உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
15 மார்கழி பிறந்து குளிர் ஒடுக்குகிறது. பச்சை கருகும் ‘கண்டப்பனி’ மேடு பள்ளமெங்கும் சர்க்கரையாய்ப் பூத்திருக்கிறது. கையிலிருக்கும் பணத்தைப் பொத்திப் பொத்தி வைத்துக் கொண்டு, பழைய மார்க்கெட்டில் ஒரு கம்பளிக் கோட்டு, கையில்லாதது, வாங்குகிறான். முப்பது ரூபாய் ஆகிவிடுகிறது. அன்றாடம் இந்தக் குளிரில் எங்கிருந்தோ மக்கள் அழுக்குக் கந்தல் துணிகளாக வந்து விழுகிறார்கள். எல்லாரும், அந்த இலங்கைச் சீமையில் பிறந்தவர்கள் தாம். நல்ல உடம்பிலே பொங்கிய அழுக்குக் கொப்புளங்கள் போல், சரிவுகள், பள்ளங்களிலெல்லாம் கந்தலும் சாக்கும் தகரமும் கொண்ட குடிசைகள்தாம், முருகேசுவுக்கு இப்போது அந்த ஊரின் சுற்றுப்புறம் எங்கும் நடக்கவோ, வேலைக்கு அலையவோ கூடக் கூச்சமாக இருக்கிறது. பொட்டம்மா மகள் தோட்டத்தில் கிழங்கு தோண்டிய பிறகு மேஸ்திரி வேலை இல்லை என்று சொல்லிவிட்டான். ‘தர்காரி’த் தோட்டம் என்று கோசு நாற்றுக்குச் செய் நேர்த்தி செய்யும் பணியில் ஆங்காங்கு இரண்டு நான்கு கிடைத்தது. சுகந்தியைப் பற்றிய கவலை விட்டாலும், தன் தோள்களில் இன்னும் மலையான பாரம் ஏற்றிக் கொண்டிருப்பது போலவே அவன் உணருகிறான். இப்போதெல்லாம் வீட்டுக்குப் பணம் கொடுக்க வேண்டுமே என்ற கவலை இல்லை. சுகந்தி சந்தோஷமாகத்தான் இருக்கிறாள். பச்சைவேலு, காலையில் சென்றால், இரவில் பன்னிரண்டு மணிக்கேனும் திரும்பி விடுகிறான். ஒரு தரம் அவளை ஒத்தைக்குச் சினிமாவுக்குக் கூட்டிச் சென்றான். திரும்புகையில் சரோசாவையும் தனத்தையும் பார்த்ததாகச் சொன்னார்கள். ஆனால், இரவு அவன் டீக்கடையில் இருந்து முடங்க வரும்போது, “தாத்தா, சாப்பிட்டீங்களா” என்று அவள் கேட்பதில்லை. காலையில் தேத்தண்ணீர் கொடுப்பதும் கூட விருப்பமிருந்தால் தான் என்று அருகிப் போகிறது. விரைக்கும் குளிரில் உழைத்துக் கறடுதட்டிய உள்ளங்கைகளைச் சூட்டுக்குத் தேய்ப்பது கூடக் கடினமாக இருக்கிறது. தன்னுடலிலேயே சூட்டுக்கும் இதத்துக்கும் உறுப்புகள் வேறுபட்டுப் போகும் கொடுமையில், யாரை நொந்து என்ன பயன் என்று சமாதானம் செய்து கொள்கிறான். எதிரே பனியைக் கரைக்கவல்ல சூரியக்கதிர் தலை நீட்டலாமா என்று யோசனை செய்வதுபோல் வானில் சிறிது நம்பிக்கை உதயமாகிறது. முட்டுமுட்டாகக் கைகளால் மேனிகளைப் பற்றிய வண்ணம் ஆங்காங்கு ஆண், பெண்கள் வெளிக் கிளம்புவதை அந்தக் குட்டித் திண்ணையில் இருந்து பார்க்கிறான். வீட்டுக்காரக் கிழவி, கோழிக் கூட்டைத் திறந்து விட்டிருக்கிறாள். கக்கக்கென்று சத்தம் செய்து