ஒரு போர்வை, ராமாயியும், குமாரும், மருமவளும் தானுமாக முன்பு கண்டியில் எடுத்துக் கொண்ட கண்ணாடி உடைந்த போட்டோப் படம்... இன்னமும் மீதமுள்ள ஒரு ‘பாண்’ துண்டு... “அதில என்ன இருக்கு?... வையி...?” அதில்... தோட்டத்துரை எழுதிக் கொடுத்த நல்ல தொழிலாளி சான்று, புகைப்படம் ஒட்டிய பாஸ்போர்ட்டுகள், சரோஜா, தனம், சுகந்தி... எல்லாருடையதுமான பாஸ்போர்ட்டுகள்... பிறகு, மன்னாரில் எழுதிக் கொடுத்த சீட்டு... ரோஸ் காகிதத்தில் பொதிந்த தாலி, அட்டியல், இவனுடைய வங்கியில் கட்டிய பணத்துக்கான சான்று... எல்லாம் மேசையில் இறைபடுகின்றன. “இவங்கள்ளாம் இருக்காங்களா?...” “அந்த மூணு பெண்ணுகளும், என் அக்கா பேத்திங்க, வுடுபுசேலா தோட்டத்துல இருந்தாவ. அம்மா செத்து, அப்பன் கூறில்லாம போயிட்டா. கூட்டிட்டுத் தாய் நாடு போன்னு அனுப்பிச்சி வச்சாவ. இங்க வந்து, மன்னாருல, கப்பல் சீட்டெடுக்கக் காத்திட்டு, செம தூக்கிப் பிழச்சனுங்க. ஒரு நா வாரப்ப, ஒரே கரச்சல். ஆமி வந்திச்சின்னா, அவுங்கள மட்டும் மாணம் அய்யா?” முருகேசு குரல் உடைய அழுகிறான். இது போல் எத்தனையோ அழுகைகளை அவர்கள் கேட்டிருப்பார்கள் போலும்? இரக்கம், இளக்கம் எதுவும் இல்லை. “போ, போ எல்லாம் எடுத்திட்டு, இமிகிரேஷன் தாசில்தார் கிட்ட போ... போ?” என்று விரட்டுகிறார்கள். அன்றாடம் லாஞ்சிகள் கடவுகளில் மனிதர்களைக் கொண்டு கொட்டுகிறது. யார் எவர் என்ற முகவரிகள் குலைந்து போய், தனித்துவங்கள் அழிந்து போய், வேரற்ற பூண்டுகள் போல் இராமேசுவரம் கரையெங்கும் கும்பல் சிதறிக் கிடக்கிறது. கங்கையையும் காசியையும் இணைக்கும் புள்ளியாக, பரந்த பாரதமனைத்தையும் புனிதச் சரடால் பிணைக்கும் இக்கடற்கரையில் சிதறிக் கிடக்கும் அகதிக் கும்பல், அந்த இலங்கை மண்ணும் தொந்தமுண்டு என்று மந்திரிப்பது போல் கடலலைகள் அலப்புகின்றன. முருகேசு, முட்டு முட்டாக மரத்தடிகளிலும் தெருவோரங்களிலும் மணல் பரப்புகளிலும் தென்படும் மக்களிடையே தன் பிடி நழுவிப் போன குழந்தைகளை, பெண்களைத் தேடுகிறான். “இந்தப் பொண்ணு, சடங்கான போது, அவங்கல்லாம், இங்கத்தா இருந்தா. பின்ன கானளந்து குடுக்கிற கரச்சல் வந்தப்ப, அல்லாம் அடிபுடின்னு லகள வந்திச்சா? அந்தப் பயல, செயிலுக்குக் கொண்டு போயிட்டா. அடிச்சி கால் உடஞ்சி போச்சின்னு அல்லாம் சொல்றாவ. அப்பனோ ஒண்ணும் சரியில்ல. பெண்டாட்டி ஆம்பிளப் புள்ளக செத்ததிலேந்து, குடி குடின்னு குடிச்சிச் சீரழியிறா. நீங்க கூட்டிட்டுப் போயிடுங்க. நீலகிரியில, அவ சித்தப்பன் அத்தை குடும்பமெல்லாம் அப்பமே எழுபத்தாறுல ஒப்பந்தப்படி போயிருக்கா. கொண்டு சேத்துடுங்க...” குடும்பமில்லாமல் போன தனக்கு இப்படி ஒரு பொறுப்பு வரும், என்று கனவு கூடக் கண்டிருக்கவில்லை. இந்த மண்ணிலேயே கிடப்பேன் என்று சொன்னவனை, துரை கூப்பிட்டனுப்பி, ஒரு கடிதாசைக் குடுத்து, “உனக்கு வயசாகி விட்டது; இனி தோட்டத்தில் வேலை கிடையாது” என்று சொன்னதும் எப்படி நொறுங்கிப் போனான்? அந்தத் தோட்டத்து மக்கள் உறவுகள் எல்லாமே அவனுடைய உழைப்புரிமையின் ஆதாரத்தில் அல்லவோ தொக்கிக் கொண்டிருந்தன? கூடப் பிறந்த உறவுகள், சொந்த பந்தங்கள் எங்கெங்கோ அந்த மண்ணில் உழைக்கச் சிதறி இருந்தார்கள். பெண் மக்கள் கட்டிய இடங்களுக்குச் சொந்தமானார்கள். அந்த உறவுகள் கூட, ஏழைகளுக்கு அவ்வப்போது புதுப் பித்துக் கொண்டு பழகும் வாய்ப்புக்களை ஏற்க இயலாமல் நலிந்து போயின. ஆனால், தலைமுறை தலைமுறையாக, ஒரே லயம், அடுத்தடுத்த காம்பரா என்று