உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
21 “டாடி...! டாடி வந்திருக்கு...” குழந்தை முருகேசுவின் படுக்கையிலிருந்து ஓட்டமாக வாயிலுக்கு ஓடுகிறாள். இரவு மணி பத்தடித்து, விளக்கெல்லாம் அணைத்து விட்டார்கள். தொலைக்காட்சி அரவங்கள் ஓய்ந்து விட்டன. முருகேசுவைப் பொறுத்த வரையிலும், தொலைக்காட்சி, அதிசயங்கள், இரணத்தில் காய்ந்த பொறுக்குப் போல் ஒட்டாமல் விழுந்து விட்டன. ஏனெனில், அவன் பிரியாவுக்கு, அதைக் கண்டால் மருட்சி. என்றோ ஒருநாள் விமான நிலையத்தில் குண்டு வெடித்திருந்த அலங்கோலக் காட்சியை அவள் பார்த்திருந்தாள். அந்த வீட்டில் தொலைக்காட்சியை நந்தினிதான் போட்டுப் பார்ப்பாள். பையன் வீட்டிலேயே இருப்பதில்லை. ஈழ மாணவர் பேரவை என்று படித்த நேரம் போக எங்கெங்கோ திரிந்துவிட்டு வருகிறான். இன்று அவன் உடம்பு சுகமில்லை என்று ஒன்பது மணிக்குள் படுத்து விட்டான். செல்வி வாயிற் கதவைத் திறக்கும் ஓசை கேட்கிறது. “...இன்னுமா முழிச்சிட்டிருக்கு?... ஹாய், ப்ரியா கண்ணு? உனக்கு என்ன கொண்டிட்டு வந்திருக்கிறன் பாரு...!” அவன் குரல் தான். மேனி புளகமுறச் செய்யும் குரல். “மம்மி எங்க! கூட்டிட்டு வர இல்ல?” “அட கண்ணு! மம்மிக்கு போட்ல எடமில்லன்னுட்டாங்கடா. அடுத்த போட்ல, ப்ரியாக் கண்ணைப் பாக்க ஓடி வந்திடுவாங்க.” “நீங்க பொய் சொல்றீங்க... டாடி வாணாம், பொய், அழுக்கு... வாணம். என்னிய தாத்தா நாளக்கி போட்ல கூட்டிட்டுப் போவா...” “...உங்கப்பா வந்திருக்கிறார் குமார்...” அவன் என்ன சொல்கிறான் என்று கேட்க காதுகள் கிண்ணங்களாகக் காத்திருக்கின்றன. முருகேசு, ஒற்றைச் சமுக்காளப் படுக்கையில் ஒட்டி விட்டாற்போல் உட்கார்ந்திருக்கிறான். உள்ளத்தில் பிரளயமே கண்டுவிட்டாற் போல் உணர்ச்சிகள் மோதுகின்றன. சற்றைக்கெல்லாம் விளக்கை யாரோ போடுகிறார்கள். சிறுமியின் கையைப் பற்றிக் கொண்டு அவன்... தூசி படிந்த முரட்டு நீலச் சராய், சேட்... தூசி படிந்து கூளமாகக் கிடக்கும் தலை; முகத்தில் ஏழெட்டு நாளையத் தாடி... “இதா தாத்தா. நீங்க வாணாம்...” குழந்தை ஓடி அவன் மடியில் வந்தமர்ந்து, “நாளக்கி நாம மம்மியப் பாக்கப் போறோமில்ல?” என்று கேட்கிறாள். மகனை ஒருகணம் புருவங்களை உயர்த்திப் பார்த்துவிட்டு, “போகலாம் கண்ணு!” என்று இதமாக உரைக்கிறான். “நீங்க எப்ப வந்தீங்கப்பா?... சுந்தரலிங்கம் போன வருசம் ஒருநா சொன்னான் ஆண்டாளத்தை பொண்ணுங்கள வச்சிட்டு