2

     புகையிலைக் காரலின் நெடி சுகமாகச் சூழ்ந்து கொள்ள, முருகேசு பீடி புகைக்கிறான்.

     கடலுக்கப்பால்... மலைச்சரிவுகள், தேயிலைத் தோட்டங்களிடையே அவன் பூதலத்தில் கண் விழித்துக் கண்ட தனி உறவுகள்... மனிதநேயங்கள், கெடுபிடிகள், சின்னத்தனமான சண்டைகள்... எல்லாம் அந்த மண்ணோடு இறுகிப் பிடித்த வாழ்வாக அல்லவோ வேரோடியிருந்தது?

     ஆனால் இந்த முதிய காலத்தில் பெயர்ந்து வந்து இக் கடற்கரையில் விழுந்திருக்கிறான். இங்கு வேர் பற்றுமோ?

     அந்தக் குழந்தைகளை இராணுவம் இழுத்துச் சென்று...

     கண்கள் நிரம்ப, நெஞ்சடைக்க, அதற்கு மேல் நினைக்க முடியவில்லை.

     ஆண்டாளு! நான் பாவி! பொஞ்சாதி புள்ளங்கள விட்டுப்போட்டுத் தான் மட்டும் உசிர் தப்ப பஸ்லேந்து குதிச்சு ஓடி வந்தான்னு மருமகனைச் சொன்னியே! நானும் தோத்துப்பிட்டேனே...!

     பீடிப்புகையும் கூட இப்போது இரணமாகக் கொல்கிறது.

     கடலில் போய் முடிந்து விடலாமா என்று கூடத் தோன்றுகிறது...

     ஆனால்... குமாரனை... அந்த உயிரின் உயிராகப் பொரிந்து தெரித்த சுடரை, சுடரின் கொழுந்தைப் பார்க்கக் கூட வாய்ப்பின்றி முடிவதா?

     ஆண்டாளுவின் பேத்திகளைக் கூட்டிக் கொண்டு வரும் சாக்கில் இந்திய மண்ணை நாடி அவன் புறப்பட்டதற்கு மூல காரணமே அந்தச் சுடர்ப் பொரிதானன்றோ?... சொல்லப் போனால், அவன் பிள்ளை, குமாரன், என்ன தப்புச் செய்தான்? இவன் மனசுக்குள், அருமையாகப் படிக்கவைத்திருக்கும் மகனுக்கு, ஹெட் கே.பி. என்றழைக்கப்பெறும் பெரிய கணக்கப்பிள்ளை பழனியாண்டியின் மகள் செல்லத்தைக் கட்டி வைக்க வேண்டும் என்ற இலக்கு இருந்தது.

     தேயிலைத் தோட்ட சாம்ராச்சியத்தில் இந்தச் சம்பந்தம் அவனுக்கு உயர்ந்த இலட்சியம். அந்தப் பெண், சிவப்பாக, சிட்டு போல் அழகாக, மரியாதையாக இருப்பாள். அவருக்கும் படித்த பையனை மருமகனாக்கிக் கொள்வது மிகவும் உகப்பாக இருந்தது.

     ஆனால், படிக்கச் சென்ற இடத்தில், பாதிரியார் சிபாரிசில் மேலும் மேலும் படிப்பதாக அவன் தங்கியதும், ‘ரெக்வானேயி’லேயே நின்றதும், அவனுடைய நடவடிக்கைகள் இவனுக்கே புரியாத உலகமாகப் போனதும்... உள்ளூற வேதனையாகவே இருந்தது.

     சின்னதுரை புதியவனாக வந்தபிறகு லயத்தில் இவர்களுக்கு அவ்வப்போது சங்கடங்கள் விளைந்தன.

     இனக்கலவரம் என்ற பெயரில்லை என்றாலும், கோழிகள் களவு போகும். இவர்கள் தங்கள் லயத்தை ஒட்டிப் பயிரிட்ட விளைவுகள் பறிபோகும்; நாசமாக்கப்படும். பரமு நட்டு வைத்திருந்த மையக்குச்சிகளைப் பிடுங்கிப் போட்டு கோழிகளைக் களவாடிப் போனதும், தொழிற்சங்கத்து ஆறுமுகம் வந்து, மையக் குச்சிகளைக் கட்டி டவுனுக்குக் கொண்டு போகச் சொன்னன். முந்நூற்றைம்பது ருபாய் நட்டஈடு கோரி வழக்காடினார்கள்.

     பரமு அப்போது வந்து சொன்னான்:

     “முருகேசண்ணே, வக்கீலையாகூட நம்ம குமருதா எல்லா விவரமும் பேசிக் குடுக்கிறான். கந்தோர்ல அவந்தா டைப் அடிக்கிறான். ‘நீங்க ஒண்ணும் கவலிக்க வேண்டாம். மாமு, நாயம் கிடைக்கும்’னு சொன்னா...”