சுகதுக்கங்களைப் பகிர்ந்து கொள்ளும் கட்டாயத்தில், உயிராய் உறவாய்ப் பழகிய பாசங்களை எப்படி விட்டு விர வேண்டி இருந்தது? இவனுக்கு வேலையில்லை என்றதும் காம்ப்ராவும் பூட்டப் பெற்றது. அன்றாடம் போராட்டமும், திணறலுமாகத் தோட்டங்களிலும் அமைதி குலைந்து போயிற்று. குடும்பம் குடும்பமாக ஒப்பந்தம் என்று தாய்நாடு செல்லத் துணிந்து விட்டார்கள். இந்தியாவில் தேயிலைத் தோட்டங்களில் வேலை கொடுக்கிறார்கள்; போய் இறங்கியதும் பணம் கொடுக்கிறார்கள் - சோறு போடுகிறார்கள் - இங்கு போல் பொழுதெல்லாம் தெமிலு தெமிலு என்ற வசைப் பேச்சுக்களுக்கும் எந்த நேரம் என்ன ஆகுமோ என்ற கிலிக்கும் இலக்காக வேண்டாம் - என்று தீர்மானம் செய்து கொண்டு குடும்பம் குடும்பமாகப் பெயர்ந்தார்கள். அவனுக்குத் தெரிந்து, ராமசாமிக் கங்காணி - நாச்சிமுத்து குடும்பம், வேலப்பன் குடும்பம் என்று மூட்டை கட்டிக் கொண்டு கப்பலேறிப் போனார்கள். புதிய சூழலில் எப்படி எங்கிருந்து பிழைப்பான்? பதுளைப்பக்கம், தமக்கை ஆண்டாளுவின் குடும்பத்தோடு அண்டச் சென்றான். “விரலுக்குத் தக்கின வீக்கம்தான் வீங்கணும். ஒரு சாதிசனம், கலியாணங்காச்சி, ஏதும் வேணான்னு, புள்ளய அனுப்பிச்சிப் படிக்கப் போட்ட, என்ன ஆச்சி?” என்று சொல்லிச் சொல்லிக் காட்டினாள். தன் ஓய்வுக் காலப் பணம், ராமாயியின் சிவப்புக்கல் தோடு, மூக்குத்தி, மூன்று பவுன் அட்டியல் தாலி, எல்லாவற்றையும் கொடுத்து விட்டு, அங்கே ஒண்டிக்கொள்ள நினைத்திருந்தான். ஆண்டாளு புருஷன், எழுபதைக் கடந்தவர். சீக்கு வந்து கட்டிலோடு கிடந்தார். மூன்று ஆண்மக்கள் கல்யாணம் கட்டிக் குடும்பமாக வெவ்வேறு திக்கில் இருந்தார்கள். வீட்டோடு இருந்த இளையமகன் ராசு, தையல் தைத்துக் கொடுத்தான். பெண்சாதியும் ஒரு மகளும் தோட்டத்தில் வேலை செய்தார்கள். முருகேசு, எங்கேனும் சில்லறையாக சுமை சுமக்கவோ, வயல் வேலை செய்யவோ போனான். ஏழெட்டு மாசங்கள் ஓடியிருக்கும். அப்போதுதான் பெரிய கலவரமாக வெடித்தது. ஆடிவேல் திருவிழாவுக்குக் கதிர்காமம் சென்றிருந்த மருமகன் குடும்பத்தினரை, குண்டர்கள் வழி மறித்து, பஸ்ஸுக்குத் தீ வைத்தார்கள் என்று கேள்விப்பட்டதும், ஒடுங்கிப் போனார்கள். அந்த மருமகன், மூன்று பெண்களையும் கூட்டிக் கொண்டு ஒருநாள் ஓலமிட்டுக் கொண்டு வந்தான். ஆண் குழந்தைகள் இரண்டும் தாயோடு வெந்து போனார்கள். பஸ்ஸைக் காடர்கள் வளைத்துக் கொண்டதும் புருஷன் தப்பி ஓடிவிட்டானாம்... பெண் பிள்ளைகளைக் கூட்டிப் போகவில்லை. ஆண்டாளு நெஞ்சில் அறைந்து கொண்டு அழுதாள். “பாவி... உன்ற உசுரு வெல்லாமப் போச்சுன்னு, அவளயும் புள்ளகளையும் விட்டுப் போட்டு ஓடிவந்தனியா?...” முருகேசுவுக்குத் தாங்க முடியாமல் இருந்தது. பிறகுதான் அவன் கண்டிக்குப் பயணமானான். அந்தப் பெண் குழந்தைகளுக்குத் தன்னைக் காப்பாளனாக்கிக் கொண்டான். “சமஞ்ச பொண்ணு, இங்கியே ஒரு கலியாணத்தை செட்டப் பண்ணிட்டு குடும்பம்னு கூட்டிப் போங்க. குடும்பத்துக்கு மூவாயிரம் குடுக்காவ, இந்தியா கவுர்மென்ட்டில” என்று பலரும் யோசனை சொன்னார்கள். ஆனால், சுகந்திப்பெண்... பயங்களில் அதிர்ச்சியுற்று இறுகிப் போயிருந்தாள். பாட்டியும் மாமனும் இந்த யோசனையைச் செயலாக்கி விடுவார்களோ என்று அஞ்சி, “எனக்கொண்ணும் கலியாணம் வாணாம். இந்தியாக்குக் கூட்டிப் போயி என்ன படிப்பிக்கணும்...” என்றாள். “ஆமாம். அதுஞ்சரிதா. அவுசரத்தில எவனாயாணும் சேத்துக்கிட்டு, காசுக்காக, கவுர்மென்ட் ஏமாத்துறது