அவனைக் கலியாணம் பண்ணிக்கச் சொன்னீங்களாம்?” இந்த மாதிரியான குரலை அவன் சிறிதும் எதிர்நோக்கியிருக்கவில்லை. என்ன வறட்சி! காய்ந்து பொடிந்து ரோதையில் வறுபட்ட தேயிலை போல! “ஆமா, சொன்னே. உன்னப் பாக்கணுமின்னும் சொன்னேன்...” “நீங்க வெவரம் ஒண்ணும் சொல்ல இல்ல. சரி, எப்பிடியோ வந்து சேந்திட்டீங்க. இந்த மட்டுக்கும் எனக்கு ஒரு உறுத்தல், உள்ளுக்கு இருந்திட்டே இருந்தது. ஆண்டாளத்தய, தலவாக் கொல்லயில பாத்தன். விசாரிச்சா. போன உங்கப்பா, ஒரு காயிதம் எளுதக் கூடாதான்னு வருத்தமாச் சொன்னாங்க...” “என்னான்னு காயிதம் எழுத? இங்கதா மாபாரதமா ஒண்ணு போக ஒண்ணு வந்திட்டே இருக்கே?... அவ புள்ளங்க நல்லபடியாதா இருக்கா.” “நானும் அதான் சொன்னேன். காயிதம் இல்லன்னா, சுகம்னா நினைச்சுக்குங்கன்னே. இங்க எப்படி வந்தீங்க? என்னிக்கு வந்தீங்க...?” “உன்னப் பாக்கணும், பாத்திட்டுப் போயிடலாம்னு தான் வந்தன். பாத்தாச்சு. ஒங்கிட்ட ஒரு விசயம் சொல்லிடணும்னு இருக்கிற...” “சொல்லுங்கப்பா...” “இந்தக் குழந்தைய தாயவுட்டுப் பிரிச்சிரிக்கிறியே, இது ரொம்பக் கொடும. எங்கோ ஆமிக்காரன் கியாம்புல சித்திரவதை பண்றான்னுறியே? அதுக்கு இது கொறவில்ல. முதல்ல குளந்தயக் கொண்டு தாயிட்ட விடு...” “என்னப்பா நீங்க, விவரம் புரியாம பேசுறீங்க! சரி, இப்ப இதென்னதுக்கு?... நீங்க நான் முன்ன சொன்னப்பவே வந்திருக்கணும். இப்பலாவது வந்து சேந்திட்டிங்க. அதுவே பெரிய ஆறுதல் இப்ப...” “குமாரு, நா வெளயாடுறன்னு நினக்கிறியா? இப்ப ஆறுதல் இல்ல. இந்தக் குளந்த மனசில ஒரு நொடி யுகமாப் போகுது. பயப்படுது. குண்டு முகமாயிருந்தாலும் தாய் மடின்னா அதுக்குப் பயமில்ல. இத்தன படிப்புப் படிச்ச தாயும் தகப்பனும், இந்தச் சின்ன விசயம் புரிஞ்சுக்காம என்னாடாலே போராட்டம்!” தோட்டக்காட்டானின் முரட்டுப் பிடிவாதம் என்று அவன் நினைக்கட்டும். “அப்பா, நீங்க இந்த விசயத்தில் தயவு செஞ்சு தலையிடாதீங்க. குழந்தை இங்கு இருப்பதனால்தான், அதன் எதிர்காலம் காப்பாற்றப்படும். இந்தக் குழந்தையின் எதிர்காலத்தை எண்ணித்தான் நாங்கள் இந்தத் தியாகங்களைச் செய்து கொண்டிருக்கிறோம். குழந்தை மீது எங்களுக்கு ஆசை இல்லையா? தவம் நினைத்தால் உருகிச் சாகிறாள். ஆனால் மேற்கொண்டிருக்கும் கனமான கடமைகள் பிள்ளைப் பாசம் போன்ற மென்மையான உணர்வுகளைக் கொன்று போடுகின்றன. நீங்கள் என்னைப் படிக்க வைக்க எத்தனை கனமான சீவியத்தை மேற்கொண்டீர்கள்?” நெடிதுயர்ந்து வாட்டசாட்டமாக