     ராமாயியும் அவனும் அன்று ஆகாயத்தில் அல்லவோ பறந்தார்கள்?

     அந்த வக்கீல் முகமதியர் என்றும் தமிழர் என்றும் தெரிந்து கொண்டான். பரமுவுக்கு நட்டஈடு தீர்ப்பாயிற்று.

     அவ்வப்போது குமாரு மின்னல் போல்தான் தோட்டத்துப் பக்கம் தலை காட்டிப் போனான். இவன் கஷ்டப்பட்டுப் பணம் அனுப்பிக் கொடுக்க வேண்டாம் என்றும், தானே சம்பாதிக்க முற்பட்டுவிட்டதாகவும் சொன்னபோது ஆனந்தக் கண்ணிர் வடித்தார்கள்.

     “எலே, அந்தப் பொண்ணு சமஞ்சி மூணுவருசமாச்சி. நல்ல வடிவான பொண்ணு. புறாப் போல கொணம், இந்தத் தையில கலியாணத்த வச்சிக்கலாம்னு கேக்க இருக்கிற...”

     சாடையாக அவன் மகனிடம் தெரிவித்தபோது, “இப்ப என்னப்பா கலியாணத்துக்கு அவுசரம்?” என்று சொல்லி விட்டுப் போய்விட்டான்.

     கொழும்பில் பேப்பராபீசில் வேலைக்குச் சேரப் போவதாகவும் பிரஜா உரிமைக்கு மனுப் போட்டிருப்பதாகவும் வந்து சொல்லி, புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு அவனிடம் ஏதேதோ பத்திரங்களில் கையொப்பம் வாங்கிக் சென்றான்.

     பிறகு அவன் வெகுநாட்கள் வரவில்லை. கடிதமும் எழுதவில்லை. பழனியாண்டிக்கும் புதிய துரைக்கும் ஒத்துக்கொள்ளவில்லை. திடீரென்று அவரை வேறு டிவிசனுக்கு மாற்றினார்கள். அவர் முருகேசுவிடம் வந்து சொன்னார்:

     “நா ஊருநாட்டோட திரும்பிடலாம்னு இருக்கிறேன். செல்லத்தின் கலியாணந்தா குறுக்கே நிக்கிது. இங்கே இனிமே சரிப்பட்டு வராது...”

     குமருவுக்கு கடிதம் எழுதினான்; ஆளனுப்பி விசாரித்தார்கள். ஒரு நாள் திடுமென்று புறப்பட்டு வந்தான்.

     “நான் வாழ்க்கையில் நல்லபடியாக முன்னுக்கு வந்து இந்த மொத்த சமூகத்துக்கும் உருப்படியா எதானும் செய்யணும்னு இருக்கிறேன். இந்தத் தோட்டக் காட்டில கலியாணம் செஞ்சிட்டு மறுபடி மறுபடி வமிசம் பெருக்கிட்டு இங்கியே உழலப்போறதில்ல! வுடுங்க” என்று கடுமையாகப் பேசினான்.

     முருகேசு என்னமாய் அதிர்ந்து போனான்?

     அந்த அதிர்ச்சியின் சிதிலங்களாக வசைகள் பொல பொலவென்று உதிர்ந்தன. ஆனால் ராமாயியோ, “வாணாமுங்க, நம்ம புள்ள இந்த மொத்தத் தோட்டத்திலும் மேன்மையா இருக்கணுமின்னுதான நெத்தத்த தண்ணீயாக் கொட்டிப் பாடுபட்டோம்?”

     “அவம் பேசுனதல என்ன தப்பு? வீடு நெறயப் புள்ளங்களப் பெத்து வச்சிட்டிருந்தாலும் பன்னண்டு வயிசிலியே கத்தியக் கையில குடுத்துப் புல்லு வெட்டப் போகச் சொல்லறதும், பொம்புளயானா கொழுந்து கிள்ள அனுப்புறதும்னுதா லட்சோப லட்சமா வந்திருக்கிறம். இப்ப இந்த மண்ணே நமக்கு இல்லேன்னு கரச்சலக் கொண்டாராங்க. நம்ம புள்ள லச்சத்தில ஒத்தனா வர்றது பெருமயில்லியா! நம்ம புள்ளய நம்ம நாக்கால அடிக்கலாமா?”

     ஒரு தாயாக அவள் பொறுமை... அவளுக்குக் கோபமே வந்ததில்லை. அவள் துன்பங்களை முகம் சுளிக்காமல் பொறுத்தாள்.