சரியில்ல. ஆண்டாளு, நா கூட்டிட்டுப் போயிடறே. இந்த மண்ணு எனக்கே இப்ப கசந்து போச்சு!” இப்படித்தான் புறப்பட்டான். அவர்கள் மன்னாரை அடைந்த பொழுதில் இனக்கலவரம் அங்கும் கொள்ளையும் தீவைப்புமாகப் பரவ கப்பல் இல்லை என்றாகி விட்டது. இரவுக்கிரவே தோணி விடுகிறார்கள் என்பதை விசாரிக்க, அந்தப் பெண்களைத் தங்கியிருந்த வீட்டில் விட்டுவிட்டு அவன் சென்றிருந்தான். திரும்பி வர இரண்டு நாட்களாகி விட்டன. அவர்களை விட்டிருந்த இடம், ஒரு கடையுள்ள பின்புற வீடு. இளவயசுக்காரி. புருஷன் சவுதிக்குப் போயிருந்தான். பையன் முன்புறம் கடையைப் பார்த்துக் கொண்டிருந்தான். நாட்டுக்காரத் தமிழரா, வம்சாவழியினரா என்பதெல்லாம் தான் தெரியாத நிலை வந்துவிட்டதே? “பிள்ளங்களப் பத்திக் கவலைப் படாதீங்க பெரியவரே, நான் பார்த்துக்கிற” என்றாள். கையில் அந்த வார்ப் பை, அத்தாட்சிகளுடன் அவன் விசாரிக்கப் போய் இருந்தான். முன்னிரவில் திரும்ப வந்த போது, கடை பொசுங்கிக் கிடந்தது. ஒரு ஈ குஞ்சு வீட்டினுள் இல்லை. வெறும் தட்டுமுட்டுக்கள் தானிருந்தன. அவர்களின் துணிமணிகள் கூடத் தென்படவில்லை. அவர்கள்... என்ன ஆனார்கள்? “பொடியனை ஆமி புடிச்சிக்கிட்டு போயிற்று. மத்தவங்க எங்க போனாங்கன்னு தெரியல்ல...” என்று அடுத்த பக்கத்துக் குடிசையில் கிழவி ஒருத்தி தகவல் கொடுத்தாள். பெண் குழந்தைகளை, அந்தத் தாயை, இராணுவ வெறியர்கள் கடத்திப் போயிருப்பார்களோ? முருகேசுவுக்கு நினைத்தால் நெஞ்சு விண்டு போகிறது. தேனீக்கூட்டில் புகை போட்டால் நாலா பக்கமும் தானே சிதறிப் போகும்? ராணுவத்தினர் ஏடா கூடமாகப் பெண்களைக் குலைத்திருந்தால் அதற்குரிய தடயங்கள் இருக்குமே? ஆனால்... அதொன்றும் இல்லை. ஒருகால் அவர்கள் வேறெந்தப் பக்கத்திலேனும் ஓடிப் போயிருக்கலாமல்லவா? முருகேசு மேலும் சில நாட்கள் அங்கே விசாரித்துக் கொண்டு தேடி அலைந்தான். இறுதியில், இந்தக் கரையில் அவர்கள் வந்திருக்கக் கூடும் என்ற நம்பிக்கையைக் கையில் பிடித்துக் கொண்டு வந்திருக்கிறான். அவனுடன் லாஞ்சியில் வந்தவர்கள் அனைவரும் எங்கெங்கோ சிதறியிருக்கிறார்கள். இவனுக்கும் மண்டபத்துக்குத்தான் சீட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இவனிடம் விற்கவும் பொருள் இல்லை. இந்தியாக் காசும் இல்லை. மண்டபம் சென்றாலே பிரச்னைகளுக்கு வழி காண முடியும். ஒரு கால் அவர்கள் மண்டபத்தில் இருக்கலாம். அக்கினி தீர்த்தம் என்று பெயர் பெற்ற புனிதக் கரையின் அருகே மரங்களின் நிழலில் ஓர் அகதிக் கும்பல் வேரூன்ற மண் பறித்திருக்கிறது. கைப்பொருளை விற்றுக் கஞ்சிக் காய்ச்சிக் குடிப்பவர்களும், இராமகிருஷ்ண மடத்துச் சாமியும் தொண்டர்களும் கொடுக்கும் உணவுப் பொட்டலம் கொண்டு ஒருவேளைப் பசியாறிப் பிழைக்கப் போராடுபவர்களுமாக வேர் பறித்த மக்கள் குலம் எங்கும் காணப்படுகிறது. முருகேசுவும் முதல் நாள் தருமப் பொட்டலம் பெற்றுப் பசியாறினான். இன்று கடலில் மூழ்கி, நீறுதரித்து, கோயிலுக்குச் சென்ற பின் மண்டபம் செல்லத் தீர்மானித்திருக்கிறான். இராமேசுவரம் கோயில்...! நிமிர்ந்து பார்க்கிறான். உடல் சிலிர்க்கிறது. இவனுக்குத் தோட்டக் கோயில்கள் தெரியும். மாரியம்மன், முருகன், கணபதி கோயில்களுண்டு. கதிர்காமக் கந்தனை இரண்டு முறைகள் ராமாயியுடன் சென்று வழிபட்டிருக்கிறான். அந்தக் கோயிலில் சாமியைப் பார்க்க முடியாது. கப்புராளை திரையைப் பாட்டுவிட்டு உள்ளே பூசை செய்வார். இந்தக் கோவில்... அடேயப்பா! உள்ளத்தின் அவநம்பிக்கைகளும், சஞ்சலங்களும் கரைந்தாற் போன்று