கொண்டு தாயும் குஞ்சுகளுமாகப் பரவுகின்றன. “தாத்தா, ஒரு பக்கெட்டி தண்ணி கொண்டாந்து தாங்களே, தேத்தண்ணி வச்சித்தார... மேலுக்கு முடியாம இருக்கு...” சுகந்தி வாளியைக் கொண்டு வந்து வைக்கிறாள். இவன் பணம் கொண்டு வந்து குடும்பத்தைத் தாங்கிய நாட்களில் இவள் ஒரு நாள் கூட இப்படிக் கூறியதில்லை. இப்போது, வாளியில் நீர் கொண்டு வந்தால் தேத்தண்ணீர் தருவதாகச் சொல்கிறாள். இவள் தேத்தண்ணீர் வைக்கவில்லையா? வைத்துக் கொடுத்து, பச்சைவேலு வெளியே போய் விட்டான். மணி எட்டடிக்கும் நேரமாக இருக்கும். வாளியை எடுத்துக் கொண்டு பாதையில்லாச் சரிவில், கல்லும் கரடும் கால்களை பதம்பார்க்கக் கீழே இறங்குகிறான். இந்த இத்தனை குடும்பங்களின் கழிவுகளும் மலங்களும், அங்கே கால்களை ஊன்றி வைக்கவே அருவருப்பைத் தருகிறது. தோட்டங்களில் வேலை செய்த நாட்களில், இதே மக்கள் இத்தனை அசுத்தங்களில் உழன்றிருக்க மாட்டார்கள்... ஒருவருக்கொருவர் மனங்களிலும் அழுக்கும், பொறாமையும் குவிந்து நெருங்க, வெளியிலும் அதே பிரதிபலிக்கிறது. தண்ணீர் வரும் இடத்திலும் கூட சுத்தம் குலைக்கப்பட்டிருக்கிறது. தண்ணீரே, வாளியால் மொள்ளும்படி இல்லை. மழை நாட்களில் செங்குழம்பாய் ஓடிற்று. இப்போது, இறைத்து நிரப்பும் வகையில் குறைந்து போய் விட்டது. நீருடன் மேலேறுகையில் முருகேசுவுக்கு முன் பின்னென்று புரியாமல் ஒரு அச்சம் மனதில் படருகிறது. பரமு பரிதாபமாக இரத்தம் துப்பி உயிரைவிட்ட நினைவு மனதைக் கவ்விக் கொள்கிறது. ஒருகால்... அவனுக்கு அது போல் ஏதேனும் வந்துவிடுமோ? இந்தப் பெண்ணிடமோ, அக்கம்பக்கத்திலோ, அந்த நிமிடத்தில் ஈரமே எதிர்பார்ப்பதற்கில்லை... ஒரு முறை பையனைப் பார்த்து... ‘லே, நீ இருக்கும் இடத்தில் நா வுழுந்து கிடக்கிறேன். இனி ஆவாது’ என்று சொல்லச் சந்தர்ப்பம் கிடைக்குமோ?... அவன் குழந்தையை ஆரத் தழுவிக் கொண்டு கண்கள் ஈரிக்கும் சொர்க்க சுகம் கிடைக்குமோ? அவன் வீராப்பு, கருவம் எல்லாம் தொய்ந்து துவண்டு விட்டன. அவன் மகன்... குமரு... அவனும் ராமாயியுமாய்க் கவிந்து காப்பாற்றி ஆளாக்கிய குமரன்... அவன் எட்டி உதைக்க மாட்டான். உதைத்தாலும் சொந்த இரத்தம். ஒரு கை இன்னொரு கையை அடிப்பது போல... வாளியை வைத்தவன் தேத்தண்ணீருக்குக் காத்திருக்கவில்லை. உள்ளே சென்று தன் பெட்டியைத் திறந்து, பையை எடுத்து, மீதமிருக்கும் பணத்தை எண்ணுகிறான். நூற்றுப் பத்தும் சில்லானமும் தான் மீதி. இதுவும் கரையுமுன், சென்னைப் பட்டினம் சென்று, குமரனைப் பார்த்துவிட வேண்டும்... பணத்தை மட்டும் கவருடன் வைத்துக் கொள்கிறான், கையில்லாத