     அந்தப் பழைய காலத்தில், நான்கு மாசத்துப் பிள்ளையைச் சுமந்து கொண்டு அவன் தாய், புருசனுடன் கங்காணியுடன் மன்னார்க்காட்டில் நடந்து வந்த போதே, அரவு தீண்டிப் புருசன் செத்துப் போனான். பின்னர் அவன் தாய், தோட்டக் காட்டில் நாலணாக் கூலிக்கும் இரண்டனாக் கூலிக்கும் உழைக்க வேண்டி இருந்தது. ஓர் இளம் பெண் தன்னந் தனியாக இருந்துவிட முடியுமா? கங்காணிச் சுப்பனுக்கு இரண்டாந்தாரமானாள். எட்டுப் பிள்ளைகளைப் பெற்றாள். அந்தக் காலத்து நினைவுகள் இப்போதும் கூட அவனுக்கு முழுதும் அழிந்து விடவில்லை.

     பிள்ளைக் காம்பராவின் கிழவி. முகச் சுருக்கம் தென்ன மரத்துப் பன்னாடைக்கீறல் மாதிரி... முடி குப்பென்று வெளுத்திருக்கும். சாயம் மங்கின தோம்புச் சேலையில் கொள்ளாமல் பெரிய ‘கொச்சிங்காய்’ அளவுக்குத் தளர்ந்து தொங்கிய மார்புகள்... தூளிப்பிள்ளைகளின் சிறுநீர் கோலங்களாகத் தரையில் விழுந்திருக்கும்... இவர்களை உள்ளே அடைத்து அதட்டி வைப்பாள்.

     ஒரு நாள் கொட்டடிக்கு வெளியே சென்று தேயிலைச் செடியைக் கிள்ளி வைத்துப் பாப்பாத்தியுடன் கறி சமைத்து விளையாடினான். கங்காணி வந்து முதுகில் சாத்தி, கிழவியையும் காய்ச்சிக் கதவைப் பூட்டச் சொல்லிப் போனார்.

     பாப்பாத்தி ஆண்டாளுவுக்கு மூத்தவள், மூன்று பிள்ளை பெற்ற பின் நாலாவது பேறில் பிள்ளை குறுக்கே விழுந்து முடியாமல் செத்துப் போனாள். ருக்குமணி வீரய்யா மாமனின் பெண். கண் பூவிழுந்து தெரியாமல் போய் விட்டது. அம்மாவுக்கு வீட்டிலிருந்து ரொட்டியும் தேத் தண்ணியும் தூக்கிக் கொண்டு சீராக நடந்து எந்த மலையில் கொழுந்து கிள்ளுகிறாளோ அங்கு போய்விடும்.

     அவள் சமைந்த பெண்ணாகி, ரோஸ் குங்குமமும் மூக்குத்தியுமாக லயத்தின் பக்கம் விறகு சுமந்து வருவதும் பளிச்சென்று நினைவில் உயிர்க்கிறது. துரையின் குதிரைக்காரன் ஒருவன் காளைமாடு போல் திமிரெடுத்து உலாவினான் கையில் காசு குலுங்க, கல்யாணம் கட்டாமலே அவன் லயப் பெண்டுகளுக்கு யமனாகத் திரிந்தான். ருக்குமணி, பாவம், மூணுமாசம் கர்ப்பம் வந்து, பண்டாரம் மருந்து கொடுக்க ஏடாகூடமாகிச் செத்துப்போயிற்று.

     முருகேசுவுக்கு அப்போது மீசை முளைக்கும் வயசு. “அம்மா, ருக்குமணி, பாவம். அந்தக் குதிரைக்காரப் பயலைப் பாம்பு தீண்டவச்சு ஏன் சாமி கொல்லல?” என்று கேட்டான். பொன்னுசாமி சுவரில் முட்டிக் கொண்டு அழுதான்.

     ராமாயி ருக்குமணியின் தங்கச்சிதான். அந்தக் குடும்பத்தில் பெண் கொள்ள அவன் தாய்க்கு அவ்வளவு இஷ்டமில்லைதான். ஏனெனில், மாமன் பெருத்த குடிகாரன். குடும்பச் சுமை பெரியது. மாமியும் சீக்காளி. பெண்ணும் நோஞ்சானாக இருந்தாள். ஆனால், முருகேசுவுக்கு அந்த நாளிலிருந்தே யாரையும் நோகும்படி பேசக்கூடாது என்ற பண்பு இருந்தது. ராமாயியைக் கல்யாணம் செய்து கொள்ள இஷ்டம் என்று நின்றான்...