உணருகிறான். இந்தியா...! அவனுடைய மூதாதையர் பிறந்து வளர்ந்து தாய்நாடு. இந்த நாட்டை, மண்ணை விட்டு வெள்ளைக்காரன் தோட்டத்துக்கு உழைக்கப் போன போதே அவர்களைக் கெட்ட காலம் சூழ்ந்து விட்டது...! தாய் மடியை உதாசீனம் செய்து போகலாமா?... எப்பேர்க்கொத்த மனிதர்கள் இந்தக் கோயிலை நிருமாணித்திருப்பார்கள்! முருகேசு, பூகோள பாடமும் சரித்திரமும் படித்தானா? மலைச்சரிவுகளும், தேயிலை திரைகளும், சிறிய மனிதர்களும், ஆணையிடும் கங்காணி மற்றும் உயர்படிக்காரரும் சர்வ வல்லமை பொருந்திய பெரியதுரை, சின்னத் துரை பங்களாக்களும் கொண்ட உலகில், வாழ்வின் ஒரே லட்சியமான பிள்ளையின் படிப்புக்காக உழைத்தே தன் மிடுக்கான இளமையையும் நடுத்தரப் பருவத்தையும் கழித்து விட்டான். இவன் கண்டிருக்கும் தனித்தன்மை படைத்து மனிதர்கள், பண்டாரம், பூசாரி, உடுக்கடித்து மேளம் கொட்டுபவர், சடங்குகள் செய்யும் உயர்குலத்தினர் ஆகியோர் தாம். இந்தச் சிறு உலகத்திலும் நூறு சாதி சம்பிரதாயம் பிரிவுகள் அரசோச்சாமல் இல்லை. பரமசிவம் பறச்சாதி என்று மாரிமுத்துக் கங்காணி பிள்ளைகளை அவன் காம்பிரம் பக்கம் போகக் கூடாது என்று அதட்டி வைத்திருந்தான். பரமசிவத்தின் மகள் சடயம்மா தான் ராமாயி கண்மூடிய பிறகு இவனுக்குச் சோறும் தேநீரும் வைத்துக் கொடுத்தாள். சொந்த மகளாகப் பிரியம் வைத்திருந்தாள். அவளும் புருசனும், அவனுடைய தம்பி குடும்பத்துடன் நெருங்கிக் கொண்டிருந்தார்கள். அந்தத் தம்பி ஆறுமுகம் தான் புதிய மனைவியுடன் இவன் வீட்டுக்கு வர இருந்தான்... அதற்கே மாரிமுத்துவின் வீட்டில் இவன் சாதியை மட்டமென்று முடிவுகட்டி, மகன் பிரிந்து சென்றது நியாயம் என்று கூடச் சொன்னார்கள். சிங்களக் காடையர் தோட்டத்தில் கரைச்சல் விளைவித்த போது, இவர்கள் உயிருக்கஞ்சி மலைமேல் தேயிலைச் செடிகளுக்கிடையே தஞ்சம் புகுந்திருந்தனர். இரவு வருமுன், சமைத்த சோறு, பிள்ளைகுட்டி என்று தூக்கிக் கொண்டு ஈரத்தோடு ஈரமாக, விஷப் பூச்சிகளுக்கும் அஞ்சாமல் பதுங்கிய நிலையில் கூட அந்தச் சாதிச் சனியன் தலைகாட்டாமல் இல்லை. சடயம்மா, புளிச் சோற்றுப் பானையுடன், “மாமீ சாப்புடுறீங்களா?” என்று கேட்டா என்று, “ஏடீ பறக்கழுதை, எம்புட்டுத் தயிரியம் டீ,” என்று கூறினாள். இப்போது... இப்போது...? பசி பசி என்று எப்படித் துடித்துப் போனார்கள்? இராம கிருஷ்ண மடத்துச்சாமியும் தொண்டர்களும் கொடுக்கும் பொட்டலங்களுக்கு எத்தனை அடி பிடி? கோயிலுக்குள் சஞ்சலங்களும் கவலைகளும் கழன்ற உணர்வில் அடி வைத்து நடக்கிறான். மக்கள் பல்வேறு தீர்த்தங்கள் முழுகிய பின் அடி வைத்து நடந்து நடந்து கல்தளம் முழுவதும் மண்ணும் தண்ணீருமாக இருக்கிறது. அந்தச் சில்லிப்பே இவனுக்குப் புதிய சிலிர்ப்பை ஊட்டிக் கொண்டிருக்கிறது. ஆடவரும் பெண்டிரும் - குழந்தைகளும்... ஈரம், மொழு மொழுவென்று சந்தன நிறங்களும், மெல்லிய ஆடைகளுமாகச் சீமான்களாகக் காணப் பெறும் மக்கள்; ஏழைகள், கருப்பர், குட்டையானவர்... என்று குழுமும் கோயில். அர்ச்சனை தட்டுக்கள், பூக்களின் நறுமணம் - பல்வேறு மொழிகளின் ஒலிகள் - உயரமான - பரவசப் புல்லரிப்பை தோற்றுவிக்கும் சூழல்... “இந்தக் கோயிலை முத முதல்ல யாரு கட்டினாங்க தெரியுமா? சிரீலங்காவை ஆட்சி புரிந்த பராக்கிரமபாகுதான் முதமுதல்ல இன்னிக்குக் கருப்பக்கிரகமா இருக்கிற பகுதியைக் கட்டினான்...” முருகேசு திடுக்கிட்டாற் போல் கொடி மரத்தின் கீழ் நிற்கிறான். “யாரு