உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
22 விடியற் காலைக் கடற் காற்று, குளிர் சிலிர்ப்பாக இருந்தாலும், இதமாக இருக்கிறது. வண்டி எந்த நிலையத்தில் நிற்கிறதென்று முருகேசு தலை நீட்டிப் பார்க்கிறான். அந்த வண்டியின் எதிர்ப் பலகையில், மேலும் கீழுமாக, ஓர் இளம் தம்பதி வருகின்றனர். முகமதியர்கள். வளைகுடா நாட்டில் இருந்து, கீழக்கரை செல்பவர்கள். பெட்டிகளும், பைகளும் வண்மை வரிசைகளுமாக ஏறியிருக்கின்றனர். அருகில் அவர்களுடைய இருப்பே பெட்டி முழுதும் இலேசான பரிமள மணங்களை அவிழ்த்துக் கொண்டிருக்கிறது. இரவெல்லாம் அவர்கள் உறங்காமல் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த இளம் பெண் வெள்ளை வெளேரென்று துரைசாணி போல், கைகளில் முழங்கை வரையிலும் தங்க வளையல்கள் குலுங்க, புருசனின் தோளை ஒட்டிப் பற்றி, சரசமும் சல்லாபமுமாக நடந்தபோது, முருகேசுவுக்கு இனந் தெரியாத ஆற்றாமைகளைக் கிளப்பி விட்டது உண்மை. தன் மகனும் மருமகளும், இப்படியெல்லாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய பிராயத்தினர். என்ன தவறுக்காக இப்படித் தலைமுறை தலைமுறையாக அல்லல் படுகிறார்கள்! அவர்கள் இறங்கப் போகிறார்கள் போலிருக்கிறது. இவனும் எழுந்து பார்க்கிறான். “போய் வாரம், தாத்தா! பரமக்குடி வந்திற்று!” என்று செவ்விதழ் விரியச் சிரித்து விட்டுக் கையில் தோல் பையுடன் இறங்குகிறாள். முருகேசு, உறங்கும் குழந்தையை மெல்லத் தடவி, நெற்றியில் முத்தமிடுகிறான். காலையில் பாம்பன் பாலம் வரும்போதே அவன் குழந்தையைத் தட்டி எழுப்புகிறான். “கண்ணு, பாம்பன் கடல் வந்திடிச்சி. ராமேசுவரம் வருது பாரும்மா!” குழந்தை விழித்து எழுகிறாள். மலர் விரிந்து சிரிப்பதைப் போல், அடிவானத்தில் இருந்து சூரியன் எட்டிப் பார்ப்பதைப் போல் இருக்கிறது. கடல் பாலத்தில் வண்டி செல்லும்போது அசையாமல் பார்க்கிறார்கள். பாம்பன் தாண்டி, தங்கச்சி மடத்தில் தான் ஓரிடத்துக்கு எழுதிக் கொடுத்திருக்கிறான் குமாரன். அங்கு கிழக்குப் பார்த்த வெற்றிலைப் பாக்குக் கடைக்காரரிடம் சீட்டைக் காட்டினால், அழைத்துச் செல்வான். தவம் அங்கு வந்திருப்பாள் இரவே... குழந்தையைக் கழிப்பறைக்குக் கூட்டிச் சென்று முகம் துடைத்து விடுகிறான். தங்கச்சி மடத்தில், மீனவர்களும் வியாபாரிகளுமாகக் கலகல வென்றிருக்கிறது. குழந்தையைத் தூக்கிக் கொண்டு, கைப்பையுடன் இறங்குகிறான். அவன் சொன்ன வழியை நினைவு வைத்துக் கொண்டு, நீலச்சாயம் அடித்த