     ஒருநாள் கூட இவளைக் கல்யாணம் செய்து கொண்டோமே என்று அவன் நினைத்ததில்லை. சீக்காளிதான், மாசத்தில் முழுநாட்களும் வேலை செய்தாள் என்பதே இல்லை; அதோடு எத்தனை குறைப்பிள்ளை!

     குடிக்காமல், கட்டியவளை அடிக்காமல், மாமி நாத்தி ஏச்சுப் பேச்சுக்களும் சாடை சள்ளைகளும் செயலற்று மாயும் வகையில் ஒரு புருசனாய், அவன் வாழ்ந்திருக்கிறான். “புள்ள, புல்றவெட்டு கன்டாக்கு குடுத்திருக்காவ. பொழுதோட கஞ்சி குடிச்சிட்டுப் போற... பதனமா பாத்துக்க?” என்று சொல்லிவிட்டுப் பேய் போல் உழைக்கப் போவானே? அவளும் கூட வருவாள். நாட்டானிடம் (சிங்களவரிடம்) கூடுதல் கிரயம் கொடுத்து அரிசி வாங்கி மற்றவர் சாப்பிடும் நாட்களிலும் இவர்கள் கிழங்கையும் கட்டசம்பலையும், வைத்தே பொழுதைக் கழித்திருக்கிறார்கள்...

     கதிர்காமம் சேவித்து, கண்ணகியம்மனை வழிபட்டு ஏழாவதாக அவள் வயிற்றில் தங்கிப் பிறந்தபிள்ளை... குமாரவேலன் என்று பெயரிட்டனர்...

     துரை வீட்டுப் பிள்ளைபோல் மேஜோடும் சப்பாத்தும் அணிவித்துப் பார்த்து மகிழ்ந்தனர். முருகேசுவின் தாய் நோஞ்சான் பெண்ணைக்கட்டி, மகனுக்கு ஒரு பிள்ளை வாய்க்கவில்லையே என்று குறைப்படாத பொழுது இல்லை. குமாரு பிறந்த போது அவள் உயிருடன் இல்லை. அப்போது, உள்ளூற அவளுக்கு ஒரு பிரார்த்தனை இருந்தது.

     இந்திய மண்ணை அவன் பார்த்ததில்லை. ஆனால் அவன் தாயின் பூமி அதுதான். தெற்குக் கடலோரம், செந்தூர் முருகனைப் பற்றி அவள் சொல்லுவது உண்டு. வைகாசித் திருவிழாவைப் பற்றிப் பேரப்பிள்ளைகளுக்கு வருணிப்பாள்.

     “செந்தூரு முருகா... ஒரு புள்ளை பிறக்கட்டும், வந்து காவடி எடுக்கச் சொல்லுறோம்” என்று மனமுருகி நைந்திருக்கிறாள்.

     ஒருகால், அந்தப் பிரார்த்தனையை இத்தனை நாள் நிறைவேற்றாததால் தான் இப்படி அலங்க்கோலமாக வந்து விழுந்திருக்கிறானோ?...

     முருகா... முருகா...!

     கண்களில் நீரருவியாய்ப் பொழிகிறது.

     கல்யாணம் கட்டியதும் மஞ்சக் கோடியுடன் அவளையும் அவனையும் அங்கு அனுப்பித்துப் பிரார்த்தனையை நிறைவேற்றச் சொல்லவேண்டும் என்று அவன் எண்ணியது உண்டு. பழனியாண்டி படித்த மருமகளைத் திருமணம் முடித்து, இந்தியாவுக்கு அழைத்துச் சென்றால், தனக்கும் ராமாயிக்கும் கூட அங்கென்னவேலை என்றும் கூட அவன் நினைத்திருக்கிறான்.

     “புள்ள, நாம இங்க தொழிலவுட்டுப் போகாட்டியும், ஒரு நடை போயி, கப்பலேறி, செந்தூரு முருகன், ராமேஸ்வரம் கோயில், பழனி, மதுரை எல்லாம் பார்த்திட்டு வாரணும். பண்டு பண்டு வரும் கொலதெய்வங்களைப் பாக்கறது இந்த சென்மத்தில ஒரு கொடுப்பனயில்ல? நம்ம பய்யன் படிக்கணும் மேம்மயா வாரணும்னு நினச்சோம். எதோ முருகன் இந்தமட்டும் கொண்டு வந்திட்டா. நம்ம கடனையும் செலுத்தணுமில்ல!” என்று பரவசம் அடைந்தவனாகக் கனவுகண்ட முருகேசன் அவன்.

     ஆனால், ராமாயி மன்னார் கடற்கரையே கண்டதில்லை.

     ஆறுமுகம் தான் முதலில் சேதியை வந்து சொன்னான்.