அந்தக் கோட்டின் உட்பகுதியில். பிறகு பெட்டியைப் பூட்டுகையில் சுகந்தி வாயிற் படியில் நிற்பதைக் கவனிக்கிறான். “வெளியில போறீங்களா தாத்தா?” “ஏம்மா?” “பாட்டி வாடகைப் பணம் கேட்டிச்சி...” அவன் துணுக்குறுகிறான்... “அதும் குடுக்கணுமோ?...” கிழவியே அப்போது வந்து விடுகிறாள். “மாசம் பொறந்து பத்துத் தேதியாவுது. சினிமாவுக்குப் போறிய, கறி வாங்கிக் குளம்பு வக்கிறிய, வாடகைப் பணம் கேட்டா இல்லன்றிய... தை பொறந்ததும் எம்மவ வாரா. எடத்தக் காலி பண்ணிட்டுப் போங்க?...” “ஏம்மா சத்தம் போடுறீங்க? நா என்ன ஓடியா போயிட்ட? இத்தினி மாசமும் முத வாரத்தில உங்க பணத்தைக் குடுத்திடல?...” “குடுப்பிய, ஆனா... இப்ப குடுக்க இல்ல. நானென்ன கண்ட?” முருகேசு எரிச்சலுடன் முப்பது ரூபாய் பணத்தை எண்ணி அவளிடம் கொடுக்கிறான். “பாத்துக்கிங்க, இனிமே, இந்த வூடு, இவ, புருசன் ரெண்டு பேருக்குந்தா பொறுப்பு. நா ஊருக்குப் போறேன், காலி பண்ணிட்டு...” சுகந்தியின் பக்கம் திரும்பிப் பாராமல் முருகேசு முரட்டுக் கம்பளியால் இழுத்துப் போர்த்துக் கொண்டு நடக்கிறான். டீக்கடையில் வந்து, சூடாக இரண்டு கிளாஸ் தேநீர் வாங்கி அருந்துகிறான். வருடக்கணக்கில் மழையிலும் கூதலிலும், சுகத்திலும் துக்கத்திலும் தேயிலை நிரைகளுக்கிடையில் நடந்த போதும், வெட்டிய போதும், கொத்திய போதும் அவனுக்கு அந்த மண்ணில் அலுப்பும் சோர்வும் தெரிந்ததில்லை. “இன்னும் இன்னும், மேலும் மேலும்” என்ற உக்கம் மடிந்ததில்லை. அந்தத் தோட்டத்தை விட்டு அவன் பிரியவே நினைத்ததில்லை. இரத்தமும் சதையுமாக இருந்த இரணம் பொறுக்குத் தட்டி உலராத நிலையிலேயே பிய்த்தெறிந்தாற் போல் அவன் அந்த மண்ணின் பற்றை உரித்தெரிந்து விட்டு வெளியேறினான். ஆனால், இங்கே வந்து இத்தனை மாதங்களாகியும் இவனுக்கு இது பொருந்தவில்லை. இதுதான் என் இடம் என்று அவன் தனக்குள் உறைத்துக் கொண்டாலும் ஒட்டவில்லை. லட்ச லட்சமாக மானிடர் இருந்தும் வெம்மையான நேசச் சுவாசமே நெருங்கி வரவில்லை... ஒடுக்கும் குளிரில் குறுகிக் கொண்டிருக்கிறான். ஒரு கட்டு பீடி வாங்கி வைத்துக் கொண்டு ஒன்றைப் புகைத்த வண்ணம், ஒத்தை செல்லும் வண்டியிலேறி உட்காருகிறான். ஒத்தையில் வண்டி மாறி, கூடலூர் பஸ்ஸைப் பிடித்து, சந்தைக்கு முன் நிறுத்தத்தில் இறங்குகிறான். ராசு கடையை அடையாளம் வைத்துக் கொண்டு செல்கிறான். கடையின் முன் சாக்குத் தொங்கவில்லை. இரண்டொருவர் சாமான் வாங்க நிற்கின்றனர். கல்லாவருகில் முன்பு பார்த்திராத இளைஞன் ஒருவன் இருக்கிறான். படிப்படியாக முடி வெட்டிக் கொண்டு, அழகு மீசையும், சட்டை கோட்டுமாக இருக்கிறான். ரேடியோவில் வரும் சினிமா பாட்டை ரசிக்கிறான். “ஏந்தம்பி, இந்தக் கடைக்காரத்தம்பி... உள்ள இருக்காரா?” அவன் அலட்சியமாக “தாத்தா கடைக்காரத் தம்பி, உங்கக்கு யாரு வேணும்?” “...