சுவரில் ஒற்றை அறை தெரியும் தேநீர்க் கடை... வலப்புறம் இட்டிலி சுட்டு விற்கும் ஆயா... தாயத் தணிந்த பலாட்டியனான ஓராள், மார்பில் அடர்ந்த ரோமங்களுடன் கடை வாசலில் இருக்கிறான். “நீங்க... சன்னாசித் தேவருதான...? நா. மட்றாசிலேந்து வார...” அவன் தலையை ஆட்டியதும், முருகேசு பையிலிருந்து கடிதத்தை எடுத்துக் கொடுக்கிறான். ஒரே நிமிடத்தில் படித்துவிட்டு, “அவங்க இன்னும் வர இல்லையே? ஒருக்க ராத்திரி வருவாங்களா இருக்கும்...” என்று தயங்குகிறான். “மம்மி... எங்க தாத்தா?...” “கண்ணு, நாம ராமேசரம் போயி, சாமி கும்பிட்டு வருவம். அம்மா, ராத்திரி போட்ல வந்திருவாங்க...!” சிறிய பஸ்ஸில் ஏறி, இராமேசுவரம் கோவிலருகில் வந்து இறங்குகிறார்கள். தாயைப் பார்க்கப் போகும் ஆவலில், அவன் நெஞ்சுருகும் வண்ணம் அவள் அமைதியாக இருக்கிறாள். முருகேசுவுக்கு, எப்படியேனும் குழந்தையைத் தாயிடமே சேர்த்துவிட வேண்டும் என்ற எண்ணமே உள்ளூற வேரோடி இருக்கிறது. அவளை மீண்டு பிரித்து வர முடியாமல் குழந்தை முரண்டு பிடிப்பவளாக இருந்தால் தவத்தை அவள் பாதையில் இருந்தே திருப்பிக் கூட்டி வர வேண்டும் என்ற எண்ணமாக இருக்கிறான். முதலில் சுந்தர மூர்த்தியின் அறைக்குச் சென்று பையை வைத்துவிட்டு, கடலில் நீராடி, சுவாமி தரிசனம் செய்ய எண்ணி, அவன் அறைப் பக்கம் வருகிறான். கதவு பூட்டியிருக்கிறது. என்ன மடத்தனம்! ஒன்பது மணியாகி விட்டது. அவன் கோயிலில் யாருடன் சுற்றிக் கொண்டிருக்கிறானோ? வேறு வழியில். பையைக் கொடுத்துக் குழந்தையைக் கரையில் உட்கார்த்தி வைத்துவிட்டு, அவன் நீராடுகிறான். பின்னர், வேறு வேட்டி சட்டை அணிந்து, பணத்தைப் பத்திரமாக உள்மடிப்பில் வைத்துக் கொண்டு, குழந்தையையும் கடலில் நீராட்டுகிறான். அழவில்லை. கத்தவில்லை, சிரிப்பு; சிலிர்ப்பு. திருநீறு பூசிக்கொண்டு, பையையும் குழந்தையையும் எடுத்துக் கொண்டு கோயிலுக்குள் நடக்கிறான். குழந்தை நடந்து வருவாள். ஆனால் சேரும் சகதியுமாக இருக்கும் தளத்தில் அவளை நடக்க வைக்க அவனுக்கு மனமில்லை. செல்லும் போதும், நிற்கும் போதும், அவன் கண்கள் சுந்தரமூர்த்திக்காகத் துழாவுகின்றன. அவன் கண்களில் தட்டுப்படவில்லை. தரிசனம் முடிந்து, கோவில் வெளிச் சுற்றுக்குள் நடந்து வெளியே கடைகளிலும் சுற்றுகிறார்கள். குழந்தைக்கு ஒரு மணிமாலையும் தங்கம் போல் மின்னும் தலையில் செருகும் ஊசியும் வாங்கி அணிவிக்கிறான். எட்டு ரூபாய் கொடுத்து ஒரு கரடி பொம்மை வாங்கித் தருகிறான். உச்சி வேளையின் வெயில் சுள்ளென்று உறைக்கிறது. சுந்தர மூர்த்தியின் அறைக்கதவு பூட்டியே கிடக்கிறது. முன்பக்கமுள்ள கடையில் விசாரிக்கிறான். “...