     “குமாரு... கல்யாணம் கட்டிக்கிட்டான் மாமு... உங்களுக்குத் தெரியுமா?” இவனாலும் ராமாயியினாலும் நம்ப முடியவில்லை.

     “குமாரா...!”

     “ஆமாம்... பொண்ணு... கொழும்பில பள்ளிக்கூட ஆசிரியரா இருக்கு. பி.ஏ. பரீட்சை கொடுத்திருக்கா. யாழ்பாணத்துக்காரங்க. அந்தப் பொண்ணு, எழுதுதாம். நாடகம், கதைன்னு. ரொம்ப நாளாவே பழக்கம் போல் இருக்கு. குமாருவும் எழுதறானில்ல?...”

     குமாரு... குமாரு... நீயாடா இப்படித் துரோகியானே?

     சீலை கூடக் கட்டாமல் துரைசானி போல் கவுன் போட்டுக் கொண்டு இங்கிலீசில் பேசும் ஒரு வருக்கம்... அவர்களைத் தோட்டக் காட்டுப் பயல் என்று ஏசும் வருக்கம், கங்கிருந்து பெண் எடுப்பதைப் பெற்றோர் ஒப்ப மாட்டார்கள் என்று அவன் இப்படி மீறிவிட்டானா?

     குமாரு... டேய் குமாரு... இவன் கையில் நெளிந்து பூப் பூவாய்ச் சொரிந்து புளகிக்க வைத்த குமாரு, ஆய் அப்பனுக்குத் தெரியாமல் ஒருத்தியைச் சேர்த்துக் கொண்டான்.

     நெஞ்செரிச்சல் தாங்கவில்லை. இரவெல்லாம் நிலை கொள்ளாமல் தவித்தான். தான் பற்றியிருந்த நூலேனி பட்டென்று அறுந்து அவனை எங்கோ எரி நெருப்பில் தள்ளி விட்டாற் போல் இருந்தது... முருகா, எனக்கு இப்படி புள்ளயே நீ குடுத்திருக்க வேண்டாமே?...

     “முருகேசு, நா அப்பமே சொன்னன். இந்தத் தோட்டக் காட்டுப் பிள்ளய படிச்சா, பின்னுக்கு ஆயியப்பனையே மதிக்கமாட்டாங்கறது இப்பமாவது தெரிஞ்சிச்சா? அட இப்பிடி இப்பிடி விசம்னு வந்து சொல்ல கேட்டு, எதும் இல்லாம, ஒரேயடியால்ல மீறிப் போயிட்டா!”

     “அட, வயசுப் பிள்ளைக பழகற எடத்தில தொடிசு வாரதுதா, நம்ம வயசில இங்க எல்லாந்தான் பார்க்கிறம். அதுக்குன்னு சொல்லாம கல்யாணம் கட்டிட்டு சேந்து வாழுறாங்கன்னா அப்புறம் அதென்ன, அணிப்புள்ள தென்னம்புள்ள...?”

     பலரும் பலவிதமாக வந்து துக்கம் விசாரித்துவிட்டுப் போனார்கள்.

     பழனியாண்டியின் முன் இவன் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு போய் நின்றான்.

     “ரொம்பத் தலைக்குனிவாயிப் போச்சு அய்யா...?”

     “இதுவும் நெல்லதுக்குத்தான். கல்யாணம் கட்டின பிறகு அவன் இவளை விட்டுப் போட்டுப் போயிருந்தான்னா...?”

     நெஞ்சில் ஆயிரம் ஊசிகள் தைத்தன.

     ஆனால், ராமாயி மட்டும் சலனமே காட்டவில்லை.

     “நம்ம புள்ள சந்தோசமா இருக்கோணும்னுதான நாம நினைச்சி எல்லாம் செய்யிறம்? இப்ப என்னாத்துக்கு கப்பல் கவுந்தாப்பல சங்கடப்படுதிய? நம்ம புள்ள, அநாவசியமா எதும் நடக்கமாட்டா. ஒரு தப்புதண்டா நேரப்படாதுன்னே கட்டிருப்பான். இங்கே வந்து உங்ககிட்ட சொன்னா, அப்பவும் லயம் முச்சுடும் கண்டதும் கடியதும் பேசும். வீணான கரச்சல் அப்பன் புள்ளக்கிடயே வரும். ...இப்பமும் அவ வராம போமாட்டா... வருவா. பெத்தமனச அறியாத புள்ளயில்ல அவ...”

     அவள் நம்பிக்கை வீண் போகவில்லை. அவன் ஒரு மறு ஞாயிற்றுக் கிழமையிலேயே புறப்பட்டு வந்தான்.