இந்தப் பய...? பாத்த மொகமா இருக்கு?...” நெஞ்சிலே அழுத்தமாக நிரடுகிறது. மென்மையான அந்த மூக்கும் உதடுகளும் அரும்பு மீசையும், எண்ணெயும் தண்ணீரும் கோத்த கருமுடியும்... எந்தக் கூட்டத்திலும் கண்டு கொள்ளும் நெடு நெடு உயரம், முழுக்கைச் சட்டை, குரல்... குரல் கூட... “இந்த லிங்கம் சீதாதேவி மணலால் பிடித்து வைத்து ராமர் பூசை செய்ததுன்னு சொல்லுவாங்க. வடக்கு தெக்கு எல்லாப் பிரிவினையும் வெள்ளக்காரன் வந்தப்புரம் தான் வந்தது. முதமுதல்ல, இந்த லிங்கம் கரையில, கோயிலில்ல இருந்ததாம். ஒரு குருக்கள் சாமி, தினம் வந்து பூசை பண்ணிண்டிருந்தாராம். அப்ப, ஈசுவரன் அவர் கனவில் வந்து “பக்தா, நான் எத்தனை நாளைக்கு இப்படி மழையும், வெயிலும் கொண்டிட்டு இருப்பேன்? எனக்கு ஒரு நல்ல கல்கட்டிடம் எழுப்பணுமே!” என்று சொன்னாராம். அப்ப, குருக்கள், “சாமி, உங்களுக்குக் கற்கோயில் எழுப்ப இந்த ஏழை கல்லுக்கு எங்கே போவேன்? இங்கே மலையும் கூட மணலாக அல்லவா இருக்கிறது?” என்றாராம். அதற்கு ஈசுவரன் “பக்தனே கேள். இந்தக் கடலைத் தாண்டிப் போ; தெற்கே இலங்கையை ஆளும் ராஜா வயிற்று வலியினால் ரொம்பக் கஷ்டப்படுகிறான். நீர் ஒரு தோணியிலேறிப் போய் அவனைக் கண்டு, திருநீறு கொடுப்பீர். அவனுக்கு நோவு குணமாகும். உமக்கு என்ன பரிசு கொடுக்கட்டும் என்று கேட்பான். அப்போது இங்கே ஒரு கற்கோயில் எழுப்ப வேண்டும் என்று சொல்!” என்று சொல்லி மறைந்து போனார். “குருக்களையா, உடனே இங்கே கரையில் மீன் பிடிக்கும் மீனவரிடம் சென்று சொல்ல, அவர்கள் இவரை ஒரு தோணியிலேற்றி, மன்னார்க்கரையில் விட்டார்கள். குருக்கள் காடுகளில் பயணம் சென்று ராஜாவைப் போய்ப் பார்த்துத் திருநீறு கொடுத்தார். இறைவன் சொன்னபடியே, ராஜாவின் நோய் குணமாக, ரொம்ப சந்தோஷமடைந்தார். “குருக்கள் தன் கனவை அவரிடம் சொல்லி, ”ஈசுவரனுக்கு ஒரு கற்கோயில் கட்ட வேண்டும்” என்று வேண்டினார். கல்லை அளவாக எடுத்துக் கொண்டு கடலில் செல்ல வேண்டுமே? அதிகமானாலும் சிரமம்; குறைவாகப் போயிவிட்டாலும் சிரமமாயிற்றே? ராஜா திரிகோண மலையில் கற்களெடுத்து, முதலில் அங்கேயே சிறுகோயில் அமைக்கக் கட்டளையிட்டான். பின்னர் அதே அளவு கற்களைத் தோணியில் ஏற்றிக் கொண்டு இக்கரை வந்து இங்கே சுவாமிக்கு முதன் முதலில் கோயில் அமைத்தான். இன்னைக்கும் கருவறை தெரியிதே, அது அந்தக் கட்டிடம் தான். பின்னால், பல ராஜாக்கள், நகரத்தார், எல்லாரும் சேர்ந்து பெரிய பெரிய பிரகாரங்கள், மண்டபங்கள் எல்லாம் கட்டினாங்க...” முருகேசனுக்குச் சட்டென்று நினைவுக்கு வந்து விடுகிறது. “எலே, நீ சுந்தரலிங்கம் இல்ல?...” கங்காணி சந்தனசாமியின் பையன்... குமாருவுடன் கூடப் படித்தான். வெளியே ஜோசப் ஸ்கூலில், ஒரு வருசம், தாக்குப் பிடிக்க முடியவில்லை. சந்தனசாமி குடும்பம், எழுபதிலேயே இந்தியா போய்விட்டார்களே...? அந்தக் கூட்டத்துடன் இவனும் அவன் பேச்சைக் கேட்டுக் கொண்டே நடக்கிறான். அவர்களும் தமிழர்கள் தாம். ஆனால் வெளியூர்க்காரர்கள்... “எலே... நீ... சுந்தரலிங்கமில்ல?” அவன் திடுக்கிட்டாற் போல் தான் பார்க்கிறான். ஆனால் புன்னகை செய்து விட்டுத் தன் தொழிலில் கண்ணாய் இருக்கிறான். கருவறைக்கு முன் நின்றதும், அருச்சனைத் தட்டைக் கொடுத்து, பணிவாக அவர்களுக்கு நல்ல தரிசனம் கிடைக்க வழி செய்கிறான். முருகேசு, முக்கால் மணி நேரமும் வியப்புடனும் பிரமிப்புடனும் அவர்களுடன் சுற்றிய பிறகு, வெளியே கற்றூணருகில் நிற்கும் போலீசுக்காரப் பெண்பிள்ளையைப் பார்த்துக் கொண்டு, தயங்குகிறான். அந்தப் பெண்களைப் பற்றி இவளிடம் கேட்டால் தகவல் கூறுவாளோ? அப்போது, சந்தனப் பொட்டுடன் சுந்தரலிங்கம் அவனருகில் வருகிறான். “மாமோ?... நீ...