இது ...ஸ்லோன் காரத்தம்பி கட தானே?” “ஆமா, எங்க மாமா தா அவுரு. நீங்க யாரு?” முருகேசு நிதானமடைகிறான். “ஒரு சங்கதி அவருகிட்ட கேக்கணும். நானும் ஸ்லோன் ஆளுதா. என் மகன் புஸ்தகமெல்லாம் போடுறான். போன மாசம் இங்க வந்து உள்ள எல்லாரோடயும் பேசிட்டிருந்தே. ...அதா மாஸ்டர், எல்லாருமா... இப்ப ஒரு முக்கிய சங்கதியாப் பாத்துப் பேசணும்னு வந்திருக்கிற...” “மாமா ஊட்டிக்குப் போயிருக்காரு, நீங்க எங்கேந்து வறீங்க, சொல்லுங்க!...” “நா ஸ்லோன்லேந்து வந்து வருசமாகப் போவுது. கோத்தகிரில இருக்கிறே. ஏந்தம்பி... குமாரவேலன்னு ஈழ விடுதலைப் புஸ்தகம் எல்லாம் எழுதறாருல்ல? அவ... எங்க மகந்தா...” அந்த இளவட்டம், இந்த அநாகரிகமான தோட்டக் காட்டானை ஓர் ஏளனப் பார்வையால் குத்துகிறான். “அப்படியா?... நீங்க சொந்த அப்பாரா?” “சொந்த அப்பா, எரவல் அப்பான்னு உண்டா? சொந்த அப்பந்தா. ரத்னபுராத் தோட்டத்தில வேலை செஞ்ச தோட்டத்தாள் நான். எங்க சொந்த மகன்...” “...அப்படியா. ஆரும், இப்படிச் சொன்னதில்லியே? அவருக்குத் தாய் தகப்பன் இறந்து போய்ட்டாங்கன்னு தான் கேள்விப்பட்டிருக்கிறேன்...” இவனுடைய அவநம்பிக்கை அலட்சியம் இரண்டும் முருகேசுவுக்குச் சினமூட்டுகின்றன... “ஏண்டா? ஒங்கிட்ட எனக்குப் பொய் சொல்லி ஒண்ணும் ஆகவேணாம்? வயிசுக்கின்னாலும் கொஞ்சம் மதிப்புக் குடுக்கணும்!” “பெரியவருக்குக் கோபம் வருது. ஏன் தாத்தா? நா என்ன மதிப்புக் குறவாப் பேசிட்ட? நீங்கதா இப்ப அடா புடான்னு பேசுறிய!” “அடாபுடான்னு நான் என்ன பேசிட்ட?” அவன் இவனுடன் பேசவே விரும்பவில்லை. “இத பாருங்க, கடைய விட்டு எறங்குங்க. நீங்க தேடற ஆளு யாரும் இங்க இல்ல. உள்ளாற வந்து வம்பு குடுக்கிறாரு...!” சாமான் வாங்க வந்த இரண்டொருவரும் இவனை ஒப்பவில்லை. அவமானத்தால் சிறுத்தவனாக, ஆறுமுகத்தின் ஓட்டல் பக்கம் நடக்கிறான். படியேறி தோசையும் காபியும் அருந்துகிறான். தெரிந்த முகமாக யாருமே தென்படவில்லை. ஆறுமுகத்தின் கேரளத்து மனைவியும் வீட்டு வாசலில் தட்டுப்படவில்லை. ஒரு ‘செருக்கன்’ இவன் அரவம் கேட்டு வந்து எட்டிப் பார்க்கிறான். “வீட்ட... அம்மா இல்ல?” “ரெண்டு பேரும் இல்ல. தோட்டத்துப் பக்கம் போயிருக்கா?” “தோட்டம் எங்க...? என்ன தோட்டம்?...” “காபித் தோட்டம். சஞ்சைக்கு மடங்கும்...” எங்கே