     இவர்களுக்குத் துணிமணி, பழங்கள், இனிப்புப் பண்டங்கள் என்று வாங்கி வந்ததை வைத்துப் பணிந்தார்கள். ‘தவம் தவம்’ என்று அவன் அடிக்கொருமுறை அழைத்துப் பெற்றோரைப் பற்றி உயர்வாகப் பேசியதும் அவள் மிக அருமையாக ராமாயியை அத்தை என்று பழகியதும் அவனுக்கு மனத்தாங்கலின் நினைவுகள் கூட எழவிடாமல் தடுத்துவிட்டன. எல்லோருமாகக் கண்டிக்குச் சென்று, கண்ணகியம்மன் கோயில், முருகன் கோயில் என்று வழிபட்டு, பெரிய பூந்தோட்டம் கண்டுகளித்து வந்தார்கள். மருமகப் பெண், தோட்டங்களில் பெண்கள் என்ன மாதிரியான வேலை செய்கிறார்கள், என்ன கூலி, பிள்ளைக்களம்னா விஷயங்கள், என்று மிகவும் சிரத்தையுடன் கேட்டுத் தெரிந்து கொண்டாள்.

     “அப்பா, தவம் இங்குள்ள பெண் தொழிலாளர் நிலைமை பற்றி ஆராய்ந்து எழுதப் போகிறாள். பெண்களுக்கான தொழிற்சங்கங்கள், சமூகப் பிரச்னைகள் பற்றி ரொம்ப ஈடுபாடு...” என்றான்.

     அவர்கள் புறப்பட்டுப் போனபின், அவனுக்குத் தானே புதிய காற்றைச் சுவாசிப்பது போல் கருவமாக இருந்தது.

     ஆனால், அன்று மாலை, மாரிமுத்துவும் ஆறுமுகமும் ஸ்தொப்பில் வந்து குந்தினார்கள். இருவரும் குடித்திருந்தனர்.

     “முருகேசு...? என்னாடா கேளுவிப்படுறது? உம்மருமவ, அந்தப் பொண்ணு இங்க சங்கம் கிங்கம்னு பொண்டுவ கிட்டப் பேசிட்டுப் போயிருக்கா? விசயம் வெளிக்குத் தெரிஞ்சா நாம அத்தினி பேருக்குமே ஆவத்தாயிடும். ஏற்கெனவே, தெமிறா, தெமிறான்னு புகைச்சுக்கிட்டிருக்கானுவ, இந்தச் சிறுக்கி, இங்க வந்து குச்சி கொளுத்திட்டுப் போயிட்டா, நாம இங்க கெடந்து சாவணும் இல்ல? இன்னா மயித்துக்கு இவ உம்பயலை மயக்கிப் போட்டிருக்கா?...”

     சொல்லக்கூடாத வசைகள் கட்டவிழ்ந்தன.

     அந்நாள் வரையிலும், அவன் அத்தகைய விரோதமான பேச்சுக்களைக் கேட்டதில்லை. அவன் ஒரு பிள்ளையைப் பெற்றுப் படிக்க வைத்ததில், பலருக்குப் பொறாமை இல்லாமல் இல்லை. இவன் மாடு வைத்துக் கொண்டும், புல் வெட்டு கொந்தரப்பு எடுத்தும் குடிக்காமலும் தனித்து நின்ற போதும் கூட, நேரடியான சண்டைகள் வந்ததில்லை. சிறுசிறு உரசல்கள், இவனது நல்ல பண்பிலே முழுகியே மறைந்து விட்டிருக்கின்றன. இப்போது, அந்த நல்ல பெண்ணை... கேவலமாக இவர்கள் பேசியதை இவனால் தாள முடியவில்லை.

     “எம்பய்யனைப் பேசுங்க, நீங்க அந்தப் புள்ளய ஏன் குத்தம் சொல்லணும், விடுங்க... மேலிக்கு அவங்களை இங்க வர வேணாம்னா சொல்லிடறேன்” என்றான்.

     இதன் பிறகு அவனே அஞ்சிக் கடுதம் எழுந்த இருந்தான்.

     ஏனெனில் பொறாமை எவ்வளவு தூரம் போகுமோ? அவர்களுக்கு மானக்குறைவாக இவர்களே ஆபத்து விளைவித்துவிட்டால்?

     அடுத்த தடவை, பையன் மட்டுமே வந்தான்.

     தவமணி யாழ் நகரிலேயே வேறு கலாசாலைக்குப் போகிறாள் என்றும், அடுத்து அவர்களுக்குச் சில மாதங்களில் குழந்தை பிறக்க இருக்கிறதென்றும் கூறினான்.

     “குமரு, எங்கியினாலும் சுகமா இருங்க. நீங்க மேலுக்கு இங்க வரதுன்னா கூடப் பயமா இருக்கு. இங்க ஆளுங்க மிச்சம், மோசம். பொறாமை புடிச்சதுங்க?” என்றான்.