நிற்கும் பிள்ளையை முருகேசன் பெருமித உணர்வு கசியப் பார்க்கிறான். “அது சரிதா. ஆனா, அந்தப் பச்சைப் பிள்ளை அப்பிடித் தியாகம் பண்ணணும்னு நீங்க கட்டாயப் படுத்தறாப்பில இல்ல? அத்த நினைச்சிப் பாருங்க?” “அதையெல்லாம் நினைக்கிற நேரமில்லப்பா. குழந்தைகள் மறந்து போயிடும். நாமதா பெரிசு பண்ணாம மாத்திடணும்...” “என்னாத்த மறக்கிறது? அது அழுது அழுது சாவுது. டாக்டர்ட்டப் போயி ஊசி போட்டுத் தூங்கப் பண்றாங்க. இத்தவுட, அது நிம்மதியாத் தாய்கிட்ட பட்டினியோ பசியோ கெடந்து உசுர் விட்டாக்கூட அவதியில்ல...” அவன் இவரிடம் பேசிப் பயனில்லை என்று நினைத்தாற் போல் அப்பாற் போகிறான். அவன் வெளியறையில் செல்வியுடன் முணமுணவென்று பேசுவதும், அந்த நேரத்தில் சுடுநீர் வைத்துக் குளிப்பதும், சாப்பிடுவதும் தெரிகிறது. குழந்தையும் உறங்கவில்லை. அவனுடன் பேசிக் கொண்டே அலைகிறது. எல்லோரும் விளக்கை அணைத்துவிட்டு உறங்குகையில் மூன்று மணி இருக்கும். முன்னறையில்தான், படுக்கையை, சுருட்டி வைத்திருந்த மெத்தையை விரித்து அவனும் பிள்ளையும் படுத்து உறங்குகின்றனர். குழந்தை அவன் அணைப்பில் இருந்து விலகிக் கால்களை அகல விரித்துக் கொண்டு உறங்குகிறது. போர்வை விலகிக் கிடக்கிறது. விடிவிளக்கின் ஒளியில் முருகேசு அருகில் நின்று பார்க்கிறான். குனிந்து, போர்வையை எடுத்துக் குழந்தைக்குப் போர்த்து விடுகிறான். அவனுக்கு உறக்கம் பிடிக்கவில்லை. இந்தத் தடவை குழந்தையை விட்டு அவன் போக இடமில்லாமல் வற்புறுத்திச் சேர்த்துவிட வேண்டும்... எத்தனை நேரமாகப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறானோ? “அப்பா...!...” குமாரன் விசுக்கென்று எழுந்தமர்ந்து, அப்பனை நெஞ்சாரத் தழுவிக் கொள்கிறான். “அப்பா, போயிப் படுத்து உறங்குவீர்... இனி உங்களுக்குக் கஷ்டமில்லை. இங்கே இருங்கள். நீங்கள் உழைச்சுப் பிழைச்சதெல்லாம் போதும்... பேரக் குழந்தையைப் பாத்திட்டு...” “குமாரு... குமாரு... புள்ளயத் தாய்கிட்ட விட்டுப்போடு. உங்கம்மா உன்முகம் பாக்கணும்னு துடிச்சிட்டே செத்தா. இப்ப, அது என் ராமாயி போலவே தாயைக் காணத் துடிக்குதுலே... என் நெஞ்சு விண்டு போவுது...” “சரி... போவலாம். நீரு, படுத்து உறங்குமே?...” “உறக்கம் எப்பிடிலே வரும்? எத்தினி காலம் கழிச்சிப் பாக்குறம்?... இப்ப... உன் மச்சான் பேப்பர் பார்த்துச் சொன்னா. அங்க, குடியுரிமை குடுக்கிறாவன்னு. இங்க, இது நம்ம