அவுரு, கோயில்ல தரிசனம் பண்ணி வைக்க ஆக்களைக் கூட்டிப் போவாரே, அந்தப் புள்ளயாண்டான், இல்ல?” “அவரு தங்கச்சி கலியாணமின்னு ஊருக்குப் போயிருக்காப்பல. முந்தா நாதா போனாரு. ஒரு வாரம் போல ஆகும்... நீங்க ஆருங்க?...” “தெரிஞ்சவங்கதா...” சொல்லிவிட்டு நடக்கிறான். ஓர் ஓட்டலில் ஏறிக் குழந்தைக்கும் சாப்பாடு கொடுத்துத் தானும் சாப்பிடுகிறான். சத்திரத்திலேறி, ஒரு புறம் குழந்தையைப் படுக்க வைத்துவிட்டுத் தானும் இளைபபறுகிறான். பொழுது ஓடி விடுகிறது. பஸ் ஏறி, தங்கச்சி மடம் வருகிறார்கள். சன்னாசி, அந்த அறைக்கதவைத் திறந்து விடுகிறான். “படுத்து உறங்குங்க. அவுங்க வந்திட்டா ஆளுவரும். கூட்டிட்டுப் போற...” பழைய மரக்கட்டிலில், சவுரி மெத்தை ஒன்றிருக்கிறது. “படுத்துக்க கண்ணு, அம்மா வந்திட்டிருக்காங்களாம். வந்த ஒடன கூப்பிடுவாங்க?” “மம்மி எப்ப வருவாங்க?” “வருவாங்க... வந்திட்டே இருக்காங்க...” அவளுக்கு உறங்க விருப்பமில்லை. ஆனால் மீறிய அயர்வில் அறியாமல் உறக்கம் தழுவுகிறது. முருகேசுவுக்கு உறக்கம் பிடிக்கவில்லை. சன்னாசி கடையை மூடிவிட்டு அறைக்குள் வருகிறான். அவனும் இலங்கை ஆள்தான். அங்கே சற்றுத் தொலைவில் மணற்காட்டில், இரகசியச் செய்தித் தகவல் சாதனம் வைத்திருக்கிறார்கள். வேவு பார்க்கும் உளவாளிகள் தீவில் நிறையப் பேர் இருக்கிறார்கள். எனவே மிக்க கவனமாக இருக்க வேண்டும். அந்தச் சாதனத்துடன் மூன்று மாசம் முன்பு ஒரு பெண்மணி வந்திருந்தாள். குமாரவேல் அடிக்கடி வருவார். தோணிகள் பலவும் கொண்டு போகும். எதுவும் விவரம் சொல்வதற்கில்லை. அவனுடன் பேசியதில் மேலோட்டமாக இத்தகைய விவரங்கள் புலனாயின. சற்றைக் கெல்லாம் அவனும் அறையின் ஒரு புறத்தில் சாக்கை விரித்துக் கொண்டு உறங்கிப் போகிறான். முருகேசுவுக்குக் கண்களைப் பாரம் அழுத்தினாலும் இமைகள் ஒட்டவில்லை. கடலலையின் ஓசையின் பின்னணியில் துல்லியமாக அடியோசைகள், பேச்சொலிகள் எழும்புகின்றனவா என்று செவிகளைக் கூர்மையாக்கிக் கொண்டு அமர்ந்திருக்கிறான். அடிச் சத்தம் கேட்கிறது. வலுத்து, வாயிற் கதவடியில் மனித அரவங்களாக மலர்கின்றன. முருகேசு அடங்காத கிளர்ச்சியுடன் குழந்தையை எழுப்புகிறான். “கண்ணு, எந்திரிச்சிக்க, அம்மா... அம்மாடா கண்ணு!” இதற்குள் சன்னாசி கதவைத் திறந்து விடுகிறான். இருட்டு... ஐந்தாறு