     ராமாயி அவனைப் பார்த்தது அதுதான் கடைசி.

     இழைப்பும் இருமலும் அதிகமாய், கோழை துப்பலானாள். கோழையில் இரத்தமும் வந்தது.

     அவள் பையனைப் பார்க்க வேண்டும், மருமகளைப் பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டாள்.

     அவனுக்குக் காகிதம் எழுத வேண்டுமே?

     மாரிமுத்து பையன், இல்லையேல், ஃபாக்டரியில் வேலை செய்யும் கதிர்வேலு, யாரேனும் தான் இத்தனை நாட்கள் அவனுக்குக் கடிதம் எழுதிக் கொடுப்பவர்கள். அந்தத் தெரிந்த வட்டம் முழுவதும் பொறாமையில் வேவதாக அவனுக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், பலருக்கும் படிக்க ஆசையிருந்தும் வசதியில்லை. அபூர்வமாகப் படித்த பழனியாண்டியின் மகன் சிவநேசனுக்கும் கொழும்பில் இவனைப் போல் கந்தோர் வேலை கிடைக்கவில்லை. ஃபாக்டரியில் தானிருந்தான். சிங்களத் தொழிலாளி சம்பந்தம் வைத்திருப்பது மெய்யானாலும் இதுகாறும் தோட்ட சமூகம், அதுவும் தொழிலாளி சமூகத்தில் யாரும் உயர்படிப்புப் படித்த தமிழின மகளைக் கட்டியிருக்கவில்லை.

     இந்நாட்களில், சிங்கள - தமிழ் விரோதங்கள் ஆங்காங்கு தோன்றிக் கொண்டிருந்தன. நிறைய ஆட்கள் சிங்களவர்களைத் தோட்டங்களில் கொண்டு வந்து கொண்டிருந்தனர். பலரும் சாஸ்திரி ஒப்பந்தம், ஐம்பத்தெட்டு வயசு, கொத்தலாவலை ஒப்பந்தம் என்று தோட்டங்கள் விட்டுப் போய்க் கொண்டு இருந்தனர். ஒரு சிலர், இங்கிருந்து குடி பெயர்ந்து கிளிநொச்சிப்பக்கம் ஊன்றுவதற்கு வழி செய்வதாகச் சொல்லிக் கொண்டார்கள்.

     பழனியாண்டி குடும்பத்துடன் தாய்நாடு சென்று விட்டார். புதிய ஆள் சிங்களவர் வந்தார். அன்றாடம் தோட்டத் தொழிலாளர் கண்டிக்குப் போவதும், பாஸ்போர்ட் எடுப்பதும், நாடு திரும்புவதற்கான ஒழுங்குகள் செய்வதுமாக அமைதியாக இருந்த தோட்ட நடவடிக்கைகளின் ஒழுங்குகள் மாறிப் போயின.

     மாயாண்டி இவனுக்குத் தூரத்து உறவில் மச்சான் முறைக்காரன். உருபுசெலாவில் இருந்து அவன் மகனுடன் வந்தான்.

     “அண்ணே, கிளிநொச்சிப் பக்கம் நமக்குக் காணி எடம் குடுத்து ஒதுகிறமுங்கறா. வாத்தியாரிட்டப் பேசிட்டு, முத்தன் ஒருக்க பாத்துப்போட்டு வந்திருக்கிறான். இந்தச் சிங்களக் கரச்சல், நம்மச் சும்மாவுடாது. எப்படின்னாலும் நாம ஒரு மொழி பேசறவங்க. இனிமே நாம கடல்தாண்டிப் போயி எங்கிட்டுப் பிழைக்க? நாங்க முடிவு செஞ்சிட்டோம்...” என்று சொன்னான்.

     அவன் மகனைக் கொண்டே, குமருவுக்கு விரிவாகக் கடிதம் எழுதிப் போட்டான். அம்மாதிரித் தாங்களும் யாழ்ப்பாணத்துத் தமிழ் நாட்டில் போய் ஊன்றிவிடலாம். “இத்தனை நாட்கள் இங்கே தேயிலைத் தோட்டத்துக்கு உழைத்தாகிவிட்டது. அம்மாளுக்கு, மகனும், மருமகளும் பக்கத்திலிருந்தாலே சீக்குவாசியாகிவிடும். இங்கு, பலரும் பலபேச்சுப் பேசுகிறார்கள், பொறாமையால். அதனால், கடிதம் கண்டதும் உடனே புறப்பட்டுவர வேண்டும்...”