ங்க... ஆருன்னு தெரியல... பார்த்த சாடயா இருக்கு...” “குமாருவோட அப்பா... எல... முருகேசு...” “ஏ... மாமோ...! நீங்க... நீங்களா? தாடி மீசையெல்லாம் நரச்சி, எப்படிப் போயிட்டீங்க? அடையாளம்னு தெரியிறது, ஒங்க கண்ணும் மூக்கும் குரலுந்தா. நீங்க எப்ப வந்தீங்க? எங்க இருக்கிறீங்க? மாமி காலமாயிட்டதா கேள்விப்பட்டேன்...” “ஒங்கப்பா, அம்மா, குடும்பம்லாம் எங்க இருக்காங்க?... ஒங்கப்பா, புத்திசாலித்தனமா முன்னமே வந்தாரு. இப்ப பாரு, எலங்கைச் சீமயே பத்தி எரியிது. அன்னிக்கு அனுமான் நாயத்துக்கு எரிச்சாரு. இன்னைக்கு அநியாயத்துக்குச் சுட்டுப் பொசுக்குறானுவ...” அவனுடைய நெஞ்சம் பொல பொலத்துக் கொட்டுகிறது - ஊர்க்காரன், மைந்தனைப் போல் உறவுடையவன் என்று பற்றிக் கொள்கிறது. “குமார இங்க ரெண்டு மூணு மாசம் முன்னாடி கூடப் பார்த்தேன்...” “இங்கியா? இங்க இருக்கிறானாப்பா...?” “இங்கன்னா, இங்க என்னப்போல தொழில் செய்யிறவனில்ல. இங்க பார்ப்பேன்னா, வருவான்... இப்பதா ரெண்டு மாசம் முன்ன பாம்பன் கிட்டப் பார்த்தேன். ஸ்டேஷன்ல நின்னிட்டிருந்தான், ரயிலுக்கு... எனக்கு அங்க ஸிடிஸன் ஷிப் இருக்கு, ஆனா... மனசு கேக்கல, அங்க நடப்பு ரொம்பக் கஷ்டமா இருக்கு. நான் இங்க தான் வந்திடறதா இருக்கிறேன்னான். சம்சாரத்து வீட்டுக்காரங்கல்லாம் மெட்றாஸ்ல வந்திருக்காப்பல. ஒரு மச்சான் படிக்கிறானாம்... மச்சாள் புருஷன், சவுதியிலோ துபாய்லோ இருக்கிறது போலச் சொன்னான்...” “என்னைப் பத்தி ஏதேனும் பேசினானா?” என்று கேட்க நெஞ்சு துடிக்கிறது. ஆனால்... ஆனால்... நீ பிள்ளை இல்லை என்று சொல்லி விரட்டினானே? அந்த வைராக்கியம் குறுக்கே நிற்கிறது. “நீங்க எப்ப வந்திய...? யாரோட இருக்கிய?...” முருகேசு சுருக்கமாகத் தெரிவிக்கிறான். “அந்தப் பிள்ளைக எங்க போச்சின்னு தெரியலப்பா... என்ன நம்பி ஒப்பிச்சா. மன்னாருக் கரையெங்கும் விவரம் விசாரிச்சேன். ஒண்ணும் புடிபடல...” பொங்கிவரும் கண்ணீரை முருகேசு துடைத்துக் கொள்கிறான். “இப்ப ஒண்ணுமே புரிபடாம இருக்கு. அல்லாம் எப்படி எப்படியோ வந்து வுழுறாங்க கரையில. ஆனா, இந்தக் கரைக்கு வந்த பெறகு - வந்திருந்தாங்கன்னா, எங்கானும் கேம்பில இருப்பாங்க... அப் கன்ட்ரி ஆளுவ கப்பலிருக்கிறப்பதா வந்தாங்க. இப்ப அவ்வளவு சனமும், மீன்பரவங்க, அங்கங்க சிறு கடை தொழில்னு வச்சிருக்கிறவங்கதா, வாராங்க... மண்டபம், தூத்துக்குடி, திருச்சின்னு போயிருப்பா...” “நீ... இப்ப எத்தினி காலமா இருக்கேப்பா இங்க? கலியாணம் காச்சி ஆயிருக்கணமே?” “இல்ல மாமா, எங்கையா, தமிழ்நாட்டுல சொந்த நாடுன்னு வந்ததுக்கு ரொம்பப் பட்டுட்டாரு. இங்கே சொந்தக்காரங்க நில புலம் ஒண்ணில்லன்னுட்டாங்க. நா ஒருத்தந்தா அப்ப வெவரம் தெரிஞ்சவ. இங்கே தொழில் செய்யன்னு பணம் எல்லாம் இப்ப தான் குடுக்கறாங்க. அப்ப ஒண்ணுமில்ல. அப்பா ரொம்ப கஷ்டப்பட்டாரு. கிராமத்துல வேலை ஒண்ணுமில்லன்னு, கொண்டு வந்த நகை நட்டு எல்லாம் கரைஞ்சதும், வேலைக்குப் போற வயசும் இல்ல. மிச்சமும் செரமம். அதே மனசு ஒடஞ்சு சீக்காயி, தூத்துக்குடி ஆசுபத்திரில செத்து போனார். ரெண்டு தங்கச்சியக் கட்டிக் குடுத்திட்டோம். ஒரு தங்கச்சி கான்வென்டில நிக்கிது. ஏழைப் புள்ளயா படிப்பு சாப்பாடுன்னு... ஒரு தம்பியைப் படிக்கப் போட்டேன். பத்து