மண்ணில்லை. அடிபட்டுச் செத்தாலும் போராட நமுக்கு அதுதான் சென்ம பூமி. குழந்தய மட்டுமில்ல. என்னியும் கூட்டிட்டுப் போயிருலே...” “அப்பா? குடியுரிமையாவது மண்ணாங்கட்டி! அந்தப் பொம்பிள, சிரிமாவோ, என்ன சொல்லியிருக்கிறா தெரியுமில்ல? அவளுக்கு இப்ப வாய்ப்பூட்ட அவுத்து, நாங்குடுக்கறாப்பில பேசுறேன். நீ தூண்டி விட்டு அடின்னு பேச வச்சிருக்கிறா. இதெல்லாம் தந்திரமான ஆட்சி. இனிமே நீங்க அங்க போறதுங்கற தெல்லாம் நடக்காத நெனப்பு...” “அப்பிடியா?...” “ஆமாம். இப்ப போராளிகள் நாலு பிரிவு ஒண்ணு சேந்திருக்கா. ஆமி வெளிக்கிடலே பயப்படுறா. ஆனா, இது இன்னும் கனமான சண்டயா ரெண்டில ஒண்ணுன்னுதா தீரணும். வேற வழியில்ல. முன்வச்ச காலைப் பின்னுழுக்க ஏலாது. அதுனால நீங்க புள்ளய வச்சிட்டு இங்க இருக்கிறது தா நல்லது...” “நீ இப்ப என்னதா பண்ணிட்டிருக்க?” “என்னவா? அங்க, பிழைப்பு, தொழில் எல்லாம் படுத்துப் போச்சி, கமத் தொழில், மீன் பிடித்தொழில் எல்லாமே. நமக்குள்ளன்னு சில சில தொழில் ஆரம்பிச்சி நடத்துறோம். சோப்பு பண்ணுறதுக்குன்னு ஒரு ஃபாக்டரி வச்சிருக்கிறோம். இதெல்லாம் இப்ப சொல்லுறதுக்கில்ல. ஒளிஞ்சு ஒளிஞ்சு வாழ்க்கை நடக்குது. நீங்க, நான் சொல்லுறதக் கேளுங்க...” “அப்ப, நீ மறுக்கப் போறியா அங்க?...” “ஒரு வாரம் போல இருப்பே. சோலி இருக்கு. மதுரைக்குப் போறேன்... பிறகு அங்கேந்து பத்து நாள்ள புறப்பட்டுப் போவேன்...” “தோணிலதான?” அவன் பதில் சொல்லவில்லை. படுக்கையில் உட்கார்ந்து தலையணைப் பக்கமிருந்து சிகரெட் பாக்கெட்டை எடுத்து ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொள்கிறான். “அப்பா... நீங்க... ஒண்ணு பண்ணுவீங்களா?” “சொல்லு...” “தவம் ராமேசுவரம் வந்து, இந்தப் புள்ளயப் பார்த்திட்டுப் போறேன்னு சொல்றா. அவளுக்கும் பாக்கணும்னு ரொம்பத் தாபமா இருக்கு. அதும் நான் போன தடவை இப்படின்னு விசயம் சொன்னப்ப ரொம்பவும் கிலேசப்படுறா. எனக்கு, நான் கொண்டு போனன்னா, இவ, திரும்பி வாரமாட்டா. அங்க கொண்டு வச்சிட்டா, எந்த நேரத்துல என்ன ஆகும்னு தெரியாது. ஒருக்க பாத்துட்டா, பெறகு கொஞ்ச நா ஆறுதலா இருக்கும். நா ஏற்பாடு பண்ணுறேன். நீங்க, ராமேசுவரம் கொண்டிட்டுப் போயி, காட்டிட்டு கூட்டியாந்திடுங்க?... அவ வார வியாழக்கிழமை வாரதாச் சொன்னா. நாந்தா கூட்டியாரேன்னு சொல்லிருந்தேன். இப்ப நீங்க இங்க இருக்கிறதால பிரச்சின சுலுவாப் போச்சி...” முருகேசுவுக்கு உவப்பாக இருக்கிறது. |