     மாயாண்டியும், முத்தனும், இடம் பெயருவது சம்பந்தமாக நோக்கம் அறியவே வந்திருந்தார்கள். குமரு தமிழ்ப் பெண்ணைக் கட்டியிருப்பது தெரிந்தும், அவன் படித்தவன் என்று மதிப்புவைத்தும், அவர்கள் வந்திருந்தார்கள். ஆனால் இந்த மாதிரியான ஒரு பேச்சையே அவர்கள் தாய் தகப்பனிடம் பிரஸ்தாபித்திருக்கவில்லை என்றறிந்து ஏமாற்றத்துடன் தான் திரும்பினார்கள்.

     திரும்பிப் போக அவர்களிடம் கோச்சுக்குக் கொடுக்கப் பணம் கூட இல்லை. இவனே கொடுத்தான்.

     ராமாயி வைத்தியர் கொடுத்த மருந்தில் நம்பிக்கை இழந்தாள்.

     “குமரு... குமரு வந்தானா...” என்று கண்கள் நிழல்படும் போதெல்லாம் ஆதுரம் கொண்டு வாயிலிலேயே நிலைத்தன.

     பிரட்டுக்களம் செல்வது நின்றது.

     “அவன் காகிதம் போட மாட்டான். புறப்பட்டு வந்திருவான்...” என்று அன்றாடம் தெம்பை நிமிர்த்திக் கொண்டு முருகேசன் வேலைக்குப் புறப்படுவான். அரிவாளைக் கையில் பிடித்தால் ஒரே வெட்டில் கிளை தெரித்து விழும் கூர்மை போயிற்று.

     “என்னப்பா! யாரிது... கவாத்து?” என்று கங்காணி கேட்கும் வகையில் தளர்ந்து போனான்.

     “ஒருக்க, இந்த நாயித்துக் கிழமை வருவானா இருக்கும்!” என்று ஒவ்வொரு வார இறுதியிலும் ஆவல் உச்சிக்கு ஏற, பஸ் வரும் பாதையில் போய் நின்றான்.

     வாத்தியார் நடராசாவிடம் கொழும்புக்குச் செல்கையில் செய்தி சொல்லி அனுப்பினான்.

     வாத்தியார் வந்து சொன்ன செய்தி மண்டையில் இடிபோல் இறங்கியது. அவன் கொழும்பில் இல்லை. அவன் சொன்ன பத்திரிகை எப்போதோ நின்று போயிற்று. அவன் சம்சாரமும் அங்கே இல்லை. அவர்கள் குடாநாட்டுக்கே போய்விட்டார்கள்...

     போனவன் விலாசம் கூடக் கொடுக்கக் கூடாதா?

     ராமாயி தவித்துத் தவித்துத் துடித்துச் செத்தாள்...

     பிள்ளை இருந்தும் மூன்று நாட்கள் எங்கெங்கோ சேதி அனுப்பிக் காத்திருந்தும், அவள் முகத்தை அவன் பார்க்கவில்லை. தோட்டத்து மண்ணில் அவளைக் குழித்து மூடிய மூன்றாம் நாள் தான் வந்தான். முகமே நன்றாக இல்லை. மனைவி செத்துப் பிழைத்தது போல் பெற்றுப் பிழைத்ததாகவும், பெண்குழந்தை என்றும் சொன்னான். முருகேசுவினால் எதையும் சீரணிக்க முடியவில்லை.

     “குமாரு... குமாரு ஒருக்க அவ மொகம் பாத்தேன்னு எனக்கு நெஞ்சு ஆறுதலாயிருக்கும்... எம்பய்யன்... குமாரு..ன்னாருங்க, புள்ளக்கி சுடுதா மேலுக்கு, தொட்டுப் பாருங்க?... சைகிளெடுத்திட்டு அம்மாந்தொல புள்ள படிக்கப் போவுது பூன பாலம்புட்டயும் குடிச்சிப் போட்டது. கடுந்தண்ணியக் குடிக்கச் சொன்ன...”

     சம்பந்தா சம்பந்தாமில்லாமல் அவள் பிதற்றியதெல்லாம் நெஞ்சை முட்டுகிறது. விம்மி விம்மி அழுகிறான்.

     “மாமு?... மாமு...? மாமு...”

     எத்தனை நேரமாகச் சுந்தரலிங்கம் கதவை இடித்தானோ?

     திடுக்கிட்டு எழுந்து வருகிறான். கதவு வெறுமே சாத்தியிருக்கிறது நன்றாகத் திறக்கிறான்.

     சுந்தரலிங்கம் கையில் ஒரு டிபன் காரியருடன் வந்திருக்கிறான்.

     “ரொம்ப நேரமாயிட்டது, மாமு. சாப்பிடலாம் வாங்க...”