பேர்... யாரோ டார்ச் அடிக்கிறான். பெண் பிள்ளை இருப்பதற்கான தடையமான, சேலையே தெரியவில்லை. முரட்டுச் சராயும், பெல்ட்டும், சட்டையும் அணிந்திருக்கிறார்கள். தலையில் துணி கட்டிக் கொண்டு நனைந்த லுங்கியுடன் ஓர் இளைஞன்... காலில் பெரிய கட்டு, நனைந்து போயிருக்கிறது. ஒரு கணம் முருகேசுவுக்குக் கப்பென்று, செவிகள் அடைத்துக் கொண்டாற்போல் இருக்கிறது. அவள்... வரவில்லையா? குழந்தையை எழுப்பி உட்கார்த்தி... ஏமாற்றமா? காலில் கட்டுப் போட்டுக் கொண்டிருப்பவன் உள்ளே வந்து ஈரத்துணியை அவிழ்க்கிறான். பரபரவென்று அறைக்குள் எல்லோரும் நுழைய, சன்னாசி ஒரு விளக்கை ஏந்திக் கொண்டு வருகிறான். அப்போதுதான் இங்கு மின் விளக்கு எரியவில்லை என்பது முருகேசுவுக்குப் புலனாகிறது. கட்டிலில் ஒருவன் வந்து உட்கார்ந்து குழந்தையைத் தொட, ப்ரியா வீலென்று கத்தி முருகேசனிடம் ஓடி வருகிறது. “டே, கண்ணா, நான்டா, உன்ற மம்மி! செல்லம்? உன்ற மம்மிடா?” முருகேசு திடுக்கிட்டுப் போகிறான். பெண்மைக்குரிய கோலத்தில் இல்லை. அவள் தாய் தான். முடியை வெட்டிக் கொண்டு, முரட்டுச் சராயும் வார் பட்டையும், மேலே முரட்டுச் சட்டையும் போட்டுக் கொண்டு... தவம்... கனவாகிப் போன அந்த முகம் தான். குழந்தை அவனை ஒட்டிக் கொள்கிறாள். அஞ்சி நடுங்கி, “நாம போலாம், தாத்தா போலாம்... மம்மிட்ட போலாம்...” என்று கத்துகிறாள். “செல்லம், உன்ற மம்மி... மம்மி...டா, தவம்டா... மாமா, நீங்களே எடுத்திட்டு வாரியள்னு இப்பத்தா தெரியும். ஏனிப்படிப் பயந்து போயிட்டா, ப்ரியாக் கண்ணு...” முருகேசுவுக்கு நெஞ்சு கட்டிக் கொள்கிறது. “போடாம்மா, அம்மா, இதா அம்மா... அம்மா வந்திருக்காங்க பாரு...” விரைத்த நிலையில் கால்களை அவனோடு இறுக்கிக் கொள்கிறாள் குழந்தை. “இவங்க என்ற மம்மி இல்ல. இது ஆரோ...” “மம்மீடா... மம்மி...” கத்தக் கத்தப் பிடுங்கி முத்தமழை பொழிகிறாள். கண்ணீரும் கடல் நீரும் நனைந்த கன்னங்களால் குழந்தையை அணைக்கிறாள். ஆனால், குழந்தையோ, வீறிட்டலறித் திமிருகிறாள். அடித் தொண்டையின் கரகரப்போடு அலறுகிறாள். “தாத்தா, நாம போவம், இது என்ற மம்மியில்ல...” “தூக்கத்தில எழுப்பிட்டே, அதாம் போல இருக்கும்மா.” “எங்கம்மாட்ட போவணும் போவணும்னு அது அரை உசுரு கால் உசுரா எங்கிப் போச்சம்மா. நா உன்னப் பாத்து, அம்மா, நீ எப்பிடியோ, கொண்டிட்டுப் போயிருன்னு சொல்லக் கூட இருந்தே...” “மாமா...” என்று ஒரே ஒலி எழும்ப, அவள் குலுங்கக் குலுங்க விம்முகிறாள். குழந்தை