என்பதற்கு மேலே கையைக் காட்டுகிறான். “மாஸ்டர்னு ஒருத்தரு வெள்ளச் சட்டப் போட்டுட்டு அன்னிக்குப் பார்த்தன, அவரு வீடு எங்க தெரியுமா?” “அதா, அந்த மேடேறிப் போனா ஸ்கூல் வரும். அங்கே...” எல்லாம் அந்த மேடு இந்த மேடு என்று கைகாட்டுகிறான். மகனின் சென்னை இருப்பிடம் பற்றிப் பழனியே சொல்லி இருப்பான் என்றாலும், இங்கே வந்து மாஸ்டரிடம் எல்லாம் பேசி விசாரிக்க வேண்டும் என்ற ஆவலுடன் ஓடிவந்தான். இனி, பச்சையும் சுகந்தியும் இருக்கும் வீட்டில் இருக்கப் பிடிக்காமல், இங்கே காப்பித் தோட்டம், அல்லது வேறு இடங்களில் வேலை கிடைக்குமோ என்ற நப்பாசையும் அவனை இங்கு புலனறியத் தள்ளி வந்திருக்கிறது. மாலையில் திரும்பி வந்து ஆறுமுகத்திடம் விசாரிக்கலாம் என்று நெடுஞ்சாலையில், மார்க்கெட்டின் பக்கம் நடக்கிறான். பஸ்ஸும் லாரியும் சென்ற புழுதிக் கசகசப்புடன் வாணிப நெருக்கடியின் குரல்களும், மோதிக் கொள்ளும் சந்தைப்பேட்டை... தேங்காய், வாழை என்று பொதி சுமந்த லாரிகள்... அரிசி மூட்டைகள், ஈமொய்க்கும் வெல்ல மண்டி, புளி... “மாமா? மாமோ...!” “அதா தாத்தா...!” லாரி ஒன்று குறுக்கே திரும்ப முயற்சி செய்யும் நெருக்கம். மிளகாய்ச் சாக்கை உதறியதால் ஏற்பட்ட நெடி மூக்கிலேறுகிறது. சடயம்மாளின் குரல் போல் ஒலித்தாலும் இவனால் சுற்றுமுற்றும் அந்தக் கும்பலில் இனம் கண்டு கொள்ள முடியவில்லை. அவன் பின் கம்பளி நுனியைப் பற்றி செல்லி இழுக்கிறது. ...அம்மாளம்... ‘செல்லி...’ குழந்தை கைகாட்டி அவனை அழைத்துச் செல்கிறாள். ஒரு சுமை விறகை வைத்துக் கொண்டு ஓரமாகச் சடயம்மா நிற்கிறாள். அந்தக் கோலத்தை என்னவென்று சொல்ல! மானம் மறைக்க முழுச்சீலை இல்லை. ஒற்றை ரவிக்கையின் மீது சேலைத் துண்டு மாறாப்பு; கீழே இன்னொரு துண்டம். எண்ணெய் கண்டு எத்தனையோ காலமாயிற்றென்று விள்ளும் சடைக் கூந்தல், மேலே கரிய சும்மாடு. இரண்டு குழந்தைகளும் அவளுக்கு வாரிசென்பதை அந்தப் பஞ்சைக் கோலமே விள்ளுகின்றன. மதுரை ரயில் நிலையத்தில், பனியில் மலர்ந்த பூசணிப் பூவைப்போல் பளிச்சென்று அவள் விளங்கிய காட்சியை நினைத்துக் கொள்கிறான்... ‘எங்களுடன் வந்து விடுங்கள்’ என்று கூப்பிட்டு, நட்டாற்றில் விட்ட வேதனை அவனைக் குத்துகிறது. “ஏம்மா, சடயம்மா? நீ இங்கியா இருக்கிற...?” அவள் பதில் கூறுமுன் துயரம் வெடித்து வருகிறது. “எப்பிடியோ உசிர் புழக்கிறம். காட்டுக்குப் போயி வெறகு வெட்டிக் கொண்டாந்து வந்து வித்து ரெண்டு சல்லி பாத்துக் கஞ்சி காச்சிக் குடிக்கிறம். மண்ணத் தின்னு புழங்க