தா முடிச்சா. சிவகாசில லித்தோ வொர்க்ஸ்ல வேல பார்க்கிறான். அவந்தா முந்நூறு ரூபா போல சம்பாதிக்கிறா. அம்மாளும் அங்கதா இன்னுமொரு தங்கச்சிய வச்சிட்டிருக்காங்க. நானும் என்னென்னமோ தொழில்னு போனவந்தா. சிவகாசியில, மாட்சிஸ்ல கணக்கப்புள்ளயா வச்சுக்கிட்டா... ஆனா, அங்க நெலவரம் ஒண்ணும் புடிக்கல. கோபம் வந்து மானேசர அடாபுடான்னு பேசிட்டேன். பொம்பிளப் புள்ளியள அக்கிரமமா அநியாயம் பண்ணிப் போடுறானுவ, அதனாலதான் வேதக்காரங்களாக்கினாலும் போவட்டும், கான்வென்டில் பாதுகாப்பா இருக்குமின்னு விட்டுப்புட்டோம். கடசீத் தங்கச்சிக்கு நாங்க வாரப்ப, மூணு வயசு. அது இப்ப சமஞ்சு நிக்கி. இதெல்லாம் பாத்த பெறகு எனக்குக் கலியாணம்னு கட்டிக்கணும்னே தோணல... “வாங்க, மாமோ... காபி சாப்பிடுவோம்...” இவனுடைய மகன் ஒரு நாள் இப்படிக் கூப்பிடச் சந்தர்ப்பம் வந்ததில்லை. அவன் படிக்கிற நாட்களில் லயக்கோடியில் தென்படுமுன்னரே எப்படி மனசு துள்ளும்? பச்சை மரம் பால் ஒடிய முறிந்து விழுவது போல் பாசமும் உறவும் கூட உயிரற்றுப் போவதுண்டோ? நேரம் காலம் இல்லாமல் அலையலையாக மக்கள் வருகிறார்கள். கடலில் முழுகுகிறார்கள். கோயிலுக்குப் போகிறார்கள். கெசட், டார்ச்லைட், சேர்ட், சராய் துணிகள் என்று வரிசையாகத் தோணிகளில் வந்த மனிதர்களிடம் வாங்கிய சாமான்களைக் கடைபரப்பி இருக்கிறார்கள். இவர்கள் பலருக்கும் சுந்தரலிங்கம் நெருங்கிய தோழமையுடையவன் போலும்! “என்ன அண்ணாச்சி? ஆரும் வர இல்லையா?...” “அண்ணாச்சி? ‘செட்டி வீட்டு சங்கு’ கேட்டியளே? இருக்கு?” “அப்படியா? வச்சிருங்க. சாயங்காலம் கூட்டி வாரேன்!” சுந்தரலிங்கம் சிரித்துக் கொண்டே நடக்கிறான். இவர்கள் கடைகளுக்கு இவன் பயணிகளைக் கூட்டி வருவான் போலும்! “மூணு வருசமா இங்க இருக்கிறேன்... நான் இங்கே தேவஸ்தான உரிமை பெற்ற கைடு. மேல மேல படிக்கணும்னு ஆசை. எப்படின்னாலும், ஒரு பி.ஏ., எம்.ஏ.யும் எடுத்துடணும். படிச்சவன்னா அந்த மதிப்புத் தனிதா... மாமோ, தலைமுறை தலைமுறையா தோட்டக் காட்டில எதுவுமே தெரியாம உழச்சு உழச்சு அந்த மண்ணுல உரிமையில்லாத ஆளாகவே இருந்திருக்கிறோம்னு, இத்தனை லட்சம் பேருக்கும், அன்னிக்கு 48ல பிரஜா உரிமைச் சட்டம் கொண்டு வந்தப்பவே உறைச்சிருந்திச்சின்னா, இன்னிக்குக் கதை வேறயா இருக்கும். அட நாம தா இப்படி உழைக்கிறோம். நம்ம பிள்ளைக நல்லா வரணும்னு நீங்க ஒருத்தர் வாணா நினைச்சீங்க. மத்த அம்புட்டுப் பேரும் என்ன செய்தாங்க? என்னமோ ஆடுமாடு ஒப்பந்தம் போல ஒப்பந்தம் பண்ணிட்டாங்க. அடிமையாப் போனம், அடிமையா வந்து விழறம். இப்பவும் பாருங்க, ஈழம் வருமா வராதாங்கறது கேள்விக்குறியா நிக்கிறதுக்குக் காரணம், அப்கன்ட்ரில இருக்கிற பத்து லட்சம் தொழிலாளருங்கதா... இவுங்க நிலைமை என்ன?” முருகேசன் பதில் கூறவில்லை. காபிக் கடையின் முன் முறமுறப்பாக சமோசாக்கள் பிஸ்கத்துக்கள் வைத்திருக்கிறான். சுந்தரலிங்கம் உள்ளே சென்றமர்ந்ததும், “ரெண்டு சமோசாவும் காபியும் குடுங்கண்ணாச்சி!” என்று கூறுகிறான். ஒரு போலீசுக்காரனும் வாசலில் நின்று தேநீரருந்தி வருகிறான். “பெரியவர் ஆரு?” “நம்மாளு, மாமன்...” மரியாதையாகக் கூறி, சுந்தரலிங்கம் புன்னகை செய்கிறான். ‘போலீசைக் கண்டதும் எதற்குப் பயப்பட வேண்டும்...’ என்று முருகேசு தனது கூனலை நிமிர்த்திக் கொள்ள முயலுகிறான். அந்த மகன் உடனிருந்தால், ... அவனுடைய தலை குனிய வேண்டியிருக்காது. தலைமுறை தலைமுறையாக வந்தத் தாழ்வுச் சரட்டை அறுத்து விட்டு, உயர்குடி மக்களுக்குச் சமமாக இருந்திருக்கலாம். சுந்தரலிங்கம் இவனும் இந்த நேரத்துக்கு மகன்போல். சமோசா முறமுறவென்று, உப்பாய், விருவிருப்பாய், சுவையாய், நாவுக்கே, சுரணையூட்டுகிறது. இவன் சாப்பிடும் வேகம் பார்த்து, “மாமு, இன்னொன்று சாப்பிடுங்க” என்று தன்னுடையதைத் தள்ளி வைத்து, இன்னும் இரண்டு கொண்டு வரப் பணிக்கிறான். பிறகு நல்ல காபி. சுவையாக மணமாக... இரத்தத்தைக் கொடுத்து, தேயிலைக் காடுகளில் உழைத்தார்கள். மலையைச் சீர் திருத்துவதில் இருந்து, அது உசத்தி, ‘பிகோ’ சரக்காக, பெட்டிகளில் அடைபட்டு, கப்பலில் ஏறும் வரையிலும் இவர்களின் செய்நேர்த்தியில் தான் வளர்ந்திருக்கிறது. ஆனால், இந்த ஏழைகளில் எவனேனும் அந்தத் தேயிலைத் தூளின் ருசியைச் சுவைத்திருப்பானோ? சல்லடையில் வேலை செய்த துலுக்காணம் பயல், சட்டை மடிப்பில் சிறிது மறைத்து வைத்திருந்ததை, இவர்களில் ஒருவனான சிங்காரமே காட்டிக் கொடுத்தான். அந்த டீமேக்கரும் கண்டாக்கும் சிங்களவர்களில்லை... துலுக்காணம் பயல் அடி கொண்டதும், அவமானப்பட்டதும், விசும்பி விசும்பி அழுததும்... சே, காப்பி ருசிக்கவில்லை. அவன் வயிற்றைச் சங்கடம் செய்கிறது. காபி குடித்து விட்டு வருகையில் மணலில் சூடேறி இருக்கிறது. நெருக்கடியான வீதி கடந்து கிளையாகச் செல்லும் சந்து போன்ற சிறு தெருவில் சுந்தரலிங்கம் அவனை அழைத்துச் செல்கிறான். நீண்ட சந்தாக விரிகிறது. அதில் ஒரு பூட்டப்பெற்ற அறைக் கதவைத் திறக்கிறான். “வாங்க மாமோ!...” ஒரு கயிற்றுக் கட்டில், சுவரில் ஒரு சிம்மணி விளக்கு மாட்டியிருக்கிறான். ஒரு மர அலமாரியில் சில புத்தகங்கள். ஒரு தகரப் பெட்டி... கொடியில் ஒரு சராய், லுங்கி, துண்டுகள்... “உக்காருங்க மாமு?...” முருகேசுவுக்குக் கேட்க வெட்கமாக இருக்கிறது. “சுந்தரலிங்கம்... நீ தப்பா நினைச்சிக்க மாட்டியே?...” “என்ன மாமா? கேளுங்க. எதுன்னாலும்...” “ஒண்ணில்லப்பா, நேத்து, புடுங்கிக் கடாசின பயிரா வந்து விளுந்தப்ப, மடத்துச் சாமியாரு வந்து தேத்தண்ணி குடுத்தாவ. புது உசிர் வந்தாப்பில இருந்திச்சி. நா ராமாயியக் கட்டின பெறகு, கள்ளுசாராயம் கிட்டப் போனவனில்ல. ஆனா, மன்னாரு வந்தப்புறம் மனசுக்கு ரொம்பக் கஷ்டமாப் போயி, ரெண்டு மூணு நாளு பாவிச்சேன். அன்னைக்கு, வூடு வாசலும் பொண்ணுங்களும் போயிட்டாங்கன்னு வந்து பாக்கறப்பக் கூட ரொம்ப ஒடம்புக்கு முடியாம குடிச்சிருந்தேன். அந்தப் பாவந்தானோ என்னமோன்னு உள்ளாற மனசில உறுத்திட்டே இருந்திச்சி. ஆனாக் கூட, போலீசுக்காரன் இமிசையோட, என் சாமானக் குத்தி எடுத்துப் போட்டப்ப, திருடன்னு நெனச்சிட்டானேன்னு ரொம்பத் துடிச்சிப் போனேன். அப்ப, இத்திரீ... சாராயம் வேணும்னு தொணிச்சி. சாமியார் வந்தது, தேத்தண்ணீர் குடுத்தது மட்டுமில்ல. அன்பா ரெண்டு சொல்லு மணக்கரையில வந்து வுழுந்தவன, என்ன கொண்டாந்தேன்னு கொத்தாம...” அவன் கைகள் குவிகின்றன. “இது புண்ணிய பூமிதாப்பா. இங்க மனிசங்க இருக்காங்கன்னு நினைச்சிட்டு, அந்தப் பிள்ளங்க பத்திச் சொன்னப் பின்னால எல்லாம் எழுதிக்கிறேன், வெவரமான்னு, அவுசரமாப் போயிட்டாரு... இப்ப ஒண்ணில்ல சுந்தரலிங்கம். கையில ஒரு சதமில்ல - ஒரு பீடி வேணும்...” சுந்தரலிங்கம் வெளியே சென்று ஒரு கட்டு பீடியும் நெருப்புப் பெட்டியும் கொண்டு வந்து வைக்கிறான். “மாமா, சவுகரியமா இருந்துக்குங்க. நான் இப்பப் போகணும். போயிட்டு ஒரு ரெண்டு மணி சுமாருக்கு வாரேன்...” சுந்தரலிங்கம் போகிறான். |