அவளை ஒப்பவில்லை. “விடிஞ்சா ஒருக்க இனம் கண்டுக்குமா இருக்கும்மா! தூக்கக் கலக்கம் பாரு...” “இந்த போட்டில வாரது கன வருத்தம். இவவ வாராங்கன்னு, புள்ளயப் பாத்திட்டு வாரணும்னு வந்தே. அதும் அங்க இங்க, எங்கும் நேவி ரோந்து போட்டு கெடக்குதுங்க. எப்ப என்ன ஆவுமோன்னு வாரேன்... கண்ணு, உன்ற அம்மா... இதபாருடா?...” “என்ற அம்மா பூவுவச்சி, பொட்டு தொட்டு, சொரி உடுத்தி ப்ளவ்ஸ் போட்டிட்டிருப்பா. என்ற அம்மா வடிவா இருப்பா... தாத்தா, நாம போலாம்... போலாம் தாத்தா...!” அவள் திகைத்துப் போய் அங்கும் இங்கும் பார்க்கிறாள். குழந்தையின் மனதில் அம்மா என்று காப்பாற்றப்பட்ட அந்த பிம்பத்துக்குரியவளாக அவள் இல்லை. இனம் இனத்தை அறியும் என்பார்களே? தாயும் பிள்ளையும் எந்த உருவில் இருந்தாலும் கண்டு கொள்ள மாட்டார்களா? “தாத்தா, நாம போவம், நாம போவம்...” பிடித்துத் தள்ளும் வெறி... அவள் கையில் கொண்டு வந்த சாக்லேட் பாக்கெட் கை நழுவுகிறது. உதடுகள் சுருங்க, கண்ணீரின் முத்து அந்த மெழுகுவர்த்தியின் ஒளியில் பளபளக்க, அவளைப் பார்க்கவே அஞ்சினாற் போன்று அவன் தோளில் துவண்டு திரும்பிக் கொள்கிறது குழந்தை. “வருத்தப்படாதே அம்மா, இதுவும் காலத்தின் கொடுமதான். நீ போயிற்றுக் காலம வா. சீல உடுத்திப் பொட்டு வச்சிட்டு வந்தியானா புரிஞ்சிக்கும். தாய் புள்ளத் தொடுப்பு அப்படி அத்துப் போவாது. அது ரொம்ப மெரண்டு போயிருக்கு. ஏம்மா, இதக் கொண்டு வாரக்குள்ள, அங்கியே எதானும் ரெத்தம் பட்டுச் சாவு பாத்திருக்குமோ?...” அவள் எதுவும் பேசவில்லை. கறுத்த அந்த உதடுகள் இறுகிப் போகின்றன. “மாமா, அப்ப நா வாரன்...” குனிந்து அவன் கால்களைத் தொட்டுக் கண்களில் வைத்துக் கொண்டு சரேலென்று அகலுகிறாள். முருகேசு குழந்தையுடன் அப்படியே நிற்கிறான். அவர்கள் வந்ததும், போனதும் கனவு போல் இருக்கிறது. சன்னாசி அவர்களுடன் வெளியே போய் எப்போது வந்தான் என்று தெரியவில்லை. முருகேசு குழந்தையைக் கட்டிலில் விட்டு விட்டு அவனும் அருகில் படுக்கிறான். குழந்தை எழுந்து அவன் கழுத்தைக் கட்டிக் கொள்கிறாள். “தாத்தா, நம்ப போகலாம்...!” “இப்ப ராத்திரி இருட்டாருக்கேம்மா? விடிஞ்சில்ல போகணும்?” “மம்மி வரவேயில்ல. இல்ல தாத்தா?... அவங்க வாரன்னு ஏமாத்திட்டாங்க! “காலம வருவாங்கடா கண்ணு, பொட்டு தொட்டு, சீல உடுத்தி, பிளவ்ஸ் போட்டு, வடிவான மம்மி வருவாங்க!” படுக்க வைத்து மெள்ளத் தட்டுகிறான். ஆனால் அவள் வரவேயில்லை. சூரியன் தன் தங்கக் கிரணங்களால் மணற் குன்றுகளைத் தழுவி