முடியலியே...” பொங்கிவரும் கண்ணீரில் சொற்கள் முழுகிப் போகின்றன. அவள் நெற்றியில் குங்குமம் இல்லை. பருமனாக ஒரு மஞ்சட் சரடு கழுத்தில் கிடக்குமே, அதுவும் இல்லை. துணுக்குற்றவனாகப் பார்க்கிறான். “ஏம்மா, மாமுண்டி என்ன செய்யிறான்?” “அவர ஆன மிதிச்சிப் பெரட்டிப் போட்டுது, இன்னோட இருபத்திரண்டாவுது...” மளமளவென்று கண்ணீர் பெருகி வருகிறது. அவன் வார்த்தைகளே எழாமல் சில்லிட்டுப் போனாற் போல் நிற்கிறான். அந்தச் சந்தைப் பேட்டையின் இரைச்சல்கள், நெருக்கடிகள் எல்லாவற்றுக்கும் மேலாக அவளுடைய விம்மல்கள் நெஞ்சில் இடிக்கின்றன. “...அம்மாளம், ரோட்டு வலைன்னு தான போனிய?... என்னியப் பாவியா, துரோகியாக் கிட்டீங்களே?...” “ரோட்டுவேலை பத்து நாத்தா இருந்திச்சி. பொறவு ஒண்ணும் தோதுப்படல. அல்லாம் இங்க காபித் தோட்டத்துல வேலை இருக்குன்னு வந்தா. மழ... ஊத்தோ ஊத்துனு ஊத்திச்சி. அங்க இங்க நிக்ய எடமில்ல. கடப்படி, வூட்டுப்படி ஏறித்தங்கினா, செம்பக்காணம், சட்டியக் காணம்னு மிச்சம் பேச்சுக் கேக்கணும். பொறவுதா எல்லாம் சுண்டிக்குப் போனம். நம்ம ஆளுவ நெறயப்பேரு காட்டுக்குள்ள குடிச வச்சிட்டிருக்கா. இந்தப் புள்ளியள வுட்டுப் போட்டு ரெண்டு பேரும் கருக்கல்ல போவம். கைப்புள்ள பாலுக்கில்லாம அளுதே சத்துப் போச்சி...” “அளுவாதம்மா, ரொம்பப் பத்தாத காலம்...” “பாரஸ்டாளுவ உபத்திரவம் வேற மிச்சமும். அவவுக்கு அஞ்சு பத்து, மொய் வய்க்கணும்... இந்தவெறவ இங்க வித்துப் போட்டு, டீத்தூளு, சக்கரை, கிளங்கு மாவு வாங்கிட்டுப் போவ. இந்தப் புள்ளிய அப்பனை ஆனை மெதிச்சிட்ட பிற்பாடு தனிச்சி இருக்க மாட்டேங்கிதுங்க... மாமா, தேயிலைக் காட்டுல நமக்கு எடமில்லன்னு சொல்ல இல்ல. கேப்பாரு பேச்சக் கேட்டிட்டு நாங்க ஓடி வந்தம். அப்பிடிச் சொல்லியிருந்தாலும் மலையிலியே இம்புட்டு நஞ்சரச்சிப் பிள்ளங்களுக்குக் குடுத்திட்டுச் சத்திருக்கணும்...” முருகேசுவினால் இனியும் பொறுக்க முடியவில்லை. “அழுவாதம்மா, நா ரொம்பத் தப்புப் பண்ணிட்டே. உங்களக் கூட்டிட்டு வந்தது நா. இல்லன்னா எங்கியோ போயி எப்பிடியோ பிழச்சிட்டிருப்பீங்க. இப்ப, நானே உங்களை நட்டாத்துல விட்டுப் போட்டேன்...” “நீங்க என்ன பண்ணுவிய, எங்க தலையெழுத்து...” “இல்லம்மா, நா இருக்கிற வரயிலும் உங்களை எப்படின்னாலும் காப்பாத்துவேன்... வாங்க... வாம்மா, செல்லி...?” பன்னும் டீயும் வாங்கிக் கொடுக்கிறான். “பிறகு, நீங்க இங்க ஒரிடமா குந்தி இருங்க, நான் போயி ஒராளக் கண்டுக்கிட்டு வந்து உங்கள இட்டுப்போறே...?” மாஸ்டர் வீட்டை விசாரித்துக் கொண்டு ஓர் உறுதியுடன் போகிறான். |