விளையாடுகையில் சன்னாசி மட்டுமே திரும்பி வருகிறான். “ஏனப்பா, அம்மா வாராங்களா?” அவன் இல்லை என்று சாடை காட்டுகிறான். கடலில் ஏறிப் போய் விட்டார்கள் என்று தெரிவிக்கிறான். கிழவி வறட்டி, அடுப்பு, எல்லாம் கொண்டு வந்து கடை போட வருகிறாள். டீக்கடை ‘பொய்லர்’ புகைகிறது. மீனவர்கள் சிலர் கடலுக்குச் சென்றவர், திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். முருகேசு உள்ளே வந்து அறைக்குள் பார்க்கிறான். குழந்தை, நிர்மலமான முகத்துடன் எதையும் அறியாத நிலையில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறாள். ஒரு தாயாக அவள் நெஞ்சில் சுமந்த ஆற்றாமை வெடிக்கக் குலுங்கிக் குலுங்கி ஓசை எழுப்பாமல் விம்மிய கணங்கள் கண்முன் விரிகின்றன. ஆனால் அவள் பூண்டிருந்த வேடம் கிழியவில்லை. குழந்தையின் முன் வடிவான தாயாக அவள் வரவில்லை. அந்தக் கோலத்தைக் கழற்றிக் கொண்டு தாயாகத் தாபம் தீர்த்துக் கொள்ள அவளால் முடியாது. உயிரோடு வைத்துச் சுட்டெரிக்கும் வன்முறைகளுக்கிடையே அஹிம்சை வடிவான புத்தர் படிமங்கள் கண்களை மூடிப் படுத்திருக்கலாம். ஆனால், இவர்களால் கண்களை மூடிக்கொண்டு சுயநலங்களில் தஞ்சமடைய இயலவில்லை. பேதா பேதமின்றி, மகனில்லை, மருமகளில்லை, புருசனில்லை, பெண்சாதியில்லை, தாயில்லை, பிள்ளையில்லை என்று மண்ணுக்காகப் போராடும் போராளியாகியிருக்கிறார்கள். சாசுவதமாக ஓடிக் கொண்டிருக்கும் மாணிக்கக் கங்கை இரத்தக் களரியாகியிருக்கிறது. அது கண்களை மூடிக் கொள்ள முடியாது. என்றென்றைக்கும் சாசுவதமான சத்தியம் அது... வெளியிலே காகங்களும் நீர்ப்பறவைகளும் வானில் கலகலப்பூட்டுகின்றன. பனை ஓலை வட்டிகளும், பாய்களுமாகப் பெண்கள் மீன் வாணிபத்துக்குச் செல்கின்றனர். துன்பம் உறைக்காத சிரிப்பொலிகளாய்ச் சிறாரின் அரவங்கள் சுற்றுப் புறமெங்கும் உயிர்ப்பூட்டுகின்றன. இலேசாகப் புளித்த ஆப்பமாவின் தேங்காய் மணம் எழும்ப கிழவி ஆப்பம் சுட்டுப் போடுகிறாள். தேநீர்க் கடையின் முன் பலரும் வந்து அமர, சுறுசுறுப்பாய்க் காலை மலர்ந்து விரிகிறது. அயர்ந்து உறங்கும் குழந்தை விழித்து எழுந்திருக்கட்டும் என்று முருகேசு காத்திருக்கிறான். இந்தத் தீவின் மணற்கரையில் அவன் முதன் முதலாக வந்து விழுந்தபோது பரவியிருந்த மன இருள் இப்போது அகன்று விட்டது. வெளிச்சத்தில் ஓர் உறுதியுடனும் நம்பிக்கையுடனும் தனது வாழ்வின் இறுதிக்கால அத்தியாயத்தை அவன் துவங்கப் போகிறான். (முற்றும்) |